எனது காதலர் தினங்கள்
தீபாவளி, பொங்கல், மாட்டு பொங்கலுக்கு கொண்டாட்டிகிட்டு இருந்த நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் துண்டை கையிலே வச்சிக்கிட்டு திரிந்தாலும் காதலர் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாது,
பெரும்பாலும் வெளிநாட்டுகாரங்க பண்டிகை எல்லாம் பட்டணத்திலேதான் கொண்டாடுவாங்க, அதே மாதிரி கல்லூரி வந்ததும் முதல் முறையா வலேண்டின் தினமுன்னு கேள்வி பட்டு, நண்பன்கிட்ட கேட்டேன்
"மச்சான், வலேண்டின் துண்டு போடுறதிலே பெரிய கில்லாடியா? அவரு பிறந்த அன்னைக்கு காதலர் தினமுன்னு சொல்லுறாங்க"
"மாப்புள, அந்த போட்ட துண்டை யாரும் வாங்கலையோ என்னவோ, துண்டு போட்ட எல்லோரையும் சேத்து வச்சி இருக்காரு.அவரோட மகத்தான மாமா வேலையை பாராட்டி, அன்றைக்கு காதலர் தினமுன்னு வச்சிட்டாங்க, அதனாலே இந்த பதினாலாம் தேதி காதலியோட முகத்திலே முழிக்கலைனா ஆயிசுக்கும் துண்டு போட முடியாம போயிடுமுன்னு வசதிக்கு தகுந்த மாதிரி வாயிலே, கையிலோ கொடுப்பாங்க."
"சரி இருக்கவங்க கொடுக்கிறாங்க, இல்லாத நம்ம மாதிரி ஆளுங்க என்ன செய்ய"
"என்னது நம்மளா?"
"இல்ல மச்சான், என்னையத்தான் சொன்னேன்"
"ரோஜா பூவை வாங்கிட்டு அலைய வேண்டியது தான்"
அடுத்த நாளே கையிலே காசு இல்லாட்டியும் பூக்கடைக்கு போய் சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன், என் கையிலே ரோசா பூ வை பார்த்ததும், ௬ட படிக்கிற புள்ளைக மட்டுமில்ல, வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க.
அல்லோ பாலா அண்ணன் நீங்க இங்கே முக்கியமா ஒண்ணு கவனிக்கணும், அவங்க எல்லாம் தெறிச்சி ஓடிட்டதாலே நான் அழகு குறைச்சலா இருந்து இருப்பேனோன்னு நினைக்க ௬டாது,காரணம் என்னன்னா
நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு நாற்பதாவது தரமாவும் வாக்கப் படவேண்டிய என்னை காதல்ன்னு ஒரு உள்ளூர் வட்டத்துக்குள்ளே அடைச்சி வைக்க இந்த பெண்களுக்கு பிடிக்கலைன்னு நான் ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க .
கண்டம் விட்டு கண்டம் பாயப்போற இந்த கருவாலியை கவுக்க௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே அவங்க எல்லாம் வழி விட்டுட்டாங்க.அதோட அங்கேயே என்னோட காதல் தினக் கொண்டாட்டத்தை முடிச்சிகிட்டேன்.
அடுத்து வாய்ப்பு வேலைக்கு பெங்களூர் வந்த போது கிடைச்சது, நம்ம ஊரு புள்ளைக கிட்ட பருப்பு வேகலைன்னதும், ௬ட வேலை பார்த்த வடக்கூர்காரி சிரிக்க சிரிக்க பேசுவா, அவ பேசுறது எனக்கு புரியலைனாலும், நான் நல்லாவே சிரிப்பேன், என்னையும் நம்பிகிட்டு இருந்தவ ஒரு நாள் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பேசி கிட்டு இருந்து இருக்கா, அது புரியாம நான் பேய் மாதிரி சிரிக்க உண்மைய கண்டு பிடிச்சிட்டா, பேசுறது புரியலைனா இன்னொரு தடவை சொல்லுன்னு கேளுன்னு சொல்லிட்டா.அதற்கு அப்புறம் அவ சிரிக்கலன்னா நான் சிரிக்கவே மாட்டேன்,
நானும் பெப்ரவரி எப்ப வருமுன்னு காத்து கிடந்து, வந்த உடனே அவ கிட்ட கேட்டேன், காதலர் தினத்திலே எங்கே போற ன்னு கேட்டேன்.
"போற அளவுக்கு ஆள் கிடைக்கலைன்னு சொன்னா?"
நான் தொகுதிலே இன்னும் வேட்பு மனு தாக்கல் இல்லை, அப்ப சுயேச்சையா களம் இறங்கி ஜெயிச்சிடலாமுன்னு நானும் ரோசா பூவை வாங்கிட்டு பதினாலாம் தேதி போனேன்.
சாயங்காலம் வரைக்கும் இலவு காத்த கிளி மாதிரி இருந்து, அலுவலகம் முடிய கொஞ்ச நேரம் முன்னாடி அவகிட்ட போனேன், அவ அவளைத்தேடி யாரோ வந்து இருப்பதாக போனாள், நான் அவ பின்னால போனேன், அங்கே பார்த்தா என்னை விட அழகான ஒரு வடக்கூர் காரன் அவளுக்கு பூ கொடுத்து கிட்டு இருந்தான், அப்பவே நான் கொண்டு போன பூவை காதிலே வச்சிகிட்டேன்.
வாடிப்போன ரோசாவையும், வதங்கி போன மனசோடையும் வீட்டுக்கு போக பேருந்திலே ஏறினேன். போகும் போது அருகிலே இருந்த பள்ளி மாணவி, நீங்க கையிலே வைத்து இருக்கும் ரோசா பூவை எனக்கு தரமுடியுமான்னு கேட்டாள்.
"இல்லை இது வேற காரணத்திற்க்காக வாங்கினது"
"காதலிக்கு மட்டும் தான் ரோசா பூன்னா, அப்ப நேரு மாமா கொடுத்ததை எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க,இது அன்பை பரிமாற ஒரு தினம், அது காதலியா இருக்க வேண்டிய கட்டமில்லை"
அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே இருக்கு.