Wednesday, January 26, 2011

கணித்துறையும்,கடவுச்சொல்லும்


கணித்துறையிலே வேலை பார்க்கிறவங்க கடவுச்சீட்டு ௬ட இல்லாம இருக்கலாம்,ஆனா கடவுச்சொல் இல்லாம இருக்க முடியாது, வெள்ளைக்கார துரைமார்கள் நமக்கு ஓசியிலே உலகவிசயம் முதல், உள்ளூர் பட்ட சரக்கு வரை பேசுவதுக்கு பல இலவச மென் பொருட்கள் கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் பாவிக்க தனிப்பட்ட பெயரும்,கடவுச்சொல்லும் அவசியமாக  இருக்கிறது. துரைமார்கள் தண்ணியப் போட்டுட்டு நடுத்தெருவிலே நட்டுவாக்காலி ஆட்டம் ஆடிகிட்டே இலவசமா முத்தபடம் காட்டினாலும், தனிமனித உரிமைய ரெம்ப மதிப்பவர்கள், அதாவது பல் இருக்கவன் பக்கடா திங்கான் என்ற பொன்னான பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள்,நோகாம நொங்கு திங்கவருகிட்ட போய், நீ ஏன் நொங்கு திங்கன்னு கேட்க௬டாது, அவரு கேட்டவரு நொங்கை கழட்டி விட்டுடுவாரு.

இப்பேர்ப்பட்ட மகான்கள் தயாரித்த மென் பொருட்களை பாவிக்கிற எல்லோருக்கும் கடவுச்சொல் பத்தி நல்லா தெரிந்து இருக்கும், மின் அஞ்சல் முகவரி ஆகட்டும், மின் அரட்டை முகவரியாகட்டும் எல்லாமே கடவுச்சொல்லிலே இருக்கிறது நம்மோட ரகசியங்கள், உங்க கடவுச்சொல்லை ஆட்டையப் போட்டுவிட்டால், ரகசியங்கள் எல்லாம் வெளியே வந்து நாம ஒரு பொதுஜனம் ஆகிடுவோம். துரைமார்கள் ஒண்ணு ரெண்டு மென் பொருட்கள் கொடுத்து இருந்தா கடவுச்சொல் ஞாபகம் வைத்து இருப்பது சுலபம், ஓசியிலே கிடைக்கிறது என்பதற்காக கிடைக்கிற எல்லாம் இடத்திலேயும் துண்டு போட்டு வைக்கிற என்னைமாதிரி ஆட்கள் கடவுச்சொல் ஞாபகம் வைக்க சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய வரும்.

இந்தமாதிரி மென் பொருட்களுக்கு  எல்லாம் கடவுச்சொல் ஒரு தடவை கொடுத்தப் போதும், நாம மாத்தாத வரை ஒண்ணும் பிரச்சனை இல்லை, ஆனா அலுவலகங்களிலே வேலை செய்பவர்கள் கடவுச்சொல்லை நிரந்தரமா வைத்து இருக்க முடியாது, வேலை பார்க்கிற நிறுவன கொள்கைப்படி ஒவ்வொரு நாப்பதுநாளுக்கு ஒரு தடவையோ மாதம் ஒரு முறையோ கடவுச்சொல்லை மாத்தணும். அதாவது செய்யுற வேலையும், வாங்குற ௬லியும் நிரந்தரம் இல்லைன்னு மறைமுகமா சொல்லுறதுதான் இந்த கொள்கை. கடவுச்சொல் மாத்தும் போது, இப்ப பயன்படுத்திக் கிட்டு இருக்கிற முன்னாள் காதலன்/காதலி(?) பெயரையோ, இதுக்கு முன்னாடி பயன்படுத்திய காதலன்/காதலிகள்(?) பெயரையோ பயன் படுத்த முடியாது. ஆண் பெண் ரெண்டு பெயரையும் எழுதி நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபித்துள்ளேன்(பதிவுலகம் ஒரு மனுசனை என்ன பாடு படுத்துது பாருங்க).

கடவுச்சொல் வைப்பதற்க்கெனவே பல சூத்திரங்கள கடைபிடிப்பார்கள், அடுத்தவங்களாலே கண்டு பிடிக்க முடியாத படி கடவுச்சொல் வைப்பதிலே அலாதி பிரியம். கடவுச்சொல் எப்படி இருக்கனுமுன்னு கணணி ஜோசியம் எல்லாம் பார்ப்பாங்க(?).என்னதான் திடமா கனமா கடவுச்சொல் வைத்தாலும்,கொடுத்த சரக்கை சரியா செய்யலைனா, அடுத்த நாளே அலுவலகம் போக முடியாது. நானும் வேலைக்கு சேர்த்த புதுசிலே இப்படித்தான் கடவுச்சொல்லை கண்டு கலங்கி, முதலிலே பிடிச்ச நடிகர்கள், நடிகைகள் பெயர்கள், கொஞ்ச நாள் கழித்து, நான் போட்ட துண்டுகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து, அவங்க பேரு, அப்புறமா பஸ்ல பேரு கேட்டவங்க ,ரயில்ல எக்ஸ்குஸ்மி சொன்னவங்க, ஆடோவிலே அல்லோ சொன்னவங்க இவங்க பேரு எல்லாம் வைத்து முடித்து விட்டேன், ஆனா கடவுச்சொல் முடியவில்லை.

சூத்திரம் போட்டு கடவுச்சொல் போட்டுப்பார்த்தேன் தற்கொலைன்னு வந்தது.சூத்திரம் எழுதுவதும், தற்கொலையும் ஒண்ணுதான்னு அப்படியே திட்டத்தை கை விட்டேன். ஆனாலும் கடவுச்சொல் இம்சை தாங்க முடியலை. என்ன செய்யன்னு தெரியலை, சோறு தண்ணி இறங்கலை. சும்மாவே வேலை செய்ய மாட்டேன், அதுவும் கவலை வந்துவிட்டால் வேலையைப் பத்தி யோசிக்கவே மாட்டேன்.கடவுச்சொலை பற்றி   யோசித்தேன், யோசித்தேன், விடையே கிடைக்கலை.

ஆங்கிலத்திலே புளி வித்தாலும், நான் ஒரு டமில் புலி என்பது ஞாபகம் வந்தது, உடனே கடவுச் சொல் கவலை, பகலவனை கண்ட பனிபோல, தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டும் போது காவல் துறையைப் பார்த்ததும் ஓடிப்போகும் போதைபோல என்னைவிட்டு ஓடிப்போனது. என்னோட கட்டுக்கடங்கா தமிழார்வ போதை தனிய நான் முதல்ல வைத்த கடவுச்சொல் "கொய்யால", அந்த பேரு வச்ச அடுத்த நாளே மறந்து போச்சி, ஆலுவலக கணணியிலே நுழைய முடியலை,அருகிலே இருந்த நண்பர்  பொறுமை இழந்து "கொய்யால நீ என்ன பேருதான் மாத்தின", நான் சொன்னேன் "கொய்யால", இந்த வரிசை ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை கடவுச் சொல்லுக்குக்கு பஞ்சமே வந்ததில்லை, இந்த வகையிலே ஒரு சில உதாரணங்கள் "முட்டாள்", "மடையன்". இந்த மாதிரி மிகப்பெரிய பட்டியலே இருக்கு என்னிடம் வேண்டுமா உங்களுக்கு?


18 கருத்துக்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

ராமலக்ஷ்மி said...

:))!

இராமசாமி said...

கணித்துறைனாக்கா இன்னா

அமைதிச்சாரல் said...

:-))))))))

வானம்பாடிகள் said...

அடங்கொன்னியா:)))

சே.குமார் said...

அடங் கொய்யால.... :) :) :)

அமுதா கிருஷ்ணா said...

நான் password,computer,
keyboard,desktop இப்படி கடவு சொல்லாக வைத்து இருந்தேன்.

நல்லவன் கருப்பு... said...

// வானம்பாடிகள் said...
அடங்கொன்னியா:)))

//

இந்த வார்த்தையகூட கடவு சொல்லா பயன்படுத்தலாம் போல....

சேக்காளி said...

//சும்மாவே வேலை செய்ய மாட்டேன், அதுவும் கவலை வந்துவிட்டால் வேலையைப் பத்தி யோசிக்கவே மாட்டேன்.//
வேலை கொடுத்தவங்க ரொம்ப நல்லவங்க.

ஹேமா said...

நசர்...ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம்.இந்த “கொய்யால”ன்னா என்ன?என் தமிழ்நாட்டுச் சிநேகிதர் அடிக்கடி சொல்றார்.கேட்டா சொல்லமாட்டேன்றார் !

நீங்க சொல்லுங்க.பிடிச்சிருந்தா நான் கடவுச் சொல்லா “கொய்யால”ன்னு வச்சுக்கிறேன் !

Sethu said...

இன்னிக்கு ஒரே பழமொழியா பூத்து குலுங்குது இங்கிட்டு. கடவு சீட்டை கடாசிட்டு சிங்கள் sign on வந்துகிட்டிருக்கு தளபதி. ஒன்னு காலி ஊரே காலி. எப்புடி.

Sethu said...

எனது பின்னூட்டத்தில கடவு சொல்லுக்குப் பத்தி தவறுதலாக கடவு சீட்டு என்று சொல்லிவிட்டேன்.

எனக்கு ஏன் எல்லா மொழிகளும் விளக்கெண்ணையா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

மாணவன் said...

ஓகே ரைட்டு... :-))

S.R.Rajasekaran said...

ரெம்ப நல்லா இருக்கு கடவு சொல் -வேற என்னத்த சொல்றது

பழமைபேசி said...

சேவாக்குக்கு போட்டியா இங்கால ஒருத்தர் அடிச்சி ஆடுறாருங்கோ...

ராஜ நடராஜன் said...

//நானும் வேலைக்கு சேர்த்த புதுசிலே இப்படித்தான் கடவுச்சொல்லை கண்டு கலங்கி, முதலிலே பிடிச்ச நடிகர்கள், நடிகைகள் பெயர்கள், கொஞ்ச நாள் கழித்து, நான் போட்ட துண்டுகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து, அவங்க பேரு, அப்புறமா பஸ்ல பேரு கேட்டவங்க ,ரயில்ல எக்ஸ்குஸ்மி சொன்னவங்க, ஆடோவிலே அல்லோ சொன்னவங்க இவங்க பேரு எல்லாம் வைத்து முடித்து விட்டேன்//

நடிகர்,நடிகை சரி,பஸ்ல பேரு,எக்ஸ்குஸ்மி,அல்லோகாரங்க பேரு நினைவு டெக்னிக்கை சொன்னா நாங்களும் கத்துக்கோவமில்ல:)

ராஜ நடராஜன் said...

முன்னாடி பின்னூட்ட கடவுச்சொல்லே பரவாயில்ல போலிருக்குதே.நான் கடைசி பாராவ படிக்கவேயில்லை:)