அவமானம்
அவனுக்கு அவமானம், அவளுக்கு அவமானம், தெருவுக்கு அவமானம், வீட்டுக்கு அவமானம், நாட்டுக்கு அவமானம் இப்படி கேள்வி பட்டு இருக்கிறோம்.
என்னை போன்ற நல்ல உள்ளம் படைத்த, பால் போல,பனி போல வெண்மையான் மனசு, தெளிந்த நீரோடை தெரியுற கண்ணாடி முகம் மாதிரி கரை இல்லா கை இப்படி எந்த வகைகளுக்குமே தகுதில்லாத கட்டைக்கு(கருப்பு போடலை) ஏற்பட்ட
அவமானங்களை என்னனு சொல்ல, இதை எல்லாம் சொல்லாம விட்டுட்டா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை,இங்கே சுத்துற கொசுவத்தி எங்க போய் முடியுமுன்னு தெரியலை, ஆனா கண்டிப்பா முடியும்.
பல வருடங்களுக்கு முன் :
அவன் காலை கழுவி குடி, அவனும் நீ திங்க சோத்தை தான் திங்கான், ஆனா அவன் வகுப்பிலே முதல் ரேங்க், நீயும் இருக்கியே எருமை மாடு மாதிரி அப்படின்னு எல்லோருக்கும் முன்னாலேயும் பாலர் பள்ளியிலே படிக்கும்(?) சொன்னதாலே அவமானம்.
எங்க அப்பா ராணுவவீரர் என்பதாலே கொஞ்ச நாள் கோல்கொண்டாவிலே இருந்தேன், அன்றைய ஆந்திரா, இன்றைக்கு ராயல் சீமாவா, தெலுங்கானாவான்னு தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சி ஊருக்கு வந்த உடனே எங்க பள்ளியிலே ஒன், டூ, த்ரீ தெரிஞ்ச ஒரே ஆள் என்று பெயர் எடுத்தவன், வர வர மாமனார் செம்மரியாடு போல மாதிரி 10 ம் வகுப்பிலே 40/100 ம், 12 ம் வகுப்பிலே 75/200 ம் எடுத்ததை பார்த்து ஆங்கில புலிக்கு ஆப்பு வச்சிட்டாங்களேன்னு சொன்னதை கேட்டு ஏற்பட்ட அவமானம்.
கல்லூரியிலே, ௬ட படிக்கிற எல்லோரும் முரட்டு காதல் பண்ணுகிட்டு இருக்கும் போது நானும் முண்டு கொடுத்து துண்டு,போர்வை எல்லாம் எடுத்துகிட்டு அலையும் போது கண்டுக்க ஆள் இல்லாத போது ஏற்பட்ட அவமானம், ஊருக்கு பக்கம் வரும் போது அத்தை மகள் கிட்ட என்னைய பிடிச்சி இருக்கான்னு கேட்ட உடனே என்கிட்டே பேசுறதையே நிப்பாட்டுன அவமானம்.
கல்லூரி முடிச்சி ரெண்டு வருமா எங்க ஊரையும் சென்னையையும் கோயில் மாடு மாதிரி சுத்தி கிட்டு இருந்த எனக்கு அத்தி பூத்த மாதிரி வந்த ஒரு
நேர்முகத்தேர்விலே தொழில் நுட்பத் தேர்விலே வெற்றி அடைத்தாலும், என்னைய கேள்வி கேட்டவங்க இவனை இங்கிலீஷ்ல அரை நிமிஷம் பேசச் சொல்லுங்கன்னு மனித வள மேம்பாட்டு துறையிலே இருந்த அர கை சட்டை போட்ட ஆங்கிலோ பாட்டிகிட்ட போட்டு கொடுத்து, அந்த பாட்டி என்கிட்டே ரெண்டு கேள்வி கேட்க, என்ன கேள்வி கேட்டாங்கன்னு புரியலை, அதை வெளிகாட்டாம பலமா மூளையை கசக்கி பிழிஞ்சி யோசித்து கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும் போது, நாங்க அமெரிக்காவுக்கு ஆணி பிடுங்க ஆள் எடுக்கிறோம், அதனாலே இடிச்ச புளியா இருக்கிற நீ இங்கிலிசு புலியா மாறிட்டு ஒரு மாசத்திலே வந்து பாருன்னு சொல்லும் போது ஏற்பட்ட அவமானம்.ஒரு மாசம் கழித்து போனா திண்ணையிலே இருந்தவன் தெருவுக்கு வந்த கதையா நிறுவன கடையை காலி பண்ணிட்டு ஓடிப்போனதை கேள்வி பட்டு ஏற்பட்ட அவமானம்.
கல்யாணத்துக்கு எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்ததும் கல்யாண வயசு பெண்களை எல்லாம் எங்கள் ஊரிலே வீட்டிலே பூட்டி வச்சதிலே அவமானம்.என்னைப்பற்றி சரியா விசாரிக்காமல் எனக்கு பெண் கொடுத்தவர்,என்னைய பார்த்து ஒரு பச்ச புள்ளை வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என்று சொல்லும் போது ஏற்பட்ட அவமானம், கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.
மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,குடுகுடுப்பை பாணியிலே சொன்னா கல்யாணம் ஆனா காலத்திலேயே இருந்து என்னோட இருக்கும் டமில் பேசும் பெண் இதையெல்லாம் பார்த்து விட்டு இன்னும் அவமானம் பத்தலை ன்னு சொல்லும்போதும் ஏற்பட்ட அவமானம்,அதனாலே இனிமேல பிழை விட்டா எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).
இன்னும் இது போல நிறைய இருந்தாலும் பதிவுலக நல்ல உள்ளங்களை மனதிலே கொண்டு இத்தோட நிப்பாட்டிகிறேன்.
இப்படிஅவமானத்துக்கு அவமானம் ஏற்படுற அளவுல அவமான அணுகுண்டுகள் பட்டும் இந்த கட்டை கரி கட்டையா இன்னும் உலா வருதுனா, அதுக்கு என்ன காரணம், வாழ்க்கை ஒரு வட்டம், ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோமுனா, இல்லை, நம்பிக்கை அதாவது தன்னை நம்புற நம்பிக்கை,அந்த நம்பிக்கை இருந்தா குவாட்டர் இல்லாம கும்மி அடிக்கலாம்.
முட்டிலே பசி இருகிறவன் தானே அவமானத்தை பத்தி கவலைப் படனும், வயத்திலே பசி இருக்கிறவன் அடுத்த வேளை சாப்பாட்டு கிடைக்க வழி செய்ய வேண்டாமா?