அமெரிக்காவிலே அனாதை பையைப் பார்த்தால்!!
விழிப்புணர்வுன்னு வந்திட்டா எங்க குடும்பமே சொன்ன சொல் தவற மாட்டோம். காந்தி கள்ளு குடிக்கக் ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து எங்க அப்பா கள்ளே குடிக்கிறதில்லை சாராயம் மட்டும் தான், எங்க அப்பா என்கிட்டே சாராயம் குடிக்க ௬டாதுன்னு சொன்னதிலே இருந்து நான் சாராயமே குடிக்கிறதில்லை,கலர், கலரா இருக்கிற தண்ணியைத் தான் குடித்தேன். இப்பக்௬ட தண்ணீர் தினம் விழிப்புணர்வு இடுகைகளைப் பார்த்து தண்ணியே கலந்து குடிக்கிறதில்லை, அப்படியே குடிக்கிறேன்.
இப்படி ஒரு விழிப்புணர்வு குடும்பத்திலே பிறந்த நான் , அமெரிக்கா வந்த உடனே வீட்டிலே இருந்து அலுவலத்திற்கு பூமி அடியிலே ஓடுற ரயிலிலே பயணம் செய்வேன்.
நம்ம அண்ணாச்சிமார்கள் வண்டியை கொண்டு வந்து இடிச்சி நியூயார்க் ரெட்டை இரும்பு கோபுரத்தை உடைச்சதிலே இருந்து பாதுகாப்பு காரணங்களைக் காட்டி விழிப்புணர்வு செய்திகளை அறிவிப்பார்கள்.
"நாங்க எங்க கண்ணை வச்சி பார்க்கிறோம், நீங்களும் உங்க கண்ணை வச்சி பாருங்க"
"அனாதையா இருக்கிற பை படத்தை போட்டு, செய்தியிலே வந்த உடனே சொல்லாதீங்க, பார்த்த உடனே சொல்லுங்க"
"எதாவது அனாதையா பைகளை பார்த்த உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கவும்"
ரெண்டு நிமிசத்துக்கு ஒருதடவை செய்தியிலே அறிவிச்சிகிட்டு இருப்பாங்க,நான் வந்து சேர்ந்த ரெண்டே நாள்ல வரிகளையெல்லாம் மனப்பாடம் பாடம் பண்ணிட்டேன்.
நண்பனிடம் மனப்பாடம் பண்ணியதை சொல்லிக்காட்டினேன், டேய் அவன் பாதுகாப்புக்கு பத்தி பேசினா, நீ பன்னி கறியைப் பத்தி பேசுற மாதிரி சொல்லுற, அவனிடமே ஒரு தாள்ல எழுதி கொடுக்க சொல்லி நல்லா கடம் அடிச்சி ஏத்தி வச்சிகிட்டேன். இங்கிலிபிசு புரிஞ்சி படிச்சி இருந்தா, நான் இந்நேரம் செவ்வாய்கிரகம் போய் இருப்பேனே. வந்த விசயத்துக்கு வாரேன்.
ஒரு நாள் இப்படித்தான் ஒன்பது மணிக்கு போக வேண்டிய அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு மின்சார ரயில் நிலையம் சென்று ரயிலுக்காக காத்து கொண்டு இருந்தேன்.
விழிப்புணர்வு குடும்பம் என்பதாலே சுத்தி அக்கம் பக்கம் பார்த்தேன், அனாதையா இருந்த பை கண்ணிலே பட்டுவிட்டது, ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே கவனிச்சேன், யாரும் பையை எடுத்த மாதிரி தெரியலை,மனசுக்குள்ளே இங்கேயும் வச்சிட்டாங்க போல, இன்னைக்கு மங்களம் பாடிருவாங்களோ யோசிக்கும் போதே, அவங்க விழிப்புணர்வு விளம்பரம் வந்தது உடனே அதிலே இருந்த எண்ணை குறித்து கொண்டு,
இங்கே எது நடந்தாலும் அமெரிக்க தலைப்பு செய்தியிலே நாளைக்கு என்னோட பேருதான் வரும் என்ற கற்பனையோடு, பக்கத்திலே இருந்த தொலைபேசியை எடுத்தேன், மறுமுனையிலே வெள்ளையம்மா எடுத்து
"ஹலோ ஜென்டில்மேன், என்ன விசயமா பேசுறீங்க"
என்னது ஜென்டில்மேனா, நான் அங்கே எல்லாம் போறதில்லைன்னு மனசிலே நினைசிகிட்டு, "இங்கே ஆள் இல்லாத பை ஒன்று அனாதையா இருக்கு, பத்து நிமிசமா யாருமே எடுக்கலை"
அப்படி சொன்னது தான் தாமதம், என்கிட்டே எந்த இடத்திலே இருக்கேன்னு ௬ட கேட்கலை, நீங்க அப்படியே நில்லுங்க, நான் பேசுறதை பக்கத்திலே இருந்து கேட்ட வெள்ளையம்மா, வெள்ளையப்பன், கருப்பையன், கருப்பம்மா எல்லாம் அடிச்சி பிடிச்சி ஓடியே போய்ட்டாங்க. எல்லோரும் ஓடுறாங்களே வாக்கு கொடுத்த விழிப்புணர்வு குடும்ப மகன் அப்படியே நின்னேன், மண்டைப் போட்டா நாளைக்கு செய்திதாளிலே என் முகத்தை தான் தேடிகிட்டு இருப்பாங்கன்னு அப்படியே நின்றேன்.
இதற்கிடையே காவல் துறை அந்த பகுதியை எல்லாம் மக்கள் வர முடியாத படி தடுத்து விட்டார்கள், நான் இருந்த நிலையத்துக்கு மேல வானுர்தி எல்லாம் வந்து வட்டம் போடுற சத்தம் எனக்கே கேட்டது, காவல் துறையினர் படிகளிலே இறங்கி என்னை பார்த்து வந்து கொண்டு இருந்தார்கள், அவர்கள் வரும் முன்னே உயர் தூக்கியிலே இருந்து வந்த கருப்பு அண்ணாச்சி, அனாதையா இருந்த பையை எடுத்தார்.நான் வேகமா அவரிடம் போய்
"அல்லோ, அந்த பையை எடுக்காதீங்க" அவரு அதையெலாம் காதிலே வாங்கலை, நான் அவரிடம் இருந்து பையை பிடுங்க முயற்சி செய்தேன். அதற்குள் காவல் துறையும் வந்து,
"ரெண்டு பெரும் பையை கீழே வைத்து விட்டு, கையை மேல தூக்குங்கள்" இன்றைக்கு துப்பாக்கியிலே தான் சாவு போலன்னு நினைச்சிகிட்டு கையை மேல உயர்த்தினேன்.ஆனால் அண்ணாச்சி அவங்க சொன்னதை எல்லாம் கேட்காம
"யாரை பார்த்து என்னடா சொல்லுறீங்க, நான் யாருன்னு தெரியுமா?"
"நீ யாரா இருந்தாலும் நான் சொன்னதை செய்" தெலுங்கு பட தலைப்பு மாதிரி காவல் அதிகாரி சொன்னாரு.
"ரயில் புறப்பட செய்ய வேண்டிய சாவி, இந்த பையிலே தான் இருக்கு, நான் இப்ப வண்டியை எடுக்கலைனா, எவனுமே வண்டியை எடுக்க முடியாது, எப்படி வசதி?"
"நீ யாரு?"
"நான் தான் ரயிலோட நடத்துனர், இது என்னோட பை, வயறு சரி இல்லைன்னு அவசரமா ஓய்வு அறைக்கு போயிட்டு வருங்குள்ளேயும், இந்த கருவாலி நாட்டோட அடிவயத்தையே கலங்க வைத்து இருக்கான்"
அண்ணாச்சி அப்படி சொன்ன உடனே எல்லோரும் உனக்கு எல்லாம் எவன்யா விசா கொடுத்து இங்கே ௬ட்டிட்டு வந்தான் அப்படிங்கிற மாதிரி என்னைப் பார்த்தாங்க,நான் கையை ரெண்டையும் கட்டிக்கிட்டு மன்னிச்சிடுங்க, பிழையாப் போச்சி"
நடத்துனர் பையை எடுத்திட்டு போகும் போது இருந்த காவல் அதிகாரிகளிடம் இவனை நல்லா சோதனை செய்யுங்க, ஒருவேளை எங்கேயாவது வச்சிட்டு திசை திருப்ப நாடகம் ஆடி இருக்கலாமுன்னு போற வாக்கிலே காதிலே போட்டுட்டு போயிட்டாரு, உடனே என்னையப் பிடிச்சி துருவி, துருவி, தேங்காயை துருவுற மாதிரி விசாரிச்சி, அன்னைக்கு முழுசும் அலுவலகத்துக்கு போக முடியாம ஆகிப் போச்சி, என்னோட பெயரையும் அமெரிக்க உளவுத்துறைக்கும் சொல்லி அவங்களும் குறிச்சி வச்சிகிட்டாங்க. இப்ப எல்லாம் நான் எங்கே போனாலும் என்னையை மட்டும் தனியா ௬ப்பிட்டு போய் விசாரணை பண்ணித்தான் அனுப்புவாங்க,ஆனா இன்னும் விழிப்புணர்வை கை விடலை, குடும்ப மானத்தை இன்றைய தேதி வரைக்கும் காப்பாத்திகிட்டு இருக்கேன்.