எனது ஓட்டு கலைஞருக்கே
ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை
இணைய உலகத்திலே தற்போதைய சூழ்நிலையிலே கலைஞரை பத்தி குறை சொல்லி ரெண்டு திட்டு திட்டாம போய்விட்டால் தமிழினத்துரோகி என்ற அவப்பேருக்கு
ஆளாகக்௬டும் என்று நினைத்து இந்த இடுகையை எழுத வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிலே கொசு கடித்தாலும் காரணம் கலைஞர் என்று ஒரு மாயை உருவாகி இருப்பது உண்மை. இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.
அடிப்படைய கலைஞரை திட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் அவரு பதிவுலகிலே இல்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பதிவுலகிலே இருக்கும் ஒருவரை இப்படி எல்லாம் திட்ட முடியுமான்னு தெரியலை. பச்சைத்துரோகி, கிழபாடு என்பதெல்லாம் சாதாரணமா அவருக்கு கிடைக்கிற மரியாதைகள், கலைஞரை ஓட்டுப் போடக்௬டாது என்றால் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் நாட்டிலே இருக்கிறதே ரெண்டு பெரிய கட்சி, இதை விட்டா வேற யார் ஆட்சிக்கு வருவார்கள்.
பதிவுலக ஆதரவு வரலாறு சற்று திரும்பி பார்த்தோமானால், இலங்கையிலே போர் உச்ச கட்டத்திலே இருக்கும் போது, திருமாவளவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு படை கிளம்பியது, காங்கிரஸ் தமிழகத்திலே ஒழிய வேண்டும் என்று வீர சபதம் எடுத்து வெறி கொண்ட சிறுத்தையை வலம் வந்தவர். அவரது தலைமையிலே மாற்று அணி அமைய வேண்டும் என்று மனுப்போட்டு நின்ற நேரம் அவன் இந்திய ரயிலை விட மிக வேகமாக தடம் புரண்டு மறுபடியும் ஒட்டிகொண்டார். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைவர்கள் எல்லாம் இப்ப இன்னும் அதே நிலையிலே தான் இருக்காங்க, ஆனா இன்னும் இவர்களை நம்புறோம்(?).
கலைஞருக்கு மாற்று சக்தியாக இருக்கும் புரட்சி தலைவின் வராலாறுகளை புரட்டி பார்த்தோமானால், பொடாவை உருவாக்கிய மத்திய அரசை விட அதிக முறை பயன் படுத்தியவர் என்று விருது கொடுக்கும் அளவுக்கு உபயோகித்தவர்.தமிழர்க்காகவே வாழும் அண்ணன் தன்மானத்தமிழன் வைகோ இப்போது வெளியே இருந்து இருந்தா புத்தகம் எழுத நேரமில்லை என்று அம்மா உள்ளே தள்ளிவிட்டதாக நினைத்துகொண்டு வேற எங்கும் போக வழி இல்லாமல் இன்னும் இருந்த இடத்திலே இருக்கிறார், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று கலைஞர் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
புரட்சி தலைவி ஆட்சியிலே இருந்து இருந்தா, ஒரு வேளை இலங்கைக்கு படை எடுத்துப் போய், அவர்களை தோற்கடித்து அங்கே ஆட்சியப் பிடித்து இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்னொரு மாநிலம் ஆக்கி இருப்பார் என்று சொல்லமுடியுமா?, யார் ஆட்சியிலே இருந்தாலும், இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி, இப்போது ஆட்சியிலே கலைஞர் இருக்கிறார், அதனாலே அவரை திட்டுகிறோம், இதே நிலையிலே தலைவி இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்போம்.மேலும் தமிழரின் ஒற்றுமைக்கு பதிவுலகமே ஒரு சான்று, இங்கு ஒற்றுமை என்பது அடுத்தவர் என் சட்டையப் பிடிச்சி இழுத்துவிட்டார் என்று இன்னொருவர் குறை சொல்லும் வரை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கலைஞரை திட்டுவதாலே நமக்கு மனநிம்மதி கிடைக்கும் என்பதை தவிர வேறு ஏதும் பலன் இருப்பதாக தெரியவில்லை, இதை எல்லாம் சொன்னேன்னேனு எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம், இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.
இப்படிக்கு,
பஞ்சம் பிழைக்க அயல் நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழன்.




