Tuesday, May 25, 2010

அத்தை மகள்


கோவிலுக்கு நேந்து விட்ட ஆடு போல கிராமங்களிலே உறவுகாரகள் அத்தை/மாமா  மகன்/மகளை பிறந்த உடனேயே நாள் குறிச்சி வச்சுடுவாங்க, உன் பையன், என் மகளை தான் கட்டனும், உன் மக, என் மகனை தான் கட்டணுமுன்னு,பிறந்த பிள்ளை பாலுக்காக அழுதுகிட்டு இருக்கும், பெருசுகள் எல்லாம் இந்த விசயத்தை விவரமா பேசிகிட்டு இருப்பாங்க.

பேசி முடிச்ச தினத்திலே இருந்து அந்த பெண்ணையோ, பையனையோ சின்ன வயசிலே இருந்து, நீ உன் மாமன் மகளை தான் கட்டனும், நீ உன் அத்தை மகளைத்தான் கட்டணுமுன்னு மனசிலே உரம் போட்டு வைப்பாங்க, ஏன்னா விவரம் தெரிஞ்ச உடனே வேற இடத்திலே துண்டு போட்டு கம்பிய நீட்டி விடக் ௬டாது என்பதற்காக.இப்படி குடும்பத்துக்காக நேந்து விட்ட பலி ஆடுகளில் நானும் ஒருவன், எனக்கும் எனது அத்தை மகள் என்று நான் பிறந்த உடனே முடிவு எடுத்து விட்டார்கள்.  

எங்க ரெண்டு பேருக்கும் வெவ்வேறு ஊர் என்பதனாலே நாங்க இரண்டு பேரும் சந்திப்பதே அரிது, எனக்கு இப்படி ஒரு விவகாரம் நடந்து முடிந்த கதையெல்லாம் எனக்கு தெரிய வந்தது, நான் பத்தாம் வகுப்பு முடிந்த பின் கோடை விடுமுறைக்கு நான் எங்க அத்தை வீட்டுக்கு சென்ற போது தான்.

எங்க வீட்டிலே எனக்கு நிச்சயம் செய்து இருக்கிற இன்னொரு கல்யாண பலி ஆட்டைப்  பத்தி அதிகமா எங்க அப்பாவாலே பேசமுடியாது, ஏன்னா அது எங்க அப்பா வழி சொந்தம், அப்பா சிலசமயம் என்னிடம் இதை பற்றி பேசும் போது அம்மாவின் காதிலே விழுந்து விட்டால், அடுத்த ரெண்டு நாளைக்கு அவரோட சேர்த்து எங்களுக்கும் பட்னி தான்.

அதனாலே எங்க அப்பா என்கிட்டே அடிக்கடி சொந்தம் ரெம்ப முக்கியம், ரெம்ப முக்கியமுன்னு, நான் என்னவோ ஆணழகன் மாதிரி எனக்கு துண்டு போட உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அழகிகள் எல்லாம் வரிசையா இருக்கிற மாதிரி சொல்லுவாரு, ஆனா என் அம்மாவுக்கு எல்லாம் இந்த கவலை இல்லை, இவன் நாயா அலைந்சாலும் தெரு நாய் ௬ட திரும்பி பார்க்காதுன்னு தெரியுமோ என்னவோ.

எனக்கு நிச்சயிக்கப் பட்ட கல்யாண பலி ஆட்டை நல்லா தண்ணிய தெளிச்சி நல்லாவே தயார் பண்ணி வச்சி இருந்தாங்க, நான் அவளோட ஊருக்கு போன ரெண்டு நாளு என்௬ட பேசவே இல்லை. அடுத்த நாளிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பித்து ஒதுக்கீடு பண்ணி வச்சி இருந்த இடம் இன்னும் கை மாறலைன்னு உறுதியாக்கிட்டு,இருந்த துண்டை பத்திரப் படுத்திட்டு ஊருக்கு வந்தேன்.

அடுத்த வருஷம் விடுமுறைக்கு அவ எங்க ஊருக்கு வந்தா, ஆனா எங்க வீட்டுக்குள்ளே வர முடியலை, இருந்தாலும் எனக்கு அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேசினோம், எனக்கும் அவளைப் பிடிக்க ஆரம்பித்து.

பன்னிரண்டு முடித்து கல்லூரி சென்றேன், எங்களது பயணம் கடிதம் மூலம் தொடர்ந்தது, இப்படி கடிதப் போக்குவரத்து நடை பெற்று கொண்டு இருந்த கால கட்டங்களிலே, ௬ட படிக்கும் நண்பர்கள் பலர் கல்லூரியிலே துண்டை போட்டு உசார் பண்ணிடாங்க, அதையெல்லாம் பார்த்து எனக்கும் மனசுக்குள்ளே "இவங்களுக்கெல்லாம் விழும் போது, எனக்கு விழாதா",அந்த கேள்விக்கு அப்புறமா துண்டு திசை மாற ஆரம்பித்து. அது மட்டுமில்லாம ஊரிலே தாவணி மட்டுமே பார்த்து பழகிய எனக்கு, நகரத்திலே அந்த நேரத்திலே இருந்த நவ நாகரிக உடைகளையும், குளிக்கவே இல்லைனாலும், முகத்திலே பற்பசை, முகப் பசைகளை அப்பிகிட்டு வரும் அழகு பெண்களைப் பார்த்து இந்த பச்ச மண்ணு கெட்டுப் போச்சி, எனக்கும் ஒண்ணு இப்படி கிடைக்காதான்னு கனவு காண ஆரம்பித்தேன்.

துண்டு திசை மாறினாலும் கடித போக்கு வரத்து தடை இல்லாமல் போய் கொண்டு இருந்தது, எதுவுமே கிடைக்கவில்லையென்றால் கைவசம் இருக்க வேண்டியதை காப்பாற்ற வேண்டிய நிலைமை. கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது ஊருக்கு போன நான் அவளோட தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கிட்டு வந்தேன், என்னைய நம்பி எங்க வீட்டிலே பத்து ரூபா ௬டக் கொடுக்கமாட்டாங்க,ஆனாலும் ஒரு பவுன் தங்கச்சங்கிலி கிடச்ச சந்தோசத்திலே சேட்டு ஆயிரம் ரூபா கொடுத்தார், அவருக்கு நல்லாவே தெரியும் நாங்க அடகு வச்சா அது கண்டிப்பா முங்கிருமுன்னு.

நான் சங்கிலி வாங்கிட்டு வந்த விஷயம் ஊரு பூரா தெரிஞ்சி, ஊரிலே இருந்த பெருசுகள் எல்லாம் விவகாரமா முடியுமுன்னே கால்கட்டை போட்டு விடலாமுன்னு சொல்ல, என் அம்மா மட்டும் அரை மனதோட என்னிடம் கேட்டுட்டு விட்டு முடிவு எடுக்கலாமுன்னு சொல்லி விட, அடுத்த முறை ஊருக்கு போன உடனே  எல்லோரும் என்னைப் பார்த்து "எப்படா கல்யாணம்..? எப்படா கல்யாணம்?  கேட்டாங்க, நானும் என்ன விவரமுன்னு வீட்டிலே அம்மாவிடம் விசாரித்தேன்.

"அவ மேல ஆசை இல்லைமையா சங்கிலியை வாங்கிட்டு போன?"

"அப்படீல்லாம் ஒன்னும் இல்லை.. சும்மா தான், இவ்வளவு தூரம் வருமுன்னு எதிர் பார்க்கலை, இப்ப என்ன செய்ய?"

"முதல்ல அவ சங்கிலியை திருப்பி கொடு?"

அவசர அவசரமா கல்லூரிக்கு ஓடிப் போய் கிடச்சவங்க கையிலே காலிலே விழுந்து சங்கிலியை திருப்ப ரூபா தேத்தி, சந்தோசமா இருந்த சேட்டு வையத்திலே மண்ணை அள்ளிப் போட்டுட்டு சங்கிலியை வீட்டுக்கு கொண்டு வந்தேன்.அம்மாவிடம் கொடுத்து கொடுக்க சொல்லியாச்சி, அதோட கடித போக்கு வரத்து நின்னு போச்சி.

கொஞ்ச நாளிலே நானும் வேலை தேடி சென்னை வந்தேன், ஊர் மக்களும் என்னையப் பத்தி மறந்து போய்ட்டாங்க, நானும் அவளை சுத்தமா மறந்துட்டேன், அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா கேள்விபட்டேன், இன்னும் கொஞ்ச நாளிலே தொல்லி முடிந்து விடும் என்று நினைத்து கொண்டேன்.

அடுத்த ஆறுமாசத்திலே என்கிட்டே பல பேரு பல நுறு முறை கேட்டாங்க, நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன், இந்த தொல்லைக்கு பயந்தே ஊருக்கு பக்கமே வருவது கிடையாது, ஒரு வழியா அவளுக்கு கல்யாணம் முடிந்து விட்டது.

நானும் நிம்மதியா வேலை தேட ஆரம்பித்தேன், ஊரு பக்கமே போகம இருந்த நான் அடிக்கடி ஊருக்கு போனேன், கையிலே காசு இருக்கும் வரை வேலைதேடி அலைவேன், காசு காலி ஆனதும் திரும்பவும் ஊருக்கு வருவேன், இப்படியே காலத்தை ஓட்டினேன், ஆனா வேலை கிடைத்த வழி இல்லை, நான் எப்ப காசு கேட்டாலும் முகம் சுளிக்காம கொடுக்கும் அம்மா ஒரு நாள்

"நீ எப்படா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்தப் போற, வேலை வெட்டி இல்லாத உனக்கு ஊருக்குள்ளே யாரும் பெண் கொடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க, உன்னைய நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு?"

பேசிகிட்டு இருக்கும் போதே யாரோ வாசல் முன்னால இருந்து கதவை தட்டினாங்க,வெளியே போய் பார்த்தேன், என் அத்தை மகள் வெளியே நின்று கொண்டு இருந்தாள், எனக்கு என்ன பேசுவதுன்னு தெரியலை, எங்க அம்மாவும் பின்னாலே வந்து, அவளை உள்ளே வரச்சொல்லி நலம் விசாரித்தார்கள், நான் பல வருஷம் முன்னாடி பார்த்ததை விட மிகவும் சந்தோசமா இருந்தாள்.போகும் முன்னே பத்திரிக்கையை கொடுத்து விட்டு போனாள்.

படித்ததிலே தெரிந்து கொண்டேன், அவளோட மகள் பெரிய மனுசி ஆகிவிட்டாள் அதற்கு அழைப்பு விடப் பட்டு இருந்தது.அத்தை மகளுக்கு கல்யாணம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகி விட்டது என்றும், எனக்கு தலை முடி கொட்டி, பாதி முடி நரைத்து விட்டது என்று தெரிந்தாலும், இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தை விட வாய்ப்பை தவற விட்டு விட்டேனோ என்கிற வருத்தம் என் மனசிலே வந்தது.


Thursday, May 20, 2010

வளவளத்தாவின் காதல்


நான் கணக்கிலே புலி, எங்க வகுப்பிலே முதல் மாணவன், முதல் மாணவன் வரிசையிலும் சரி, படிப்பிலும் சரி, ரெண்டு தடவை முதல் மாணவன்னு எழுதி இருக்கேன் நல்ல படிக்கணும், என முன்னாடி கணக்கிலே யாரும் தப்பு பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும், தமிழை தப்பு தப்பா எழுதினா சீத்தலை சாத்தனாருக்கு கோபம் வருகிற மாதிரி, நல்ல வேளை அவரு எல்லாம் உசிரோட இல்லை, இருந்தா என கையை ஓடிச்சி இருப்பாரு.  

வளவளவத்தா எங்க வகுப்பிலே மச்சினிச்சி பெஞ்சு, வாத்தியாரு பாடம் நடத்தி கிட்டு இருக்கும், வள வள ன்னு பேசிகிட்டே இருப்பாள், அப்படி என்ன உலக மஹா விஷயம் பேசுவாளோ, தூங்குற நேரம் தவிர மற்ற நேரம் வாய் அசைஞ்சி கிட்டே இருக்கும்.

நான் பெண்களட பேசுவதற்கு ரெம்ப ௬ச்சப் படுவேன், அதனாலே அவகிட்டன்னு இல்லை, யாரிடமும் பேசவதும் இல்லை, பேசனுமுன்னு ஆசைப் பட்டதும் இல்லை, ஒரு நாள் இப்படித்தான் வகுப்பில் இருந்த இன்னொரு சக தோழி

"சைன் 30 யும், சைன் 30 யும் பெருக்கினா என்னடி வரும் ?" என்று கேள்வி கேட்டவளிடம் வளவளத்தா

"சத்தியமா நம்ம வகுப்பிலே இருக்கிற குப்பையோ, இல்லை உன் மனசிலே இருக்கிற குப்பையே வராது"  ன்னு சொன்னாள். நான் கணக்கு சாத்தனார் என்பதாலே எனக்கு வந்த கோபத்திலே

"பக்கி,பக்கி தெரியலைனா கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதானே" ன்னு சொல்லிட்டு 0.97620649 வரும் ன்னு சொன்னேன்.


யாரைப் பார்த்து பக்கின்னு சொன்னே பக்கிபயலே ன்னு ஆரம்பித்து ஒரு அரைமணி நேரமா விடாம என்னை திட்டினா, திட்டி முடிச்சதும், நான் சொன்னேன் பேசிப் பேசியே களைத்து போய் இருப்ப, இந்த கொஞ்சம் தண்ணி குடி ன்னு பாட்டிலை கையிலே கொடுத்தேன்.பாட்டிலை வாங்கிவிட்டு,அவளையை அறியாமலே அவளுக்கு சிரிப்பு, முதல் முதல்ல அவளை முகத்திற்கு முகம் பார்க்கிறேன், இவ்வளவு நாளா அறுவை அரசியா தெரிஞ்ச அவ எனக்கு அழகுக்கு அரசியா தெரிஞ்சா, நான் மனசிலே நினைத்தது அவளுக்கு தெரிந்து இருக்குமோ என்னவோ, என்னைப் பார்த்து வெட்கத்திலே தரையிலே கோலம் போட ஆரம்பித்தாள்.

அடுத்த நாளிலே இருந்து வளவளத்தா என்னைப் பார்க்கும் போது அமைதியின் சிகரம் ஆகிவிடுவாள், அவளோட பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்தது எனக்கு, வகுப்பிலே முதல் வரிசையிலே இருந்த நான் அவளை சரியாப் பார்க்க முடியலைன்னு, கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நான் மாப்பிள்ளை பெஞ்சுக்கு போயிட்டேன். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வெட்கப் பட்டுக்கிட்டு காலாலே போட்ட கோலத்திலே நான் இருந்த இடத்திலே ஒரு அடியும், அவ இருந்த இடத்திலே அரை அடியும் பள்ளம் விழுந்தது.

என் ௬ட படிக்கிறவங்க எல்லாம் வளவளத்தாவுக்கும் எனக்கும் வேதியல் நல்லா இருக்கு, கணித பிரிவிலே இருந்து கிட்டு சொன்னாங்க, காதலுக்கும், வேதியலுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை.

இப்படி அடி அடியா பள்ளம் தோண்டி அவளோட அடி மனசிலே இருக்கலாமுன்னு யோசித்தே காலத்தை ஓட்டினேன், இருந்தாலும் நாங்க பார்வையிலே காலத்தை கடத்துவது நல்லது இல்லைன்னு யோசித்து, என்னை பார்த்து ரெம்ப ௬ச்சப் படுறான்னு, நானே ஒரு காதல் கடிதம் எழுதி வகுப்புக்கு போனேன்.

கல்லூரி வகுப்பு முடிஞ்சதும் மாலையிலே வளவளத்தவிடம்

"கொஞ்சம் தனியா வாரியா?"

"ஒ தாராளமா, என்ன விஷயம்?"

"நாம ரெண்டு பேரும் ரெம்ப நாளா பார்த்துகிட்டே இருக்கோம், அதனாலே பார்த்து போதும், இனிமேல பேச ஆரம்பிப்போம்"

"உன்னையை மனசிலே நினைச்சி நான் எழுதிய காதல் கடிதம், படிச்சிப் பாரு?"

"நானும் உனக்கு ஒண்ணு கொடுக்கணும்"

முத நாளே முத்தம் கிடைக்கப் போகுதுன்னு நானும் ஆரவமா கிட்ட போனேன், அவ ஒரு காகித உரையைக் கொடுத்தாள். பிரித்துப் பார்த்த உடனே வந்த கோபத்திலே

"நான் இருக்கும் போது எப்படி, உனக்கு இன்னொரு மாப்பிள்ளைப் பார்க்கலாம், உங்க வீட்டிலே சொன்னியா நம்ம காதல் விஷயத்தை, நீ ஒன்னும் கவலைப் படாதே, இந்த கல்யாணம் நடக்காது, நடக்க விடமாட்டேன்"

"அல்லோ கொடுத்த காசுக்கு மேல ௬வுயிரியே என்ன விஷயம், நான் என்னோட திருமண அழைப்பிதழைக்  கொடுத்தேன், உன்னைக் காதலிக்கிறேன் சொன்னேனா?"

"என்ன வளவளா சொல்லுற, நீ என்னைப் பார்த்து கோலம் போட்ட பார்வைக்கு என்ன அர்த்தம்"

"என்னையப் பக்கி சொன்ன உன்னை பழி வாங்கத்தான், நீ என்னவோ கணக்கு சீத்தனார் ன்னு பெருமை அடிச்சிகிட்டு அலையுவியே, இப்ப உன் நிலைமையைப் பாரு, முதல் மாணவனா இருந்து உன்னை பார்த்து, நீயெல்லாம் ஒரு மாணவனான்னு சொல்லுற அளவுக்கு வந்துவிட்டது"

"என்னோட மாப்பிள்ளை யாருன்னு பார்த்தாயா?"

"ம்ம்.. பார்த்தேன் எதோ ஐரோப்பாவிலே வேலை செய்கிறார் ன்னு போட்டு இருக்கு, என்னைய பழி வாங்க உனக்கு வேற யோசனையே கிடைக்கலையா"

"அந்த அளவுக்கு அறிவு இருந்தா, நான் ஏன் உன் கூடப் படிக்கிறேன்"
"அடியே வளவளத்தா, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, உன் புருஷன் உன் தொல்லை தாங்காம உன்னையை விட்டுட்டு ஓடிபோய்டுவான், என்னை கவுத்துக்கு நீ போற விமானம் கவுந்து கடலோட போய்டுவா .... இப்படியே ஒரு அரைமணி நேரமா திட்டி விட்டு, இதெல்லாம் நடக்கலைன்னா என் பெற மாத்தி வச்சிக்கிறேன்"

"என்னன்னு?"

"பக்கின்னு?"

"இப்பவே அப்படித்தானே இருக்க, வேற ஏதாவது நல்ல பேரா யோசித்து வை, வரட்டா?"

ம்ம் கொடுக்க மறந்துட்டேன், ரெம்ப பேசி களைப்பா இருப்ப, இந்த பாட்டிலே தண்ணியைக் குடி, அவளிடம் இருந்து வாங்கிய எனக்கு, என்னை அறியாமலே சிரிப்பு வந்தது.Tuesday, May 18, 2010

என் கவுஜைக்கு மொக்கை என்று பெயர் வை

அன்பே
நான் பேசும்
மவுன மொழிகளை
புரிந்து கொள்ளும்
நீ
என் குரல் மொழி
புரியாது தவிப்பது ஏன்?

ஏன்னா
எனக்கு
டமில் தெரியாது
**************************************************************************************************************

தோட்டத்து மலர்களை
உன் ௬ந்தலில் படர்த்தி
மலர்களின்
பிறவிப்பயனை
அடைய வைக்க முடியவில்லையே
என்று ஏங்குகிறதே
என் மனம்,

ஏன்
தோட்டக்காரன்
இன்னும் ஊருக்கு
செல்லவில்லையா ?

***********************************************************************************************************

ரயிலுக்கு காத்து இருந்து
ஏற்று கொள்கிறாய்
மழைக்கு காத்து இருந்து
குடையை ஏற்று கொள்கிறாய்
வெயிலுக்கு காத்து இருந்து
நிழலை ஏற்று கொள்கிறாய்
என்னை மட்டும் காக்க
வைத்து விட்டு
இன்னும் ஏற்கவில்லையே!!
என்ன செய்ய அன்பே !!!

நீ
காத்திருப்பதோ கல்லறையிலே
******************************************************************************************************

நொடிக்கொரு முறை
கடிகாரம் பார்த்தேன்
நொடிக்குள் யுகங்கள்
ஒளிந்து கொண்டு இருந்தது
உன் நினைவிலே
என்னை
மறக்கும் நான்
இன்று
காந்தி ஜெயந்தி
என்பதையும்
மறந்து போனேன்.
**************************************************************************************************************
உன் வாசல் கதவை
தட்டினேன்
வீடு காலி இருக்கிறது
என்றாய்
உன் இதய கதவை
தட்டினேன்
அரங்கம் நிறைந்து விட்டது
என்கிறாயே
********************************************************************************************************


Saturday, May 15, 2010

குடுகுடுப்பை ஏன் சொரூபா பிந்தினியானார்


குடுகுடுப்பையார் பெயரை மாத்தினதாலே கு.ஜ.மு.க கட்சி தொண்டர்கள் அனைவரும் கு,ஜ.மு.க தலைமையை யாரோ கைப்பற்றி விட்டதாக கனவு காண வேண்டாம்..

இந்த உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் காரணம்,தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது போல  கு.ஜ.மு.க மாணவர்(?) அணி செயலர் அண்ணன் வானம்பாடிகளின் கவலையாகிய ஜக்கம்மா யார்? என்ற கேள்வியும் அமைகிறது,கட்சியின் ஆரம்ப கால அடிப்படை உறுப்பினர் என்ற முறையிலே எனக்கு தெரிந்த உண்மை இதுதான், அண்ணே ஜக்கம்மா என்பது கற்பனை பாத்திரம், குடுகுடுப்பை உடுக்கு அடிக்கும் போது தலை ஆட்ட ஆள் கிடைக்காத காரணத்தினால், இவரே உருவாக்கின கதாபாத்திரம் ஜக்கம்மா.ஆனா விதி பாருங்க எப்படி எல்லாம் விளையாடுது.

ஜக்கமாவாலே இன்றைக்கு குடுகுடுப்பையை பேய் பிடிச்சிருச்சு, எந்த பேய்ன்னு கேட்க்குறீங்க, ஊரு நாட்டையெல்லாம் பொன் மொழிகள் உதிர்த்து உலுக்கிய யாருக்கும் அடங்கா பேய்.

நேத்து வரைக்கும் நடமாடிக்கிட்டு இருந்தவங்க, எப்படியா பேய் ஆகிட்டங்கன்னு நீங்க கேட்பீங்க, கட்டி வந்திருக்கு, சர்க்கரை கட்டி இல்லை, மூளையிலே கட்டி, அப்படி கட்டி வார அளவுக்கு என்ன வேலை செய்தாங்கன்னு கேளுங்க, மூளையை அளவுக்கு அதிகமா உபயோகிச்சிட்டாங்க.


அதாவது உங்க பேரு தமிழ்ல இருந்தா, அதுக்கு இங்கிலிபிசிலே, ஜெர்மன்ல, பிரெஞ்சுல என்ன அர்த்தமுன்னு கண்டு பிடிகிறது,ஆம்புளை எப்படி பொம்பளை மாதிரி நடிச்சி குழாய்யடி சண்டை, தெரு சண்டை எல்லாம் போடுறது. இதெல்லாம் அவங்க மூளையோட தனித்தன்மைகள்.  

ஆனா பாவங்க டெல்லி போகுமுன்னே, காட் பாடியிலே ஆள் டெட் பாடி ஆகிவிட்டதாம், ஆளு மண்டையைப் போட்டாலும், அவங்க மூளை மட்டும் மண்டையைப் போடக்௬டாதுன்னு மேல போன அஞ்சு நிமிசத்திலே ஆள் பேயாகியாச்சி.

பதிவுலகிலே சாமி வந்த ஆள் யாருன்னு கேட்டா சின்ன புள்ளை கூட சொல்லிவிடும் ,விசா இல்லாம, கடவுச்சீட்டு இல்லாம, நேர அவங்க வீட்டு கதவை தட்டி இருக்காங்க,ஆனா அவங்க இப்ப  எல்லாம் அலுவலகத்திலே அளவு கடந்த வேலையிருக்கு, கடமைன்னு வந்துட்டா சாமி எல்லாம் கிட்டவே வராது, ஓய்வு கிடைக்கும் போது சொல்லி அனுப்புறேன்னு சொல்லிட்டாங்க. ஒரே ஊர் காரங்க, மொழி பேசுறவங்கன்னு பல பாச கயிறுகளைப் போட்டாலும் அம்மணி அசரலை, அடிச்சி விரட்டி கதவை அடைச்சிட்டாங்க.

வனத்திலே தான் மேய முடியாது, வலையிலே மேயுறேன்னு நினைச்சிகிட்டு கடைகடையாப் போய் பார்த்தப்ப குடுகுடுப்பை உடுக்கைப் படம் பார்த்த உடனே "ஒரு ஆள் சிக்கிட்டாரு, அவரும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு போல தெரியுதுன்னு நினைச்சி, நேர அமெரிக்கா விலே மாடு மேய்ச்சி கிட்டு இருந்தவரை பிடிச்சி என்ன எதுன்னு கேட்காம நேர உள்ளே புகுந்து, அதை கொண்டாட இடுகையும் போட்டாச்சி.
    
இனிமே இலக்கிய இடுகைகள் வரலாம், பொன் மொழிகள் வரலாம், எதிர் இடுக்கைகள் வரலாம், சும்மா உடுக்கை அடிச்சி கும்மி அடிச்சிகிட்டு இருந்தவரை சொரூபா பிந்தினி ஆவி என்ன பாடு படுத்தப் போகுதோ.

உன்னையைத்தான் கட்சி விட்டே விலக்கி விட்டார்களே உனக்கு ஏன் இந்த அக்கறைன்னு கேட்கலாம், என் தம்பி பாசாகாரப் பய புளியங்குடிக்கும் இந்த ஆவியினாலே எதும் பிரச்சனை வரக்௬டாது என்ற விழிப்புணர்வு இடுகைதான்.

சொரூபா பிந்தினியை  விரட்டிட்டு மறுபடியும் குடுகுடுப்பையாரை அரியணையிலே எப்படி ஏத்துவதுன்னு தெரியலை, இல்லாத மூளையை கசக்கி யோசிக்கிறேன்.. யோசித்து கொண்டே இருப்பேன்.Thursday, May 13, 2010

அமெரிக்காவிலே அனாதை பையைப் பார்த்தால்!!விழிப்புணர்வுன்னு வந்திட்டா எங்க குடும்பமே சொன்ன சொல் தவற மாட்டோம். காந்தி கள்ளு குடிக்கக் ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து எங்க அப்பா கள்ளே குடிக்கிறதில்லை சாராயம் மட்டும் தான், எங்க அப்பா என்கிட்டே சாராயம் குடிக்க ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து நான் சாராயமே குடிக்கிறதில்லை,கலர், கலரா இருக்கிற தண்ணியைத் தான் குடித்தேன். இப்பக்௬ட தண்ணீர் தினம் விழிப்புணர்வு இடுகைகளைப் பார்த்து தண்ணியே கலந்து குடிக்கிறதில்லை, அப்படியே குடிக்கிறேன்.

இப்படி ஒரு விழிப்புணர்வு குடும்பத்திலே பிறந்த நான் , அமெரிக்கா வந்த உடனே வீட்டிலே இருந்து அலுவலத்திற்கு பூமி அடியிலே ஓடுற ரயிலிலே பயணம் செய்வேன்.

நம்ம அண்ணாச்சிமார்கள் வண்டியை கொண்டு வந்து இடிச்சி நியூயார்க் ரெட்டை  இரும்பு கோபுரத்தை உடைச்சதிலே இருந்து பாதுகாப்பு காரணங்களைக் காட்டி விழிப்புணர்வு செய்திகளை அறிவிப்பார்கள்.

"நாங்க எங்க கண்ணை வச்சி பார்க்கிறோம், நீங்களும் உங்க கண்ணை வச்சி பாருங்க"

"அனாதையா இருக்கிற பை படத்தை போட்டு, செய்தியிலே வந்த உடனே சொல்லாதீங்க, பார்த்த உடனே சொல்லுங்க"

"எதாவது அனாதையா பைகளை பார்த்த உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கவும்"

ரெண்டு நிமிசத்துக்கு ஒருதடவை செய்தியிலே அறிவிச்சிகிட்டு இருப்பாங்க,நான் வந்து சேர்ந்த ரெண்டே நாள்ல வரிகளையெல்லாம் மனப்பாடம் பாடம் பண்ணிட்டேன்.

நண்பனிடம் மனப்பாடம் பண்ணியதை சொல்லிக்காட்டினேன், டேய் அவன் பாதுகாப்புக்கு பத்தி பேசினா, நீ பன்னி கறியைப் பத்தி பேசுற மாதிரி சொல்லுற, அவனிடமே ஒரு தாள்ல எழுதி கொடுக்க சொல்லி நல்லா கடம் அடிச்சி ஏத்தி வச்சிகிட்டேன். இங்கிலிபிசு புரிஞ்சி படிச்சி இருந்தா, நான் இந்நேரம் செவ்வாய்கிரகம் போய் இருப்பேனே. வந்த விசயத்துக்கு வாரேன்.

ஒரு நாள் இப்படித்தான் ஒன்பது மணிக்கு போக வேண்டிய அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு மின்சார ரயில் நிலையம் சென்று ரயிலுக்காக காத்து கொண்டு இருந்தேன்.

விழிப்புணர்வு குடும்பம் என்பதாலே சுத்தி அக்கம் பக்கம் பார்த்தேன், அனாதையா இருந்த பை கண்ணிலே பட்டுவிட்டது, ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே கவனிச்சேன், யாரும் பையை எடுத்த மாதிரி தெரியலை,மனசுக்குள்ளே இங்கேயும் வச்சிட்டாங்க போல, இன்னைக்கு மங்களம் பாடிருவாங்களோ யோசிக்கும் போதே, அவங்க விழிப்புணர்வு விளம்பரம் வந்தது உடனே அதிலே இருந்த எண்ணை குறித்து கொண்டு,
இங்கே எது நடந்தாலும் அமெரிக்க தலைப்பு செய்தியிலே நாளைக்கு என்னோட பேருதான் வரும் என்ற கற்பனையோடு, பக்கத்திலே இருந்த தொலைபேசியை எடுத்தேன், மறுமுனையிலே வெள்ளையம்மா எடுத்து

"ஹலோ ஜென்டில்மேன், என்ன விசயமா பேசுறீங்க"

 என்னது ஜென்டில்மேனா, நான் அங்கே எல்லாம் போறதில்லைன்னு மனசிலே நினைசிகிட்டு, "இங்கே ஆள் இல்லாத பை ஒன்று அனாதையா இருக்கு, பத்து நிமிசமா யாருமே எடுக்கலை"

அப்படி சொன்னது தான் தாமதம், என்கிட்டே எந்த இடத்திலே இருக்கேன்னு ௬ட கேட்கலை, நீங்க அப்படியே நில்லுங்க, நான் பேசுறதை பக்கத்திலே இருந்து கேட்ட வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பையன், கருப்பம்மா எல்லாம் அடிச்சி பிடிச்சி ஓடியே போய்ட்டாங்க. எல்லோரும் ஓடுறாங்களே வாக்கு கொடுத்த விழிப்புணர்வு குடும்ப மகன் அப்படியே நின்னேன், மண்டைப் போட்டா நாளைக்கு செய்திதாளிலே  என் முகத்தை தான் தேடிகிட்டு இருப்பாங்கன்னு அப்படியே நின்றேன்.

இதற்கிடையே காவல் துறை அந்த பகுதியை எல்லாம் மக்கள் வர முடியாத படி தடுத்து விட்டார்கள், நான் இருந்த நிலையத்துக்கு மேல வானுர்தி எல்லாம் வந்து வட்டம் போடுற சத்தம் எனக்கே கேட்டது, காவல் துறையினர் படிகளிலே இறங்கி என்னை பார்த்து வந்து கொண்டு இருந்தார்கள், அவர்கள் வரும் முன்னே உயர் தூக்கியிலே இருந்து வந்த கருப்பு அண்ணாச்சி, அனாதையா இருந்த பையை எடுத்தார்.நான் வேகமா அவரிடம் போய்
"அல்லோ, அந்த பையை எடுக்காதீங்க" அவரு அதையெலாம் காதிலே வாங்கலை, நான் அவரிடம் இருந்து பையை பிடுங்க முயற்சி செய்தேன். அதற்குள் காவல் துறையும் வந்து,

"ரெண்டு பெரும் பையை கீழே வைத்து விட்டு, கையை மேல தூக்குங்கள்" இன்றைக்கு துப்பாக்கியிலே தான் சாவு போலன்னு நினைச்சிகிட்டு கையை மேல உயர்த்தினேன்.ஆனால் அண்ணாச்சி அவங்க சொன்னதை எல்லாம் கேட்காம

"யாரை பார்த்து என்னடா சொல்லுறீங்க, நான் யாருன்னு தெரியுமா?"

"நீ யாரா இருந்தாலும் நான் சொன்னதை செய்"  தெலுங்கு பட தலைப்பு மாதிரி காவல் அதிகாரி சொன்னாரு.

"ரயில் புறப்பட செய்ய வேண்டிய சாவி, இந்த பையிலே தான் இருக்கு, நான் இப்ப வண்டியை எடுக்கலைனா, எவனுமே வண்டியை எடுக்க முடியாது, எப்படி வசதி?"

"நீ யாரு?"

"நான் தான் ரயிலோட நடத்துனர், இது என்னோட பை, வயறு சரி இல்லைன்னு அவசரமா ஓய்வு அறைக்கு போயிட்டு வருங்குள்ளேயும், இந்த கருவாலி நாட்டோட அடிவயத்தையே கலங்க வைத்து இருக்கான்"

அண்ணாச்சி அப்படி சொன்ன உடனே எல்லோரும் உனக்கு எல்லாம் எவன்யா விசா கொடுத்து இங்கே ௬ட்டிட்டு வந்தான் அப்படிங்கிற மாதிரி என்னைப் பார்த்தாங்க,நான் கையை ரெண்டையும் கட்டிக்கிட்டு மன்னிச்சிடுங்க, பிழையாப் போச்சி"

நடத்துனர் பையை எடுத்திட்டு போகும் போது இருந்த காவல் அதிகாரிகளிடம் இவனை நல்லா சோதனை செய்யுங்க, ஒருவேளை எங்கேயாவது வச்சிட்டு திசை திருப்ப நாடகம் ஆடி இருக்கலாமுன்னு போற வாக்கிலே காதிலே போட்டுட்டு போயிட்டாரு, உடனே என்னையப் பிடிச்சி துருவி, துருவி, தேங்காயை துருவுற மாதிரி விசாரிச்சி, அன்னைக்கு முழுசும் அலுவலகத்துக்கு போக முடியாம ஆகிப் போச்சி, என்னோட பெயரையும் அமெரிக்க உளவுத்துறைக்கும் சொல்லி அவங்களும் குறிச்சி வச்சிகிட்டாங்க.  இப்ப எல்லாம் நான் எங்கே போனாலும் என்னையை மட்டும் தனியா ௬ப்பிட்டு போய் விசாரணை பண்ணித்தான் அனுப்புவாங்க,ஆனா இன்னும் விழிப்புணர்வை கை விடலை, குடும்ப மானத்தை இன்றைய தேதி வரைக்கும் காப்பாத்திகிட்டு இருக்கேன்.Tuesday, May 11, 2010

சூப்பு சுந்தரி

மேற்கு கே.கே நகர் அமுதம் பேருந்து இறக்கத்திலே இறங்கி கைக்கான் குப்பம் விலாசத்தை வைத்து போகும் வழியிலே விசாரித்து கொண்டு சென்றேன்,  நண்பன் தங்கி இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு முன் வந்து, அருகிலே இருந்த டீ கடையிலே விசாரித்து உறுதி செய்த பின், அவரிடம் டீ கொடுக்க சொன்னேன்.

டீ குடித்து விட்டு 100 ரூபாயை நீட்டினேன், கடைக்காரர் என்னிடம் சில்லறை இல்லை, டீ குடிக்க நூறு கொடுத்தா எப்படி, சில்லறை இருந்தா கொடுங்கன்னு சொன்னார்.

"வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறேன், என்கிட்டே சில்லறை இல்லை"

"என்கிட்டயும் இல்லை"

"நான் அப்புறமா வந்து தாரேன்" ன்னு சொன்னவுடனே, எதோ வாய்க்குள்ளே முணுமுணுத்து விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு இளம் பெண் வந்தாள்.

என்னோட கோலத்தை பார்த்து விட்டு என்ன நினைத்தாளோ, எனக்கு பக்கத்திலே இருந்தவரிடம் நீங்க தானே 100 ரூபாய் கொடுத்தது, அவர் பதில் சொல்லும் முன் நான் "நான் தான் கொடுத்தேன்", அவள் என்னை நம்பின மாதிரி தெரியலை, அருகிலே இருந்தவரிடம் விசாரித்து விட்டு மறுபடியும் உறுதி செய்து விட்டு என்னிடம் சில்லறையை கொடுத்தாள்.

சில்லறை வரலையே என்கிற கவலையிலே அவளை கவனிக்க மறந்து விட்டேன், வந்தும், வாங்கியதை மறந்து, கொடுத்தவளை கவனித்தேன்,உலக அழகியா இல்லாவிட்டாலும், உள்ளத்தை கவரும் அழகிதான், இப்படி யோசித்து கிட்டு இருக்கும் போதே உள்ளே இருந்து வெளிய வந்தவர், அவளிடம் வேற பாசையிலே பேசின மாதிரி இருந்தது, அவங்க பேசுறது மலையாளமுனு அப்புறமா தெரிஞ்சது, எனக்கு மலையாளப் படம் பரிச்சயம் ஆனது எல்லாம் அஞ்சரைக்குள்ள வண்டி, அவனோட ராவுகள் போன்ற கலை ஆர்வம் மிக்க கருத்தாழம் செறிந்த படங்கள் வழியாத்தான்.

அன்றைக்கு நூறு ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கியவன், அந்த சில்லறைகள் காலி ஆகும்  வரை சேட்டன் கடையிலே தான் டீ குடித்தேன், வேலை தேடி அலைந்த நேரம் போக மீத நேரம் சேட்டன் கடையை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திகிட்டு வந்தேன், சேட்டன் கடையிலே எனக்கு பிடிச்சது சூப்பு தான், ஏன்னா சூப்பு சுந்தரி கையாலே கிடைக்கும். அவளைப் பார்க்க வந்து சூப்பு சாப்பிட்டே சீக்கிரம் சில்லறை தீர்ந்து விட்டது, சில்லரையோட சுந்தரியைப் பற்றி சிலபல விசயங்கள் தெரிந்து கொண்டு நல்ல அறிமுகம் ஆனேன்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய விசயங்கள் பேசினோம், ஒரு நாள் இப்படித்தான் என்னிடம்

"முகிலன் உங்க பேருக்கு என்ன அர்த்தம்?"

"முகில்ன்னா மேகம், குளிர்ந்தா மழையாவேன்"

"உங்க விருதுநகர் கந்தக பூமியாமே மழையெல்லாம் பார்க்கிறதே இல்லையாமே, ஊரிலே தான் மேகமும்,மழையும் இல்லை, பேரிலே யாவது இருக்கட்டுமேன்னு வச்சி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சா

கண்ணாயிரமுனு பெயரு இருந்தா ஆயிரம் கண்ணு இருக்கனுமுன்னு அர்த்தம் இல்லைன்னு சொல்லலாமுன்னு நினச்சேன், ஆனால் அவளோட சிரிப்பிலே சின்னா பின்னமாகிப் போன நான், ௬ட கொஞ்ச நேரம் கலாய்க்க மாட்டாளா என்று ஆர்வமே வந்தது.இப்படி எங்களுடைய சம்பாசனைகளிலே பெரும்பாலும் என்னையை கலாய்த்து சந்தோசப்படுவாள்.அவளோட சந்தோசத்துக்காக சோறு தண்ணி இல்லாம எவ்வளவு நாள் வேணுமுனாலும் பட்டினி கிடக்கலாமுன்னு தோணும்.அவளைப் பார்த்து சம்பந்தம், சம்பந்தம் இல்லாம பேசுறதாலே என்னை பிதற்றுற.. பிதற்றுற.. அந்த ஞாபகம் இன்னிவரைக்கும் இருக்கு.

சென்னை வந்து இரண்டு மாதம் ஆனது வேலை கிடைக்கவில்லை,கையிலே இருந்த காசும் காலியானது.காசு கொடுத்து டீ கொடுக்கும் வரை புன்முகத்தொடு வரவேற்ற சேட்டன், கையிலே காசு இல்லாம கடனா டீ வாங்கி குடிச்ச ரூபாயை திருப்பி தர வழியில்லாமல் போனதாலே என் மேல எரிச்சலை காட்டினர்.

ஆரம்பத்திலே அடக்கி வாசித்தாலும், கொஞ்ச நாளல்ல எங்களை கடை பக்கம் வர விடுவதில்லை, நான் செல்லும் முன்னே

"காசு இருந்த கடைக்குள்ளே வந்து ஓசி பேப்பர் படி, இல்லைனா இங்கே வர வேண்டாம்"

சேட்டன் டீ என்கிற பெயரிலே போடுகிற வெண்ணி தண்ணீர் குடிக்க நான் போகலைன்னு அவனுக்கு தெரியுமா?
வேற வழி இல்லாம சேட்டன் கடைக்கு போக முடியலை, இருந்தாலும் மாலையிலே எங்கேயாவது தூரத்திலே இருந்து சூப்பு கொடுக்கும் சுந்தரியையும் பார்த்து கொள்வேன்.சில சமயங்களில் என்னையை பார்த்து சிரிப்பாள். அதை அவள் அருகிலே இருந்து ரசிக்க முடிய வில்லையே என்று ஆத்திரமாக வரும், இவ்வளவுக்கும் காரணமான சேட்டன் மேல கொலை வெறி கோபத்தை வளர்த்தேன்.(இதைப் படிச்சிட்டு உங்களுக்கும் கொலைவெறி கோபம் வந்தா நீங்க இலக்கியவாதி)

என்னோட கோபத்திற்கு பலம் சேர்கிற மாதிரி முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையும் வந்தது, சேட்டனுக்கு எப்படியாது தொல்லை தரணுமுன்னு முடிவுக்கு வந்து விட்டேன்.பல யோசனைகளை வந்தாலும், அவனோட கடைக்கு சேதம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் இரவு இரண்டாம் ஆட்டம் படத்திற்கு போய்விட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலே சேட்டன் கடைக்குள் புகுந்து, வாங்கி வைத்து இருந்த மண்எண்ணெயை கடைக்கு வெளியே கட்டி இருந்த தட்டியிலே கொஞ்சம் கொட்டி, மீதம் இருந்ததை அடுப்புக்கு கீழே வைத்து பத்த வைத்தேன், இரண்டும் நன்றாக தீப்பிடிக்கும் மட்டும் மறைவிலே இருந்து பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.

அதி காலையிலே எழுந்து நான் வைத்த தீ கொழுந்து விட்டு எரியுதான்னு உறுதி செய்ய ஆர்வமாக வந்தேன். கடை முக்கால் வாசிக்கு மேல எரிந்து சாம்பல் ஆகி இருந்தது, பக்கத்திலே வீடுகள் ஏதும் இல்லாததாலே தீ பரவவில்லை, என்னை கரித்து கொட்டிக்கொண்டு சந்தோசமாக இருந்த சேட்டன் சோகம் கலந்த முகத்தைப் பார்த்ததிலே எனக்கு திருப்தி.அன்று மாலையிலே சேட்டன் வைத்து இருந்த லட்ச ரூபாயும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது என்று தெரிந்து கொண்டேன்.இரட்டிப்பு சந்தோசம் ரெம்ப நாளைக்கு அப்புறமா மனதுக்குள்ளே.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் சுந்தரியை தெருவிலே சந்தித்தேன், ரெம்ப கவலையா இருந்தா, அவங்க திரும்பவும் கேரளாவுக்கே போறதாகச்
சொன்னாள், நான் வச்ச தீ இவ்வளவு தூரம் பத்தி எரியுமுன்னு எதிர் பார்க்கலை. பழைய மாதிரி என்னை கலாய்க்க வில்லை. கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பு முன்

"முகிலன், இது இனிமேல எனக்கு தேவைப் படாது, நீங்க வச்சிகோங்க" என்று ஒரு காகித உறையைக் கொடுத்தாள்.

அதை வாங்கி நான் பிரிப்பதற்குள், அவள் சென்று விட்டாள். அதை வேகமாகப் பிரித்துப் பார்த்தால்

நான் முதல் நாள் கொடுத்த, அதே நூறு ரூபாய் நோட்டு, அதன் வெள்ளைப் பகுதியிலே, முகிலன், சுந்தரி என்று இதய அடைப்புக்குள், என்னை அறியாமலே கலங்கிய கண்களின் துளிகள் இரண்டு காகித இதயத்தை அழித்து கொண்டு இருந்தது.

பொறுப்பு அறிவித்தல் : ஆட்டோ அனுப்ப முகவரி, முகிலனின் கடையிலே இருக்கு, தாராளமா பயன்படுத்துங்க, நான் ஒண்ணும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்.


Monday, May 10, 2010

தினக்குரல் பத்திரிகையில் கனடிய தமிழ்


பொறுப்பு அறிவித்தல்: இது சுயபுராண இடுகை

படைப்பாளியின் படைப்புகள் தன்னோட கடையை விட்டு, அடுத்த கடைக்கு சென்று அச்சிலே ஏறும் போது சந்தோசம் இருக்கோ இல்லையே, ஆனால் அதனை நண்பர், நண்பிகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு வித மகிழ்சியே ன்னு சொல்லலாமா?

இப்ப என்ன பிரச்சனை இவன் ஏன் இப்படி சொம்பு அடிக்கிறான்னு யோசிக்கிற நீங்க, என்னைய மறுபடியும் ரவுடி ஆகிட்டாங்க,எனது கதை இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

நான் இப்படி எல்லாம் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் நண்பர் கன்கொன் || Kangon

கொடுத்த தகவல், கீழ் உள்ள சுட்டியை அழுத்தி சரி பார்க்கவும்

thinakkural

கனடிய தமிழ்

வாய்ப்பு அளித்த யாழ்தேவி நண்பர்களுக்கும், தினக்குரல் பத்திரிக்கைக்கும் நன்றி, அதைவிட முக்கியமா, கடையிலே கும்மி அடித்த, படித்து விட்டு கொலை வெறியிலே ஆட்டோ அனுப்ப முடியவில்லையே என்று செல்லும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி


Tuesday, May 4, 2010

மடை திறந்த மடல்


மடல் எழுதவா வேண்டாமா என்று பலநூறு தடவை எல்லாம் யோசிக்கலை, தமிழ்ல எழுதி ரெம்ப நாளாச்சி, அதனாலே எழுதுறேன், எழுத்துப் பிழை இருக்கும், அது இந்த மொக்கை எழுத்தாளருக்கு களங்கம் ஏற்ப்படுத்தலாம்,விதி வலியது வேற என்ன சொல்ல.

எங்கேயோ பிறந்தோம், எப்படியோ சந்தித்தோம், சந்தித்த உடனே காதல் கொள்ளும் அழகு என்னிடம் இருந்தாலும், நான் அவனை கொஞ்ச நாள் கழித்தே காதலனாக ஏற்று கொண்டேன்.காதலிக்கும் போது பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க நேரமில்லை, பெரும் நிகழ்வாக எங்கள் இருவரையும் என்னோட அப்பா பார்த்து விட்டார்.

பார்த்தவர் என்னுடன் அவனை அழைத்து வரச்சொன்னார், அவனும் வந்தான், அவனுடையை புள்ளி விவரங்களை சேகரித்து கொண்ட என் தந்தை, எனது மதிப் பெண்களையும், அவனது மதிப் பெண்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நான் எல்லாப் பாடத்திலேயும் 90 சதவீதக்கு மேல எடுத்து இருந்தேன், அவனோ பல பாடங்களிலே தேர்ச்சி பெறவில்லை.

அவனிடம் "நாங்க எல்லாம் அறிவாளியாக பிறந்தவர்கள், நீ இன்னும் படிக்கவே ஆரம்பிக்க வில்லை, நீ கல்லூரி முடிக்கும் முன்னே, என் மகளை விட அதிக மதிப் பெண் எடுத்து காட்டிவிட்டு என்னை வந்து பார் என்று சொல்லி விட்டார்.இதை கேட்டு நீ என்ன நினைச்சி இருப்பன்னு தெரியும், "யோவ் பொண்ணு தர முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே" என்று 

எங்க வீட்டிலே பேசிவிட்டு நீ உன்னோட அறை நண்பர்களோட வீர வசனம் பேசினதை நீ மறந்து இருக்கலாம், நான் இன்னும் மறக்க வில்லை.

"மாப்பள அவங்க அப்பன் மண்டையை உடைக்கணும், அதும் என்கையாலே"

"மாப்ள, அவங்க அப்பன் பேசும் போது உன் ஆளு என்ன பண்ணிக்கிட்டு இருந்தா"

"அவ என்னடா பண்ணுவா, அவங்க அப்பன் அவ வாயை அடைச்சி வச்சி இருப்பான்,நெருப்போட விளையாடுறான் அவன்"

"கருப்பு நெருப்போடவாடா?"

"டேய் அவனுக்கு என்னையை பத்தி தெரியாது அவங்க அப்பனுக்கு, ஊரிலே என்னைய நேருக்கு நேர நின்னு பார்த்தா நெத்தியிலே அடிப்பேன்,பின்னாடி பார்த்தா பிடதியிலே அடிப்பேன்"

"டேய் முதல்ல பீடி அடிடா" 

 அப்படின்னு பேசி முடிக்கும் போது, கல்லூரி மூத்த மாணவர் வந்து 

"டேய் ...கருவாலி, உன்னைய கல்லூரி முடிஞ்ச உடனே என்னையை பார்க்க சொல்லி இருந்தேன், ஏன்டா வரலை"

"எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது"

"என்னது வேலையா" ன்னு கேட்டுகிட்டே செவுள்ள ரெண்டு அடி, முதுகிலே ரெண்டு அடி அடிச்சி, சட்டையை பிடித்து உலுக்கி கீழே தள்ளி விட்டு 

"இனிமேல நான் ௬ப்பிட்டு வரலை, உன் சங்கை கடிச்சி துப்பி புடுவேன்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அவர் போன உடனே நான் "மச்சான், அவளோட அப்பன் மண்டையை உடைக்கணும்" ன்னு சொல்லிட்டு திரும்பி பார்த்தப்ப, நண்பன் ஒருத்தன் 
"டேய் உன்னை இப்பத்தான் நாய் அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு போறான் ஒருத்தன்"

"மாப்பள ரெம்ப தெரிஞ்சவன் என்பதாலே விட்டுட்டேன், வேற எவனும் என் மேல கைய வைக்க முடியுமா?"

"அப்படியா நாங்க எல்லாம் உன்னைய ரெம்ப ரெம்ப தெரிஞ்சவங்க என்று சொல்லி" உன்னை கும்மி எடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன்.

எங்க அப்பா மேலதானே கோபம், நீ என்னைப் பார்க்க கண்டிப்பாக வருவாய் என்று வழி மேல விழி வைத்து காத்து இருந்தேன், கண் பார்வை மங்கி கண்ணாடி போட்டது தான் மிச்சம், நானே ஒரு முறை உங்க கல்லூரிக்கு வந்தேன், ஆனால் உன்னைத்தவிர எல்லோரையும் பார்க்க முடிந்தது.

அடுத்த ஆறுமாதம் கழித்து என் வீட்டுக்கு உன்னோட கடிதம் வந்தது,பசலை நோயிலே வாடி மீண்டும் எனக்கு தூது அனுப்பி விட்டு இருப்பாய் என்று நினைத்து ஆசையிலே திறந்து பார்த்த எனக்கு முதல் வரியிலே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாய் "அறிவு கேட்ட கழுதை" என்று ஆரம்ப வரியிலே , நீ எழுதின முழு கடிதமும் பொது இடத்திலே படிக்க முடியாது என்பதாலே ஒரு வரியோட முடிக்கிறேன், கடிதம் முழுவதும் என் தந்தையை திட்டு விட்டு கடைசியிலே உனது மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைத்து இருந்தாய், அனைத்து பாடத்திலும் 90 விழுக்காடுக்கு மேல் எடுத்து இருந்தாய்.

நீ கல்லூரி முடிக்கும் வரைக்கும் இதே போல கடிதங்கள் வந்தது, கல்லூரி முடிந்ததும் நீயே என்னை சந்திக்க வந்தாய் வந்ததும் 

"அறிவாளி அப்பன் மகள் எப்படி இருக்கா?
என்னவோ நீங்க தான் அறிவுக்கு பிறந்தவங்கன்னு பெருமை அடிச்சான், இப்ப பார்த்தியா உன்னைய விட அறிவிலே நான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை நிருபிச்சி இருக்கேன்"

ஏதோ பேச வந்த என்னை "பேசுன அடிச்சி ஆத்திலே போட்டுருவேன்" ன்னு மிரட்டுற மாதிரி சொன்ன. என்னால பேச முடியலை, அழ மட்டுமே முடிந்தது.

"நல்லா அழு, இப்படி பட்ட அறிவாளியை விட்டுடோமொன்னு நல்லா அழு, நான் உன்னை விட அதிக மதிப்பெண் எடுத்து உன்னை கை பிடிக்க இல்லை, எங்களுக்கும் அறிவு இருக்குனு புரிய வைக்கத்தான்"

நான் உண்மையிலே அழுவதற்கு காரணம் எங்க அம்மா இருந்து விட்டார்கள் என்று ௬ட நீ சொல்ல விடவில்லை.அம்மா இறந்த கொஞ்ச நாள்ல அப்பாவோட மனசும் மாறி இருந்தது, அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், எப்படியாவது உன்னை எனக்கு திருமணம் செய்துவைப்பேன் என்று சொன்னார், தமிழ் படமா இருந்தா இந்த இடத்திலே அவுஸ்திரேலியாவிலே ஒரு பாட்டு வந்து இருக்கும், உங்க ஊரின் விலாசம் எடுத்து கொண்டு எனது தந்தையும் வந்தார். 

உங்க வீட்டுக்கு வந்து, இந்தியாவிலே மிகப் பெரிய அலுவலகத்திலே நல்ல வேலையிலே இருப்பதாக தெரிந்து கொண்டும், அறிமுகம் முடித்து விட்டு என்னைப் பற்றிய விவரங்களை சொன்னார் என் தந்தை, ஆனால் அதை கேட்டு உங்க வீட்டிலே எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்து உன்னை களங்கப் படுத்த விரும்ப வில்லை, ஆனால் இந்த விசயங்கள் உனக்கு தெரியவில்லை என்று நான் அறிவேன்.

பட்ட அவமானத்திலே பாதி உயிரே போய் விட்டது, கொஞ்ச நாள் எதுவுமே பேசாத நடைப் பிணமாக மாறிவிட்டார், ஆறு மாதம் கழித்து உனக்கு நிச்சய தார்த்தம்  என்று கேள்விப் பட்டு, எப்படியாவது உன்னை சந்தித்து பேச வேண்டும் என்று, நானே வந்தேன், உன்னையும், உன் இந்நாள் மனைவியையும் மணக்கோலத்திலே பார்த்து விட்டு நானே ஊமை யாகி விட்டேன்.

கால ஓட்டத்திலே என் தந்தையும் காலமானார், தனித்து விடப் பட்டேன், உன் நினைவுகளோட மட்டும்,நீ என்னை மறந்து போனாலும், நீ அடிக்கடி சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை, நான் மூச்சி வாங்குறதே உன்னை சுவாசிக்கத்தான்" 

உன்னை 
சுமந்த நினைவுகளோடு 
முடிவில்லாமல்  
பயணிக்கும் பேதை 

நல்லா பாருங்க வரி, வரியா எழுதி இருக்கேன், அப்படினா கவிதைன்னு அர்த்தம். உன் நினைவுகளோட வாழ்கையிலே ரெம்ப தூரம் பிரயாணம் செய்து விட்டேன், முடிய வேண்டிய நேரம், பயணம் மட்டுமல்ல, முக்கோண காதல் கதைகளிலே, ஒரு காதலை காதலியை கழட்டி விட இந்திய கதை ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பெயர் தெரியாத வியாதி, ஆனால் சாவுக்கு மட்டும் தேதி குறிக்கும் வியாதி, அதே வியாதி தான் எனக்கும் இருக்கு.இவ்வளவு நாளா நான் சுமந்த உனது நினைவுகளை இந்த கடிதம் சுமக்கும் என்ற நம்பிக்கையிலே பிரியா விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்:- படிச்சி முடிச்சவங்க ஆட்டோ அனுப்பணுமுன்னு ஆசைப் பட்டால் குடுகுடுப்பை க்கு அனுப்பவும், அவருக்கு வந்த கடிதத்தை நான் ஆட்டையைப் போட்டுட்டேன். 


Monday, May 3, 2010

மொக்கை கவிதைகள்

அன்பே என் இதயம் 

சுருங்கி விரிவது 
நான் உன்னை சுமந்து 
செல்வதால் 
அவள் என்னிடம் 
இதயம் நின்று விட்டால்
உன்னை 
நான்கு பேர்
சுமந்து செல்வார்கள்.
*********************************************************************************

வானவில் எவ்வளவு அழகாய்
இருக்கிறது அன்பே உன்னைபோலவே 
ஓவ்வொரு நிறத்திலும் 
லட்ச ரூபாய்க்கு உடைகள்
வாங்கி  கொடுத்தால் 
இன்னும் அழகாய் இருப்பேன் 
மனதுக்குள் 
கிட்னியை விற்கவோ, வீட்டை விற்கவோ

**********************************************************************************


காதலனே 
மூடிய என் 
முகத்தை திறக்க
இவ்வளவு நாளா?
என்ன செய்ய அன்பே 
தங்கமணி 
இப்பத்தானே ஊருக்கு போனா 

**************************************************************************************************************

மொட்டுக்களைப் புன்னகைத்தேன் 
இதழ் விரித்தது 
உன்னைப் பார்த்து புன்னகைத்தேன் 
 நீயோ
வரவேண்டி இடத்துக்கு தான் 
வந்து இருக்கிறாய் என்றாய் 

**************************************************************************************************************

அன்பே உன்னை 
காதலித்ததாலே 
ஆயுள் கைதியான் 
என்னை திருமணம் செய்தால் 
நீ 
மரண தண்டனை கைதியாவாய்