Wednesday, April 28, 2010

கனடிய தமிழ்

125 parkway forest drive,don mills அப்படின்னு விலாசத்தோட டொரோண்டோ விலே இறங்கி குடியேற்ற துறையை கடந்து வெளியே வந்தேன், பெங்களூர், சென்னையையும் தவிர வேறு ஊருக்கு செல்லாத நான் வெளிநாட்டுக்கு வந்து இறங்கியதும் அடி வயறு கொஞ்சம் கலங்கி தான் போச்சி, விமானத்திலே குடிச்ச வெளி நாட்டு சரக்கு தான் காரணமோன்னு யோசித்து கிட்டு நிற்கும் போது 


"தம்பி நீங்கோ எங்கே போகணுமுன்னு"  மீசை இல்லாத  நண்பர் ஒருவர் என்னிடம் தமிழிலே என்னிடம் பேசினார்.நான் ௬ட வடக்கூர் காரரா இருப்பார் போல, ஆனா அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சாலும் தமிழ் நாகி ன்னு சொல்லுவாங்களேன்னு யோசித்து கொண்டு இருக்கும் போதே "எங்கே போகணும்" னு கேட்டார், நான் விலாசத்தை காட்டி டான் மில்ஸ் போகணும், அது எங்க இருக்குன்னு தெரியலை, அலுவலகத்திலே டொரோண்டோ வரைக்கும் தான் பயணச் சீட்டு எடுத்து கொடுத்தாங்க ன்னு சொன்னேன்.  

இங்கே பக்கத்திலே தான் இருக்கு, நான் உங்களை டாக்ஸி யிலே ௬ட்டிட்டு போறேன்னு சொன்னாரு, நான் உடனே "நீங்க எந்த ஊரு?"   


நான் யாழ்பாணம் ன்னு சொன்னாரு, இலங்கை தமிழர்களை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா இப்பத்தான் முதல்ல ஒரு இலங்கை தமிழரை சந்தித்தேன். மனசுக்குள்ளே ரெம்ப சந்தோசமாக இருந்தாலும், "டேய் மாப்ள அங்கே, ஆம்பளைங்களை மட்டும் கட்டி கிட்டி பிடிச்கிறாதே, உன்னையை வேற மாதிரி ஆளு"ன்னு நினைச்சுடுவாங்க ன்னு சொன்னது ஞாபகம் வந்ததாலே நான் ரெண்டு கையையும் எடுத்து வணக்கம் போட்டுட்டு பெட்டியை தூக்கிட்டு அவரு பின்னாடி போனேன்.

காரிலே ஏறி உட்கார்ந்து ஒரு பத்து நிமிசத்துக்கு விடாம பேசிகிட்டே வந்தேன், எல்லாம் கேட்டு முடிச்சிட்டு "நீங்க சொன்னது ஒண்ணுமே விளங்கலை" ன்னு சொல்லி புட்டாரு, கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி பேசுங்கன்னு சொன்னாரு, அதற்கு அப்புறமா அவரு ஒரு ராகத்திலே, நான் ஒரு ராகத்திலே தமிழ் பேசி, ஒவ்வொரு வாக்கியம் முடிஞ்ச உடனே "விளங்குதா", "விளங்குதா" ன்னு ரெண்டு பேரும் மாறி மாறி கேட்டு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தேன்.வீட்டை அடைந்து எனது உடமைகளை எல்லாம் நான் தங்கப் போகும் அறை வரைக்கும் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றார்.

அடுத்த நாளிலே இருந்து அலுவலகத்திலே ஆணி பிடுங்கும் வேலையை ஆரம்பித்தேன், முதல் நாள் நுழையும் போதே  அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு  காவலர் என்னைப் பார்த்து "எப்படி இருக்கீங்க தம்பி" ன்னு கேட்டார். ௬ட வந்த மனவாடு என்னை விட கருப்பா இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியாதுன்னு எப்படி கண்டு பிடிச்சாருன்னு தெரியலை.

எங்கே போனாலும் தமிழன்னு கண்டு பிடிச்சிடுறாங்கன்னு இங்கே இருக்கிற கருப்பு அண்ணாச்சி மாதிரி முடியை பல வழிகளிலே மாத்தி, மீசை எடுத்து பார்த்தேன் ஒண்ணும் தேறலை. இதற்கிடையே அலுவலத்திலே முதல் நாள் சந்தித்த இலங்கை நண்பரும், நானும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம், நிறைய கதைக்க ஆரம்பித்தோம்.

நான் தம் அடிக்க போகும் போது சும்மாவே ௬ட வருகிறாரேன்னு அவருக்கு புகைக்க கத்து கொடுத்தேன், கொஞ்ச நாள்ல வட்டமா, சதுரமா எல்லாம் புகையை விட்டு எனக்கு காட்டினர், அதே மாதிரிதான் சரக்கும், பீர் அடிக்க சொல்லி கொடுத்தேன், எனக்கு அவரு ஹாட் அடிக்க சொல்லி கொடுத்தாரு, இப்படி உலக மகா நல்ல பழக்க வழக்கங்களை எல்லாம் கத்துகிட்டோம்.

ஒரு ஆறு மாசம் நாங்கள் இருவரும் டொரோண்டோவை சுத்தினோம். இடைப் பட்ட காலத்திலேயே ஊரிலே பெண் பார்க்க என்னோட புகைப்படம் அனுப்பி இருந்தேன், அவங்க எல்லாம் என்னோட புகைப் படம் பார்த்து விட்டு எங்க ஊரு திசைக்கே தலை வச்சி படுக்கிறதில்லை  என கேள்விப்பட்டு வேற வழி இல்லாம ஊருக்கு போக வேண்டிய நிலைமை.அலுவலகத்திலே சொல்லி இரண்டு மாதத்திலே ஊருக்கு செல்ல வேண்டும் என்று உறுதியானது.

நான் ரெண்டு மாசத்திலே ஊருக்கு போறன்னு சொன்னதும், அலுவலகத்திலே வேலை பார்த்த பாதுகாப்பு  காவலர் நண்பருக்கு கவலையாய்ப் போய்விட்டது, என்ன விசயமா ஊருக்கு போறீங்க, நான் பொண்ணு பார்க்க ஊருக்கு போறேன்னு சொன்னேன். இவ்வளவு தானே கவலைய விடுங்க, நான் உங்களுக்கு டொரோண்டோ தமிழ் பெண்ணை பார்த்து கட்டி வைக்கிறேன்னு சொன்னாரு.ஓசியிலே கனடா குடியுரிமை வாங்கி நிரந்தரமா இங்கேயே தங்கலாம் என்று ஒரு முடிவு எடுத்து நானும் சரின்னு சொன்னேன்.

அடுத்த வாரத்திலே ஆசிய மக்கள் அதிகமா இருக்கிற ஸ்கார்பொரோவுக்கு என்னை அழைத்து சென்றார்.சென்னையை தாண்டி விட்டாலே தமிழையும் அங்கேயே விட்டுட்டு போற என்னைப் போன்ற தமிழ்வாதிகளுக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான், கண்டம் விட்டு கண்டம் வந்து தமிழிலே "பூம்புகார் மளிகை கடை" என்று தமிழிலே விளம்பர பலககைகள் பார்க்கும் போது,பார்க்கும் போது சந்தோசமா இருந்தாலும், கொஞ்சம் பொறாமையாவும் இருந்தது, இலங்கை தமிழர்களிடம் தமிழ் மொழி மேல இருக்கிற நம்பிக்கை, தைரியத்திலே பாதி அளவு ௬ட இல்லை, அவர்களோட தன் நம்பிக்கையைப் பார்த்து தான் எனக்கே தமிழில் எழுதும் ஆர்வம் வந்தது(மேல இருக்கிற ரெண்டு வரி எழுத்துப் பிழை இல்லாம இருக்கு, இடுகைக்கு அதான் கணக்கு, வேற இடத்திலே இருக்கிறதை சுட்டி காட்டினால் ஆட்டத்திலே சேத்துக்க மாட்டேன்)

அதோட நிற்காம, ஒருத்தர் தமிழர் என்று தெரிந்தால்  தமிழிலே மட்டுமே தான் பேசுவது என்று முடிவு எடுத்தேன், இங்கிலிபிசுல சரியாப் பேச வராது என்பதை எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க.

பெண் வீட்டிலே காத்து இருந்தேன்... காத்து கிட்டே இருந்தேன் பெண் வருகிற மாதிரி தெரியலை, என்னை அழைத்து சென்ற நண்பர் "போக்கு வரத்து நெரிசலிலே மாட்டிகிடாங்களாம், இப்ப வந்திடுவாங்கன்னு சொன்னாரு, சொல்லி ரெண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அதே பதில் சொன்னார், நேரம் ரெம்ப அதிகமாகி விட்ட படியினால் வேற வழி இல்லாம வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் அலுவலகம் வந்து விட்டு முதல் வேலையாக அவரிடம் விசாரித்தேன், தம்பி பிழையாப் போச்சி, அந்த பெண் போக்குவரத்து நெரிசலிலே இருந்தது, விமான நிலையம் போக, அவ நேத்தே விமானம் பிடிச்சி யாழ்ப்பாணமே போய்ட்டா,என்னோட புகைப் படத்தை காட்டி இருப்பாரோன்னு ஒரு சந்தேகம் இருந்தாலும் கேட்கலை, சரி விடுங்க தம்பி, அந்த பெண்ணுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் நாம என்ன செய்ய, ஆனா அவரு மனசிலே எங்க ஊரு பெண் தப்பிவிட்டதுன்னு நினைத்து இருப்பார்.

சரி அடுத்த பெண் யெங் தெருவிலே இந்த வார இறுதியிலே நடக்கிற தெற்கு ஆசிய கலைவிழாவுக்கு வந்து பார்க்க சொல்லி இருக்காங்க, மரண அடி விழுந்தாலும் முயற்சியை தளர விடாம ஓடுற நான், அவரு சொல்லி முடிக்கும் முன் தலையை ஆட்டினேன், அண்ணா என்னோட புகைப்படம் மட்டும் கொடுக்க வேண்டாம், என்னோட அழகை நேரிலே காட்டி அதிர்ச்சி கொடுக்கணுமுன்னு சொன்னேன்.நான் கடைசியிலே சொன்னதை எல்லாம் காதிலே வாங்காம அவரு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

வார இறுதியிலே அங்கே சென்றேன், அங்கே வடக்கூர் இசை குழு ஒன்று கச்சேரி ஹிந்தி பாட்டுகளை போட்டு எல்லோரிடமும் கை தட்டு வாங்கி கொண்டு இருந்தார்கள், அவங்க ஆட்டம் முடிஞ்ச உடனே நம்ம ஊரு, சத்தியமா தமிழ் நாட்டு காரங்க இல்லை, இலங்கை தமிழர்களின் இசை கச்சேரி ஆரம்பித்தது, மன்மத ராசா பாட்டு வெளி வந்து தமிழ் நாட்டை கலக்கி கொண்டு இருந்த நேரம், முதல் பாட்டு அந்த பாட்டுதான், பாட்டோட இசையை கேட்டதும் வேடிக்கை பார்க்க வந்த வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பம்மா, கருப்பையன் எல்லாரும் ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.

ஆட்டம் பாட்டு எல்லாம் முடிந்து திரும்பி பார்த்தால் நண்பரை காணவில்லை,அவரோட அலைப் பேசியை தொடர்பு கொண்டேன், அது நேராக குரலஞ்சலுக்கு சென்றது.ரெண்டு மணி நேரம் தேடிட்டு வீட்டுக்கு வந்தேன்.அடுத்த நாள் காலை சந்தித்து விவரம் கேட்டா, நீ தான் மாப்பிள்ளை என்று உன்னை காட்டுற வரைக்கும் நல்லா இருந்தா, உன்னையப் பார்த்த உடனே சி.என் டவர்க்கு போய் தற்கொலை பண்ணுவேன்னு சொல்லிட்டு போய்ட்டா, அவ கையிலே காலிலே விழுந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியிலே விமான நிலையம் போய் எதோ ஒரு விமானத்திலே ஏறி எங்கோ போய்ட்டா,நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இனிமேல உங்களுக்கு பெண் பார்த்தது போதுமுன்னு.அதோட பெண் பார்க்கிற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு ஊருக்கு போக ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஊருக்கு திரும்பி செல்லும் நாளும் வந்தது, அவர் என்னை விமான நிலையம் வரை வந்து வழி அனுப்ப வந்தார்,இவ்வளவு நாளா நாம சுத்தி இருக்கோம்,உங்களோட புகைப்படம் ஒண்ணை தாருங்கள் என்று சொன்னார். பாசத்திலேயும் உங்களை மிஞ்ச முடியாது போல ன்னு நினைச்சி கிட்டு கொடுத்தேன், வாங்கிட்டு என்னை வழி அனுப்பிவிட்டு நான் பயணச்சீட்டு வாங்கிட்டு உள்ளே செல்லும் போது, பிற்காலத்திலே கனடாவிலே ஆட்குறைப்பு செய்ய நினைத்தால் என்கிட்டே நல்ல திட்டம் இருக்கு ன்னு சொன்னார், என்ன திட்டம் அதுன்னு கேட்டேன்.

"உங்க புகைப்படத்தை காட்டி எல்லோரையும் நாடு கடத்தி விடுவேன்" ன்னு சொன்னார், அதற்கு பதில் சொல்லி என்னோட புகைப்படத்தை திருப்பி வாங்க முடியாத வளையத்துக்கு சென்று விட்டதால், விமான வாயிற் கதவை நோக்கி சென்று கொண்டு இருந்தேன்.


Tuesday, April 27, 2010

தொலைபேசாடல்

"அல்லோ அம்மா எப்படி இருக்கீங்க" 


"நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க"

"நல்லா இருக்கேன்"

"எப்ப ஊருக்கு வாரே?"

"கூடிய சீக்கிரம்"

"இதையேதான் நாலு வருசமா சொல்லிக்கிட்டு இருக்க, நீ வந்த பாடு இல்லை."

"ஊருக்கு நான் வாரது தெரிஞ்சி ஏதும் பிரச்சனை ஆகக் ௬டாதுன்னு இங்கேயே இருக்கேன், அருவா கம்போட என்னை அடிக்க சுத்திகிட்டு இருந்தவங்க இன்னும் அப்படியே தான் இருக்காங்களா?" 

"நீ மூணாம் வகுப்பு படிக்கும் போது கண்ணிலே ஸ்கேல் வச்சி அடிச்ச பொண்ணு எல்லாம் கல்யாணம் முடிந்து வெளியூருக்கு போய்ட்டா, அவ அண்ணன் தான் உன்னைய பாசமா அடிக்கடி விசாரிப்பான், நீ எப்ப வருவன்னு"

"உண்மையாவா?"

"ஆமா"

"அப்புறம் நம்ம மேல தெரு பொண்ணு"

"யாருடா அது?"

"அதுதாம்மா நம்ம வீட்டுக்கே வந்து மிரட்டுனாங்களே?" 

"நீ கல்லூரி படிக்கும் போது காதல் கடிதம் எழுதி, அந்த பெண்ணை கல்லூரியை விட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே அந்த பெண்ணா?"
"ஆமா.. ஆமா"

"அவளும் கல்யாணம் முடிஞ்சி ஊரை விட்டு போய்ட்டா?,அவங்க அண்ணன் தான் நம்ம வீட்டு பக்கம் வரும் போது எல்லாம் முறைச்சிகிட்டு போவான்,எனக்கு  தெரிஞ்சி நம்ம ஊரிலே நீ பண்ணின சேட்டைகள் இதுதான், எனக்கு தெரியாம என்னென்ன பண்ணினேன்னு தெரியலை.அதையெல்லாம் பத்தி நீ கவலைப் படாம கண்டிப்பா ஊருக்கு வா?"


"சரிம்மா,ஊரிலே  மழை எல்லாம் எப்படி இருக்கு"


"நீ ஊரை விட்டு போன இந்த நாலு வருசமா நல்ல மழை தான்,நீ திரும்பி வந்தா எப்படின்னு தெரியலை.மருமகளும், என் பேத்தியும் எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காங்க"

"மருமகள் என்ன பண்ணுறா?"

"அவ இப்பத்தான் துணி துவைக்க போனாள்"

"என்னய்யா, நான் எப்ப கேட்டாலும் துணி துவைக்க போய் இருக்கா, துணி துவைக்க போய் இருக்கா அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கியே, அங்கே எல்லாம் யாருமே துணி துவைக்க மாட்டாங்களாம், எல்லாத்துக்கும் மெசின் இருக்காமே?, நீ என்னவோ துணியை சோப்பு வைச்சி துவைக்கிற மாதிரி சொன்னே?"

"இதெல்லாம் யாரு சொன்னா?"

"கேள்விப் பட்டேன்,என் ௬ட பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன கொடுமைப்டுத்தினேன் உன் பொண்ட்டாட்டியை, உங்க கல்யாணம் முடிஞ்ச ஒரே வாரத்திலே  உன் கூடவே கிளம்பிட்டா,அதிகம் படிச்சதாலே இந்த படிக்காத பட்டிக்காட்டு மாமியார்ட்ட பேச விருப்பம் இல்லையோ"

"அப்படி எல்லாம் இல்லம்மா,அவளுக்கு தலை வலின்னு படுத்து இருக்கிறாள்"

"கொஞ்சம் சுக்கு காப்பி போட்டு கொடு சரியாப்போகும் ,சரி என் பேத்தி எப்படி இருக்கா"

"நல்லா இருக்கா?"

"அவ பிறந்து இந்த மூணு வருசத்திலே என்கிட்டே ஒரு வார்த்தை பேசலை, இந்த  தடவையாவது  அவ கிட்ட போன் கொடேன் , நான் ஒரு வார்த்தை பேசிக்கிறேன்" 

"அவ யார்ட்டமா பேசி இருக்கா?"

"அவ என்னைய தவிர எல்லாரிடமும் பேசுறா, உங்க மாமன், மாமியாரிடம் எல்லாம் நல்லா பேசுறாளாமே, அவங்க கிட்ட எல்லாம் பாட்டி எப்படி இருக்கீங்க, தாத்தா எப்படி இருக்கீங்கன்னு நல்லாவே பேசுறாளாம்"

"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்?"

"நான் உன் அம்மாடா, என் புள்ளையப் பத்தி எனக்கு தெரியாதா, ஆமா நீ உங்க மாமா ஊரிலே ஒரு வீடு வாங்கி இருக்கியாமே"


"அது நான் வாங்கலை, என் மாமா தான் வாங்கி இருக்காரு"


"உன் பேருல வீடு வாங்க உங்க மாமனாருக்கு என்ன கிறுக்கா பிடிச்சி இருக்கு, அவன்கிட்ட காசு இருந்தா அவன் பேரிலே வாங்கி இருப்பானே, அவனுக்கு இன்னும் மூணு பிள்ளைகள் இருக்கும் போது, அவன் ஏன் உன் பெயரிலே வீடு வாங்கணும்"

...................................

"என்னய்யா பேச்சையே காணும், அம்மா உண்மையை சொல்லிட்டேன்னு வருத்தமா இருக்கா, உன்னோட முன்னேற்றதிற்கு குறுக்கே நிக்கிற அளவுக்கு கொடுமை காரி ஆகிட்டனோ என்கிற வருத்ததிலே மனசிலே இருந்த கேள்விகளையெல்லாம் கேட்டுபுட்டேன்."

"அம்மா நீங்க கேட்ட ஐந்தாயிரம் இன்னும் ரெண்டு நாளிலே அனுப்பி வைக்கிறேன்"


"நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கேட்டேன், அப்ப சொன்னதையே இப்பவும் சொல்லுற, கடவுள் புண்ணியத்திலே உங்க அம்மாவுக்கு கையும், காலும் இன்னும் கெதியாத்தான் இருக்கு, இனிமேல நீ எனக்கு காசு அனுப்ப வேண்டாம், உனக்கு ஏகப்பட்ட செலவுகள் இருக்கும்,சொல்ல மறந்துட்டேன் போகையிலே வரும்போது கவனமாப் போயிட்டு பத்திரமா வா"


Monday, April 26, 2010

அமெரிக்க பேய்கள்

ரெம்ப நாளா கலை, இலக்கிய துறையிலே(?) ஆராய்சி பண்ணி சலித்து போனதாதாலே இப்படி கொலை வெறி ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சிக்கேல்லாம் மருத்துவர் பட்டம் கொடுக்கும் போது  சொல்லுங்க துண்டு போட்டு வாங்கிக்கிறேன்.


ஐயா நம்ம ஊரு பேயா இருந்தா மல்லிகை பூ, சுருட்டு, பத்தி, பட்டை சாராயம் அப்படின்னு கொடுத்து மயக்கிப்பிடலாம், அதுக பாட்டுக்கு வந்தோமா பூ சுத்தினோமா, சரக்கை அடிச்சோமான்னு முருங்கை மரத்திலே போய் தொங்கிக்கும். நம்ம ஊரு பேய்கள் எல்லாம் ஒரு நாய் குட்டி மாதிரி வா ன்னா வரும் போ ன்னா போய்டும்.நான் ஒரு நாளும் ஊரு பேய்களை பார்த்ததில்லை  பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.


பேய்க்கும் பிஞ்ச செருப்புக்கும்,பிஞ்ச விளக்குமாறுக்கும்  என்ன சம்பந்தமுன்னு தெரியலை. செருப்புக்கும் பேய்க்கும் பங்காளி தகறாரா என்னனு தெரியலை. நம்ம ஊரிலே பெண்களை கிண்டல் பண்ணுறவங்க தான் சில சமயம் செருப்படி, விளக்கு மாத்து அடி வாங்குவாங்க,அது எப்படி  பேய் விரட்ட உதவுமுனு தெரியலை, இல்லை, ஆம்பளைங்க தான் பேயா அலைவாங்களான்னும் தெரியலை. இப்படி இல்லாத பேய்களுக்கு பொல்லாத கற்பனைகள் கட்டி, அதையும் காரணம் காட்டி கல்லாக் கட்ட ௬ட்டமும் இருக்கு.


நம்ம ஊரிலே யாவது பரவா இல்லை, பேய்ன்னா காத்து கருப்பு சொல்லி விட்டுறோம், ஆனா அமெரிக்காவிலே பேய்க்கு திருவிழா எல்லாம் இருக்காம்.அமெரிக்காவிலே இருக்கிறது எல்லாம் நவ நாகரிக பேய்கள்.அப்படி என்ன தனித்தன்மை இருக்குன்னு பார்க்கலாமா(?) 

ரெண்டு நாளா பல்லு விளக்ககாம, குளிக்காம இருந்தாலே பக்கத்திலே போக முடியாது, அமெரிக்காவிலே  இருக்கிற பேய்கள் எல்லாம் முன்னூரு நானுறு வருசமா குளிக்காம, பல்லு விளக்காம இருப்பாங்க, இதுக எல்லாம் எழுந்து வந்தாலே அந்த பக்கத்திலே இருந்து வர்ற நாத்தத்திலே பாதி பேர் செத்துப் போவாங்க.இந்த லட்சணத்திலே இந்த துரைமார்கள் எல்லாம் கழுத்தை தான் கடிப்பாங்களாம்.


கழுத்து என்ன நகராட்சி தண்ணி தொட்டியா, நல்லியை திறந்து குடிக்க,பக்கத்திலே வருகிற வரைக்கும் பொக்கை வாயோட வருவாங்க, கழுத்தை பார்த்த உடனே அவங்க பல் எல்லாம் புலிப் பல் மாதிரி ஆகி,கழுத்திலே கடுவாப் பல்லை வைத்து ரத்தக் குழாயிலே  இருந்து உறிவாங்க,அதனாலே இவங்களுக்கு பேரு ரத்தக்காட்டேரி,  பேரை பார்த்து கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, இவுகளுக்கு சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் வேலை இல்லை, ரத்தம் குடிக்க ஓய்வு எடுக்க, பகல்ல பன்னிகுட்டி மாதிரி படுத்து தூங்கிட்டு, இரவிலே என்றுமே  துவைக்காத ஆளுக்கு சட்டையை போட்டுக்கிட்டு கிளம்பிடுவாங்க ரத்தம் குடிக்க. இவங்க இப்படி நகர் வலம் வரும்போது ரத்த வாடை அடித்து விட்டால் ஆள் சிக்கி விட்டது என்று அர்த்தம்.வேகமா ஓடிபோய் அந்த ஆளைப் பிடித்து கொண்டு கழுத்தைக் கடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


இவங்க ரத்தம் குடிக்கிற ஆளுங்க சீக்கு வந்த கோழி மாதிரி முதல்ல தலை ஆட்டிகிட்டு இருப்பாங்க,ரத்தம் போகுதேன்னு கவலையிலே இல்லை முண்ணூறு வருசமா குளிக்காம பல் விளக்காம இருந்த ஒரு ஆளு கழுத்து கிட்ட வந்து மூச்சி விட்டா அந்த நாத்ததிலே அவன் மண்டையைப் போட்டுடுவாங்க, இருந்தாலும் குடிக்கிறவரு ரெம்ப நல்ல மனுசனாம், குழாயிலே இருந்து எவ்வளவு நல்ல ரத்தம் எடுத்தாரோ அதே அளவு கெட்ட ரத்தத்தை கடிச்சவரிடமே திருப்பி கொடுத்திடுவாரு. இவங்களுக்கு எல்லாம் நம்ம ஊரிலே சிலை இல்லைன்னு வருத்தமாத்தான் இருக்கு. 


இந்த ரத்தக் கொடுக்கல் வாங்கல் முடிஞ்ச கொஞ்ச நேரத்திலே கடி வாங்கின ஆளு எழுந்திரிச்சி அவரும் ரத்தம் குடிக்க தயார் ஆகிடுவாரு, அதாவது நாய் கடிச்சி வைத்தியம் பார்க்காம விட்டுட்டா கொஞ்ச நாள்ல நாய் மாதிரி குலைக்கிற மாதிரி கடிபட்ட ஆளு இன்னொருத்தர் கழுத்தை கடிக்க கிளம்பி போய்டுவாரு.


இரவிலே ஆயிரம் வாட்ஸ் பலப் வெளிச்சத்திலேயும் பொக்கை  பல்லை காட்டிக்கிட்டு அவங்க ௬ட்டத்துக்கு இலவச ரத்த தானம் முகாம்  இல்லாம ஆள் சேர்கிற இவங்க, இரவிலே பறந்து பறந்து ஆள் பிடிக்கிற காட்டேரி கருவாலி துரைமார், அவங்க வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம், ரெண்டு நொடியிலே சந்திர மண்டலம் போய்டுவாங்க, ஐந்து நிமிசத்திலே செவ்வாய்க்கு போய்டுவாங்க,அங்கே கடை வைத்து இருக்கும் நாயர் கடையிலே ரத்தப் பொரியலும், ரத்த டீ யும் வாங்கி குடிச்சிட்டு வருவாங்க.


 இனிமேல எல்லாம் நாசா கிட்ட சொல்லி பீனிக்ஸ் மாதிரி யந்திரம் தயாரிக்கதுக்கு பதிலா ரெண்டு காட்டேரியை நரி மாதிரி அனுப்பி வையுன்னு சொல்லணும்,அமெரிக்காவுக்கு  செலவு மிச்சம் ஆகும், இப்படி ஒரு யோசனையை சொன்ன எனக்கு ஆஸ்கார், நோபல் எதாவது ஒண்ணு கிடைக்குமா?. இவ்வளவு இமாலய திறமை வைத்து இருக்கும் யோக்கியரு, நாணயஸ்தரு பகலிகே லேசா சூரியனை பார்த்து விட்டா சாம்பல் ஆகி அஸ்தி ஆகிவிடுவாரு, நாம ஒரு மண் சட்டியிலே அவங்க அஸ்தியை எடுத்து கிட்டு போய் கடலிலே கரைத்து விடலாம்.


இவங்களுக்குள்ளேயும் பங்காளி சண்டைகள் இருக்கு, ஒருத்தர் கழுத்திலே நல்லியை திறந்து ரத்தம் குடிச்சிக்கிட்டு இருக்கும், பசியோட இருக்கிற இன்னொருத்தர் வந்து விட்டா, ரெண்டு பேரும் குட்டி போட்ட பன்னி மாதிரி உறுமுவாங்க, கோர்.. ஆ.. பூ ன்னு சின்ன புள்ளைங்க பேசுற மாதிரி பேசிக்குவாங்க, இவங்க பேசுற மொழி எதுன்னு இன்னும் ஆராட்சி நடந்து கிட்டு இருக்கு. சில சமயம் துண்டு போட்டு உசார் பண்ணிய ரெண்டு காட்டேரி களும் ஒண்ணா போகும், யாரவது ஒருத்தர் சிக்கிட்டா, காதலன் நீ முதல்ல குடி, உடனே காதிலி நீ முதல்ல குடி ன்னு காதல் ரசம் உருக உருக பேசுவாங்க, கொய்யால நீங்க ஆணியே பிடிங்க வேண்டாமுன்னு கீழே படுத்து இருந்தவரு எழுந்து வீட்டுக்கு போய்டுவாரு, சில சமயம் யாரவது ஒருத்தர் அதிகமா குடிச்சிடாடா, இன்னொரு காட்டேரி கோவத்திலே ஒரு ஓரமா போய் உட்கார்ந்து விடுவாரு, அதை சமாதானப் படுத்த, ஒரு காட்டேரி வாயிலே இருந்து ரத்தத்தை இன்னொரு காட்டேரி வாய் வழியா குடிச்ச ரத்தத்தை  இடம் மாத்திடுவாங்க.இந்த காட்டேரி துரைமார்கள் எல்லாம் டாக்டர் ஆகிட்டு காட்டேரி ஆனாங்களா இல்லை காட்டேரி ஆக்கிட்டு டாக்டர் ஆனாங்களா ன்னு தெரியலை.


ரத்தம் குடிச்சி முடிந்த உடனே இவங்க வாயைப் பார்த்தா சாக்கடையிலே உருண்டு பிரண்ட பன்னி மாதிரியே இருக்கும். இவங்களுக்கு ரத்த வங்கி அப்படின்னு ஒண்ணு இருக்குன்னு தெரியாது, சுடு சோறு மாதிரி, சுடச் சுட ரத்தம் தான் குடிப்பாங்களாம்.எந்த வகை ரத்தத்தையும் ஏத்துகிற இவங்க இரும்பு இதயத்தை ஆணியால அடிச்சா மண்டைப் போட்டுவான்களாம்.


அமெரிக்க துரைமார்கள்ட கேட்டா இந்தியாவிலே தான் முட நம்பிக்கை அதிகமா இருக்குன்னு சொல்லுறவங்க, இதெல்லாம் முற்போக்கு சிந்தனையா, இல்லை பினவீனத்துவமா ன்னு தெரியலை. இப்படி இல்லாத பொல்லாத காட்டேரிகளை காட்டி படம் எடுத்துவிட்டு கல்லா கட்டிட்டு போய்டுறாங்க, நாமும் அமெரிக்காவிலே பனை மரத்தைப் பார்த்துவிட்டு "wow, never seen palm tree in my life" ன்னு சொல்லிட்டு போயிடுறோம்.


Wednesday, April 21, 2010

விலையுயர்ந்த பிறந்த நாள்

பிறந்த நாள் அப்படின்னு ஒண்ணு இருக்கு, புது சட்டை துணி எல்லாம் எடுத்து மிட்டாய் கொடுப்பாங்கன்னு எனக்கு ரெம்ப நாளா தெரியாது.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது கூட படிச்ச பையன் எல்லோருக்கும் மிட்டாய்  கொடுத்தான்.

வகுப்பிலே இருந்த எல்லோருக்கும் கொடுத்த மிட்டாய் போக மீதம் இருந்ததை எல்லாம் அவனுக்கு தெரியாம ஆட்டையை போட்டுட்டு கேட்டேன்  "இன்னைக்கு என்னடா விசேசம்?"

"எனக்கு பிறந்தநாள்" 

அந்த வார்த்தையை ஞாபகம் வச்சிக்கிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து 

"அம்மா எனக்கு எப்ப பிறந்தநாள்?"

"நீ ஆணியிலேயோ, மாசியிலையே பிறந்த?"

"அது எப்படிம்மா ரெண்டு மாசத்திலே பிறக்க முடியும்?"

"நீ பிறந்தப்பத்தான் இருந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போனோம், அந்த கஷ்ட காலத்திலேயே, உன் பிறந்த நாள் எல்லாம் ஞாபகம் வைக்க எங்களுக்கு நேரம் இல்லை."

அதோட பிறந்த நாள் நினைப்பை விட்டுவிட்டேன், பத்தாம் வகுப்பு முடித்த உடனே பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் அட்டையிலே உள்ள பிறந்த நாளை காட்டி அம்மாவிடம் 

"நான் இந்த தேதியிலேயா பிறந்தேன்".

"டேய், நீ ரெம்ப நல்லா படிப்பன்னு, பள்ளிக்௬டம் சேர்க்கும் போது உன் வயசை ௬ட்டி சேத்து கிட்டாரு வாத்தியாரு, ஆனா நீ எட்டாம் வகுப்பிலே ரெண்டு வருஷம், ஒன்பதாம் வகுப்பிலே ரெண்டு வருஷம் இருந்து கஷ்டப் பட்டு இப்பத்தான் பத்து பாஸ் ஆகி இருக்க"  அதோட பேச்சை நிறுத்திட்டு போயிட்டேன். 


பண்ணிரெண்டு முடித்து விட்டு கல்லூரி சென்றேன், நிறைய பிறந்த நாள் விழாக்களிலே கலந்து ஓசி சரக்கு கிடைத்தது,கொஞ்ச நாள் கழித்து கொண்டாட குடிக்கிறாங்களா? குடிக்க கொண்டாடுறாங்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. எல்லாரிடம் ஓசி சரக்கு வாங்கி குடிக்கிறேன்னு தெரிஞ்ச நண்பர்கள் என்கிட்டே உனக்கு எப்ப பிறந்தநாள் ன்னு கேட்டாங்க.

நான் என்னோட சோகக்கதையை சொன்னேன், சான்றிதழ் படி என்ன தேதின்னு கேட்டாங்க, சொன்னேன். நாட்காட்டியிலே பார்த்தால் அது அன்னைக்கு தான், உடனே என்னோட பிறந்த நாள் கொண்டாடியே ஆக வேண்டும் என என் ௬ட ஓசியிலே குடிக்கிற இன்னொரு நண்பன் கட்டளையிட்டான். கட்டளை எல்லாம் சரி காசுக்கு எங்க போகன்னு கேட்டேன்.

யாராவது கடன் கொடுங்க, நான் அடுத்த மாசம் திருப்பி தாரேன்னு சொன்னேன்,யாரிடமும் காசு  இல்லை, சென்னை நண்பன் கையிலே மோதிரம் போட்டு இருந்தான், குடிக்க உதவாத மோதிரம் எதுக்குன்னு கோபத்திலே சேட்டு கடையிலே அடமானம் வைத்து காசு வாங்கி வந்தான். கருப்பா உன்னைய நம்பி தான் அடகு வைத்து இருக்கேன், மறக்காம திருப்பி தா ன்னு சொன்னான்.சரக்கும், அடகு சரக்கும்  காலி ஆகும் வரை சந்தோசமா இருந்தோம், அடுத்த நாளிலே இருந்து கல்லூரி முடியும் வரை அந்த மோதிரத்தை மீட்டு எடுக்க முடியாமல் கடைசியிலே அது முங்கியே போனது.மோதிரம் அடமானம் வச்சி என்னால திருப்ப முடியலைன்னு விவரம் தெரிஞ்ச உடனே என்கிட்டே பிறந்த நாள் கொண்டாட்டம் பத்தி பேசவே மாட்டாங்க.இன்னும் சென்னை நண்பனுக்கு அந்த கடனை திருப்பி தரலை 

அதோட நானும் பிறந்த நாள் கொண்டாடுவதை விட்டு விட்டேன், கொஞ்ச வருஷம் கழித்து கனடாவுக்கு அலுவலக விசயமா வந்தேன், என்னோட அறையிலே தங்கி இருந்த மனவாடு ரெம்ப நல்லவரு. அவரு பிறந்த நாளுக்கு நான் சரக்கு வாங்கி கொடுத்தேன்னு என் மேல கொலை வெறி பாசம் வந்து எனக்கு பிறந்த நாள் கொண்டாடனுமுன்னு முடிவு பண்ணினார், நானும் என் பழைய கதையை சொன்னேன், அதை எல்லாம் அவரு காதிலே வாங்கலை, சாம்பார்வாடு பிறந்த நாளுக்கு கேக் வாங்கி கொண்டாடியே ஆகணுமுன்னு ஒத்தை காலிலே நின்னாரு.

பிறந்த நாள் தினத்தன்று கேக், சரக்கு எல்லாம் வாங்கி வந்து விட்டார்,கேக் வெட்டும் முன்னாடி பாட்டிலை திறக்க மூடியை எடுக்க பணப்பையை திறக்க, அதிலே இருந்த வங்கி கடன் அட்டையை காணவில்லை,வீடு முழுவுதும் தேடினோம் எங்கும் கிடைக்க வில்லை, ரெண்டு மணி நேரம் ஆச்சி, நேரம் வேற பன்னிரண்டு மணி ஆகப் போனது, எனக்கு வாங்கின சரக்கையும் குடிக்க முடியலை, கேக்கையும்  சாப்பிட முடியலை யலைன்னு வருத்தம்.

ஒரு வழியா கேக் வெட்ட சம்மதித்தார், கேக் வெட்டினோம், வெட்டி கொஞ்ச நேரத்திலே மீதம் இருந்ததை எல்லாம் வங்கி கடன் அட்டை காணாம போன கோவத்திலே என் மேல கல்லை கொண்டு எரியுற மாதிரி கேக் கட்டியை கொண்டு எறிந்தார், நான் அப்படி எல்லாம் முன்ன பின்ன பார்த்தது கிடையாது.அப்படி கொண்டாடினாத்தான் பிறந்த நாளுக்கே மதிப்பாம்.

வாங்கி வந்த சரக்கு, கேக் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு மட்டை ஆகிட்டோம், காலையிலே எழுந்து மீண்டும் வங்கி கடன் அட்டையை தேட ஆரம்பித்தோம் கிடைக்கவே இல்லை, மனவாடோட அக்கௌன்ட் ல லாகின் பண்ணி பார்த்தான், ஆயிரம் டாலரை ஏற்கனவே ஆட்டையைப் போட்டு இருந்தாங்க, உடனே வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு அட்டையை முடக்கினோம்.

மனவாடு ரெம்ப சிகப்பா இருப்பாரு, கோவத்திலே அவரு முகம் என்னை விட கருத்துவிட்டது,கீழே கிடந்த ஒண்ணு ரெண்டு கேக் துண்டுகளை எல்லாம் ஒன்னா சேத்து மறுபடியும் என்னை பார்த்து எறிந்தான், நேத்து எறியும் போது அர்த்தம் தெரியலை, இப்ப எரியும் அர்த்தம் நல்லாவே  தெரிந்தது.சாம்பார்வாடுக்கு  இப்படி ஒரு விலையர்ந்த பிறந்த நாள் கொண்டாடி காசை காணாம அடித்து விட்டோமே என்று அடுத்த நாளே ரூமை காலி பண்ணிட்டு ஓடியே போய்ட்டான், அதற்கு பின் என் ௬ட பேசுறதே இல்லை, நானும் பிறந்த நாள் கொண்டாடுறதை மீண்டும் மறந்தே விட்டேன். இப்பவும் யாராவது காசு அதிகமா இருந்து என்ன செய்ய யோசித்து கிட்டு இருந்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க என் பிறந்த நாள் கொண்டாடலாம்.  


Monday, April 19, 2010

பக்தி பார்வை"மச்சான் நாங்க பக்தி படம் பார்க்க போறோம், நீ வாரியா?"


"என்ன படம் திருவிளையாடலா? கந்தன் கருணையா?"

"அது பழைய படம், புதுசா ஒரு ஆங்கில படம் வந்து இருக்கு?"

"துரைமார்கள் எல்லாம் எப்படா பக்தி பழமா மாறுனாங்க!!!!!!!!" 

"அவங்க கிட்ட எப்போதுமே பக்தி இருக்கு மச்சான், நமக்கு தான் சரியா தெரியலை?"

"எந்த தியேட்டர் மச்சான்?"

"பாலக்கரை தியேட்டர்ல?, படம் நூறு நாள் ஆகியும் இன்னும் ஹவுஸ் புல்"

"என்னது நூறு நாளா?, பாலக்கரையிலே ஒரே படம் அலெக்ஸ்சாண்டரா, அது பக்திப்படம் இல்லையே பலனா படமுன்லா கேள்விபட்டேன்"

"பார்காதவங்களுக்கு பலான படம், பார்த்தவங்களுக்கு பக்திப் படம்."

"நான்,கருப்பன், வெள்ளையன் போறேம், நீ வாறியா?"

பக்திமணம் படம் பார்க்க இழுத்தாலும், என்னவோ எனக்கு படத்துக்கு போக பிடிக்கலை, கோவிலே சந்தித்த அந்த பெண் ஒரு காரணமாக இருக்கலாம்.நண்பர்களை அனுப்பிவிட்டு, நான் மாம்பழச்சாலையிலே இருந்த எங்கள் விடுதிக்கு சென்றேன், அவள் சொன்ன ஏழுமணி எனக்குள் மணியாய் ஒலித்துக்கொண்டு இருந்தது, புத்தகத்தை எடுத்தேன் படிக்க முடியலை, மறுபடி படிச்சேன் ஒண்ணுமே புரியலை, நான் படிக்கிறது தெலுங்கு புத்தகமுன்னு கூட தெரியலை, புத்தகத்தை கீழே வைத்தேன், மணியை பார்த்தேன் 6:35 எனக் காட்டியது, முகம், கை, கால்களை அலம்பி விட்டு கீழே வந்தேன், எங்க விடுதிக்கு பின்னால் காவிரி ஆறு ஓடுகிறது, பல வருடங்களுக்கு பின்னால் காவிரி நதியிலே வெள்ளம் வருவதை எல்லோரும் ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தார்கள். வெள்ளம் போல நானும் போய் வெள்ளம் பார்க்க சென்றேன்.வெள்ள ஓட்டத்தைப் பார்த்து என் மன ஓட்டத்தை சுழற்றினேன்.

அவ ௬ப்பிட்டா போகனுமா?, போகலைனா என்ன ஆகும், உயிர் பலி, கொலைப் பலி, எதுவும் நடக்கப் போறதில்லை, போகலைனா இதயத்தை யாரும் இடம் மாத்தி வைக்கிறதில்லை, போனா கிட்னியை இலவசமா யாரும் கொடுக்க மாட்டாங்க, போனாலும், போகாவிட்டாலும் வயறு பசிச்சா சாப்பிடனும், பொம்பளை சொன்ன உடனே நாய்க்குட்டி மாதிரி பெட்டியை கட்டிக்கிட்டு ஓடினது போதும் என்று நான் மனசிலே நினைத்துக் கொண்டேன், நினைச்சதை எல்லாம் சத்தம் போட்டு பேசி இருந்தா கிறுக்குப் பயன்னு என்னை ஆத்திலே தள்ளி விட்டு இருப்பார்கள், நான்   பதட்டப் படுகிற அளவுக்கு ஒண்ணும் பழக்கம் இல்லை, ஒரு பக்திமானா திருவரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட போன என்னையே பார்த்து கொண்டு இருந்த அவள், நிம்மதியா சாமி கும்பிட முடியாமல் செய்து விட்டாள்.

ஒருத்தரோட பார்வையை வைத்து அர்த்தம் கண்டு பிடிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலை, அதுமில்லாமல் மனசில் பட்டதை நேரிலே கேட்டுவிடுகிற பழக்கம் இருந்ததாலே, நான் அவகிட்ட கேட்டேன்.

"நீங்க என்னை பார்த்தீர்களா?,அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன?"

"நீங்க பச்ச புள்ள மாதிரி இருக்கீங்க, ரெம்ப பக்தி பழமா சாமி கும்புடுறதைப் பார்த்தால்,அப்படி என்ன கவலையோ யோசித்து ஆர்வமாப் பார்த்தேன்."

நான் என்ன கேட்டேன்னு இவளுக்கு தெரிஞ்சு இருக்குமோன்னு நினைத்தேன், இருந்தாலும் நான் போட்ட துண்டை வாங்க ஆள் வேண்டும் என வேண்ட வில்லை என்பதாலே

"நான் என்ன வேண்டிக்கிட்டேன்னு தெரியுமா உங்களுக்கு?"

"தெரியாது, ஆனா தெரிஞ்சிக்கனுமுன்னு கொள்ளை ஆசை,இப்ப சரியா பேச முடியலை சாயங்காலம் ஏழு மணிக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள்.

"பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.அவள் சொன்ன ஆசை எனக்கே ஆசையை வரவழைத்ததாலே கோவிலே இருந்து திரும்பி வந்ததிலே இருந்து என் மனம் கோவிலே இருந்தது, மணியைப் பார்த்தேன் மணி ஏழை தாண்டிவிட்டது,பசி வயிற்றை கிள்ளியது,  மீண்டும் விடுதிக்கே சென்று விட்டேன். படம் பார்த்து விட்டு நண்பர்கள் அனைவரும் சாப்பாட்டை முடித்து விட்டு அயர்ந்த நித்திரையிலே இருந்தார்கள், ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. நெடு நேரம் முழித்து இருந்து எப்ப தூங்கினேன் என்று தெரியவில்லை, காலையிலே எழுத்து குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு சென்றேன், ௬ட்டமே இல்லை, நேற்று சந்தித்தவளை காணவில்லை கல்லூரி சென்று விட்டு மீண்டும் மாலையிலே கோவிலுக்கு சென்றேன், அவள் வந்து இருக்கிறாளா என்று தேடித் பார்த்தேன், அவளை காணவில்லை, சாமி கும்பிடவும் மனம் இல்லை, அவளிடம் நேற்று பேசிய இடத்திற்கு வந்தேன், யாருமே இல்லை.அன்று இரவும் அவளைப் பற்றியே நினைத்து கொண்டு இருந்தேன், அவளை சந்தித்து இருக்கலாம் நேற்று என்று என்னை நானே கேள்வி கேட்டேன்,பரிசையிலே கேட்கும் கேள்விகளுக்கு எப்படி விடை தெரியாதோ, அதே மாதிரி இதுக்கும் விடை தெரியலை,அடுத்த நாளும் போனேன், ஆனால் அவள் வரவில்லை, அடுத்த ஒரு வாரத்திலே அவள் நினைவுகளை மறந்தேன், அடுத்த மாதத்திலே அவளையே மறந்தேன்.

இதுக்கு மேல என்ன எழுதன்னே மறந்தேன், போகிற போக்கிலே ஒண்ணை சொல்லிட்டு போறேன், எல்லா உடல் வலிகளுக்கும் மருந்து இருந்தாலும், மனதின் வலியை போக்க சிறந்த சர்வலோக நிவாரணி காலமே என்பதை சொல்லி சிறுகதையை முடித்துக் கொள்கிறேன், சோடா கொடுக்கிற சாக்கிலே சோடா பாட்டிலை எடுத்து வர வேண்டாம்.

இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது மட்டுமே பிரதான வேலையை இருந்தது, எனது பக்தியைப் பார்த்து மீண்டும் யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை.


Friday, April 2, 2010

பதிவர் சங்கமும், OOPS ம்

கொஞ்ச நாளைக்கு முன்னே குடுகுடுப்பையார் ஊப்ஸ் பிரயாணி என்று ஒரு இடுகை இட்டார், அதையே நடப்பு நிலைக்கேற்ப மாற்றி அதிலே சங்கத்தையும்(இன்னுமா சங்கம் முடியலை) நுழைத்து மென் பொருள் துறை வல்லுநர்(?) என்ற முறையிலே சங்கத்தையும், ஊப்ஸ்சையும் இணைத்து இந்த கொலை வெறி இடுகை.இதுவே சங்கத்தை பற்றிய கடைசி இடுகை, இதற்கு மேல சங்கத்தைப் பத்தி பேசினா என்னை சங்கத்தை விட்டு நீக்கலாம்.இந்த இடுகையிலே ஆங்கிலம் நிலை தடுமாறி கரை புரண்டு ஓடும் என்பதை சொல்ல வேண்டிய கடமை, அதற்காக தமிழ் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன்,கணனி வல்லுனர்களும் பிழைகளை பொறுத்தருள்க.


Object orientated  programming என்பதையே சுருக்கி நாம் OOP என்று 
சொல்லுகிறோம் என்று நான் சொல்லத்தேவை இல்லை.object என்பது வெவ்வேறான பணிகளை விதிமுறைகளின் படி செய்வது, இந்த பணிகள் functions and procedures வழியாக செய்யப்படுகிறது.அதை போலவே தமிழ் பதிவர்களும் வெவ்வேறான துறைகளைச் சார்ந்த(கதை,கவிதை, கட்டுரை, இலக்கியம், மொக்கை) வற்றை எழுத்துகிறார்கள்.


அடுத்து class,  ஒரு object ன் பண்புகளை குறிப்பதே class என்று சொல்லலாம், வலைப் பதிவர் என்பது object என்று சொன்னால், அவருடைய பண்புகள் எல்லாம் class க்குள் இருக்கும், பதிவரின் பண்புகள் என்பது, எழுதும் மொழி, துறை, பெயர், இருப்பிடம்(ஆட்டோ அனுப்ப வசதிக்காக).


பதிவுலகம் என்பது தனி மனிதன் சார்ந்தது அல்ல, ஆகவே பதிவரின் பண்புகள் பதிவருக்கு, பதிவர் வேறுபடும், ஒவ்வொரு பதிவருக்கும் தனியாக class வேண்டும்,  ஆனால் அவர்களிடம் உள்ள பொதுவான பண்புகளை "abstract class" என்று குறிப்பிடலாம், அனைத்து பதிவர்களும் இந்த "abstract class" ன் பண்புகள் இருக்கும், ஆகையால் பதிவர் என்ற தனிமனிதன் must inherit "abstract class". உதாரணமாக "தமிழ்ப் பதிவர்" என்பது "abstract class" என்றால் குடுகுடுப்பை என்ற பதிவர் inherit "தமிழ்ப் பதிவர்" என்ற "abstract class". இந்த "abstract class" ன் பண்புகள் தவிர குடுகுடுப்பையின் தனி தனித்தன்மைகளாகிய "எதிர் கவுஜை", "என்னை மாதிரி மொக்கை" போன்ற அவர் சார்ந்த குணநலன்கள் "குடுகுடுப்பை" class ல் இருக்கும்.


பதிவர்கள்  எல்லோரும் ஒரே இடத்திலே இருந்து பொட்டி தட்டிகிட்டு கும்மி அடிக்கிறத்தில்லை, உலகெங்கும் பறந்து விரிந்து இருக்கிறார்கள். இவங்களை எல்லாம் இணைப்பது எப்படி கிளை சங்கம் முலமாக செய்யலாம், எப்படி கிளை ஆரமிக்கிறது. ஒரு அமைப்பின் செயல்பாடுகள் படிவம் அதன் கிளைகளிலும் அப்படியே இருக்கும், இதை எப்படி OOP ல் இணைப்பது என்றால் "Interface" வழியாக, இதை "abstract class"  மூலமாகவே செய்யலாம் என்றாலும், "interface"  வைத்து இணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே(?)  
(கொ)சொல்கிறேன். ஒரு பதிவர் "interface" சை "implement" செய்யும் போது கிளைகளிலே ௬ட்டம் சொம்பை எடுத்து கிட்டு போறது, கருத்துக்கு எதிர் சொம்பு அடிக்கிறது உட்பட பல விசயங்களிலே ஒப்பந்தம் செய்கிறார். அப்படி ஒப்பந்தம் செய்யாத program கீழே இருப்பது மாதிரி இருக்கும். 
public void Thundu()
    {
        int Thamna = 0; //தாம்னா 
        bool usarakalai; //உஷார்ஆகலை 
        bool pickup;
        while (usarakalai)
        {
            // துண்டு போடும் வழி முறைகளை எல்லாம் விளக்கி எழுதி, துண்டு கிடைத்தவுடனே 
            usarakalai = false; 
            pickup = true;
            Thamna = 1;
        }
    }ஒரு பதிவர் எத்தனை "interface" வேண்டுமானாலும் "implement" பண்ணலாம், உதரணாம நெல்லை மாவட்டத்துக்கு ஒரு கிளை இருந்தால், மாவட்டத்தின் கீழ் வரும் அனைத்து கிளைகளின் கீழ்  "interface" சையும் implement பண்ணலாம். மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் போகும் போது,பதிவர் எல்லா interface சையும் கழட்டி விட்டுட்டு, புது இடத்தோட "interface" சை "implement" பண்ணிக்குவார். இதைதான் decoupling என்று சொல்வார்கள்(?).பதிவர் class, interface and its implementation  எல்லாம் தகவல் அடங்கியவற்றை encapsulation என்று சொல்லலாம். 
 
பதிவர், கிளைகள் இதையெல்லாம் வைத்து தனியாக செயல் படலாம், ஆனால் ஒரு ஒருகிணைந்த கட்டமைப்பு உருவாக்க முடியாது, கணனியிலே அதைப் போல class,abstract class, interface பயன் படுத்தினாலும், அதை செயல்பட வைப்பது "Application", சங்கம் தான் அந்த "Application". முட்டி மோதி கடைசியா வச்ச தலைப்புக்கு விடை கிடைத்து விட்டது.

இன்னும் இப்படி நிறைய பேசிகிட்டே இருக்கலாம், படிக்கிற கொஞ்ச பேரோட நல்ல எண்ணம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன்.
கீழே உள்ளது  C# language உதாரணம்
--------------------------------------------------------------------------------------------------------------
  public abstract class Blogger
    {
       public abstract string GetName();
       public abstract string GetAddress();
       public abstract string Getfield();
        //....
        //....
        //....
    }

   public interface IBranch
    {
        string name
        {
            get;
            set;
        }
        //...
        //......


    }

    public class Kudukudppai : Blogger, IBranch 
    {


        public override string GetName()
        {
            throw new Exception("The method or operation is not implemented.");
        }


        public override string GetAddress()
        {
            throw new Exception("The method or operation is not implemented.");
        }


        public override string Getfield()
        {
            throw new Exception("The method or operation is not implemented.");
        }
        #region IBranch Members


        public string name
        {
            get
            {
                throw new Exception("The method or operation is not implemented.");
            }
            set
            {
                throw new Exception("The method or operation is not implemented.");
            }
        }


        #endregion
    }
------------------------------------------------------------------------------------------------------------


Thursday, April 1, 2010

சங்கத்து சிங்கம்

சங்கத்து பிரச்னையைப் பத்தி பேசலைனா சங்கத்திலே சேத்துக்க மாட்டாங்களோன்னு ரூம் போடாம யோசித்தேன், விடையும் கிடைக்கலை, வீட்டிலே செய்த வடையும் கிடைக்கலை, ஆனா ஒரு (எ)அருமையான கதை கிடைத்து இருக்கு, கண்டிப்பா ஆயிரம் நாள் ஓடும்.


கதையோட கோழி முட்டை கருவே சங்கம் அமையுமா, அமையாதான்னு கடைசி வரைக்கும் படிக்கிறவங்க(பார்க்கிறவங்க) இருக்கை நுனிக்கு வந்து கீழே விழுற மாதிரி கதை. நான் பல வருசமா யூத் மாதிரி நடிச்சிகிட்டு இருக்கிறதாலே இந்த கதையும் இளமை, அழகு, காதல், கொலைவெறி, கும்மிவெறி போன்ற அட்டகாசங்கள் நிறைந்த திரைப் படம்(?).
கதையின் ஆரம்பத்திலே நாயகனும், நாயகியும் கல்லூரியிலே படிகிறார்கள்.நாயகியை பார்கிறான், வழக்கம் போல காதல் குளத்திலே விழுந்து விடுகிறான், அவன் விழுந்த உடன் தான் தெரிகிறது, அது குளமல்ல கடல் என்று, குளம்னு நினைச்சிகிட்டே ரெண்டு காதல் கனவுப் பாட்டு முடியுது, அது கடல்னு தெரிஞ்ச உடனே ஒரு சோகப் பாட்டு, படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலே மூணு பாட்டை முடித்த இயக்குனருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம். 


அரைமணி நேரத்திற்கு அப்புறமா கதை ஓட்டம் என்ன செய்யன்னு யோசிக்கும் போது உதிர்த்த யோசனை, நாயகியோட அப்பா ஒரு வலைப்பதிவு எழுத்தாளர். வேலை வெட்டி இல்லாமா எழுத ஆரம்பித்தவர் ஒரு பெரிய இணைய எழுத்தாளர் ஆகி இருக்கிறார். காதலியை தேத்துறது பெரிய விஷயம் இல்லை, அவங்க அப்பாவை உசார் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும், என்ற தமிழ் பட மரபுப்படி இந்தக் கதையிலேயும் நாயகியும், தன்னோட அப்பாவோட முழு சம்மதம் வேண்டுமுன்னு துண்டு போட்டு சொல்ல, காதலிக்கும் போது நாய்க்குட்டி மாதிரி காதலி சொல்லுறதை கேட்கும் காதல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் நாயகனும் சரி என்று சொல்லி விடுகிறார்.காதலனுக்கு வேற வழி இல்லை, கை வசம் இருப்பதோ ஒன்று, அவன் என்ன செய்வான் பாவம்(?).அங்கிட்டு ஒரு குத்து வசனம் சொல்லுறாரு "ரெண்டு மூணு காதலி தேத்தி வச்சிகோங்க, அப்பத்தான் ஒண்ணு போனாலும், இன்னொன்னு ௬ட சுத்தலாம்"


நாயகன் பதிவுலகிலே காலடி எடுத்து வைக்கிறார், பதிவுலகம் வந்து ஒரு மாசம் ஆனாலும் என்னநடக்குதுன்னே புரியலை, எழுத்தும் புரியலை, எழுதவும் தெரியலை, அவரு காதலி கிட்ட கேட்குறாரு, அவங்க பார்த்து விட்டு கொலை வெறி கோபத்திலே " உன்னை தமிழ் கடைப் பக்கம் போன்னா, நீ வடக்கூர் கடைப்பக்கம் போனா, அவங்க சிலேபியும், முறுக்கும் எப்படி உனக்கு புரியும்". அதற்கு பின் தமிழ் கடைகளை தேடி பிடிச்சி களத்திலே இறங்குகிறார்.இவ்வளவு நேரமா ஊர் மேய்ந்த கதை, கதையோட கோழி முட்டை கருவுக்கு இப்பத்தான் வருது,ஆனா இன்னும் இடைவேளை விடலை, அதனாலே அமைதி காக்கவும்.


பதிவுலகம் வந்த நாயகன், நாயகியோட அப்பா தான் பெரிய ரவுடின்னு தெரிஞ்சுக்கிறார், நிஜத்திலே இல்லை எழுத்திலே ரவுடி, அவரு பதிவர்கள் சங்கம் அமைக்கனுமுன்னு முயற்சிகள் எடுக்கிறார். (சங்கம்ன்னு பேரு வந்து இருக்கு, அதனாலே கவனமாக வாசிக்கவும்)எழுதுற ஆயிரம் பேரும் ஆயிரத்தி ஐநூரு திசையிலே இருப்பதால், சங்கத்துக்கு சொந்த செலவிலே நாயகியோட அப்பா வாங்கின  செம்பையும், நாற்காலியும் பத்தி, நாநூறு விதமா கருத்து சொல்லி நாயகியோட அப்பாவுக்கு எதிர் சொம்பு அடிச்சி, ஆப்பு அடித்து உட்கார வைத்து விட்டார்கள்.பதிவர்களைஎல்லாம் ஒன்று சேர்த்து தன்னோட வருங்கால மாமனாரை நாற்காலியிலே உட்கார வைப்பேன் என்று சபதம் போடுவதோடு இடைவேளை

(டீ, காபி குடிக்க போறவங்க போகலாம்)  

இரண்டாவது பாதி துவக்கத்திலே நாயகன் ஒரு திட்டத்துடன் முடி வெட்டும் கலையைப் படிக்க ஆவுஸ்திரேலியா செல்கிறார், கதை ஆசிரியர் ஓசியிலே உலகம் சுத்திப் பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே, இரண்டாவது பாதி முழுவதும் வெளிநாடுகளிலே எடுக்கப் படுகிறது.


நாயகன் போனவுடனே, உள்ளூர் நாயகிக்கு பசலை நோய் வந்து, ஊசி மணி, பாசி மணி விற்கும் கலையைப் படிக்க ஆவுஸ்திரேலியாவுக்கு நாயகன் பின்னால் வருகிறாள்.அங்கே இருக்கும் பதிவர்களை எல்லாம் சந்தித்து சங்கத்திற்கான சங்கை நல்லா விளக்கி சொல்லி விட்டு அனைவரின் சம்மதம் பெற்று அங்கே படிப்பு முடியும் முன், அமெரிக்காவுக்கு நாயகன் தையல் கலை கற்கவும், நாயகி பேன், பொடுகுகளை தலையிலே இருந்து எடுப்பது எப்படி என்று படிக்கவும் வருகிறார்கள். 


அங்கே இருக்கும் துண்டு, ஜக்கம்மா, பிதற்றல், மனிஷ் பதிவர்களை சந்தித்து மீண்டும் சங்கத்து சங்கை கொடுத்து விளக்கி அவர்களின் சம்மதம் வாங்கி விட்டு,அமெரிக்க படிப்பு முடியும் முன்னே பிரித்தானியாவுக்கு ஆடு வெட்டும் கலையை படிக்க நாயகனும், கோழி வெட்டும் கலையைப் படிக்க நாயகியும் விண்ணபித்து செல்கிறார்கள். விமானத்திலே போகும் போது ஒரு கனவு பாட்டு போட்டு, கொலை வெறியோடு இருக்கும் ரசிகர்களை சாந்தப் படுத்த முயற்சி செய்கிறார்கள். 


பிரித்தானியாவிலே வந்த வேலை முடிந்ததும், ஐரோப்பாவுக்கு ஆணி பிடுங்கும் கலையை கற்க நாயகனும், நாயகியும் சேர்ந்து விண்ணப்பிக்கும் போது படம் முடிய இன்னும் பத்து நிமிசமே இருக்கு என்று தெரிய வர, மேற் படிப்பை ரத்து செய்தது விட்டு சென்னைக்கு வருகிறார்கள், வந்த உடனே சங்க௬ட்டம் என்று தகவல் கிடைக்க நேராக சொம்பையும், நாற்காலியையும் எடுத்து கொண்டு ௬ட்டம் நடைபெறும் அறைக்கு செல்கிறார்கள்.


என்ன எதுன்னு கேட்டகாம இன்னொருவர் வைத்து இருந்த ஒலி பெருக்கியை வாங்கி 


"தாய்மார்களே, பெரியோர்களே ஆறுகள் சங்கமிக்கும் போது ஓசைவரும், நீர் சுழல் வரும்,அதிலே ஆபத்துக்கள் நிறைய இருக்கும், அதற்காக ஆறுகள் வேண்டாமுன்னு சொல்லமுடியுமா?
அதே மாதிரி தான், நாலு பேரு ௬டுகிற இடத்திலே சலசலப்பு வரும், சண்டை வரும், அதற்காக ௬ட்டம் ௬டாம இருக்க முடியுமா?"

இந்த கேள்வியை கேட்டதும் எல்லோரும் கை தட்டுறாங்க திரையிலே, இதோட படம் முடியலை, ஆனாலும் தியேட்டர்ல யாருமே இல்லை, படத்திலே கை தான் தட்டுனாங்க, ஆனா பார்க்கிறவங்க எல்லாம், நாற்காலியை தட்டி எடுத்து படம் ஓடுகிற திரையை கிழிச்சி தொங்க விட்டுட்டாங்க. அதோட படமும், விமர்சனமும் முடியுது.