Thursday, July 16, 2009

புருஷன் v 1.0 மென்பொருள்

அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்,

கடந்த வருடம் நான் காதலன் 10.0 விலே இருந்து தன்னிறைவு அடைந்து புருஷன் 1.0 க்கு மாறினேன்.நான் மென்பொருளை மாத்தின நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது, குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு, குறிப்பா சொல்லனுமுனா நகைகடை,கைபேசி, வெளியே சுத்துதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0 ல், புருஷன் 1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.

கைபேசி 2.0 எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்று தவறான பதிலையே தருகிறது, எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது ஊமை 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது.வெளியே சுத்துதலை 3.9 அழுத்தினா
கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது, ஆனா நான் புருஷன் 1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது

புருஷன் 1.0 னுல,
காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு, அதற்கு பதிலா செய்தி 3.0,பதிவு எழுதுதல் பீட்டா,கிரிக்கெட் 3.0 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது.
சம்பாஷனை 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.

முக்கிய விஷயம் நீங்க அறிவுறித்திய குற்றம்கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை.
இடை இடையே மாமியார் 1.0௦ என்ற கிருமி வேற பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது

இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.

இப்படிக்கு,
புருஷனை தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் சீமாட்டி

***********************************************************************************

அன்புள்ள சீமாட்டிக்கு,

நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா புருஷன் 1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க, அழுகையோட சேத்து வருது.

புருஷன் 1.0 நீங்க ஒழுங்கா பயன் படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியேசுத்துதல் 3.2 எல்லாம் சரியாக வேலை செய்யும், இன்னும் ஒன்று புருஷன் 1.0 வை தாறுமாறாக பயன் படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணிஅடி 2.7 தன்னாலே மாறிவிடும், முக்கிய குறிப்பு தண்ணிஅடி 2.7 ரெம்ப மோசம் அது குறட்டை 2.0,அடிதடி பீட்டா ரெண்டையும் ௬டவே ௬ட்டிட்டு நல்லா கும்மி அடிக்கும் உங்களோட.

எல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா புருஷன் 1.0 னை பயன் படுத்தினால், புருஷன் 1.0 தரமாக உழைக்க உதவி செய்யும், இல்லாட்டி உங்களை சாவடிச்சுடும்.. (வசனம் உதவி ராகவன் அண்ணன்)

இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், புருஷன் 1.0 க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம், புருஷன் 1.0 உடைந்து போகும்.


சுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.


நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பதுஎப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்தவும்,அதன் செயல் படும் திறனை அதிகப்படுத்த முயற்சி செய்யலாம்.

இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்க்க௬டாது, அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு புருஷன் 1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.

பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு


Thursday, July 9, 2009

இரு காதல் கடிதங்கள்

அடியே இவளே,

நீ அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது,உங்க அப்பன் சொட்டையன், உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க சொல்லு, நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,அவங்க கோபப்பட்டா கைமா பண்ணிவிடுவேன், அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.

நீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது, அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும், நான் யாரை வேண்டுமானுலும் பார்ப்பேன், நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன், நீ என்னை மட்டும் தான் பாக்கணும்.நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ, மத்த நேரங்களில் என்னை நினைக்காதோ, இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே இன்னும் கீழேயும் படி.


மனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே, இந்த வரியை படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும், தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ (இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்)
முடிக்கும் போது உம்மா கொடுக்க நான் சும்மா வந்தவன் இல்ல செல்லக்குட்டி, சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.

கொலைவெறி மகிழ்ச்சியில்
நான் + நீ = நாம்
********************************************************************************
அடங்கொய்யால..

நீ காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை, இறுமாப்பை ௬ட ஒரு நுறு வருஷம் கழிச்சி மறப்பேன்,ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்.நீ நேரிலே வந்தா உன் சங்கை கடிச்சுடுவேன், ஊரை விட்டு ஓடிவிட்டால் அணுகுண்டு போட்டு அழிச்சிடுவேன். நீ ரவுடியா இருந்தா, நான் ரவுடியாதி ரவுடி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு.


என் கண்ணிலே நீ தென்பட்டால் உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை, பாறையை உடைகிற வெடிகுண்டு நான், உன்னை மாதிரி பன்னியை உடைக்க என் விரல் நகம் போதும்,ஓடிப்போன்னு சொல்லும் முன்னே ஓடிவிடு, இல்லை ஓட ஓட அடிப்பேன்.என் நினைப்பு உனக்கு வந்தாலும், உன் நினைப்பு எனக்கு வந்தாலும் சோகம் உனக்குத்தான்,சொல்லிட்டு முடிச்சா பதிலு,சொல்லாம முடிச்சா பாடை,அடிச்சி பேத்துடுவேன் அரை லூசே, அடங்குடா அரை வேக்காடு

இப்படிக்கு,
நான் = நான்
நீ = நீ
நான் + நீ = infinitive

**************************************************************************************

அன்புள்ள தங்கச்சிக்கு,

என்னை மன்னிச்சுடு, வீட்டுல அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், பெரிய அண்ணன் எல்லோரையும் கேட்டதா சொல்லவும், நான் எதோ விளையாட்ட எழுத, நீ சொன்ன மாதிரி விபரீதமா எழுதுவும் பண்ண வேண்டாமுன்னு காலை தொடாம குனிச்சு கேட்டுகிறேன், உன் கல்யாணம், உன் புள்ளை காது குத்து, அவ கல்யாணம் முடிக்கும் வரைக்கும் இனிமேல ஊருகுள்ளே வர மாட்டேன்னு நீ எழுதிய கொலை வெறி கடிதம் மேல ரத்த சத்தியம் பண்ணிட்டேன்,இன்னும் உன் மனசு ஆறலைனா நீ என்னை எங்கவும் தேட வேண்டாம், உனக்கு எப்ப எப்ப கோபம் வருதோ சொல்லி விடு, நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன்,இந்த விஷயத்தை பெருசு படுத்தாம இந்த கொசுவை அடிக்காம மன்னிக்கனுமுனு மறுபடியும் காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன்.

இப்படிக்கு
அன்பு அண்ணன்


Wednesday, July 8, 2009

பெண் பார்க்க போறேன்

டேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா?

"என்னங்க அவன் பெண்ணு பார்க்க சமதிச்சதே பெரிய விஷயம், இன்டர்நெட் வழியாவே கல்யாணம் முடிக்கலாமுன்னு இருந்தவன், கொஞ்சம் மனசு மாறி இருக்கான், நீங்க எதையாவது பேசி கெடுத்து விடாதீர்கள்."

"டாட், இதுதான் லேட்டஸ்ட் பேஷன்"

"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற"

"கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா, பொண்ணு வீடு வந்தாச்சு"

பொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கமான பச்சி,வடை, காபி எல்லாம் பரிமாறப்பட்டது, பையன் மட்டும் ஏதும் சாப்பிடலை,அதுக்கு காரணம் நாகரிகம் இல்லை, அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை,எல்லோரும் பேசுறதை காதிலே வாங்காம பொண்ணோட பேசுறதிலே பையன் ஆர்வமா இருந்தான் காஞ்ச மாடு மாதிரி,எல்லா பெருசுகளும் பேசி முடித்தவுடன்

"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்"

"நீங்க வெளிநாட்டுல வெள்ளைக்கார துரைகிட்ட வேலை பார்க்கிறதாலே, இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தெரியும், அடுத்த அறையிலே நீங்க ரெண்டு பேரும் பேசலாம்"

"மன்னிக்கணும் நான் வெளிநாட்டு வாழ் தமிழன் எதையும் ஒளிவு மறைவு இல்லாம பேசுவேன், அதனாலே நான் இங்கே தான் பேசுவேன்"

"டேய்.. இதெல்லாம் .."

"அம்மா அப்பாவை கொஞ்சம் அடக்குங்க"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்

"உங்களுக்கு சாப்ட்வேர் தெரியுமா ?"

"அது என்ன ஆணிவேர்?..என் பொண்ணு ரெம்ப பேசமாட்டா அதானலே நான் பதில் சொன்னேன்.அவளுக்கு வரலாறு தெரியும்"

"இல்ல அவங்களே பதில் சொல்லட்டும்." தெரியாதுன்னு வேகமாக தலையை ஆட்டுகிறாள்.

"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"

"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"


"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு, இந்த கேள்விக்கான காரணம்?"

"நான் எப்போதும் மூடியை மோந்து பார்த்த உடனே கீழே விழுந்துவிடுவேன், தண்ணி ஒரு டாலர், என்னை அள்ளிப்போட்டு கொண்டு வார டாக்ஸிக்கு ஐம்பது டாலர் கொடுத்து கட்டுபடிஆகலை, அதனாலே குடும்பமா தண்ணி அடிச்சா செலவை குறைக்க இந்த சிறப்பு கேள்வி,என்னோட கேள்விகள் முடித்து விட்டது, நீங்க ஏதாவது கேட்க விரும்புறிங்களா, என்னை பற்றி,என் வேலையை பற்றி"

"ம்ம்"

"தாரளமா கேளுங்க.."

"உங்களுக்கு சமைக்க தெரியுமா?"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா?"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?

தெரியும்.. நான் தமிழ் பையன்

"நான் அந்த தண்ணிய சொல்லலை, அடி பம்ப்ல அடிக்கிற தண்ணிய சொன்னேன்"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

"உங்களுக்கு மாமியார் மருமகள் சண்டைனா என்னனு தெரியுமா ?"

"அப்படின்னா ?"

"எனக்கு தெரியும்" இது பொண்ணோட அப்பா

"எனக்கு தெரியும்" இது பொண்ணோட அம்மா

"எனக்கு தெரியும்" இது பையனோட அம்மா

"எனக்கு தெரியும்" இது பையனோட அப்பா

"எனக்கு தெரியும்" ... (இப்படி எல்லோரும் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆகி விட்டது)

"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..
தமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..
வெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..
ஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.
பொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..
இப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க"


"என் வருகால மனைவியா வர தகுதிகள் என்ன இருக்குன்னு சோதனை பண்ணுறேன்,அதுக்கு தான் இப்படி கஷ்டமான கேள்விகள் கேட்டேன் "

"அப்படின்னா நீங்க பொண்ட்டாடி வேண்டுமென கடையிலே ஆர்டர் கொடுக்க வேண்டியதானே, இங்கே ஏன் வந்தீங்க"

இதை கேட்டு பொண்ணோட அப்பா
"நீ என்னவோ என்னையே மாதிரி உமையாவே காலம் தள்ளுவியோன்னு நினைச்சேன், நீ உங்க அம்மாவை விட ஒரு படி மேல, உன்னை நினைத்து எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு, ஒரு பூவை புலியாக்கிய உங்களுக்கு நன்றி"

"டேய் வா, அடுத்த தெருவிலே இன்னொரு பொண்ணு இருக்கிறதா தரகர் சொல்லுறாரு, அங்கே போகலாம்"

"கொஞ்சம் இருக்குங்க நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்" சொல்லிட்டு பொண்ணோட முன்னாடி முட்டிகால் போட்டு அவளோட கையை பிடிச்சி கிட்டு

"என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து முடியலை, இது வரைக்கும் ஒரு ஆயிரம் பெண்ணை பார்த்து விட்டேன், இப்படியே போனால் தமிழ் நாட்டுல மட்டுமல்ல, இந்தியாவிலேயும் பெண்ணு கிடைக்காது, சுண்டுனா ரத்தம் வார நிறத்திலே இருந்த நான் நிலக்கரி மாதிரி ஆகிவிட்டேன், தயவு செய்து என்னை கணவனா ஏத்துக்கோங்க"

"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு?"

"நான் என்ன சொல்ல இருக்கு எல்லாம் உன் முடிவு தான், நான் ஒரு தமிழ் அப்பா"

"என் தேனே, இனிப்பே"

"ஹனி,ஸ்வீட்டி யைத்தன் அப்படி சொல்லுறா, அவ தமிழ் பொண்ணு"

"இன்றைக்கு உன் கையை பிடிச்ச நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்.இந்த கைகட்டு,கால் கட்டு போட்ட அப்புறமும் தொடர்ந்து இருக்கும்"

"இந்த வசனம் பேசினால் எதாவது கையிலே கொடுக்கணும்."

"அப்பா, என் கையை தானே அவரு பிடிச்சி இருக்காரு, அதனாலே ஒரு ரூபா எடுத்து நெத்தியிலே ஒட்டி விடுகிறேன்."


"கல்யாணம் பண்ணுறதும் அதும் ஒண்ணுதான் தான், நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு"



ஆறு மாதத்திற்கு பிறகு
****************************
"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு"

"நான் வெளிநாட்டு பெண்"

"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது"

"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது."

"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை"

"சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன், நீங்க கொஞ்சம் சிரிங்க"

"சிரிப்பு போய் ஆறு மாசம் ஆச்சி"


Monday, July 6, 2009

உச்சி வெயில்

உச்சி வெயிலின் உக்கிர வெப்பம் தாங்காமல் எழுந்தேன், எழுந்தவன் எழுந்த இடம் தெரியாமல் கண்ணை சுற்றினேன், சாக்கடையிலே எலி செத்த துர் நாற்றம் எனக்கு தெரியவில்லை காரணம் என் வாயின் துர் நாற்றம், ஒவ்வொரு முறை இரவு கடைக்கு சென்று மறு நாள் காலை எங்காவது விழுந்து எழும் போது நான் எடுக்கும் வழக்கமான முடிவு தான், இருந்தாலும் அந்தி மாலையிலே ஆதவன் மறையும் போது என் முடிவும் என்னை விட்டு மறையும், நான் மீண்டும் அதே கடைக்கு செல்லும் முன்.

வெயில் வெப்பம் தாங்காமல் தலையை தொட்டு பார்த்தேன், முடிகள் ஒன்றோடு ஓன்று ஒட்டி இருந்தது, அதை இழுக்கும் போது ஏற்படுத்திய வலியை உணரும் அளவுக்கு நான் இன்னும் தெளிச்சி அடைய வில்லை, கைகளை பார்த்தேன் கரும்சிகப்பு நிறத்திலே திட்டுக்கள் ஆங்க்காங்கே, இரவு விழுந்ததிலே தரை என் தலைக்கு தண்டனை கொடுத்து இருக்கும் என,நேற்று இரவு நான் மனதுக்கு அளித்த உணவு தீர்ந்த நிலையிலே வயற்றிக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டயாத்தை உணர்த்தியது, எனக்கு உணவின் உறைவிடமாக இருக்கும் வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டிற்கு செல்லும் போது உடையின் அலங்கோலத்தையும், ரத்தம் உறைந்த தலையையும் பார்த்து யாரும் பரிதாப படவில்லை, இது தினமும் நடக்கும் வழக்கமான நிகழ்வு என்பதால் என் கோலத்திலே அவர்கள் வீட்டு முன் இட்டு இருக்கும் கோலம் அழியாமல் பார்த்து கொள்வார்கள்.அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள் என்று என் சுய நினவு என்னை வற்புறுத்தும் அளவுக்கு நான் இடம் கொடுப்பத்தில்லை,அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.

வீட்டின் முன் வந்தேன், என்னை வரவேற்க யாரும் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன்,சமையல் அறையில் எனக்கு உணவை தேடினேன், வயற்றின் வெறுமை பாத்திரங்களின் வெறுமையைப் பார்த்து கோபத்தை தூண்டியது,வழக்கமாக இரவு நேரங்களில் நான் பயன் படுத்தும் ஆயுதங்கள் கண்ணில் தென் படாமல் போக ஒரு காலி பாத்திரத்தை எடுத்து கொண்டு என் மனைவியை தேடினேன் .அடுத்த அறையின் விசும்பல் ஓசையை கேட்டவுடன் ஆத்திரத்துடன் சென்றேன்.


அவள் முகத்தை தலை முடி மறைத்துக்கொள்ள கீழ் நோக்கி இருந்த அவளின் அழுகையை மட்டும் கேட்டேன், நான் உடம்பின் முழு வலிமையையும் பயன்படுத்தி காலி பாத்திரத்தால் அவளை அடிக்க ஓங்கினேன், நான் ஓங்கவும் வெளியே கார் வரவும் சரியாக இருந்தது, வண்டி வந்த திசையைப் பார்த்தேன், அதன் நிறம் கண்டு அது காவல் துறைக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டேன்.

வண்டியிலே இருந்து இறங்கியவர்கள் என்னை நோக்கி வரவும் நான் பின்னால் இருந்த கதைவை திறந்து வெளியே ஓடி மறைந்து கொண்டேன், ஓடிவிட உடலில் தெம்பு இல்லாததால் அங்கே மூச்சை உள்ளேயும் வெளியேயும் இழுத்து கொண்டு நின்றேன், ஓடுவதற்கு பதில் அவர்களிடம் பிடி படுவதே நலம் என்ற முடிவில்,வந்தவர்கள் என் மனைவியின் இருப்பிடம் வந்து நின்றார்கள், அவள் அவர்களை கண்டு பயந்ததாக தெரியவில்லை அவர்களை எதிர் பார்த்தது போல எழுத்தாள், பின்புறம் இருந்த சன்னல் வழியாக பார்த்தேன், அவர்கள் பேசுவது லேசாக காதிலே விழுந்தது.

காரில் வந்த பெண் காவல் துறை அதிகாரி மற்ற காவலர்களுக்கு உத்தரவு கொடுத்து கொண்டு இருந்தார், வீட்டிற்கு முன் ௬ட்டம் ௬டாமல் பார்த்து கொள்ள வேண்டும், மருத்துவ வாகனம் இன்னும் இரண்டு நிமிடத்திலே இங்கே இருக்கும் என்று சொன்னார்.அவர்கள் பேசிய உடனே மீண்டும் அழுது என் பக்கம் திரும்பிய போதுதான் நான் அவள் முகத்தை கவனித்தேன், அவள் முகத்திலும் ரத்தம் திட்டுக்களாய், நேற்று இரவு நான் அவள் கன்னத்திலோ, தலையிலோ அடித்து இருக்க வேண்டும் என் நினைத்தேன், இது தினமும் நடக்கும் நிகழ்வு, இதற்கு காவல்துறையின் அவசியம் என்ன இருக்கிறது என்று எண்ணமிட்டேன்.

அதற்குள் மருத்துவ வாகனம் வீட்டு முன் நின்றது, அதிலே இருந்து வெண் சீருடை அணிந்தவர்கள் இறங்கி கையிலே நோயாளிகளை கிடத்தி கொண்டு செல்லும் பொருளுடன் என் மனைவி இருந்த அறைக்கு வந்தார்கள், அங்கே இருந்த பெண் காவல் அதிகாரி ஒரு மூலையை நோக்கி கையை காட்டினார், வந்தவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அங்கே என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தொற்றி கொள்ள நானும் பின்னால் இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தேன்.அந்த மூலையிலே முகம் குப்புற ஒரு ஆள் படுத்து கிடந்தான், அவன் யாராக இருக்கும் என்று யோசிக்கும் முன் மருத்துவ காவலர்கள் அவன் முகத்தை திருப்பினார்கள்.

அவனை பார்த்தும் நான் அதிர்சியிலே உறைந்தேன், தலையிலே காயங்களுடன் ஆங்காங்கே ரத்த திட்டுகளுடன் இருந்தாலும் அந்த முகத்தை கண்டு சுலபமாக கண்டு பிடித்தேன், அது வேறு யாருமல்ல நானே தான். என்னை எடுத்து மருத்துவ படுக்கையிலே கிடத்தினார்கள், நான் இங்கு நிற்கும் போது என் உருவிலே எப்படி என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்தேன்.இதற்குள் பெண் காவலர் மருத்துவ அதிகாரிகளை நோக்கி, அந்த பொருளை தொட வேண்டாம் அதை நாம் பத்திரப் படுத்த வேண்டும், அதிலே உள்ள கை ரேகைகள் பதிவு செய்ய படவேண்டும் என்றார், அது நான் வழக்கமாக இரவு நேரங்களில் பயன் படுத்தும் பொருள், அதற்குள் என்னை கிடத்தி இருந்த என் முகத்தை ஒரு வெண் துணியால் மூடினார்கள்.அதை எடுத்து கொண்டு கிளம்பு ஆரம்பித்தார்கள்.

காவல் துறை பெண் அதிகாரி என் மனைவிடம்

"உனக்கு இந்த குடிகாரன் கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைத்தாலும், சட்டத்திலே இருந்தது உனக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு இல்லை"

அதை கேட்டு அவள் அழவில்லை, அவளின் கண்ணீர் நிச்சயம் வற்றி இருக்கும், அவள் அவர்களோடு நடந்து சென்றாள், வீட்டின் முன் ௬டிய ௬ட்டத்தை பார்க்க முடியாமல் முகத்தை மூடி கொண்டு சென்றாள், எனக்கு அடக்க முடியாத அழுகை வந்தது,காலம் கடந்து வந்த இந்த நிரந்தர அழுகையை நிறுத்தும் முன் நான் நிரந்தர நித்திரை அடைந்து விட்டேனே என நினைத்து


Friday, July 3, 2009

பதிவரும், பதிவியும்

"ஹாய்.. எப்படி இருக்கீங்க?"

"ம்ம்.. நலம்.. என்னோட நேத்தைய இடுகை எப்படி"

"நச்.. பட்டைய கிளப்பீட்டீங்க... அழுத்தமான வரிகள், இதயம் கனத்தது "

"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்."

"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு"

"உண்மையாவா ?"

"இல்லை..இல்லை.. ஒரு இடுகைக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை உனக்கு போட்டேன், காபி, பேஸ்ட் பிரச்சனை"

"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"

"ம்ம்.. தனி பைல்ல வைக்கிறேன் இனிமேல"

"என்னோட இடுகை எப்படி இருக்கு?"

"சூப்பரோ... சூப்பர்"

"உண்மையாவா?"

"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு "க்" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா ? , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த "க்" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்"

"நீங்க பெரிய நுண் எலகியவாதியா இருப்பீங்க போல, இடுகையை முழம் போட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க "

"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க?, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்"


"இவ்வளவு திறமையுள்ள இடுகைக்கு, இடுகை வெளியிட்டு ரெண்டு நாளாச்சி, இன்னும் ரெண்டு ஹிட் ௬ட வரலை, அதுல ஒரு ஹிட் நான்"

"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை"

"சரி அதை விடுங்க,அடுத்த இடுகை என்ன?"

"பெண்ணாதிக்கம் உள்ள இடுகை, அதுதான் என்ன பண்ணனு யோசித்து கொண்டே இருக்கேன், எல்லாம் எழுதி விட்டேன்,ஆணாதிக்க வாதிகள் சண்டைக்கு வரக்௬டாது, என்னாலே வலைப்பதிவர்கள் போராட்டம், கடை அடைப்புன்னு கிளம்பக்௬டாது, அதனாலே தான் இடுகையை வெளிடாம இருக்கேன்"

"என்னது ஆணாதிக்கமா!!!! அது எங்கே எங்கே இருக்கு?, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க"

"யாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்"

"என் வீட்டிலேயும் நான் தான் சமைக்கிறேன்"

"என் அறிவு கண்ணை திறந்துடீங்க"

"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. "

"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு ?"

"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது?"

"ஏன் வீட்டிலே உங்க தங்கமணி சமையலா ?"

"இல்லை இடுகையோட விஷயம் கேள்விப்பட்டு"

"இந்த இடுகை விஷயம் உண்மை, துத்துக்குடி பக்கம் ஒரு ஊரிலே உண்மையா நடக்குது?..ஹி.. ஹி, அது எங்க ஊரு தான் "

"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்"

"கூல் டவுன்..கூல் டவுன்.. என் இவ்வளவு உணர்ச்சி படுறீங்க.. என்னாச்சு?"

"இல்ல என் தங்கமணியும் உங்க ஊரு தான்ங்கிற உண்மை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது"

"அப்படியா!!!! ரெம்ப சந்தோசம், இனிமேல சண்டை வந்தா என் பேரை சொல்லுங்க ?"

"ஏன் அடியே விழாதா ?"

"இல்ல அடி குறைவா விழும்"

"ஆமா உங்க உண்மையான பேரு என்ன ?"

"... இதுதான்.. யாரிடமும் சொல்லாதீங்க?"

"என் தங்கமணி பேரும் இதுதான்"


"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"

"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி "

"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி"

"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை"

"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்"