Thursday, October 28, 2010

பாட்டு படும் பாடு

இசைஅமைப்பாளர் பாடல் ஆசிரியருக்கும், இயக்குனருக்கும் காத்து கொண்டு இருந்த நேரத்திலே பக்கத்து தெருவிலே இருந்து வந்த காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னு பாட்டு இசை அமைப்பாளரை கொஞ்சம் இம்சை படுத்தியது, இந்த இம்சைகளுக்கிடையே வெளியே அழைப்புமணியும் ஒலித்தது, வெளியே சென்று கதவைத் திறந்ததும், தயாரிப்பாளர் நின்று கொண்டு இருந்தார்.

என்னதான் படி அளக்குற பகவானா இருந்தாலும், இந்த நேரத்திலே இவர் எப்படி வந்தாருன்னு யோசிக்கும் போதே அவரை தாண்டி உள்ளே போய் விட்டார். அடுத்த ஐந்து நிமிசத்திலே இயக்குனரும், பாடல் ஆசிரியரும் வர எல்லோரும் தரையிலே உட்கார்ந்து தீவிர சிந்தனையிலே ஆழ்ந்தனர். அரை மணி நேர மயான அமைதிக்கு பிறகு, 

இசை அமைப்பாளர் "ஐயா படம் மண்ணை கவ்விரிச்சா, நீங்க யோசிக்கிறதைப் பார்த்தா ஆட்டையை கலைக்கலாமா?"

"உடனே இயக்குனர் பாடல் சூழ்நிலைய சொல்லமுடியாத சோகம்,அதை எப்படி சொல்லன்னு தெரியலை"

"சொல்லாம எப்படி பாட்டு எழுத?" என்றார் பாடல் ஆசிரியர்.

"மனசை கல்லாக்கிட்டு சொல்லுங்க இயக்குனரே" என்று தயாரிப்பாளர் சொன்னதும்.

"நாயகன் நாயகிக்கு அலைப்பேசி, கைப்பேசி இப்படி பல பேசிகளை வைத்து பேச முயற்சி செய்யுறாரு, ஆனா முடியலை, அவ வீட்டுக்கு போய் பார்த்தாலும் வீடு பூட்டி இருக்கு, அவனுக்கு உலகமே இருண்ட மாதிரி ஒரு உணர்வு, உட்கார முடியலை, ஒவ்வொரு நொடியும், இடி மாதிரி மனசிலே விழுது"

"இந்த பொழைப்புக்கு நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்" என்ற தயாரிப்பாளரிடம், படம் வெளி வந்த உடனே நிச்சயம் நடக்கும் உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியானார்.

பேனாவை எடுத்துகொண்டு ஓரமா போய் உட்கார்ந்த பாடல் ஆசிரியர் அரை மணி நேரம் மண்டையிலே அடிச்சி,முடியப் பிடிச்சி ஒரு ரெண்டு வரி எழுதி படிச்சாரு 

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ௦ஓஒ

"ஒ விலே ரெண்டு வரியா,அதும் வரி வரியா, அருமை,அற்புதம், பிரமாதம், கலக்கல்" 
என்று அள்ளிப் போடுறாரு துண்டு போடப் போகும் தயாரிப்பாளர்.

"நாயகன் முதல்ல ஒப்பாரி வைக்குறாரு, அடுத்த ரெண்டு வரியிலே கடப்பாரைய  வைக்குறாரு" என்று பாடல் ஆசிரியர் பதில் சொல்லுறாரு.

அலைபேசியிலே உன் எண்ணை 
அழைத்து அழைத்து
எண்கள் அழிஞ்சி போச்சி,
அதை பார்த்து பார்த்து 
என் கண்கள் அவிஞ்சி போச்சி

"அவிஞ்சி போச்சி...அவிஞ்சி போச்சி.. ன்னு நாலு தரம் ஓட விடாலாம், அப்பத்தான் ரசிகர்கள் மனசிலே நிக்கும்" என்று இசை அமைப்பாளரும் ஒத்து ஊத

"இன்னும் கொஞ்சம் கனமா இருந்தா நல்லா இருக்கும் என்று இயக்குனர் சொன்னதும், அடுத்த ஒரு மணி நேரம் கழித்து

துருப்பிடிச்ச உன் இதயத்துக்கு
இன்னும் வண்ணம் அடிக்கலையா
உன் தங்க மனசு செம்பு சேர்க்காம
கட்டியா இருக்கா

அருமை, அட்டகாசம், பின்னீட்டீங்க, கலக்கல்னு மறுபடியும் தயாரிப்பாளர் சொன்னதும், அனைவரும் வேற வழி இல்லாம ஆமோத்தித்தனர்.

இசைஅமைப்பாளர் உடனே "பாட்டு மரபுக் கவிதை மாதிரி இருக்கு,மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே புரியும்,கொஞ்சம் விளக்கம் கொடுத்தா கும்மி அடிக்க நல்லா இருக்கும்.உடனே எழுதின வரிக்கு பாடல் ஆசிரியர் விளக்கம் கொடுக்குறாரு

"நல்லதண்ணி குழாயிலே இருந்து இரும்பு துரு பிடிச்சு உடைஞ்ச மாதிரி, காதலி மனசும் உடைஞ்சி போச்சா, அவ தங்கமா இருந்தாலும், செம்பு கிடைக்காம உருகாம இருக்கியோன்னு கேள்வி கேட்காரு"

இப்பத்தான் கொஞ்சம் புரியுது, நீங்க அடுத்த வரியை சொல்லுங்க.உடனே தயாரிப்பாளர் ஒரு சீட்டை கொடுத்து இந்த ரெண்டு வரி இலவச இணைப்பா சேருமான்னு சொல்லுங்க, 
படிச்சிட்டு எல்லோரும் இப்ப சேராது, இன்னும் கொஞ்சம் போகட்டும்.

என்ன வரி எழுத 
எப்படி எழுத 

சூப்பர் ..சூப்பர் இந்த முறையும் தயாரிப்பாளர் தான், உடனே பாடல் ஆசிரியர் ஐயா நான் பாடல் வரியை சொல்லவே இல்லை

மன்னிக்கணும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன்.

இப்ப சொல்லுறேன் கேட்டுகோங்க 

உன் அலைபேசி
வேலை செய்யலைன்னு 
அலைபேசி செஞ்ச 
அலுவலத்துக்கே போய் விசாரித்தேன்
உன் வீடு பூட்டி இருக்குன்னு 
பூட்டு செஞ்ச 
அலுவலத்துக்கே போய் விசாரித்தேன்
நீ வைச்சிருக்க எல்லாத்தையும் விசாரிக்கேன் 
ஆனா உன்னைய மட்டும் விசாரிக்க முடியலை 

அருமை ... அருமை .. பூட்டு அலுவலகம் ஜப்பான், அலைபேசி அலுவலகம் அமெரிக்கா, அங்க போய் விசாரிக்கிற மாதிரி படம் பிடிக்கலாம், நான் நாளைக்கே போய் கடவுச் சீட்டு விண்ணப்பிச்சிட்டு வந்திடுறேன் என்றார் இயக்குனர்.மறுபடியும் தயாரிப்பாளர் அவரோட ரெண்டு வரியைக் காட்டி இதை சேக்க முடியுமா என்று கேட்க, இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

உன் தெருவிலே இருக்கிற நாய் 
என்னை கருணை கண்ணுல பாக்குது
ஆனா உன் கண்ணிலே 
கருணையும் இல்லை
காதலுமில்லை  

இங்க "இல்ல .. இல்ல" ன்னு நாலு தடவை சொல்லணும் என்று இசை அமைப்பாளர் சொன்னதும்,"அப்பத்தான் பார்க்கிறவங்க நான் இல்ல ... நான் இல்ல" ன்னு திரைஅரங்கை விட்டு 
ஓடுவாங்க என்றார் தயாரிப்பாளர்.

"இப்பவாது இந்த வரியை சேர்ப்பீங்களா?" 

கொஞ்சம் வாசித்து காட்டுங்க 

வாதியா .. வாதியா நீ 
பெண்ணாதிக்கவாதியா 

ரெண்டு வரியையும் கேட்டதும் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி அரை மணி நேரம் அமைதியாகிட்டாங்க, அப்புறமா இயக்குனர், ரெம்ப நாளா சந்தேகப் பட்டேன், நீங்க ஒரு பதிவருன்னு,இப்ப உண்மை தெரிஞ்சி போச்சி, இப்படி எல்லாம் எழுதினா தாய்குலங்கள் ஆதரவு கிடைக்காது.

"வரிய சேக்கலைன்னா, உங்களுக்கு பேட்டா கிடைக்காது"

இசை அமைப்பாளர், இயக்குனரிடம் பாட்டை இந்திகாரங்களை வச்சி பாட  சொன்னா 

வாத்தியா.. வாத்தியா.. நீ
புண்ணாக்கு வாத்தியான்னு படிப்பாங்க யாருக்குமே புரியாது 

"ம்ம்ம்" என்ற இயக்குனருக்கு பதிலாக 

"நானும் உண்மைய தெரிஞ்சிகிட்டேன்"

"என்னன்னு" 

"நீங்களும் ஒரு பதிவர்னு"

"ம்ம்ம்" 
 


Tuesday, October 26, 2010

இலக்கிய விவரிப்புகள்

காலைப் பொழுதுகள் எப்போதுமே கண்ணுக்கு சரக்கு அடிக்காத விருந்தா இருக்கும், இரவு சரக்கு அடிச்சிட்டு பகல் முழுவதும் பனிக்கரடி மாதிரி துங்குறவங்களுக்கு இதை ரசிக்கும் பாக்கியம் மிக குறைவுதான். காலை பொழுதை கடல் கரையிலே கடலையை திண்ணுகிட்டோ, கடலை போட்டுகிட்டோ ரசிக்கனுமுன்னு ஆசைதான், இருந்தாலும் எங்க ஊரிலே கடலும் இல்லை, கடலை போட ஆளும் இல்லை.அதாவது சட்டியும் இல்லை, ஆப்பையும் இல்லை.  இருந்தாலும் அதிகாலையிலே எழுந்து சட்டையைப் போட்டுட்டு, பல்லு ௬ட விளக்காம, கையிலே ஒரு நோட்டு புத்தகத்தையும், பேனாவையும் எடுத்துகிட்டு வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற சொல்லே எனக்கு பிடிக்காமல், கிழக்காம போனேன்.   


என்னை காலையிலே எழவு வீட்டு ௬ப்பாடு போட்டு எழுப்பி விட்ட சேவல் எதுவாக இருக்கும், ஆட்டையப் போட்டு குழம்பு வச்சா எப்படி இருக்கும் என்று சமூக நெறி யோசனையோட இலக்கியப் பயணத்தை தொடர்ந்தேன். போகும் வழி எல்லாம் பச்சை நிற புற்கள் எல்லாம் புல் அடிக்காம, மப்பிலே மண்டையை கீழே போட்டு கொண்டு இருந்தது,  இப்படி எல்லாம் வித்தியாசமா வர்ணனை செய்யணுமுன்னு ஆசைதான், என்ன செய்ய ஊருக்குள்ளே மழை வந்து ஆறு வருஷம் ஆச்சி, கண்ணுக்கு எட்டின தூரம் வரை மரமே இல்லாத போது புல் எப்படி இருக்கும், நான் புல்லா நினச்ச இடம் எல்லாம் புழுதியா இருக்கு, இந்த புழுதியிலே கால் வைத்தா என் கால் அழுக்காகுமுன்னு நிக்கலை.பாவம் தரைக்கு வலிக்குமே என்று ஒத்தை காலை வைக்கவா வேண்டாமா என்று அதிதீவிர சிந்தனையிலே இருக்கும் போது, அந்த வழியா வந்த நிலத்தை உழ வந்த விவசாயி 


"தம்பி என்ன சீக்கு வந்த கோழி மாதிரி ஒத்தை காலை ஆட்டுவீங்க" என்றவரை கோபக்கனல் பார்வையை வீசிய என்னைப் பார்த்து "முகத்துக்கும் முடிக்கும் வித்தியாசம் தெரியாம  முஞ்சை மறைச்சிகிட்டு இருக்கிற அந்த கோரப் புல் முடியை என் அருவாளை வச்சி அறுக்கவா" என்று கேட்ட கேள்வியிலே காலை பின்னங்கால் பிடதிவரை தெறிக்க புழுதியிலே உழுதுகொண்டே ஓடினேன்.

பொழுதிலே புழுதியை உழ நீ 
பொழுதிலே பொழுது போகாமல் 
மனப் புழுதியை உழ நான் 
உனக்கு கோவணமும்
எனக்கு கோவமும் தான் மிச்சம் 

என்று கவுஜை காட்டாற்று வெள்ளம் போல வருகிறது என்று அவரிடம் சொல்லி இருந்தால், எனக்கு செலவில்லாமல் சமாதி கட்டி இருப்பார் என்று தெரியும். 

இந்த கவுஜை ஓடையிலே நனைந்து,நான் தினமும் அமர்ந்து கற்பனை கழுதைகளைப் பறக்க விடும் இளவட்டக் கல்லிலே காலை வைத்தேன், மேல் வாட்டை பார்த்து நாடியை பிடித்துக்கொண்டு சூரியனைப் பார்த்து முறைத்துக் கொண்டு வைட்டமின் டி யை டீ குடிக்காமல் வாங்கிகொண்டு இருந்தேன்.இந்த டீ யை அதிகமாக குடித்ததினாலோ என்னவோ மாநிறமாக இருந்த நான், எருமை நிறமாக மாறிவிட்டேன் என்ற உண்மையை பகிரங்கமா ஒத்துகொள்ள ஆசைப்படுகிறேன். 


காலை வெயில் உடம்புக்கும், காலை கற்பனை மனதுக்கும் நல்லது என்பது  தமிழ் கூறும் நல்லொழுக்கம் என்று அறிந்த நான் என் கற்பனை கழுதைகளை அச்சிலே ஏற்ற வேண்டும் என்று, என் எழுதாத பக்கங்களுக்கு வர்ணமாய் என் கற்பனை கழுதைகளை முத்தமிட வைக்க வேண்டும் என்று பேனாவை எடுத்தேன். மேல சொன்னதை வரி வரியாக எழுதி இருந்தால் கவுஜை ஆகி இருக்கும் என்ற சூத்திரம் தெரியாமலே ஒரு தாளை  கிழித்து கீழே போட்டேன்.    

அந்த வழியே வந்த நல்லவர் ஒருவர் 

"ஏலே எருவ மாட்டுப் பயலே, நீ கிழிச்சி போடுற தாளை தின்னு என் எருமைக்கு வயத்தால வந்துட்டது, இனிமேல தாளைக் கீழே போட்ட உன்னை காளைச் சாணியாக்கிடுவேன்" என்று சொன்னது  இரும்பை காய்ச்சி காதிலே ஊத்தியதுபோல இருந்தது,எனக்கே அடி வயறு கலங்கி விட்டது , இருந்தாலும் பல் விளக்காத வாயை காட்டி புன்னகை பூ வை அள்ளி வீசினேன், மூக்கை பிடித்துக் கொண்டு ஓடியே போய் விட்டார். மீண்டும் மேல் வாட்டைப் பார்த்துகொண்டு இலக்கியத்துக்கு வந்த எருவ மாட்டு சோதனையை எண்ணி உள்ளம் கொதித்தது, இந்த நிலையிலே என்னை எட்டிப் பார்த்த இன்னொரு கவுஜையைத் தீட்ட பேனாவை எடுத்தேன், எழுதுமுன் பேனா முள் ஒடிந்து, என் கற்பனையிலே இடி விழுந்து விட்டது, இதை மட்டும் நேரிலே நீங்கள் பார்த்து இருந்தால், என் விரலை மட்டுமல்ல என் கையயுமல்லவா வெட்டி இருப்பீர்கள்.
   
கற்பனை கழுதையை பறக்கவிடாமல் முள் ஒடிந்து, கால் ஒடிந்தது போல இருந்த எனக்கு என்ன செய்ய செய்வதென்றே தெரியவில்லையே, இவ்வளவு நேரமும் தற்குறித்தனமாக பேசி, உங்கள் மனதிலே கொலைவெறியை தூண்டிய நான் வழக்கம் போல்  வெறுமையாய் வீட்டுக்கே வந்தேன், வந்தவன் மணி 8.30 என்று தெரிந்து கொண்டு பல்லை விளக்கி, குளித்து முடித்து செலவும் கடை திறக்க சரியாக இருந்தது,இவ்வளவு நேரமும் இலக்கிய எண்ணத்திலே மிதந்த நான் சரக்கு வெள்ளத்திலே மிதக்கப் போகிறேன், ஒரு கை குறையுது நீங்களும் வாரியளா?
    


Wednesday, October 20, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்

காலம்  கடந்த  மன்னிப்பு கேட்கிறேன்னு கொஞ்சம் மனசு நெருடலா இருந்தாலும், பண்ணின தப்புக்கு ஒரு மன்னிப்பை கேட்டு வச்சா மனசு நிம்மதி அடையும் என்ற நம்பிக்கையிலே தான் அலுவலகம் சென்றேன், போகும் போதே பல சிந்தனைகள் மனசுக்குள்ளே இருந்தாலும், மன்னிப்பை ஏத்துக்காவிட்டாலும் கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் உறுதியா இருந்தேன்.     

மேல உள்ள பாராவையும்,தலைப்பையும் படிச்ச உடனே நான் என்னவோ நோகாம மறைந்து நொங்கு தின்னுட்டு கடையிலே புலம்பி கிட்டு இருக்கேன்னு கற்பனை குதிரைகள் பறக்க வாய்ப்பு இருக்கு, ஆனாலும் எதிர்பார்ப்புகளை எப்போதுமே குறைவாக வைத்துகொள்வது மனதுக்கும், உடலுக்கும் நல்லதுன்னு ஒரு குத்து வசனம் சொல்லிட்டு பொழப்பை பார்க்க போவோம்.

முதல்ல நேரிலே மன்னிப்பு கேட்கலாம் என்று முடிவு எடுத்தேன், பின்னர் மனசு மாறி கடிதம் எழுதி வைத்துவிட்டேன்,காரணம் நினைப்புக்கும், நடப்புக்கும் பாலம் அமைக்க போராடி கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனுஷன் தானே(குத்து வசனம் இம்சை தாங்கலை).ஒரு காலத்திலேயே காதல் விசேச கடிதவாதி என்று பட்டம் வாங்கி இருந்தாலும், பழைய அனுபவத்தை வச்சி  மன்னிப்பு கடிதம் எழுதிட்டேன். எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு அலுவலக மேலாளர் அறையை நோக்கி அடைந்தேன். மேலாளர் ஆண்பாலாக  இருந்தாலும்,அறையிலே இருப்பது பெண் தான்.

அறையிலே இருக்கும் பெண் மிகவும் பரிச்சயப் பட்ட முகம், அந்த காலத்திலேயே நாங்க சந்திக்காம இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடாலம்.கல்யாணம் முடிந்த உடனே, எதோ காணாததை கண்டது போல, கிடைத்தை எல்லாம் சாப்பிட்டு, சாப்பிட்டு ஆணழகனா இருந்த நான்,தொந்தியும், தொப்பையுமா  அரை கிழவனா ஆகிட்டேன், ஆனால் அவள்(ங்க) வயசிலேயும்,அழகிலேயும் பெரிய வித்தியாசம் தெரிந்ததா தெரியலை. 

அறை முன்னே சென்று கதைவை தட்ட முயன்று கையை வைத்த உடனே கதவு லேசாக திறந்தது, பின்னால் திரும்பி யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்(ங்க). பிறகு வரலாம் என்று நினைத்து திருப்பிய போது

"எப்படி ஹன்(ஹனி தான் இந்தப்பாடுபடுது) முடியும், அவனும் இங்கே இருக்கிறான், நான் அவனுக்கு மேலாளர்(லி) , திஸ் இஸ் நாட் கோயிங் டு வொர்க் அவுட்" என்று பேசியதை கேட்டதும், ரெம்ப நாளா விட்டு வைத்து இருந்த ஒட்டு கேட்பு கலையை மறுபடி தட்டி எழுப்பி கதவு முன் நின்றேன். அந்த காலத்திலேயே இங்கிலிபிசு கிலோ என்ன விலைன்னு கேட்டவங்க, இப்ப சோ இல்லைனா சோறு தண்ணி இறங்காது போல தெரியுது, இவ்வளவு திறமை இல்லாட்டி நான் வேலை பார்க்கிற அலுவலகத்துக்கு மேலாளர் வேலைக்கு வர முடியாது என்ற குறு நினைவுவை முடித்து கொண்டு மீண்டும் கலையை தொடர்தேன் .

"எனக்கு ரெம்ப நெருடலா இருக்கு, அவனுக்காக நான் மருந்தை குடிச்சி தற்கொலை வரைக்கு போய் இருக்கேன், அந்த பைத்தியக்காரத்தனத்தை இப்ப நினைச்சாலே அவனை கொலை பண்ணலாமுன்னு தோணுது, இந்த ஒரு அபத்தமான சூழ்நிலையை எப்படி கையாளப் போறேன்னு தெரியலை."  என்ற பேச்சை கேட்டதும்,நான் அந்த இடத்தை விட்டு வந்துட்டேன், அன்றைய வேலை எல்லாம் வேக வேகமா முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.

அடுத்த நாள் அலுவலகம் பரபரப்பா ஒண்ணும் இயங்கலை, இருந்தாலும் என்னோட அலுவலக நண்பர்களிடையே என்னைப் பத்தி பேச்சு வந்தது, நம்ம சி.என் இப்படி பண்ணிட்டாரே, அலுவலகம் வந்து உலக மொக்கைப் போட்டு, அந்த காலத்திலேயே அப்படி துண்டு போட்டேன், இப்படி சொம்பு அடிச்சேன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, நகைச்சுவை என்கிற பேரிலே உலக கடி கடிச்சி கும்மி அடிப்பாரு, இப்படி ஒரே அடியா போயிட்டாரே 

அடுத்த நண்பர் "இந்த வேலையை நம்பி கட்டில், மெத்தை, பஞ்சு இருக்கை, குளிர் சாதனப் பெட்டி, தொலைக் காட்சி பெட்டி இப்படி பலதரப் பட்ட முதலிடுகளை தவணை முறையிலே போட்டு இருந்தாரு, இனி எப்படி பொழைப்பு ஓடுமோ"

இதே   நேரம் வீட்டிலே தான்  கொடுத்த வேலை ராஜினமாக் கடிதம் ஒரு மன்னிப்பு கடிதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையிலே, ஓசியிலே வாங்கி வந்த முப்பது நாளில் விவசாயம் பண்ணுவது எப்படி என்ற  புத்தகத்தை பரிச்சைக்கு படிப்பதைப் போல படித்து கொண்டு இருந்தார் சி.என், யாருக்கு தெரியும் பிற்காலத்திலேயே சிறந்த உலக விவசாயி என்ற பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம், நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாய ஆலோசனைகளை சொல்லலாமே இந்த நவீன விவசாயிக்கு 


Thursday, October 7, 2010

நெல்லைமாவட்டமும், அரிவாளும்

பொறுப்பு அறிவித்தல் :
புகைபிடிப்பதும்,குடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பார்த்து பத்திரமா போங்க.தலைப்பிலே அருவா இருப்பதினாலே, இது வன்முறை நிறைந்த இடுகை என நினைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.நான் என்னவோ அருவாளை காட்டி பின்னூட்டம் வாங்க முயற்சி செய்து இருப்பேன் என்றும் யாரும் நினைக்க வேண்டாம்.

அதாகப்பட்டதவது நான் பள்ளிப் படிப்பு எல்லாம் தென் இந்தியாவின் குட்டி ஆக்ஸ்போர்ட் எங்க சொந்த ஊரிலே படிச்சேன், படிக்கும் போது நெல்லை மாவட்டம் என்று தபாலில் எழுதிப் போட்டது வரைக்குமே தெரியும், எங்க மாவட்டத்தைப் பத்தி அடுத்த மாவட்ட மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாமலே போச்சி, இந்த விசயங்கள் எதுவுமே தெரியாம ஊரிலே இருந்து பெட்டியோட ஒரு பண்டல் பீடி கட்டையும் எடுத்துகிட்டு திருச்சி கல்லூரியிலே படிக்க போனேன்.

உள்ளுரிலே வளந்த பையன் வெளியூர் போன உடனே உள்ளுர்ல பேசுனமாதிரியே பேசினேன், யாருக்குமே புரியலை, அப்பத்தான் அவங்க விவரம் கேட்டாங்க, நீங்க எந்த ஊருன்னு, அது எங்க இருக்குன்னு,எங்க ஊரு பெயர் பாதிப் பேரு வாயிலே நுழையலை,உடனே நான் நெல்லை மாவட்டமுன்னு சொல்லிவச்சேன். அப்படி கனிவா விசாரிச்சவங்கள்ல ஒருத்தன் சென்னைக்காரன் ரெம்ப தங்கமான பய, அடுத்த ரெண்டு நாள்ல கொண்டு போன பீடி கட்டிலே இருந்து ரெண்டு பீடி இலவசமா எடுத்துக் கொடுத்து சும்மா சுவச்சி பாரு ரெம்ப நால்லா இருக்குமுன்னு சொன்னேன். அடுத்த வாரத்திலே புகையை வட்டமா, சதுரமா எப்படி விடுறதுன்னு சொல்லிக் கொடுத்து, ஒரு மாசத்திலே துண்டு பீடி அடிக்கிற அளவுக்கு தேத்திவிட்டேன்.

"மாப்பள பீடியிலே தன்னிறைவு அடைந்து விட்டேன், வேற எதாவது புதுசா சொல்லிக்கொடுன்னு" என்னோட பிஞ்சி முகத்தைப் பார்த்துகேட்டான்.

"கொஞ்ச நாள் போகட்டுமே" என்றேன்.

"கல்லூரியில வாத்தியார் புதுசா எதுவுமே சொல்லிக் கொடுக்கலை, நீயுமாடா" என்று கேட்ட கேள்விக்கு கலங்கிப் போனது என் நெஞ்சம், அடுத்த நிமிசமே அவன்கிட்ட இருந்து நூறு ரூபாய ஆட்டையப் போட்டு ரெண்டு பீர் வாங்கி வந்தேன். பீடி அடிச்சா புகைவரும், பீர் அடிச்சா போதை வரும் ன்னு குத்துவசனம் சொன்னேன்.ஆளுக்கு அரை மூடி குடித்து விட்டு விட்ட சலம்பலிலே வாங்கிட்டு வந்த பாட்டிலே உடைந்து, பக்கத்து அறை மாணவர்கள் எல்லாம் வந்து ரணகளம் ஆகிவிட்டது. மட்டையாகி நாங்களும் மடை சாய்ந்தோம்.

நாங்க முந்தின நாள் பண்ணின சலம்பலை எல்லாம் ஒரு அறிவு ஜீவி வத்தி வச்சிட்டாரு கல்லூரி முதல்வரிடம், கொண்டு போன பீடிக்கும், அடிச்ச பீருக்கும் ஆப்பு அடிச்சிட்டாங்க,வத்தி வச்சவன் அணுகுண்டு போட்ட மாதிரி வத்தி வச்சி இருக்கான் "ஐயா என்னால படிக்கவே முடியலை இவங்களால, என் வாழ்கையே பாழாப் போச்சின்னு" ஆனா உண்மையான நிலவரம் என்னனா பாடமே நடத்த ஆரம்பிக்கலை, அவன் வாழ்க்கை போச்சின்னு சொல்லிட்டானு, என்னையும், சென்னைக்காரனையும் ரெண்டு வாரம் தற்காலிகமா கல்லூரிக்கு வர வேண்டாம் என விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க, அதாவது சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.நானும் வீட்டுக்கு
வந்து பரிச்சைக்கு விடுமுறை கொடுத்திட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சேன்.(எனக்கு தெரிஞ்ச வரையிலே எங்களைப் போட்டுக்கொடுத்த அந்த நண்பருக்கு நாங்க கல்லூரி முடித்து ஐந்து வருடம் கழித்தும் 15 அரியர் இருந்தது)

நான் இப்படி தற்காலிக விடுமுறையிலே ஊரிலே இருக்கும் போது கல்லூரி முழுவதும் எனது புகழ் பரவி, நெல்லை மாவட்டுத்துக்காரன் ஒருத்தன் இருக்கான், அவன் குவாட்டர் அடிக்கலைனா தூங்க மாட்டான், கையிலே வெட்டு பட்ட கட்டும்,வாயிலே பீடியோட தான் இருப்பான்.நெருப்பு எல்லாம் அவனை நெருங்கவே முடியாது, அவனே நெருப்பிலே வெந்தது மாதிரி இருப்பான்.எதிர்த்து கேள்வி கேட்டா பாட்டிலை உடைச்சி அடிப்பான், அவன்கிட்ட அடிபட்டவங்க நிறைப் பேரு, இப்படி எல்லாம் புதுசா வாரவங்க கிட்ட சொல்லி ஒரு என்னை கலவரக்காரன் என்று முத்திரை குத்தி விட்டுட்டாங்க.

இந்த நேரத்திலே தண்ணியில்லா காடு என்று என்று எல்லாராலேயும் அன்போட அழைக்கப் படும் ராம் நாட்டிலே இருந்து ஒருவர் வந்து சேர்ந்தார், அவரு ஊருக்குள்ளே பெரிய சண்டியர் தனம் பண்ணிட்டு கல்லூரிக்கு வந்தவரு, அவரு வந்த உடனே என்னைப் பத்திக் கேள்விப் பட்டு, அவனை விட பெரிய ரவுடியாகிய என்னை பார்க்க ரெம்ப ஆவலா இருந்து இருக்காரு, தினமும் வந்த உடனே நெல்லைக்காரன் வந்துட்டானான்னு விசாரிகிறதே முதலாவது வேலை, ராமநாதபுர ரவுடிக்கு திருநெல்வேலி ரவுடியைப் பார்க்காம ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்கலையாம். ரெண்டு வாரம் கழிச்சி நானும் வந்து சேர்ந்தேன், நான் படிப்பிலே மாப்பிள்ளை விசுபலகையை சேர்ந்தவனா இருந்தாலும், முதல் வரிசையிலே தான் உட்காருவேன், ராம்நாடு ரவுடிக்கு என்னோட முதுகு தரிசனம் தான் கிடைச்சி இருக்கு, முகதரிசனம் கிடைக்கலை. மனுஷன் கொதிச்சி போய்ட்டான், எனக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே தெரியலை.

முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியர் வருகை பதிவேட்டில் பதியும் போது என்னோட பெயர் சொன்ன உடனே நான் எழுந்து வழக்கம் போல "உள்ளேன் ஐயா" ன்னு சொன்னேன். அப்பத்தான் என்னோட கோலத்தைப் பார்த்திட்டு அரண்டே போய்ட்டான். முப்பத்தி அஞ்சி கிலோவிலே ஒரு கருப்பு துணியை போத்தின மாதிரி இருந்த என்னைப் பார்த்தும், அதிர்சியிலே சிலையாய் ஆகிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சி என்னோட ரவுடித்தத்தை சோதனை செய்து பார்க்கணும் என்று தன்னார்வமா எங்க துண்டு பீடி குழுவிலே அவரும் இணைந்துவிட்டார், ஒரு நாள் அவரு காசிலே சரக்கு அடிக்கும் போது என்கிட்டே

"டேய் நான் கல்லூரி சேர்ந்த போது உன்னையப் பத்தி என்கிட்டே சொன்னவன் மட்டும் இருந்தான், அவனை கொலைபன்னிட்டு சிறைக்கு செல்வேன்"

"அப்படி என்ன மாப்பள சொன்னாங்க?"

"நெல்லை மாவட்டம் என்ற ஒரே காரணத்துக்கு உன்னைய ரவுடி ஆக்கிட்டங்களே, உன்கிட்ட பழகினப் பிறகுதானே தெரியுது, நீ ஒரு தாள் ரவுடின்னு,உன்னைய ரவுடின்னு நினச்ச காரணத்துக்கே கண்ணாடி முன்னாடி நின்னு தினமும் நாலு திட்டு திட்டிக்குவேன்"

"ஏன்டா நெல்லை மாவட்டத்து ஆளுக எல்லாம் ரவுடின்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?கொண்டு வந்த பீடி காலி ஆகணுமுன்னு ஓசியிலே ரெண்டு பீடி கொடுத்தேன், அவன் அதுக்கு எனக்கு ஓசியிலே ரெண்டு பீர் கொடுத்தான்.பீடியும், பீரும் குடிச்சா ரவுடியா, மாப்ள எங்க ஊரு கலவர பூமின்னு நீங்க சொல்லித்தான்டா எனக்கே தெரியும், அரிவாளை அருனா கயறிலே கட்டிக்கிட்டு சுத்துவோமுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு நெல்லையிலே இருந்து யாரு வந்தாலும் ரவுடின்னு சொன்னா, நாங்க என்ன செய்யன்னு?,எங்க மாவட்டத்திலே எங்காவது ஒரு இடத்திலே நடந்த கலவரத்தை வைத்து நெல்லை மாவட்ட மக்களே அப்படித்தான் இருப்பாங்கன்னு,ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுன்னு மக்களே முடிவு பண்ணிட்டு, நெல்லை மாவட்ட மக்கள் எல்லாம் அரிவாளோட சுத்துவாங்கன்னு நினைச்சா நாங்க என்ன பண்ணமுடியும்" கேள்வி கேட்டுட்டு திரும்பி பார்த்தா எனக்கு வாங்கி கொடுத்த பீரையும் அவன் குடிச்சிட்டு ஓடியே போய்ட்டான்.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியலையா, என் கேள்வி பிடிக்கலையான்னு இன்று வரை அவரிடம் கேட்க முடியலை.கொசுறு தகவல் ராம்நாடு ரவுடி இப்ப சிங்கையிலும்,சென்னைக்காரன் அமெரிக்காவிலும் வசித்து வருவதாக செவி வழியா வந்த செய்தி.


Friday, October 1, 2010

எந்திரன் திரை விமர்சனம்

எந்திரப் புலி வருது... எந்திரப் புலி வருது .. என்று பல வருடங்களாக மக்களை எதிர் பார்த்த எந்திரன் வந்து விட்டது முத நாளே துண்டை போட்டு இடம் பிடிச்சி பார்த்துவிட்டேன், விமர்சனம் எப்படி ஆரம்பிக்க, என்ன எழுதன்னே தெரியலை, முன்னபின்ன எதாவது எழுதினாத்தானே எழுதவரும்(இது வரைக்கும் எழுதியதையும் சேத்துதான்).ஐயா சாமிகளா ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வோடு திரை அரங்கம் செல்ல வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ரஜினி என்ற மூன்று எழுத்தை விட ஷங்கர் என்ற நாலு எழுத்தின் ஆதிக்கமே அதிகம் படத்திலே.

ரஜினி நடிப்பிலே பல பரிமாணங்களை காட்டி இருந்தாலும், அவருடைய வழக்கமான குத்து வசனங்கள் இல்லவே இல்லை, ரஜினி பெயர் போடும் போது கொடுக்கும் பிரமாண்டம் அவரின் அறிமுக காட்சியிலே இல்லை. கதையிலே கருத்துமட்டுமே சொல்லவேண்டும் என்று கருத்தாய் இருந்திருப்பார்கள் போல தெரியுது, இலக்கியவாதிகள் மாதிரி முஞ்சை உர்னு வச்சிக்கிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்னு பின்னூட்டம் போடுற மாதிரி. பிரமாண்டம் என்ற மாயாசாலச்சிலே எந்திரன் சில இடங்களிலே தொய்வு அடையத்தான் செய்கிறது. முத தடவை பார்த்தாதாலே இப்படி நினைக்க தோணுது, மறுபடி ஒருதடவை பார்த்தா என்ன தோணும்னு பாத்திட்டு சொல்லுறேன்.

வழக்கமான தமிழ் படங்களை போல் இல்லாம, நாயகி ஐஸ்வர்யா பச்சன் கடைசி வரைக்கும் வருகிறார்கள், அவர்களின் நடனம், உடை, முகபாவனை அனைத்தும் அருமை, ரஜினிக்கு கொடுத்த வேடங்களை கட்சிதமாக செய்து முடித்து இருக்கிறார், முதல் பாதிலே சிட்டி கதாபாத்திரம் கலக்கல், படத்தின் இசையப் பத்தி முழம் போட்டு விளக்குற அளவுக்கு அறிவு இருந்தா இன்னைக்கு நான் பெரிய இசை அமைப்பாளர்(அதிர்ச்சி அடையாதீங்க) ஆகி செவ்வாய் கிரகத்திலே கொடுக்கப் படும் மிகப் பெரிய விருதாகிய கொஸ்கர் விருது வாங்கி இருப்பேன்.கருணாஸ், சந்தானம் நகைச்சுவை காட்சிகளை விட, சிட்டியின் நகைச்சுவை காட்சிகள் நல்லா இருக்கு.

முதல் பாதி விட்டவுடன் ஏறப்பட்ட மன நிறைவு இரண்டாம் பாதியிலே இல்லை, ரஜினியையே வில்லன் வேடத்துக்கு பயன் படித்தி இருந்தாலும், அவர் அதை சிறப்பாக செய்து இருந்தாலும், ரஜினி அடுத்தவர்களுடன் மோதி வெற்றி பெறுவதற்கும்,ரஜினி , ரஜினியோட சண்டை போட்டு வெற்றி பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கு. கடைசியிலே ரஜினி வெற்றி பெற்றாலும் அந்த மன நிறைவு பார்த்த எனக்கும், என்னோட வந்த நண்பருக்கும் இல்லை.சில இடங்களிலே நீளமான சண்டைகள் தேவை இல்லை என்ற நிலை வரலாம்.

படத்தின் ஒருவரி கதை ஒரு எந்திரம் உருவாக்கி, அதற்கு மனிதனைப் போல உணர்வுகளை கொண்டு வந்தால், என்ன ஆகும் என்பதே, இந்த ஒருவரி கதைக்கு திரைக்கதை எழுந்துங்கள் என்று ஒரு தொடர் பதிவு விட்டால் என்ன நடக்குமுன்னு தெரியலை, ஆனா படத்திலே ரோபோ நடக்குது, பாடுது,ஆடுது.

படத்துக்கு வில்லன் என்ற கதாபாத்திரம் யாரு கண்டு பிடிக்கிறது கொஞ்சம் மல்ல ரெம்பவே கஷ்டம், முதல் பாதியிலே கொஞ்சம் சுருசுருப்பா வாரவரு, ரெண்டாவது பாதிலே பொசுக்குன்னு போயிடுறாரு, மூன்று வித காதாப்பாத்திரங்களிலே நடித்து இருக்கும் ரஜினியையும், அதற்கு இருக்கும் ஒரே நாயகியை மட்டுமே சுத்தி ஓடுது, திரை அரங்கத்திலும் ஓடும்... மொத்தத்திலே இது ஒரு ஷங்கர் படம் என்ற திருப்தி இருக்கு, அம்புட்டுதான் விமர்சனம், நீங்களும் திரையிலே பார்த்துவிட்டு கடையிலே ஏத்துங்க