Friday, July 22, 2011

வாசகர் கடிதம்

அன்புள்ள மூத்த பதிவர் நசரேயன் அவர்களுக்கு,

வணக்கம். வெகுநாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மூத்த பதிவராகிய தங்களைப் பாராட்டும் தகுதியோ வயதோ எனக்கில்லை என்பதால் தயக்கமாகவே இருந்தது. பல நாட்கள் மனப் போராட்டத்துக்குப் பின், தங்களின் கொலவெறி இடுகையைப் படித்தவுடன் இனிமேலும் பாராட்டாமல் இருந்தால் இந்த மெய்நிகர் உலகம் என்னை மன்னிக்காது என்பதால் துணிந்து எழுதுகிறேன்.

நான் வலையுலகத்துக்கு அடி எடுத்து வைத்தவுடன் என் கண்ணில் தென்பட்டது உங்கள் வலைத்தளம் ‘என் கனவில் தென்பட்டது’. அந்தச் சிலிர்ப்பிலே படிக்கத்துவங்கியவுடன் கண்ணில் பட்டது, ’தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்’ என்ற உங்கள் பொன்மொழி. இது கல்வெட்டிலே செதுக்கி புளியங்குடி வரவேற்கிறது என்ற போர்டுக்கு அருகிலே வைக்க வேண்டியது எனக் கருதுகிறேன். உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகே, படிக்கும்போது பிழையாக எழுதுவதால், உனக்கு கணக்கன் உத்தியோகம் கூட கிடைக்காது, எருவமாடு மேய்க்கப்போ என்று என் தன்னம்பிக்கையை குலைப்பதை வகுப்புதோறும் நிறைவேற்றிய ஆசிரியர்களின் கடமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருந்துவந்தேன். எங்கே கையெழுத்துப் போட்டால் பிழை வந்துவிடுமோ என்று, கைநாட்டு வைத்துவந்தேன். உங்கள் இடுகைகள் தந்த ஊக்கத்தால் இன்று பிழையின்றி வானம்பாடிகள் என்று கையெழுத்துப் போட முடிகிறது. இதற்கான பெருமை முழுதும் உங்களையே சாரும். இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

நானும் பல வலைத்தளங்களைப் படித்து வருகிறேன். ஆனாலும், இந்தச் சமூகத்தில் காதல் தோல்வியால் இளைஞர்கள் தாடிவைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டு நாசமாய்ப் போவதை சகிக்காமல், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, காதல் நிலையானதல்ல, துண்டே நிலையானது என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்து இன்று பல இளைஞர்களை துண்டும் கையுமாக அலையவிட்டிருப்பதிலே உங்களின் சமூக அக்கரையும், இளைஞர்கள்பால் உங்கள் நம்பிக்கையையும் எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட செய்ததில்லை.

அதே போல், அமெரிக்காவில் தாங்கள் பணிபுரிந்த காலத்தில், நொங்கு தின்னும் கலாச்சாரத்துக்கு எதிராக பொங்கி, நகைச்சுவையோடு அதனை விமரிசததை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு கொள்ளாமல் விட்டதை நினைக்கும்போது மனம் கனத்துப் போகிறது. கருவண்டு, எருவமாடு போன்ற சொற்களை சொல்லுக்கடங்கா மன உறுதியுடன் எதிர்கொண்டு, துரைசானிகளுக்கு துண்டு வீசி சமத்துவத்தை நிலை நாட்டி, ‘சமச்சீர் துண்டு’ப் புரட்சி செய்ததை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

படிப்படியாக பதிவுலகம் என்பது மொய் சார்ந்த மெய்யுலகம் என்பதையும் உங்கள் மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஒரு நாளில் எத்தனை இடுகைகளைப் படித்துப் பின்னூட்டமிடுகிறார் என்ற வியப்பு, உ.த அண்ணனின் ஒன்னரை குயர் இடுகைக்கு பதிவிட்ட ஒரு நிமிடத்தில் ‘ம்ம்’ என்ற உங்கள் மறு மொழி பார்த்ததும்தான் பதிவுலகில் யார் பதிவெழுதினாலும், எந்திரன் ரோபோ போல் ஒரே பார்வையில் ஸ்கேன் செய்யும் திறனிருப்பதை அறிய முடிந்தது. தங்களைப் பின்பற்றி நானும் பல இடங்களில் மொய் விருந்து வைக்கக் கற்றுக் கொண்டேன்.

இப்படி இருக்கும்போதே கூகிள் பஸ்ஸில் தங்களின் ஒன்னு கீழ ஒன்னு போட்டிருக்கேன், என்னான்னு சொல்ல வேண்டியதில்லை என்ற தன்னடக்க அறிவிப்புடன் வந்தவைகளைப் படித்து கிலியாகி, கவுஜ என்ற ஒன்று தமிழ் இலக்கியத்தில் இருப்பதை அறிந்தேன். அந்த மகிழ்ச்சியில் என் பள்ளி ஆசிரியர்களிடம் கவுஜ என்று ஒன்று இருப்பதைச் சொல்லிக் கொடுக்காமல் விட்டதற்காக சண்டை போடப் போய், அவர்கள் கீழ்ப்பாக்கத்துக்கு பிடித்துக் கொடுத்த போது, அந்த மருத்துவரிடம் உங்கள் கவுஜ ஒன்றைச் சொன்ன உடன் அவரே போய் ஒரு செல்லில் அடைந்து கொண்டு நான் இருக்கும் வரை வெளியே வரமாட்டேன் என்று ஒளிந்து கொண்டதையும், பிறகு மருத்துவத்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி, வெளிநடப்புச் செய்தேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நேற்று, தற்கொலையைத் தடுக்க ஒரு சேவை மன்றம் அவசியம் என்ற உங்கள் இடுகையை வாசித்தவுடன் புல்லரித்துப் போயிற்று. அதிலும் கடைசியாக நீங்கள் சொன்ன புதிர் இராத்தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது. நமது மாண்புமிகு முதல்வர் உடனடியாக இந்தத் திட்டம் செயலாக்கப்பட வேண்டும் என்றும் உலக அளவில் இது குறித்தான ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை அளிப்பதற்கு வழி செய்யவேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிந்தேன். இந்தத் துறைக்கு உங்களைத் தலைவராக அழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் சேவையைப் பாராட்டி, ஜனாதிபதி அவர்களும், ஒபாமா அவர்களும் ‘நசுங்குன சொம்பு நசரேயன்’ என்ற விருது அளிக்கப் போவதாகவும், அந்த விழாவுக்கான பாடலை, கவிஞர். பா.ரா. எழுதி, ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவரப்போவதை தாங்கள் ஏன் சொல்லவில்லை? எப்படியோ, தாங்கள் குற்றாலம் போகவிருப்பதாக அறிகிறேன். ஒரு பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்து, உங்கள் தோட்டத்திலிருந்து எலுமிச்சம்பழம் இலவசமாகக் கொடுத்து குளிக்கவைத்தால், உங்கள் பதிவின் பாதிப்பு சற்று மட்டுப்படலாம்  என்ற அவாவோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

அன்புள்ள
வானம்பாடிகள்





பொறுப்பு அறிவித்தல்:

இதெல்லாம் ஒரு பொழப்பு போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டது


Thursday, July 21, 2011

தற்கொலை தடுப்பு சேவை மையம்


தற்கொலை தடுப்பு வாசகர் சேவைக்கு அழைத்து இருக்கும் வாடிக்கையாளரே நீங்க ஏற்கனவே டிக் 20, இல்ல மூட்டை பூச்சி மருந்து குடித்து இருந்தால் உடனே சவ ஊர்தி வண்டிக்கும், மருத்துவ மனை ஆம்புலன்ஸ் க்கும் அழையுங்க,நீங்க மண்டையப் போடாம இருந்தா திரும்பி வந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் எண் ரெண்டை அழுத்துங்க.

ரெண்டை அழுத்துனத்துக்கு நன்றி, உங்களுக்கும், தற்கொலை தடுப்பு சேவை அதிகாரிக்கும் இடையே உரையாடல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படும்,காரணம் எங்க ௬ட பேசிய பிறகு நீங்க எங்கையாவது போய் மண்டையபோட்டா, உங்களுக்கு சங்கு ஊத நாங்கள் காரணம் இல்லை என்று எங்களை தற்பாதுகாத்துகொள்ள இந்த உரையாடலை சேமித்து வைக்கிறோம் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பெயரை உச்சரித்து எங்களின் விரிவான சேவை பிரிவுகளுக்கு செல்லலாம். தயவு செய்து உங்கள் பெயரி உச்சரிக்கவும்

"என் பெயர் ......."

மன்னிக்கணும் உங்கள் பெயர் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை ௬றவும், "என் பெயர் ..." , மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம், உங்க பேரு புரியலை, மறுபடி ஒரு தடவை சொல்லுங்க.. என் பெயர் ... இல்ல புரியலை.. என் பேரு .. புரியவே இல்ல, அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொறுமை இழந்த வாசகர்  

உங்க பெயர் இன்னும் புரியலை என்று தானியங்கி குரல் கேட்ட கேள்விக்கு

"அட எளவெடுத்த சனியனே"

நன்றி "அட எளவெடுத்த சனியனே" உங்கள் பெயர் நல்ல பெயர், தயவு செய்து எங்களின் விரிவான சேவைகளை ௬ர்ந்து கேளுங்கள், உங்களுக்கு வேலை வெட்டியே இல்ல, எப்போதுமே சும்மாதான் இருப்பீங்கன்னா எண் ஒன்றை அழுத்துங்கள், வேலைப்பணி அதிகமா இருக்கு, அதனாலே மன அழுத்தம் அதிகமா இருந்தா ரெண்டை அழுத்துங்கள். யோசிக்க எதுவும் இல்ல, அதனாலே உங்களுக்கு தற்கொலை பண்ணுகிற யோசனை இருந்தா எண் மூன்றை அழுத்துங்கள். காதல் தோல்வி இல்ல காதல்கள் தோல்வி இருந்தா எண் ஐந்தை அழுத்துங்கள், கணவன் மனைவி பிரச்சனை, கள்ளக்காதல் பிரச்சனயா இருந்தா எண் எழு, இப்ப சொன்ன எல்லா பிரச்சனையும் இருந்தா 
பூஜ்ஜியம், பிரச்னை எதுவுமே இல்லைனா, தொலைபேசிய கீழே வச்சிட்டு நாங்க அணிப்பி வைக்கிற சேவை கட்டண பணத்தை பார்த்து மாரடைப்பு வராமல் இருந்தா நலம்.

     
 உங்களுக்கு எல்லா பிரச்சனையும் இருக்கிறதா சொல்லி இருக்குகீங்க அட எளவெடுத்த சனியனே, உங்க பிரச்சனையின் வீரியம் அறிந்து உங்களுக்கு சேவை செய்ய ஒரு குழு இருக்கிறது உங்களுடன் உரையாட, அதனாலே நீங்க மனம் விட்டு தாராளமா பேசுங்க. சொல்லுங்க திரு அட எளவெடுத்த சனியன்.

"எப்படி சொல்லன்னு தெரியாம துக்கம் தொண்டைய கவ்வி பிடிக்குது"

"ஐயா கவ்வின கழுதையை எறக்கி வைக்கத்தானே நாங்க இருக்கோம்,நீங்க கவலைய மறந்து அள்ளிப்போடுங்க"

"வாழ்க்கையிலே மண் விழுந்துபோச்சி"

"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"

"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"

"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."

"நீங்க எப்போதுமே இப்படி வெட்டியாத்தான் பேசுவீங்களா?"

"ஐயா நீங்க இப்பவரைக்கும் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்ல"

"சொல்லுறேன்.. இவ்வளவு நாளா என் உள்ளத்திலே சுவிஸ் வங்கியிலே ஒளித்து வைத்து இருந்த கருப்பு கள்ளப்பணம் மாதிரி மறைத்து வைத்த எல்லாத்தையும் சொல்லுறேன்"

அரைமணி நேர கொசுவத்திக்கு அப்புறமா மிஸ்டர் அட எளவெடுத்த சனியன் உங்க பிரச்சனைய எப்படி தீர்க்கிறதுன்னு யோசிக்கிறோம். உங்க கோரிக்கைய எப்படி நிறைவேத்துவதுன்னு,ஆனா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்குமான்னு தெரியலையே

"வாசகர் சேவை,எல்லாத்தையும் காப்பாத்துவோமுன்னு சொன்னீங்க,என்னைய காப்பாத்துங்க"

சரி எங்க மின் அஞ்சல் முகவரிக்கு உங்க புகைப்படம் அணிப்பு வையுங்க, தசவல் சொல்லுறோம்.அடுத்த நாள் காலையிலே தற்கொலை வாசகர் சேவையிலே இருந்த மணமாகாத பெண்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

பின் குறிப்பு :

கொசுவத்தியிலே நடந்த சம்பவம் என்னன்னு சொல்ல நான் கடைமைபடலை இருந்தாலும் சொல்லவேண்டியது என்னோட கடமை,அதாகபட்டதவது தற்கொலை வாசகர் சேவையை அழைத்த அந்த மாமனிதன், தங்களின் சேவையிலே உள்ள அனைத்து பிரச்சனைகளும் எதிர் காலத்திலேயே எனக்கு வர வாய்ப்பு இருப்பதாலே,அடிக்கடி உங்கள் சேவைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, உங்கள் தற்கொலை தடுப்பு சேவையிலே வேலை செய்யுற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்னோட வாழ்கையிலே வெளிச்சம் கிடைக்கும்,அதனாலே உங்கள் சேவையிலே இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார்.சேவை அதிகாரிகளும் அந்த மாமனிதனின் புகைப்படத்தை அனுப்ப சொல்ல, அதை பார்த்த அனைத்து பெண்களும், இப்படி ஒரு அழகான வாலிபருக்கு எதிர் காலத்திலேயே பிரச்சனையா என்று ஏங்கி தற்கொலை செய்துகொண்டனர்.அந்த மாமனிதர் யாரென்றும்,அவர் புகைப்படம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை     


Monday, July 18, 2011

ரயில் பயணம்

சென்னை மத்திய ரயில் நிலையத்திலே இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு வண்டியைப் பிடிக்க வேண்டிய நான், காலையிலே இருந்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தேன், ரெண்டு நாளுக்கு தேவையான துணிகளை பையிலே அள்ளி வைத்து விட்டு ரயில் பயணச்சீட்டையும் கவனமாக அணிந்து இருந்த சட்டையிலே வைத்து விட்டு எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைச் சரிபார்த்தேன்.

காலைச் சாப்பாடு மறந்து போனது. மதியம் வந்த போது பசி தெரிந்தாலும் கிளம்பும் அவரசத்திலே சாப்பாடு தவறி விட்டது. தாம்பரத்திலே இருந்து சரியாக ரெண்டு மணிக்கு புறநகர் ரயிலைப் பிடித்தேன்.    

பூங்கா ரயில் நிலையத்திலே இறங்கி வேகமாக நடந்து சென்னை மத்திய ரயில் நிலையம் வந்தடைய மூன்று பத்து, நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் பத்தாவது நடை மேடையிலே ரயில் நிற்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். ரயிலை அடைந்து என்னுடைய இருக்கை இருக்கும் பெட்டியத் தேடினேன் ஐந்து நிமிட தேடலுக்குப்  பின்  இடத்தை  கண்டு பிடித்தேன். இருக்கையிலே ஏறி அமர்ந்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன். 

இதை தொடர்கதையா எழுதி இருந்தா ரெண்டு முட்டை கண் ஆம்லேட் போடமா வெறிக்க வெறிக்க பார்த்தது, இல்ல வெளிய நான் கண்ட காட்சி நடு மண்டையிலே இல்லாதா மூளை அதிரும் படியாக என்னை உலுக்கியதுன்னு சொல்லிட்டு தொடரும் போடுவாங்க. நானும் தொடருமுன்னு போட்டு உங்களோட கொலைவெறி பொறுமையா சோதிக்கிற அளவுக்கு 
கொடுமைக்காரன் இல்ல. 

வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த நான் சாப்பிட எதாவது வாங்க கிளம்பலாம் என்று எண்ணினாலும் வண்டி புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது என்னால் போகமுடியலை, அதானலே வெளியே வேடிக்கை பார்தேன். வண்டி புறப்படும் நேரம் வந்தது, ஆனால் ரயில் கிளம்பலை, ஐந்து, பத்து நிமிடம் ஆச்சி., கடைசியா அரை மணி நேரம் கழித்து கிளம்பியது. நான் இந்திய ரயிலில் பயணம் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த இடைப்பட்ட அரைமணி நேரத்திலும் என்னாலே சாப்பாடு வாங்க முடியலை,வண்டி எந்நேரம் வேண்டுமானாலும் கிளம்பலாம் என்று வாங்க முடியாமல் போனது. 

வண்டி கிளம்பிய பத்து நிமிசத்துக்குள் நடைபாதை டீ,காபியிலே இருந்து டாஸ்மாக் கடையிலே கிடைக்கும் சரக்கை தவிர அனைத்து சரக்குகளை விற்பவர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. விற்பவர்களில் சிலர் சீருடை அணித்து இருந்தார்கள். அவர்கள் ஒப்பந்த உழியர்கள் என்று அவர்கள் அடையாள அட்டையை வைத்து தெரிந்துகொண்டேன், இவர்கள் நடைபாதையிலே செல்லும் வேகம் ரயிலின் வேகத்துக்கு கொஞ்சமே குறைவாக இருக்கும். அசதியாக இருக்கிறது என்று சிறிதுநேரம் எழுந்து நடைபாதையிலே நின்றால் ௬ட "சார் சைடு" என்று நொடிக்கொரு முறை உங்களை கடந்து செல்வார்கள் இந்த ஊழியர்கள்.  

சாதாரண நேரமாக இருந்தால் இவற்றை எல்லாம் கவனித்து இருக்க மாட்டேன், நான் ஒரு எழுத்தாளர் என்று போனவாரம் தெரிந்ததாலே கண்ணில் தென்படுபவை எல்லாம் கனவிலே தென்பட்டு எழுத்துக்களாகிறது(எங்க போய் முடியுமோ)

இப்படி ரயில் நடப்புகளை கவனித்து கொண்டு இருக்கும் போது பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார், எனது மின்னணுச் சீட்டைக் காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் ஏதோ கேட்டாரு, எனக்கு அவரு பேசுனது புரியவே இல்ல. அவரிடம் 

தமிழ் ஆர் இங்கிலீஷ் ன்னு சொன்னேன், அதற்குள் பக்கத்திலே இருந்தவர் "உன்னோட அடையாள அட்டை கேட்கறாரு என்று சொன்னார், உடனே தேடிப்பார்க்க ஆரம்பித்தேன், தேடாத எல்லாம் கிடைத்தது அடையாள அட்டையைத்  தவிர, நான் தேடி முடிக்கும் முன்னே என்னைய பார்த்தது ஹிந்தியிலே சொல்லிட்டு பக்கத்து இடத்துக்கு போனார், அங்கே இருந்த குடும்பம் ஒன்றும் என்னை மாதிரி மின்னணு சீட்டு வாங்கி இருந்தவர்களிடம் அடையாள அட்டை நகலை கொடுத்ததற்காக வாக்குவாதம் பண்ணிவிட்டு கடந்து போனார்.

  அவர் போனதும் கொஞ்ச நேரத்திலே டீ,காபி விற்பவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் சில வீட்டு அத்தியாவசிய பொருட்கள், மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்துகொண்டு வியாபாரம் செய்ய வியாபாரிகள் வந்தார்கள், அந்த வியாபாரிகள் அனைவரும் கிட்டத்தட்ட மாற்று திறனாளிகள், ஒருவருக்கு கண் இருப்பதை கண்டுபிடிப்பதே கஷ்டம், இன்னொருவருக்கு கை மெலிந்து தட்டையாக இருந்தது, இன்னும் சில வித்தியாசமான முக அமைப்பு கொண்ட மனிதர்கள்,இவர்களின் உழைப்பு திறனை பாராட்டுவதா இல்லை இவர்களைப் பார்த்தது பரிதாப்படுவதா என்று யோசித்துக்கொண்டே நான் எந்த பொருளும் வாங்கவில்லை. என்னைமாதிரி மற்ற பயணிகளும் நினைத்தார்களோ என்னவோ,அவர்களும் எந்த பொருளும் வாங்கவில்லை. 

வண்டி சோலார்பேட்டை தாண்டியதும்,சிறிது நேரத்திலே நான் இருந்த ரயில் பெட்டி முன்பதிவு செய்யாத பெட்டியைப்போல ௬ட்டம் நிறைந்து வழிந்தது. எனது  அருகில்  இருந்த காலி இடத்தை துண்டு போட்டு பிடிக்க இருவர், இருவரில் ஒருவர் வென்றுவிட, என் அருகிலே இருந்தவரிடம் கேட்டேன். நீங்க முன்பதிவு செய்தீங்களா என்று, அவரு அதற்கு இல்லைன்னு பதில் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.

பசிமயக்கம்  கண்களை பிறட்டிகொண்டு வந்தாலும், ஏனோ ரயிலில் விற்பனை செய்யப்பட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை. கண்களை  மூடிக்கொண்டு இருந்த சிறிது நேரத்திலே பசி மயக்கத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. எனது  சட்டைய பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, எழுந்தால் எனக்கு எதிரே பயண சீட்டு பரிசோதகர் நின்றுகொண்டு எனது அடையாள அட்டையை கேட்டுக்கொண்டு இருந்தார்,நான் எனது பக்கத்திலே இருந்தவரைப் பார்த்தேன். அவர் இல்லாமல் வேறொருவர் அமர்ந்து இருந்தார்.

பசிமயக்கம், தூக்க கிறக்கம் ரெண்டிலும் வந்த ஆத்திரத்திலே எதிரே நின்ற  
இவ்வளவு நேரமும் மாட்டு சந்தை மாதிரி பயணச்சீட்டு எடுத்தும், எடுக்காமலும் ரயில் பெட்டி முழுவதும் மக்கள் வெள்ளமா இருந்தது,அவங்களை எல்லாம் பார்த்து ஒரு வார்த்தை பேசாத நீ உண்மையிலே முன்பதிவு செய்து சீட்டு வாங்கிய என்னையப் பார்த்து அடையாள அட்டை கேட்கிற உனக்கு மனசாட்சி இல்ல என்று சொன்னேன், கொஞ்ச நேரத்திற்கு எதிரில் நின்றவர் மட்டுமல்ல, அந்தப் பெட்டியிலே இருந்த அனைவரும் அமைதியானார்கள், பரிசோதகர் என்னிடம் 

தம்பி இது உங்க பையிலே இருந்து விழுந்த கடவுசீட்டாய் இருக்கும், உனது புகைப்படத்தை பார்த்து நான் உன்னிடம் திரும்பி கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னவரிடம் வேறவொன்றும் பேசாமல் கடவுச்சீட்டை வாங்கிவிட்டு அமைதியாக அமர்ந்தேன்.அதுவரை பக்கத்திலே இருந்தவர்களிடம் இந்தியன் ரயில்வே யை குறைசொல்லிகொண்டு வந்த நான் எதுவுமே பேசவில்லை, கொஞ்ச நேரத்திலே என் ரயில் பயணம் முடிந்துவிட்டது,ஆனால் இன்னும் வாழ்கைப்பயணம் முடியவில்லை.