Friday, January 30, 2009

முத்துக் குமரா..
ரத்த முத்துக்களால்


கோர்க்கப்பட்ட என்பை


செந்தழல்களால் அழித்துக் கொண்ட


காட்சியை கண்ட


எங்கள் கண்ணில்


கண்ணீர் வற்றி


உதிரமே கொட்டியது


முத்துக் குமரா..
நீ சாந்தமாக உறங்கினாலும்


உன் ஆன்மாவை


சாந்தப் படுத்த வழி இல்லையே


முத்துக் குமரா..
தமிழ் அன்னையின்


வம்சத்தை காத்திட உழைத்து


மீளா தூக்கத்தை நீ அடைந்தாய்


முத்துக் குமரா..


ஆனால்


நாங்களோ மீளா


துக்கம் அடைந்த்தோம்
வீழ்ந்த உன்னை


விதைக்க மனமில்லாமல்


உன் நினைவுகளை


நெஞ்சில் வைத்து


காத்துகொள்வோம்.
நீ உன்


அன்னைக்கு மற்றுமல்ல


தமிழ் அன்னைக்கும் தான்


முத்துக் குமரன்..


Wednesday, January 28, 2009

என் முதல் நேர்முகத் தேர்வு

கல்லூரி முடிச்ச உடனே எல்லாரையும் போல சென்னைக்கு பெட்டியை கட்டிக் கிட்டு வந்தேன்.ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான சென்னை நண்பனுடன், இத முறை ராமநாதபுரம் நண்பனையும் அறிமுகம் செய்ய வேண்டிய இருக்கு, ஏன்னா அவரு எனக்கு முன்னாடியே வந்து சென்னையிலே துண்டை போட்டு ஒரு குளிர் சாதன பொட்டி தயாரிக்கிற அலுவலகத்திலே வேலையும் வாங்கிட்டாரு,அவரை தொடர்ந்து லால்குடி நண்பனும் அதே அலுவலகத்திலே வேலை வாங்கிட்டாரு.


"மச்சான் சி.வி கொடுத்த உடனே வேலை டா, அதனாலே நீ நாளைக்கு அலுவலகத்துக்கு வா"


அவங்க சொன்னதிலே எனக்கு வேலை கிடைச்சமாதிரியே ஒரு நம்பிக்கை வந்தது, அடுத்த நாள் நண்பனின் அலுவலகத்திற்கு சென்றேன். சி.வி எல்லாம் வாங்கி பாத்து விட்டு, ௬ப்பிடுறோம் உக்காருங்கன்னு சொன்னங்க.


கொஞ்சம் நேரம் கழிச்சி உள்ளே ௬ப்பிட்டாங்க, உள்ளே போனேன் ஒரு ஆள் நாற்காலியிலே உக்கார்ந்து இருந்தாரு,என்னையும் உக்கார சொன்னாரு.


வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு


என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு.


"நீங்க கேட்டது எனக்கு புரியலை சார்" ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன்.


இப்படி சொன்னதும் கையிலே இருந்த சி.வி கீழே வச்சிட்டு என்னை ஒரு பார்வை பாத்தாரு


"யப்பா நான் நீ படிச்ச பாடத்திலே இருந்து கேட்கலை, நீ எங்க தங்கி இருக்கன்னு கேட்டேன்"

முதல் கேள்வியிலே உண்மை வெளி வந்துவிட்டதேன்னு கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் அவரு ரெம்ப நல்ல மனுஷன் என் மேல உள்ள அபார நம்பிக்கையாலே ரெண்டாவது கேள்வியை கேட்டாரு.

பான்(fan) எப்படி சுத்துது?

இப்படி ஒரு கஷ்டமான கேள்வியை எதிர் பார்க்காத மாதிரி நடிக்க வேண்டிய கடமை, வேற வழி அவரு என்ன கேட்டாலும் பதில் சொல்லத் தெரியாதுன்னு எனக்கு தானே தெரியும்,பயங்கரமா யோசிக்கிற மாதிரி யோசனை பண்ணி.

"சுவிட்ச் போட்டா ஓடும் சார்"

அவரு "வாட்?"

நான் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைச்சுகிட்டு, ரெம்ப சத்தமா

"சுவிட்ச் போட்டா ஓடும்" ன்னு மறுபடியும் சொன்னேன்.

என் பதிலுக்கு என்ன பதில் சொல்லன்னு அவருக்கு தெரியலை, அமைதியா மேசையிலே இருந்த தண்ணியை எடுத்து குடிச்சாரு.

நான் சரியாத்தான் பதில் சொல்லி இருக்கேன் எனக்கு ஒரே சந்தோசம்.

ஏன்னா தண்ணியை குடிச்சு முடிச்சு விட்டு அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.

இளநிலை மின்னணு பொறியாளர் அதாவது விளக்கமா சொல்லனுமுனா Electronics and communication engineering படிச்ச எல்லோருக்கும் தெரியும் Digital signal processing எவ்வளவு கஷ்டமுன்னு, அதிலே இருந்து அவரு ௬ச்சமே படமா ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு

ஒரு கேள்விக்கு நல்ல முறையிலே பதில் சொன்னதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை ன்னு மனசுல நினைச்சுகிட்டு, என்ன பதில் சொல்ல ன்னு யோசித்து பார்த்தேன். ஒன்னும் பிடி படலை.


ஒரு புது முயற்சியா "சிலபஸ்(Syllabus) ல இல்லன்னு" சொல்லிபுட்டேன்.

இதை சொன்ன உடனே அவருக்கு ஒரே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது, அங்கே அலுவலதிலே வேலை செய்யும் ஒருத்தரை ௬ப்பிட்டு பாட புஸ்தகத்தையும் சிலபஸ்ம் எடுத்து என்கிட்டே காட்ட சொன்னாரு.

உண்மையை கண்டு பிடிச்சுட்டாங்கன்னு மன்னிச்சுடுங்கோ உங்களுக்கு சிலபஸ் தெரியாதுன்னு சொல்லிபுட்டேன்.

என்னை கேள்வி கேட்டவரு என்னிடம் ஏதும் சொல்லலை, என்னிடம் சிலபஸ் காட்டின நபர்

"நீங்க வீட்டுக்கு போகலாம், நாங்க சீக்கிரம் சொல்லி அனுப்புகிறோம்" ன்னு சொல்லி விட்டார்.

ஒரு வழியா வேலை கிடைச்ச சந்தோசம், இனிமேல நண்பர்களிடம் அலுவலகம் செல்வதற்கு தேதி கேட்டு கொள்ளலாம் என மனதில் நினைத்து கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்

இரவு 10 மணியாகியும் நண்பர்கள் வீடு வந்து சேர வில்லை, ஒரு வழியாக 11 மணிக்கு வந்தார்கள்.
மச்சான் எப்படி என திறமை நான் சந்தித்த முதல் தேர்விலே வெற்றி, உங்களுத்தான் நன்றி சொல்லணும்,அதனாலே நீங்க வர முன்னாடியே சரக்கு வாங்கி வைத்து விட்டேன்.

இருவரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள், எதுவும் பேசாமல் உள்ளே சென்று நண்பர் போர்வையை எடுத்து வந்தார்.

"எதுக்கு டா, துவைக்க போகிறாயா?" ன்னு கேட்டு முடிக்கலை.

என தலையிலே போட்டு என்னை துவைக்க ஆரம்பித்தார்கள், அடிக்கும் போதே
"கொலைகார பாவி.. கொஞ்சம் விட்டா ஒரு ஆளை கொலை பண்ணி இருப்பே, உன்னை கேள்வி கேட்டு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி, அவருக்கு மாரடைப்பே வந்து விட்டது".

நல்ல வேளை உயிருக்கு பயப்படும் படி ஏதும் இல்லன்னு தமிழ் பட டாக்டர் மாதிரி சொன்னான், எனக்கும் கொலை பழியிலே இருந்து விடு பட்ட சந்தோசம்.

என்னை துவைத்தத்தில் சோர்வு ஆகி உற்சாக பானம் அருந்த ஆரம்பித்தார்கள், அதிலே என்னையும் ஊறுகாயாய் சேர்த்து கொண்டார்கள். அடுத்த நாள்களில் வேறு அலுவலகங்களுக்கு நேர்முகத் தேர்விருக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த இரு மாதங்களில் நான் கற்று கொண்ட பாடம்.

"நீங்க போகலாம், நாங்க சீக்கிரம் ௬ப்பிடுகிறோம்" ன்னு சொன்னா "உனக்கு வேலை இல்லன்னு" அர்த்தம்.Friday, January 23, 2009

நான் கடவுள் விமர்சனம்

பாலாவின் தொடர் வெற்றி என்றே சொல்லலாம் "நான் கடவுள்", காட்சிகள் அனைத்து மிக தத்துருவமாகவும், நேர்த்தியாகவும் அழகாகவும் எடுக்க பட்டு உள்ளது, தமிழ் சினிமாவின் எதாத்ததிற்க்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி நான் கடவுள், படத்தின் கதை இதோ

ஒரு சாதி கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி பெண் ஒருவள் கற்பழிக்கப் படுகிறாள், அந்த சம்பவத்தால் அவள் மனநிலை பாதிக்கப் படுகிறது,அவள் கர்ப்பமும் ஆகிறாள், அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா , அந்த குழந்தை பிறந்தவுடன் அவன் தாய் இறக்கிறாள், அந்த குழந்தை யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியிலே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த குழந்தையை கோவிலில் பிச்சை எடுக்கும் ஒருவர் காப்பாற்றுகிறார்.

அதே கோவிலில் பூ விக்கும் பூக்காரிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள், அவள் பெயர் பூவு(பூஜா), குப்பை தொட்டி ஆர்யாவின் பெயர், இருவரும் ஒன்றாக வளர்வதோடு எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்

சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்.வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான். கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்

அவன் பூ வை அடைய போடும் திட்டங்களில் குப்பை தொட்டி ஆர்யா மண் அள்ளி போட்டு விடுகிறாள், அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான், யோசனை கொஞ்சம் பழசு தான், கோவில் தர்ம கர்த்தா அதனை பார்த்து விட, இந்த முறையும் அவன் திட்டம் பலிக்கவில்லை.

குப்பை தொட்டி ஆர்யாவிர்க்கும் இந்த விஷயம் தெரிந்து விட அவன் தர்ம கர்த்தா மகனை தேடி அலைகிறான், தர்ம கர்த்தா ஆர்யாவிடமும், பூ விடமும் தன் மகனை மன்னிப்பு கேட்க்க வைக்கிறார்.


தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள். பூ வின் சாதகத்தை எடுத்து கொண்டு ஒரு சாமியாரிடன் போகிறார்கள், அவர் இவள் சாதகத்தை பார்த்து, இவளை ஒன்றும் செய்ய முடியாது என்றும், இவளை தொட்டவன் அடுத்த ரெண்டு நாளில் சாவான் என்றும் ௬றுகிறார். இதை கேட்டதும் பயந்து அவள் சாதகத்தையும் கீழே போட்டு விட்டு இருவரும் ஓடி விடுகிறார்கள்

அந்த சம்பவத்திருக்கு பிறகு,பூ தன்னை யாரோ பின் தொடர்வதாகவும், தன் நடவடிக்கைகளை கண்காணிக்கபடுவதாகவும் ஆர்யாவிடம் சொல்லுகிறாள்,முதலில் அதை நம்ப மறுக்கும் ஆர்யா,அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அவனும் உண்மை என நம்புகிறான்.
அதை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் பூ விற்கும், ஆர்யாவிருக்கும் திருமண ஏற்ப்பாடு செய்கிறான். திருமணத்திற்கு முதல் நாள் ஆர்யா காவல் துறையால் கைது செய்யப்படுகிறான் ஒரு திருட்டு வழக்கில், இதனால் திருமணமும் நின்று விடுகிறது.


இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.


இரண்டாவது பாதியில் ரெண்டு நாள் கழித்து வெளியே வரும் ஆர்யாவிற்கு பூ வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.அன்று மாலையில் பூ வின் தந்தையும் தாயும் கழுத்து அறுபட்டு ஒரு ஓடையில் இறந்து கிடக்கிறார்கள்.

இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல, அது கோவில் தர்மகர்த்தாவின் மீதும், அவர் மகன் மீதும் விழுகிறது.அவர்கள் சிறை செல்லும் முன் ஆர்யாவிடம் சில உண்மைகளை சொல்லி விட்டு செல்கிறார்கள், ஆர்யா பூ வின் சாதகம் உள்ள அந்த சாமியாரிடம் சென்று அவரை மிரட்டி உண்மைகளை அறிந்து கொள்கிறான் .இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .

காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா, மூலை, முடுக்கு ஒன்று விடாமல் தேடுகிறான், அவனால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை, அங்கு உள்ள ஒரு சாமியாரை ஒரு ஆபத்திலே இருந்து காப்பாற்றுகிறான். பூ வை தேடி அலையும் போது,அவரிடன் தான் வந்த நோக்கத்தை ௬றுகிறான், அவரும் அவனுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைக்கிறார்.

இந்நிலையில் பூ வை கடத்திய கும்பல் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்ப்பாடு பண்ணுகிறார்கள்,அவளுடன் சேர்த்து பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது.

தற்செயலாக பூ வின் சாதக்கத்தை பார்வையிடும் ஆர்யாவினால் காப்பாற்ற பட்ட சாமியார், ஒரு உண்மையை சொல்லுகிறார், இவளை போன்ற சாதகம் உடைய பத்து கன்னி பெண்களை நரபலி செலுத்தினால் கடவுள் திரும்பவும் பூமிக்கு வருவார் என்பது ஐதிகம் என சொல்லுகிறார்.

பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதோடு கதை முடிகிறது, விமர்சனமும் முடிகிறது


Thursday, January 22, 2009

இது கள்ளக்காதல்?

அடிச்ச கடிகார அலாரத்தை அணைக்கனும்னு கை எடுத்த சாந்தி, கால்ல சுடுதண்ணி ஊத்தின மாறி எழுந்தாள். விடு விடுன்னு கிளம்ப ஆரம்பித்தாள்.


வருசக்கணக்கா குளிக்காம இருக்கிறவங்க எல்லாம் ஒரு நாளைக்கு நாலுதடவை குளிப்பாங்க.குடிக்கிறது கூழ் கொப்புளிக்கது பன்னீர் மாதிரி அவரு நடை, உடை எல்லாம் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மாறி இருக்கும்.

பாண் பராக் போட்டு நாறிப் போன வாயில,ஆசிட் ஊத்தி கழுவுன மாறி ஒரு நாளைக்கு இருக்க நாலு தடவை பல்லு விளக்குவாங்க.


காதல் பேருல தியேடர்லையும், பீச்சிலும் இவங்க பண்ணுற அட்டுழியம் தாங்க முடியாது.நம்ம ஊரு பொது கழிப்பிடத்தை பாத்தே மூஞ்சு சுளிக்காதவங்க எல்லாம் இவங்களை பாத்து மூஞ்சு சுளிப்பாங்க


காதலும் ஒரு பாடம், அதற்கு படிப்பு, செயல்முறை விளக்கம்,தேர்வு எல்லாம் இருக்கு, இப்ப யாரும் படிக்கவோ, தேர்வு எழுதுவதோ இல்ல செயல்முறை விளகத்துக்கு முன்னுரிமை அளிக்கிறாங்க

இப்படி என்னை மாறி வாய்ப்பு கிடைக்காதவன் திட்டுற மாறி நடப்பாங்க. கலிகால காதல் கூத்துகளுக்கு ஒத்து ஊதுர, அசுர வேகத்துல கிளம்புற சாந்தி, அவள் தற்போதைய காதலன் எனபடுகிற சந்துருவை பார்க்க பீச்க்கு போகிறாள். அவங்க அங்க அடிக்கிற கூத்தை எழுத நான் ஒன்னும் மருதம், முல்லை ஆசிரியர் இல்ல.நீங்களே போய் உங்க கண்ணால பாத்து ரசிங்க

அவசரமா போற சாந்தியை காக்க வச்சு நான் உங்க கழுத்த அறுக்கறதுக் குள்ளே சாந்தி பஸ் நிறுத்தம் போயாச்சு. அவளுக்கு தெரியும் போல இவன் ஓட்டை வாயை திறந்தா மூட மாட்டான்னு

அஞ்சு நிமிசத்துக்கு ஒரு பஸ் வந்தாலும் அங்க நின்ன ௬ட்டம் குறைய ரெண்டு நாளாகும். கச்சா எண்ணெய் கொண்டு வந்த கப்பல் பெட்ரோல் இல்லாம நடு கடல்ல நின்னுடுதாம். நாடு போற போக்கிலே ஸ்டிரைக் பண்ணி பஸ் ஓடாம இருந்ததை விட பெட்ரோல் இல்லாம பஸ் ஓடாத நாள் அதிகமாகிடும்


அலுவலக வேலையோ, வேறு வேலையோ இருந்த இதை சாக்கு வச்சு மட்டம் போடலாம்,சாந்தியோட அவசரம் பாத்த இன்னைக்கு அவ போகலைனா அவள் காதலுக்கு மூடு விழா கொண்டாட வேண்டிய வருமோ என்னவோ .

மறுபடியும் இங்க வச்சி மொக்கை போடுறதுக்குள்ள சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள முச்சு 300 மைல் வேகத்துல வாங்குது.

பஸ் நிறுத்துல பாத்ததுக்கு நேர் எதிர், அங்கே யாருமே இல்ல, வேக வேகமாய் ஓடிபோய் ரயில்ல ஏறினா, அங்க சாந்திய தவிர யாருமே இல்ல, ரயில் கிளம்புற மாதிரியும் இல்ல, ஆளுங்க ஏறுற மாறியும் இல்ல.

பொறுமை தாங்க முடியாம வெளியிலே வந்து விசாரிச்சா, மின்சார துறை அமைச்சர் பிறந்த நாள் விழாவை மின்சார சிக்கனம் செய்ய இன்னைக்கு விடுமுறை விட்டாசாம்(சத்தியமா அமைசர் ஆற்காடு வீராசாமி இல்ல).


சாந்திக்கு நான் பேசுறதே மொக்கைய இருக்கும் போல, இதையும் கேட்காம நடையை கட்டிடாள். அவள் நடந்தே பீச்சுக்கு போறாள்.

பெண்களுக்கு மட்டுமே லிப்ட் கொடுக்கிற புண்ணியவான் சாந்திக்கு லிப்ட் கொடுத்தான், அவ இருக்க அவசரத்துக்கு செக்ஸ் டாக்டர் பிரகாஷ் லிப்ட் கொடுத்தாலும் போய் இருப்பாள்.


தண்ணி போதை மனிதன் வாழ்கையை தடுமாற வைக்கும். காதல் போதை மனிதன் வாழ்கையே தடம் மாற வைக்கும். இப்படி ஒரு உருப்படாத தத்துவமும் சொல்லி முடிக்கதுகுள்ள சாந்தி பீச்சுக்கு போய்ட்டாள்.


பீச்சில சந்துருவை கண்டுபிடிக்க ரெம்ப கஷ்ட படலை, அவனை பாத்ததுல சந்தோஷ படுறதா, கோப படுறதான்னு அவளுக்கு தெரியலை.ஏன்ன்னா அவனும் இன்னொரு பெண்ணும் சிரியோ சிரியோ ன்னு சிரித்து பேசிகிட்டு இருந்தார்கள்.


1000 வாட்ஸ் பல்ப் வேகத்துல கோபமா அவனை பார்த்து போன சந்தியை கைய பிடிச்சு ஒருத்தன் இழுத்தான்.

"மன்னிக்கணும் உங்க கைய பிடிச்சதுக்கு, நீங்க யாரை திட்டணும்னு போறிங்களோ அவங்க பக்கத்தில இருகிறது என்னோட காதலி இன்னைக்கு 9.30 வரைக்கும், நான் அரை மணி நேரம் தாமதமா வந்ததுனாலே அவள் இப்ப என் முன்னாள் காதலி ஆகிவிட்டாள்."

"இப்படி காதலுக்கு பச்ச துரோகம் பண்ணுறவங்களை பச்ச பச்சைய திட்டுறதை விட அவங்களுக்கு நல்ல பாடம் காட்டணும்"

"என்ன சொல்ல வாரீங்க!! மிஸ்டர்"

"பிரசாத் அதுதான் என் பேரு"


"பாதிக்க பட்ட நாம ரெண்டு பெரும் சேந்து நம்ம காயத்துக்கு மருந்து போடலாம்.நீங்க ரெம்ப அலைந்து திரிந்து களைப்பா இருக்கிற மாதிரி இருக்கு,உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம் "

சாந்திக்கு அவன் சொல்லுவது தெளிவாக விளங்கினாலும் அவன் பின்னால் அவள் கால்கள் நடந்தது,அதன் பின் அவள் மனம்,புத்தி எல்லாம்.பெண் புத்தி பின் புத்தி என்பது போல.

நம்ம சந்துருகிட்ட அவசரமா போக வேண்டியது இருப்பதால் சாந்திக்கு பிரியா விடை கொடுத்து விட்டு வேகமாக செல்வோம்.

"என்ன சந்துரு உன் ஆளு வரும் பாக்கலாம்னு சொன்ன இன்னும் வரலை"

"நீயும் தான் உன் ஆளு வரும் அறிமுக படுத்துறேன்னு சொன்ன?"

"ஆமா சொன்னேன், சரி அண்ணா நேரமாச்சு அப்பா,அம்மா தேடுவாங்க வா சீக்கிரம் போகலாம்"

என்று கூறிய சந்துருவின் தங்கை மாலா எழுந்து நடக்க ஆரமித்தாள், சந்துருவும் அவளை பின் தொடர்ந்தான்.

எங்க போறதுன்னு தெரியாமல் திருவிழாவில் காணாம போன புள்ள மாதிரி நின்ன எனக்கு மாலா பேசுவது லேசாக காதில் விழுந்தது

"என் வருங்கால அண்ணி பேரு சாந்தி, உன் வருங்கால மச்சான் பேரு பிரசாத்"

அண்ணனோட காதலிக்கும் தங்கையோட காதலனுக்கும் காதல்.

இது

நல்ல காதலா? ?

கள்ள காதலா? ?

இயக்குனர் பாலச்சந்தர் தான் இதுக்கு விடை சொல்லணும்


Tuesday, January 20, 2009

வெள்ளைக்காரிக்கே வெட்கம்

எனது முதல் வெளிநாட்டு பயணம் டொரோண்டோ(இதைப் பத்தி பின்னால் விபரமாக இன்னொரு பதிவு வரும்),அலுவலகத்திலே இருந்து போய் இருந்தேன், ஒரு வருஷம் செய்ய வேண்டிய வேலையை நாலு மாசத்திலே முடிச்சு தருவோம்ன்னு எங்காளுங்க சொல்லிட்டாங்க, நாங்க செய்யுற வேலைக்கு உதவியா எங்களுக்கு மூனு பேரு வியாபார வாடிக்கையாளர்கள்(பிசினஸ் யூசெரஸ்), ஒரு வெள்ளைக்காரன்,வெள்ளை காரி, ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கா பெண்மணி, எல்லோருக்கும் வயசு 30 முதல் 35 இருக்கும்.

தமிழ் படத்துல குத்துப் பாட்டுக்கு தான் அந்த மாதிரி உடைகளை பார்க்கமுடியும், அவங்க அதை சாதாரணமாய் அலுவலகத்திற்கு போட்டுக்கிட்டு வருவாங்க, முதல் வாரம் பட்டிக்காட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி பார்த்து கொண்டு இருந்தேன்.ரெண்டாவது வாரத்திலே இருந்து எங்க வேலையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம், ஆரம்பத்திலே நடந்தோம், வேகமாக நடந்தோம், ஓடினோம், வேலையை ஒரு வழியாக கொத்தி குதறி முடித்தும் விட்டோம்


வெள்ளையப்பன்,கருப்பம்மா, வெள்ளையம்மா முனு பேரும் சேர்ந்து நாங்க எல்லாம் மாடு மாதிரி வேலை பார்த்து கொடுத்ததிலே ரெம்ப சந்தோசம், அதனாலே எங்களுக்கு விருந்து கொடுத்தாங்க, நான், ஆந்திர பையன், எங்க மேனேஜர் முனு பேரும் போனேம், எங்க ஊருல சில பாட்டிங்க பீடி அடிச்சு பாத்து இருக்கேன், ஆனா யாரும் தண்ணி அடிச்சு பார்த்தது இல்லை

கருப்பம்மாவும், வெள்ளையம்மாவும் தண்ணிய மண்டு மண்டுன்னு மண்டுன வேகத்தை பார்த்த எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை, வேடிக்கை பார்த்த வேலைக்காவதுன்னு நானும் களத்திலே இறங்கிட்டேன்,நான் ஒரு பீர் அடிச்சு முடிக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேரும் நாலு பீர் அடிச்சி முடிச்சு விட்டாங்க.ரெண்டு மணி நேரம் நல்லா குடிச்சோம், பல உலக விசயங்களை பேசினார்கள், சும்மாவே அவங்க பேசுற இங்கிலிபிசு எனக்கு புரியாது, அதுவும் போதையிலே ரெம்ப சுத்தம்.தலைவர் ரஜினி மாதிரி எஸ்..நோ..யாயா அதை தவிர வேற எதையும் பேசலை, அதிகமா கேள்வி கேட்டாங்கன்னா பீர் பாட்டிலை வாயை விட்டு எடுக்கவே மாட்டேன்

விடை பெறும் போது வெள்ளையம்மா கண்ணத்துல, கருத்தம்மா கண்ணத்தை வச்சி, ரெண்டு பேரும் எதிர் எதிர் திசையிலே இச்சி..இச்சி முத்தம். இப்படி ஒரு முத்தத்தை கமல்ஹாசன் எந்த படத்திலேயும் பண்ணலியேன்னு யோசனை வேற எனக்கு. அடுத்ததா நின்ன எங்க மேனேஜர் வேற கண்ணத்தை கொடுத்து ஒன்னு வாங்கி கிட்டாரு. வரிசையிலே அடுத்ததா நான்

என்னையை பார்த்து ஹாய் நசரேயன் ன்னு சொல்லி முடிக்கலை அதுக்குள்ளே அவங்களுக்கு பேச முடியலை, எப்படி முடியும் வாயோடு வாய் வச்சா, காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி, கமல்ஹாசன் மேல பாரத்தை போட்டுட்டு கண்ணை முடி கிட்டு ஒரே இச்சி..இச்சி அவங்க வாயிலே மூச்சு விடமுடியாத படி.

இதை எல்லாம் பார்த்து அரண்டு போன எங்க மேனேஜர் கையிலே வச்சு இருந்த பீர் பாட்டிலை கிழே போட்டுடாரு.நான் சத்தம் கேட்டு கண்ணை முழிச்சு பார்த்தா!! என் முன்னாடி கருப்பம்மா, நான் வெள்ளையம்மான்னு நினைச்சி இவ்வளவு நேரமும் உம்மா கொடுத்தது அவங்களுக்கு தான்

இதை எல்லாம் பார்த்து கிட்டு இருத்த வெள்ளையம்மா ஒரே ஓட்டமா ரெஸ்ட் ரூம்க்கு ஓடுறாங்க, அவங்க வாயை பொத்தி கிட்டு, உள்ளே போய் ஒரே வாந்தி, சத்தம் எங்களுக்கு கேட்குது

நான் ஒழுங்காத்தான் பல் விளக்கிட்டு போய் இருந்தேன், அப்படி இருந்தும், நான் இன்னும் அவங்களுக்கு உம்மா கொடுக்கவே இல்லை யோசனை வேற எனக்கு, ஆந்திரா பையன் பக்கத்திலே வந்து

"ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்ன்னான்"

நான் "என்னடா சொல்லுற"

"கருப்பம்மாவுக்கு காதலன் கிடைச்சுட்டான், வெள்ளையம்மாவுக்கு புள்ளைக்கு அப்பா கிடைச்சுட்டான்."

கேட்டதும் அடிச்ச போதை எல்லாம் இறங்கி போச்சி. எங்க மேனேஜர் பேய் அறஞ்ச சந்திரமுகி வடிவேலு மாதிரி நின்னுகிட்டு இருந்தாரு

வெள்ளையம்மா வந்தி எடுத்து முடிச்சி வெளியே வந்தாங்க, நான் ரெண்டு பேரையும் பார்த்தேன், ரெண்டு பேருக்கும் ஒரு வெட்கம் தாங்க முடியலை, அப்பத்தான் தெரிஞ்சது இவங்களுக்கு ௬ட வெட்கம் வருமுன்னு.இந்த களேபரத்திலேயும்(பழமைபேசி??) ரெம்ப அமைதியா இருந்தார் வெள்ளையப்பன்,நாங்க ஆள் ஆளுக்கு என்ன நடக்கும் இனிமேலன்னு நினைச்சுக் கிட்டு இருந்த போது, ஏன் எல்லாரும் எழவு விழுந்த மாதிரி இருக்கீங்க, நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்ன உடனே எங்களுக்கும் கொஞ்சம் சுதாரிப்பு வந்தது

அதுக்குள்ளையும் எங்க மேனேஜர்ரும் கொஞ்சம் தெளிவு ஆகிட்டாரு, நான் ரெம்பவே தெளிவு ஆகிட்டேன், ஆந்திரா பையன் தண்ணி அடிக்கலை அதனாலே அவன் நல்ல தெளிவு, மறுபடியும் எல்லோரும் விடை பெற ஆரமித்தார்கள், இவ்வளவு நடந்தும் வெள்ளையம்மா, வெள்ளையப்பனுக்கு கண்ணத்துல கண்ணம் வச்சு உம்மா? கொடுத்தாங்க, என்னை பார்த்தவுடனே ரெம்ப உசார் ஆகி கை எடுத்து கும்முடு போட்டாங்க.

ஆந்திர பையன் "என்னை வாழ வைத்த தெய்வம் நீங்கன்னு சொல்லுறா?" ன்னு சொல்லி பீதியை கிளப்பினான். எங்க மேனேஜர் என்னிடம் முகம் கொடுத்து எதும் பேசவில்லை, ஒரு வேளை அவருக்கும் உம்மா கொடுப்பனோன்னு பயந்துட்டாரோ என்னவோ!.எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டோம்

அடுத்து ஒரு ரெண்டு வாரத்துக்கு எங்க மேனேஜர் என் ௬ட பேசவே இல்லை, அதற்குள் என் வேலை முடிந்து விட்டது நானும் ஊருக்கு திரும்பி வந்து விட்டேன், வந்து ஒரு மாசம் கழித்து எங்க மேனேஜர் ரிடம் இருந்து ஒரு மின்-அஞ்சல் வந்தது பயம் கலந்த நடுக்கத்துடன் திறந்து பார்த்தால் "அலுவலகத்திலே தூங்காம வேலையை பாரு, கனடா விசா எடுக்க டாக்குமென்ட்ஸ் அனுப்பி வை" ன்னு எழுதி இருந்தார்


Wednesday, January 14, 2009

எந்திரன்-தி ரோபோ விமர்சனம்

தலைவர் மீண்டும் ஜெயித்து விட்டார், சிவாஜி குதிரைன்னா, எந்திரன் பறக்கும் குதிரை, குசேலனுக்காக ரஜினிக்கு எதிரா கொடி பிடிச்ச எல்லோரும், அதே கொடியிலே பணத்தை அள்ளுவாங்க. அடுத்து நேரா விமர்சனம் தான்

கதை படி சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா நாசாவிலே விண்வெளி ஆராட்சியாளர் பணியை செய்கிறார்,செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பீனிக்ஸ் விண்கலத்தை வடிவமைத்த குழுவில் பணி ஆற்றுகிறார்.அவரு தான் அதற்கு தலை நிர்மானி(chief architect).இரவு பகலா கஷ்டப் பட்டு திட்டம் வெற்றி பெற பாடு படுகிறார்.

விண்கலம் மேலே செல்லும் பொது அதிலே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுகிறது, அதை சரி செய்யும் முயற்சியில் அவருக்கும் ரஷ்யா ஆரட்சியாளருக்கும் தீர்வு கொடுப்பதில் தகராறு, அவன் இந்தியாவையும்,இந்தியர்களையும் தரக்குறைவாக பேசி விட, அதற்கு தீர்வு கொடுத்து விட்டு ரஷ்யாகாரனுக்கு தக்க பதில் அடி கொடுத்து விட்டு  வீட்டுக்கு செல்கிறார்.இந்தியாவை பற்றி பேசிய பேச்சிலே பாதித்த சூப்பர் ஸ்டார், விடுமுறை எடுத்து விட்டு சென்னைக்கு வருகிறார், வரும் பொது தன் சொந்த படைப்பான ரோபோவையும் எடுத்து கொண்டு வருகிறார்.வருகிற தலைவர் சென்னை திருவேல்லிகேணியிலே தங்குகிறார்.


ஐயர் ஆத்து மாமியின் மகளாக ஐஸ்வர்யாராய், அவளின் அக்காள் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்,ரஜினி தங்கும் இடம் அவர்கள் வீட்டின் அருகிலே இருக்கிறது. அவர்கள் உணவில்  விஷம்  கலந்து இருப்பதை ரோபோவின் மூலம் அறிந்து அவர்களை காப்பாற்றுகிறார்.

ஐஸ்வர்யா ராயின் ஊனமுற்ற சகோதரனுக்காக பெட்ரோல் இல்லாத தானியங்கி வண்டி ஒன்றை தயாரித்து கொண்டுகிறார், அது மிகவும் பிரபலமடைய தலைவரிடம் நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார்.தலைவரின் புகழ்அமெரிக்க அதிபரை விட வேகமாக வளர்கிறது.

ஐஸ்வர்யாராய் தலைவர் மீது காதல் வயப்படுகிறாள்,அப்படி வரலைன்னா தமிழ் சினிமாவிற்கே களங்கம்.இந்த நிலையில் தலைவரின் வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் மோட்டார் வாகன தாயாரிப்பாளர்கள் அவரை தீர்த்து கட்ட ரவுடிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.வில்லன் இல்லன்னா படம் எப்படி நகர முடியும்.தலைவர் படத்திலே சண்டை இல்லன்னா சக்கரை பொங்கலுக்கு உப்பு வச்சி சாப்பிடுற மாதிரி இருக்கும், ரவுடிகளுக்கு ஒரு காட்டு காட்டுகிறார் ரோபோவின் உதவியோடு, கொஞ்ச நாள்ல சண்டை காட்சி திருட்டு தனமா வெளியே வரும் அதனாலே அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை

இதற்கிடையில் நாசாவின் அணு ரகசியங்கள் திருட்டு போகின்றது, அந்த பழி தலைவர் மேலே விழுகிறது,தலைவர் விடுமுறையில் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை கைது செய்ய அமெரிக்கா துப்பறியும் அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள்.

மத்திய அரசாங்கத்திலே வேலை பார்க்கும் அதிகாரி,உள்ளூர் வாகன தயாரிப்பாளரிடம் மத்திய அரசுக்கு வந்த ரகசிய உத்தரவை தெரிவிக்கிறார். சந்தப்பத்தை பயன் படுத்தி உள்ளூர் வில்லன், உள்ளூர் பத்திரிக்கைகள்,தொலை காட்சி நிறுவனங்கள் மூலமாக அந்த செய்தியை பிரபலப்படுத்துகிறார், செய்திகளில் அவர் சர்வதேச குற்றவாளியாக சித்தர்க்கப்படுகிறது.உண்மை என நம்பிய ஐஸ்வர்யாராய் வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போலே அவரை விட்டு பிரிந்து விடுகிறார்.
மத்திய அரசாங்கம், சர்வதேச போலீஸ், அமெரிக்கா எப்.பி.ஐ தேடுவதோடு இடைவேளை.

(டீ,காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க)

இரண்டாவது பாதியில் தனக்கு எதிரான சதியை முறி அடித்து, ஐஸ்வர்யாராயும் கை பிடிப்பதே( படத்துக்காக) மீதி கதை.இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே முதலில் ரஜினியை இழிவு படுத்திய நாசாவிலே ரஜினியை இழிவு படுத்திப் பேசிய ரஷ்ய  நண்பரிடன் இருந்து மின்-அஞ்சல் வருகிறது, அவன் விடுமுறைக்காக மேக்ஸ்சிகோ சொன்று இருப்பதாகவும், அவனை உடனடியாக வந்து பார்க்கும் படி மெக்சிகோ விலாசத்தை அனுப்புகிறார், அவனை தேடி மெக்சிகோ செல்கிறார் ரஜினி, ரோபோவின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நுழைந்து மெக்சிகோ சொல்கிறார்
அவரை தேடி அங்கு செல்லும் ரஜினி, அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள், அவர் இறக்கும் தருவாயில் அவரிடம் இருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்கிறார், இந்த கொலை பழியும் தலைவர் மீது விழுகிறது.


இது வரையில் வில்லன்களுக்கு ஓடி ஒழிந்த ரஜினி உண்மையை தெரிந்து கொண்டதால், அவனை தேடி செல்ல முடிவு எடுக்கிறார், முதலில் வில்லன் இருப்பிடம் தேடும் தலைவர் அவன் இந்தியாவிலே இருப்பது தெரிய வருகிறது, மீண்டும் ரோபோவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பழைய எதிரியும், புதிய எதிரியும் ஓன்று சேருகிறார்கள்(பழசு உள்ளுறு, புதுசு வெளியூரு).இருவரின் சதி திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவதே இறுதி கட்டம்

பாடல்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இணைய தளத்திலே வலம் வரும், அதனாலே அதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை.இன்னொரு முக்கியமான விஷயம் படத்திலே ரோபோ பேசுகிற எல்லாமே குத்து வசனம் தான், ஒன்னு இப்ப சொல்லுறேன், மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி


பிரமாண்டம், பிரமிப்பு, திகைப்பு, விறுவிறுப்பு, ரஜினி கலந்து தரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம் எந்திரன். 


Tuesday, January 13, 2009

ஐம்பதுன்னா என்ன?

ஐம்பதுன்ன என்ன, நாற்பத்தி ஒன்பதோட ஒன்னை ௬ட்டினாலும், ஐம்பத்தி ஒன்னிலிருந்து ஒன்றை கழித்தாலும் வரும், ஆட்டோ எடுத்து வர யாரும் அவசர படவேண்டாம், இது என்னோட ஐம்பதாவது பதிவு அதுக்கு தான் தலையை சுத்தி மூக்கை தொடுறேன்.

இந்த வேளையிலே என்னை பதிவுலகத்திற்கு அழைத்து வந்த என் நண்பர்கள், சத்தியா, முகவை மைந்தன் இருவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். அதனாலே இனிமேல ஒன்னுக்கு மூனு ஆட்டோ வேணும், ஏன்னா குற்றவாளியை விட அதை செய்ய தூண்டினவங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்.கல்லுரியிலே இருந்து என்னோடு நட்பு பயணம் செய்துவரும் இந்த நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக முகவை மைந்தனும் நானும் சந்தித்த அனுபவம், எங்கள் கல்லூரி அனுபவங்கள் எல்லாம் எதிர் காலத்தில் பதிவாக வந்தாலும் வரும்

இவ்வளவு நாள் வரைக்கும் நான் எழுதுறதையும் ஒரு பொருட்டா மதிச்சு எட்டி பார்க்கும் நண்பர்களுக்கும், பின்னூட்டம் இடும் என்னைய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

பதிவுலகத்திலே எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், ஒரே ஒருத்தங்க எதிரி ஆகிவிட்டாங்க, அது யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும்

இது நாள் வரைக்கும் ஒன்னும் பெரிசா எழுதி சாதிச்சது மாதிரி தெரியலை, இனிமேலும் சாதிக்க போறது இல்லைன்னும் தெரியும், அதுக்காக எழுதாம இருக்க முடியுமா?

கோடான கோடி வாசகர்களை(?) சும்மா விடலாமா ? அவர்களின் நலன் கருதி தொடர்ந்து எழுதுவேன்(என்ன பெருந்தன்மை) .

இந்த பதிவிலே ஒன்னும் இல்லைனாலும் இந்த பதிவு என் நண்பர்களுக்கு காணிக்கை, அவ்வளவு தான் இன்னைக்கு அடுத்த பதிவிலே சந்திக்கலாம்


Thursday, January 8, 2009

ஈழ பிரச்சனையில் குளிர்காயும் இந்திய அரசியல்

அண்ணன் அண்ணன் போறாருன்னு சொல்லியே காலத்தை ஒட்டும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள், ஒரு பிரச்சனையை கையாளுவதில் கை தேர்ந்த கில்லாடிகள் நம்ம ஊரு அரசியல் வாதிகள்.நீச்சல் அடிச்சி போய் இருந்தாலே இந்நேரம் இலங்கை போய் சேர்ந்து இருப்பார் பிரணாப் முகர்ஜி.


அவரு போறதுக்குள்ளே அவரை பிடிச்சா எங்களிடம் ஒப்படைக்கணுமுன்னு ஒருத்தர் பேட்டியெல்லாம் கொடுக்கிறாரு.அவர் என்னை புளியங்காய் அடிச்சுகிட்டு இருக்காரா பிடிக்க.


நினைச்ச நேரம் மாமியாரு வீடு மாதிரி போக முடியாதுன்னு இன்னொருத்தர் சொல்லுறாரு, ஐயா கழக பொறுப்புக்குத்தான் குடும்ப அட்டையிலே பேரு வேணும், நியாயத்தை கேட்க்கவுமா?


பிரதமர் எப்படி போக சொல்லுவாரு, பிரான்சுல சீக்கியருக்கு தலை கவசம் அணிய அனுமதி கொடுக்கனும்முன்னு சொல்லுவாரு, இலங்கையிலே தமிழர்களின் தலையவே ஒருத்தன் எடுத்து கிட்டு இருக்கான், அவனை நிப்பாட்ட சொல்ல மாட்டாரு.


இவங்க தலைமையிலே தான் ௬ட்டணி அமையனுமுன்னு ஒத்தை கால்லு நிக்காரு மருத்துவர் ஐயா, என்னவோ தமிழ் மக்கள் தலை எழுத்தே அவங்க கையில இருக்க மாதிரி.அவங்களோட ஒரே நோக்கம் தமிழகத்திலே நீங்க எது வேணுமுனாலும் பேசலாம் அந்த ஒன்னை தவிர, இது மேலிடத்து உத்தரவா இல்லை மேல போனவரோட உத்தரவான்னு தெரியலை


விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ராஜினமா கடிதம் எல்லாம் வாங்கி குப்பையிலே போட்டாச்சு, போங்கோ போங்கோ ன்னு கடிதம் எழுதுவதை கடமையா செய்கிறோம்


புலி வருது .. புலி வங்க புலி வருதுன்னு எவ்வளவு நாள் ஏமாத்துவீங்க, அதுக்குள்ளையும் அங்க ஒருத்தன் தமிழ் இனத்தையே வேரோடு அழிச்சுருவான், அணிசேரா கொள்கை பயன் படுகிற ஒரு இடம் தமிழ் ஈழ பிரச்சினையிலே தான்.


கடந்த காலத்திலே நீங்க எல்லாம் கையையும் வாயையும் கட்டிக்கிட்டு சும்மா இருந்திருந்தால், இந்நேரம் அவர்களோட கனவுகள் நினைவு ஆகி இருக்கும் என்பது உண்மை


நீங்க எல்லாம் அரசியல்வாதிகள் தான், அதுக்காக எல்லா விஷயத்திலேயும் உங்கள் அரசியல் சாணக்கிய தனத்தை காட்டுனா எப்படி?


எது எப்படி நடந்தாலும் தான் உட்கார்ந்து இருக்கிற நாற்காலிக்கு எந்த வித பாதகம் வரக்கூடாதுன்னு நினைக்கிற உங்களை நம்பி வழி மேல் விழி வச்சு காத்து இருக்கிற எம் இனத்தவனுக்கு ஆறுதல் சொல்லக்கூடமுடியலை.


அட போங்கையா நீங்களும் உங்க அரசியலும்


அம்மா

அந்த காலை நேரத்திலே சேகர் வீடு பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது, அனைவரும் சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.வீட்டின் அழைப்பு மணி அடித்தது, உள்ளிருந்து சேகர் மாமியார் வந்து எட்டி பார்த்து விட்டு சென்று விட்டாள், அவள் சென்று சில நேரம் கழித்து மீண்டும் மணி ஒலித்தது, சேகர் மாடி படியிலே இருந்து இறங்கி வந்தான், வெளியிலே நின்று கொண்டு வாசலை நோக்கி கொண்டு இருந்தவளை கண்டான்.

வேகமா வாசலுக்கு ஓடி கதவை திறந்து "அம்மா, நீங்க எப்ப வந்தீங்க"

"நான் அப்பவே வந்துட்டேன்"

"சம்மந்தி அம்மா உன்கிட்ட சொல்லலியா?"

"சம்மந்தியம்மா எப்படி சொல்லுவாங்க நீங்க வந்ததை" என்று மனதில் நினைத்து கொண்டு.

ஆமா சொன்னாங்க..சொன்னங்க

"ஏன் ராசா ஒரு கடிதாசு ௬ட நேரம் கிடைக்கலையா, நானும் எவ்வளவு கடிதாசி போடுறது, நாம் பாண்டி வாத்தியாரு உன் புள்ளை பதிலே போட மாட்டேங்க ன்னு அடிக்கடி உன்னை குறை சொல்ல ஆரமிச்சுட்டாரு, அதனாலே நானும் அவரை கடிதாசி எழுத சொல்லுறது இல்லை"

"வேலை கொஞ்சம் அதிகம் கடிதம் எழுத நேரம் கிடைக்க வில்லை , சரி அதை விடு நீ எப்படி இருக்க"

"நல்லா இருக்கன் ஐயா, மருமக புள்ளைய எங்க பாத்து ரெம்ப நாள் ஆச்சு"

"அவ நல்லா இருக்க, நீ இந்த நாற்காலியிலே உக்காரு, நான் போய் ௬ட்டிட்டு வாரேன்"

என ௬றிவிட்டு மாடிக்கு ஓடினான், அங்கே தலை சீவி கொண்டு இருந்த அவன் மனைவியை பார்த்து,

"மிருதுளா எங்க அம்மா வந்து இருக்காங்க"

"வந்தா அதுக்கு நான் என்ன செய்ய"

"என்ன இப்படி பேசுற உன்னை பார்க்கணும் ரெம்ப ஆசை படுறாங்க"

"இப்ப என்னால வர முடியாது, நானே என் நெக்லஸ் காணுமுன்னு தேடிக்கிட்டு இருக்கேன், நீங்க அம்மா, ஆட்டு குட்டின்னு"

இதற்க்கு மேல் அவளிடம் பேசி பலன் இல்லை என்பதை உணர்ந்து, வசதி உள்ள வீட்டிலே வசதி இல்லாதவன் பெண் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நேரடியாக அனுபவித்து வரும் சேகருக்கு அவள் பதில் ஒன்றும் ஆச்சரியம் தரவில்லை

தான் படிக்கா விட்டாலும் தன் பிள்ளை படிக்க நல்ல முறையில் வாழ வேண்டும் என ஆசை பட்ட ஒரு ஏழை தாயின் கனவு நிறை வேறியது,கனவுகளே இல்லாமல் இன்றும் அவள் அதே நிலையில் தான் இருக்கிறாள்.

கிழே இறங்கிய சேகர் தன் தாய் செருப்புகளை வைத்திருக்கும் இடத்தில் நிற்பதை கண்டான்.

"ஏன் இங்க வந்து நிக்கிற, உன்னை நாற்காலியிலே தானே உக்கார சொன்னேன்"

"சம்பந்தி அம்மா வந்து, நாற்காலியை துடைக்க போறேன்னு எடுத்து போய்ட்டாங்க, வீடை சுத்தம் பண்ணுரதாலே என்னை இங்க நிக்க சொல்லிட்டாங்க "

"மருமக புள்ள எங்க ராசா"

"அம்மா அவ குளிச்சுகிட்டு இருக்கா"
"சின்ன அம்மா அப்பவே குளிச்சு தயார் ஆகிட்டாங்க" என வேலைகாரியின் பதில் இவன் கேட்காமலே வந்தது.

நிலைமையை புரிந்து கொண்ட சேகரின் தாய்

"அதானாலே என்ன அவ மெதுவா வரட்டும்"

"என்னங்க கொஞ்சம் மேல வாரீங்களா"
என் மாடியில் இருந்து வந்த மிருதுளாவின் குரலை கேட்டு, தன் தாயிடம் அனுமதியை பெறாமல் மாடிக்கு விரைந்தான்

"என்ன நீங்க கிளம்பலையா, அம்மா வந்து இதோட மூனு தடவை கேட்டு போயாச்சு, உங்க அம்மா போயாச்சா?"

"இப்பதானே வந்தாங்க"

"சரி..சரி சீக்கிரம் அனுப்பிச்சிட்டு வாங்க, நான் அதுக்கு அப்புறம் தான் கிழே வர முடியும்"

என்ன செய்வது என்று தெரியாமல் கிழே வந்த சேகர், தன் அம்மாவை காண முடியவில்லை, மீண்டும் நாற்காலி அதே இடத்தில் இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கண்ணில் யாரும் தென் படாததால் வேலை காரியிடம் மெதுவாக விபரத்தை கேட்டான்.

"ஐயா நீங்க மேல போன உடனே பெரிய அம்மா வந்தாங்க, உங்க அம்மாவிடம் எதோ பேசினாங்க, என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியலை, அவங்க உடனே போய்ட்டாங்க,அவங்க போற அவசரத்திலே இந்த பையையும் விட்டுட்டு போய்ட்டாங்க "

பையை வாங்கி திறந்து பார்த்த போது தனக்காக பிடித்த முறுக்கும், இனிப்பு வகைகளும் இருந்தது.வீதியில் வந்து எட்டிப்பார்த்தான், வெறிச்சோடி கிடந்தது.


மாமனார் வீட்டில் வசதியாக வாழும் பணக்கார அடிமையே அவன், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் வாழ்க்கை தரம் வளமாக இருந்தாலும் வாழும் தரம் ௬ ண்டில் அடைபட்ட பறவை போல தான். மறுபடியும் வீட்டிற்குள் வைத்தபோது அனைவரும் வெளியே கிளம்ப தாயராகி விட்டனர்.
காரில் வெளியே செல்லும் போது தூரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தன் தாய் தனியே நிற்பதையும், அவள் தன் ஊருக்கு செல்லும் திசையின் எதிர் திசையில் பேருந்துக்காகவும் காத்து நிற்ப்பதையும் கண்டான்.

பார்த்தவன் மனம் கசந்தது, தன்னை அறியாமலே இரு சொட்டு கண்ணீர் கைகளில் விழுந்தது, கை குட்டையை எடுத்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டு சிலையாய் அமர்ந்தான்.


Tuesday, January 6, 2009

காதல் கடிதம்

அன்புள்ள தமிழ்வாணனுக்கு,

கல்லுரியின் இறுதி நாளில் நிற்கும் நாம் இந்த முன்று வருடங்கள் உதட்டில் இருந்து ஆயிரம் வார்த்தைகள் பேசிஇருக்கலாம், ஆனால் நாம் உள்ளம் பேசிய வார்த்தைகளை விரிவாக எழுத முன்று யுகங்கள் போதாது என்பதை நான் அறிவேன்.

எதற்கும் பிந்துகிற நான் இந்த மடல் விசயத்தில் முந்த வேண்டும் என்பதகாகவும், என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது என்பதை வெளிபடுத்தவும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்த விரும்பினேன்.

நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

இந்த கல் நெஞ்சில் கள்வனாய் நுழைந்து காதல் என்னும் மந்திரம் ஓதி,கல் போல் இருந்த என் மனம் பால் ஆனது . கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.

நீ எனக்குள் இருக்கும் ஆனந்தத்தில் என்மனமும் பஞ்சு போல மிதந்து வானம் சென்று அங்கு உள்ள நட்சத்திரங்களை அழைத்து வந்து மனதிற்குள் பறக்க விட்டது.

காதல் ஒரு கானல் நீர் என்று பலமுறை பெரியவர்கள் ௬றும் போது இது அவர்களின் இயலாமை என் நினைத்த நான், இப்போது நான் அறிந்த உண்மையை உங்களுக்கும் உணர்த்த வேண்டும்..

கானல் நீர் அழகானது அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதை பருகி நாம் தாகம் தீர்க்க முடியாது என்பதை மறுக்க முடியாது.அதை போல் இந்த கல்லுரி காதல் நம் வாழ்கை தாகத்தை தீர்க்க முடியாது

கல்லூரி காதலை நடமுறைக்கு ஒப்பிட்டால் அது எட்டு சுரக்காய் போன்றது அது கறிக்கு உதவாததை போல இந்த காதலும் வாழ்கைக்கு உதவாது என்பதையும் புரிந்து கொண்டேன்.

கல்லூரியில் பயிலும் போது காதல் செய்வதை பெருமையாக நினைக்கும் இளைஞர்களுக்கு நாமும் விதி விலக்குஅல்ல. அதுவே நாம் தலை விதியும் அல்ல என்பது உண்மை.காதல் ஒரு அத்தியாயம் வாழ்கையில் என்பது எனக்கு தெரிந்து விட்டது

வாழ்கையின் உண்மையை வெளிச்சம் இட்டு காட்டியது எனக்கு கிடைக்க போகும் எதிர்கால மண வாழ்க்கை. அதுவே இது நாள்வரையில் உண்மை என நம்பி கனவுலகில் சஞ்சரித்து இருப்பதை அடி கோடிட்டு காட்டியது.ஆம் எனக்கு திருமணம் நிச்சயிக்க பட்டு விட்டது அமெரிக்க மணமகன் என் கணவன் ஆக போகிறார், திருமணம் முடிந்து அவருடம் அமெரிக்க செல்ல இருக்கிறேன்.

இந்த மடலின் ஆரம்பத்திலே தங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களை கூறிய நான் இந்த உண்மையும் சொல்லவேண்டிய கட்டாயம், இது உங்களுக்கு கசப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாம் காதல் கனவு அத்தியாத்தின் முடிவில் எனக்கு ஒரு நல் வாழ்வு ஆரம்பமாகிறது.இதே ஆரம்பம் வரைவில் நீங்களும் அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,

தாமரை செல்வி.


முக்கிய குறிப்பு: பின் புறத்தில்....தயவு செய்து வாசிக்கவும்.

பின் புறத்தில்: இந்த மடல் முலம் என் மனதை திரையிட்டு கட்டியதால், என் வரிகளால் என் எதிர் கால வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பும் வரகூடாது என்பதற்க்காக, இதை படித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி அதிலே ஒரு செட்டு இந்த மடலின் விழுந்தாலும் இதில் உள்ள அத்தனை எழுத்துகள் அழிந்து விடும்.

ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்...


(கடிதம் முழுவதும் எரிந்து சாம்பலானது, அது எரியும் பொது தமிழ் வாணன் கையும் சுட்டது. சாம்பலானது கடிதம் மட்டுமல்ல அவன் இதய கோட்டையும் தான். சுட்டது அவன் கைமட்டு மில்லாமல் அவன் மனதும் தான்.)


Sunday, January 4, 2009

இதயம் நின்றது

கண்கள் சந்தித்தபோது
கருவிழிகள் நின்றது
வார்த்தைகள் சந்தித்தபோது
மௌனம் நின்றது
மனங்கள் சந்தித்தபோது
மதங்கள் நின்றது
இதயங்கள் சந்தித்தபோது
இன்னல் நின்றது
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது


----------------------------------------
தென்றலென தீண்டிய
விழி சுழலின்
ஆழிக் காற்றிலே
சிறகில்லாமல்
பறந்த போது தான் தெரிந்தது
நீ
ஓர் புயலென