Thursday, February 26, 2009

அமெரிக்காவிலே தமிழுக்கு இருட்டடிப்பு

அமெரிக்காவிலே நமக்கு எல்லாம் ரெம்ப காலத்துக்கு முன்னாடி வந்து துண்டை போட்டு தங்கி இருக்கும் சிங்கங்களும்(சீக்கியர்), குஜ்ஜு மக்களும் வந்து "இந்தி" யா விலே இந்தி மொழி மட்டுதான் இருக்கிற மாதிரி ஒரு மாயை உருவாக்கி வச்சி இருக்காங்க.

எப்படி நம்ம நாயரை சந்திர மண்டலம் போன டீ கடையில் சந்திக்கலாமோ, அதே மாதிரி இவங்க ரெண்டு பேரையும் அமெரிக்காவிலே இருக்கிற குக் கிராமங்களிலும் பார்க்கலாம். வந்த மக்கள் வேலையோட வேலையா ஹிந்திக்கும் நல்லா வேலை செய்து இருக்கிறார்கள்.

நாடோடியா வந்த ரெண்டு கும்பலும் நாட்டையே ஆளுற மாதிரி வளைச்சி சொத்து சேத்து வச்சி இருக்காங்க, அவங்ககிட்ட வேலை பார்க்கும் என்னை மாதிரி ஒரு சில கருப்பு அண்ணாச்சிமார்கள் ஒருசில ஹிந்தி வார்த்தை தெரிந்து வைத்து கொள்வார்கள்.நம்ம ஊருக்காரர்களை பார்த்தல் "நமஸ்தே" ன்னு சொல்லி குஸி படுவாங்க

இங்க உள்ள ஆபிரிக்கன் அமெரிக்கன் மக்கள் எல்லாம் என்னை மாதிரி கருப்பா இருக்கிறதாலே அவங்களை செல்லமா நான் கருப்பு அண்ணாச்சி ன்னு ௬ப்பிடுவேன்

ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும் போது ஒரு அண்ணாச்சி என்னை பார்த்து "நமஸ்தே" ன்னு சொன்னாரு.நானும் பதிலுக்கு ஒரு "நமஸ்தே" போட்டு வைத்தேன். உடனே ஒரு ஹிந்தி பாட்டு என்கிட்டே போட்டு காட்டினார், அந்த பட்டை எங்கையே கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தால் "ரோஜா" படத்தோட ஹிந்தி பாட்டு.பாட்டோடு நிக்காம இவரு "இந்தி" யா விலே பெரிய இசை அமைப்பாளர் இவரு பேரு ஏ.ஆர் ரகுமான்கான்.

நான் சொன்னேன் அவரு பேரு ஏ.ஆர் ரகுமான். அந்த கருப்பு அண்ணாச்சி என்கிட்ட ஹிந்தி படவுலகிலே இருக்க எல்லாரோட பெயரும் "கான்" ன்னு முடியும் சாருக்கான்,அமீர்கான் மற்றும் சல்"மான்" கான் உட்பட அடங்கும்.

இப்படி சொல்லுகிறவரிடம் நான் என்னத்தை சொல்ல, நம்ம பங்காளி நாட்டுக்கு சொந்தக்காரர் இம்ரான்கான் இருக்காருன்னு சொல்லமுடியுமா?
இங்கே உள்ள பெண்களுக்கு புடவைன்னா என்னன்னு தெரியாதோ அதே மாதிரி கிரிக்கெட்ன்னா யாருக்கும் தெரியாது.

ஹிந்தி படவுலக மக்கள் ஹாலிவுட்காரன் படத்தை திருப்பி அவனுக்கே போட்டு எனக்கு ஆஸ்கர் கொடுன்னு...எனக்கு ஆஸ்கார் கொடுன்னு.. சண்டை போடுற மாதிரி, இவரு நம்ம பாட்டையே எனக்கு திருப்பி போட்டு ஹிந்தி பாட்டுன்னு சொன்னாரு.

அமெரிக்கா வந்த புதுசிலே இங்க உள்ள மக்கள் எல்லாம் காதுல சங்கிலி மாதிரி ஒன்னை மாட்டி பாட்டு கேட்டுகிட்டு இருக்காங்கன்னு நானும் ஒன்னை வாங்கி வச்சி இருந்தேன், நல்ல வேளை "ரோஜா" வோட தமிழ் பாட்டு இருந்தது அதிலே,அதை அவருக்கு போட்டு காட்டினேன்.

பாட்டை கேட்டுட்டு அண்ணாச்சி "நல்லா பாட்டை காப்பி அடிச்சி இருக்கீங்க" ன்னு சொன்னாரு.அண்ணாச்சி ரெம்ப பொறுமையை சோதிக்கிறார்னு தமிழ் கலந்த இந்திய வரலாறை எனக்கு தெரிஞ்ச வரையிலே அவுத்து விட்டேன்.

ஐயா இந்தியாவிலே 200 க்கு அதிகமான மொழி பேசுறாங்க, அதுல ஒன்னுதான் இந்தியும், தமிழும்.அதோட நிக்காம தமிழ் மொழி, லத்தின், கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழி யைப்போல மிக பழைமையான மொழி, இந்த உலகத்திலே வாழும் தொன்மை மொழி தமிழ்ன்னு சொன்னேன். அதோட இன்னு ஒன்னையும் சேத்துகிட்டேன், திருக்குறள் பைபிள்க்கு அடுத்த படியாக உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்படும் ஒரு நூல்னு சொன்னேன்.

இவ்வளவு சொல்லியும் மனுஷன் என்னை கொஞ்சம் ௬ட நம்பலை, உடனே அவரிடம் தற்காப்புக்கு வச்சி இருந்த ஒரு பத்து ரூபாயை கட்டி இதிலே
உள்ள எல்லா மொழியும் அரசாங்க மொழிகள்னு சொன்னேன்.
அவரு நம்ம ஊரு மொழிகளோட எழுத்தை எல்லாம் பாத்துட்டு

"இதுல எந்த சிலேபி உங்க சிலேபின்னு கேட்டாரு?". அதிலே தமிழைக் காட்டி
"இது தான் எங்க சிலேபின்னு" சொன்னேன்.

அவரு கேட்கவே ரெம்ப சுவாரசியமா இருக்கு, நான் இது நாள் வரையிலே "இந்தி" யா வில் இந்தி மட்டும் தான் பேசுவாங்கன்னு நினைச்சு கிட்டு இருதேன். சமிபத்திலே ஆஸ்கர் விருது வாங்கிய ஏ.ஆர் ரகுமான் நல்ல வேளை "எல்லா புகழும் இறைவனுக்கேன்னு தமிழ்ல சொன்னாரு.அந்த புகழ் இறைவனுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தான்.

தமிழ் மக்கள் இருக்கும் போதே இப்படி ஒரு விஷ பிரச்சாரம் ஹிந்திக்கு பண்ணுகிற மக்கள் மத்தியிலே நாமே எல்லாம் வெளியே வரலைன்னா தமிழ் மொழியை ஏட்டுலே இருந்தே அழிச்சிடுவாங்க போல!!!!!!!


Monday, February 23, 2009

அமெரிக்காவிலே பீர் அடிக்காதீங்க

கல்யாணத்திற்கு முன் தண்ணி அடிகிறதை விடைலைனா கல்யாணம் இல்லன்னு சொன்னதுனாலே, எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு. திருமணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல ஒரு நாள் பீர் மூடியை மோந்து பாத்து விட்டேன்னு ஒரு மாசத்துக்கு கட்டை பிரமச்சாரி ஆனேன். கையிலே காலிலே விழுந்து சமாதானப்படுத்தி அப்புறமா இங்கே வந்தேன்.ஒரு நாள் என்னோட தொல்லை தாங்காம நண்பர்களுடன் சேர்ந்து பீர் அடிச்சேன், நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன், அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்.அது தலை சுத்தி, வாந்தி வரவழைச்சு விட்டது.

தங்க்ஸ்க்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம போனை எடுத்து நம்பர் போட்டாள், அடுத்த முனையில் உள்ளவரிடம்

"என் புருஷன், வாந்தி எடுக்கிறார்..வாந்தி எடுக்கிறார்".

போன் வைத்த அடுத்த 2 வது நிமிஷம் வீட்டு முன்னே ஆம்புலன்ஸ், போலீஸ் கார் எல்லாம் வந்தது, அந்த ஏரியாவையே சுத்தி போலீஸ் பட்டாளங்கள் வந்தது.அப்பத்தான் எனக்கு புரிந்தது அவள் 911 க்கு போன் பண்ணி இருக்கிறாள்.


நேர உள்ளே வந்த ஒரு ஆபிசர் நான் வாந்தி எடுத்ததை பார்த்து என்னை நேர மருத்துவ படுக்கையிலே படுக்க வைத்தார்.உடனே திபு...திபு உள்ளே வந்த ஆபிசர் எல்லாம் என் மனைவியிடம் எதோ விசாரணை பண்ணினார்கள், இதற்குள் அங்கு வந்த பெண் போலீஸ் வெள்ளையம்மா என்னை ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏற்றி விட்டார்கள்.


அந்த வெள்ளையம்மா என்னை பார்த்து "டோன்ட் வொரி ஹனி"


நான்,"என் பேரு கனி இல்லை, நச" ன்னு முடிக்கலை அவங்க மேல வாந்தியபிசேகம் பண்ணி அவங்களை நனைச்சுபுட்டேன்,அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க


உடனே வெள்ளையம்மா


"இவன் பீர்ல கலந்து குடிச்சி இருக்கான், சீக்கிரம் போனாத்தான் நல்லது,இல்லைனா இவன் உயிருக்கே ஆபத்து ஆகிடும்" ன்னு சொன்னங்க. உடனே வண்டி கிளம்பியது, நம்ம ஊரு மாதிரி இல்லை ஆம்புலன்ஸ் வண்டியப்பாத்தாலே வழி விடுவாங்க, மருத்துவ மனையை அடைந்தது. அதற்குள் அங்கு தயாராக இருந்த மருத்துவர் குழு என்னை வண்டியிலே இருந்து அழைத்துசென்றது.


நாம் ஊரில் மருத்துவர்கள் எல்லாம் நாம சொன்னதைத்தான் கேட்பார்கள், ஏன்னா நாமதான் சொல்லணும் நமக்கு காய்ச்சல்,தலைவலி ன்னு, அவரு அதுக்கு உடனே மருந்து கொடுப்பார். இங்க நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, நீங்க அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட வந்தாலும், ரத்தத்தை சோதித்துதான் சொல்லுவாங்க உனக்கு என்ன பிரச்சனை என்று.


அதான் எனக்கும் நடந்தது நான் சொன்னேன்


" நான் குடிச்சேன், அதான் வாந்தி,இது பித்த வாந்திதான்" யாரும் காது கொடுத்து கேட்க்கலை, ஏற்கனவே நான் வாந்தியபிசேகம் பண்ணின வெள்ளையம்மா போலீஸ் அதிகாரியை எல்லோரும் பார்த்த்தினாலே என் பக்கம் யாருமே வரலை, ஒருத்தர் வந்து மட்டும் ரத்தம் எடுத்துட்டு போனாரு


அப்புறமா இதயம், இல்லாத மூளை ஒன்னு விடாம ஸ்கேன் பண்ணினார்கள், அதற்குள் ரத்த சோதனை முடிவும் வந்தது, எல்லோரும் ௬டி, ௬டி பேசினாங்க, தலையை தூக்கிப்பார்த்த எனக்கே கொஞ்சம் பயம் வந்தது, உண்மையிலே தமிழ் படத்திலே வார மாதிரி ஏதும் புது வியாதியா இருக்குமோ?


ஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராய்ச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.


மருத்துவர் ஒருவர் வந்து " நீங்க பீர் குடிச்சு இருக்கீங்க, அதான் வாந்தி எடுத்து இருக்கீங்க"

நான் அதை தானுங்க நான் முதல்லே இருந்தே சொன்னேன்.அவரு நீ சொல்லுவதை கேட்க நாங்க படிக்கலையேன்னு சொல்லிட்டு என் தங்க்ஸ் கிட்டயும் அவருக்கு ஒன்னும் இல்லை, நீங்க வீட்டுக்கு போகலாம்.

"ஐயா பீர் அடிச்சா ஜெயில்ல போடமாட்டீங்களானுன்னு கேட்டாங்க" இந்த கேள்வியை எதிர்பார்க்காத மருத்துவர்.


"நீங்க கொலை வெறி கோபத்திலே இருந்தா பீர் அடிங்க" ன்னு


சிரிச்சி கிட்டே சொன்னாரு. தங்க்ஸ் வேற வழி இல்லாம என்னை வீட்டுக்கு ௬ப்பிட்டு வந்தது.


அடுத்த வாரம் ஒரு நாற்பது பில் வந்தது, அதிலே 911 ஆம்புலன்ஸ், மருத்துவர்,மருத்துவமனை, ஸ்கேன் செலவு மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேத்து 40 ஆயிரம் டாலர் பில் வந்தது.தங்க்ஸ் பயங்கர குசியாகி "ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்" ன்னு சொன்னங்க.


நான் "இதெல்லாம் இன்சூரன்ஸ்ல கொடுப்பாங்க" ன்னு சொன்னேன். ஒரு வில்லச்சிரிப்பு சிரிச்சு புட்டு, அவனும் பில் அனுப்பி இருக்கான், இதுக்கு எல்லாம் நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு, நீங்க உங்க கை காசு தான் கொடுக்கணும் ன்னு சொல்லி அவன் அனுப்பி இருந்த கடிதத்தை காண்பித்தார்கள்.

மஞ்ச நோட்டீஸ்சும் கொடுக்க முடியாம, பெயில் அவுட் கிடைக்காம இன்னும் காசு கட்டிக்கிட்டு இருக்கேன்,இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது.


அமெரிக்கா மருத்துவம் நவீனமானதுதான், அதனாலேவோ என்னவோ அதுக்கு விலையும் ரெம்ப அதிகம்.


Saturday, February 14, 2009

எனக்கு காதலி கிடைச்சுட்டா!!

நான் வாழ்க்கையிலே எவ்வளவோ பேரை காதலிச்சு இருக்கிறேன். அவங்க எல்லாம் என்னை ஒரு முறையாவது திரும்பி பார்க்க மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கிறேன், அவங்களை மனசுல சுமக்கிறதை பெருமையா நினைப்பேன், ஒவ்வொரு முறையும் காதல் தோல்வி அடையும் போது வேதனைப் படுவேன் ரெண்டு வாரத்துக்கு, அதற்க்கு அப்புறம் காலியான இடத்திலே இன்னொரு பெண்ணை வைத்து அவளை நினைக்க காதலிக்க ஆரம்பிப்பேன்.

நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.என்னோட முதல் காதல் எப்ப வந்ததுன்னு என்னால சரியா சொல்ல முடியலை, மூனாம் வகுப்பு படிக்கும் போது என் ௬ட படிக்கும் தோழிக்கு காதல் கடிதம் எழுதினேன், அதை அவள் தன் வீட்டில் காட்டி விட ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிவிழும், அன்றைக்கு ஆரம்பித்த கதை இன்னும் முடியலை.

இன்னைக்கு காதலர் தினம் என்னோட இந்நாள் காதலிக்கு காதல் கடிதம் எழுதி வச்சி இருக்கேன் அதை கொடுக்கத்தான் போய்கிட்டு இருக்கேன்.இவள் என்னோட இருபதாவது காதலி.இதைத்தவிர அவசரக் காதலிகள் கணக்கில் அடங்கா


"மச்சான் நீ வாங்கிட்டு வந்த ரோசா பூ வை மறந்து விட்டுட்ட"


அதை எடுத்துக்கொண்டு "நன்றி மாப்ஸ்""சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா, இந்த தடவையாவது சொதப்பாம ஒழுங்கா சொல்லு""எல்லாம் ஞாபகம் இருக்கு மாப்ஸ்" என் நண்பர்கள் தான் எனக்கு நிறைய யோசனை சொல்லுவாங்க, அவங்களோட பலம் தான் என்னையும் என் காதலையும் வாழ வைக்கிறது.


மரத்தின் நிழலில் என் காதலி நின்று கொண்டு இருந்தாள், யாரும் அவளோடு இல்லை, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் காதலை சொல்லக் கிளம்பினேன். நான் அவளருகே போகும் முன் எனது வகுப்பு ராம் அவளோடு வந்து சேர்ந்து விட்டான். வேறு வழி இல்லாமல் அவர்கள் பேசுவதை சிறிது தூரத்திலே நின்றேன், இருந்தாலும் அவர்கள் பேசுவது என் காதில் விழுந்தது.


அவர்கள் உரையாடலில் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே எனக்கும் தெரிந்தது அவனும் தன் காதலை அவளிடன் சொல்கிறான் என்று, அவள் அவன் காதலை ஏற்று கொள்கிறாளா என்று அறியா சற்று அருகில் சென்று கதை ௬ர்மையாக வைத்தேன். அவள் அவனிடன் சொன்ன இறுதி வார்த்தையிலே என் கடிதமும், பூ வும் என் கையை விட்டு நழுவி கிழே விழுந்தது. அதற்க்கு மேல் அங்கே நிற்க மனம் இல்லாமல் திரும்பி வந்தேன்."என்ன மச்சான் எடுத்திட்டு போன கடிதத்தையும், பூ வையும் அப்படியே கொண்டு வாரா, என்ன உன் ஆளு வரலையா? இல்ல வேர யாரவது துண்டை போட்டுட்டானா?


"இல்ல மாப்ஸ் அவளைப் பார்த்தேன் பேசினாள், வந்துவிட்டேன்"

"அப்புறம் என்ன கொடுக்கவேண்டியது தானே"

"அவ நம்ம கிளாஸ் ராம் கிட்ட பேசிக்கிட்டு இருந்தா, அதை ஒட்டுக் கேட்டேன்"

"இதுவும் போச்சா, அவன் சந்துல சிந்து பாடிட்டானா?"

"இல்ல மச்சான் அவன்கிட்ட, என்னைத்தான் காதலிக்கிறதா சொன்னா?"

"சூப்பர் மச்சான், கலக்கிட்ட கைய கொடு முதல்ல"

"என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு, சஸ்பென்ஸ் படத்திலே முடிச்சு அவிழ்ந்த உடனே இவ்வளவு தானான்னு எல்லோரும் சொல்லுகிறமாதிரி, காதல் இவ்வளவு தானான்னு தோன ஆரம்பித்து விட்டது.என்னைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னே நான் எப்படி என் காதலை சொல்லமுடியும். "

"எதோ தத்துவம் பேசுற மாதிரி, தரித்திரம் பேசுற,இப்ப என்னடா சொல்ல வாரே?"

"இதுவரைக்கும் நானாத்தான் பெண்கள் பின்னால் அலைந்து இருக்கிறேன்."

"இப்ப தானா வந்ததினாலே,வேண்டாம்ன்னு சொல்லுற அப்படித்தானே?"

"தெரியலையே"


"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"


"மாப்ஸ் யாருடா இந்த பொண்ணு ரெம்ப அழகா இருக்கா?" தெருவிலே சென்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து.


"புதுசா நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இருக்கிறாள்"


"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்"


"என்னை கொலைகாரன் ஆக்கிடாதே ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும் இதையே தான் சொல்லுற" என திட்டிக்கொண்டே வெளியே கிளம்பினான்.


Friday, February 13, 2009

கலாச்சாரக் காவலர்களுக்கு அமெரிக்கா அழைப்பு

ஒரு நாள் வீட்டுல எனக்கும் தங்கமணிக்கும், பேச்சு வார்த்தை ஆரம்பித்து, வாய்த்தகராறு வரைக்கும் போய், அது திடிர்ன்னு கைகலப்பு ஆகிப்போச்சு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் உடம்பிலே திட்டு திட்டாய் வர ஆரம்பித்தது, எனக்கும் அப்பத்தான் தெரிய ஆரம்பித்தது தங்கமணி உருட்டுக்கட்டையால என் உடம்பிலே சாகசம் நடத்தி இருக்கிறாள் என்று, சண்டை காட்சி முடிஞ்ச உடனே பயத்திலே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது

மறுநாள் தங்கமணிதான் என்னை ஆஸ்பத்தரிக்கு ௬ட்டிக்கொண்டு சென்றாள், அடிக்கிற கைதான் அணைக்கும் ன்னு எனக்கு அப்பத்தான் தெரிந்தது.
ஆஸ்பத்தரிக்கு போனே உடனே ஒரு பாரம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னாங்க.

நாங்களும் வாங்கி ரெண்டு மணி நேரமா எழுதியும் இன்னும் எழுதி முடிக்கலை, வரவேற்ப்பு அறையிலே இருக்கிற கருப்பம்மா வேற நான் எழுதுற வேகத்தை பார்த்து

"ரெண்டு பெரும் பாரத்திலே பரிச்சை எழுதுரீங்கலான்னு கேட்டாங்க"

இதுக்கு மேல தாமதித்தோம் வீட்டுக்கு போக சொல்லி வீடுவார்களோன்னு பரிச்சை நேரம் முடியும் போது அவசர அவசரமா எழுதுற மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன்..


கொஞ்சம் நேரம் கழிச்சு வரவேற்ப்பு அறை பெண்மணி என்னை ௬ப்பிட்டாள், நானும் போனேன்.பாரத்தை பார்த்தாள், என்னை பார்த்தாள். பார்த்து விட்டு உங்க பார்ட்னெர் எங்கே? ன்னு கேட்டாள்.என் மனைவியை காட்டி இவங்க தான் என் பாட்னர் ன்னு சொன்னேன்.

அவள் உங்க டொமஸ்டிக் பாட்னரா?

நான் என் மனசுல, நாம இப்ப வெளிநாட்டுக்கு அல்லவா வந்து இருக்கிறோம்,

"டொமஸ்டிக் பார்ட்னர், அப்ராடு பார்ட்னர் ரெண்டும் இவங்க தான்" ன்னு சொன்னேன்.

உடனே அந்த பெண் ஒரு சிரிப்பு, என் தங்க்ஸ் பக்கத்திலே நின்னு கிட்டு
இந்த மக்குக் காமெடிக்கெல்லாம் சிரிக்கிறாளே, இதுக்கு முன்னாடி ஜோக் கேட்டதே கிடையாது போலே தெரியுது.

அவங்க "நீங்க ரெண்டு பெரும் யாரு?"

நான் "இப்பவரைக்கும் புருஷன், பெண்ட்டாட்டி ன்னு சொன்னேன்"

அவங்க "அப்படின்னா நீ ச்பௌஸ் ன்னு சொல்லணும்"

"நானும் பார்த்தேன், அதை விட இது நல்ல கவர்ச்சியா இருந்தது. அதான் இதை எழுதினேன்" ன்னு சொன்னேன்.

அவங்க "உன் சட்டையைப் பார்த்தாலே தெரியுது" , பார்த்ததால் அது பிங்க் சட்டை.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் விசாரித்தால், ஆண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் மோ, இல்ல பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் கல்யாணம்(இங்க அப்படித்தான் சொல்லுறாங்க) முடிச்சால் அவங்க ரெண்டு பெரும் டொமஸ்டிக் பார்ட்னர் ஆகிவிடுவார்களாம்.

ஐயா சாமிகளா, கலாச்சரத்தை கட்டிக்காக்கும் உங்கள் சேவை இங்கு நிறைய தேவைப்படுகிறது,ஆணும் பெண்ணும் பேசினாலே தப்புன்னு சொல்லுற நீங்க ஓரின சேர்க்கை சட்ட பூர்வமாக செயல் படுகிற இங்கே,சட்டு புட்டுன்னு பிங்க் ஜட்டிய வாங்கிகிட்டு ஓடியாங்க, உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துகிட்டு இருக்கு, இங்க நீங்க சேலை கொடுக்க முடியாது,இவங்க சேலை உடுத்த மாட்டாங்க, உங்க கோவணம் அளவுலதான் உடைகள் இருக்கும். அதே மாதிரி இவங்க எல்லாம் பிங்க் ஜட்டியை அஞ்சலில் அனுப்ப மாட்டாங்க, நேரிலே வந்து வாயிலே தினிச்சுட்டுத்தான் போவாங்க.

கலாச்சாரத்துக்கு கொடி பிடிக்கும் காவலர்களே, மழை வரலைன்னு மனுசனுக்கும்,கழுதைக்கும் கல்யாணம், காக்கவுக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் சடங்குகள் என்ன இந்திய கலாச்சார எண்ணையிலே ஊறிப்போன உளுந்த வடையா? ஆமை வடையா?இதையெல்லாம் செய்தி தாள்களில் போட்டு பெருமை அடிக்கும் போது, ஆணும் பெண்ணும், போற போக்கில் புருசனும் பெண்டாட்டியும் வீதியிலே நின்னு பேசினால் கலாச்சார கேடுன்னு எப்படி சாமி சொல்லுறீங்க.

கடைசியா ஒரு கேள்வி பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க?


Monday, February 9, 2009

அமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை

சமிபத்திலே புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனோம்,
அவங்க வீட்டிலேயும் என் வீடு மாதிரி அவங்க வீட்டு அம்மாதான் வீட்டு ஓனர், அதனாலே வீட்டுக்கு முன் பணம் எல்லாம் அவங்ககிட்டத்தான் கொடுத்தேன்.

ஒரு நாள் பேய்மழை பெய்தது, அதிலே வீட்டு சுவரிலே இருந்த மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாய் அறுந்து பக்கத்து சுவரிலே முட்டி கொண்டு இருந்தது.பக்கத்து வீட்டுக்காரர் என்கிட்டே சொன்னாரு, இந்த விஷயத்தை நான் எங்க வீட்டு எஜமானுக்கு சொல்லுறேன், அவர் வந்து சரி பண்ணுவாருன்னு சொன்னேன்.

உடனே போன் போட்டேன், வீட்டு ஓனரோட வீட்டுக்காரர் போன் எடுத்தாரு. அறிமுகப்படலத்தை சட்டு புட்டுன்னு முடிச்சு

"சுவரில் இருக்கிற மின்சார கம்பிகளை கொண்டு சொல்லும் குழாயிலே அடிச்சு இருந்த ஆணி பிடிங்கி வந்து பக்கத்து வீட்டு சுவருல முட்டி நிக்கது. "

நான் சொல்லுற வரைக்கும் ரெம்ப அமைதியா கேட்டுகிட்டு இருந்தவரு சொல்லி முடிச்ச உடனே

"பக்கத்து வீட்டுக்காரன் எதுக்கு என் சுவத்துல ஆணி அடிக்குறான்."

நான், "அவன் ஆணி அடிக்கலை, நம்ம ஆணி பிடிங்கி,குழாய் அவன் சுவருல முட்டி நிக்கி"

அவரு அதுக்கு "போலீஸ் வந்து சரிபண்ணுவாங்க"

நான் "போலீஸ் எதுக்கு நாம் வீட்டுல வந்து ஆணி அடிப்பாங்க"

அவரு "ரோட்டுல மின்சாரக்கம்பி அறுந்து விழுந்தா அவங்க தான் வருவாங்க"

நான் "இல்லை,அது நம்ம வீட்டுல ....

அவரு ....

நான் ....

அவரு ...

இப்படியே ஒரு அரை மணி நேரம் மல்லுக்கட்டிப்பார்த்தேன் ஒன்னும் முடியலை.நான் இவ்வளவு நேரம் இங்கிலீஷ் பேசினதை பார்த்து

"அம்மா, அப்பா இங்கிலீஷ் பேசுதாங்க!!!..இங்கிலீஷ் பேசுதாங்க!!!!"

எனக்கு பொறுமை தாங்க முடியலை, கடைசியிலே ஒரு குண்டை தூக்கி போட்டு பிட்டாரு

"யாரவது நல்ல இங்கிலீஷ் தெரிஞ்சவன்கிட்ட போனை கொடுன்னு"
என் புகழ் உலகம் பூரா பரவி இருக்கு போலன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு

பக்கத்து வீட்டுல இருந்த மலையாள நண்பர் வீட்டுக்கு போய் போனை கொடுத்தேன். அவரு இங்கிலீஷ்ல நம்ம பழைமைபேசி மாதிரி பின்னி படல் எடுக்கிறவரு.

அவருகிட்ட போய் அவரை ௬ட்டிட்டு வந்து அறுந்த குழாயை காட்டி இந்த பிரச்னையை சொல்லி போன் ல இருக்கவரிடம் விளக்கி சொல்லுங்கன்னு சொன்னேன்.

"இவ்வளவு தானே" போனை கொடுன்னு வாங்கினவரு பேச ஆரம்பிச்சாரு.

வீட்டுல பால் இல்லை வாங்கன்னுமுன்னு ஒரு அவசர உத்தரவு வரவும் அவருக்கு சாடை கட்டிவிட்டு நான் போய்விட்டேன்.
நான் பால் வாங்கி கொடுத்து காப்பி எல்லாம் குடித்து முடித்து விட்டு மலையாள நண்பர் வீட்டுக்கு சென்றேன்,அவரு என்னை பார்த்து கொலை வெறி கோபத்திலே முறைத்து கொண்டு இருந்தார்.

நான் எதார்த்தமா "என்ன ரெம்ப டென்ஷன் ஆகா இருக்கீங்க, வீட்டுல தகராறா?"

"என் மேல ஏதாவது கோபமுன்னா என்னை நேரிலே திட்டுங்க, அதுக்காக கண்டவன்கிட்ட எல்லாம் போன் கொடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம்,அவனுக்கு விளக்கம் சொல்லியே என் உயிர் போய்விட்டது."

"அப்படி என்னதான் சொன்னாரு?"

"மகா கேவலாமா இங்கிலீஷ் பேசுற அவன் சொல்லுகிறான், நீங்க கொஞ்சம் இங்கிலீஷ் இம்ப்ரோவ் பண்ணனும்ன்னு,
முட்டாப்பய..முட்டாப்பய.."

நான் மனசுக்குள்ளே "இங்கிலிஷ் புலியவே, இடிச்ச புளி ஆக்கிபிட்டானே" . எனக்கும் அப்போதுதான் புரிந்தது அவனுக்கு உண்மையிலே இங்கிலீஷ் நல்லா பேச வராதுன்னு.

அவரோட தங்க்ஸ் "அவரு கோபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, நீங்க இவரை விட நல்ல இங்கிலீஷ் பேசுறீங்கன்னு வேற சொல்லிவிட்டார்"

அப்படி சொல்லி எரியுற தீயிலே எண்ணெய் உத்தி விட்டுட்டாங்க.

அதுக்கு மேல அங்க நின்ன என்னை கும்மிடுவான்னு நான் போனை வாங்கிட்டு வீட்டுக்கு போய்விட்டேன், அப்புறமா முதலாளி அம்மா போன் பண்ணி விபரத்தை கேட்டு நான் ஆள் அனுப்புறேன் சொல்லி முடிச்சாங்க

ஊரிலே அமெரிக்கா வரைபடத்தை தலையிலே வச்சு படுக்கிறதும், அமெரிக்கா நடை உச்சரிப்பு வரனும்முன்னு ௬லாங்கல்லை உடைச்சு வாயிலே போடுறதும், நாக்கிலே மிளகாய் தேய்க்கிறதும், சுண்ணாம்பு தடவுவதும் பழக்கப்படுத்துறோம்.

எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கேயும் ஆங்கிலமே தெரியாம அனேகம் பேர் இருக்கிறார்கள் என்று


Thursday, February 5, 2009

ஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு?

தமிழன்த்தலைவர் தன் மானத்தலைவர் என்று தன்னை அடையாளம் கட்டி கொண்டுஇருக்கும் அன்பின் தலைவருக்கு, இந்திய ரயில் தடம் புரளும் நேரத்தை வேண்டுமானாலும் எழுதில் கண்டு பிடிக்கலாம், ஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாது.ஈழ பிரச்சனையில் உங்கள் நாவின் ருத்திர தாண்டவம் உங்களை

தமிழ் இனத் தலைவரா?
குலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா!

என்ற சிந்தனையை தூண்டுகிறது

கழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள் குடும்ப பணிகளில் தீவிரமாக ஈடு படுவதிலே இருந்து, ஒரு நல்ல குடும்பத் தலைவன் என்பதை உணர்த்தி உள்ளீர்கள்.நீங்கள் உறுவாக்கிய நடிகர்களை விட நல்ல சிறப்பாக நடிக்க முடியும் என்பதையும் நிகழ்கால நாடகங்கள் நல்ல முறையில் வெளிப்படுத்துகின்றன.

உங்கள் வார்த்தைகளில் பொன் மொழி உதிராதா என்று காத்திருந்த எங்களுக்கு,எம் இன மக்களுக்கும்

நான் என்றால் உதடுகள் ஒட்டாது
நாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்

என்ற புது மொழியை ௬றி உள்ளீர்கள்.பகுத்தறிவை மூடி விட்டு நீங்கள் பகிர்ந்து அளிக்கும் அறிவே அறிவு என இருந்த முகத்தில் கரி பூசிய நீங்கள், எங்கள் முதுகில் குத்தும் முன் உங்கள் ஆசான் பெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.

ஐயா,உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான கோஸ்டிகள் வைத்து இருக்கும் நாட்டைக்காக்கும் நல்லவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஒரு வசனத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் 2000 வருஷம் காலத்தாலும் அவர்கள் வசனம் மாறப்போவதில்லை.
அவர்களிடம் இருந்து ஆட்சியை பறித்து மீண்டும் மீண்டும் உங்களை அரியணையில் ஏற்றி வைத்தும், நீங்கள் அவர்களுடன் இணைந்து உதிர்த்த பொன்மொழி தான்

"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை"

இப்படி நீங்கள் சிரிக்கும் பொது சிரித்தோம், அழும் போது அழுதோம், இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.

தமிழனாக பிறந்த உங்களுக்கு உணடர்வுகள் செத்துப்போன நிலையில் நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு அவர் நடத்தும்/ஆளும் கட்சியை தோற்றுவித்தவர் உயிரோடு இருந்தால் இவரை காட்சியில் இருந்து எப்போதோ தூக்கி எறிந்து இருப்பார், அவர் இந்நேரம் நெடுந்தொடர்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டு இருப்பார்.

தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்

இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.