என்னை கல்யாணம் பண்ணுவியா?
என்னை கல்யாணம் பண்ணுவியா என்கிற வசனத்தை முதல்ல துரைமார்கள் படத்திலே தான் பார்த்தேன், வைர மோதிரத்தை கையிலே எடுத்துகொண்டு வெள்ளையம்மா முன்னாடி மண்டியிட்டு கேட்பார், அதை கேட்டுட்டு மின்சாரத்தை தொட்டதுபோல கைய கால உதறி ஒரு நட்டுவக்காலி குதி குதிச்சி வராத கண்ணீரை வரவச்சி ஆமான்னு சொல்லுவதை கேட்ட வெள்ளையப்பன் செத்துப்போன குழியிலே இருந்து உயிரோடு வந்ததுபோல ஒரு சந்தோசப் பார்வைப் பார்த்து வெள்ளயம்ம்மா வாயிலே வாயை வைத்து பழசாறு குடிக்கிறதோட படத்தை முடிப்பாங்க.
இப்படிப்பட்ட கலைநயம் மிக்க படங்களைப் பார்த்து நானும் இந்த வசனத்தை யாரிடமாவது சொல்லணும் என்று நினைச்சிகிட்டே ஐந்து வருடம் ஓடிபோச்சி, ஆறாவது வருசத்திலே நான் அமெரிக்கா வந்துவிட்டேன். இங்க எனது பொழுதுபோக்குகள் என்னண்ணன்னு பேச நேரமில்லை, அதைப்பத்தி பின்னாளிலே பார்க்கலாம்.
ஒரு நாள் அழகிய மாலை நேரத்திலே நான், வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்(teller) முன்னே நிற்கிறேன்,தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் வேலை செய்யாததாலே, மாலையிலே மருந்து குடிச்சி மட்டையாக பணம் எடுக்க வரிசையிலே காத்துகொண்டு இருந்தேன். எனது முறை வந்தபோது என்னை அழைத்தாள் ஒரு கருப்பழகி, அதாவது கருப்பம்மா, இவ்வளவு நாளும் வெள்ளையம்மாளுக்கு துண்டு சேவை செய்த நான் இன்று கருப்பமாவுக்கு சொம்பு அடிக்கப்போறேன். துண்டு விசயத்திலே நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபிக்கவே இந்த முயற்சி.
எனக்கு வணக்கம் வைத்துவிட்டு,வந்த விஷயம் கேட்டவளிடம் பணத்தேவையை சொன்னேன், அதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு பணம் கொடுக்கும் முன்
"உங்க கடன் அட்டைக்கு வெகுமதியா நீங்க செலவழிக்கும் ஒவ்வொரு நூறு டாலருக்கும் பத்து டாலர் திரும்பி வரும், உங்களுக்கு இந்த முறையை தேர்ந்து எடுக்க விருப்பமா ?"
"இந்த சேவைக்கு வருடாந்திர கட்டணம் ஏதும் இருக்கா?"
"இல்லை.. இலவசம்"
"இப்ப இலவசமுன்னு சொல்லிட்டு அப்புறமா காசை ஆட்டையப்போட்ட என்ன செய்ய, உங்களிடம் வந்து காசு கேட்கவா?"
அவங்களுக்கு ஒரே சிரிப்பு பதில் சொல்லமுடியாம, கருப்பம்மா சிரிக்கிற அளவுக்கு நகைச்சுவை சொல்லி இருக்கேன்னு நினைப்புக்கு போகும் முன்னேதான் அவள் அழகைப் பார்த்தேன், கருப்பா இருந்தாலும் அடுத்தவர்களை கவரும் முகம், அவளின் சிரிப்பு அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது. வர்ணிப்பு அம்புட்டுத்தான். சாணிய கரைச்சி ஊத்துற அகாடெமி விருது பெறனும்முன்னு வர்ணிப்புகளை ரெம்ப குறைத்துவிட்டேன்(இதெல்லாம் ஒரு பொழப்பா).
அதன்பின் அவளோட சிரிப்பை பார்க்க தினமும் ஒரு முறையாவது அவளை வங்கியின் கண்ணாடி வழியாக இருந்து பார்ப்பேன்,வாரத்திலே மூன்று முறையாவது பணம் எடுக்கும் சாக்கிலே அவளை சந்திப்பேன், ஒரு நாள் என்னிடம்
"வெளியே தானியங்கி பணம் எடுக்கிற இயந்திரம் இருக்கும் போது நீங்க இங்க வர சிறப்பு காரணம்?"
"உங்களைப்பார்க்க, உங்க சிரிப்பை பணத்தோட பையிலே அள்ளிப்போட்டு போகத்தான்"
கேட்டுட்டு சிரித்துவிட்டு
"வேற ஏதும் இருக்கா?"
"இன்னும் நிறைய இருக்கு, ஆனா அதை இங்க சொல்லமுடியாது"
"நான் கேட்டது வங்கி விசயமா?"
"நான் கேட்டது வாழ்க்கை விசயமா?"
"நல்லாவே பேசுறீங்க"
"உங்க அழகைப் பார்த்தா பேச்சு நயாகரா அருவி மாதிரி வருது"
"ம்ம் பார்க்கலாம்"
"உங்க வேலை எப்ப முடியும்?"
முடியுறப்ப சொல்லுறேன், இப்ப நீங்க போகலாம். அடுத்த வாடிக்கையாளர் காத்துகொண்டு இருக்கிறார்.
எளவெடுத்த
சனியன்
நிம்மதியா
இருக்க
விட மாட்டானே
என்ற ஒரு இலக்கிய கவிதை(வரி வரியா இருக்குல்ல, வேற என்ன வேணும் கவிதைக்கு) மனதிற்குள்ளே நிழலாடி விட்டு சென்றது.அன்று மாலையே அவளை சந்தித்தேன்.
"குட்டிபோட்ட பன்னி மாதிரி எங்க அலுவலகத்தை சுத்தி வந்து என்னை சந்தித்துவிட்டீர்கள்?"
"நூறு சதவீத அர்ப்பணிப்பான உழைப்பு எனது வெற்றியின் ரகசியம்"
"இன்று எனக்கு நிறைய நேரம் இல்ல, நாம ரெண்டு பேரும் காபி குடித்து விட்டு செல்லலாம்"
சரி என்று தலையாட்டிவிட்டு, காபியுடன் கடலையை முடித்தேன், அன்று முடிந்த சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது, காபியோட நில்லாம சாப்பாடு வரை சென்றது. சந்திப்புகள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், இன்னும் என் மனசிலே உள்ள எண்ணத்தை சொல்லலை,அவளிடம் பேசும் போது, அவளுடைய தரத்திற்கு ஏற்றவாறு எனது பேச்சுக்கள் அமையும், கொஞ்சம் ௬டஅவளை சோர்வு அடைய செய்யாதவாறு பார்த்துகொள்வேன்.
ஒரு நாள் நாங்கள் இருவரும் வார இறுதி நாட்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நான் அவளிடம்
"நடன விடுதிக்கு செல்வோமா, நாம ரெண்டு பேரும்"
ஒரு நாள் நாங்கள் இருவரும் வார இறுதி நாட்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நான் அவளிடம்
"நடன விடுதிக்கு செல்வோமா, நாம ரெண்டு பேரும்"
"ம்ம் போகலாம் .. ஆனா இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் செல்வோம்" என்று சாதரணமாக பதில் சொன்னாள்.என் மனசிலே அசாதாரண மாற்றம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் நடன விடுதிக்கு செல்ல குறித்து வைத்து இருந்த நாளும் வந்தது, அவளை நடன விடுதி முன் சந்தித்தேன்.என்னைபார்த்து புன்னகை புரிந்தாள்.
"ஆட்ட விடுதிக்கு உள்ளே போகலா"
"ஒரு ரெண்டு நிமிஷம்"
ரெண்டு நிமிஷம் பத்து நிமிசமாச்சி, பதினைந்தாவது நிமிசத்திலே எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு குரல்
"யே பேபி..என்னைய நினைச்சி ஏங்குறியா " என்று கேட்டவனிடம்
"அடி செருப்பால...நீ எல்லாம் ஒரு மனுசானா?"
"எம்மேல கோபமா?"
"இவனை பாத்து நல்லா கத்துக்கோ?" என்னை கை காட்ட
"ஒ.. இவ்வளவு நாளும் என்னிடம் சரியாப் பேசாததுக்கு இவன் தான் காரணமா?"
"ஒரு பெண்ணை எப்படி சந்தோசமா வச்சி இருக்கனுமுன்னு வெளிநாட்டு பன்னிக்கு தெரியுது, உள்ளூர் ஓணான் உனக்கு தெரியலையே"
பன்னின்னு சொன்னதுக்கு நானே கவலைபடலை, ஆனா ஒணான் பெயரைகேட்டு அண்ணாச்சி கடும்கோபத்திலே இங்கலிபிசிலே ஐஞ்சி நிமிசத்துக்கு விடாம ஒரே திட்டு, திட்டு முடிச்ச உடனே ரெண்டு பேரும் என்னையப் பார்த்தாங்க, நான் அமைதியாவே இருந்தேன், உடனே கருப்பமா
"இந்த திட்டை எல்லாம் கேட்டுகிட்டு என்னால சும்மா இருக்க முடியலையே" என்று புலம்ப, உடனே நான் கருப்பண்ணாச்சியிடம்
"நான் வெளிய பல்ல காட்டிட்டு மொக்கை அடிக்கிற ஆளா இருந்தாலும், உள்ளுக்குள்ளே பல்லகடிச்சிகிட்டு எழுதுற இலக்கியவாதி துங்கிகிட்டு இருந்தான், நீ இவளை திட்டி அவனை எழுப்பி விட்டுட்ட, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, இனிமேல இவளை திட்டின உன் மண்டையிலே கொட்டுவேன்"
மறுபடியும் ரெண்டு பேரும் என்னையப்பார்த்தாங்க, உடனே கருப்பம்மா
"பக்கி .. பக்கி இவன் விடாம உன்னையதானே இவ்வளவு நேரமும் திட்டினான், நீ என்னைய திட்டாதேன்னு சொல்லுறே?"
சாதாரணமாவே அண்ணாச்சிமார் பேசுறது புரியாது, இந்த லட்சணத்திலே என்னை திட்டினா எப்படி புரியும், இருந்தாலும் சமாளிச்சேன்.
"உனக்காக எதையும் தாங்குவேன்"
"இவனுக்கு என் மேல இருக்கிற அன்பில கால் வாசி உன்னிடம் இருக்கா, இவன் காலை நல்ல கழுவி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்"
நான் உடனே "இப்ப தண்ணிக்கு எங்க போக, அதுமட்டுமில்லாம இந்த குளிரிலே சூவை எல்லாம் கழட்டனும்"
நான் சொன்னதை எல்லாம் பொருள் படுத்தாமல் அண்ணாச்சி கருப்பம்மா முன்னாடி மண்டியிட்டு பையிலே இருந்த மோதிரத்தை எடுத்து
"வில் யு மார்ரி மீ?" கேட்டுட்டு அப்படியே கருப்பம்மா கண்களைப் பார்த்து ஏக்கத்துடன் காத்துகொண்டு இருந்தார்.இதை சற்றுமே எதிர் பாராத கருப்பம்மா
"ஏய்ய்ய்ய்ய்... நீ என்ன பண்ணுற.. நீ என்ன பண்ணுற .. நீ என்ன" என்று சொல்லிவிட்டு அவனைமட்டுமே பார்த்தாள். அவன் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்து இருக்கவேண்டும்.கொஞ்ச நேரத்திலே ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாமல் அவன் கைகளை பற்றி கொண்டு ஆமா என்ற ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்,நான் அந்த இடத்தை விட்டும்,அவள் என் மனதைவிட்டும் வெளியேற அந்த ஒரு வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது.
8 கருத்துக்கள்:
மொத மொய் நான் தான்
Thalabathi! Onnum aavalaiye?
இடுகை படித்த பின்னர்
இமையோரம் எனது கண்ணீர்
காதல் கருவண்டு
கருப்புகிட்டயும் விக்கலையே துண்டு
(ஒன்னு கீழ ஒன்னு எழுதி இருக்கு. என்னன்னு சொல்ல தேவையில்லை)
:)))))). நாளானாலும் சரக்கு மிடுக்குதாம்வே. பேசாம தமிழ் சினிமாக்கு கதை எழுத போகலாம். ஒரே மாவுல இட்லி, தோசை, ஊத்தப்பம், குழியப்பம்னு எத்தனை விதமா படைக்கிறீரு. நீர் படைப்பாளி நீரே படைப்பாளி.
மொத மொய் நான் தான்
---
இந்த டீல் புடிச்சிருக்கு!
அதென்ன உள்ளூர் ஓணான்... தொப்பையில்லையோ?
வெள்ளையம்மா... கருப்பம்மா... பச்சையம்மா... போதுமா...:)))... ஆனாலும் அடி வாங்கின விசயமெல்லாம் மறைச்சு வெறும் பேச்சு வார்த்தைய மட்டும் சொல்லிட்டீங்கனு ஒரு வருத்தம்... எப்படியோ உங்களால ஒரு ஜோடி சேந்தது நல்ல விஷயம் தான்...:))))
:))
உண்மையெல்லாம் சுயசரிதையா எழுதுறீங்க அண்ணாச்சி!
மகாத்மா ஆகிடுவீங்களோ?
#பயம்
இந்த சிரிப்பு சிரிச்சு எத்தனை நாளாச்சு:)
//மொத மொய் நான் தான்//
எல்லோரும் ஆள மறந்துட்டாங்கன்னு தனக்குத் தானே திட்டம் நல்லாவே இருக்குது:)
Post a Comment