Wednesday, July 28, 2010

திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?






இந்த கதை நடந்த காலத்திலே நான் கல்லூரியை முடித்து விட்டு வழக்கம் போல சும்மாதான் இருந்தேன், இப்பவும் சும்மாதானே இருக்கன்னு நீங்க சொல்லலாம். இன்றைக்கு கணிப் பொறியிலே எலிபொறியா இருந்து உலக மகா வேலை செய்தாலும், அன்றைக்கு என் அறிவு எப்படி இருந்து இருக்குன்னு நினைக்கும் போது புல்லரிக்குது, அந்த சம்பவத்தை சொல்லலைனா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை.

வேலைவெட்டி இல்லாம ஏன்டா வீட்டையே சுத்தியே வார, எதாவது வேலை இருந்தா தேடுன்னு சொல்லி எங்க அப்பா தினமும் தொல்லை கொடுக்க, ஊர் எல்லையிலே இருந்த பேருந்து நிலையத்தை சுத்தி வர ஆரம்பித்தேன், எங்க ஊரிலே இருந்து தென்காசி போர பேருந்துகளை எண்ணி, அதிலே போகிற வருகிறவர்களை கணக்கு எடுத்து அரசாங்கத்துக்கும், எனக்கும் கணக்கு சரியா வருகிறதா என்று சரிபார்த்து கொண்டு இருந்தேன். இப்படி ஒரு நாள் கணக்கு பண்ணிக்கொண்டு இருக்கும் போது, என்னைப் பார்த்து யாரோ சிரிக்கிற மாதிரி இருந்தது, திருப்பி பார்த்தா தேவதை மாதிரி இல்லைனாலும்  ஓரளவுக்கு தேறுற அளவுக்கு ஒரு வாலிப பெண் என்னைப் பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.

வலையை விரிக்காமலே தானாக வந்து விழிமீன் மாட்டுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கன்னு, ௬ட வேலை வெட்டி இல்லாத நண்பனிடம் சொன்னேன், அவன் அதுக்கு 

"ஏலே, கருவ மரத்துக்கு தோலை சுத்தி விட்ட மாதிரி ஒரு உடம்பு, அதுக்கு கருப்பு பேன்ட், கருப்பு கட்டம் போட்ட சட்டை போட்டு இருந்தா, உன்னை பார்த்து சிரிக்காம என்ன செய்வா?"

"பொறாமைபடாதே வெண்ணை"

"ஏய், அவ புளியங்குடி அழகி, உன்னை மாதிரி தேவாங்கு எல்லாம் பார்க்கவே ௬டாது"  

அழகின்னு காதிலே விழுந்ததும், மனசிலே மின்சாரம் பாய்ந்து, இதயம், கிட்னி எல்லாத்தையும், வெளியே எடுத்து அவளுக்கு தெரியாமலே அவகிட்ட 
கொடுத்து விட்டேன்.

அடுத்த நாளே கருவாட்டு பானையிலே இருந்த வெள்ளை சட்டையும், நீல நிற பேன்டையும் எடுத்தேன், காலையிலே நானும் கல்லூரி செல்வது போல, நோட்டு ஏதும் இல்லாம பேருந்து நிலையம் சென்றேன், கொஞ்ச நேரத்திலே அவளும் வந்தாள், பேருந்திலே அவளுடன் ஏறினேன், வண்டி கிளம்பியதும்  பேருந்திலே இருந்த ஆட்களை நோட்டம் விட்டேன், என்னைவிட யாரும் அழகா இருக்காங்களான்னு, எல்லாமே பெருசுங்க தான் இருந்தது, நம்பிக்கை ரெம்ப அதிகமாகி விட்டது, இது கண்டிப்பா கல்யாணத்திலே தான் முடியும் என்று கனவு பாட்டு பாட நினைத்தேன். பேருந்து திடிரென நின்று ஒருவனை ஏற்றி கொண்டது, அவனைப் பார்த்த உடனே இலவச மின்சாரத்திலே எரிந்த 500 வாட்ஸ் பலப் போல இருந்த என் முகம், அவிஞ்சி போன கட்டை மாதிரி ஆகிப் போச்சி.ஏன்னா அவன் என்னைவிட மிக மிக அழகா இருந்தான்.
    
பேருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலே அவன் அவள் பக்கம் சென்று கையிலே வைத்து இருந்த தாளை கொடுத்து 

"சுமக்க முடியலை ரெம்ப கஷ்டமா இருக்கு, நீங்க கொஞ்ச வைத்துகொள்ள முடியுமா?"
 அவளும் உடனே புதுசா இங்கிலிபிசு படிச்சி இருப்பா போல "நோ ப்ரோப்லாமு சுகரு" ன்னு சொல்லி வாங்கி வைத்து கொண்டாள். பேருந்து விடுகிற புகையை விட என் காதிலே அதிகமா புகை கிளம்பி ஒரு மேக ௬ட்டம் போல ஆகிடிச்சி, ஓட்டுனர் வண்டிய ஓட்ட சிரமப்படுறார்னு புகையைத் திருப்பி வாங்கிட்டேன். மனசு கேட்கலை வண்டி சொக்கம்பட்டி போனதும் டிக்கெட் எடுக்காமலே இறங்கிட்டேன், வண்டியிலே தென்காசி வரை போய் இருந்தாலும் டிக்கெட் எடுத்து இருக்க மாட்டேன்.  

சொக்கம்பட்டியிலே இறங்கி அங்கே என்௬ட பள்ளிகுடம் படித்த நண்பன் வீட்டுக்கு சென்றேன், கல்லூரி படித்த நானே வேலை இல்லாம இருக்கும் போது  பள்ளிபடிப்பு படிப்பு படித்த அவனுக்கு வேலை எப்படி கிடைக்குமுன்னு நினைத்து கொண்டே போனேன், நான் நினைத்த மாதிரி அவனும் சும்மாதான் இருந்தான். என்னையப் பார்த்து நட்பு பரிமாறி விட்டு வெளியே வந்தோம். ஆளுக்கு ஒரு கட்டைபீடி எடுத்து பத்த வைத்தோம். ஒரு சுண்டு இழுத்து விட்டு நான் 

"முடியலை மாப்ள.. முடியலை "

"முடியலைனா ஆஸ்பத்திரி போக வேண்டியதானே, வேண்ணா சொல்லு எங்க ஊரு ஆஸ்பத்திரி
௬ட்டிட்டு போய் ரெண்டு கிலே அரிசியும், நாலு ஆப்பிள் பழமும் வாங்கி தாரேன்"

மாப்ள நான் அதை சொல்லலைன்னு சொல்லிட்டு  என் சோகக்கதைய சொன்னேன். கேட்டு முடிச்ச உடனே, மாப்ள நீ எனக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்து இருக்க, நான் அதுக்கு என்ன கைம்மாறு எப்படி செய்யன்னு தெரியாம இவ்வளவு நாளும் நெஞ்சிலே இருந்து கிட்டே இருந்தது, அதை இன்றைக்கு இறக்கி வைக்கலாம். 

"என்ன மாப்ள சொல்லுற"

"எங்க ஊரு சாராயம் குடிச்சி இருக்கியா?"

"இல்ல மாப்ள"

கைமாறு பண்ணனும், நீ வான்னு ௬ட்டிட்டு போய் 100 மில்லி வாங்கி கொடுத்தான், குடிக்கும் போதே என்னுடைய திட்டத்தை சொன்னேன், அந்த அழகனை வீட்டிலே போய் மிரட்ட சம்மதம் தெரிவித்தான். 

அடுத்த நாளே அவனை மிரட்ட திட்டம் போட்டேன், சொக்கம்பட்டி நண்பன் சொன்னான், ரெண்டு பேரா போய் மிரட்டினா சகுனம் நல்லா இருக்காது, இன்னொரு ஆள் வேணும், நான் உடனே என் தம்பியும் வீட்டிலே சும்மாதானே இருக்கான்,அவனுக்கு போன வாரம் தான் பன்னெண்டாம் வகுப்பு பரிச்சை முடிந்தது, அவனை அழைச்சிட்டு போகலாம், எல்லாம் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து மட்டையாகி நல்ல உறக்கம்.

அடுத்த நாள் காலையிலே என் தம்பியை டீ குடிக்க ௬ட்டிட்டு போய் விவரம் சொன்னேன், அவன் உடனே 

"டேய் ஊரிலே ஒன்னு ரெண்டு எனக்குன்னு விட்டு வை, யாரைப் பார்த்தாலும், அவ உன் முத அண்ணி, ரெண்டாவது அண்ணின்னு சொல்லி என்னைய ஒருத்தரையும் நிம்மதியா பார்க்க விட மாட்டேங்குற"   

"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"

"பேச்சு மாறக்௬டாது"

"கண்டிப்பா" உடனே அவன் என்னிடம் 

"முக்கியமான விஷயம், நான் அவன் மேல கை எல்லாம் வைக்க மாட்டேன், ஏன்னா நான் அடிச்சா அவன் செத்துருவன்"   அப்படின்னு குத்து வசனம் பேசிப்புட்டான், உடனே நான் 

"நான் பார்த்தாலே அவன் செத்துருவான்"

"நான் நெருப்பு"

"நான் கரு நெருப்பு" இப்படி ரெண்டு பெரும் மாறி மாறி அரைமணி நேரம் குத்து வசனம் பேசினதிலே கடையிலே இருந்த அனைவரும் தெரிச்சி ஓடிட்டாங்க, கடைகாரர் எங்களுக்கு ஓசியிலே ரெண்டு டீ கொடுத்து காலிலே விழுந்து கிளம்ப சொல்லி விட்டார்.  

அன்று மாலை எங்க திட்டப் படி மூவரும், அழகன் வீட்டு போனோம், அவன் தெருவிலே ஆள் நடமாட்டம் இருக்கிறதான்னு நோட்டம் பார்த்து கொண்டு இருந்த நேரம் எங்களை நோக்கி ஒருவன் ஓடிக்கொண்டு வந்தான், அவன் அழகன் என்று தெரிந்து விட்டது, உடனே மாப்ள ஆள் வாரன் பிடின்னு சொல்லி முடிக்கல, சொக்கம்பட்டி நண்பன் அவன் கையப் பிடிச்சிட்டன், உடனே அழகன் 

"ஏல, என் கைய பிடிக்காதிய சொல்லிபுட்டேன்"  ன்னு சொல்லி முடிக்கலை ,பின்னால இருந்து வந்த கும்பல், அழகனை தாக்க ஆரம்பித்து.

அவன் உடனே "அண்ணே என்னை மன்னிச்சிடுங்க, இனிமேல நான் அந்த பஸ்ல ஏற மாட்டேன்" ன்னு கெஞ்சுறான், அவனை அடிச்ச கும்பல் எங்களை திருப்பி பார்த்து இவனுவளும், இவன் ௬ட பேசினாங்க, இவனோட சேக்களிகளா இருக்குமுன்னு சொல்லி, அவனை விட்டுட்டு எங்களை தொவைச்சி தொங்க போட்டுடாங்க, என் உடம்பு அவங்களுக்கு அடிக்க ரெம்ப நல்லா இருந்ததோ என்னவோ, என்னைய மட்டும் நல்லாவே கவனிச்சாங்க, நொங்கு தின்னவனை அடிச்சாங்க, சிரட்டையை பார்க்காத என்னையும் எதுக்கு அடிச்சாங்கன்னு தெரியலை, என்னைய நல்லா அடியாளம் கண்டு வச்சிக்கிட்டு போகும் முன்னாலே ஒருத்தன் சொல்லிட்டு போனேன் 

"இனிமேல என் தங்கச்சி  போற தெரு பக்கமோ, பஸ் பக்கமோ பார்த்தேன், அன்றைக்கு உனக்கு சங்குதான்னு"   அம்புட்டு குத்து குத்திட்டு குத்து வசனம் சொல்லிட்டு போய்ட்டான், அன்றைக்கு ஊரை விட்டு ஓடி வந்தவன்தான், இன்னும் ஊருக்குள்ளே காலடி எடுத்து வைக்க முடியலை. ஆனா அந்த சம்பவத்துக்கு நான் போட்ட திட்டம் இன்னைக்கு என்னைய கணிப் 
பொறியாளர் ஆக்கி இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க.

(பாலா அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா?)


Tuesday, July 27, 2010

பதிவுலகிலே நான் எப்படிப்பட்ட மகான் ?

பொறுப்பு அறிவித்தல் :


எவ்வளவோ பேரு என்னை தொடர் இடுகை எழுத ௬ப்பிட்டாங்க, அவங்க பேரு எல்லாம் ஞாபகம் இருக்கு, அதை எல்லாம் சொன்னா இந்த இடுகை தாங்காது, அதனாலே பொறுப்பு அறிவித்தல்ல அவங்க கிட்ட எல்லாம் ஒரு மன்னிப்பு கேட்டுகிறேன், தொடர் பதிவுன்னு இல்ல , சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நசரேயன், நான் கும்மி அடிக்கும் வார பேருதான், அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

     உண்மையான பேரு என்னன்னு தெரிஞ்சிக்க இப்படி ஒரு உக்தியா? உண்மையான பேரை சொன்னா ஒரு கோடி கொடுப்பீங்களா?

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

     இந்திய அரசாலே அவசர நிலை பிரகனப் படுத்தப் பட்ட நேரம், என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்த பேனாவை  உடைச்சிடாங்க,அதனாலே கூகுள் ஆண்டவரிடம் சொல்லி பிளாக்கர் ஓசியிலே வேண்டி வாங்கிகிட்டேன். அல்லோ இப்படி எல்லாம் கதை சொல்லுவேன்னு எதிர் பார்த்தீங்களா?

யாஹூ குழுமத்திலே நான் கல்லுரியிலே பரிசு வாங்கிய கவுஜையை தமிழிலே வெளியிட்டேன், அதைப் பார்த்ததும் நண்பன் ஒருவன்,நீ இங்கே சொம்பு அடிச்சது போதும், நாங்க ஏற்கனவே கடையை திறந்து வைத்து இருக்கோம், நீயும் வந்து உன் யாவாரத்தை கவனின்னு சொன்னான்.அந்த கடையிலே துண்டை விரிச்சி உட்கார்ந்தேன், ஈ காக்கா வரலை. கூகுள் ஆண்டவரிடம் கொலைவெறியோடு தேடுறப்ப தமிழ் மணம் கண்ணிலே பட்டு விட்டது, நான் அவங்க கிட்ட சொன்னேன், நாமளும் போகலாமுன்னு சொன்னேன், அவங்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க, அடுத்த நாளே நான் சொந்தமா கடையை திறந்து தமிழ் மணத்திலே நுழைந்து யாவரத்தை ஆரம்பித்தேன்.நான் காலை வைத்து இவ்வளவு நாளும் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு, இருக்கும்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

   பிரபலம் என்பதற்கு வரைமுறைகள் அடையாளம் இருந்தா சொல்லுங்க, பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?

கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்சி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?

கேள்வியெல்லாம் போதும், பதிலா சொல்லுன்னு சொல்லுறீங்களா?

கடையை திறந்த அன்றைக்கே எல்லோரும் பிரபலம் தான், தனியா பிரபலம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
  
    எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்,

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இதிலே சம்பாதிக்கிற ஒரு பதிவரைச்சொல்லுங்க, நான் பார்க்கிற வேலையை விட்டுட்டு முழு நேரமா கடையை திறந்து யாவாரம் பண்ணுறேன்.
  
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

    ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எதுக்கு கோபப்படனும், அவரு என்ன என் சொத்தையா எழுதி வாங்கிட்டாரு?


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அணிமா, இப்ப காணாம போயிட்டாரு 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக்கு அழைக்கலை,வாய்ப்பளித்த சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி





Thursday, July 22, 2010

ஆறரை அறிவு



வாழ்க்கையிலே எதையும் திட்டமிட்டு செயல் படுத்தி பழக்கம் இல்லாததாலோ என்னவோ இப்பவும் அவரசர அவரசமா மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறேன்.மனசிலே ஒரு பயம் இருந்தாலும், நம்ம ஊரு விமானங்கள் நேரத்துக்கு கிளம்பாது என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்தது. இப்படி யோசித்துக்  கொண்டு இருக்கும் போதே விமான நிலைய வாயிலை வந்தடைந்தேன். கணணி திரைகளிலே ஓடுகிற விமானங்களின் விவரங்களைப் பார்த்துக்கொண்டே துபாய் செல்லும் பயணிகள் விமான நிலைய சீட்டுகள் வாங்கும் இடத்திற்கு வந்தேன், அங்கு நின்று வரிசையை ஒழுங்கு படித்தி கொண்டவரிடம், விமான எண்ணைக் கொடுத்து அதன் விவரம் விசாரித்தேன். அவரின் பதிலிலே என் உலகமே இருண்டு விட்ட உணர்வு.

என்னோட முகம் மாறுவதைப் பார்த்த அவர் 

"நீங்க அந்த விமானத்திலே போக சீட்டு வாங்கி இருக்கீங்களா?"

"இல்லை" ன்னு சொன்னதும் அவரு பார்த்த பார்வை கட்டை விளக்கு மாத்தை கொண்டு அடிக்கிற மாதிரியே இருந்தது. 

ஆனால் எனக்கு அம்முவைப் பார்க்க முடியாமல் போன வருத்தத்தை விட, அவளிடம் என் காதலை சொல்ல முடியலையேன்னு வருத்தம். தமிழ் படமா இருந்தா இப்படி காதலி ரயிலிலே போகிறதோடு முடித்து, அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,ஆனா நிஜ வாழ்க்கையிலே அப்படி நடக்குமா, பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்.நான் அப்படி யோசித்தாலும் என்னவோ என்னை அறியாமலே ஒரு இறுக்கம் மனசிலே, மனசு உடல்ல எங்க இருக்குன்னு தெரியலைனாலும் என்னவோ நாலு கிலே கல்லை தூக்கி வைத்தது மாதிரி ஒரு பாரம்.   

அழுகை கற்பாறையை உடைத்து கொண்டு வரும் காட்டாற்று வெள்ளம் போல திரண்டு, ஒப்பாரியிலே முடிந்தது. என்னோட ௬த்தை பார்க்க சிறு ௬ட்டம் ௬டிவிட்டது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்து விட்டனர். அவர்கள் என்னிடம் நடந்த விவரம் கேட்டனர்,அவரிடம் உண்மையை சொன்னேன்.கேட்ட அதிகாரிகள் என்கிட்டே என்ன பதில் சொல்லன்னு தெரியலைனாலும் ரெம்ப கோவமாவே இருந்தாங்க, அதிலே ஒருத்தரு

"விமானம் போனா என்ன, இப்ப இருக்கிற நவீன உலக்கத்திலே இணையத்திலே பார்த்து கல்யாணம் முடிக்கிறார்கள், நீ என்னவோ காதலி ஊருக்கு போறதைப் பார்க்க முடியலைன்னு செப்பு செம்பு மாதிரி உருகிற, இன்னொரு ஐந்து நிமிச்சத்திலே நீ கிளம்பலை, பிரிவைக் காரணம் காட்டி நொங்கு திங்க வந்த, உன் நொங்கை எடுத்திடுவோம்" 

அந்த சமயமா இன்னொரு ஆள் என் சட்டைப் பிடித்து இழுத்தார், யாருன்னு திரும்பி பார்த்த உடனே 

"யே .. மாப்புளலா.. எப்படி இருக்கடா, உன்னைப் பார்த்து எம்புட்டு நாளாச்சின்னு கேட்டான்.

"மச்சான், நல்லா இருக்கேன்டா, எப்படிடா என்னைய கண்டு பிடிச்ச"  

"நீ இங்க உங்க ஐயா செத்த மாதிரி அழுதுகிட்டு இருக்கிறதை தொலைக் காட்சியிலே பார்த்தேன், விவரம் கேட்க ஓடி வந்திட்டேன்" 

"மச்சான், அம்முவை ஊருக்கு போறதுக்கு முன்னாடி பார்க்க முடியலைன்னு வருத்தம், உனக்கே தெரியும் நான் அம்முவை எவ்வளவு காதலிக்கிறேன்னு"

"என்னது நீ காதலிக்கிறியா!!!, டேய் ஏதும் கள்ளத்துண்டு போட்டுட்டியா?"

"டேய், அவ என் காதலிடா" 

"அட கிறுக்குபயலே உனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் இருக்கும்டா"

"என்னது எனக்கு கல்யாணம் ஆகிடிச்சா!!!!!!!!!!!"

"போற போக்கைப் பார்த்தா காந்தி செத்துட்டாறான்னு கேள்வி கேட்ப போல இருக்கு, சரி வா உன்னை வீட்டுக்கு வண்டி ஏத்தி விடுறேன்"

அதற்குள்ளே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வந்து இன்னொரு அதிகாரி காதிலே ஏதோ சொன்னார், அவர் உடனே "இவன் இப்படி தான் ஆறு மாதத்துக்கு முன்னாடி இதே மாதிரி பண்ணி இருக்கான், அன்றைக்கு ஏர் இந்திய விமானம் இன்றைக்கு துபாய் விமானம்."

"என்ன சார் சொல்லுறீங்க" ன்னு நண்பன் கேட்க

"ஆமா தம்பி இது கொஞ்சம் மரை கழண்ட கேசு"

அவர் சொல்லி முடிக்கும் முன்னே, மருத்துவர் என்று தன்னை அறிமுகப் படுத்திய ஒருவர், அதிகாரிகளிடம் பேசி என்னை வெளியே அழைத்து வர முற்ப்பட்டார்,நானும் நண்பனுக்கு பிரியா விடை கொடுக்காமல் மருத்துவரின் பின்னால் போனேன். எனக்கு மூளை குழம்பி விட்டதான்னு நண்பன் நினைத்து கிறுகிறுத்து நடந்து போனான்.

வெளியே அழைத்து வரும் முன் மருத்துவரிடம் 

"ஐயா என் அம்மு................."

"உங்க அம்மு எங்கையும் போகலை, அங்க பாருங்க" அவரு காட்டிய திசையிலே பார்த்தேன், நம்பவே முடியலை,அம்மு ஜீன்ஸ் பேன்ட், சட்டை போட்டு வெள்ளையம்மா மாதிரி என் கண்ணுக்கு தெரிந்தாள். ஓட்டமா ஓடிப் போய் அவளை கட்டி எல்லாம் பிடிக்கலை, அவ பக்கத்திலே போய் அவ கையை பிடித்து கிள்ளிப் பார்த்தேன், நிஜம் தான் என்று என்னைப் பார்த்து சிரித்தாள்.

அவள் சிரித்த சிரிப்பு எனக்கு கிண்கிணி ஒலி அடித்தது மனதிலே, கொஞ்ச நேரத்திலே அது பள்ளி மணி ஓசை மாதிரி கேட்டதும், பள்ளிக்௬டம் போகணுமேன்னு யோசித்ததொடு நினைவு இல்லாமப் போச்சி.

பிரபல மருத்துவ மனையில் மருத்துவரின் அறையிலே அம்மு மருத்துவரின் குறிப்புக்களை ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தாள். 

"உங்க கணவருக்கு பரிபூரண குணம் ஆகிவிட்டது,இனிமேல எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க பயப் படவே வேண்டாம்"

"ரெம்ப நன்றி மருத்துவரே, உங்க ஆதரவுக்கும்,ஒத்துழைப்புக்கும் எப்படி நன்றி சொல்லைப் போறேன்னு தெரியலை"

"எல்லாம் உங்களோட தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான், 200 கிலே எடை இருந்த நீங்க இப்ப 50 கிலோ ஆகி இருக்குகீங்க" 

"நீங்க ௬ட இந்த யோசனையைச் சொல்லும் போது, நான் உங்களுக்கும்  கிறுக்கு பிடிச்சிரிச்சோன்னு நினைச்சேன்,ஆனா நல்லா வேலை செய்து இருக்கிறது, என்னைய புதுசா பார்க்கிறவங்க எல்லாம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைக்குறாங்க,ரெம்ப சந்தோசமா இருக்கு" 

"உங்க வீட்டுக்காரருக்கு  உடம்பு சரியாகிடிச்சின்னு மறுபடியும் கண்ட படி சாப்பிட்டு உடம்பு எடையைக் ௬ட்டக் ௬டாது,அப்புறமா திரும்பவும் அவருக்கு பழைய அம்மு ஞாபகம் வரும்"

"இனிமேல இந்த 50 கிலே தான்"

"உங்க கணவரோட மருத்துவ செலவை கட்டினா எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும்"

"அதை நேத்தே கெட்டிட்டேன்"

"ரெம்ப சந்தோசம், இன்னும் ரெண்டு நாள்ல நீங்க அவரை வீட்டுக்கு ௬ட்டிட்டு போகலாம்"

"ரெம்ப நன்றி"

அடுத்த அரைமணி நேரத்திலே எனது அறையிலே மருத்துவரின் காலடி சத்தம் கேட்டதும், அம்மு .. அம்மு என்று புலம்ப ஆரம்பித்தேன்.அருகிலே வந்த மருத்துவர்

"அடச்சீ, நீ இன்னும் நடிப்பை முடிக்கலையா, அதுதான் நீ நினைச்சது நடந்து போச்சி, அப்புறம் என்ன இன்னும் அம்மு, ரோம்முன்னு, உன்னோட யோசனைப் படி நடந்து, இதை செய்து முடிக்கும் முன்னே எனக்கு கிறுக்கு பட்டம் கட்டிட்ட"

"என்னய  என்ன பண்ண சொல்லுறீங்க டாக்டர்,என்னோட மனைவியோட உடம்பை பரிசோதித்த ஒரு நல்ல மருத்துவர்,அவளுக்கு இருக்கிற நோய்கள் குறைய நிறைய உடற்பயிற்சி செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க, நானும் பல தடவை சொல்லிப் பார்த்தேன், கேட்கிற மாதிரி தெரியலை, அதனாலே என்னோட ஆறரை அறிவைப் பயன் படுத்தி நானே ஒரு யோசனை கண்டுபிடித்து, ௬ட்டமே இல்லாத உங்களிடம் சொல்லி செயல் படித்தி விட்டேன், இனிமேல பாருங்க கீழ்ப்பாக்கம் போறவங்க எல்லாம் உங்க கிட்டத்தான் வருவாங்க"

"உன்னோட ஆறரை எனக்கு ஏழரையாகி, இப்பத்தான் சரி ஆகி இருக்கு"

"டாக்டர்,நான் அடுத்து எப்ப சோதனை செய்ய வரணும்" 

"ஐயா சாமி, நீ இனிமேல இந்தப் பக்கமே வரக்௬டாது, உனக்கு உண்மையிலே கிறுக்கு பிடிச்சி இருந்தாலும்"  ன்னு சொல்லுறதை கேட்டு என்னால சிரிக்காம இருக்க முடியலை.

(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)


Tuesday, July 13, 2010

The twilight saga eclipse movie review(ஆலிவுட் படம்)



நான் பெரும்பாலும் ஆங்கில படங்கள் விரும்பி பார்க்கிறது கிடையாது, நான் பச்சை தமிழன் என்பதற்காக அல்ல, அவர்கள் படங்களிலே பேசுகிற வசனங்கள் எனது இலக்கிய அறிவுக்கு எட்டாமல் இருப்பதே காரணம் என்பதை உறுதியா சொல்ல முடியலைனாலும், ஓரளவுக்கு சொல்லமுடியும். இப்படியாக இருந்த நான் இந்த எக்லிப்ஸ் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நான் ஏற்கனவே இந்த ரத்த காட்டேரிகளைப் பற்றிய ஆராட்சியிலே தொல் பொருள் துறை கொடுக்க முடியாத முனைவர் பட்டத்தையும், மருத்துவ பட்டத்தையும்  வாங்கி வைத்து இருந்த காரணத்தினாலே இந்தப் படத்திற்கு சென்றேன்.

படத்தின் கதை எனனைவாக இருக்கும் என்று படம் போட்ட கொஞ்ச நேரத்திலே கொலைவெறியோட யோசித்து கொண்டு இருக்கும் போது அருகிலே இருந்த நண்பன் சொன்னான் இது படத்தோட மூன்றாவது பாகம் என்று, அதோடு யோசிக்கிறதை நிறுத்திக்கொண்டு படத்திலே ஆர்வம் காட்டினேன். நம்ம ஊரிலே மழை வரலைன்னா கழுதைக்கும் மனுசனுக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம், ஆனா வெள்ளையம்மா ரத்தக் காட்டேரிக்கும், ஓநாய்க்கும் துண்டு போடுறது தான் படத்தின் கதை.

இந்திய திரை உலகங்களிலே நாம் பலமுறை பார்த்து இருக்கும் முக்கோண காதல் கதை தான், ஒரே வித்தியாசம் மனுசி, மனஷனை காதலிக்கலை, அவளுடைய காதலன் ஒருவனுக்கு  எத்தனை வயசுன்னு அவனுக்கே தெரியாது, இன்னொன்று ஓநாய்(இது கொஞ்சம் வாலிப புள்ளை மாதிரி இருக்கு). படத்திலே கடைசியிலே வெள்ளையம்மாவை கை பிடிப்பது இதுவா, அதுவா ன்னு ரசிகர்களை ஏங்க விடாம, படத்தின் ஆரம்பத்திலே நாயகி ரத்தக் காட்டேரிக்கு துண்டு போட்டு வச்சுகிறாங்க. அதே சமயம் சும்மா இருக்கிற ஓநாயை உசுப்பு ஏத்துவதற்கு அது(அவன்) கூடயும் இரண்டு சக்கர வாகனத்திலே சுத்துறாங்க. 

இப்படி ஓநாய் கூட சுத்தினாலும், நாயகி அடிக்கடி ரத்தகாட்டேரிகிட்ட "என்னைய எப்ப கழுத்தை கடிப்ப.. கடிப்பன்னு" பல்லை காட்டி கேட்டாலும், அதுவும் இப்ப இல்லை.. இப்ப இல்லை ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும், ஏன் கடிக்கலை, கடிச்சா மிச்ச கதைக்கு எங்க போகன்னு எழுத்தாளர் யோசித்து இருக்கலாம். இந்த ஓநாய்க்கும், ரத்தக் காட்டேரிக்கும் ஆகவே ஆகாது, அதுக ரெண்டுக்கும் காவிரி பிரச்சனையோ  என்னன்னு தெரியலை, ரெண்டு பேரும் ஒருத்தரை, ஒருத்தர் முறைச்சுகுவாங்க, இது நாயகிக்கு ரெம்ப வசதியா இருக்கும், ரெண்டு பேரு கூடயும் தனித்தனியா ஊர் சுத்தும்.

நாயகியோட அப்பாவுக்கு நாயகி காட்டேரி௬ட சுத்துறது பிடிக்காது, எப்படியும் மக மனுசனை கல்யாணம் பண்ணமாட்டாள்னு தெரிஞ்சி, மனுசத்தை ஒத்து இருக்கிற ஓநாய்க்கு சரின்னு சொல்லுவாரு.ஓநாய்க்கு, ரத்தக் காட்டேரிக்கும், நாயகிக்கும் இடையிலே காதல் துண்டு நல்லா இருக்குன்னு தெரிந்சாலும், இவரு அடிக்கடி சந்திலே சிந்து பாடிக்கிட்டே இருப்பாரு, அவரு நாயகியப் பார்த்து "நீ ஏன் ரெண்டு பேரை காதலிக்க  ௬டாது" ன்னு பிட்டை போட்டுகிட்டே இருப்பாரு, நாயகி அதையெல்லாம் மறுதிடுவாங்க. ஆக வடை கிடைச்ச காட்டேரி, வடை கிடைக்க போராடும் ஓநாய் இப்படியே கதை பாதி வரை வருகிறது.  இவங்க ரெண்டு பேருமே அடிச்சிகிட்ட பார்க்க நல்லா இருக்காதுன்னு கதையிலே வில்லன் ௬ட்டம் வருகிறது, அவர்கள் நாயகியை கொல்லத்துடிக்கிறார்கள்.

ஏன் எதுக்கு சரியா காரணம் தெரியலை, ஒருவேளை காட்டேரிக்கு அவுக ஆள்கள்ள பெண் இருந்து இவரு வேண்டாமுன்னு சொல்லிட்டாரா , இல்லை நாயகிக்கு நல்ல சொம்பு அடிக்கிறாருன்னு பொறமையான்னு தெரியலை. வில்லன் ௬ட்டம் புதுசா தேத்துன காட்டேரி படையை  வைத்து நாயகியை அழிக்க வருவார்கள். இதை காட்டேரி கூட படிக்கிற சக காட்டேரிகள் ஞானக்கண்ணால் தெரிஞ்சிகிட்டு நாயகிகிட்ட சொல்லுறாங்க. இந்த உண்மை ஓநாய்க்கும் தெரிய வருது, அவரு துண்டு போட்ட ஆளுக்கு ஒரு பிரச்சனைன்னா அவரு சும்மா இருப்பாரா, அவரும் நானும் உதவி செய்யுறேன்னு சொல்லி வருவாரு, காட்டேறியும் வேற வழி இல்லாம சம்மதிக்கும். 

ஓநாயும், காட்டேரியும் நாயகியை கொல்ல வரும் இளங் காட்டேரிகளை சமாளிப்பது எப்படின்னு பயிற்சி எடுக்கும் போது ஓநாய்க்கு தெரியவருகிறது  நாயகிக்கும் காட்டேரிக்கும் விரைவிலே கல்யாணமுன்னு, அதை கேள்விப்பட்டு கோபப்பட்டு ஓநாய் வீட்டுக்கு போக முயல,தடுத்து நிறுத்த நாயகி "எனக்கு முத்தம் கொடுன்னு சொல்லுவாங்க. அம்புட்டு நேரம் கொலைவெறி கோவத்திலே இருந்தவரு, நம்ம ஊரிலே நொங்கு சாப்பிடுற மாதிரி நாயகி வாயிலே உறிஞ்சி குடிப்பாரு,நொங்கு திங்கும் முன்னாடியே நாயா பேயா அலைந்தவர், இனிமேல எப்படி கோவம் வரும்,நாய் குட்டி மாதிரி நாயகி பின்னாடி வந்துடுவாரு.நொங்கை சாப்பிட்டிட்டு மறுபடியும் களத்திலே இறங்கிடுவாரு. இறுதியிலே உள்ளூர் காட்டேரிகளும், ஓநாய்களும் சேர்ந்து புதுசா வந்த காட்டேரிகளை அடித்து விரட்டி விடும். 

கடைசியிலே நாயகி கையிலே காட்டேரி கல்யாணத்துக்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை போடுவாருன்னு, போட்ட உடனே இடைவேளைன்னு நினைச்சேன், ஆனா படமே முடிஞ்சி போச்சி, அடுத்த பாகத்திலே மிச்ச கதை வரும் போல தெரியுது. 
   


Wednesday, July 7, 2010

Fetna 2010 நினைவலைகள்


அமெரிக்கா வந்து பல வருடங்கள் எல்லாம் ஆகலை, இருந்தாலும் எங்க ஊரு பக்கம் நடக்கிற தமிழ் விழாக்களுக்கு எல்லாம் போனதில்லை, ஏன்னா நான் பக்கா தமிழன், இப்படி தமிழ் விழாக்களுக்கு போகாமலே கடை நடத்திகிட்டு இருக்கியே நீ ஒரு தமிழனான்னு அப்படின்னு ஒரு கேள்வி மனசிலே, ஆனா விடை கிடைக்கலையேன்னு ரெம்ப அவமானமா போச்சி, இப்படியா கவலையிலே இருக்கும் போது, பிரபல பதிவர் மனிஷ் அதாங்க பழமைபேசி அண்ணன், இந்த வருடம்(2010) Fetna தமிழ் திருவிழா நான் தங்கி இருக்கிற இடத்துக்கு பக்கத்திலே நடக்கிறதா சொன்னாரு.  உடனே மனக்குறையைப் போக்க ஒரு நல்ல வழி வந்து விட்டதுன்னு அண்ணன்கிட்ட துண்டு போட்டு சத்தியம் பண்ணினேன் கண்டிப்பா வருவேன்னு சொல்லிட்டேன். 

என்னையப் பத்தி முன்னாடியே அவருக்கு தெரியுமோ என்னவோ, நான் வாக்கு கொடுத்தா எல்லாம் வரமாட்டேன்னு தெரிஞ்சி என்னையை இலக்கிய வினாடி வினாவிலே கோத்து விட்டுட்டாரு. இதைப் பத்தி வரும் இடுகைக்கள்ள மொக்கை அடிக்கலாம் இப்ப மத்த விசயத்தைப் பார்க்கலாம்.

கடந்த(ஜூலை,2,2010௦) வெள்ளி இரவு பொட்டிய கட்டிக்கிட்டு கல்லூரியிலே என்னோட குப்பை கொட்டிய நண்பன் வீட்டுக்கு போனேன், அங்கு இருந்து விழா நடக்கும் வாட்டர்பெரி 50 மைல் தொலைவிலே இருக்கிறது. எங்களோட வீணாப்போன கல்லூரி குழுவிலே முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்று இருந்தாலும் கடைசியா அமெரிக்கா வந்தது நான் தான், ஆனா என்னோட நண்பன் 25 அரியர்ஸ் வைத்து இருந்தாலும், அவன் தான் முதல்ல அமெரிக்கா வந்தான். இப்படிப் பல வரலாற்று பின்னணி கொண்ட என்னோட பயணத்திலே விழாவும் ஒரு மைல் கல். இரவு நண்பன் வீட்டிலே தங்கி விட்டு உலகக் கதை, உள்ளூர் கதை எல்லாம் பேசாம என்ன நோக்கத்துக்கு அவன் வீட்டுக்கு போனேனோ அதை சிறப்பாக கொண்டாடினோம். 

அடுத்த நாள் அதாவது(ஜூலை 3,2010) அதிகாலை 8 மணிக்கு எழுந்து கிளம்பி GPS ல விலாசம் போட்டுட்டு  கிளம்பினேன், அரை மணி நேரம் காரை ஓட்டினேன், வண்டி போன போக்கிலே சில இடங்களில் எனக்கு சந்தேகம் வந்தது சரியான விலாசக்கு தான் போறாமான்னு, ஒரு வழியா போய் சேர்ந்தேன், GPS சொன்ன விலாசமான வாட்டர்பெரியைச் சேர்ந்தேன், போன உடனே வண்டியை ஓரமா நிறுத்தி விட்டு மணி அண்ணன் அலைபேசி யை தொடர்பு கொண்டேன், அவரு எடுக்கவே இல்லை, வழக்கமா நான் தான் நண்பர்கள் என்னோட எண்ணுக்கு அழைப்பு விடுத்தா எடுக்கிறதே இல்லை, நாலைந்து தடவை முயற்சி செய்து விட்டு, என்ன செய்யலாமுன்னு யோசித்து கிட்டு இருந்தேன். பிரபல பதிவர் இளா ஞாபகம் வந்தது, அவரோட எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். அவரு எடுத்தார் அவரிடம் வண்டியை எங்கே விட வேண்டும் என்று கேட்டேன், அவரு நேரா போய், இடது பக்கம் திரும்பி அப்புறம் வலது பக்கம் திரும்பினா வண்டியை நிறுத்த இடம் கிடைக்குமுன்னு சொன்னாரு.

நான் அவரிடம் நீங்க வழி காட்டுறது ஒண்ணுமே விளங்கலை பேசமா நீங்க வாங்க வெளியிலே, ரெண்டு பெரும் போயிட்டு வந்திடலாமுன்னு சொன்னேன். அவரு வெளியே வந்து, என்னோட காரிலே ஏறி காரை நிறுத்திவிட்டு Fetna விழா நடைபெற்ற அரங்க முகப்பு வந்தோம்.அரண்மனை
அரங்கம்(palace theater) முகப்பிலே அரண்மனை மாதிரி தெரியலை.

இருவரும் முகப்பை கடந்து உள்ளே சென்று, வரவேற்பு அறையிலே நான் விழாவுக்கு முன்பதிவு செய்து வைத்து இருந்த விவரம் சொல்லி, என்னோட 
நுழைவு சீட்டை வாங்கி கொண்டேன்.

முகப்பிலே சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு உள்ளே சொல்ல முயலும் போது வெளியே இருந்து வந்த பிரபல பதிவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன், அவர் அருகிலே வரும் வரை காத்து இருந்து அவரைக் ௬ப்பிட்டேன்,

அவர் யார்?  அடுத்த பாகத்திலே 

விழா அரங்கின் முகப்பு படங்கள்


















Friday, July 2, 2010

அழகிப் போட்டி குறிப்புகள்



பொறுப்பு அறிவித்தல் :அழகிப்போட்டியிலே கலந்து கொள்ள குறிப்பு கேட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்ட விளக்கம்,உரையாடலில் கலந்து கொண்ட நபர்கள் விவரம் தெரியலை, 
அதனாலே ஆட்டோ அனுப்ப முடியவில்லை

"அழகிப் போட்டி என்பது அழகுக்கும், அறிவுக்கு சேர்த்தே வைக்கும் போட்டி, அதிலே கேள்வி பதில் பிரிவு ரெம்ப முக்கியம், அவங்க கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் முக்கியம்"

"நான் அழகிப் போட்டிக்கு போறேனா பரிச்சை எழுதப் போறேனா?"

"ரெண்டும் ஒண்ணுதான்,உலக வறுமை ஒழிக்க என்ன செய்யணும், உலக சமாதானத்துக்கு என்ன செய்யணும், புவி வெப்பமாவதை தடுப்பது எப்படின்னு 
கேள்விகள் வரும்"

"நிப்பாட்டு.. நிப்பாட்டு.. அழகிப் போட்டிக்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம், ஒவ்வொரு நாட்டோட தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, தையல்காரர் தைக்க முடியாம கிழிச்சி கொடுத்த உடுப்புகளைப் போட்டு உலாவருகிற எங்க கிட்ட கேட்டு என்ன பயன், இல்ல நாங்க பதில் சொன்ன உடனே எல்லோரும் சொம்பை எடுத்துகிட்டு வந்து தண்ணி ஊத்துவாங்களா?"

"நீ இப்படி எல்லாம் பேசின உன்னை உள்ளூர் கிழவி பட்டம் ௬ட கிடைக்காது" 

"சரி சாமி, நான் இனிமேல பேசலை, நீ என்ன சொல்லுறியே கேட்டுக்கிறேன்,கேள்வி பதில் படிக்கலாம், வேற என்ன விஷயம் இருக்கு"
  
"அழகிப் போட்டியிலே முக்கியமா விஷயம், பூனை நடை"

"அது என்ன பூனை நடை?"

"இப்படி நான் நடக்கிற மாதிரியே நடக்கணும்"

"தண்ணியை போட்டுட்டு நடக்கிறவன் மாதிரி நடந்தா, அது பூனை நடையா?"

"ஆமா.. ஆமா,அவன் தள்ளாடுறது கோப்பையை கவுத்ததுக்கு, நீ தள்ளாடுறது கோப்பையை வாங்குறதுக்கு(ச்சோ.. ச்ச்சோ.. ச்ச்சோ..),இன்னொரு முக்கியமா விஷயம், போட்டியிலே ஜெயித்து வெற்றி பெற்ற உடனே செய்ய வேண்டியது"

"ஜெயிச்சா, பதக்கத்தையும், ரூபாயையும் வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ண 
வேண்டியது தான்"

"அதில்லை பக்கி, இந்த காணொளிகளைப் பாரு" ஒவ்வொரு காணோளிகளைப் பார்த்து விட்டு 

"ஏண்டா, இந்த புள்ளிகள் எல்லாம் இப்படி அழுவுதுங்க"

"ஜெயிச்ச சந்தோசம்" 

"அவங்க அப்பன், ஆத்தா செத்த அன்னைக்கு ௬ட இப்படி அழுவாதுங்க போல தெரியுது" 

"அழகிப் போட்டின்னா சும்மாவா, நீயும் ஜெயிச்ச உடனே ரெண்டு கையையும் எடுத்து வாயிலே வச்சிக்கணும், கையிலே தடவி இருந்த கிளிசரினை கண்ணு கிட்ட கொண்டு போயிட்டு, கண்ணீர் பிதுங்கணும், அப்படியே நீ வைக்கிற ஒப்பாரியிலே, அரங்கமே சோக மழையிலே நனையனும், உன்னோட திறமையைப் பார்த்து வடக்கூர்காரன் உடனே படத்திலே நடிக்க ௬ப்பிடுவான்"  

"நான் ஒரு மாறுதலுக்காக குலவை விடவா?"

"நீ குலவை விட்டாலும், கும்மி அடிச்சாலும், அழுறது மட்டும் தத்துருவமா 
இருக்கணும்"

"இன்னொரு விஷயம் நான் வடக்கூர்காரன் படத்திலே எல்லாம் நடிக்க மாட்டேன், தமிழ் படத்திலே மட்டும் தான் நடிப்பேன், தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன்"

"அது உன் இஷ்டம் தாயீ, தனி மனிசி உரிமையிலே நான் தலையிடமாட்டேன்.அதுமட்டுமில்லை, உன் பேரை அறிவித்த உடனே கை, காலை உதைந்து "ஆஆஆஆஆ ஓஓஓஓ" அலைப்பறையா அலறணும், பக்கத்திலே இருக்கிறவன் காது செவுடு ஆகிற மாதிரி கத்தனும்,ஜெர்மன், பிரெஞ்சு மொழியிலே "ஐ லவ் இந்தியா" லவ் யூ மாமி, லவ் யூ தாடி" ன்னு 
சொல்லணும்"

"அங்கிட்டு ஒரு குத்தாட்டமா?"

"அதெல்லாம் நீ சினிமா நடிகை ஆனா உடனே,சேவைன்ன உடனே தான் ஞாபகம் வருது, உன்னைய எங்க அலுவகத்துக்கு பிரதிநிதியா நீங்க இருக்கனுமுன்னு பல பன்னாட்டு நிறுவனங்கள் கெஞ்சுவாங்க, ஆனா நீ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, கள்ளச்சாராயம் ஒழிப்பு அப்படின்னு தேர்ந்து எடுக்கணும்"

"ஏன் இதுக்கு முன்னாடி, யாரும் அதை எல்லாம் எடுத்தது கிடையாதா?"

"எடுத்து இருக்காங்க"

"அப்புறம் ஏன் இன்னும் அது ஒழியலை"

"அதெல்லாம் மீட்டர் ஒடுவதுக்கு தான், போட்டியிலே கொடுத்த பித்தளை கம்பியை தலையிலே மாட்டிகிட்டு புகைப் படத்துக்கு நின்னா மட்டும் போதும்"

"ஜெயிச்ச உடனே நீ உலக சுற்றுலாக்கு போகணும், ஆப்ப்ரிக்கவிலே உகாண்டா,போண்டா அப்படின்னு ஒரு நாட்டை தெரிந்து எடுத்துகிட்டு அங்க உள்ள வறுமையை ஒழிக்கனுமுன்னு, நீ ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல  இறைச்சி பிரியாணி சாப்பிட்டுகிட்டே சொல்லணும்"

"ஏன் நம்ம ஊரிலே வறுமையே இல்லையே, இங்க என்ன பணம் செழித்து கிடக்கோ" 

"அட பக்கி .. பக்கி, நம்ம ஒரு ஏழை நாடுன்னு வெளியே சொல்ல௬டாது"  

"ஒ.. குடிக்கிறது ௬ழா இருந்தாலும், கொப்பிளிக்கிறது பன்னீர் மாதிரி இருக்கணும்னு சொல்லுற, வெற்றி பெறுவதை விட ரெம்ப கஷ்டமா இருக்கும் 
போல "

"போட்டி நடக்கும் போது யாராவது தப்பி தவறி ௬ட கறுப்புன்னு சொல்லிட்டா, நிறவெறியை தூண்டி விடுறான்னு கொலைவெறியா அறிக்கை விடனும்" 

"நான் ஒன்னும் அம்புட்டு சிகப்பு இல்லையே, கறுப்பை கறுப்புன்னு சொல்லாம வேற எப்படி சொல்லமுடியும்?"

"விவரம் தெரியாமா பேசாதே, நீ மட்டும் அப்படி அறிக்கை விட்டா, உலக நாடுகள் உனக்காக பரிந்து பேசுவாங்க, போட்டியே இல்லாம உனக்கு கோப்பையை கொடுத்திடுவாங்க"

"அப்படியா!!!"

"ஆமா.. ஆமா"

"சொல்லவேண்டியது இவ்வளவு தானா இன்னும் ஏதும் இருக்கா?"

"இருக்கு இனிமேல தான், உலக அழகிப் போட்டுக்கு அறிவிப்பு வரும்"

"அதுவரைக்கும் நான் என்ன செய்ய?"

"கனவு தான்"

"உன் கனவிலே வாரதை எல்லாம் சொல்லிட்டு என்னை கனவு காணச் 
சொல்லுகிறாயா?"

.......................

................................


Thursday, July 1, 2010

ஒரு தலைக் காதலன் கடத்தல்

"என்னைய கடத்தல் காரி ஆக்கி விட்டானே படு பாவி பய" என்று சொல்லும் போது எதிர் முனையிலே கேட்டுக் கொண்டு இருந்தவன் உள்ளம் உடைந்தே விட்டது, கடத்தலிலே பத்து சதவீதம் பணம் தள்ளுபடி பண்ண வேண்டும் என்று மனதிலே நினைத்துக் கொண்டான், இன்னும் அவள் அழுவதை கேட்டுக் கொண்டு இருந்தால் காசு வாங்க முடியாத நிலை ஆகி விடும் என்பதாலே, வளவளத்தாவிடம்

"அழுவாதீங்க அக்கா, நீங்க சீக்கிரம் வாங்க, நாம நேரிலே பேசிக்கொள்ளலாம்"

வளவளத்தாவின் கண்ணீருக்கு காரணம் என்ன கொண்டவனா, இல்லை மனதை கொள்ளை கொண்டவனா? இனி பார்ப்போம். 

அலைபேசியை வைத்து விட்டு அடுத்த அரைமணி நேரத்திலே வளவளத்தா ஊருக்கு ஒதுக்கு புறமா இருந்த பாழடைந்த மண்டபம் வந்து இறங்கினாள். இரவு எட்டுமணி நல்ல கும் இருட்டாக இருந்தாலும், வளவளத்தாவுக்கு காத்து கருப்பு பயமே இல்லை, ஏன்னா பார்க்கிற எல்லோரும் அவளை கொஞ்சம் வடிவுன்னு நினைச்சாலும், அவள் எப்போதுமே கருப்பு அடிச்ச காத்து மாதிரி இருக்கிறதா நினைத்து கொள்வதாலே, அவளுக்கு பயம் இல்லை.

வளவளத்தைவை வரவேற்க சிகப்பு கம்பளம் இல்லைனாலும், சிகப்பு சட்டை போட்ட கடத்தல் ஆசாமி அழைத்து சென்றான், உள்ளே சென்றதும், பச்ச சட்டை, மஞ்ச சட்டை ஆசாமிகள் வணக்கம் வைத்தார்கள்.

"அவனை எங்கே"

"யக்கா, நாங்க இப்பத்தான் நாலு சாத்து சாத்தி, அவனை எழுப்பி விட்டு இருக்கோம், சரியான தூங்கு மூஞ்சியா இருப்பான் போல, கடத்தின கவலையே இல்லாம தூங்குறான்"

நேராக அவன் இருந்த அறைக்கு சென்றார்கள்.அறையிலே இருந்தவன் வளவளத்தாவைப் பார்த்ததும்.

"வா வளவள இப்பத்தான் வாரியா?"

"என்ன வளவள ?"

"இப்பத்தான் வடிவேலு நகைச்சுவை காட்சி பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு!!"

"அதிகமா பேசினே குடலை உருவி மாலையாய் போட்டுக்குவேன்"

உடனே மஞ்ச சட்டை "வளவளத்தாக்கா நீங்க கிட்னியை எடுக்கணுமுன்னு சொன்னீங்க, இப்ப குடலையும் எடுக்க சொல்லுறீங்க, குடல் எங்க இருக்கு?"

பதிலுக்கு பச்சை சட்டை "கிட்னி எடுக்க போற வழியிலே தான் இருக்குடா?"

"அப்ப சரி" என்று மஞ்ச சட்டை 

பச்சை சட்டை தலையை பிடித்துக் கொண்டு "வளவளத்தாக்கா என் பொழைப்பிலே மண் அள்ளிப் போடுறீங்க"

"என்னடா சொல்லுற!!!!"

"உங்க கல்யாண மாலை எல்லாம் என்கிட்டே இருந்து தான் வாங்குவேன்னு சொன்னீங்க, உங்க கல்யாணத்திலே குடல்ல மாலை போட்டா, என் மாலையை என்ன செய்ய"

"பச்ச மாலையை பத்தி அப்புறமா பேசி முடிவு எடுக்கலாம், முதல்ல இந்த ஆசாமியைக் கவனிக்கலாம்"

சொல்லிட்டு அறையிலே இருந்தவனிடம் "உலக அழகா,நான் உனக்கு எழுதின காதல் 
கடிதங்களைஎல்லாம் கொடுன்னு எத்தனை தடவை சொல்லுறது,மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டுப் பார்த்தேன், அதான் இப்ப உன்னை மலை ஏத்திட்டேன்" 

"யக்கா இவனுக்கு போடுற ரெண்டு மாலைக்கும் சேத்து கணக்கு வச்சிக்கலாம்"

"வளவளத்தா நீ எவ்வளவு காதல் கடிதம் எழுதி இருக்கிறாய் உனக்கு கண்டிப்பா தெரிய வாய்ப்பு இல்லை, எனக்கு தெரியும், ஒரு லட்சத்தி முப்பத்தி மூணு ஆயிரம் கடிதங்கள் எழுதி இருக்கிறாய், அதை எல்லாம் கையிலே எடுத்திட்டு வர முடியாதது, ஆட்டோ அனுப்பி விடுன்னு சொல்லி நான் எத்தனை தடவை சொல்லுவது"

"உன்னையை ஆட்டோவிலே அள்ளிப் போடும் போதே சொல்லி இருந்தா, கடிதத்தையும் சேத்து அள்ளிக் போட்டு இருப்பாங்களே?" 

"என்னைய சுமோவிலே அள்ளிப் போட்டுட்டு வந்தாங்க"

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த பச்ச சட்டை "ஒ" ன்னு கதறி அழுறாரு, சுத்தி நின்னவங்களுக்கு என்ன எதுன்னு புரியலை, உடனே வளவளத்தா அவரிடம்

"இப்ப ஏன் ஒப்பாரி வைக்குற?"

"இது கண்ணீர் இல்லை கடத்தல் கண்ணீர், லட்சம் காதல் கடிதம் வந்த ஒருத்தரை கடத்திட்டு வந்து இருக்கேன்னு நினைச்சி ரெம்ப பெருமையா இருக்கு,யக்கா உடம்பிலே இருக்கிற எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாலும், அவர் கை விரலை மட்டும் விட்டு வையங்க ஆட்டோ கிராப் வாங்கணும்"

"பச்ச சட்டை அண்ணே உங்க ஆதரவுக்கு நன்றி, வளவளத்தா கிட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க, அதுக்கு பின்னால நீங்க என்னைய உங்க இஷ்டபடி செய்யுங்க"

"யக்கா, சாகப் போறவன் கடைசி ஆசை, என்னன்னு தான் கேளேன்"

"ஹும் .. கேட்டு தொலை"

"நீ எனக்கு ஒரு லட்சம் காதல் கடிதம் எழுதி இருக்க, நான் உனக்கு எத்தனை கடிதம் எழுதி இருக்கேன்"

"ஏலேய் வெண்ணை .. எழுதின உனக்கு தெரியலைன்னு, எங்க அக்காட்ட கணக்கு கேட்குறியோ?"

"எனக்கு தெரிஞ்ச வரை, நான் அவளுக்கு ஒரு காதல் கடிதமும் எழுதலை, அதான் கேட்கிறேன்"

பச்ச சட்டை, மஞ்ச சட்டை, சிகப்பு சட்டை முன்று பேரும் சேர்ந்து 

"அப்படியா"

"எப்படி நான் பதில் போட முடியும், ஒரு கடிதம் எழுதி கொடுத்திட்டு, அதுக்கு பதில் கடிதமா நாலு கடிதம் அவளே எழுதி கொடுத்துக்குவா,என்னோட கடிதத்துக்கு இப்படி பதில் எழுதுவியா .. 
இப்படி பத்தி எழுதுவியா ன்னு சொல்லியே நாலு கடிதம் கொடுப்பா ?,அதுக்குள்ளே ஒரு வாரம் முடிந்து விடும், அடுத்த காதல் கடிதம் எழுதி மறுபடியும் காதல் கடித வாழ்க்கை சுழற்சி 
முறையிலே வரும்,இதெல்லாம் உண்மையான்னு கேளுங்க"

பச்ச சட்டை, மஞ்ச சட்டை, சிகப்பு சட்டை முன்று பேரும் சேர்ந்து 

"என்ன ஒரு லட்சம் கடிதம் எழுதியும், பதில் கடிதம் எழுதாம இருக்கியா?, வளவளத்தக்கா இது கண்டிப்பா ஒரு தலைக் காதல் தான்,இனிமேலயும் இவனை விட்டு வைக்கக்௬டாது"

"நீ ஒரு லட்சம் கடிதம் எழுதிகிட்டே இருந்ததாலே, கிளிக்கு இன்னும் ரெக்கை முளைக்கலை, என்னோட தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு சும்மா இருந்தேன், ஆனா ஒரு வாரமா கடிதம் இல்லாததாலே கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டதொன்னு சந்தேகத்திலே நான் நேத்து ஒரு கடிதம் எழுதினேன், ஆனா இன்னைக்கு என்னை கடத்திட்டே,இந்தா நான் எழுதிய கடிதம்."

கடித்தைதை வாங்கி வளவளத்தா 

தாமதமா 
வந்த 
உன் 
கடிதத்தை 
என்ன செய்ய ?

"வளவள நீ வரி வரியா சொல்லுறதைப் பார்த்தால் கவிதை மாதிரி இருக்கு!!!"

"பச்ச,மஞ்ச சிகப்பு ஆட்டம் முடிஞ்சு போச்சி நீங்க போகலாம்,நான் இவன்கிட்ட 
கொஞ்சம் தனியா பேசணும்"

"நாங்க வெளியே இருக்கவா?"

"இல்ல வீட்டுக்கு போங்க"


"வளவள என்மேல கோபமா?"

"ஹும்.."

"சரி வா,அமெரிக்காவிலே போய் கனவுப் பாட்டு பாடுவோம்"