Tuesday, January 26, 2010

மணல் சிற்பி

காலையிலே எழுந்து என்ன வேலை செய்யணுமுன்னு தெரியலைனாலும் நேராக மெரீனா கடற்கரைக்கு போக ஆயத்தமானேன், போகும் முன் மாற்று சட்டைக்கு வழி இல்லாத பையன் இனிமேல பள்ளிக்கு சொல்வதில் என்று நேற்று இரவு வெகு நேரம் அழுது கொண்டே தூங்கி இருந்தவன் இன்னும் ஆள் உறக்கத்திலே இருப்பதைப் பார்த்தேன்.


தூங்கி எழுந்தும், எழும்பி செய்ய வேலை இல்லாமல், துகில்வது போல நடிக்கும் மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டே முந்தாநாள் பெய்த மழையின் மிச்சத்திலே கொஞ்சத்தை குடித்து விட்டு கிளம்பினேன்.


கடற்கரைக்கு ஓடி வேகமாக ௬ட்டம் வரும் முன்னே வேலையை ஆரம்பித்தேன், முதலில் காந்தியை  மண் சிற்பத்தால் செய்தேன். பின்னர் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை சிலையாய் செய்தேன், கொஞ்ச நேரத்திலே ௬ட்டம் வந்தது, அனைவரும் ரசித்தனர், அருகே நின்று புகைப் படம் எடுத்து கொண்டனர்.அனைவரின் பாராட்டு  பசியை கடல் கடந்து தள்ளியது.

கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.

ஒரு கலைஞரின் வெற்றி அடுத்தவரின் பாராட்டிலே இல்லை என்றாலும், பாராட்டப் படும் போது வெற்றியின் விளிம்பை தொட்ட ஒரு ஆனந்தம்.அனைவரின் பாராட்டு மழையிலே நனைந்து நான் யாசிக்க வந்தேன் என்பதை மறந்து, வாசகர் வட்டத்திலே விழுந்து நான் சிற்பக் கடவுளானேன். 


நேரம் கடந்தது கடற்கரை  ௬ட்டமும்  குறைய ஆரம்பித்தது மாலையும் நெருங்கியது ,அந்தி மாலையிலே சூரியனை காணாத மேகம் மழையா விழுந்தது,  காற்று படும் போது ௬ட உடையாமல் பார்த்து கொண்ட மணல் சிற்பங்கள் எல்லாம் மழையிலே கரைந்து, மண்ணோடு மண்ணாகிப் போனது.

மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.



கொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன்.

பின் குறிப்பு :
அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு  இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை.


Thursday, January 21, 2010

இதயம் கசக்குது

"என்னடா கோலம் இது, ஒரு காதலியை சந்திக்கிற மாதிரியா வார?
ஒரு பூ கொண்டு வரலாம், நல்ல ஒரு துவைச்ச துணிய போட்டுக்கிட்டு வரலாம், எதோ குழியிலே இருந்து எழுந்து வந்தவன் மாதிரி இருக்க."

"சாமியே சைக்கிள போகும் போது, பூசாரி புல்லட் கேட்ட கதையா இருக்கு, நானே சோத்துக்கு சிங்கி அடிச்சி கிட்டு இருக்கேன், நீ வேற பூ எடுத்துட்டு வரலை, கோட் சூட் போட்டுட்டு வரலைன்னுபுலம்புற."


"உன் முஞ்சை கண்ணாடியிலே பாரு, சாக்கடையிலே இருந்து  எழுந்து வந்த  பன்னி மாதிரி இருக்கு."


"அன்றைக்கு நான் எதோ மன்மதன் மாதிரி இருக்கேன், உன் காதல் அம்புகளை என் மீது விசவே காத்து இருக்கு இந்த புள்ளி மான்.இன்றைக்கு என்னவோ  கெட்ட வாடை அடிக்கிற மாதிரி மூக்கைப் பொத்துற"

"அன்றைக்கு நீ அழகா இருந்த.."

 "ஹும் .. என்ன செய்ய உன் அழகு ஏறிகிட்டே போகுது, என் அழகு இறங்கிட்டே போகுது.நான் உன்னை நினைத்து உருகுறேன், நீ என்னைய நினைத்து பெருகுற"


"கட்ட பீடி அடிச்சிகிட்டு கைய காட்டுற, உன்னை என் காதலன் ன்னு சொல்ல வெட்கமா இருக்கு."


"வெட்கத்தை மொத்தமா குத்தைக்கு எடுத்த என் இன்ப காதலியே, உன்னோட பிரச்சனை காதல்லையா ? என்னை காதலிக்கிறதிலையா ?"


"உனக்கு வேலைப் பிரச்சனை, வீட்டிலே என்னோட கல்யாண பிரச்சனை, எனக்கு காதல் பிரச்சனை."

"எல்லாத்துக்கும் வழி இருக்கு, நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்."


"அடி செருப்பாலே, இதையேதான் காதலிக்க ஆரம்பித்த நாள் இருந்து சொல்லி கிட்டு இருக்க, உருப்பட  வழி சொல்லுனா, உண்டாக வழி சொல்லுற."

"ஏன் உங்க அப்பன் அமெரிக்கா மாப்பிளையை கொண்டு வந்துட்டானோ உனக்கு,உள்ளூர்ல மாடு மேய்கவனுக்கு கொடுக்காம வெளி நாட்டிலே வெள்ளை மாடு மேய்க்கவனுக்கு கட்டி கொடுக்க முடிவு பண்ணிட்டானோ ?"

"அப்படி எல்லாம் நல்லது நடந்தா, நான் ஏன் உன் பின்னாடி சுத்துறேன்."

"ரெம்ப வளவளன்னு சொம்பு அடிக்காதே, இப்ப என்ன செய்யணுமுன்னு சொல்லு,எப்ப பார்த்தாலும் காய்கரிகாரன்கிட்ட  சண்டை போடுற மாதிரியே பேசுற,என்னோட மானத்துக்கும், சுய மரியாதைக்கு பங்கம் வந்துவிட்டது.."


"சோத்துக்கு சிங்கி அடிச்சாலும் மானத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிற ,ஸ்டுபிட்.. இடியட் .. நான்சென்ஸ்"

"இப்ப எல்லாம் கொஞ்ச நாளா, நீ தமிழ்ல திட்டினவனைப் பார்த்து முறைக்கிறதும்,அதே திட்டை ஆங்கிலத்திலே  திட்டினா "வாவ்.. வொன்டர்புல்" கை தட்டுற,உண்மையச் சொல்லு உங்க அப்பன் பார்த்து இருக்கிற மாப்பிள்ளை யாரு?"

"என்னால முடியலை.. இப்படி சோகத்தை நெஞ்சிலே சுமந்து, ஒரு சந்தோசத்தை வெளியே நிக்க விடுறது"

"என்ன இலக்கியவாதி மாதிரி பேசுற, ஒண்ணுமே புரியலை"


"என்னதான் புரிஞ்சு இருக்கு உன் மரமண்டைக்கு,
"எதோ வெளிநாட்டு மாப்பிள்ளையாம், எப்பவோ உன் ௬ட சுத்தும் போது பார்த்து இருக்கிறான், அவன் எங்க வீட்டிலே வந்து என் அப்பாட்ட துண்டு போட்டு சொல்லி இருக்கான், எனக்கு தான் துண்டு போடுவானாம்?"


"நீயும்,நானும் காதலிக்கிறோமுனு தெரிஞ்சுமா அப்படி சொன்னான்? "

"நீயும், நானும் அக்காவும், தம்பியும்னு நினைச்சிட்டான்,இப்ப நான் என்ன செய்ய " 

"உலகத்திலே காதலிகிட்ட இன்னொருத்தனை கட்டிக்க சம்மதம் கெட்ட முத தமிழ் பொண்ணு நீ தான்"

"இதிலேயாவது எனக்கு முதல் பரிசு கிடைச்சி இருக்கேன்னு சந்தோசப்படு, ஒரு பொண்ணு ஒருத்தனை நினைச்சிட்டா மறக்கவே மாட்டான்னு எவனோ சொல்லி வச்ச வார்த்தைய  காப்பாத்த இந்த கட்டை என்ன பாடு படுத்து தெரியுமா?"

"சரி போ கட்டிக்கோ"

"என்னடா இந்த சோகம் தாங்காம நெஞ்சை பிளந்து அழுவன்னு நினைச்சேன், நீ குத்துக்கல் மாதிரி நிற்கிற" 

"நம்ம காதல் அத்தியாயம் முடிந்தது, நீ போகலாம"

(ஐந்து நிமிட மவுன அஞ்சலி காதலுக்கு செலுத்தி விட்டு காதலி போகிறாள், அடுத்த ஐந்து நிமிடத்திலே மீண்டும் திரும்பி வருகிறாள்)

"திருப்பி வந்துட்டாயா இல்லை திருந்தி வந்துட்டாயா, காதல் பொய் இல்லை என்பது உண்மைன்னு இப்பவாது புரிஞ்சதே உனக்கு, எனக்கு நல்லா உன்னால என்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு, காதலுக்கு வெற்றி..வெற்றி..வெற்றி..வெற்றி.."



"அல்லோ(வசனம் உதவி பாலா அண்ணன்) அலோ.. அலோ , என்னோட கார் சாவியை ஆட்டைய போட்டு வச்சி இருக்கியே, முதல்ல அதை கொடு உனக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுபோறேன்,உன்னையை எல்லாம் இந்த வாய் மட்டும் இல்லைன்னா நாய் ௬ட மதிக்காது."

(மீண்டும் மவுனம், மீண்டும் பிரிவு,அடுத்த அரை மணி நேரத்திலே மீண்டும் காதலி திரும்பி வருகிறாள்)

"இப்ப என்னத்தை விட்டுட்டன்னு திரும்பி வந்த?"

"என்னவோ தெரியலை உன்னை விட்டு பிரிந்து போனதிலே இருந்து நெஞ்சு கரிக்குது"

"சோடா வாங்கி குடி சரியாப் போகும்"

"எருவ மாடு.. உன்னை விட்டுட்டு போக முடிலைன்னு சொல்லுறேன்"


"சரி போகாதே"

"அப்படியா"

"ம்ம்"

"ஐ லவ் யு.."

"ஐ டு லவ் யு.."


Thursday, January 14, 2010

அவமானம்

அவனுக்கு அவமானம், அவளுக்கு அவமானம், தெருவுக்கு அவமானம், வீட்டுக்கு அவமானம், நாட்டுக்கு அவமானம் இப்படி கேள்வி பட்டு இருக்கிறோம்.
என்னை போன்ற நல்ல உள்ளம் படைத்த, பால் போல,பனி போல வெண்மையான் மனசு, தெளிந்த நீரோடை தெரியுற கண்ணாடி முகம் மாதிரி கரை இல்லா கை இப்படி எந்த வகைகளுக்குமே தகுதில்லாத கட்டைக்கு(கருப்பு போடலை) ஏற்பட்ட
அவமானங்களை என்னனு சொல்ல, இதை எல்லாம் சொல்லாம விட்டுட்டா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை,இங்கே சுத்துற கொசுவத்தி எங்க போய் முடியுமுன்னு தெரியலை, ஆனா கண்டிப்பா முடியும்.


பல வருடங்களுக்கு முன் :

அவன் காலை கழுவி குடி, அவனும் நீ திங்க சோத்தை தான் திங்கான், ஆனா அவன் வகுப்பிலே முதல் ரேங்க், நீயும் இருக்கியே எருமை மாடு மாதிரி அப்படின்னு எல்லோருக்கும் முன்னாலேயும் பாலர் பள்ளியிலே படிக்கும்(?) சொன்னதாலே அவமானம்.


எங்க அப்பா ராணுவவீரர் என்பதாலே கொஞ்ச நாள் கோல்கொண்டாவிலே இருந்தேன், அன்றைய ஆந்திரா, இன்றைக்கு ராயல் சீமாவா, தெலுங்கானாவான்னு தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சி ஊருக்கு வந்த உடனே எங்க பள்ளியிலே ஒன், டூ, த்ரீ தெரிஞ்ச ஒரே ஆள் என்று பெயர் எடுத்தவன், வர வர மாமனார் செம்மரியாடு போல மாதிரி 10 ம் வகுப்பிலே 40/100 ம், 12 ம் வகுப்பிலே 75/200 ம் எடுத்ததை பார்த்து ஆங்கில புலிக்கு ஆப்பு வச்சிட்டாங்களேன்னு சொன்னதை கேட்டு ஏற்பட்ட அவமானம்.

கல்லூரியிலே, ௬ட படிக்கிற எல்லோரும் முரட்டு காதல் பண்ணுகிட்டு இருக்கும் போது நானும் முண்டு கொடுத்து துண்டு,போர்வை எல்லாம் எடுத்துகிட்டு அலையும் போது கண்டுக்க ஆள் இல்லாத போது ஏற்பட்ட அவமானம், ஊருக்கு பக்கம் வரும் போது அத்தை மகள் கிட்ட என்னைய பிடிச்சி இருக்கான்னு கேட்ட உடனே என்கிட்டே பேசுறதையே நிப்பாட்டுன அவமானம்.

கல்லூரி முடிச்சி ரெண்டு வருமா எங்க ஊரையும் சென்னையையும் கோயில் மாடு மாதிரி சுத்தி கிட்டு இருந்த எனக்கு அத்தி பூத்த மாதிரி வந்த ஒரு
நேர்முகத்தேர்விலே தொழில் நுட்பத் தேர்விலே வெற்றி அடைத்தாலும், என்னைய கேள்வி கேட்டவங்க இவனை இங்கிலீஷ்ல அரை நிமிஷம் பேசச் சொல்லுங்கன்னு மனித வள மேம்பாட்டு துறையிலே இருந்த அர கை சட்டை போட்ட ஆங்கிலோ பாட்டிகிட்ட போட்டு கொடுத்து, அந்த பாட்டி என்கிட்டே ரெண்டு கேள்வி கேட்க, என்ன கேள்வி கேட்டாங்கன்னு புரியலை, அதை வெளிகாட்டாம பலமா மூளையை கசக்கி பிழிஞ்சி யோசித்து கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும் போது, நாங்க அமெரிக்காவுக்கு ஆணி பிடுங்க ஆள் எடுக்கிறோம், அதனாலே இடிச்ச புளியா இருக்கிற நீ இங்கிலிசு புலியா மாறிட்டு  ஒரு மாசத்திலே வந்து பாருன்னு சொல்லும் போது ஏற்பட்ட அவமானம்.ஒரு மாசம் கழித்து போனா திண்ணையிலே இருந்தவன் தெருவுக்கு வந்த கதையா நிறுவன கடையை காலி பண்ணிட்டு ஓடிப்போனதை கேள்வி பட்டு ஏற்பட்ட அவமானம்.

கல்யாணத்துக்கு எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்ததும் கல்யாண வயசு பெண்களை எல்லாம் எங்கள் ஊரிலே வீட்டிலே பூட்டி வச்சதிலே அவமானம்.என்னைப்பற்றி சரியா விசாரிக்காமல் எனக்கு பெண் கொடுத்தவர்,என்னைய பார்த்து ஒரு பச்ச புள்ளை வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என்று சொல்லும் போது ஏற்பட்ட அவமானம், கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.


மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,குடுகுடுப்பை பாணியிலே சொன்னா கல்யாணம் ஆனா காலத்திலேயே இருந்து என்னோட இருக்கும் டமில் பேசும் பெண் இதையெல்லாம் பார்த்து விட்டு இன்னும் அவமானம் பத்தலை ன்னு சொல்லும்போதும் ஏற்பட்ட அவமானம்,அதனாலே இனிமேல பிழை விட்டா எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).

இன்னும் இது போல நிறைய இருந்தாலும் பதிவுலக நல்ல உள்ளங்களை மனதிலே கொண்டு இத்தோட நிப்பாட்டிகிறேன்.

இப்படிஅவமானத்துக்கு அவமானம் ஏற்படுற அளவுல அவமான அணுகுண்டுகள் பட்டும் இந்த கட்டை கரி கட்டையா இன்னும் உலா வருதுனா, அதுக்கு என்ன காரணம், வாழ்க்கை ஒரு வட்டம், ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோமுனா, இல்லை, நம்பிக்கை அதாவது தன்னை நம்புற நம்பிக்கை,அந்த நம்பிக்கை இருந்தா குவாட்டர் இல்லாம கும்மி அடிக்கலாம்.

முட்டிலே பசி இருகிறவன் தானே அவமானத்தை பத்தி கவலைப் படனும், வயத்திலே பசி இருக்கிறவன் அடுத்த வேளை சாப்பாட்டு கிடைக்க வழி செய்ய வேண்டாமா?


Wednesday, January 13, 2010

பிரித்தலும் கோர்த்தலும் -குடுகுடுப்பைக்கு போட்டியாக

தள தளன்னு வேண்டுமாம் பொண்ணு
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீள வேண்டாம் வாய்
காதுவரை போதும்  என்கிறான் இவன்
மூணு மாசம்தான் அப்புறம் கால்கட்டு போடலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவளை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே வேட்டி சட்டைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
நாட்டாமை வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமனாரின்  கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை நையப்புடைத்த 
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது புத்தூர் கட்டு
சொம்புடன்
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவளது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவளது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்?? 
*******************************************************************************

அசல் இங்கே


Tuesday, January 12, 2010

பெண்ணே நீயும் பெண்ணா

"விடுதிக்கு போயிட்டியா ?"

"ம்ம்ம்"

"பேசணும் போல இருந்தது அதான் போன் பண்ணினேன்."

"எங்க விடுதியிலே என்னை விட்டுட்டு போய் இன்னும் கால்மணி நேரம் முடியலை, அதுக்குள்ளையும் என் ஞாபகமா?உன் காதல் என்னைய பைத்தியம் ஆக்குது"

"நான் ஒரு காதல் பைத்தியம்"

"ம்ம்ம்.. என்ன விஷயம் சொல்லு?"

"ஒண்ணும் இல்லை?"

"இல்லாத ஒரு விசயத்துக்கு போன் பண்ணி ஏன் என் கழுத்தை அறுக்க?"

"ஹேய்.. உன்கிட்ட பிடிச்சதே இந்த குத்து பேச்சு தான்"

"ரெம்ப சொம்பு அடிக்காதே.. விஷயத்தை சொல்லு"


"நீ கொடுக்கிறேன்னு சொன்னியே அது"

"என்னது ?"

"போன்ல முத்தம்.."

"அது என்னடா பழக்கம் போன்ல எச்சி துப்பி விளையாடுறது.கைபேசி ஒரு மின்பொருள் சாதனம் அதிலே தண்ணி பட்டா கேட்டுப் போகுமுன்னு தெரியாது, அதிலே வாய் வச்சி உறிய, அது என்ன ஆப்பிள் ஜூஸா"

"நீ ரெம்ப கோவமா இருக்க எச்சி எல்லாம் துப்ப வேண்டாம், போன் விலை பத்தாயிரம், வழக்கமா சொல்லுவியே அதையாவது சொல்லு" 

"அடச்சீ போனை வை அப்படினா?"

"உன் வாயிலே இருந்து உதிக்கிற அந்த ஒத்த சொல்லுக்கு இந்த காது காத்து கிடக்குது."

"காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்தட்டுமா?"

"ம்ஹும், என் தொண்டைக்குள்ளே சோறு தண்ணி இறங்கலை, அதை கேட்காம?"

"இப்பத்தானே ஒண்ணரை தட்டு பிரியாணி சாப்பிட்டே, ஐநூறு தண்டம் கட்டின நான் வயத்து எரிச்சலிலே இருக்கேன், இப்ப வந்தேன் குரல்வளைய கடிச்சி எடுத்து காக்கைக்கு போட்டுவேன்"

"சரி நீதான் சொல்லலை, நானே சொல்லுறேன், நான் உன்னை காதலிக்கிறேன்"

..............................

(மீண்டும் காதலனே)  "ஹலோ.. ஹெல்ல்லோ கேட்குதா"


"ம்ம்ம் .. கேட்டுகிட்டு தான் இருக்கேன்,நீ என்னைத்தான் காதலிக்கிறேன் என்கிற அத்தாட்சிக்காக பணமே  இல்லாத அந்த  பையிலே இருக்கிற என்னோட புகைப் படத்தை பார்த்து விட்டு நல்லா தூங்கு"

"சரி"

"இன்ப கனவுகள்"

"அது போதும், நாளைக்கு பேசலாம்"


(போனை வைத்து விட்டு திரும்பியவள், அறைத்தோழி நிற்பதைப் பார்த்து அவளிடம்)

"அடியே வளவளத்தா, நீ எப்ப வந்த?"

"உங்காளு உனக்கு சொம்பு  அடிக்கும் போதே வந்துட்டேன்,பாவம்பா அவன்,




உன்னைய நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வாரான், ஒரு ரெண்டு வார்த்தை அன்பா பேசக்௬டாதா ?"



"அடியே  பசங்களை பத்தி உனக்கு தெரியாது, ஆள் கிடைக்கிற வரைக்கும் குட்டி போட்ட பூனை மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வருவாங்க, கிடைத்த உடனே என்னவோ எவரஸ்ட் சிகரம்  தொட்டு காதல் கொடியை  நட்டின மாதிரி, நம்மளை அவங்க பின்னாடியே அலைய வைப்பாங்க, அதனாலே மாட்டுக்கு மூக்கனாங் கயறு போட்டு பிடிக்கிற மாதிரி பிடி எப்போதும் நம்ம கையிலே இருக்கணும்.நீ பிடியை விட்டுட்ட உனக்கு பாடை தான்"


"உன்னைய கழட்டி விட்டுட்டா ?"

"எப்படி, பசுமாட்டுக்கு புல்லை காட்டிகிட்டே ௬ட்டிகிட்டு   போற மாதிரி அடிக்கடி, ஐ லவ் யு, ஐ மிஸ் யு சோ மச் ன்னு குறுஞ்செய்தி அனுப்பி, ஆளை அசையவிடாம வைக்கணும், இதெல்லாம் காதல்ல ஒரு தனிப்பட்டகலை.

"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற?

"ஆமா.. ஆமா" 

"சூச்..சூச்..சூச்..சூச்..சூச்..சூச்.."

"நீ ஏண்டி இப்ப உச்சு கொட்டுற?"

"எனக்கும் ஒரு நாய்க்குட்டி உசார் ஆகிடுச்சி.இந்த குறுஞ்செய்தியை  பாரேன்."

கொலைவெறியோடு 
காதலிக்க 
உன்னை தவிர 
எனக்கு யாரு இருக்கா?

வலை வீசி இருக்கான், உடனே சரின்னு சொல்லாதே.. ரெண்டு மூணு நாள் அலைய விடு, அப்பத்தான் காதல் எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்.. சரி வா சந்தோசத்தை கொண்டாட  மூணு முட்டாள்கள்னு இந்தி படம் பார்க்க போகலாமா?

"புரியாத மொழி படம் பார்த்து என்னடி செய்ய?"

"இங்கிலீஷ் படமும் புரியலை, அதற்காக பார்க்காமலா இருக்கிறோம்"


Thursday, January 7, 2010

ஜோசியமும், சுசியமும்

நான் பன்னிகுட்டியா இருந்து எருமைமாடா ஆகும் போது எனக்கு சோசியம் பத்தி தெரிய வந்தது, அந்த கதைய கேட்டீங்கன்னா உங்களுக்கே கோவம் வரும்.என் வாழ்க்கையிலே கருப்பு தினம் அன்றைக்கு, வாத்தியாரு இங்கிலிஷு  பாடம் நடத்தும் போது வந்த எரிச்சலிலே முன்னாடி இருந்த பெண்ணோட சடை பிடிச்சிபிட்டேன். அவ என்னைய பார்த்து

"ஏய் கருப்பா, கையையும் காலையும் ஓடிச்சி அடுப்பிலே போட்டுடுவேன்னு"
ன்னு சொன்னா


வெள்ளரி பிஞ்சி போல இருந்த மனசிலே மிளகாய் பொடியை அள்ளிப் போட்டுட்டா, அம்புட்டு நாளும்  ரெம்ப சிகப்பா இருக்கேன்னு நினச்சி கண்ணாடியே பார்க்கலை, அவ சொன்னதுக்கு முத தடவையா கண்ணாடியிலே பார்த்தா கொஞ்சம் இல்லை ரெம்பவே கருப்பா இருக்கேன்.கோபத்திலே என் அம்மாகிட்ட கேட்டேன்



"ஏன் அம்மா நான் கருப்பா இருக்கேன்.. ?"



"ஜோசியக்காரன் நீ ரெம்ப கருப்பா இருப்பன்னு சொன்னான், அதனாலே நீ வயத்திலே இருக்கும் போது குங்கும பூவை பாலிலே கலக்கி சாப்பிட்டேன்.பத்து  கிலே சாப்பிட்டேன்."

"அப்புறம் எம்மா, நான் இவ்வளவு அட்டு கருப்பு?"


"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."

அன்றையிலே இருந்து எனக்கு ஜோசியத்திலே ஆர்வம் வந்தது.நான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது நானும் அடம் பிடிச்சி அம்மாவோட ஜோசியம் பார்க்க போனேன், எனக்கு ஜோசியம் பார்த்திட்டு உங்க புள்ள கன்னிராசிகாரன் இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.    

அதற்கு அப்புறமா எடுக்கணுமுன்னு நினைச்ச துண்டை எல்லாம் மூட்டை கட்டி ஓரமா வச்சிட்டு, ரெண்டு வருஷம் அமைதியாகிட்டேன், இந்த இடைப்பட்ட காலத்திலேயே ட படிக்கிற புள்ளைங்க ட பேசுவதையே விட்டேன், நான் பாட்டுக்கு பேசி என் அழகிலே மயங்கி எனக்கு துண்டு போட்டுட்டா ஜோசியகாரர்  சொன்ன ஈ மொய்க்கிற  ட்டதிற்கு வழி இல்லாம போயிடுமேன்னு


ரெண்டு வருஷம் ஓடி  ஒரு வழியா கல்லூரிக்கு  வந்தேன்.என்னைய சுத்தி ஈ மொய்க்குமுன்னு பார்த்தா, நான் ஈ யா எல்லோருடைய பின்னாலையும் சுத்தி கிட்டு இருந்தேன்.ஜோசியரு சொன்ன ரெண்டு வருஷ கெடு முடிஞ்சதாலே நான் யாரையும் ஒதுக்கி வைக்கலை, அவங்களா என்னை ஒதுக்கு வச்சிட்டாங்க.

ஜோசியத்தின் பெருமையும் ஈ மொய்க்கிறதையும் நண்பர்களிடம் சொன்னேன் எல்லோரும் தெரிச்சி ஓடிட்டாங்க, மருந்து  வாங்கி கொடுத்து சொன்னேன் மட்டையாகிட்டாங்க.எடுத்த துண்டை எடுக்கவும் ஆள் இல்லை, இறக்கி வைக்கவும் முடியலை.ஜோசியத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிறேன்னு என்னைய பார்த்தா சொம்பு தண்ணிய எடுத்துகிட்டு வந்துவிடுவார்கள், இப்படி ஒரு இக்கட்டனானா நிலையிலே எனக்கு ஒரு அழைப்பு வந்தது எதிபாராத இடத்திலே இருந்து,ஆனந்தமா அழைப்பை சந்திக்க போய்கொண்டு இருந்த என்னைப் பார்த்து நண்பன் 

"ஜோசிய சொம்பு இங்கே வா"    நானும் போனேன்

"உன் கையை பார்த்து உன்னோட எதிர் காலத்தை கணிச்சி சொல்லுறவரு, அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும், அவரு அவ்வளவு பொதுநலவாதியா இருந்த இன்றைக்கு ரூபா நோட்டுல நீ காந்திய பார்க்க முடியாது, சோசியக்காரங்க தான் இருப்பாங்க.உனக்கு இந்த வயசிலே துண்டை எடுத்திகிட்டு  பெண்கள் எல்லாம் வருவாங்கன்னு சொன்னவரு, அவரு உன் வயசிலே என்ன பண்ணாரு,  உன் கன்னிராசிக்கு கன்னிகள் எல்லாம் காத்து கிடப்பாங்கன்னு  சொன்னவருக்கு  என்ன கவுந்த ராசியா?"

"தெரியலையே மச்சான்"


"ஜோசியரு சொன்னாருன்னு தானா வந்த துண்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு, இப்ப துண்டை எடுத்துகிட்டு மாநிறம் பின்னால தெருநாயா அலையுற"

"என்ன மாப்ள சரக்கு அடிச்ச?, நீ எதிர் சொம்பு அடிக்கிற"


"உன்னையை சொம்பு வச்சே அடிப்பேன்"


"விவரம் தெரியாம பேசுற என்னைய யாரு ப்பிட்டு இருக்கா தெரியுமா, நம்ம வகுப்பழகிடா? ஜோசியம் சும்மா இல்லைன்னு நிருபிக்கத்தான் இது நடக்குது, இப்ப பாரு தனியா போயிட்டு துணையோட வாரேன்."

அதை சொல்லிட்டு  வேகமா ஓடிட்டேன் வகுப்பழகியை பார்க்க,அவளைப் பார்த்தும் கன்னிராசி ஞாபகம் வந்ததாலே நான் கால் விரலை வைத்து கோலம் போட ஆரம்பித்தேன்.என்னோட வெட்கத்தைப் பார்த்து அவளோட வெட்கம் ரெக்கை முளைச்சி  பறந்து போச்சி  

"ரெம்ப நாளா உங்க கிட்ட சொல்லமுன்னு  நினைச்சிகிட்டு இருந்தேன், சந்தர்ப்பமே கிடைக்கலை"

"சொல்ல வந்ததை
சாம சொல்லு" 

"ஒண்ணும் இல்லை, எனக்கு ரெண்டு சுசியம் வாங்கிட்டு வர முடியுமா?"
  

"இவ்வளவு தானா, உனக்காக சொர்கத்தையே விலைக்கு வாங்கிட்டு வருவேன்"ன்னு சொல்லிட்டு திரும்பின நான் கால் தவறி விழுந்திட்டேன்.

"பார்த்து அண்ணா" 


இந்த வார்த்தையை கேட்டதும், "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது, என் இதயம் அந்த சொல்லை தாங்குற அளவுக்கு கல்லா  இருந்ததாலே தப்பிச்சேன்.

"உங்க மாப்பிளைக்கு கொடுக்கணும் அண்ணா, நல்ல கடையிலே வாங்கிட்டு வாங்க"


"என்னது என் மாப்பிள்ளையா?"

"ஆமா, நீங்க எனக்கு அண்ணன்னா, அவரு உங்க மாப்பிளைதானே?
"


ஜோசியம் என்னை சுசியத்திலே கொண்டு வந்து விட்டதேன்னு நினைச்சாலும், வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க  போனேன்.  


Tuesday, January 5, 2010

யார் இலக்கியவாதி?

இலக்கியவாதிகள் ௬ட்டம், இலக்கிய இன்பம் பருக வருக, இலக்கிய ரசம் இப்படி பல சொல்வாடைகளையும் கேட்டு இருக்கிறேன்.அங்கே எல்லாம் போனா இரும்பு அடிக்கிற இடத்திலே ஈ நின்ற மாதிரி இருக்கும்முன்னு  போகவே மாட்டேன்.

யாரை இலக்கியவாதி என சொல்ல வேண்டும், அப்படி சொல்லும் படி நடக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும் இருக்குன்னு இல்லாத மூளை கசக்கி பிழிந்தேன்.தங்கமணி வீட்டிலே வைத்த ரசத்தை குடித்து யோசித்து பார்த்தேன், அடுத்த ரெண்டு நாளைக்கு யோசிக்கவே முடியலையே, ஏன்னா அது ரசமுன்னு கண்டு பிடிக்க ரெண்டு நாள் ஆகிவிட்டது.இருக்கவே இருக்காரு கூகிள் ஆண்டவர், அவரை நம்பினால் கைவிட மாட்டார்ன்னு கேட்டேன், அள்ளிக் கொடுத்தார்.

எதாவது ஒரு கருத்தை கொண்டு எழுதிய அனைத்துமே இலக்கிய வகையிலே சேருவதாக சொல்லுகிறார் கூகிள் ஆண்டவர்.அதாவது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை அனைத்தும் எதாவது ஒரு கருத்து, உணர்வு எண்ணம் சார்ந்து வெளிப்படும்,அதை படித்த பின் என்ன எண்ணம் ஏற்படும் என்பது இலக்கியவாதிக்கு அப்பாற்பட்ட விஷயம்,அதனாலேவோ என்னவோ நான் எல்லாம் என்னை எழுத்தாளர்ன்னு சொல்லுறதில்லை, வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை.எழுத்திலே இலக்கணம் அமைந்தால் யாருக்கு பெருமைன்னு தெரியலை, ஆனா இங்கே இலக்கணம் சொல்லவேண்டிய நிலைமை எனக்கு.இலக்கியத்தை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு இலக்கணம் பார்க்கலாம்.


இலக்கணம் என்பது ஒரு மொழி சார்ந்த விஷயம், எல்லா மொழி களிலுமே இலக்கணம் இருக்கிறது, ஆங்கில இலக்கணத்தை கடம் அடித்து மனப் பாடமாய் ஏத்தினது இன்னும் மனசுக்குள்ளே அப்படியே  இருக்கு, ஆனா வெளியே  சொல்ல முடியலை.

இலக்கணம் ஒரு சொல்லையோ, ஒரு எழுத்தையோ குறிக்கலாம், அந்த வகையிலே மொழி பேசுற எல்லோருமே இலக்கணவாதிகள் என்பது உண்மை(?).

ஒரு இலக்கியவாதி(நான் இல்ல சாமிகளா) எழுதும் போது ஒரு சொல்லையே, எழுத்தையோ குறித்து எழுதுகிறார், அவரை அறியாமலே அதிலே அணியும் கலந்து கொள்கிறது, தனது கற்பனைகளை விவரிக்கும் போது தற்குறியாக எழுதினாலும் அங்கே அது தற்குறிப்பு ஏற்ற அணியாக மாறுகிறது. ஆக ஒருவரது படைப்பிலே இலக்கணம் இருக்கிறது என்பதும் உண்மையே(?). இலக்கணமும், இலக்கியமும் ஒரு படைப்பிலே நகமும் சதையும் போல இருக்கிறது.ஆக ஒரு இலக்கியவாதிகுள்ளே இலக்கணமும் ஒளிந்து கிடக்குது.

  எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலே நான் கேட்ட கலை வசனம் ரத்தக் கண்ணீர் தான்.ஆடலையும் ஒரு கலைன்னு சொல்லலாம், எழுதுவதையும் ஒரு கலைன்னு சொல்லலாம்.கண்ணால் பார்த்து உள்ளம் உணர்வதும் ஒரு கலையே, எழுத்தாளன் எங்கே கலைஞன் ஆகிறான் என்றால் எழுத ஆரம்பிக்கும் போதே,அப்படின்னு பார்த்தா மனபாடம் பண்ணி பரிச்சை எழுதுவதும் கலையே(?).படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்(?)


ஒவ்வொரு எழுத்தாளருக்கு உள்ளேயும் இலக்கியம், இலக்கணம் மற்றும் கலை  இயல்பாவே இருக்கு, அப்படி இருக்கும் போது அவரு இலக்கியவாதி என்று சொல்லும் முன்னே, நாமும் இலக்கிய வாதிதான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்.நமக்கு நாமே உதவி திட்டத்தின் கீழே இந்த பட்டம் கொடுக்கப் படுகிறது.


எழுத்தாளர் மட்டுமல்ல வாசகருக்கும் இந்த பட்டம் பொருந்தும், ஒருவரின்  கருத்தை படித்து விட்டு இன்னும் மிகைப் படுத்தி எழுதி இருக்கலாம் என நினைக்கும் போது இலக்கியவாதியாகிறார், (இதை) எழுதியவன் மட்டும் கையிலே கிடைத்தா கண்டம் துண்டமா வெட்டி போடுவேன் என்று நினைக்கும் போது கலைஞன் ஆகிறார், எழுத்துகளை வசிக்கும் போதே அவர் இலக்கணவாதியாகிறார்.படிக்கிறவங்க, எழுதுறவங்க  எல்லோருமே இலக்கியவாதிகள்(?).


ஒவ்வொரு மனிதனுக்குள்ளே இந்த முன்று மட்டுமல்ல ஓராயிரம் திறமை இருக்கிறது, அதிலே அதிகம் வெளிப்படும் திறமை அவனுடைய அடையாளமாகிறது. (ரெம்ப முக்கியம் இந்த குத்து வசனம்).

இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார் 

இங்கே  அடையாளங்களை  காணலாம்.


Monday, January 4, 2010

வட்டக் காதல்(circle love) - பாலிவுட் பட விமர்சனம்

இந்தி'ய திரை உலகத்திலே ஹாலிவுட் படங்களின் தாக்கம்  அதிகமா இருப்பதால் முந்திய காலங்களில் ஹாலிவுட் படங்களை சுடும் போது பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை, இப்போ படத்தின் போஸ்டர் பார்த்து அது எந்த ஹாலிவுட் படம் என்பதை கண்டு பிடித்துவிடலாம், அதனாலே இப்போ எல்லோரும் வட கொரியா, ஜப்பான் போன்ற மொழி படங்களை அதிக அளவிலே சுடுகிறார்கள்.அதையும் சப்ப மூக்கனுக்கு தெரியாம ஹாலிவுட் காரங்க கிட்ட போட்டு காட்டி எப்படி ஆஸ்கார் வாங்கலாமுன்னு யோசித்து கிட்டு இருக்காங்க,இது நடக்கிற கதை, இனி நடக்க போற கதையை பார்ப்போமா?


 
காதல்ல முக்கோணம், சதுரம், செவ்வகம், நாற்கோணம்,காலச்சார முன்னோடிகள் என எடுத்துரைக்க பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்றும் இப்படி பல கோணங்களில் சொல்ல இந்திய திரை உலகிலே பாலிவுட் காரங்களை மிஞ்ச முடியாது, அதற்கு அங்கே இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் பஞ்சம் இல்லாம நடிச்சி கொடுப்பாங்க.நம்ம ஊரிலே ஒரு படத்திலே ரெண்டு நடிகர்கள் நடித்ததால், அதற்கு பின் ஆயுசுக்கும் அவங்க பேசுறது கிடையாது, அந்த அளவுக்கு ஒற்றுமையா? இருக்கிறோம்.


 
நான் எழுதிய இந்த கதைக்கு(?) நிறைய நடிகர்கள் தேவைப் படுவதால் கதை(?) கோலிவுட் தாண்டி ரெக்கை முளைத்து பாலிவுட் பறக்கிறது. இந்த கதையும் உலக திரைப் படங்களிலே சொல்லப் படவில்லை, அப்படி சொல்லி இருந்தாலும் அது என் கதையா இருக்க வாய்ப்பே இல்லை என்பது நான் எழுதும் மொக்கை மீது சத்தியம். அங்கே சாலை ஓரங்களிலே உள்ள மலர்களை( நம்ம ஊரு தத்தா செடிதான்) அனுமதி இல்லாமல் படம் பிடித்து காட்டுவதாலே என்னவோ இந்தி'ய படங்களை உலகம் இன்னும் வியந்து பார்க்கிறது.


இதும் ஒரு காதல் கதைதான், அதாவது வட்டக்காதல் என்ற பொன்னான கருத்தை உள்ளடக்கியது, இதற்கு நடிகர்கள் இங்கிட்டு நாலுபேரு, அங்கிட்டு நாலு பேரு போட்டுக்கணும், அங்கிட்டு இருக்கிற நாலு பேரும், இங்கிட்டு இருக்கிற நாலு பேருக்கும் துண்டு போடுறாங்க, கதை போகும் போக்கிலே யார், யாருக்கு துண்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் சினிமா ரசிகர்கள் கண்டு பிடிக்க முடியாத ஒரு நிலைக்கு செல்லும், படம் பார்க்கிறவங்களுக்கு குழப்பம்முனா படம் எம்புட்டு நாள் ஓடுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


இந்திய படம் என்று டைட்டில் மட்டுமே சொல்லும் படங்களைப் போல இந்த படமும் எல்லா காட்சிகளும் வெளி நாடுகளிலே எடுக்கப் படுகிறது, வெளிநாட்டிலே படம் எடுத்தால் தான் இந்தியா வல்லரசு ஆகும் என்பதை குறிக்கோள் காட்டும் உலக தரம் வாய்ந்த படம்.
 
குறிப்பாக ஒரு காட்சியிலே வட்டக்காதலில் ஒரு நாயகியை அழைத்து கொண்டு வெளிநாட்டிலே இருக்கும் பனை மரத்தை காட்டி அவளோட பிறந்த நாள் பரிசுக்கு தான் கொடுக்கும் அதிர்ச்சி வெகுமதி என்று சொல்லுகிறார். அதை கண்டதும் அந்த நாயகி இந்த உலகத்திலே காணததை கண்டதைப் போல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாள், பட்டிகாட்டு காரி மிட்டாய் கடையை பார்க்கிறது போல நாயகனைப் பார்த்து ஐ லைக் யு என்று சொல்லுகிறாள், படத்திலே ஐ லவ் யுக்கும், ஐ லைக் யுக்கும்   பத்தாயிரம் மைல் தூரம் என்பதை புரிந்து கொள்ளும் பொருட்டாக இந்த வசனம் பத்தாயிரம் தடவை வரும்.


இன்னொரு காட்சியிலே இன்னொரு நாயகிக்கு ஒரு வெளிநாட்டு வாய்க்கா தண்ணியை காட்டிவிட அதை பார்த்து ஆனந்த சந்தோசத்திலே தண்ணிர் அவள் கண்களிலே இருந்து தாரை தாரையாய் வந்து அந்த வாய்க்கா அளவுக்கு இன்னொரு கண்ணிர் வாய்க்கா வாக ஓடுகிறது, இப்படி பல காதல் ரசம் நிறைந்த  காட்சிகள் உண்டு.இப்படி போய் கொண்டு இருக்கும் வட்டக்காதலிலே ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்து உடைந்தது போல உடைந்து வெளியிலே இருந்து திபு திபு என ஒரு ௬ட்ட நடிகர்களின் அறிமுகத்திலே கதை இடியாப்ப சிக்கலில் சிக்கி கொள்கிறது.
 
(இங்கே இடைவெளி விட்டு ரசிகர்களுக்கு இடியாப்பம் இலவசமாக வழங்கப் படுகிறது.)
 
இரண்டாம் பாதியிலே இடியாப்ப சிக்கலை உடைத்து இட்லி சிக்கல் போல மாற்றி படம் இறுதிக்கு வரும் முன்னே தோசையாகி தொங்க விடப்படும், இந்த இடத்திலே இருந்து அடுத்த பாகத்திற்கு போக வழி வகை செய்ய, கடைசியிலே வட்டத்திலே இருந்த பல வேறு நடிகர்களை கழட்டி விடும் படியாக காட்சிகளை வெளிநாட்டிலே அமைத்து வெட்டி விட்டு கதை இரும்பை கண்ட காந்தம் போல இல்லாமல் கரும்பை கண்ட எறும்பு போல நகர்கிறது.

இறுதி  காதல் காட்சியிலே நாயகிக்கு வெளி நாட்டிலே கள்ளி செடி பரிசாய் கொடுக்க, அதைப் பார்த்து என்ன செடி என்ற கேள்விக்கு அரைமணி நேரம் கள்ளியின் பெருமைகளை அந்த கள்ளியிடம் எடுத்துரைக்க, வசனத்தின் முடிவிலே பேசிய அந்த நடிகரையும், பேசச் சொல்லி கொடுத்த டைரக்டர், கதாசிரியர் அனைவருக்கு கள்ளிப் பால் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு படம் பார்பவர்களுக்கு வரும் என்பதிலே ஐயமே இல்லை.  
 

கள்ளியின் பெருமைகளை சொன்னாலும், அந்த கள்ளியின் கல் மனம் கரையவில்லை, இப்படிப்பட்ட அறிய செடியை ஏன் இந்தியாவிலே பார்க்க முடிய வில்லை என்ற கொலை வெறி கேள்வியை கேட்க கொதித்து எழும் நாயகன் இந்தியாவிலே வளர்ந்த கள்ளி செடியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அவை எல்லாம் எதோ செவ்வாய் கிரகத்திலே இருந்து வந்ததைபோல  உங்கள் முகத்திலே அப்படி ஒரு ஆச்சர்யம்


இப்படி ஆரம்பித்து இன்னொரு அரைமணி நேர உணர்ச்சி பூர்வமான  வசனம் பேசி முடித்து கள்ளி செடியை கிள்ளி எறிந்து விட்டு போகிறார் கடைசி நாயகன், நாயகின் நெற்றிப் போட்டிலே உள்ள புள்ளியை பார்த்து கேமரா நகர்கிறது, புள்ளியிலே படம் முடிகிறது, புள்ளியும் வட்டம் தானே என்பதை மறைமுகமாக சினிமா வாசகர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்தகாட்சி.

காதலின் மறுபரினாமாகிய இந்த வட்டக்காதலுக்கு ஆஸ்கார் கிடைக்குமா, இல்லை ஆள் இல்லாப் படம் என்று விருது கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.