அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க வீட்டிலே குடும்ப சண்டை நடக்கும், அவனோட அப்பா அந்த குடும்பத்திலே நடு, கிராமங்களில் மழை இல்லாமல் போன மனசு கொள்ளாது, அதுவரையிலே அவரவர் வேலையை செய்தவர்கள், விளை நிலங்களின் வெப்பம் பார்த்து கொதித்து போனவர்கள்,தங்களோட கோபத்தை கொட்ட வழி இல்லாமல்குடும்பத்திலே சண்டை ஆரம்பிக்கும்.
மூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.
இவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.
குடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.
அவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.
சிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.
காலம் கடந்தது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு போக தயார் ஆனான், அவன் தந்தை விருப்பத்திற்கு மாறான ஒரு பாடத்தையும், இடத்தையும் தேர்ந்து எடுத்தான், குடும்பச் சண்டையின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இல்லாமல் இல்லை. இதற்கு பயந்தே கல்லூரி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதில்லை.
கல்லூரி சென்றது முதல் அவனின் தேவையை எல்லாம் அம்மாவிடம் சொல்லியே பெற்று கொண்டான், தந்தையிடம் பேசுவதை குறைத்து கொண்டான்,எதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்லுவான், சில சமயங்களில் அதை சட்டை செய்யாமல் கடந்து சென்று விடுவான்.
ஒரு நாள் கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான், அவன் அப்பா ௬ப்பிட்டாரு , வேண்டா வெறுப்பா அவர் பக்கத்திலே உட்கார்ந்தான் ,அவர் அவனோட மடியிலே படித்து "இனிமேல அம்மா ஒருகண்ணு, தங்கச்சி ஒருகண்ணு" ன்னு சொல்லிட்டு அவரால வந்த அழுகையை அடக்க முடியலை. அவர் செய்தது பைத்தியக்கார வேலையா இருந்தது, வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டான்.ஏதும் பேசாமல் கல்லூரிக்கு போய் விட்டான்.
அவன் போய் ஒருமாதத்திலே நள்ளிரவிலே நண்பர்கள் அவனை எழுப்பினார்கள்,
"டேய் மச்சான் எழுந்திரி, நாம உங்க ஊருக்கு போகணும்.. சீக்கிரம் கிளம்பு" என்றவனை
"என்னடா சொல்லுற?"
"உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம்"
"சரி, அதனாலே என்ன.. காலையிலே வீட்டுக்கு போன் பண்ணி கேட்கலாம்" என்று ௬றியவனை விடாப்படியாக கிளப்பினார்கள்,அவர்களின் அவசரத்தை பார்த்ததும் எதோ நடந்து இருக்கு உணர்ந்தான்.பேருந்திலே அவனையும் ஏற்றி விட்டு, அவனோடு அவன் நண்பர்களும் ஏறினார்கள், அவர்களும் அவனோடு ஊருக்கு வருவதாக கூறினார்கள்.
அவன் சந்தேகம் வலுவடைந்து
"எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சி?"
"உடம்புக்கு ரெம்ப முடியலையாம்"
"மச்சான், உண்மையை சொல்லுங்கடா" முதலில் சொல்ல மறுத்தாலும், அவனது வற்புறுத்தலின் காரணமாக உண்மையை சொன்னார்கள், அவனால் அழமுடியாமல் ஏதோ ஒன்று நெஞ்சை அடைத்துக்கொண்டது.வீட்டுக்கு சென்ற அவனைப்பார்த்ததும் சொந்தம் எல்லாம் மீண்டும் அழ ஆரம்பித்தார்கள், அதை கேட்கும் நிலையிலே அவனும் அவன் தந்தையும் இல்லை. ஈம சடங்குகள் எல்லாம் முடிந்த அடுத்த வாரத்திலே தந்தையை நம்பி கடன் கொடுத்தவர் எல்லாம் நெருக்க ஆரம்பித்தார்கள், வேறு வழி இல்லாமல் இருந்த நிலத்தில் பாதியை விற்று கடன் அடைத்தார்கள்.இழப்பின் வலியை உணர ஆரம்பித்தான்.அது வரை பணம் பற்றி கவலை இல்லாத குடும்பத்திலே அதுவே பிரதான கவலையானது.
அதுவரையிலே நடந்த சண்டையும் அறவே நின்று போனது. கஷ்டப்பட்டு கல்லூரியை முடித்தான். முதல் ஆளாய் சென்னைக்கு ஓடினான், கால் கடுக்க நடந்து ஒரு வேலையைப் தேடிபிடித்தான். ஆயிரம் ரூபாயிலே இருந்து இன்று முப்பதாயிரம் ரூபாய் வாங்கும் வரை உயர்ந்து விட்டான். பழைய கடன்களை எல்லாம் அடைத்து இழந்த பூர்விக நிலத்தையும் மீட்டு கொண்டார்கள். ஒரு முறை விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தான்.
பள்ளித்தோழர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.
நீண்ட நாட்களுக்கு பின்பு அவன் வீட்டுக்கு முன் ௬ட்டம் ௬டி இருந்தது, நின்றவர்களை விலக்கி விட்டு வீட்டுக்கு சென்றான், அவன் தாய்
"என்ன ஐயா, பக்கத்து ஊருக்கு போய் உன் ௬ட படிச்சவனை பார்க்க போறேன்னு சொன்ன, போகலையா?"
அதற்கு பதில் சொல்லாமல் "வெளியே என்ன?"
"உங்க சித்தப்பனும், பெரியப்பனும், ரெம்ப நாளைக்கு பிறவு, ௬த்து கட்டுறாங்க" ஏதோ நினைவு வந்தவளாய் ஒரு பெருமூச்சோடு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.அவனும் வெளியே வந்து எந்நாளும் இல்லாமல் சண்டையை வேடிக்கைபார்த்தான், மேலே வானம் வெறுமையா இருப்பதைப் பார்த்தான், இந்த சண்டையை எங்காவது ஒரு இடத்திலே இருந்து அவன் தந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல உணர்ந்தான். அவனை அறியாமலே அவன் கண்கள் கலங்கின, கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே நடந்தான்.
11 கருத்துக்கள்:
ஊர் ஞாபகம் வந்துருச்சா!!!
அது என்ன குடுப்பச்சண்டை????
தளபதி கொஞ்ச நாளா எழுத்துப் பிழை விடாம இருந்தாரு... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு போல....
கதைக்களம் நன்றாக இருக்கிறது. நடை இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
சண்டை போட்டா தான் பொழுது போகும் :0)))
கதை நல்லாருக்கு...
//
பழமைபேசி said...
தளபதி கொஞ்ச நாளா எழுத்துப் பிழை விடாம இருந்தாரு... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு போல....
//
சண்டை மாதிரி இதுவும் வழக்கம் தான? :0))))
அமெரிக்கால பாத்த குடும்பச்சண்டையா இல்ல ஊர்ல பாத்த சண்டையா ?ஏன்னா பாருங்க நசர் எவ்ளோ ரசிச்சு ஊர்ச்சண்டை பாத்திருக்கார்ன்னு.
அழகா கதை எழுறீங்க.ஏதோ ஒரு விஷயம் இருக்கும் நகச்சுவையோட கலந்து.
யதார்த்தமா இருக்குங்க....
பிரபாகர்.
ம்ம்ம்... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. :(
touchchu pannitteenga..!
கனவு நல்லா இருக்கு, முழுவதும் படிச்சி முடிச்சவுடனே யாரு கிட்டேயாவது சண்டை போடணும் போல இருக்கு :)
ஆமா! அங்கே எல்லாம் நீங்க ரொம்ப சண்டை போடுவீங்களா? ஏன் கேட்டேன் என்றால் ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. சில இடத்துலே கனவு மாதிரி இல்லையே:)
நிஜம்மா சண்டை போட்ட மாதிரியே இருக்கு எனக்கு
Post a Comment