யார் இலக்கியவாதி?
இலக்கியவாதிகள் ௬ட்டம், இலக்கிய இன்பம் பருக வருக, இலக்கிய ரசம் இப்படி பல சொல்வாடைகளையும் கேட்டு இருக்கிறேன்.அங்கே எல்லாம் போனா இரும்பு அடிக்கிற இடத்திலே ஈ நின்ற மாதிரி இருக்கும்முன்னு போகவே மாட்டேன்.
யாரை இலக்கியவாதி என சொல்ல வேண்டும், அப்படி சொல்லும் படி நடக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும் இருக்குன்னு இல்லாத மூளை கசக்கி பிழிந்தேன்.தங்கமணி வீட்டிலே வைத்த ரசத்தை குடித்து யோசித்து பார்த்தேன், அடுத்த ரெண்டு நாளைக்கு யோசிக்கவே முடியலையே, ஏன்னா அது ரசமுன்னு கண்டு பிடிக்க ரெண்டு நாள் ஆகிவிட்டது.இருக்கவே இருக்காரு கூகிள் ஆண்டவர், அவரை நம்பினால் கைவிட மாட்டார்ன்னு கேட்டேன், அள்ளிக் கொடுத்தார்.
எதாவது ஒரு கருத்தை கொண்டு எழுதிய அனைத்துமே இலக்கிய வகையிலே சேருவதாக சொல்லுகிறார் கூகிள் ஆண்டவர்.அதாவது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை அனைத்தும் எதாவது ஒரு கருத்து, உணர்வு எண்ணம் சார்ந்து வெளிப்படும்,அதை படித்த பின் என்ன எண்ணம் ஏற்படும் என்பது இலக்கியவாதிக்கு அப்பாற்பட்ட விஷயம்,அதனாலேவோ என்னவோ நான் எல்லாம் என்னை எழுத்தாளர்ன்னு சொல்லுறதில்லை, வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை.எழுத்திலே இலக்கணம் அமைந்தால் யாருக்கு பெருமைன்னு தெரியலை, ஆனா இங்கே இலக்கணம் சொல்லவேண்டிய நிலைமை எனக்கு.இலக்கியத்தை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு இலக்கணம் பார்க்கலாம்.
இலக்கணம் என்பது ஒரு மொழி சார்ந்த விஷயம், எல்லா மொழி களிலுமே இலக்கணம் இருக்கிறது, ஆங்கில இலக்கணத்தை கடம் அடித்து மனப் பாடமாய் ஏத்தினது இன்னும் மனசுக்குள்ளே அப்படியே இருக்கு, ஆனா வெளியே சொல்ல முடியலை.
இலக்கணம் ஒரு சொல்லையோ, ஒரு எழுத்தையோ குறிக்கலாம், அந்த வகையிலே மொழி பேசுற எல்லோருமே இலக்கணவாதிகள் என்பது உண்மை(?).
ஒரு இலக்கியவாதி(நான் இல்ல சாமிகளா) எழுதும் போது ஒரு சொல்லையே, எழுத்தையோ குறித்து எழுதுகிறார், அவரை அறியாமலே அதிலே அணியும் கலந்து கொள்கிறது, தனது கற்பனைகளை விவரிக்கும் போது தற்குறியாக எழுதினாலும் அங்கே அது தற்குறிப்பு ஏற்ற அணியாக மாறுகிறது. ஆக ஒருவரது படைப்பிலே இலக்கணம் இருக்கிறது என்பதும் உண்மையே(?). இலக்கணமும், இலக்கியமும் ஒரு படைப்பிலே நகமும் சதையும் போல இருக்கிறது.ஆக ஒரு இலக்கியவாதிகுள்ளே இலக்கணமும் ஒளிந்து கிடக்குது.
எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலே நான் கேட்ட கலை வசனம் ரத்தக் கண்ணீர் தான்.ஆடலையும் ஒரு கலைன்னு சொல்லலாம், எழுதுவதையும் ஒரு கலைன்னு சொல்லலாம்.கண்ணால் பார்த்து உள்ளம் உணர்வதும் ஒரு கலையே, எழுத்தாளன் எங்கே கலைஞன் ஆகிறான் என்றால் எழுத ஆரம்பிக்கும் போதே,அப்படின்னு பார்த்தா மனபாடம் பண்ணி பரிச்சை எழுதுவதும் கலையே(?).படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்(?)
ஒவ்வொரு எழுத்தாளருக்கு உள்ளேயும் இலக்கியம், இலக்கணம் மற்றும் கலை இயல்பாவே இருக்கு, அப்படி இருக்கும் போது அவரு இலக்கியவாதி என்று சொல்லும் முன்னே, நாமும் இலக்கிய வாதிதான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்.நமக்கு நாமே உதவி திட்டத்தின் கீழே இந்த பட்டம் கொடுக்கப் படுகிறது.
எழுத்தாளர் மட்டுமல்ல வாசகருக்கும் இந்த பட்டம் பொருந்தும், ஒருவரின் கருத்தை படித்து விட்டு இன்னும் மிகைப் படுத்தி எழுதி இருக்கலாம் என நினைக்கும் போது இலக்கியவாதியாகிறார், (இதை) எழுதியவன் மட்டும் கையிலே கிடைத்தா கண்டம் துண்டமா வெட்டி போடுவேன் என்று நினைக்கும் போது கலைஞன் ஆகிறார், எழுத்துகளை வசிக்கும் போதே அவர் இலக்கணவாதியாகிறார்.படிக்கிறவங்க, எழுதுறவங்க எல்லோருமே இலக்கியவாதிகள்(?).
ஒவ்வொரு மனிதனுக்குள்ளே இந்த முன்று மட்டுமல்ல ஓராயிரம் திறமை இருக்கிறது, அதிலே அதிகம் வெளிப்படும் திறமை அவனுடைய அடையாளமாகிறது. (ரெம்ப முக்கியம் இந்த குத்து வசனம்).
இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார்
இங்கே அடையாளங்களை காணலாம்.