Friday, October 23, 2009

காவல் துறையின் குற்றப் பத்திரிக்கை

குற்றவாளி௧ள் மூவரும் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு செல்லாமல் பேருந்து நிலையத்திலே முகாம் மிட்டு இருந்தனர். முகாமிட்ட முரட்டு ஆசாமிகள் அங்கு வந்து போய் கொண்டு இருக்கும் கல்லூரி பெண்களை எல்லாம் கிண்டலும் கேலியும் பண்ணி கொண்டு இருந்தனர்.நீங்க எல்லாம் எங்கே போறீங்க, நாங்களும் அங்கே வரவான்னு ஓய்வு எடுக்கவரும் அறைக்கு ஓய்வு எடுக்க ஆண்களை பார்த்து நயன பாசையிலே பேசினார்கள் என சாட்சி ஒன்னு நாயர் சொல்லுறாரு.

பக்கத்திலே இருந்த டாஸ்மாக் கடையிலும் புகுந்து, கம்பிகளை எண்ணிக் கொண்டு இருந்த கடை மேலாளரை பார்த்து "என்ன படிச்சா உங்க வேலைக்கு வரலாம்" என் கேட்டு அவரை தீராத மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, குடிக்கிற பாட்டிலோடு குடித்தனம் பண்ணினாலும் குடிக்காதவரை ரெண்டு சொட்டு பீர் குடிக்க வைத்து விட்டார்கள், குடிந்த வாடை வீட்டுக்கு போனால் தெரியும் என்பதற்காக அவரோட தங்கமணிக்கு பயந்து இன்னும் ஊரை சுத்தி வருகிறார் என் சாட்சி ரெண்டு பிச்சை எடுக்கும் கோடிஸ்வரன் சொல்லுறாரு.

சம்பவம் நடந்த அன்று பெய்த மழையிலே இவர்கள் நனைந்து கொண்டு ஆட்டம் போட்டதைப் பார்த்து

"என் தம்பிகளா இப்படி, மழையிலே ஆட்டம்" ன்னு கேட்டவரை

"மழையிலே ஆடினாலும் தப்பு, குத்தால மலையிலே ஆடினாலும் தப்பு, நீ என்ன குடை விற்கிறவரா இல்லை குடைச்சல் கொடுககிறவரா" என கொலைவெறி நக்கலில் நாக்கை காட்டி பேசினார்கள் என குடை விற்கும் பாலைவனம் சாட்சி மூணு சொல்லுறாரு.

அதுமட்டுமில்லாமல் ஒரு அரசாங்க அதிகாரியான பேருந்து ஓட்டுனரை பார்த்து
"டிரைவர்ங்க பொம்பளைங்களைப் பார்த்தா குதிச்சி குதிச்சி ஓட்டுறார், இனிமேல இவங்களை எல்லாம் குதிப்பினர்ன்னு ௬ப்பிடனும்" என்ற அபச்சொல்லை கேட்ட எமராஜா சுவத்திலே அறைந்த ஆணியை போல அன்றைக்கு ஆணி பிடுங்க முடியலைன்னு சொல்லுறாரு சாட்சி நாலு.

இப்படி அரசாங்க அதிகாரியின் வேலையை கெடுத்தல், பொது மக்களுக்கு பங்கம் விளைக்கும் படி நடந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடு பாட்டவர்கள். இதோடு நின்றார்களா

பதிக்கப் பட்ட பெண்ணை மானவங்கம் படுத்தாத குறையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள், பேருந்திலே இறங்கும் போது வழிக்கு விழுந்த பெண்ணைப் பார்த்து "உன்னை தூக்கி விட நான் எவ்வளவு முறையானாலும் விழுவேன்" என்று அவள் கையை பிடித்து தூக்கி விட்டு இருக்கின்றனர், மேலும் அவள் விழுந்த பயத்தில் அவள் விட்டு சென்ற துப்பட்டாவை எடுத்து கொண்டு அவளை பின் துரத்தி சென்று

நீங்க உன் துப்பட்டாவை விட்டுவிட்டு

என் தூக்கத்தை

எடுத்திட்டு போறீங்க


இந்த


மழை சகதியை போல


என் மனசிலே புதைஞ்சுட்டீங்க


மண் சகதி காய வெயில் இருக்கு


என் மன சகதி காய என்ன இருக்கு ???


என்று கவிதை எல்லாம் பேசி கிண்டல் செய்து இருக்கிறார்கள்.இளம்பெண் கையை பிடித்தது மட்டுமில்லாமல், அவளை துப்பட்டாவையும் எடுத்து இருகின்றனர், இந்த கோர சம்பவத்தை பார்த்த அனைவரும் 'ஐயோ' 'ஐயோ' என்று குய்யோ முறையாக கதறி சிதறி ஓடோடி ஓடினார்கள் என மாலைக்கண் மருது சொல்லுகிறார் இவரு சாட்சி ஐந்து.

பெண்ணை கேலி செய்தல், மன உளைச்சலுக்கு ஆளாக்குதல்,ஆள் கடத்தல், திட்டமிட்டு தடவுதல் ஆகிய பல விதிகளின் கீழே வழக்கு தொடர பட்டுஉள்ளது, இவர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்கு காவல் நிலையம் சென்று காலையிலே மாலையிலே கை எழுத்து இட வேண்டும்.

நடந்த உண்மைசம்பவம் :

அன்றைக்கு காந்தி ஜெயந்தி, புதுப்படம் பார்க்க கல்லூரியை கட் அடித்து விட்டு தியேட்டர் செல்ல பேருந்துக்கு காத்து இருக்கும் போது, அதிலே இருந்து இறங்கிய கிழவி கீழே விழுந்து விட்டது, அது விழுந்த வேகத்திலே எழுந்த சத்தத்திலே வெடி குண்டுதான் என எல்லோரும் சிதறி அடித்து ஓடினார்கள், இவர்கள் மட்டும் கிழவியை தூக்கி விட்டு விட்டு வேகமாக ஓடும் போது குடைக்காரன் கடையிலே கை பட்டு குடை எல்லாம் கிழே விழுந்து விட்டது, இவர்கள் ஓடும் போது எதிரே வந்த பேருந்து நிலையத்திலே இருந்து குண்டும் குழியிலே பட்டு பேருந்து தஞ்சாவூர் பொம்மை போல தலை ஆட்டிக்கொண்டு வந்தது,உடனே நின்ற நண்பனில் ஒருவன் பாட்டி பல் செட் தன் பையிலே விழுந்து விட்டதென ௬றி வேகமாக ஓடி வந்து பாட்டியிடம் கொடுத்து வந்தான். நல்ல படம் பார்க்க முடியாம மழை சதிபண்ணி விட்டதேன்னு நாயர் டீ கடையிலே டீ குடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்


மருத்துவ தெய்வங்கள்

கதவை திறக்கும் சத்தம் கேட்டு அருகே இருந்து கடையிலே அங்கே இருந்து காபி குடித்து கொண்டு இருந்த அனைவரும் காதை பொத்தக்௬ட நேரம் இல்லாமல் இரைச்சல் களுக்கு மத்தியிலே இருந்தனர், அதற்கும் மருத்துவ மனையின் கதவுகள் திறந்து விட வும், தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.எடுத்தவர் உடனே, மறுமுனையிலே கேள்வி கேட்கும் முன்

மாப்பிள்ளை ஊரிலே மழை எப்படி?


இங்கே நல்ல மழை, இன்னும் ரெண்டு நாள் பெய்தால் நல்லா களை கட்டும்.


எங்க ஊரிலே மழையே இல்லை, மண்டை காயுது
போன வருஷம் உனக்கு நல்ல மழை, நல்ல வருமானம் வந்தது, எனக்கு
காத்து வாங்கினது, இந்த வருஷம் உனக்கு போல.டேய் வயத்து எரிச்சலை கிளப்பாதே, சரி.. வை அப்புறம் பேசலாம், யாரே கடைக்கு வார மாதிரி இருக்கு.வணக்கம் டாக்டர்.. கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.நீயா !!, நான் வேற யாரோ வராங்கனு நினைச்சேன்.காலையிலே வந்து ஆஸ்பத்திரியை திறந்துவைனா, நான் வந்து திறந்து உனக்கு வரவேற்ப்பு கொடுக்க வேண்டிய இருக்கு.மன்னிச்சிடுங்க மருத்துவர் ஐயா, இனிமேல இந்த மாதிரி நடக்காம பாத்துகிறேன்.
நீங்க வயத்த வலிக்கு கொடுத்த மாத்திரை இன்னும் வயத்து போக்காகவே இருக்கு, ஐயா விவசாயம் மேல உள்ள அக்கறை எனக்கு பெருமையா இருக்கு.


விவசாயத்துக்கு நிலம் இருந்தா தானே, அதை பத்தி கவலைப்பட

அப்புறம் எதுக்கு சாமி,மழை எப்படி.. மழை எப்படின்னு விசாரிக்கிறீங்களே

இது தொழில் ரகசியம் யாருக்கும் சொல்லக் ௬டாது .

கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து இந்த காதிலே வாங்கி அடுத்த காதிலே விட்டுடுவேன்.

அதாவது மழை நல்லா பெய்தால் வீட்டிலே இருக்கிற பெருசுகளுக்கும்,சிருசுகளுக்கும் காய்ச்சல், சலதோசம், தலைவலி, உடம்பு வலி ன்னு பல சோதனைகள் வரும், ஆஸ்பத்திரிக்கு மக்கள் ௬ட்டம் வரும்.என்ன தான் அரசாங்கம் ஓசியிலே படிக்க வைத்தாலும், எங்க பொழப்பு ஓட நாங்களும் கல்லா கட்டனுமுல்லா

மழையை நம்பி விவசாயம் மட்டுமல்ல, மருத்துவமும் நடக்குதுன்னு இப்பத்தான் தெரிஞ்சு கிட்டேன், ஊட்டி, கொடைக்கானல்ன்னு எதாவது இடம் பார்த்து கடையை மாத்தலாம்.

அங்கே போனா நான் திறந்த ஆஸ்பத்திரியிலே நானே படுத்துக்குவேன்.நம்ம ஊரிலே என்னதான் அதி நவீன மருத்துவம் தெரிஞ்சாலும்,எங்க பேருக்கு முன்னாலே அரை மைல் தூரம் வரைக்கும் பட்ட படிப்பு போட்டாலும், கை ராசிக்காரன்னு பேரு வாங்கலைனா, கால் காசுக்கு பிரயோசம் இல்லை.

புரிஞ்சது டாக்டர், அவங்க வேதனையும் சோதனையும் உங்க கல்லாவை நல்லா கட்டும்.

இதைஎல்லாம் நீ மனசுக்குள்ளே வச்சுகோனும், சபையிலே சொல்லக் ௬டாது.

நான் எப்படி சொல்லுவேன் என் பிழைப்பே உங்களை நம்மித்தானே இருக்கு.

டாக்டர் யாரே உங்களை தேடி வாரங்க.

யாருன்னு பார்த்து உள்ளே அனுப்பு.

(வெளியே வந்ததும், அங்கே நின்ற பெரியவரும்,நடுத்துற வாலிபரும், அந்த வாலிபர் மருத்துவ உதவியாரளரிடம்)

தம்பி டாக்டர் இருக்காங்களா?

ஆமா இருக்காங்க, என்ன விஷயமா வந்தீங்க?

எங்க தாத்தாவுக்கு ரெண்டு நாளா காய்ச்சல், அதுதான் டாக்டரை பார்க்க வந்தேன்.

உள்ளேதான் இருக்காரு நீங்க போய் பார்க்கலாம்.

(டாக்டர் அறையிலே)

உங்க தாத்தாவுக்கு உடம்புக்கு இனிமேல ஒன்னும் செய்யாது, இந்த ஊசி காய்ச்சலை எல்லாம் காணாம அடித்துவிடும்.

ரெம்ப நன்றிங்க, நீங்க தான் என் தெய்வம், ஐயா உங்க பீஸ்.

வெளியே என் உதவியாளர் இருப்பார், அங்கே கொடுங்க?

அடுத்து எப்ப வரணும்?

நீங்க வர வேண்டாம், நானே சாயங்காலம் வந்து பார்க்கிறேன் .

(மீண்டும் மருத்துவர் அறையிலே)

டாக்டர் அவங்க கிட்ட வாங்கின பீஸ் இதோ பிடிங்க.

(வாங்கி கொண்டு) இந்தா இந்த மருந்தை குப்பையிலே போடு, அந்த
தாத்தாவுக்கு போட்ட ஊசி மருந்து மிச்சம்.

டாக்டர்..டாக்டர்.

என்ன.. என்ன

டாக்டர் நீங்க அவருக்கு பிளையக்சிலீன் கொடுப்பதற்கு பதிலா கொலையக்சலீன் கொடுத்துட்டீங்க.


அப்படியா.. சரி விடு.. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீ எதுக்கும் அவங்க வீட்டுக்கு போய், ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பார்த்து எனக்கு என்ன நடக்குதுன்னு விவரம் சொல்லு


சரிங்க அப்படியே ஆகட்டும்


(ஒரு மணி நேரம் கழித்து)
ஐயா, இங்கே இருந்து போய் படுத்தவரு இன்னும் எந்திக்கலை, கொலையக்சலீன் ஆளை காலி பண்ணிடும் போல.

அக்கம் பக்கத்திலே விசாரிச்சியா?

ஆமா, அவங்க எல்லாம் உங்களை குறை சொல்லுற மாதிரி தெரியலை.


(அடுத்த ஒரு மணி நேரத்திலே)


ஐயா, மூச்சி பேச்சி இல்லாம இருந்த கிழவரு, இப்ப மான் மாதிரி துள்ளி குதிக்கிறாரு.அக்கம் பக்கத்திலே விசாரிச்சேன், மண்டைய போட வேண்டியவரை மாப்பிள்ளை மாதிரி ஆக்கி விட்டாரே டாக்டர் ன்னு சொல்லுறாங்க

(அடுத்த மூனு மணி நேரம் கழித்து)
என்னாச்சி இவ்வளவு நேரம்?
கிழவருக்கு காரியம் பண்ணிட்டு வாரேன். அவரு மேல போய்ட்டாரு, ஆனா உங்களை யாரும் குறை சொல்லலை, அவரு நல்லா இருந்த உடனே மீன் கேட்டு இருக்காரு, மீன் முள் மாட்டி இறந்துட்டாராம்.
அப்படியா, சரி நானும் துக்கம் அனுசரிச்சி,கடையை அடைக்கலாம்.

(ஒரு மாதம் கழித்து)

முதியோர் நல மருத்துவர் என்ற விளம்பர பலகை முன், கை பேசியிலே "டேய் இனிமேல நான் மழையை பத்தி கவலைப் படப் போறதில்லை, நான் கை ராசிக்காரன் காப்பாத்துறதுல இல்லை, ஆளை காலி பண்ணுறதிலே


Wednesday, October 21, 2009

பேருந்திலே பச்சை அழகியுடன்

விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு பெரும்பாலும் இரவு பேருந்திலே கல்லூரிக்கு திரும்ப வருவேன்,பேருந்திலே ஏறுவதுதான் தெரியும்,பக்கத்திலே யாரு இருந்தாலும் அவங்க மேல விழுந்து தூங்குவேன், அப்புறம்மா அவங்களாவே அடிச்சி எழுப்பி விடுவாங்க.கடைசி நிறுத்தம் வந்ததும் நடந்துனர் வந்து தட்டு எழுப்பி "தம்பி நீ இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது, இன்னும்மா உன் குறட்டை சத்தம் முடியலை" அப்படின்னு சொல்லி இறக்கி விடுவார்.நான் அழகு கிளி மாதிரி இருகிறதாலோ என்னவோ நிறைய நேரங்களில் என் பக்கத்திலே விட இருப்பதை நிற்பதே நலமுன்னு நிறைய பேர் நின்று கொண்டு தான் பயணம் செய்வாங்க.ஆனா நான் பேருந்துகளிலே அழகான இளம் பெண்கள் இருந்தா அந்த இருக்கை பக்கமோ, முடிந்தால் அவங்களுக்கு பக்கத்திலோ இருக்க முயற்சி செய்வேன்.

இப்படிதான் ஒருநாள் நான் பக்கத்திலே போய் உட்கார்ந்த இளம் பெண் மீது தோள் சாய்ந்து தூங்கி இருக்கணும், கொஞ்ச நேரத்திலே என்னை நாலு பேரு தட்டி எழுப்பினாங்க, என்ன ஏதுன்னு விவரம் கேட்கும் முன் என்னை புரட்டி எடுத்து பேருந்தை விட்டு இறக்கி விட்டுட்டாங்க, இறங்கும் போது அதாவது தள்ளி விடும் போது என்னை பார்த்து அந்த இளம் பெண் பயங்கர முறைப்பு. அவளுக்கு தெரியுமா நான் பஸ்ல மீட்டர் போடுற ஆள் இல்லைன்னு.

அதற்கு பின்பு தெரியாத்தனமா பெண்கள் யாரவது வந்து பக்கத்திலே இருந்தா நானே வலுக்கட்டாயமா அவங்க கிட்ட ரெண்டு வார்த்தை பேசி என்னை அறிமுகப்படித்திகுவேன்.பேசின முறைக்காக தெரியாத்தனமா கை கால் மேல பட்டுட்டா விஷயயத்தை அவங்களோட முடிச்சுகுவாங்க, விவாகாரம் வரைக்கும் போகாது.பேச்சு வளருவதை பொறுத்து துண்டை போடவா வேண்டாமா ன்னு முடிவு எடுப்பேன்.

அன்றைக்கு நள்ளிரவு, மதுரை பேருந்து நிலையத்திலே இருந்து திருச்சி பேருந்திலே பயணம் செய்து கொண்டு இருந்தேன். ஜன்னல் ஓரமா உட்கார்ந்து ஒரு நிமிஷம் காத்து வாங்கிட்டு கண்ணை மூடலாமுன்னு நினைச்சேன், பக்கத்திலே ஒரு பச்சை நிற சுடிதார் அணிந்த கல்லூரி பெண்ணான்னு தெரியலை, ஆனா எனக்கு அப்படித்தான் தோணிச்சி எனக்கு , பக்கத்திலே வந்து உட்கார்ந்து இருந்தாங்க.

அவங்க உடைக்கும், நிறத்திற்கும் அப்படி ஒரு ஈர்ப்பு, இது யாரை பார்த்தாலும் என் மனசிலே ஏற்படும் வாடிக்கையான நிகழ்வு என்றாலும் வழக்கத்திற்கு மாறாக என்னவோ ஒரு வித்தியாசம்,எப்படியாவது ஒரு ஹலோ சொல்ல பல வழிகளில் முயற்சி செஞ்சு பார்த்தேன் முடியலை, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை என் பக்கம் திரும்பவும் இல்லை. எங்க எங்கயோ பார்த்தா நான் இருக்கிற திசையை தவிர, என்னைய பார்த்தா ஒருவேளை என் அழகிலே மயங்கிடுவா என்கிற பயமா இருக்கும் என நினைச்சிகிட்டு இருக்கும் போதே தூங்கிட்டேன். கொஞ்ச நேரத்திலே விசும்பல் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது, ரெம்ப பக்கத்திலே இருந்து வந்தாலே உடனே முழிச்சுட்டேன், என் பக்கத்திலே இருந்த அந்த பெண் தான் அழுது கொண்டு இருந்தாள்.


உடனே சுத்தி இருந்த ௬ட்டம் என்னை நோட்டம் விட ஆரம்பித்தாங்க, இன்னைக்கு இலவசமா ஏழரையை ௬ட்டி விடுவாளோன்னு பயந்து, அவகிட்ட பேச ஆரம்பித்தேன்.
புண்ணியவதியே, பெரிய மனசு பண்ணு, நீ அழுறதை பார்க்கிற எல்லோரும், நான் எதோ தப்பு பண்ணி, அதுக்கு பயந்து அழுகிறாயோன்னு நினைக்கிறாங்க, அடிவாங்குற அளவுக்கு உடம்பிலே தெம்பு இல்லை, பேசி ஒரு முடிவு எடுப்போம்.

அப்பத்தான் என்னை பார்த்தாள் அழுகை எல்லாம் அரை மை தூரம் ஓடிப் போச்சி, பகல்லே என்னை கண்டுபிடிக்க டார்ச் லைட் வேணும், இருட்டிலே என்னை பார்த்து இடி விழுந்த மாதிரி அமைதி ஆகிவிட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து வண்டி நின்றது டீ, காபி குடிக்க, நானும் கிளம்பினேன், போகும் முன்னே அவளிடம் கேட்டேன், "நான் எதாவது வாங்கி வரணுமானு". வேண்டாமுன்னு சொன்னாள். இருந்தாலும் என் மனசு கேட்கலை, அதுக்கு என்ன காரணமுன்னு நான் சொல்லி நீங்க தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து அவளே என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள், கொஞ்ச நேரம் பேசினோம், அதிலே அவள், எதற்காக எங்கே போகிறாள் என்பதை தெரிந்து கொண்டேன், அவசரப் பட்டு டீ காசை வீணாகிட்டேன்னு மனசிலே மாபெரும் சேகம் இருந்தாலும் வெளிக்காட்டலை.

கொஞ்ச நேரத்திலே அவள் முகத்திலே மகிழ்ச்சி ஆனந்த்த தாண்டவம் ஆடியது, என் ௬ட பேசினதாலே இல்லை, திருச்சி பக்கத்திலே வந்து விட்டது என்பதாலே, அவளுக்கும், அவளோட காதலனுக்கும் கல்யாணம் திருட்டு தனமா நடக்குது அடுத்த நாள்.

இந்த விஷயம் கேள்வி பட்டு உடனே நான் பேச்சை குறைத்து கொண்டேன், துண்டு போட வழி இல்லைன்னு உறுதியா தெரிஞ்சதாலே இந்த முடிவு.பல் இருக்கவன் பக்கடா திங்கான்னு மனசை சமாதான படுத்திகிட்டு நான் சொன்னேன்

நீங்க அழுதீங்கன்னு யாருமே நம்ப மாட்டாங்க இப்ப உங்களை பார்த்தா?


"நான் ஊரை விட்டு ஓடுறதை நினைத்து அழலை, உங்களை நினைத்துதான் அழுதேன்"

"எதுக்கு?"

"நான் உங்களோட பேருந்திலே இருக்கிறதை பார்த்து விட்டு போன எங்க ஊரு ஆளு, நாளைக்கு நான் உங்களோடதான் ஊரை விட்டு ஓடி போய்ட்டதா சொல்லுவான், அதற்கு பின் உங்களுக்கு நடக்கப் போறதை நினைச்சு பார்த்தேன், தன்னாலே அழுகை வந்து விட்டது. "

எனக்கு அப்பவே தலையிலே இடி விழுந்த மாதிரி இருந்தது.நான் பேய் அறைந்த மாதிரி ஆகிட்டேன், இதுவரைக்கும் கொஞ்சமா பேசின நான் எதுவுமே பேசலை. திருச்சி பேருந்து நிலையம் வந்தது, அவ முதல் ஆளா இறங்கி போய்ட்டா

போகும் முன்னே "உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை, உங்களை அண்ணனாவா,மாமாவா பார்கிறதா என்பது எங்க ஊருகாரன்களை பொறுத்தது,ஆனா ரெண்டிலே ஒன்றில் என் மனசிலே இடம் இருக்கு" ன்னு சொல்லிட்டு இறங்கி போய்ட்டா

அவளுக்கு மங்களம் பாடும் முன்னே எனக்கு மங்களம் பாடிடுவாங்களோன்னு பயத்திலே மத்திய பேருந்து நிலையத்திலே இறங்கி ஓட்டமும் நடையுமாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி போனேன்.

அதுக்கு பின் ரெண்டு மாசம் ரூமை விட்டு வெளியே வரலை, மதுரைக்கு வேறு வழியிலே சென்றேன் கொஞ்ச நாள், அப்புறம் பெண்கள் பக்கத்திலே வந்தா நானே எழுந்து வேற இடம் போவேன், அப்படியே வேற வழி இல்லை என்றால் என்னோட தூக்கத்தை தியாகம் செய்து நின்னு கிட்டே வருவேன்.


Tuesday, October 20, 2009

ஆணழகன்

என்னை ஒரு அழகன்னு சொல்லுறதை விட அதிஷ்டசாலின்னு சொல்லுறதே ரெம்ப பிடிக்கும்.சின்ன வயசிலே இருந்து எனக்கு பிடிச்ச எல்லாமே நான் நினைக்கும் முன்னாலே நடந்தது.என்னோட அப்பா அம்மாவுக்கு என்னோட தேவைகள் என்னனு நான் சொல்லுறதுக்கு முன்னாலே செய்து கொடுப்பாங்க, படிப்பிலே என்னிடம் இருந்து முதல் இடத்தை பறிக்கனுமுன்னு எவ்வளவோ பேர் முயற்சி செய்து தோல்வி அடைந்தனர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு அப்படி ஒரு உணர்வு வந்தது, என் ௬ட தோழி எனக்காக எழுதுதியது, காதலுக்கு முதல் அத்தியாயம் போட்டது

ரெண்டு வருஷம் அவளேதான் உலகம் என்று நினைத்தேன், காதல் தோணியிலே துண்டை போட்டு உலா வந்தாலும்,பக்கத்து தோணியிலே படிப்பையும் கை விடலை, நல்ல மதிப்பெண் பன்னிரெண்டாம் வகுப்பிலே, இந்த காதல் பறவைகள் கல்லூரிக்கு இரு வழிகளிலே சென்றோம்.பிரிந்த போது முதலில் அதிகம் பேசினோம், கொஞ்ச காலம் கழித்து கொஞ்சம் பேசினோம், பின்பு பேச்சை நிறுத்தினோம். அதன் பின் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன், பின் அதிகம் பேசினேன் கல்லூரியில் கிடைத்த புது காதலியிடன் பழையது கழண்டது என்பதைவிட கழட்டி விட்டேன் என்பதே சரியா இருக்கும்.

முதலில் அவள் தான் உலகம் என்றேன், இப்போது இவள் தான் உலகம் என்றேன்.கல்லூரி காதலுக்கும் பள்ளி காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் கண்டேன், இதை ரசித்தேன், முடிந்து போனதை வெறுத்தேன், காதல் களத்திலே கொஞ்ச காலத்திலேயே முதல் கல்லூரி காதலியை தனித்து விட்டேன், அவளை விட அழகாய் இன்னொருத்தி வந்ததால் என் அழகுக்கு அவளே சரி என்றது மனம் .

கல்லூரியிலே இரண்டு காதலோடு நின்றேன், அதற்குள் கல்லூரி முடிந்து விட்டதால், முடியும் போது கை வசம் இருந்த காதலி திருமணத்திற்கு வற்புறுத்தினாள். அவளை சம்மதிக்க வைத்தேன் இன்னொருவனை மணம் முடிக்க ,அவளின் காதல் அத்தியாயம் முடிந்தது,என் காதல் அத்தியாயம் மீண்டும் தொடர்ந்தது.

அழகும்,அறிவும் வளமாக இருந்த எனக்கு படிப்பு முடிந்ததும் வேலை என்னை தேடி வந்தது. வேலையிலே சேர்ந்தேன் .முன்னாள் காதல் அனுபவத்திலே காதலிகளை பிடிப்பது கஷ்டமாக தெரிய வில்லை, ஆனால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காதலிகள் கிடைக்கும் போது அதை சமாளிப்பதே கஷ்டம் .
வேலையிலே ஒன்றில் ஆரம்பித்தேன், இரண்டு மூன்று என நான்கு வரை போனது காதலிகளின் எண்ணிக்கை கல்லூரிக்கு பின் .

கால ஓட்டத்திலே என் தாயும், தந்தையும் என்னை விட்டு சென்றனர், அதன் பின் நான் விடாமல் என்னையும் விடாமல் இருந்தது காதல் ஒன்றே. நான்கு காதலிகள் வைத்து இருக்கிறேன் என்ற கர்வத்திலே இருந்த நான். உண்மை வெளிப்பட்டபோது அது விஸ்வ
ரூபம் எடுத்து இருந்ததை எல்லாம் பறித்து கொண்டது. மீண்டும் தனித்து விடப்பட்டேன், இந்தமுறை என்னை தனித்து விட்டனர், காதலில் தன்னிறைவு அடைந்த நான் திருமணதிற்கு தயார் ஆனேன்.நாட்கள் சென்றன நானும் என் மண கனவும் அங்கேயே நின்றது.

ஒரு நாள் பச்சை விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கும் போது என் முன்னால் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் எதோ பேசினார், அதற்குள் இன்னொரு குரல் "ஹலோ மிஸ்டர் சாரதி, மெதுவா கண்ணை திறங்க"

திறந்தேன், நான் இருப்பது மருத்துவ மனை, எழுந்த நொடியிலே அதிர்ச்சியா இருந்தாலும், மருத்துவரை பார்த்ததும் புரிந்து கொண்டேன், அவர் மனோதத்துவ நிபுணர், அவர் பெயர் மூர்த்தி, நான் இவ்வளவு நேரமும் என் ஆழ் நிலை மனதோடு இவரிடமே கதை சொல்லி கொண்டு இருந்து இருக்கிறேன். என் சட்டை பைய தடவி பார்த்தேன், அவரை சந்திப் பதற்காக நான் வாங்கி வைத்து இருந்த முன் பதிவு அட்டை இருப்பதை உணர்ந்தேன்.

டாக்டர் எனக்கு என் மனநிலையை சோதித்தீங்களா!!!

ம்ம்..உங்க மனசுக்கும் உடம்புக்கும் ஒண்ணும் பிரச்சனையே இல்லை.

அப்புறம் என் டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

நான் கல்யாண தரகரா இருந்தா பதிலே சொல்லி இருப்பேன் உங்க மனசு குளிரும் படி, ஆனா மருத்துவர் என்பதாலே எனக்கு தெரிந்த உண்மையை சொல்லுறேன். உங்கள் கல்யாண தடைக்கு காரணம் உங்க வயசு

என்ன டாக்டர் சொல்லுறீங்க !!!

நீங்க இன்னும் கல்லூரியிலே, வேலை செய்யும் போது கிடைத்த காதலிகள் ஞாபகமாவே இருக்கீங்க, நீங்க காதல்ல தன்னிறைவு அடைந்து திருமணத்துக்கு தயார் ஆகும் போது உங்க வயசு நாப்பது, என்ன தான் உடம்பையும்,மனசையும் கட்டு கோப்பா வைத்து இருந்தாலும், வயசு ஆகும் போது உடல்ல நடக்கிற மாற்றங்களை தடுக்க முடியாது, உங்களுக்கு கால காலத்திலேயே கல்யாணம் ஆகி இருந்தால் இந்நேரம் உங்க மகனுக்கோ, மகளுக்கோ வரம் பார்க்க வேண்டிய நேரம், காதல்ல மூழ்கி இருந்த நீங்க கல்யாணத்தை தவற விட்டுடீங்க

(சிறிது மவுனத்திற்கு பின் மீண்டும்)

நீங்க வாலிப கட்டத்தை கடந்து முதியோர் கட்டத்திலே நடந்து கொண்டு இருக்குறீர்கள். உங்களுக்கு இன்னும் ஆணழகன்னு மனசிலே நினைப்பு இருப்பதாலே கல்யாணத்தை நினைத்து தீராத மன உளைச்சல் வந்து சில நேரங்களில் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு உங்களுக்கே தெரியலை, நீங்க வாலிப புள்ளை இல்லை ஒரு வயசாளி என்கிற உண்மையை ஏத்து கிட்டா எல்லாமே சரியாகிவிடும் .

அன்று சாலையிலே நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது, வண்டியை நிறுத்தி விட்டு என்னிடம் வந்த ஓட்டுனர்

"கிழ பாடு, அறிவு இல்லை, அதான் பச்சை லைட் எரியுதுல்ல, நீ பாட்டுக்கு உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி நடந்து வார, சாகனுமுனு நினைச்சா பின்னாடி தண்ணி லாரி வருது அதிலே விழு" என்று அவன் கோபமாக பேசிய அனைத்தும் உண்மை.

மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்ததும் இதயம் வெற்று இடமாக இருந்தது.என்னை ௬ட்டி கொண்டு வந்த அலுவலக நண்பன் வெளியே இல்லை, அருகே இருந்த பெஞ்சிலே அமர்ந்தேன் தூரத்திலே நடந்து வரும் உருவங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தது, விரைவிலே ஒரு நல்ல கண் மருத்துவரை பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.


Monday, October 19, 2009

மனித வள மேம்பாட்டு துறை

இந்தியாவிலே மனிதவள மேம்பட்டுதுறை இருக்கிறதா என்கிற சந்தேகம் இருக்கும், ஆனா மென்பொருள் துறையிலே அலுவலகத்தின் நடுநாயகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவங்க இல்லைனா அலுவலக நிர்வாகமே ஆட்டம் கண்டு விடும்.


இப்படிப்பட்ட இமாலய சவால்களை கொண்ட துறை பணிக்கு சொல்ல தேவை என்ன, நாக்கை நாலு திசையிலே வளைத்து இங்கிலிபிசு குத்தால அருவி மாதிரி தடை இல்லாம பேசத்தெரியனும், அவங்க பேச்சை கேட்கும் போது வெள்ளைக்கார துரையும், துரைச்சியும் இவங்களுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாதமாதிரி இருக்கும். இங்கிலிபிசை யாருக்குமே புரியாத மாதிரி பேசிட்டா அந்த துறையோட மேலாளர் பதவி கண்டிப்பா கிடைக்கும்.

நம்ம அரசாங்கத்திலே 33 சதவீத இட ஒதுக்கீடு உறுதியா இருக்கோ இல்லையானு தெரியாது, ஆனா இந்த துறையிலே அழகான பெண்கள் 70௦ சதவீதக்கு மேல, ஏன் இந்த துறைக்கு அதிகமா பெண்களை தேர்ந்து எடுகிறாங்கனு பல வருசமா யோசித்ததிலே கிடைத்த மொக்கை தீர்வு தான் "ஆம்பளை மனசும் பொம்பளைக்கு தான் தெரியும்". அது மட்டுமில்லை அவங்களுக்கு இரக்கம், பாசம் இவைகள் எல்லாம் ஆண்களை விட ஒரு படி மேலன்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்.

இப்பேர்ப்பட்ட தெய்வீக குணங்கள் நிறைந்த அந்த துறையிலே யாருக்கும் நான் துண்டு போட்டதில்லை என்பதை துண்டை தாண்டி சத்தியம் பண்ணி சொல்லுவேன், போட்டாலும் எடுக்க மாட்டாங்க என்பது வேற விஷயம். சரி வழியிலே வந்த என் கதையை விட்டுட்டு வழக்காடுற கதைக்கு வருவோம்.அலுவலகத்தின் வேலைக்கு ஆள் எடுப்பு, அளவலகத்திலே களை எடுப்பு, அலுவலகவிதிகளை நிர்ணயம் செய்தல், அதாவது முதாலளிகளுக்கு நன்மை பெரும் விசயங்கள் மட்டுமே அதிலே இருக்கும்.


அவங்களுக்கென ஒரு பத்து உலகத்தரமான கேள்விகள், அது நீங்க எந்த அலுவலத்திருக்கு போனாலும் மாறாது.இந்த கேள்வியை தான் ஒருவர் அலுவலத்திலே சேரும்போது கேட்ப்பாங்க, இந்திய உளவுத்துறை ௬ட இந்த மாதிரி ஒருத்தரோட உளவியலை கேள்விகேட்டு சோதிக்க முடியாமான்னு ஒரு சந்தேகமே, ஆனா அவங்க கேட்கிற கேள்வியிலே நம்ம உள்ளத்திலே இருக்க்கிறது எல்லாம் குடலை பிச்சிகிட்டு வெளியே வந்துவிடும்.தொழில் நுட்ப கேள்விகளை விட எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும் இவர்களில் கேள்விகள், அதிலே முக்கியமா என் உங்க அலுவலகத்தை விட்டு வாறீங்க, இந்த உலகத் தரம் கேள்விக்கு நாம சொல்லுற பதிலே நம்ம வரலாறை எடுத்து வாசப்படியிலே வைத்துவிடும்.நாங்க பெரிய இடம், எங்க அலுவலகம் ஆணியே இல்லாம ஆணி பிடுங்குவோம், அதனாலே உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தரமுடியாது, சம்பள விசயமே மாட்டு வியாபாரி மாதிரி போகும்,உள்ளூர் சந்தையிலே துண்டை போட்டு விலை பேசுவாங்க, ஆனா இங்கே குளுகுளு அறையிலே நாற்காலி போட்டு உக்கார்ந்து விலை பேசுவாங்க.சேரும் போதே எவ்வளவு பேரம் பேசி சந்தையிலே விலையை ௬ட்ட முடியுமோ அது சேருபபர்கள் திறமையை பொறுத்தது, அதை தவற விட்டுட்டா வானம் பார்த்த பூமி மாதிரி வருஷ வருஷம் நம்மளோட திறமையை நிருபித்து விட்டு எப்ப சம்பள உயர்வு வருமுன்னு இலவு காத்த கிளி மாதிரி இருக்கவேண்டிய வரும்.அலுவலகத்தோட வியாபாரம் நல்லா இருக்கிற வரைக்கும் எல்லோருக்கும் இருக்கிற இடமும் மாத செலவுக்கு சம்பளமும் வரும்.பத்திரிக்கைகள் உலக பொருளாதாரம் சரியும்னு ஒரு வரி செய்தி சொன்னாலே போதும் மென்துறை மனித வள மேம்பட்டுதுறை முன்னே இருந்ததை விட இரண்டு மடங்கு சுறுசுறு ஆக வேலை செய்யும் களை எடுப்பு வேலைகளை ஆரம்பித்து முதலாளி வளம் மேம்படுறதிலே மும்மரமாக வேலை செய்வார்கள்.பொருளாதார தேக்கத்தை காட்டி நீக்கப்படும் பொட்டி தட்டிகளுக்கு சாதகமான விதிமுறைகள் மீண்டும் எந்த காலத்திலேயும் உயிர்பிப்பதில்லை, அது கடலிலே விழுந்த கல்லை போல காணாம போய்விடும்


இவ்வளவு நல்ல மொக்கைக்கு கொடி பிடித்த நீ இப்ப சிகப்பு கொடிய பிடிச்சிட்டு எந்த கோட்டைய பிடிக்க போறன்னு யாரவது நினைத்தா, அதுக்கு என்னிடம் பதிலே இல்ல. மனித வள மேம்பாட்டுதுறை ஒரு தன்னிச்சையா இயங்க வேண்டிய பிரிவு, முதலாளிமார்கள் அமெரிக்க டாலர், யூரோ நோட்டுகளை கட்டு கட்டாக என்னும் போது இருக்கிற சந்தோசம், அந்த பணத்தின் கட்டுகள் எண்ணிக்கையிலே குறையும் போது, அது அவர்களில் வளர்ச்சியை கட்டுப்படுத்தாது,அவங்க சேர்த்து வைத்த பணம் கடல் மண்ணைப் போல அரித்து சொல்லாது, இந்தியாவுள்ளே இருக்கிற இமயமலை மலை மாதிரி உறுதியா இருக்கும் என்கிற நம்பிக்கையை ஊட்டி அந்த பெரிய பூனைகளுக்கு மணியை கட்டினால் துறை எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும்.


ஒரு தலை காதல்

அடியே என் புத்தகத்திலே ஒரு காதல் கடிதம் இருக்கு, அது யாருக்கு எழுதி இருக்கே?, உன் மனசை களவாண்டுட்டு போன கள்ளப்பய யாரு?

கள்ளப்பய இல்லை கள்ளி

என்னது கள்ளியா?

ஆமா அவ ஒரு பொண்ணு தான்

அடியே உனக்கு எல்லாம் கள்ளிப் பால் கொடுத்திருக்கணும்.

இதுக்கே இப்படி சொன்னா எப்படி, அந்த கள்ளி யாருன்னு தெரிஞ்சா?

யாரு அந்த அரை லூசு?

நீயே தான், என் உள்ளம் கவர்ந்த கள்ளி, நான் உன்னைத் தான் காதலிக்கிறேன்.

அடி செருப்பால கழுதை, என்ன வார்த்தை சொல்லுற, நீ சொல்லுறதை கேட்டாலே வாந்தி வருது.

அதுக்குள்ளேயும் வாந்தியா!!!

உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லை .

இது விளையாட்டு இல்லை, வினைதான், உன்னோட அன்பு, இரக்க குணம்,பராமரிப்பு எல்லாம் பார்த்து உன் மேல ஒரு ஈர்ப்பு வந்தது, அதற்கு ரெம்ப நாள் விடை தெரியாமல் இருந்தேன், இப்பத்தான் விடை கிடைத்தது, அது காதல்னு

என்னவோ வடை கிடைச்ச மாதிரி சொல்லுற , உன்னை எல்லாம் பிஞ்ச தொடப்பம் எடுத்து அடிக்கணும்.

உன் கையாலே அடியேன், அதை விட சுகமான விஷயம் வேறு ஏதும் இல்லை.

உனக்கு கிறுக்கு பிடிச்சி போச்சு.

காதல் கிறுக்கு இது, இப்பத்தான் நம்ம ஊரிலே ஓரின சேர்க்கையப் பத்தி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள், இவங்க கரை சேர இன்னும் ஒரு நூறு வருசமாவது ஆகும், அதனாலே நாம அமெரிக்காவிற்கு போகலாம்.

அடியே அமெரிக்கான்னா அவுத்து போட்டு ஆடுறதும், ஆம்பளையும் ஆம்பளையும், பொம்பளையும், பொம்பளையும் கல்யாணம் முடிகிறது தானா எல்லோருக்கும் தெரியும், அவங்ககிட்டேயும் நிறைய நல்ல குணங்கள் இருக்கு, அதெல்லாம் உனக்கு தெரியலையா, சட்ட திட்டங்களுக்கு கட்டுபடுறது,அடுத்தவங்களை மதிக்கிறது, இப்படி பல விசயங்கள் இருக்கு.செய்யுற வேலைக்கு கையூட்டு வாங்காம இருப்பது

அதையேதான் நானும் சொன்னேன்,அங்கே போய் சட்டப்படி நாம நடப்போமுன்னு

அறிவு கெட்டவளே எனக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கானு உனக்கு நல்லாத்தெரியும்.


ஒருத்தன் ரெண்டு பேரையோ , ஒருத்தி ரெண்டு பேரையோ காதலிப்பதும், கல்யாணம் முடிப்பதும் தான் தப்பு, ஒருத்தி ஒருவனையும், ஒருத்தியையும் காதலிப்பதோ கல்யாணம் முடிப்பதோ தப்புன்னு சொல்ல நம்ம ஊரிலே சட்டமே கிடையாது.நீ அவனையும் கட்டிக்கோ, என்னையும் கட்டிக்கோ, அவனுக்கு நீ பொண்டாட்டி, எனக்கு புருஷன்.


அடிக்கடி இந்தி படம் பார்க்காதேன்னு சொன்னா கேட்டியா?


இது இந்தி படத்தாலே வந்த வினையல்லை, என் இதயத்தாலே வந்த வினை, என் இதயத்துடிப்பை கேளு அது உன் பேரை மட்டுமே சொல்லும்.


அப்படியெல்லாம் சொல்லி இருந்தா உனக்கு சங்கு ஊதி பல வருஷம் ஆகி இருக்கும், சும்மா இருக்கிற இதயத்தை எதுக்கு பரண்டி பேன் பார்க்க.


என் காதலோட வலி தெரியலை. நீ மட்டும் இன்னைக்கு ஒரு முடிவு சொல்லலை என் முடிவு மரணத்தின் பிடியிலே கொடுத்திடுவேன், இது என் தெய்வீக காதல் மேல சத்தியம்.

உன்னையை புதைக்கணுமா, எரிக்கனுமான்னு சொல்லிட்டு சாவு.

"படம் எடுக்கிறதை நிப்பாட்டு, இல்லைனா இங்கே கொலை விழும். "
இப்படி காதாநாயகன் கோபத்திலே கத்தினதும் எல்லாம் நின்று விட்டது, இப்படிபட்ட இருளடைந்த சூழ்நிலையை சமாளிக்க ஒளிப்பதிவாளர் "டைரக்டர் நசரேயன் இன்னும் கட் சொல்லலை ஹீரோ, அவரு சொல்லட்டும்,நீங்க சொல்லுற வேகத்திலே ஆளையே கட் பண்ணப்போற மாதிரி இருக்கு" . உடனே நசரேயன்

"கதாநாயகரே
, இன்னும் உங்க அறிமுகம் இந்த காட்சியிலே வரலை"

இதைத்தானே கடந்த மூனு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கே, நானும் இப்ப வரும், அப்ப வருமுன்னு காவேரி தண்ணி மாதிரி காத்து கிட்டு இருக்கேன் , இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும் கதையிலே நான் இருக்கேனா இல்லையா?

ஐயா கதை உங்களை சுத்தியே தான் வருது, அதனாலே தான் நீங்க கதாநாயகன்,இந்த காட்சியிலே ௬ட பாருங்க, கதாநாயகி உங்களை தான் காதலிக்கிறதா சொல்லுறாங்க,கதையோட கருவே நீங்க தான்.

ஒ...அதனாலே தான் இன்னும் என் மூஞ்சியே காட்டலையோ?, இனிமேல என்னால பொறுமையா இருக்க முடியாது, நான் இந்த கட்சியிலே வந்தே ஆகணும், காதாநாயகி என்னை காதலிகிறேன்னு சொன்னதும் ஒரு குத்து பாட்டு போட்டே ஆகணும், இந்த காட்சி முடிஞ்சதும் இன்னொருத்திக்கு கனவு வரணும், அங்கேயும் ஒரு காதல் பாட்டு. இதுக்கு சம்மதமுனா நான் படத்திலே நடிக்கிறேன். இல்ல இப்பவே வணக்கம் போட்டுட்டு வீட்டுக்கு போறேன்.

"ஏலே இங்கே என்னவே பிரச்சனை"ன்னு ஒரு குரல் வந்த திசையை நோக்கி யாரும் பார்க்கவில்லை, அது தயாரிப்பாளர்னு எல்லோருக்கும் தெரியும், எல்லோருடைய முகத்திலேயும் சந்தோசம் பிரகாசமா இருந்தது, இன்னைக்கு கண்டிப்பா பேட்டா காசு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலே.

வீட்டுக்கு புறப்பட்ட கதாநாயகன் வேகமா தயாரிப்பாளர்ட்ட போய் "அண்ணாச்சி டைரக்டர் நசரேயன் பொம்பளையும், பொம்பளையும் காதலிக்கிற மாதிரி சொல்லுறாரு, நான் ஆம்பளையும் பொம்பளையும் காதலிக்கிறது மாதிரி சொல்லுறேன்.

"எதுக்குவே உமக்கு வடக்கூர்கார பெயலுவ மாதிரி புத்தி கூறு கெட்டுப் போகுது, நம்ம ஹீரோ சொல்லுறதை கேளும்."

"
அண்ணாச்சி கதைஈஈஈஈஈ "

"
யோவ் விளக்கெண்ணை நான் போட்ட காசை பத்தியே கவலைப் படலே, நீ என்னவோ, உன்னாலே முடியலைன்னா சொல்லு"

அண்ணாச்சி உங்க பேச்சுக்கு மறு பேச்சு இல்லை, இப்பவே கதையை மாத்திடுறேன், இந்த காட்சியிலே முத வார பொம்பளைக்கு பதிலா ஆம்பளைய போட்டுடலாம்,ரெண்டாவது வாய் அசைச்சவா, அப்படியே அசைக்கட்டும்

ஏன் அவ ஊமையா படத்திலே?

அண்ணாச்சி அவ பாம்பேகாரி,அவ காட்சியோட கடைசியிலே வாய் அசைத்து முடிச்சிட்டு பூச்சி மருந்து வாங்கி குடிச்சி காதல் தோல்வியிலே தற்கொலை பண்ணி சாகிறமாதிரி முடிச்சிடலாம்.

அப்ப என் குத்து பாட்டு என்னாச்சி?

அண்ணாச்சி இப்படி சோகம் நெஞ்ச பிடிச்சிகிட்டு இருக்கையிலே, பாட்டு வச்சா நல்லா இருக்காது, நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

கதாநாயகரே, டைரக்டர் சொல்லுறதும் சரிதான், தியேட்டர்ஜனங்க ஏங்கி ஏங்கி அழும் போது பாட்டு வச்சா எழவு வீட்டிலே குத்தாட்டம் மாதிரி இருக்கும்.

அண்ணாச்சி சோறு தண்ணி இல்லாம கதாநாயகி கைய பிடிக்கணுமுன்னு கடுந்தவத்திலே காத்து கிடக்கிறேன்.பெரியவங்க நீங்க எதாவது பாத்து செய்யுங்க.எழுத்திலே காதாநாயகன்னு போடலைனாலும் பரவாயில்லை, இந்த குத்தாட்டதிலேயாவது கதாநாயகனா இருந்திட்டு போறேன்.

உன்னை பார்த்த ரெம்ப பாவமா இருக்கு, டைரக்டர் அவ செத்த உடனே ஆவி கனவு காண்கிற மாதிரி ஒரு காதல் பாட்டு வை, உலகத்திலே ஆவி டுயட் பாடுற மாதிரி உள்ள ஒரே படம் நம்ம படம்.பாட்டு முடிஞ்ச உடனே
"
வாழும் வரை கிடைக்காதது , வாழ்ந்த பின் கிடைத்தது" ன்னு போட்டு படத்தை முடித்து விடலாம்

நீங்க சொன்னா சரிதான், உங்களோட அடுத்த படத்துக்கு கதை ஆசிரியர் தேவை இல்லை