Monday, October 24, 2011

குடுகுடுப்பை என்ற சத்குரு

ஒரத்தநாட்டு வாய்க்காலில் துண்டை போட்டு மீன் பிடித்து சுட்டு தின்னுபுட்டு, உத்திராபதியோடு எருவமாடு மேய்ச்சிகிட்டு,கணினியிலே எருவமாடு படம் வரைய படித்ததாக ஒரு சர்டிஃபிகேட்டும் வச்சிருப்பாரு.பெயிண்டும், பைப்பும் விற்கும் ஹார்ட்வேர் கடைக்கு சிவி அனுப்பி நோகாம நொங்கு திங்க வேலையா குடுங்கன்னு சாஃப்ட்வேர் வேலை தேடிய மகான். பறப்பன ஊர்வன நடப்பன எல்லாம் இந்திரா அம்மையார் இளைய மருமக மேனகா காந்திக்கு மொட்டை கடிதாசி எழுதி இந்தாளு இங்க இருந்தா எங்க இனத்துக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஒப்பாரி வச்சதாலே அமெரிக்காவிலே தெலுங்கு படிக்க நாடு கடத்தப்பட்டவர்.

ஊரில் ஒரு எருவமாட்டுக் கன்னுக்குட்டியை ஆட்டையப் போட்டு வரும்போது எதிரில் ஆட்டயப்போட்ட மாட்டுக்கு சொந்தக்காரன் வந்ததால் போர்த்துக் கொண்டிருந்த போர்வையை அதன் மேல் போர்த்தி குடுகுடுப்பைக்காரன் போல் நடித்து எஸ்ஸானதை மறைத்து எங்கேயோ இவர் போட்ட பின்னூட்டத்தை குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது என்று நெஞ்சை நக்கியதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாக புருடா விடுபவர்.

பாயசத்தில் ஏலக்காய் போடுவது பார்ப்பனீயம், அதனால் சேமியா பாயசத்தில் சென்னாக்குன்னி பவுடர் போட வேண்டும் என்று அடம் பிடித்து தங்கமணி கடுப்பாகி சட்டுவத்தால் போடு போடு என்று போட்ட பிறகு அடங்கினதை இவர் மறைத்தாலும் அமெரிக்க உளவுத் துறையில் பதிவாகி இருக்கிறது. ரண்டு டாலர் விலை குறைவு என்பதற்காக சிக்கன் புளி சோறு வாங்கி பிரியாணி என்று ஃப்ரீசரில் வைத்துத் தின்றதை மறந்து தாய்த் தமிழ்நாட்டின் பிரியாணியை மஞ்சா சோறு என்று நக்கலடித்தவர்.

நடிகைக்கு நாய் பேர ஊழலில் ஆட்டை போட்டதை தேம்ஸ் நரி அதுசரி கண்டு பிடித்து விட்டதால் சட்டத்துறைத்தலைவர் என்ற டம்மி போஸ்ட் கொடுத்து சரிக்கட்டப் பார்த்து முடியாமல் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டவர். அந்தப் பணத்தை இருவரும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வதும் வெள்ளிக் கிழமையானால் ஜட்டியோடு நிக்கேன் என்று இவரும், நான் கோவணமும் போய் கையால் பொத்திக் கொண்டு நிக்கேன் என்று அவரும் பஸ் விட்டாலும், திங்கள் கிழமை இருக்கும் காசை திரும்பவும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வார்கள். திங்கள் ஜட்டி, செவ்வாய் பனியன், புதன் கால் சட்டை, வியாழன் மேல் சட்டை, வெள்ளி டை என்று முழு உடை அணிவதும் மாலையில் சுவர்வீதிக்காரன் உருவிக் கொண்டு அனுப்புவதும் வாரா வாரம் நடக்கும் காமெடி.

சொந்தமாக தோசை சுடத் தெரியாமல் பெண் கவிஞர்கள் யாராவது ஒரு தோசை சுட்டால் அசந்த சமயம் ஆட்டையப் போட்டு ஒரு தோசை சுட்டு திருப்பிப் போட்டு எதிர்த்தோசை என்று விளம்பரம் போடுவார். கல்லூரி ஆஸ்டலிலும், மேன்சனிலும் தாழ்ப்பாள் இல்லாத கழிப்பறையில் பாதுகாப்புக்காக விசிலடித்துப் பழகியதை கவினை மிரட்ட பயன்படுத்தி என்னமோ கதிரி கோபால் நாத்திடம் பயிற்சி பெற்ற வித்துவான்போல் பீலா விட்டு வீடியோ எடுத்து பஸ்ஸில் மிரட்டுகிறார்.

ரௌத்திரம் பழகும் கலகலப்ரியாவே இந்த வீடியோவைப் பார்த்து பாதி நாட்கள் தூக்கத்தில் அலறி பாரதி படத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்குவதாக ஸ்விஸ் உளவுத்துறை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எங்காவது மதச் சண்டை நடந்தால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கையரிப்பு தாளாமல் ஒரு கமெண்ட் போட்டு விட்டு இரவெல்லாம் தூங்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பல்லு கூட விளக்காமல் வேலைக்குப் போய் ட்ராஃபிக்கில் தூங்கி ஆக்ஸிடண்ட் ஆக்கி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்று பதிவு போடுவார்.

சமீபகாலமாக திமுக தீவிரவாதி அபிஅப்பா, அதிமுக அராஜகவாதி உ.த. அண்ணன், நாம் எந்த கட்சிக்கு ஆதரவு என்று அவ்வப்போது தங்கபாலுவுக்கு ஃபோன் போட்டு உசாராக அதன் படி சப்போர்ட் செய்யும் சஞ்சய்காந்தி, மரம்வெட்டி, தண்ணிதொட்டி, சிவப்புகட்டி கட்சி எல்லாம் குரவளையைக் கடித்துக் கொண்டு குத்துயிரும் குலை உயிருமாய் அடித்துக் கொண்டிருக்கும்போது நம்ம தலைவர் அங்கே வடிவேலு மாதிரி போவார். ‘எச்சூஸ் மீ! வைகோ ரெம்ப நல்லவர். நீங்களெல்லாம் ஆதரவு கொடுத்தால் அவர்தான் அடுத்த பிரதமர்’ என்று ஒரு பிட்டு போடுவார். ஸ்டன் பாமில் அடிபட்டவர்கள் போல் சித்தம் தடுமாறி அபிஅப்பா ரத்தத்தின் ரத்தமே என்றும் உ.த. அண்ணன் உடன் பிறப்பே என்றும் சஞ்சய் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் இளங்கோவனுக்கு நம்பர் மாத்தி அடிப்பதும் என்று தெறித்து ஓடும்போது கிக்கிக்கீ என்று சிரிப்பார்.

மனவாடு மொழி கற்றுக் கொள்கிறேன் என்று அவர்கள் மொழியைக் கொல்லுவதும், தெலுங்குப்படம் பார்ப்பதும் என்று இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் தெலுங்கானாவுக்கு கடத்திவிடுவோம் என்று மிரட்டியதின் பேரில் இப்போது அய்யா அடங்கி இருப்பதை சி.ஐ.ஏ. கண்டு பிடித்துள்ளது.மீள் பதிவு, மீள் மீள் பதிவு, மீள் மீள் மீள் பதிவுன்னு மீள் பதிவு மட்டுமே 200+ போட்டு அசத்திய ஒரே ஆள் குடுகுடுப்பை தான், குறிப்பா டியூஷன் டீச்சர் விமர்சனத்தை 49 தடவை மீள்பதிவிட்டவர்

வீட்டிலே சட்டியிலே சோறு இல்லை என்பதற்காக சட்டிகுரு எழுத்துப்பிழையாக சத்குருவாக மாறிவிட்டது.என்ன இருந்தாலும் பதிவுலகில் என் மூத்தவர். இவரைப் பார்த்துதான் நான் பிழையோடு எழுதக் கற்றுக் கொண்டேன் என்று நன்றியுடன் பெருமை கூர்ந்து வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.வசனம் உதவி :பாலா அண்ணன்