Showing posts with label ஜோசியம். Show all posts
Showing posts with label ஜோசியம். Show all posts

Thursday, January 7, 2010

ஜோசியமும், சுசியமும்

நான் பன்னிகுட்டியா இருந்து எருமைமாடா ஆகும் போது எனக்கு சோசியம் பத்தி தெரிய வந்தது, அந்த கதைய கேட்டீங்கன்னா உங்களுக்கே கோவம் வரும்.என் வாழ்க்கையிலே கருப்பு தினம் அன்றைக்கு, வாத்தியாரு இங்கிலிஷு  பாடம் நடத்தும் போது வந்த எரிச்சலிலே முன்னாடி இருந்த பெண்ணோட சடைய பிடிச்சிபிட்டேன். அவ என்னைய பார்த்து

"ஏய் கருப்பா, கையையும் காலையும் ஓடிச்சி அடுப்பிலே போட்டுடுவேன்னு"
ன்னு சொன்னா


வெள்ளரி பிஞ்சி போல இருந்த மனசிலே மிளகாய் பொடியை அள்ளிப் போட்டுட்டா, அம்புட்டு நாளும்  ரெம்ப சிகப்பா இருக்கேன்னு நினச்சி கண்ணாடியே பார்க்கலை, அவ சொன்னதுக்கு முத தடவையா கண்ணாடியிலே பார்த்தா கொஞ்சம் இல்லை ரெம்பவே கருப்பா இருக்கேன்.கோபத்திலே என் அம்மாகிட்ட கேட்டேன்



"ஏன் அம்மா நான் கருப்பா இருக்கேன்.. ?"



"ஜோசியக்காரன் நீ ரெம்ப கருப்பா இருப்பன்னு சொன்னான், அதனாலே நீ வயத்திலே இருக்கும் போது குங்கும பூவை பாலிலே கலக்கி சாப்பிட்டேன்.பத்து  கிலே சாப்பிட்டேன்."

"அப்புறம் எம்மா, நான் இவ்வளவு அட்டு கருப்பு?"


"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."

அன்றையிலே இருந்து எனக்கு ஜோசியத்திலே ஆர்வம் வந்தது.நான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது நானும் அடம் பிடிச்சி அம்மாவோட ஜோசியம் பார்க்க போனேன், எனக்கு ஜோசியம் பார்த்திட்டு உங்க புள்ள கன்னிராசிகாரன் இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.    

அதற்கு அப்புறமா எடுக்கணுமுன்னு நினைச்ச துண்டை எல்லாம் மூட்டை கட்டி ஓரமா வச்சிட்டு, ரெண்டு வருஷம் அமைதியாகிட்டேன், இந்த இடைப்பட்ட காலத்திலேயே ௬ட படிக்கிற புள்ளைங்க ௬ட பேசுவதையே விட்டேன், நான் பாட்டுக்கு பேசி என் அழகிலே மயங்கி எனக்கு துண்டு போட்டுட்டா ஜோசியகாரர்  சொன்ன ஈ மொய்க்கிற  ௬ட்டதிற்கு வழி இல்லாம போயிடுமேன்னு


ரெண்டு வருஷம் ஓடி  ஒரு வழியா கல்லூரிக்கு  வந்தேன்.என்னைய சுத்தி ஈ மொய்க்குமுன்னு பார்த்தா, நான் ஈ யா எல்லோருடைய பின்னாலையும் சுத்தி கிட்டு இருந்தேன்.ஜோசியரு சொன்ன ரெண்டு வருஷ கெடு முடிஞ்சதாலே நான் யாரையும் ஒதுக்கி வைக்கலை, அவங்களா என்னை ஒதுக்கு வச்சிட்டாங்க.

ஜோசியத்தின் பெருமையும் ஈ மொய்க்கிறதையும் நண்பர்களிடம் சொன்னேன் எல்லோரும் தெரிச்சி ஓடிட்டாங்க, மருந்து  வாங்கி கொடுத்து சொன்னேன் மட்டையாகிட்டாங்க.எடுத்த துண்டை எடுக்கவும் ஆள் இல்லை, இறக்கி வைக்கவும் முடியலை.ஜோசியத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிறேன்னு என்னைய பார்த்தா சொம்பு தண்ணிய எடுத்துகிட்டு வந்துவிடுவார்கள், இப்படி ஒரு இக்கட்டனானா நிலையிலே எனக்கு ஒரு அழைப்பு வந்தது எதிபாராத இடத்திலே இருந்து,ஆனந்தமா அழைப்பை சந்திக்க போய்கொண்டு இருந்த என்னைப் பார்த்து நண்பன் 

"ஜோசிய சொம்பு இங்கே வா"    நானும் போனேன்

"உன் கையை பார்த்து உன்னோட எதிர் காலத்தை கணிச்சி சொல்லுறவரு, அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும், அவரு அவ்வளவு பொதுநலவாதியா இருந்த இன்றைக்கு ரூபா நோட்டுல நீ காந்திய பார்க்க முடியாது, சோசியக்காரங்க தான் இருப்பாங்க.உனக்கு இந்த வயசிலே துண்டை எடுத்திகிட்டு  பெண்கள் எல்லாம் வருவாங்கன்னு சொன்னவரு, அவரு உன் வயசிலே என்ன பண்ணாரு,  உன் கன்னிராசிக்கு கன்னிகள் எல்லாம் காத்து கிடப்பாங்கன்னு  சொன்னவருக்கு  என்ன கவுந்த ராசியா?"

"தெரியலையே மச்சான்"


"ஜோசியரு சொன்னாருன்னு தானா வந்த துண்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு, இப்ப துண்டை எடுத்துகிட்டு மாநிறம் பின்னால தெருநாயா அலையுற"

"என்ன மாப்ள சரக்கு அடிச்ச?, நீ எதிர் சொம்பு அடிக்கிற"


"உன்னையை சொம்பு வச்சே அடிப்பேன்"


"விவரம் தெரியாம பேசுற என்னைய யாரு ௬ப்பிட்டு இருக்கா தெரியுமா, நம்ம வகுப்பழகிடா? ஜோசியம் சும்மா இல்லைன்னு நிருபிக்கத்தான் இது நடக்குது, இப்ப பாரு தனியா போயிட்டு துணையோட வாரேன்."

அதை சொல்லிட்டு  வேகமா ஓடிட்டேன் வகுப்பழகியை பார்க்க,அவளைப் பார்த்தும் கன்னிராசி ஞாபகம் வந்ததாலே நான் கால் விரலை வைத்து கோலம் போட ஆரம்பித்தேன்.என்னோட வெட்கத்தைப் பார்த்து அவளோட வெட்கம் ரெக்கை முளைச்சி  பறந்து போச்சி  

"ரெம்ப நாளா உங்க கிட்ட சொல்லமுன்னு  நினைச்சிகிட்டு இருந்தேன், சந்தர்ப்பமே கிடைக்கலை"

"சொல்ல வந்ததை
௬சாம சொல்லு" 

"ஒண்ணும் இல்லை, எனக்கு ரெண்டு சுசியம் வாங்கிட்டு வர முடியுமா?"
  

"இவ்வளவு தானா, உனக்காக சொர்கத்தையே விலைக்கு வாங்கிட்டு வருவேன்"ன்னு சொல்லிட்டு திரும்பின நான் கால் தவறி விழுந்திட்டேன்.

"பார்த்து அண்ணா" 


இந்த வார்த்தையை கேட்டதும், "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது, என் இதயம் அந்த சொல்லை தாங்குற அளவுக்கு கல்லா  இருந்ததாலே தப்பிச்சேன்.

"உங்க மாப்பிளைக்கு கொடுக்கணும் அண்ணா, நல்ல கடையிலே வாங்கிட்டு வாங்க"


"என்னது என் மாப்பிள்ளையா?"

"ஆமா, நீங்க எனக்கு அண்ணன்னா, அவரு உங்க மாப்பிளைதானே?
"


ஜோசியம் என்னை சுசியத்திலே கொண்டு வந்து விட்டதேன்னு நினைச்சாலும், வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க  போனேன்.