Thursday, September 23, 2010

காமினி (சவாலில் வெற்றி பெற்ற கதை)

சென்னை பன்னாட்டு முனையம் பரபரப்பாக கோயம்பேடு தினசரி சந்தை போல இயங்கிக் கொண்டு இருக்கிறது, நிலம் இருந்தா இன்னும் சர்வதேச தரத்துக்கு வருமுன்னு நான் சொல்லுறதாலே உடனே கட்சிக்காரங்க எல்லாம் சொம்பை கீழே வைக்கப் போறதில்லை, அதனாலே நம்ம ஊரு விமான நிலையத்தை அது போக்கிலே விட்டு விட்டு நாம வந்த வேலையைப் பார்க்கலாம். இந்த பரபரப்புக்கு இடையே முதல் இரண்டு எழுத்து இல்லாமல் "சவத்துக்கு இலவசம்" என்று எழுதப் பட்ட ஆட்டோவிலே இருந்து கதையோட நாயகனோ, நாயகியோ இறங்கலை, அதனால அறிமுகப் பட்டு எல்லாம் கிடையாது.

இறங்கின மூணு பேரும் அமெரிக்காவுக்கு போகலை இருந்தாலும், அவர்களோட முழு கால் சட்டையை முட்டிக்கு மேல மடித்து விட்டு இருந்தார்கள், அவர்கள் அணிந்து இருந்த காலுறை வெவ்வேறு நிறங்களிலே இருந்தது. இறங்கியதும் இல்லாத ஆட்டோ மீட்டருக்கு பேரம் பேசி ஒருவழியாக ரூபாயை கொடுத்து விட்டு கிளம்பும் முன் ஆட்டோ ஓட்டுனர்

"ஏன் தம்பிகளா முழு பேன்டை மடிச்சி வச்சி இருக்குகீங்க, கால்ல என்ன சிரங்கா?"

"நாங்க முத முதல்ல பேன்ட் போடுறோம், லுங்கி கட்டுன பழக்கத்திலே மடிச்சி விட்டு இருக்கோம்"

"நீங்க கொண்டு வந்த அட்டையைப் பிடிங்க" என்று அட்டையைக் கொடுத்தார், அவரிடம்

"அண்ணே இந்த அட்டையிலே என்ன பேரு எழுதி இருக்குன்னு சொல்லுங்க."

சவத்து சட்டின்னு எழுதி இருக்கு, கேட்டவுடன் மூவரும் ஒரே நேரத்திலே அப்படி ஒரு பேரா!!!!

"ஆமா ஒருபக்கத்திலே அப்படி இருக்கு, இன்னொரு பக்கத்திலே காமினின்னு எழுதி இருக்கு"

"ஏன்ணா ரெண்டு பேரு வச்சி இருக்காங்க?"

"நாணயத்துக்கு ரெண்டுபக்கம், இந்த அட்டைக்கும் ரெண்டு பக்கம் நீங்க கொடுத்த காசுக்கு அவ்வளவு தான்னு" சொல்லிட்டு போயிட்டாரு.

"ஏல செவனு எத்தனை மணிக்கு இந்த சவம் வருது" ன்னு கேட்டதும் செவனு "ஏல என்னைய பொது இடத்திலே செவனு சொல்லாதே "சிவா" ன்னு சொல்லு அப்படித்தான் சொல்ல சொல்லி இருக்காங்க.

"சரி மாப்பு, வா போகலாம் ஜனங்கள் வருகிற இடம் போகலாம்"

அவர்கள் மூவரும் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களை நோக்கி ஒரு அழகிய பெண் வந்தாள், அவள் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே அவர்களிடம் "நான் தான் சவத்து சட்டி" ன்னு சொன்னதும், எல்லோரும் விறைப்பாக வணக்கம் வைத்து "உள்ளேன் அம்மா" என்றனர், நீங்கதான் வில்லன்களா என்றதுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் தலையை சொரிந்து பேன் எடுத்துகொண்டு இருக்க, உடனே அவள்

"வந்து சேருங்க பக்கிகளா" என்று முன்னால் சென்றாள்.

அவர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், சுமோ ஒன்று அவர்கள் பக்கத்திலே வந்து அதன் கண்ணாடி இறங்கி அதிலே இருந்த ஒரு பெரியவர் "டேய் சீக்கிரம் வண்டியிலே இருங்க", நால்வரும் ஏறிக்கொள்ள வண்டி புயல் வேகத்திலே பறக்க நினைத்தாலும் இருந்த போக்குவரத்து நெரிசலிலே ஆமையாய் ஊர்ந்து வண்டி சிறு சேரியை அடைந்தது,நால்வரும் பெரியவருடன் ஒரு வீட்டு உள்ளே சென்றனர்.

"போகும் வழியிலே எங்க அந்த பரந்த ஆமை ஆளை காணும்" இந்த கேள்வியைக் கேட்டு திரும்பிய பெரியவர் தன்னோட தலையிலே இருந்த ஒட்டு முடியை எடுக்க, மூவரும்

"ஏய் மாப்ள நம்ம தொந்தி மாமா, முடிய எடுத்தும் பத்து வயசு குறைஞ்சி போச்சி"

"கட்டையிலே போற வயசுல உமக்கு இது தேவையா?" என்று காமினியும் சேர்ந்து கொண்டாள். வீட்டுக்குள்ளே சென்றதும் பரந்த ஆமை என்று அன்போடு அழைக்கப்பட்ட பரந்தாமன், காமினியிடம்

"டைமைன்ட் எங்க?"

"என்னது டைய மண்டனுமா?, என்கிட்டே வெளிநாட்டு சரக்குதான் இருக்கு, அதை வேண்ணா மண்டுங்க" ன்னு சொல்லி முடிக்கும் முன்னே மூவரும் பாட்டிலை வாங்கி கவுத்து விட்டார்கள். காலியான சரக்கு பாட்டிலை பரந்தாமனிடம் கொடுத்தார்கள்.

"எப்படி காமினி இது நடந்தது?"

சொல்லுறேன் என்று விமானத்திலே நடந்ததை நினைவு ௬ர்ந்தாள், விமானம் பத்தாயிரம் அடி உயரத்திலே பறக்கும் போது,தான் அருகிலே வந்த பணிப் பெண்ணிடம் "வெளி நாட்டு சரக்கு இருக்கா?", அந்த கேள்வியை காமினியிடம் இருந்து எதிர் பார்க்காத பணிப்பெண் பார்த்த பார்வைக்கு பதிலா "

"சரக்கு ஆம்புளைங்க மட்டும் தான் அடிக்கணுமுன்னு எழுதியா வச்சி இருக்கு, என்னையப் பார்க்கம சரக்கை எடுத்திட்டு வாங்க" என்றதும் சரக்கு வந்தது, வந்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் மறுபடியும் கேட்டாள், பணிப்பெண் மீண்டும் எடுத்து வர, அவளிடம்

"உங்க கிட்ட என்ன காவிரி தண்ணியையா கேட்டேன், சொட்டு மருந்து மாதிரி கொடுக்குறீங்க, நூறு மில்லி கொடு" என்றாள் காமினி, கேட்டது வரவும், அடுத்த அரை மணி நேரத்திலே மீண்டும் கேட்டு வாங்கினாள். வாங்கிய அனைத்தையும் பெப்சி கலந்த பாட்டிலே அடைத்து கொண்டாள், கடைசியாக வாங்கியதை மட்டும் விமான கழிவறைக்கு சென்று ஊத்திவிட்டாள். இப்படித்தான் சரக்கை ஆட்டைப் போட்டேன்.

"பக்கி நீ சரக்கை ஆட்டையப் போட்ட கதையைக் கேட்கலை டிமைன்ட் ஆட்டயப் போட்ட கதையச்சொல்லு."

"யோவ் அது என்ன மண்டு, தமிழ்ல சொல்லு"

கோபத்திலே "வைரம்டி வைரம்"

"வைரமா.........." அதிர்ச்சியிலே விழுந்தாள் காமினி.

"யே... கிறுக்கச்சி இப்படி விழக்௬டாது"

"எப்படி?"

வசனத்தை நல்லா கவனி

" டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்"

"முக முடியை எடுக்கலை, டாக்டர் இல்லை, சும்மா விழுந்தா விதியிலே வராது, ஆட்டைக்கு சேர்க்கமுடியாது"

ஒ அப்படியா என்று யோசித்த காமினி

"யு டாக் யு டர்?"

"என்ன என்ன ?"

செவனு நீ பேசு, கருப்பு நீ அவன் பேண்டை டர்.. டர்.. ன்னு கிழி. அதுதான் டாக்டர்.

"பேன்ட் கிழிஞ்சி போச்சினா?"

கோவணமா கட்டிக்கோ, இப்ப சொன்னதை செய், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே பேண்டை கிழித்ததும், காமினி முகத்திலே இருந்த முகமுடியை கழட்டி விட்டு, இழைகளை பிடுங்கினாள்.அவள் கழட்டுவதை நால்வரும் கண் அசராமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கழட்டி ஒரு நிமிடம் வரை எதுவும் அசையாமல் இருந்த நிலையிலே நால்வருக்கும் தான் வைத்து இருந்த பட்டை சரக்கை வாயிலே ஊற்றினாள். அனைவரும் மீண்டும் நினைவுக்கு வர செவனு மட்டும்

"யோவ் பரந்தாமா நல்லா பாத்தியா வசனத்திலே முகமுடியை மட்டும் தான் கழட்ட சொல்லி இருக்கா, இன்னும் வேற எதையும் கழட்ட சொல்லலையா?" உடனே காமினி

"யோவ் இங்க எங்க பிட்டு படமா எடுக்காங்க, இது குடும்ப படம், இருந்தாலும் ஆசைப் படுறீங்க, என்னோட மேலாடையும் கழட்டுறேன், ஒரே நேரத்திலே எல்லோரும் வேண்டாம் ... வேண்டாம் என அலறி கண்ணை முட, அதற்குள் காமினி கண்ணாடி சன்னலை தாண்டி வெளியே குதித்தாள்(கடமை ஆத்த) . மேலாடையை தவற விட்டாலும் அவள் வெட்கப் படாமல் நடந்து வெளியே சென்றாள், இதுவரை பெண்ணாக உடை அணிந்து நடித்த மதன். அறையின் உள்ளே மதன் விட்டு சென்ற மேலாடையை எடுத்து வைத்து கொண்டு மதன் என்ற காமினியைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். அதற்குள் காவல் துறையும் அவர்களைத் தேடி வந்து சுற்றி வளைத்து கைது செய்தது.

காவல் நிலையத்திலே உடைந்து அடுக்கிய குச்சிகளை காவல் நிலைய அதிகாரி வீட்டுக்கு அடுப்பு எரிக்க, நிலைய காவல் தொழிலாளி எடுத்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார், அலுவலக அறையிலே

"ஐம்பது கம்பு உடைஞ்சி போச்சி, ஆனா இன்னும் ஒரு தகவலும் இல்லை.அவங்க கிட்ட பேசினது ஒரு பெண், ௬ட இருந்தது ஒரு பெண், அதைத்தவிர வேற ஒண்ணும் தெரியலை, இவங்களுக்கு கொடுக்கிறதா சொன்ன பத்தாயிரமும் இன்னும் வரலையாம், அவளை கண்டு பிடிச்சா வாங்கி கொடுங்கன்னு சொல்லுறாங்க" என்று காவல் அதிகாரி புலம்பினார்.

இதே நேரத்திலே மதன் விமானப் பணிப்பெண் தங்கும் விடுதியின் வெளியே காத்து கொண்டு இருந்தான்,அடுத்த ஐந்து நிமிடத்திலே நிஜ காமினி வெளியே வந்தாள்

"யாரும் சந்தேகப் படலையே!!!!!"

"நான் போட்டு இருக்கும் உடையையும், முகச்சாயத்தையும் பார்த்து உண்மையான விமான பணிப்பெண் என்று காவலாளி நினைத்து விட்டான், உள்ளே போனதும் பத்து நிமிசத்திலே வேலை முடிந்தது" என்று சொல்லி மதுகோப்பையை வெளியே எடுத்தாள்.

"என்ன காம்ஸ் சரக்கு அடிக்கப் போறியா?"

"இந்த பாட்டிலை வச்சி நாலுகோடிக்கு சரக்கு வாங்கலாம், இப்ப சொல்லு என்னோட திறமை எப்படி?"

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் மதன் என்ற சிவா.

"என்னடா சிவா திடிர்னு இப்படி, இப்ப நான் என்ன செய்ய?"

"கடமை ஆத்தணும் காமினி, அதான் இப்படி, நீ இந்த துப்பாக்கியை கடிச்சி சாப்பிடு, இது சாக்லேட் துப்பாக்கி" அவள் சாப்பிட்டு முடித்ததும் சிவா

"நீ ரெம்ப திறமை சாலிதான், விமானத்திலே சரக்கை ஆட்டையப் போட்டு, அவங்க கொடுக்கிற கிண்ணத்திலே வைரத்தை மறைத்து வைத்து, அதிலே ஒரு கருவியும் இணைத்து வைத்து விட்டு அதை விமானப் பணிபெண்ணின் கைப் பையிலே வைத்து விட்டு விமான நிலைய சோதனை அதிகாரிகளிடம் இருந்து தப்பி விட்டாய்"

"ம்ம்ம்ம் .. நீ என்ன பண்ணின"

"உன்னைய மாதிரி வேஷம் போட்டு காவல்துறையையும், தற்காலிகமா சேர்த்த ஆளுங்களையும் ஏமாத்தினேன்"

"நீயும் புத்திசாலிதான்"

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் சிவா என்ற பரந்தாமன்."

"மறுபடியும் கடமை ஆத்துற வசனமா ?"

"ம்ம்"

"இன்னும் ஏதும் இருக்கா?"

"இல்ல இதுதான் கடைசி, இனிமேல வீட்டுக்கு போய் டீ ஆத்தலாம்"

"கடைசி வரைக்கும் என்னோட் கடமை இன்னும் முடியலை, அதை நீ ஆத்தவும் இல்லை" என்னவென்று கேட்டவனின் காதிலே சொன்னாள்.

"ஆணுக்கு, பெண் என்றைக்கும் சளைத்தவள் அல்ல"

"ம்ம்ம்ம்... உண்மை" என்று இருவரும் சிரிப்புடன் சென்று கொண்டு இருந்தனர்.


Monday, September 20, 2010

நீலச்சிலுவை சங்கம்

நீலச்சிலுவை சங்கம் என்று ஒன்று இருப்பதே எனக்கு ஏழு கழுதை வயசு ஆகும் வரை தெரியாது, ஊரிலே குரைக்கிற நாயை கல்லை கொண்டு எறியுறதும், ஓடுற நாயை கட்டையை கொண்டு அடிக்கிறதும் தான் தலையாய கடமையாக இருந்தது கொஞ்ச காலத்துக்கு, அப்ப எல்லாம் எனக்கு வேலை வெட்டி இல்லாம (இப்ப மட்டும் என்ன) நல்லா இருந்த சுவரிலே உட்கார்ந்து குட்டி சுவர் ஆக்கிக்கொண்டு இருந்தேன்.

நான் பத்திரிகை செய்திகள் படிக்க ஆரம்பித்த போது சிந்துபாத் கதையை ஆர்வமாக படிப்பேன்,கொஞ்ச காலத்திலேயே கதை எப்ப முடியும் என்று அருவருப்பாய் பார்ப்பேன், அந்த நேரத்திலே என் கண்ணிலே பட்டது இந்த நீலச்சிலுவை சங்கம்.சங்கம் என்றாலே மனதிலே பயம் வந்துவிடுகிறது.விலங்குகளை காப்போம் என்று இவர்கள் கொடுக்கிற பேட்டிகளை கண்டு அடி கலங்கித்தான் போய்விட்டேன்.அதன் பின் கொஞ்ச நாளைக்கு நாய் கடிக்க வந்தாலும், நானும் நாய் மாதிரி குரைச்சி தப்பிச்சி ஓடிடுவேன், நாய் அடிச்சா சங்கத்திலே இருந்து என்னை கைது பண்ணிடுவாங்க என்ற பயம் தான் காரணம்.

சில சமயங்களிலே அவங்க சங்கத்திலே இருந்து நாங்க காப்பாத்திய விலங்குகள் என்று படம் போடுவாங்க, அந்த படத்திலே எல்லாம் சடை வச்சி நாய்க்குட்டி, இல்லைனா மீசை வச்ச கருப்பு, நீல நிற பூனை  குட்டிகள், நானும் அந்த மாதிரி நாயும் பூனையும் ஊரிலே இருக்கிறதா என்று நாயா அலைந்து பார்த்து கால் தேய்ந்ததே மிச்சம். சில சமயம் நாய்களை நகராட்சி வண்டியிலே வந்து அள்ளிப் போட்டுட்டு போவாங்க, சட்டம் தன் கடமையை செய்கிறதோ இல்லையோ, சங்கம் தன் கடமையை செய்கிறது என்று நினைச்சுக்குவேன். அந்த நாய்கள் எல்லாம் புகைப் படத்திலே வருதான்னு தினமும் பத்திரிகை செய்திகளைப் பார்ப்பேன், அந்த நாய்களும் திரும்பி வராது, பத்திரிக்கையும் படம் போடாது, கொஞ்ச நாள் கழிச்சி மறுபடியும் வண்டி வரும் நாய்களை அள்ளிட்டு போகும்.

விவரம் தெரிஞ்ச ஒருத்தரிடம் விசாரித்தேன், இந்த நாய்களை எல்லாம் எந்த காப்பத்துக்கு கொண்டு போறாங்கன்னு, அவர் சொன்னார் அவைகளுக்கு நகராட்சி செலவிலே குடும்ப கட்டுப்பாடு பண்ணி, கொள்ளி வைப்பாங்கன்னு சொன்னார். நீலச்சிலுவை அமைப்பை பத்தி சொன்னேன், அதெல்லாம் துட்டு அதிகமா வச்சி இருக்கிற மாநகர பணக்காரங்களின் சமுக சேவை, அவங்க சேவை மாநகரம் தாண்டாது. 

சரக்குக்கும்  தண்ணிக்கும்  வித்தியாசம் தெரியாத வயசிலே இருந்து, தண்ணியும்,சரக்கும்  கலந்து வைத்த பாட்டிலே சரக்கை மட்டும் உரிய தெரியும் வயசு வந்த உடனே, நீலச்சிலுவை பத்தி ஆராய்ச்சி செய்ய ஆராம்பித்தேன், மணி அடிச்சிருச்சின்னா அது இடுகையாகிடுமுன்னு அவங்களுக்கு தெரியாது. இப்ப தெரிந்து இருக்கும் ஆராய்ச்சியின் சக்தி என்னவென்று,அதாகப்பட்டதாவது இந்த சங்கத்தோட நோக்கம் என்னவென்றால் எனக்கு தெரிந்த வரைக்கும் நாய்க்கும், பூனைக்கும் சொம்பு அடிக்கிறதுதான், அதும் எப்படி பட்ட நாய், பூனை ன்னு நல்லா பார்த்தீங்கன்னா தெரியும்,அந்த நாய் ஜெர்மன் நாயா இருக்கும், பூனைக்குட்டி அமெரிக்காவிலே 
இருந்து வந்து இருக்கும். 

நம்ம ஊரு தெருவிலே எம்புட்டு நாய் இருக்கு என்னைக்காவது ஒரு நாள் அதிலே ஒண்ணை கையிலே எடுத்து வச்சி புகைப்படம் எடுத்து பத்திரிக்கையிலே போட்டு இருப்பாங்களா,வீட்டிலே கோழி பிரியாணி, ஆட்டு இறைச்சி பிரியாணி சாப்பிட்டு கையிலே நீல நிறத்திலே பச்சையை குத்திட்டு, நாம் விலங்குளை காப்போப்போன்னு ஊரு ஊருக்கு போய் சொம்பு அடிக்கிறது என்ன நியாயம்.இந்தியாவிலே எல்லோரும் செல்வச் செழிப்பா இருக்காங்க, இந்த நாயையும், பூனையும் காப்பாத்த ஆளே இல்லையேன்னு, யாரு அவங்க காலிலே விழுந்து கெஞ்சுனாங்களா, இப்படி எந்த வித கோரிக்கையும் இல்லாம, ஓடிபோய் வெள்ளைக்கார துரைமார்களின் நாய்க்கும், பூனைக்கும் சொம்பு அடிப்பதை, ஒரு வரிகாட்டாத இந்திய குடிமகன், தன்மானத் தமிழின் பார்த்தக்கொண்டு சும்மா இருப்பானா(போற போக்கிலே வந்துவிட்டது).

பூனைம், நாயும் தான் விலங்குகளா, பன்னி குட்டி, ஆட்டு குட்டி, கழுதை குட்டி 
எல்லாம் மனுஷன் வரிசையிலையா வருது.என்றைக்காவது எந்த ஒரு விலங்குகள் நல அமைப்போ ஒரு பன்னிகுட்டியோ, கழுதைகுட்டியோ காப்பாத்தி எங்க சங்கத்திலே வட்டியில்லா கடன் கொடுத்து இந்த கழுதையும்,பன்னியையும் வளர்க்கிறோம் என்று சொல்லிருப்பார்களா?, இவங்க உதாசீனப் படுத்தினதாலோ என்னவோ, என்னைய பல வருசமா வீட்டிலே கழுதை,பன்னின்னு திட்டுவாங்க, இந்த சங்கத்து மக்கள்  கழுதையும்,பன்னியையும் செல்லப் பிராணியா வளர்த்து இருந்தா இன்னைக்கு விவகாரம் இவ்வளவு தூரம் விபரிதம் ஆகி இருக்காது. எனக்கு கிடைத்த 
திட்டுகளாவது மிச்சம் ஆகி இருக்கும்,இந்த ஆராய்ச்சி இடுகையும் மிச்சம் ஆகி இருக்கும். 

ஐயா இந்த உலகத்திலே கேள்வி கேட்பது சுலபம், ஆனா பதில் சொல்லுவது எவ்வளவு கஷ்டம் என் போன்ற மாப்பிள்ளை விசுபலகை(பெஞ்ச்)( நான் ஒரு தமிழ் புலி) மாணவர்களுக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியிலே கேட்க  வேண்டியதை கேட்காமல் விட்டு விட்டானே இந்த மொக்கை எழுத்தாளன் என்று பின்னாளிலே ஒரு அபச்சொல் வந்துவிடக் ௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே நான் கேட்க்கிறேன், விலங்குகள் நல காப்பகம் என்று பெயர் வைத்துகொண்டு பூனைக்கும், நாய்க்கும் சொம்பு அடிப்பதற்கு பதிலா, உயர்தர நாய், பூனை நல காப்பகம் என்று பெயர் மாற்றினால் என்ன?
     
பெயர் மாற்றம் அறிவிக்க பட்ட அடுத்த வினாடியே இந்த இடுகை நீக்கப்படும் என்பதை தாழ்மையோட தெரிவித்து கொள்கிறேன். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.


Sunday, September 19, 2010

இல்லாத தொலைக்காட்சிக்கு பொல்லாத பேட்டி


தொகுப்பாளர் :இன்றைக்கு நம்ம மார்னிங் ப்ளோவர் ல சந்திக்கப் போறது சிறந்த சிறுகதை எழுத்தாளர், சீரிய ஆராய்ச்சியாளர், முற்போக்கு சிந்தனையாளர் என இப்படி எந்த ஒரு தகுதியும் இல்லாத சுயமோகப் பதிவர் நசரேயன்,அவரை  நமக்காக கருத்தாளமிக்க பதில்களை தர தயாராக உள்ளார், அவரை நாம் பேட்டி காண்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி.    

கேள்வி: கடந்த பத்துவருசமா அமெரிக்காவிலே இருக்குறீங்க, அங்க இருக்கிற கலாச்சாரம் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா? 

பதில்: நம்ம ஊரு படத்திலே வருகிற குத்துப் பாட்டுக்கு போடுகிற உடைகள் எல்லாம், அவங்களோட சாதாரண உடை, முத்தம் பார்க்க திரை அரங்கம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நடுத்தெருவிலே கொடுப்பாங்க, நாம நேரிலே பார்த்து கண்ணுக்கு விருந்து கொடுக்கலாம்

கேள்வி:  அமெரிக்க வாழ்க்கையை எப்படி தேர்ந்து எடுத்தீங்க?

பதில்: அமெரிக்க வரை படத்தை தலையிலே வச்சி தினமும் படுப்பேன், அவங்க பேசுற மாதிரி நாக்கை சுழட்டி சுழட்டி பேசுவேன், ரெம்ப கஷ்டப்பட்டேன், இங்கிலிபிசு சரியாப் படிக்கணுமுன்னு டுடோரியல் கல்லூரி எல்லாம் போய் படிச்சேன், என்னோட கடின உழைப்புக்கு பலன் இன்றைக்கு அமெரிக்க மண்ணை சட்டை பையிலே வச்சி சுத்திகிட்டு இருக்கேன்.அமெரிக்க மண்ணை எடுத்து சட்டையிலே போட்ட நேரம், சிங்கப்பூர், மலேசிய, பிரித்தானியா மண் எல்லாம் சட்டியிலே தன்னாலே வந்துவிட்டது.

கேள்வி :அமெரிக்காவிலே நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?

பதில் :சொல்லிக்கிற அளவுக்கு ஒண்ணும் பெரிய வேலை இல்லைங்க, காலையிலே பஸ்ல கும்மி, அலுவலத்திலே கடைகளிலே கும்மி, வீட்டு வந்து மறுபடியும் பஸ்ல கும்மி, கூகுளே ஆண்டவர் சரியா வேலை செய்யுறாரான்னு கண்காணிப்பதுதான் என்னோட முக்கிய வேலை.இந்த இடைவிடாத அடைமழை பணிகளுக்கிடையே சில மணித்துளிகள் அலுவலகவேலையும் செய்வேன். 

கேள்வி :பத்து வருடமா நீங்க அமெரிக்காவிலே இருக்கிறதாலே, உங்களுக்கு அங்கே இருக்கிற தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கு?

பதில் : வீட்டிலே தமிழ் மருத்துக்கு ௬ட பேசமாட்டோம், ஆனா தமிழ் பேசுகிறவர்களிடம் என் பையனுக்கு/பெண்ணுக்கு தமிழே தெரியாதுன்னு பெருமையா சொல்லுவோம், தப்பித்தவறி யாரவது வீட்டிலே தமிழ் பேசினா என்ன,ஆங்கிலம் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கிடைக்கிறதே என்ற கேள்விகள்  கேட்டா, அவங்க வீட்டு பக்கமே தலை வச்சி படுக்கிறதே இல்லை. 

கேள்வி :புலம் பெயர்ந்த தமிழர் களின் அரசியல் ஆர்வம் எப்படி இருக்கு ?

பதில் : கொஞ்சம் கொஞ்சமா களம் இறங்கிக்கிட்டு இருக்காங்க, அரசியல் கோனார் உரை எல்லாம் படிக்கிறாங்க, இன்னும் முழு விச்சிலே செயல் பட ஆரம்பிக்கலை, ஆனா வருங்கால சந்ததிகள் களத்திலே இறங்கி, தாய் நாட்டுக்கும், மாற்றான் தாய் நாட்டுக்கும் நிறையை சேவைகள் செய்வார்கள் என்ற அளவு கடந்த நம்பிக்கை இருக்கு. 

கேள்வி : வடை அமெரிக்காவிலே சங்கம் வச்சி தமிழ் வளர்க்கிறதாக கேள்விப்பட்டோம், அதை பற்றி கொஞ்சம் புளி போட்டு விளக்க முடியுமா?

பதில் : புளின்னதும் எங்க ஊரு ஞாபகம் வந்து விட்டது கண்ணுல தூசி விழுந்து விட்டது, அதன் கண் கலங்கி போச்சி, சரி .. நான் கேள்விக்கு வாறன், பஸ்,கடை இப்படி போற வார இடமெல்லாம் நிறைய கும்மி அடிப்போம், புது ஆள் வந்தா உள்ளேன் அம்மா/ஐயா சொல்லி வணக்கம் வைப்போம், அதுக்கு பதில் வணக்கம் வைக்க அவங்க வருவாங்க, அப்புறமா ஓட்டு போடுவோம், பதில் ஓட்டு போடுவாங்க, ஒரு ஏழு பேரு வந்த உடனே பிரபலம் ஆகி தமிழ் நல்லா வளர்ப்போம்.அதுமட்டுமில்லாம தெரிஞ்சவங்க, போற வாரவங்களிடம் மின் அஞ்சல் அனுப்பி வைப்போம், நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்து தமிழ் வளர்க்கிறோம். இதையெல்லாம் செய்ததினாலே எனக்கு கடந்த ஆண்டு கும்மி செயல் வீரர் என்ற பட்டம் கொடுத்தாங்க    

 கேள்வி : சங்கம் தான் தமிழ் வளர்ப்பின் அங்கம், நிறைய தமிழர்களை சந்திக்கலாம்,இங்க இருந்து போன தமிழர்களுக்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்களுக்கும் கலாச்சார மற்றம் என்ன?

பதில் : ரெம்ப சுலபமா பதில் சொல்லணுமுன்னா, நம்ம ஊரிலே பண்ணுற எல்லாத்தையும் தப்பு தப்பா பண்ணினா, அமெரிக்காவிலே அது சரியா இருக்கும், உதாரணமா நம்ம ஊரிலே இடதுபக்கம் ஓடுற வண்டி, அங்கே வலது பக்கம் ஓடும், கிலோ மீட்டரை மைல்னு சொல்லணும், சொல்சியசை,பாரன்ஹிட்னு சொல்லணும் அவ்வளவுதான். இங்க இட்லி சாப்பிடுறவங்க,அங்க பிஸா சாப்பிடுவாங்க,இங்க சட்டியிலே வைக்கிற கோழி கறி, அங்க வாளியிலே தருவாங்க. நம்ம ஊரிலே குத்துபாட்டு, தொடை ஆட்டம் எல்லாம் படத்திலே வரும், அங்க நீங்க சல்ஷா நடனம் ஆடிக்கிட்டு தொடை ஆட்டம் நேரிலே பார்க்கலாம்.  


கேள்வி:அமெரிக்கா போக வேண்டிய வழி முறைகள் என்ன ?

பதில்:ஒரு பெரிய விசயமே இல்லை, இந்தியப் பெருங்கடல் இருந்து கள்ளத்தோணி எடுத்து அட்லான்டிக் கடல் வழிய மெக்ஸிகோ வந்துட்டீங்கன்னா, அங்க இருந்து சுவர் ஏறி குதிச்சா அமெரிக்கா தான், அப்படியும் இல்லைனா யாரைவது பிடிச்சி சுற்றுலா விசா எடுத்து அமெரிக்கா வந்து இறங்கனும், வந்த உடனே கடவுச்சீட்டை கிழிச்சி போட்டுடீன்கன்னா திருட்டுத்தனமா தங்கலாம், இதையும் விட்டா மின் அஞ்சல், உரையாடி வழியா யாராவது வெள்ளையம்மாக்கு துண்டு போட்டு உசார் பண்ணிட்டீங்கன்னா, நிரந்தர குடியுரிமை வாங்கலாம்.

இவ்வளவு நேரமா உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி  இந்த பேட்டியை ரசித்த(?) உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.


Friday, September 17, 2010

ஆணாதிக்கம்

பரபரப்பே இல்லாம பப்பரபான்னு முழிக்கும் அந்த மிகப்பெரிய மருத்துவ மனையின் ஓரத்திலே சுத்தம் கிலோ என்ன விலையென்று கேட்க நினைக்கும் மருத்துவரின் அறையிலே நோய் இல்லாம ஒருவர் மருத்துவரிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் கடமை நமக்கு இருப்பதால அங்க போகலாம் வாங்க.

மருத்துவ அறையிலே நோயாளிக்கு மருத்துவர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார்.அந்த பச்ச நிற எழுத்து என்னன்னு சொல்லுங்க "ந", அந்த கருப்பு நிற எழுத்து என்னன்னு சொல்லுங்க "ச", அவரின் பதிலைக்கேட்டு விட்டு மருத்துவர் அவரிடம் "எல்லா எழுத்தையும் சரியா தானே படிக்குறீங்க, அப்புறம் ஏன் கண்ணிலே குறைன்னு சொல்லுறீங்க"

நோயாளி பதில் சொல்லும் முன்னே செவிலி ஓடிவந்து மருத்துவரே உங்க கண் கண்ணாடியை மறந்து வச்சிட்டு வந்துடீங்க என்று சொல்லிவிட்டு கண்ணாடியை கொடுத்து விட்டு சென்றாள். அதை மாட்டி விட்டு, பலகையை மீண்டும் பார்த்துவிட்டு

"பலகையிலே ஒண்ணுமே இல்லையே, அப்புறம் எப்படி ந, ச எல்லாம் சொன்னீங்க"   

"மருத்துவரே எனக்கு எழுதப் படிக்க தெரியாது, நான் சும்மா குத்துமதிப்பா சொல்லிட்டு இருக்கேன்"

உங்களுக்கு கண்ணிலே கண்டிப்பா குறைதான், நான் எழுதிதருகிற சோதனை எல்லாம் எடுத்திட்டு நாளைக்கு வந்து பாருங்க, உடனே அவர்

"மருத்துவரே உங்க கண்ணாடியைப் பார்த்த உடனே என்னோட கண் சரியாப் போச்சி, உங்க உதவிக்கு ரெம்ப நன்றி" என்று சொல்லி ஓடியே விட்டார்.

அடுத்து ஐந்து நிமிடத்திலே மருத்துவரிடம் செவிலி வந்து "ஐயா ஒரு பெண் உங்களைப் பார்க்கணுமுன்னு இருக்குறாங்க"

"அவங்களுக்கு என்ன பிரச்சனை?"

"ஆட்டையைப் போடுற அளவுக்கு உடம்பிலே எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லையாம், இருந்தாலும் பார்க்கணுமாம்"

"இன்னைக்கு கல்லா கட்ட விடமாட்டாங்க போல, வேற யாரும் நோயாளி இருக்காங்களா ?"

"நம்ம மருத்துவமனையிலே இருந்து ஒரு மெயில் துரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லை"

"சரி வரச்சொல்"

உள்ளே வந்த அந்த பெண்மணி கொஞ்சம் நேரம் அறையை நோட்டம்விட்டாள், பொறுமை இழந்த மருத்துவர் என்ன தேடுறீங்கன்னு சொன்னா நானும் ௬ட சேர்ந்து தேடுவேன்.

"என்ன தேடுறேன்னு எனக்கே தெரியலை"   

"அப்ப நீங்க போக வேண்டிய இடம் வேற"

மருத்துவரே என் கதையை கேட்டுட்டு முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டு அவரு பதில் சொல்லும் முன்னாடியே

"ஐயா சமத்துக்கும், சரிசமத்துக்கும் என்ன வித்தியாசம்?"

"சமமுன்னா, உயரம் எடையிலே சமமா இருக்கிறது, சரி சமமுன்னா நடை, உடை பாவனைகளிலே இருந்து பழக்க வழக்க வேலை எல்லாத்திலையும் சமம், நீங்க செய்யுற எல்லா வேலையையும்  சரி சமமா செய்யுறது"

"ஆக நான் ஒரு நாள் துணி துவைச்சா"

"சரிசமம் அடுத்த நாள் துவைக்கணும்"

"நான் ஒரு நாள் சோறு பொங்கினா?"

"சரிசமம் அடுத்த நாள் சோறு பொங்கணும்"

என்னோட பிரச்சனையே இதுதான்னு அழ ஆரம்பித்தவள் நிப்பாட்டவே இல்லை, மருத்துவனை கண்ணீர்ல மூழ்கி விடக்௬டாது என்ற கவலையிலே மருத்துவர்

"இப்ப ஏன் நீ உன் மாமியார் செத்த மாதிரியே அழுவுறியே"

"என் மாமியா செத்த அன்னைக்கு நான் அழவே இல்லை"

"சரி விட்டத்தை பிடிக்கலாம், இப்ப வரைக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியலை"

"ஐயா ஒரு மனுஷன் ஊரிலே இருக்கிற பொம்பளைகிட்ட எல்லாம் போய், பெண் அப்படி சொம்பு அடிக்கணும், இப்படி சொம்பு அடிக்கணுமுன்னு சொல்லுறவங்க, தான் வீட்டு பெண்ணையும் அதே சொம்பை கொடுத்து அடிக்க சொல்லனுமா வேண்டாமா?"

"இருந்த சொம்பைஎல்லாம் ஊருக்குள்ளே கொடுத்து இருப்பாரு,அதும் இல்லாம ஊரு சொம்புக்கு பால் ஊத்தினா, உன் வீட்டு சொம்பு தானே வளருமுன்னு நினைச்சி இருக்கலாம்"

"ஆக உபதேசம் ஊருக்கு தான், வீட்டிக்கு வந்தா, டீ போட்டியாடி, சட்டைய துவச்சியாடி, துணிய மடிச்சியாடி ன்னு பல டி போட்டு டீ குடிப்பாங்க"

"இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம், அதுக்கும் உன்னோட பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்"

"மருத்துவரே நான் இன்னும் சொம்பு அடிச்சி முடிக்கலை, அதுக்குள்ளேயும் நீங்க எதிர் சொம்பு அடிச்சா எப்படி?"

"யம்மா தாயே நீ சொம்பு அடிக்கும் முன்னே நான் ஒரு குத்துவசனம் சொல்லிக்கிறேன், அடுத்தவங்களுக்கு யோசனை சொல்லுறவங்க, அவங்க பேச்சை அவங்களே கேட்ட மாட்டாங்க, ஊருக்குள்ளே வெள்ளையும் சொள்ளையுமா திரியுற மனுஷங்களுக்கு, துண்டு எடுத்துகொடுக்கவும், சொம்பு எடுத்து கொடுக்கவும் ஆள் தேவை, அந்த ஆள் மனைவியா இருந்தா என்ன தப்பு? "

"அவரே அம்புட்டு வேஷம் போட்டா, அவரோட வாரிசுகள் எம்புட்டு வேஷம் போடுவாங்க"

"இது என்ன புதுசாவா நடக்கு, கால காலமா அப்படித்தானே நடக்கு, சூரியன் கிழக்கே உதிச்சி, மேக்கால மறையுற மாதிரி இதும் ஒரு விதி, அதுவே உனக்கு தலைவிதியா வந்து இருக்கு"

"விதியை மதியால வெல்லுவேன்னு இந்த சொம்பு மேல ஆணை"

"படம் இடைவேளை விடும் போது பேசுற மாதிரியே சொல்லுறியே"

"அந்த விதி என் கையிலே இருக்கு, அதனால் கலைக்கப் போறேன்"

"ஆமா ஆட்டையை கலைச்சிட்டு பொழைப்பைப் பார்க்கலாம்"

"அஸ்திவாரத்தையே கலைக்க சொல்லுறேன்"

"நகராட்சியிலே அனுமதி வாங்கிட்டு வீட்டை இடி, இப்போதைக்கு நீ  போகலாம்"

"மருத்துவரே இன்னும் படமே முடியலை,அதுக்குள்ளே வணக்கம் போட்டா எப்படி?, நான் சொம்பை மூக்கை சுத்தி அடிக்கிறது உங்களுக்கு புரியலையா, நான் சொல்கிறது என்னோட கருவை கலைக்க "

"என்னவோ ஆப்பாயில் கரு மாதிரி சொல்லுறியே"

"பெண் உரிமை காவலர் என்று பேசும் ஆணாதிக்கவாதிக்கு பிறக்கும் ஆண் வாரிசும், இப்படி ஒரு போலியா இந்த ஊருக்குள்ள நடமாட எனக்கு விருப்பம் இல்லை, அதனாலே என் வயத்திலே இருக்கிற ஆண் குழந்தையை கலைச்சிடுங்க"

"உலகத்திலே ஆண் பிள்ளைய கலைக்க சொன்ன முத பெண் நீதான், உனக்கு அமெரிக்காவிலே பாராட்டு விழா எடுக்கணும், இருந்தாலும் ஆணாதிக்கம், பன்னிகுட்டி, புண்ணாக்குன்னு என்னவோ சொல்லுற, ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை,உன் கதையைக் கேட்ட என்னை ஊரிலே இருக்கிற சொம்புகளை வச்சி எல்லாம் நல்லா அடிக்கணும்"

"இந்த உலகத்திலே ஆண் இல்லாம பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்ல"

"நீங்க ஆணாதிக்கவாதியா, ஆண்ன்னு முதல்ல சொல்லுறீங்க"

"நான் ஆட்டையப்போடுறவாதி"

"அப்ப மீட்டரை வாங்கிட்டு, ஆட்டைய கலைங்க"

"இப்படி ஒரு மன உறுதியோட இருக்கிற பெண்ணை இப்பத்தான் பார்க்கிறேன், சரி உனக்கு ஆண் பிள்ளைதான்ன்னு எப்படி தெரியும்"

"என்னோட பரிசோதனை சான்று இந்தாங்க, பத்து இடத்திலே கட்டி சரி பார்த்துக்கிட்டேன், எனக்கு பெண் குழைந்தை தான் வேண்டுமுன்னு, கோவில்ல வாங்கின கயறு, ஆலயத்திலே வாங்கின சிலுவை, தர்காவிலே வாங்கின தாயத்து, எல்லாம் இருந்தும், நான் வேண்டினது நடக்கலை"

"மருத்துவர் ஆய்வு சான்றை வாங்கி விட்டு, ஈஸ்ட்ரோஜென், வேட்ரோஜென், பக்கிரோஜன்"

"என்ன மருத்துவர் நீங்க சொல்லுறது எனக்கு புரியவே இல்லையே" 

"நாங்க எழுதி கொடுக்குற மருந்தும், ஆய்வு சான்றிதழும் ஒண்ணுதான், உனக்கு புள்ளைய மாத்த மாத்திரை என்கிட்டே இருக்கு,நான் கொடுக்கிற மாத்திரையை ஒரு மாசம் சாப்பிடு எல்லாம் சரியாப் போகும்"

"புள்ளை வேண்டாமுன்னு நினைச்சி வந்த எனக்கு ஒரு நல்ல பதில் சொன்ன நீங்க தெய்வம்"

"அதுக்காக அலுவலகத்திலே இருக்கிற எதையும் ஆட்டையப் போட்டுட்டு கையிலே சுத்திகிட்டு அலையாதே"

மருந்து சீட்டு எழுதி கொடுத்துவிட்டு அவள் சென்றதும் வந்த செவிலி

"என்ன மருத்துவரே வைட்டமின் மாத்திரை எழுதிகொடுத்துவிட்டு, என்னவோ மலைய நகர்த்தி வச்ச சந்தோசமா இருக்கீங்க"

"சிலதை படிக்க நல்லா இருக்கும், ஆனா நடைமுறை படுத்த முடியாது, சிலது நடைமுறைக்கு வந்தா பார்க்க முடியாது"

"மருத்துவ பின்நவீனத்துவம் மாதிரி தெரியுது"

"ஆமா.. ஆமா" 


Thursday, September 9, 2010

முதல் முத்தம்
பெரியோர்களே தாய்மார்களே முதன்னு சொன்னதும் எல்லோருக்கும் முதல்ல பள்ளி௬டம் போனதும், முத்த பிறந்த நாள், முதல் சம்பாத்தியம் எல்லாம் ஞாபகம் வரும், ஆனா எனக்கு என்னோவோ அதெல்லாம் நினைக்க முடியலை, நடந்து பல வருஷம் ஆனதினாலே என்னவோ எல்லாம் அழிஞ்சி போச்சி, ஆனாலும் இன்னும் ஒரு சில ஆணிகள், பச்சமரத்திலே அடித்த மாதிரி நெஞ்சுக்குள்ளே இருக்கு, அதனால இதயத்திலே எல்லாம் கோளாறு இல்லை, இன்னைய வரைக்கும் நல்லாத்தான் இருக்கு. இன்றைக்கு காதலர்கள் பூங்கா, கடற்கரை என்று சுத்திகொண்டு இருந்தாலும், அந்த காலத்திலேயே இந்த வித புரட்சிகளைப் பண்ணி முன்னோடியாக இருந்து இருக்கிறேன்.

பச்சமரத்தாணி நடந்த காலத்திலேயே நான் வேலை இல்லாம சென்னையை சுத்தி நடந்து வந்தேன்,காலையிலே எழுந்து வேலை இல்லைனாலும் கையிலே ஒரு பையை எடுத்துகொண்டு அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவதே வேலை, நான் உலகமகா கெட்டிக்காரன் என்ற நம்பிக்கை இருந்தாலும், நான் வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பும் அலுவலர்களுக்கு என்னோவோ என் மேல கொஞ்சம் ௬ட நம்பிக்கை இருந்த மாதிரி தெரியலை. இருந்தாலும் பையை வைத்து கொண்டு தெரு நாய் மாதிரி சுத்தினேன். ஒரு நாள் இப்படித்தான் வழக்கம் போல ஒரு அலுவலகத்துக்கு சென்று வேலைக்கு தயார் செய்த கடிதத்தை எடுத்து கொண்டு சென்றேன்.

செல்லும் போது திரும்பி வந்து கொண்டு இருந்த அழகிய பெண்ணைப் பார்த்து வேலை கேட்டேன், அவங்க பதிலுக்கு நானே வேலைதேடித்தான் வந்தேன், ஆனா இல்லைன்னு சொல்லிட்டாங்க, நானும் திரும்பிட்டேன், அவங்க நீங்க ரெசுயும் கொடுக்கலையா ன்னு கேட்டதுக்கு 

"உங்களைமாதிரி அழகான பெண்ணுக்கு கிடைக்காத வேலை எனக்கு கிடைக்குமா?"

"அழகுக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை, நம்பிக்கை இருந்தா, மேகத்திலே ஏறி சந்திரமண்டலம் போகலாமுன்னு சொன்னாங்க", அந்த குத்துவசனத்தை இன்னைய வரைக்கும் பின் பற்றுகிறேன். 

அந்த குத்துவசனம் என் மனத்தைக் குத்திபோட்டாலும்,  அவளைப்பார்த்ததும் காதல் அலை எல்லாம் மனசிலே அடிக்கலை, இதயத்துடிப்பு அதிகமாகி இதயம் நட்டு கழண்டு தொண்டை வரைக்கும் வரலை, இருந்தாலும் அவள் அழகு என்னை குதறிப்போட்டது, கொஞ்சம் சப்ப பிகரா இருந்த அங்கிட்டு விட்டுட்டு ஓடிப்போய் இருப்பேன். வேலைதான் கிடைக்கலை, கடைலையாவது போடலாமேன்னு நானும் அவ கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்றேன். 

விதி மனுசங்களை எப்படி சேர்த்து வைக்குது பாருங்க, அடுத்த நாளும் நான் அவளை வேறொரு இடத்திலே சந்தித்தேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கு நன்றின்னு சொல்லி புளுகுணி மூட்டையா இருக்க விரும்பலை, நேத்து அவளை பேருந்திலே அனுப்பிவிட்டு அவள் பின்னால் அடுத்த பேருந்திலே தொடர்ந்து சென்று அவள் இருப்பிடம் கண்டுபிடித்து, இன்று அதிகாலையிலே அவள் தெருப்பக்கம் சென்று காத்து இருந்து கண்டுபிடித்து எதோ எதிர்பாராத வித சந்திப்பு என்று படம் போட்டேன் அவளிடம், நோகாம எப்படி நொங்கு திங்க முடியும் என்ற பழமொழியையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.அன்றிலிருந்து எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தது.

ரெண்டு பெரும் வேலை தேடி முடிச்ச உடனே நேராக மெரீனா கடற்கரைக்கு செல்வோம், வேலைக்கு துண்டு போட அலைந்த நான் அவளுக்கு துண்டு போட்டேன், ஆனா எப்படியோ துண்டு சிக்கிருச்சி, வேலை தேடுதல் வேலை குறைந்து, ரெண்டு பேரும் ஊர் சுத்த ஆரம்பித்தோம், ஒரு நாள் இப்படித்தான் கடற்கரை மண்ணை அள்ளிபோட்டு எண்ணிகிட்டு இருக்கும் போது அவளோட தலை முடியை கவனித்தேன். அடுத்த நாளே பல கடைகளிலே தேடி அவளுக்கு ஒரு பரிசு வாங்கி வைத்து கொண்டு அவளிடம் கொடுத்தேன்.

அதை ஆர்வமா வாங்கி பார்த்துவிட்டு என்னை கொலைவெறியா பார்த்தாள். 
உலகத்திலே ஈறுவலியை காதலிக்கு பரிசா கொடுத்த முதல் காதலன் நீதான்ன்னு சொன்னா
உன் அழகுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும், பேனுக்கும், ஈறுக்கும் நான் தான் முதல் எதிரின்னு சொல்லிட்டு, அவளை தலை முடியை கலைத்து ஈறு எடுக்க ஆரம்பித்தேன், ஊரிலே பாட்டிமார்கள் ஈறு எடுத்துவிட்டு குத்தும் போது, ஒரு விதமான சத்தம் கொடுத்து விட்டு ஈறுகளை கொல்வார்கள், நானும் அப்படியே செய்தேன். சில சமயங்களிலே அவளோட தலைமுடிக்கும் ஒளிந்து கிடக்கும் பேன்களை தேடும்போது நானே தொலைத்து போவேன். ஒரு மாதமா ஈறும், பேனுமா பிடுங்கி தலையை சுத்தம் பண்ணிவிட்டேன். 
    
       அடுத்த நாளிலே என் தலைமுடியை கவனித்த அவள் எனக்கும் ஈறு இருக்குன்னு சொன்னா,  எப்படி உனக்குன்னு கேட்டவள், நான் சொன்ன பதிலே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள், ஒவ்வொரு தடவையும் பேன் கடிச்சி, உன் இரத்தைத்தை குடிக்கும் போது என் இதயத்திலே ரத்தமே இருக்காது, மனசாலே இணைச்ச நம்மளை இந்த பேன் பிரிக்க௬டாதுன்னு,   உன் கிட்ட இருந்து ரெண்டு பேனை ஆட்டையைபோட்டு என் தலையிலே போட்டேன், இந்த பேன் நல்ல வளரனுமுன்னு குளிச்சி ரெண்டு வாரம் ஆச்சி.

இதுக்குமேலையும் குளிக்காம இருந்தீன்னா உன் மேல பேன் நாத்தம் இல்லை, பிண நாத்தாம் அடிக்கும்ன்னு சொல்லி என்னையை மெரீனா கடற்கரையிலே குளிக்கசொன்னாள். காதலி சொன்னானு சயனைடு சாப்பிடுற வயசுல, நீச்சலே தெரியாம கடல்ல குதிச்சி முங்கி எழுந்தேன். 
  
குளிச்சி முடிச்சிட்டு வந்த உடனே இவ்வளு நாளும் எனக்கு பேன் எடுத்த உனக்கு இன்னைக்கு பேன் எடுக்கிறேன்னு சொல்லி எனக்கு பேன் எடுக்க ஆரம்பித்தாள். புல் பிடிங்க போட வேண்டிய நாங்க பேன் பிடுங்கி போட்டோம். அவளும் என்னைய மாதிரி சத்தம் போட்டா ஈறுகளை கொல்லும் போது, ஆனா அது எனக்கு என்னவோ முத்தம் கொடுன்னு கேட்கிற மாதிரியே இருந்தது, பேன் பிடுங்குற சாக்கை வச்சி ஒரு முத்தத்தை ஆட்டைப் போடலாமுன்னு நான் வாயை பன்னி மாதிரி வச்சிக்கிட்டு அவ கண்னத்துகிட்ட கொண்டு போனா, பின்னாடி இருந்து மகளிர் காவல் அதிகாரிகள் ரெண்டு பேரு எங்களை தட்டி எழுப்பி ௬ப்பிட்டாங்க, அதிலே இருந்த ஒரு பெண் அதிகாரி 

"என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?"

"பேன் பிடுங்குறோம்"  ன்னு நான் சொன்னேன். சொன்ன உடனே செவுட்ட்ல ஒரு அடி, கடுவாப் பல்லு உடைஞ்சி போச்சி.

"நானும் உங்களை பல நாளா கவனிக்கிறேன், அவ முடியை மறைச்சி, நீ முத்தம் கொடுக்கிறது எனக்கு தெரியாதா, இனிமேல உங்களை இங்கே பார்த்தேன் உள்ளே தூக்கி போட்டுடுவேன், ஓடிப்போங்கன்னு சொல்லிட்டாங்க"  அதோடு ஓடியோ போயிட்டோம், நான் ஒரு திசைக்கு, அவ ஒரு திசைக்கு, இப்படி திசை மாறிய பறவைகள் மீண்டும் சந்திக்கவே இல்லை. ஆனா இன்றைக்கும் நான் கறி சாப்பிடும் போது அவளை நினைக்காத நாள் இல்லை.


Monday, September 6, 2010

பாட்டி சுட்ட வடை - முப்பரிமாண பார்வைபொறுப்பு அறிவித்தல் :
நீங்கள் யாரவது உங்களை எலக்கியவாதி என்றோ, புரட்சியாளர் என்றோ நினைத்தால், இந்த இடுகையை தவிர்ப்பது நலம், தலைப்புக்கு உதவிய பாலா அண்ணனுக்கு நன்றி.இப்படிக்கு கடையிலே சரக்கு இல்லைன்னாலும், பொறுப்பா பொழைப்பை ஓட்டுவோர் சங்கம்  

முப்பரிமாணம், முக்கோணம் எல்லாம் கணக்கிலே படித்து இருப்போம்,நான் ஒரு கணக்கு சீத்தலை சாத்தனார் என்பதாலே, எதை படிச்சாலும் வாழ்கையிலே நடைமுறை படுத்த முடியுமான்னு யோசிப்பேன், அதனாலே தான் மின்னணு பொறியியல் படிச்சிட்டு, கணிப்பொறியிலே எலிப்பொறியை வச்சி வேலை பார்க்கிறேன்.இந்த முப்பரிமாணத்தை ஆராய்ச்சி செய்து முத்தாய் கடையிலே ஏத்தனுமுனு  ரெம்பநாளா ஆசை, அவா, கொலைவெறி. இதுக்காக முப்பரிமாணம் கண்ட முதறிஞர் பட்டம் எல்லாம் வேண்டாம் என தாழ்மையோட(நான் ரெம்ப அடக்க ஒடுக்கமானவன்) கேட்டுக்கொள்கிறேன். 

சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்போம், வடை, காக்கா,நரின்னு பெருசுகள் சொல்லிக்கொடுத்ததை கேட்டுக் கொண்டே வீட்டிலே வடை சாப்பிட்டு இருந்திருப்போம், கதையின் கரு ஆப்பாயில் போடும் போது உடையாம இருக்கிற நான் பரிச்சையிலே வாங்கின  முட்டை மாதிரி மனசிலே பதிந்து இருக்கும், இந்த கதையை புரட்சியாளர், இலக்கியவாதி, யதார்த்தவாதி மூவரும் கொலைவெறியோட சிந்திக்கும் போது நடப்பதுவே இந்த ஆராய்ச்சி மணி.  உங்க அனுமதியோட இங்கிட்டு ஒரு குத்துவசனம் சொல்லிகிறேன் 

மணி அடிச்சா சோறு வீட்டிலே 
மணி அடிச்சா ஆராய்ச்சி, கடையிலே 

பாட்டி வடை நிறைய சுட்டு விற்பாள், அதிலே ஒரு வடையை ஆட்டையப் போட்டாலும், பாட்டியின் தொழிலைப் பாதிக்காது, ஆனா பாவம் பசியோட இருந்த காக்கா ஒண்ணை கொத்திகிட்டு போக, அதை ஒரு கடி ௬ட கடிக்க விடாம, நரி உசார் பண்ணிட்டு போய்டுச்சி, நல்லா கவனிங்க காக்கா உருவத்திலே சின்னது, நரி பெருசு, சிருசுகிட்ட இருந்து பெருசு பிடிங்கி தின்னால், புரட்சியாளன் சும்மா இருப்பானா, சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்த கதைதான், ஒலிபெருக்கியே இல்லாம நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி நரிக்கு நாப்பது திட்டு, இல்லாதவன்கிட்ட பிடிங்கி தின்கிற நரியே, உனக்கு பேரு ஒரு கேடா, இனிமேல சேட்டை பண்ணின உன் வாலை வெட்டி காக்கைக்கு போட்டுடுவேன்.நீ நேரப் போனா, உன்னைய குறுக்கால மறிப்பேன், நீ குறுக்கால போனா உன்னை நேரிலே மறிப்பேன். ஊசிப்போன வடையை தின்ன உனக்கு பேதி வந்து பாதியிலே போவாய் அப்படின்னு வசவு கிடைக்கும்.

வடை தின்ன நரிக்கு மட்டுமல்ல, வலியது வாழும் என்ற டார்வின் கொள்கைக்கும் நாலு வசவு வைது அவருக்கும் எதிர் சொம்பு அடிப்பாங்க  அவரு இடஒதுக்கீடு கொடுக்கலைன்னு.

இவங்க பேசுறதை கேட்ட நரி ஒரு வடைக்கே ஒன்பதாயிரம் திட்டு விழுதே, ௬ட ரெண்டு வடைய ஆட்டையப் போட்டு இருந்தால், எனக்கு ௬டு கட்டி இருப்பாங்களோன்னு யோசித்திகிட்டு இருக்கும், பறிகொடுத்த காக்காவோ, நல்லவேளை அது ஊசிப்போன வடை, போன வாரம் சாப்பிட்ட வடைக்கு ரெண்டு நாள் பேதி போச்சி.இவ்வளவு கலவரத்திலும் கிழவி வடை போச்சேன்னு வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கும்.இங்கிட்டு புரட்சியை விட்டுட்டு இலக்கியத்துக்கு போவோமா?   

இலக்கியவாதின்னு சொல்லும் போதே எல்லோரும் தெரிச்சி ஓடிப்போவாங்க, அம்புட்டுபயம் அவங்க மேல, என்னத்த சொல்ல அப்படி கெடுத்து வச்சி இருக்காங்க, நான் அந்த காலத்திலேயே யார் இலக்கியவாதின்னு ஆராய்ச்சி மணி அடிச்சி வச்சி இருக்கேன், அதகாப்பட்டதாவது இலக்கியவாதி வரும் போதே காக்கைபாடினியார் காகத்தை பத்தி என்ன பாடி இருக்கிறார் தெரியுமா என்று ஆரம்பிப்பார், இலக்கியம் பேசும் போது சும்மா சொம்பு அடிச்சிகிட்டே இருக்கக்௬டாது, அதாவது சங்ககாலம், சங்குகாலம்,முதல் சங்கம், கடைசி சங்கம், பதிவர் சங்கம் போன்ற சங்ககால பாடல்களிலே இருந்து குறிப்பு எடுத்து சொம்பு அடிக்கணும்,  காக்கா ஏன் கருப்பா இருக்கு, நரி ஏன் சிகப்பா இருக்கு என்ற கதைகளை அள்ளிப்போட வேண்டும், இப்படி அள்ளிபோடும்போது உள்ளூர் கதையை எல்லாம் விட வெளிநாட்டு இலக்கியங்களிலே குறிப்பு எடுத்துச் சொல்ல வேண்டும்.  

உதாரணம் சொல்லும் போது அமெரிக்க துரைமாரையோ, பிரித்தானிய துரைமாரையோ பத்திப் பேசினா, இவரும் வெள்ளைக்கார துரைமாருக்குத்தான் சொம்பு அடிக்கிறாரு, ஒண்ணும் புதுசா தெரியலைன்னு வாசகர் வட்டம் எல்லாம் வளைச்சி வளைச்சி கட்டம் கட்டுவாங்க,இதுவரைக்கும் யாருமே சொல்லாத நாட்டின் இலக்கியத்தைப் பேசினா, எல்லோரும் மூக்கு மேல வச்ச விரலை நாக்கு மேல வச்சி விசில் அடிப்பாங்க, அதாவது  உகண்டா இலக்கியவாதி சிகாண்டா காகத்தைப் பத்தி ஒரு பாட்டு படித்து இருக்கிறார்

காகத்தைப் பார்த்து 
கா.. கா என்றேன் 
அது என்னைப் பார்த்து 
க்கா .. க்கா என்று 
கக்கா போய் விட்டது 

என்று சொல்ல வேண்டும், இந்த பாட்டுக்கு உங்களை நோக்கி காகிதம் வரலாம், இல்ல கல்லு வரலாம், ஆனா கிடைச்ச ஒலிபெருக்கியை மட்டும் விடக்௬டாது.ஏன்னா இலக்கியவாதிகள் இழவு வீட்டு விழாவா இருந்தாலும், கல்யாண வீட்டு விழாவா இருந்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க. இலக்கியவாதி பேசி முடிக்கும் முன்னே பாட்டி குறட்டை விட்டு தூங்கிடும், நரி இவங்க பேசுறதை கேட்கிறதுக்கு பதிலா, நான் அந்த காக்காவை அடிச்சி சாப்பிட்டு இருக்கலாமுன்னு யோசித்துகிட்டு இருக்கும், காக்கா கடல் கடந்து ஓடியே போய்டும். இலக்கயவாதிக்கு போதுமான அளவுக்கு சொம்பு அடிச்சாச்சி, அடுத்து யதார்த்தவாதியைப் பார்ப்போம்.      

யதார்த்தவாதி வந்த உடனே "ஏ....கிழவி வடை தானே போச்சி, கடையா போச்சி, காக்கா தூக்கிட்டு போன வடையிலே உன் உசுரையா வச்சி இருந்த,பசி உசுரு போகுது ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை 
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு போய்டுவாங்க.இவருக்கு எலக்கியமும் தெரியாது, வரலாறும் தெரியாது, அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா 
இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.

இன்றைய ஆராய்ச்சி யோட முடிவுக்கு வந்திட்டோம், இன்னைக்கு நாட்டாமை சொம்பை வீட்டில் வச்சிட்டு வந்ததாலே ரெண்டு மொடக்கு தண்ணியை குடிச்சிட்டு தீர்ப்பு சொல்லமுடியலை, புரட்சி, இலக்கியம், எதார்த்தம் இதிலே எது சிறந்ததுன்னு படிக்கிற ஒண்ணு ரெண்டு பேரோட முடிவுக்கு விட்டுட்டுறேன், வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன் வடையுடன் நன்றி வணக்கம்.