Sunday, November 22, 2009
காதல் துடிப்பு
Wednesday, November 18, 2009
தள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்
இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம், சத்தியமா அவளுக்குநான் துண்டு போடலை, காரணம் அவ அளவு கடந்த அழகா இருந்ததாள்.சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.
அலுவலக வேலை விசயங்களை பத்தி உரையாடும் போது என்ன சொல்ல வாறேன்னு நான் பேசின அரைகுறை இங்கிலிபிசு அவளுக்கு புரியலை, அவ பேசின முழு இங்கிலிபிசு எனக்கு புரியலை.வெறுத்து போன அவள் ஒரு நாள் "நீ ஏன் இந்தி படிக்க ௬டாதுன்னு, எங்க அப்பா மராட்டி, ஆனா இந்தி வாத்தியாரு, நானும் ஒரு குட்டி வாத்தியார் தான்னு சொன்னா"
அம்புட்டு அழகா இருக்கவகிட்ட முடியாதுன்னு சொல்ல மனசு வரலை, இந்தியோட சேர்த்து காதல் பாடமும் வராதன்னு நப்பு ஆசையிலேயும், ஒரு பாடத்திலே ரெண்டு பரிச்சையிலே தேர்வு அடைவோம் என்ற நம்பிக்கையிலும், சம்மதம் சொன்னேன்.
ஒருவாரம்,ரெண்டு வாரம், மூனு வாரம் போச்சி நான் "நமஸ்தே" யை தாண்டலை, "அவ என்ன மச்சான் எப்படி இருக்கன்னு" நமிதா அக்கா மாதிரி டமில் பேச ஆரமிச்சிட்டா.
ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தமிழ் பாட்டு போட்டு காட்டினேன், மின்னலே வசீகரா பாட்டை கேட்டுட்டு, பாடல் ரெம்ப நல்லா இருக்குன்னு சொன்னா , அதையே சாக்கா வச்சி பிரண்ட்ஸ் படம் பார்க்க ௬ட்டிட்டு போனேன், வடிவேலு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சவா, தமிழ் நாட்டிலே எவ்வளவோ திறமைகள் இருக்கு, எனக்கெல்லாம் தெரியாம போச்சி, நான் இது நாள் வரைக்கும் சூரியன் உதிக்கிறதும், மறையறதும் மும்பையிலே தான்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.
பூனை கண்ணை மூடி கிட்டு பால் குடிச்சா, உலகமே இருட்டுன்னு நினைக்குமாம் என்ற பழமொழி ஞாபகம் வந்தாலும், அரை மணி நேரமா இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்ல ன்னு யோசித்து முடியாம விட்டுட்டேன்.
அதன் பின் நிறைய தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தேன்.ஒரு நாள் என்னோட பெயருக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா
"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை, என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன், ரெண்டு நாள் கழிச்சி வந்தவகிட்ட "என்னாச்சி" ன்னு கேட்டேன்.
மாரடைப்பு வருகிற மாதிரி ஒரு தகவலை தந்தா, என்னாலே எப்படி அதிர்ச்சியை தாங்க முடியும்.அவளோட அழகை ௬ட அவ கிட்ட பேசவே இல்லை அதற்கு அப்புறம்.இப்படி நாங்க பாடம் படிச்சி கிட்டு இருக்கும் போதே அமெரிக்க பொருளாதாரம் சரிய எங்க பாடத்திலே மண்ணை அள்ளி போட்டுட்டாங்க, அடுத்த வாரத்திலே ஒரு நாள் எங்க டமேஜெர் ௬ப்பிட்டாரு என்ன நடந்ததுன்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.
பொறுப்பு அறிவித்தல் : (உபயம் வால்பையன்) இந்த கதையை சம்பந்தம் உள்ளவர்கள் படித்தால், இது கற்பனை என கொள்க
Sunday, November 15, 2009
குடும்பச் சண்டை
மூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.
இவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.
குடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.
அவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.
சிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.
அதற்கு பதில் சொல்லாமல் "வெளியே என்ன?"
"உங்க சித்தப்பனும், பெரியப்பனும், ரெம்ப நாளைக்கு பிறவு, ௬த்து கட்டுறாங்க" ஏதோ நினைவு வந்தவளாய் ஒரு பெருமூச்சோடு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.அவனும் வெளியே வந்து எந்நாளும் இல்லாமல் சண்டையை வேடிக்கைபார்த்தான், மேலே வானம் வெறுமையா இருப்பதைப் பார்த்தான், இந்த சண்டையை எங்காவது ஒரு இடத்திலே இருந்து அவன் தந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல உணர்ந்தான். அவனை அறியாமலே அவன் கண்கள் கலங்கின, கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே நடந்தான்.
Wednesday, November 11, 2009
நெப்போலியன் மேல சத்தியம்
ஒண்ணு இல்ல மச்சான் இல்ல ரெண்டு வந்து இருக்கு, அதுவும் வடக்கூர்காரிங்க.
நம்மை எல்லாம் நாயா விட கேவலமா பாப்பாங்க, அவங்க எல்லாம், அது உனக்கு நம்பவே முடியலையே.
நீங்க இந்த விஷயத்திலே என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும் அதனால்தான் அவங்க அனுப்பிய ஈமெயில பிரிண்ட் பண்ணி எடுத்திட்டு வந்து இருக்கேன்.
எங்க குடு பார்க்கலாமுனு (ராம்நாடும், புது கோட்டையும் ஓடிவராங்க)
டேய் ராம்நாடு மெயில் பார்த்தா உண்மைனு தான் தெரியுது, அனுப்புனர் விலாசம் எல்லாம் சரியாத்தான் இருக்கு.
ஆமா எட்டப்பா, அதுவும் ஆபீஸ் ஐ.டி யிலே இருந்து வந்து இருக்கு.
டேய் கருப்பா எனக்கு ஒரு சந்தேகம், காதல் கடிதாசி எழுதுறவங்க எதுக்கு ஆபீஸ் ஐ.டி யிலே அனுப்பனும்.
எட்டப்பனுக்கு எப்போதுமே சந்தேகம் தான், என் அழகிலே மயங்கி, காதல் வெறியிலே எழுதி இருப்பாங்க.ஈமெயில் பார்த்த நிமிசத்திலே இருந்து என் ஈரக் கொலையெல்லாம் நடுங்குது.
பார்த்துடா, காதல் கை ௬டி வரும் முன்னே நீ காலாவதி ஆகிவிடாதே.
டேய் நீ மாநிறமா இருந்தும் உனக்கு உங்க ஊரு தண்ணி இல்லா காடு மாதிரி, உன் காதல் நிலம் வரண்ட பூமியா இருக்கிறதாலே என்னைப் பார்த்து பொறாமை படாதே.
எல்லாம் என் நேரம்டா இதை எல்லாம் கேட்கணுமுன்னு என் தலை எழுத்து.
டேய் ராம்நாடு அமைதியா இரு, கருப்பா இப்ப என்ன முடிவு எடுத்து இருக்கே, உனக்கு ரெண்டு துண்டு விழுந்து இருக்கு, எதையாவது ஒண்ணு எடுத்துட்டு, ஒண்ணை விடு ஆத்தேட போட்டும்.
ஆமாடா, ஒருத்தி வாழ்க்கை தான் வீணாப் போறதை எங்களால பார்த்து சகித்து கொள்ள முடியும்.
டேய் துண்டு வாங்கினவன் நான், நீங்க ரெண்டு பேரும் வாயிலே இனாமா வருதுன்னு அள்ளிப் போடுறீங்க, வாங்க தெரிந்த எனக்கு எப்படி எடுக்கணுமுன்னு தெரியும், நீங்க கொஞ்சம் அடங்குங்க.
அப்ப ரெட்டை தோணியிலே போகணுமுன்னு முடிவே பண்ணிட்டியா?
நான் அழகா இருக்கிறதாலே, அளவுக்கு அதிகமா துண்டு விழுந்தாலே, எல்லாத்தையும் கள்ளத்தோணியிலே ௬ட்டிட்டு போற அளவுக்கு பேராசைக்காரன் இல்லை, நீங்க ரெண்டு பெரும் ஈமெயில் பார்த்தீங்க, அதை இன்னும் படிக்கலை, நான் இது வரைக்கும் ஐநூறு தடவை படித்து விட்டேன். இப்ப ஐநூத்தி ஒண்ணாவது தடவையா உங்களுக்காக,மாப்பிளைகளா அவங்க பேரு எல்லாம் உங்க வாயிலே நுழையாது, அதனாலே காதலி ஒண்ணு, காதலி ரெண்டு.
காதலி ஒண்ணு:
என் கண்கள் எப்போதுமே உன்னைத் தேடும், அது உன்னோட கவர்ச்சியா இருக்குமோன்னு நினைப்பேன், ஆனா இப்ப என்னோட இதயமும் உன்னைத் தேடுது, இது காதலா இருக்குமோன்னு நினைக்கிறேன், நினைவலைகளை வானலைகளாக மாற்ற சந்திக்க விரும்புகிறேன், சனிக்கிழமை காலை 11 மணிக்கி லால் பார்க்கிற்கு வரவும்.
உங்கள் அன்புள்ள,
(பெயர் பாதுகாப்பு காரணம் கருதி குறிப்பிட வில்லை)
காதலி ரெண்டு:
மும்பையிலே இல்லாதது என்ன இங்கே இருக்கிறது என் வேலையை தவிர என்று பல ஆயிரம் முறை யோசித்து இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் வந்தேன், இப்போது உங்களை விரும்புவதற்காகவே வருகிறேன், உங்கள் விருப்பம் அறிய விண்ணை நோக்கி காத்து இருப்பேன் லால் பார்க்கிலே சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு
அன்புடன்,
(மேல சொன்னதுதான் இங்கேயும்)
கருப்பா நெஞ்சை பிழிஞ்சிடாங்க, எனக்கு ஒரு சந்தேகம் ஈமெயில்ல அவங்க பேரு இருக்கு, ஆனா உனக்கு எழுதுதற்குன்னு அத்தாட்சியா உன் பேரை போடலை.
ஒருவேளை புருஷன் பேரை சொல்லக்௬டாதுன்னு விட்டு
இருப்பாங்களோ
அடி செருப்பால, ஆடே அறுக்கலை அதுக்குள்ளே தலைக்கு பறக்கியோ.
எனக்கும் ஒரு சந்தேகம், அவளுங்க இங்கிலீஷ்ல எழுதி இருக்காளுங்க, அதை எப்படி கிட்டத்தட்ட தமிழாக்கம் பண்ணின.
டேய் என் ஆங்கில அறிவைப் பத்தி என்ன நினைக்குறீங்க.
அடச்சீ.. உண்மைய சொல்லு மூதேவி.
சென்னைகாரனுக்கு அனுப்பி தமிழாக்கம் பண்ணினேன்.
டேய் கடைசியிலே ரெண்டு மூனு வரிக்கு இன்னும் சரியா தமிழாக்கம் பண்ணலியே.
அது அவனுக்கே தெரியலைன்னு சொல்லிட்டான், ஆனா ஒண்ணும் பயப் படுற மாதிரி எழுதலைன்னு சொல்லிட்டான்.
சென்னைகாரனுக்கே தெரியலைன்னா வடக்கூர் காரிங்க எல்லாம் இங்கிலீஷ் புலி தான் போல.
சனிக்கிழமை போறேன், சந்திக்கிறேன், அப்புறமா முடிவு எடுப்பேன். ரெண்டிலே எது அளவுக்கு அதிகமா என் மேல பைத்தியமா இருக்கோ, அதுக்கு வாய்ப்பு கொடுத்திட்டு.
இன்னும் ஒண்ணை !!!!!!!!!!! இன்னும் ஒண்ணை !!!! (இருவரும் சேர்ந்து)
டேய் நான் இன்னும் முடிக்கலை. கொஞ்ச நாள் கழிச்சி தான் முடிவு எடுப்பேன் ரெண்டாவதை என்ன பண்ணலாமுன்னு.
அப்ப நானும் உன் ௬ட வாரேன்.
காதல் பூமியிலே கந்தக காட்டுக்கு என்னடா வேலை?
மச்சான், நீ கழட்டி விட நினைச்சதுகிட்டே எனக்கு ஒரு அறிமுகம் கொடு, உன் பேரை சொல்லி நானும் கொஞ்சம் முயற்சி செய்யுவேன். நீ வேண்டாமுன்னு சொல்லும் போது நான் துண்டை போட்டுறேன்.
அடத்தூ ....இந்த பொழைப்புக்கு நீ எல்லாம் நாண்டுகிட்டு நின்னு சாகலாம்.
கொஞ்சம் கருணை காட்டுடா.. ரெம்ப பசியா இருக்கேன்
சரி..சரி வந்து தொலை, ஆனா என் பக்கத்திலே நீ வரவே ௬டாது
நீ என்ன சொன்னாலும் கேட்டுகிறேன்.
அப்ப நான் என்ன செய்ய???
எட்டப்பா ரெண்டு தானே இருக்கு, வச்சிட்டா வஞ்சகம் பண்ணுறேன், அடுத்த முறை மாட்டிச்சினா சொல்லுறேன்.பாவம் ராம் நாடு பொழைச்சி போகட்டும்.
அப்ப அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்ல பிகரா தேத்து.
ராம், எதுக்கும் சனிக்கிழமை நீ குளிக்காம வா, என்னை விட நீ கொஞ்சம் அழகு குறைவா இருக்கணும், நீ என்ன என்ன பண்ணனுமுன்னு இதிலே தெளிவா எழுதி இருக்கேன். ஒழுங்கா படி, பரிச்சசைக்கு படிச்ச மாதிரி படிக்க ௬டாது.
எப்படி இப்படி?
முசப் பிடிக்கிற நாய்க்கு மூஞ்சை பார்த்தா தெரியாது(மணி அண்ணே?). அதான் முன் எச்சரிக்கையா தயார் பண்ணினேன்.
நீ ஒரு காதல் குரு மச்சான்.
(சனிக்கிழமை காலை)
டேய் ராம்நாடு கருப்பனை காணும், உன்னை விட்டுட்டு ஓடிப் போய்ட்டானா?
இல்லடா கோயிலுக்கு போய் இருக்கான், ரெண்டு பேரு பேரிலையும் அர்ச்சனை பண்ண.
அவன் அலும்பு தாங்கலைடா, அவன் ஆட்டத்தை நிப்பாட்டுடா.
சென்னைக்கரனையும் வரச்சொல்லி இருக்கான், சாயந்திரம் பெரிய விருந்தே இருக்கு.இதோ காதல் மன்னன் வந்துட்டான்
ராம்நாடு சீக்கிரம் வாடா, போய் காதல் இன்டெர்வியு போகலாம், சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா?
ஒ..எல்லாம் இருக்கு
எட்டப்பா சென்னைக்காரன் வருவான், அவனை இருக்க சொல்லு, அவனுக்கும், உனக்கும் அடுத்த முறை உசார் பண்ணும் போது பாத்துக்கலாம்.
(சனிக்கிழமை மாலை 7 மணி)
எட்டப்பா என்னடா இன்னும் கருப்பனையும், ராம்னாடையும் காணும்.
உசார் பண்ணி ஹிந்தி படம் பாக்க போய்ட்டாங்களா? அதுக்கு வாய்ப்பே இல்லை.
என்னடா ஆச்சி ராம்.
மெட்ராஸ் மச்சான், இன்னைக்கு எதோ தப்பித்தே பெரிய விஷயம் தான், கால் கடுக்க நின்னதுதான் மிச்சம், அவளுக வரவே இல்லை, ஒரு ஆறுமணிக்கு காதல் மன்னன் அவங்களுக்கு போன் போட்டான். என்ன திட்டு திட்டுறாங்க, ஒருத்தி என்னடான்னா நீ என்னை காதலிகிறேன்னு சொன்னதுக்கு தற்கொலை பண்ணுவேன்னு மிரட்டுறா, இன்னொருத்தி உன் மேல மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்னு சொல்லுற, இது ரெண்டும் தான் எனக்கு புரிஞ்சது, அப்புறம்மா இந்தியிலேயும் கொஞ்சம் காய்ச்சினாங்க, கடைசியிலே ரெண்டு பேருமே இனிமேல ஆபீஸ்க்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
அப்படியா,நான் கும்பிட்ட தெய்வம் கை விடலை. தெய்வம் இருக்குடா.
எட்டப்பா நானே கொலை வெறி கோபத்திலே இருக்கேன்.
விடு மாப்பிள காதல்ங்கிறது புளிரசம் வைக்கிற மாதிரி, அது எல்லோருக்கும் வருமான்னு சொல்லமுடியாது.இப்போதைக்கு இவ்வளவு தான். இன்னொரு விளக்கம் இரவு 9 மணிக்கு
(இரவு 9 மணிக்கு,காதல் களை இழந்து சொகக்களையுடன் இருந்தவனிடம், சென்னை நண்பன்)
மாப்ள உனக்கு SMTP பத்தி தெரியுமா?
நானே எவன் இடையிலே புகுந்து ஆட்டைய கலைச்சான்னு யோசித்து கிட்டு இருக்கேன், நீ வேற SMTP, HMT ன்னு வாட்ச் கடை பேரை சொல்லுற.
டேய், நீ பார்க்கிற ஈமெயில் SMTP protocal வழியாத்தான் வேலை செய்யுது, அதிலே SMTP Client க்கு நீயே ப்ரோக்ராம் எழுதலாம், அதை வச்சி யாரோட from அட்ரஸ் போட்டு மெயில் அனுப்பலாம். நான் என் ப்ரோஜெக்ட்க்கு பயன் படுத்துகிறேன்.
என்னடா மச்சான் சொல்லுறா, அப்ப இதை எல்லாம் செய்த குள்ள கருப்பு ஆடு நீதானா?
நான் இல்ல நாங்க,யோசனை என்னோடது, மற்ற வேலைகளை எல்லாம், எட்டப்பனும், ராம்னாடும் பாத்து கிட்டாங்க.அவங்க தான் சொன்னாங்க நீ காதலி கிடைக்கணுமுன்னு கோயில்.. கோயிலா தேடி அலையுறன்னு, அதான் உனக்கு ஒரு காதல் பாடம் எடுத்தோம், இந்த உலகத்திலே காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு நிகழ்வு, அதற்காக உன் வாழ்கையை தியாகம் பண்ணக்கூடாது, கோயில் குளத்தை சுத்துறை விட்டுட்டு உங்க அம்மா கால்ல விழு அவங்களே ஒரு நல்ல பெண் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.
டேய் எல்லா வில்லத்தனத்தையும் பண்ணிட்டு கடைசியிலே நாயகன் மாதிரி அறிவுரையா?
உன்னை மாதிரி என்னாலே காதலி வாங்கி கொடுக்க முடியலை, அதான் அறிவுரை கொடுத்தேன்.
நீ சொன்னது என்னவோ உண்மைதான், நாளைக்கு மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி
மறுபடியுமா!!!!!!!!!!!!
மன்னிப்பு கேட்டுட்டு, இனிமேல நானும் துண்டை குப்பையிலே எறிந்து விட்டு என் பொழைப்பை பார்கிறேன், இது இந்த நெப்போலியன் மேல சத்தியம்.
Sunday, November 8, 2009
பதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்!!
Tuesday, November 3, 2009
வெள்ளைக்காரியும் குரோடன்சும்
மாமா அது இல்லாம அமெரிக்காவிலே என் பொழைப்பு ஓடாது.சல்சவையும், சரக்கையும் கலக்கி ஆடலைனா தூக்கம் வர மாட்டேங்குது
விடிய விட வெள்ளையம்மா ௬ட சல்சா ஆடிட்டு, காலையிலே வீட்டிலே அனுப்பிய பெண்ணோட போட்டோ பார்த்தா எப்படி பிடிக்கும்
அது என்னவோ உண்மைதான் மாம்ஸ், இங்கே வெள்ளையம்மா ௬ட குடியோட குடித்தனம் பண்ணிட்டு, காலையிலே நம்ம ஊரு பெண்களை பார்த்தால் நிற குருடிலே எல்லாமே கருப்பு மயமா இருக்கு, இதை எல்லாம் பார்க்கும் பொது பேசாம ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்.
அந்த காலத்திலேயே நான் போகாத கிளப்பா ? நான் போடாத துண்டா, நான் போன வேகத்துக்கு கிளப்க்கு வாட்ச் மேன் வேலை பார்கிறனோன்னு நிறைய பேருக்கு சந்தேகம் வந்து விட்டது, நான் அங்கே செலவழிச்ச காசுக்கு அண்ணா சாலையிலே ஒரு கட்டடம் விலைக்கு வாங்கி இருப்பேன்.
வெள்ளையம்மா எல்லாம் என்னைப் பார்த்து இந்த மாதிரி ஆகிடுவாங்க, என்னை பார்த்து பரிதாப்பட்டு ஒரு கருப்பம்மா தான் ஓசியிலே ரெண்டு பீர் வாங்கி கொடுத்தது, அதுக்கு நான் இருநூறு பீர் வாங்கி கொடுத்ததுக்கு அப்புறமா?
உசார் பண்ணிட்டியா?
அப்புறம் என்ன நடந்தது?
ஒன்னும் நடக்கலை, நன்றின்னு சொல்லிட்டு அவ பாய் பிரண்ட் ௬ட ஆடப்போயிட்டா.இன்னும் கொஞ்ச நாள்ல பாரு, பின்னி படல் எடுப்பேன்
மாம்ஸ் அது அப்படி இல்லை, வயசான ஆளு ஒருத்தர் வார வழியிலே வழுக்கி அவங்க மேல விழுந்து அவங்க இரவை நாசப் படுத்த ௬டாதுன்னு ஒதுங்கி இருப்பாங்க.என்னைய பாரு சல்லிப் பயலா இருந்த நான், சல்சாவிலே ஆடுற ஆட்டத்திலே எல்லோரையும் கிறங்கடிக்கிறேன்.
ஏன் அவுத்து போட்டுட்டு ஆடுதியோ?
நீ எல்லாம் சினிமாவிலே பாட்டு போட்டா எழுந்து தம் அடிக்கப் போறவன், உனக்கு என்ன தெரியும் ஆட்டத்தோட அருமை.நானும் முதல்ல அப்படித்தான் போய் பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இருப்பேன், அப்புறமா ஆட்டத்தை கத்துகிட்டேன், அதுதான் என்னை ஆட்டி வைக்குது, ஆனா வெள்ளையம்மா எல்லாம் நம்ம ஊரு புள்ளைகா மாதிரி நிற வித்தியாசமோ, அழகோ பார்ப்பதில்லை
மாப்பிள்ளை வெள்ளையம்மா எல்லாம் குரோட்டன்ஸ் மாதிரி அவங்க எல்லாம் வீட்டுக்கு முன்னாடி வைக்கிறதுக்கு தான் நல்லா இருக்கும், அதே மாதிரி அதுகளோட பராமரிப்பு செலவு ரெம்ப அதிகம், அவங்களுக்கு முகச்சாயம், நகச்சாயம் போடுவதற்கு உன் மாத சம்பளம் பத்தாது.ஆனா நீ எதிர் பார்க்கிற வெள்ளையம்மா மாதிரி குரோட்டன்ஸ் செடி நம்ம ஊரிலே இருக்குமான்னு தேடினால் கிடைக்காது, ஏன்னா நம்ம ஊரு குரோடன்ஸ் சோடி எல்லாம் கண்ணிலே படாது, அவங்களுக்கு எல்லாம் பாலிவுட் நடிகரையோ, ஹாலிவுட் நடிகரையோ நினைத்து கனவு காணவே நேரம் சரியா இருக்கும்.
மாம்ஸ் இங்கே இருக்க வெள்ளையப்பன்,கருப்பு அண்ணாச்சி எல்லாம் வெள்ளையம்மா ௬டத்தானே சுத்துதான்.
மாப்ள இவங்க கலாச்சாரம் அப்படி, சின்ன வயசிலே இருந்து அதிலே வளர்ந்து வந்தாலே இவங்களுக்கு ஒரு செடியை பார்த்ததும், அது குரோடன்ஸ் செடியா இல்லை கள்ளி செடியானு நல்லா தெரியும், நாம அப்படியா சொந்த வீட்டை தவிர வேற எல்லா வீட்டு புள்ளைகளும் எப்படி வேணுமுனாலும் இருக்கலாம்னு நினைக்கிறவங்க,புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.
மாம்ஸ் தண்ணி போட்டு இருக்கியா, ஒரு அருவை மழையை கொட்டுற, நீ கொஞ்ச நாள் இப்படித்தான் காஞ்ச மாடு மாதிரி துண்டை கையிலே வச்சி அலைந்தாய், ஒண்ணும் தேரலை, நான் எங்கே வெள்ளையம்மாவை உசார் பண்ணி உம்மா கொடுத்து விடுவேன்னோன்னு பொறாமை உனக்கு, ஒழுங்கா வாயை அடக்கி வாசித்தா அளவுக்கு அதிகமா மீன் கிடைக்கிற அன்றைக்கு உனக்கு ஒரு துண்டு இனாமா தருவேன்.
டேய் சத்தமா பேசாதே டா, உன் ௬ட ௬ட்டு சேர்ந்து விட்டேன்னு எனக்கு ஒரு வாரமும், மெய்த மாட்டை கெடுக்கிற மெனக்கெட்ட மாடுன்னு உனக்கு ஒரு வாரமும் அடி விழப் போகுது,அது எல்லாம் ஒரு பருவ கோளாறு தான், விடக் சேவல் மாதிரி அலைந்த நான், பல்லு போன பாம்பு ஆகி விட்டேன்.எனக்கும் இப்படித்தான் ஒரு காலத்திலேயே அறிவுரை கொடுத்தாங்க, கேட்டு திருத்தவே இல்லை பட்டுத்தான் திருந்தினேன், அதனாலே நீயும் பட்டு திருந்துவன்னு நம்பிக்கை இருக்கு,அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு புரியுற காலம் வரும்
Sunday, November 1, 2009
வேட்டைக்காரன் விமர்சனம்
வழக்கம் போல விஜய் கல்லூரி மாணவனாகவோ,கார் மெக்கானிக்,தொழில் அதிபர் அப்படி ஏதாவது பாத்திரத்திலே நடித்து இருப்பாருன்னு நினைத்தால் அது நான் பொறுப்பு கிடையாது.படத்திலே அவரு வேலை என்னனு கண்டு பிடிப்பதே கஷ்டம், அதற்குள் படம் முடிந்து விடும், ஆனா இன்னும் விமர்சனம் முடியலை.
விஜய் வேலை தேடி அலுவலகம், அலுவலகமா போவாரு, எல்லா நேர்முகத்தேர்விலே வெற்றியும் பெறுவார் ஆனா எந்த வேலையும் சேர மாட்டார், இப்படித்தான் கதை ஆரம்பிக்குது, படத்தோட கதாநாயகியையும் ஒரு அலுவலகத்திலே சந்திக்கிறார், விஜயை அவங்க தான் வேலைக்கு இன்டெர்விவ் பண்ணுறாங்க, அவரோட பதில் சொல்லுற அழகையும், அவரோட அழகையும் பார்த்து ஒரு 50 சதவீதம் காதல் வந்து விடுகிறது.
மிச்சம் இருக்கிற 50 சதவீதக்கு ஒரு காட்சி இருக்கு, அவரும், கதாநாயகியும் இன்னொரு இன்டெர்விவுல சந்திக்கிறாங்க, கதாநாயகிக்கு வேலை கிடைக்கணுமுன்னு அந்த நேர்முகத் தேர்விலே தோல்வி அடைந்து விடுகிறார், அவரோட நல்ல குணத்தை பார்த்து அடுத்த ஐம்பதுவும் ஒட்டி 100 ஆகி விடுகிறது. ஆக காதலி கிடைச்சாச்சி இனிமேல கதை கிடைக்கணும், எப்படின்னு அடுத்த பத்திய படிங்க
வருமான வரி துறை அலுவலத்திலே ஒருவரும், பத்திர அலுவலகத்திலே வேலைபார்க்கும் ஒரு தம்பதியினருக்கு பலவேறு கோணங்களில் பிரச்சனை வருகிறது, அந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கும் இரு முக்கிய புள்ளிகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க தம்பதிகள் இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள், அதாவது ஏற்கனவே பனிப்போர் நடந்து கொண்டு இருக்கும் இரண்டு பேருக்குள் சண்டை வரவழைத்து நிரந்தர எதிரி ஆக்கி விடுகிறார்கள்.இவ்வளவு கொலை வெறி பிரச்சனைகளுக்கு நடுவிலே கதா நாயகனை எங்கே என்று வலை வீசி தேடுறவங்களுக்கு இப்போதைக்கு பதில் இல்லை, பின்னாடி வருது.
சண்டைக்காரங்க ரெண்டு பேருகிட்டயும் கோழி மூட்டி விட்டுகிட்டு இருந்த தம்பதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமா எதிரிகள் ரெண்டு பெரும் இணைந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். எதிரிகள் ரெண்டும் பேரும் சம்பந்தியாக இணைய முடிவு எடுக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தம்பதிகளுக்கு ரெண்டு பேரையும் ஏமாத்தி ஜெயில்ல தள்ளி விடுறாங்க.இன்னும் காதாநாயகன் வரலியேன்னு இருக்கையோட நுனிக்கு வந்தவங்க அடுத்த பத்தியை படிங்க
மேல நடந்த சம்பவங்களும், விஜயோட காதல் காட்சிகளும் மாறி மாறி படத்திலே வரும், ஆனா விமர்சனத்திலே அப்படி சொல்லமுடியுமா, விஜய் சிறையிலே இருக்கும் தம்பதிகளை சிறையிலே சந்தித்து விஜய் சொல்லுவாரு நீங்க உங்க யோசனைப்படி நடந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும், இந்த யோசனை எல்லாம் கொடுத்தது நான் தான், தப்பு பண்ணிட்டேனு சொல்லுறாரு.
உடனே எல்லோரும் இது எப்படி கதாநாயகனோட யோசனைன்னு பேசிக்கொண்டு இருக்கும் போது இடைவேளை "வெற்றி மாறன் இனி வேட்டைக்காரன்". இது குத்து வசனம் இல்லை.
(டீ, காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க)
தமிழ் கதாநாயகர்களுக்கு இருக்கும் வழக்கமான பொறுப்புதான் விஜய்க்கு இடைவேளைக்கு அப்புறம் கொடுக்கப் பட்டு இருந்தாலும், இரண்டாவது பாதிலே கதை போகும் போக்கிலே எல்லாமே புதுசாய் இருக்கும், சிறையிலே இருக்கும் தம்பதிகளை வெளியே கொண்டு வரவேணும், வில்லன்களை வைத்தே அதையும் செய்ய வேண்டும் என்பது கதையின் கட்டாயம்.அதை வித்தியாச மான முறையிலே கில்லி, போக்கரியை விட வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து இருப்பதால் இது பழைய இரண்டு படங்களின் சாதனையை முறியடிக்கும்
ஆக வில்லன்களின் சதியை முறியடித்து கடத்திய பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்து, வில்லன்கள் இருவரையும் தம்பதிகள் இருக்கும் சிறையிலே தள்ளி அவர்களை விடுவிப்பதோடு கதை முடிகிறது.இந்த தம்பதிகள் விஜய்க்கு என்ன வேணுமுன்னு தெரியாதவங்க வெள்ளி திரையிலே காண்க விடை கிடைக்கும். இடைவேளைக்கு அப்புறம் படம் இவ்வளவு சீக்கிரமா முடிந்து விட்டதுன்னு யாரவது நினைத்தால் படத்தோட வேகம் அப்படி.படம் முடிஞ்ச வேகத்திலே விமர்சனமும் முடியுது, முடிக்கும் முன்னாடி ஒரு குத்து வசனம்
வெறுங்கையோடு வந்தாலும் இந்த வேட்டைக்காரன் வெறுமையா போகமாட்டான்.