Sunday, August 29, 2010

காதலும் வேதியியலும்

நான் ஒரு ஆங்கிலப் புலின்னு ஏறக்குறைய எல்லோருக்கும் தெரியும்,ஒரு  சில வார்த்தைகளை கேட்கும் போது அது புரிபடவே நிறைய நாள் ஆகும், அதுவும் துரைமார்களா இருந்தா என்ன சொன்னாலும் தலையை நல்லா கோயில் மாடு மாதிரி ஆட்டுவேன், அவன் திட்டினாக்௬டவும் இப்படித்தான், அவங்க பல நேரங்களிலே என்னிடம் கேட்பாங்க, நீ சந்தோசமா இருக்கியா, சோகமா இருக்கியான்னு கண்டு பிடிச்சி சொல்லுறவங்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு கொடுக்கலாமுன்னு சொல்லுவாங்க, அதுக்கும் தலையைத்தான் ஆட்டுவேன், இருந்தாலும் மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன் என்னைவச்சி வேலை வாங்குற உனக்கு ஆயிரம் டாலர் கொடுக்கணுமுன்னு.

இந்த நிலையிலே நான்  கேள்வி பட்ட வார்த்தை தான் வேதியியல் ,வேதியியல்  பாடத்திலே 186/200 மதிப்பெண் எடுத்து இருந்தாலும், இவங்க வேதியியல் கணக்கு என்னனு புரிபடலை, அதாவது துண்டு போட்டு துண்டு எடுத்த ரெண்டுபேரை பார்த்து உங்க வேதியல் நல்லா இருக்குன்னும், நடிக்கிற ரெண்டு பேரைப் பார்த்தும் சொல்லுறதும் தான் வேதியியல், ரெம்ப நாளாவே இதைப் பத்தி யோசித்தே தலையிலே பாதி முடி கொட்டிப் போச்சி, இனிமேலும் யோசித்தால் தலையிலே மூளை இல்லாது மாதிரி முடியே இல்லாம போய்டுமுன்னு வேதியியல் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை முடித்து விட்டுவிட்டு மருத்துவர் பட்டம் வாங்க துண்டு போட்டு காத்து இருக்கும் என்னுடைய கலைசேவையிலே மற்றும் ஒரு மைல் கல், கல்லுன்னு சொன்னதாலே கல்லை தூக்கி போட வேண்டாம் என்று அன்போட கேட்டுக்கொள்கிறேன். இன்னும் எம்புட்டு நாளா இந்த இப்படி கொலை வெறி ஆராய்ச்சி வருமோன்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது, இருந்தாலும் கலை, எழுத்துன்னு வரும் போது சொல்லவந்ததை சொல்லாமல் விட்டுவிட்டானே இந்த மொக்கை எழுத்தாளன் என்று வராலாறு பேசக்௬டாது என்ற நல்ணெண்ணெய் நல்லெண்ணம் தான் வேற ஒண்ணுமில்லை.

அதகாப்பட்டது காதலன் காதலியை பரக்கா வெட்டி மாதிரி பார்க்கிறதும், நாலு வருசமா சோறு தண்ணி இல்லாம இருந்தும் காதலியைப் பார்த்த உடனே ஊசிப் போன மெதுவடையை அப்படியே சாப்பிடுற மாதிரி பார்க்கிறதுமே வேதியலாமே(?),இவுக இங்கே இருந்து புருவத்தை ஆட்டுவதும், அவரு உடனே முட்டை கண்ணை திறந்து "என்னது பல வருசத்துக்கு அப்புறமா குளிச்சிட்டியா" ன்னு கேட்பதும், இவுக போடுற மொக்கையைப் பார்பவர்கள், என்ன ஒரு வேதியல்லுன்னு மெய் சிலிர்த்து, புல் அரித்து ஊரிலே இருக்கிற மாடுகளை மேய விடுவாங்களாம்.

இங்கிட்டு ஒரு கவுஜ சொல்லுறேன் கோவப்படாம கேட்கணும் சரியா

வயிற்றிலே நடக்கும் வேதியலுக்கு
உணவு காரணமாம்
மனதிலே நடக்கும் வேதியலுக்கு
காதல் காரணமாம்

ஈருயிர் ஈருடலா இருந்த ரெண்டு பேரு காதலிக்க ஆரமிச்ச உடனே இன்னொரு
உயிரை காக்கைக்கு போட்டுட்டு ஒரு உயிர் ஆகிடுவாங்களாம்.மனதாலே இணைந்த இருவர் சந்திக்கும் போது நடக்கும் வினைகளுக்கு வேதியியல் என்று பெயர்(?).வேதியியல் என்ற துறையை கொண்டு வந்தது வெள்ளைகார துரைமார்களாத்தான் இருக்கும், நாம இட்லி, தோசை என்று பல வயிற்று உணவுகளைக் கண்டு பிடித்த போது, செவி உணவுகளை கண்டு பிடித்தவர்கள் அவர்கள்.இந்த வேதியல் துறை வருவதற்கு முன்னே காதல் இல்லையா,அப்பவும் இருந்து இருக்கு, வேதியலுக்கு முன்னால் இயற்கை உரம் போட்டு வாழ்ந்த காதல், இப்ப வேதியல் வினையாலே வாழுது.மேற்கத்திய வைத்தியத்தாலே இந்தியாவிலே இருந்த சித்த வைத்தியம் எல்லாம் சிட்டுக் குருவி லேகியம் தயாரிப்பிலே தள்ளப்பட்ட நிலையிலே, இந்த காதலும் வேதியலுக்குள் தள்ளப்பட்டு இருக்கு.

இப்ப எல்லாம் இங்கிலிபிசுல பீட்டர் விடலைனா ஊரிலே வயல்ல நாத்து நடக்௬ட போகமுடியாத நிலைமையா இருக்கு. வேதியல்னு சொல்லுறதுக்கு முன்னாடி என்ன சொல்லி இருப்பாங்கன்னு யோசித்தா, பாசம், அன்னோனியம் இப்படி பல வார்த்தைகள் பயன் படுத்தி இருப்பாங்க

யாரோ ஒரு வெள்ளையப்பன் சொல்லி இருக்கணும், வேதியலுன்னு, அதையே நம்ம ஆளுங்க பிடிச்சிகிட்டு எங்கிட்டு போனாலும், வேதியல், வேதியலுன்னு சொம்பு அடிச்சிகிட்டு இருக்காங்க(?).இந்த வேதியல் பாடத்துக்கு முன்னாடி காதல் இருந்ததான்னு சந்தேகம் வருகிற அளவுக்கு வேதி வினை முத்திப் போய் இருக்கு.

காதலிலே வேதியல் மட்டுமா இருக்கு, பொருளாதாரம் இருக்கு, புவியல் இருக்கு, வரலாறு இருக்கு, அடிதடி இருக்கு, இப்படி பலதரப்பட்ட துறைகள் இருக்கும் போது ஏன் வேதியல்னு சொல்லணும், ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுசா இன்னும் ஒரு துறை கண்டு பிடிக்கலை. அவன் கண்டு பிடிக்காம விட்டுட்டானேன்னு,அதற்காக அவன் கண்டு பிடிச்சதெல்லாம் சரின்னு சொல்ல முடியுமா

உதரணமா,வேதியல்ல அடிப்படி விதி என்ன இடதுபக்கம் உள்ள சமன்பாடுகளின் ௬ட்டு, வலதுபக்கம் இருக்கிற சமன்பாடுகளின் ௬ட்டுக்கு சமம், ஆனா நிஜ வாழ்கையிலே எப்படி சரிவரும், இடதுபக்கமா ரெண்டை ௬ட்டினா, வலது பக்கமா மூனோ, நாலோ திறமைக்கேற்ப வரும். ஆக அடிப்படை விதியே தவறா இருக்கும் போது, வேதியலுக்கு சொம்பு அடிச்சி என்ன பிரயோசனம், இல்ல இந்த பறக்காவெட்டி வேதியியல் சோறு போடுமா? எழுதின எனக்கே வீட்டிலே ஒரு வாரமா சோறு இல்லை.

இப்படி ஒரு சிந்தனை சிற்பி கடைவைத்து கலவரம் பண்ணிக்கொண்டு இருக்கும் போது, சும்மா ஒரு வார்த்தை சொல்லிட்டு, எல்லாரும் சொம்பு அடிங்கன்னு சொல்லிட்டான் வெள்ளையப்பன், அதனாலே இனிமேல காதலையும், வேதியலையும் சம்பந்தப் படுத்தி சொம்பு அடிக்காம, அன்பு,பாசம்,பரிவு, கனிவு இவைகளை முன் நிறுத்தி சொம்பு அடிக்குமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி.


Thursday, August 26, 2010

செவத்தியார்

நாலு லட்சத்தை நாலு நொடியிலே தயார் பண்ணுறவங்களும் இருக்காங்க, அதே நாலு லட்சத்தை ஆயுள் முழுவதும் சம்பாதிச்சா ௬ட அடைய முடியாத மக்களும் இருக்காங்க, இப்படி பலதரப்பட்ட மக்கள் நிறைந்த உலகத்திலே செவத்தியாருக்கும் ஒரு இடம் இருக்கு, கடந்த ஆறு மாத காலமா செலவு செய்த கணக்கை எல்லாம் தவிர இன்னும் நாலு லட்சத்துக்கு என்ன செய்ய என்ற சிந்தனையோட வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறார்.

வழக்கம் போல இன்றாவது நல்ல சேதி சொல்வார் என்ற நம்பிக்கையிலே அவர் முகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்ட அவர் மனைவி கேள்விகள் ஏதும் கேட்காத நிலையிலே கலங்கிய கண்களோட அடுப்பறைக்குள் சென்று விட்டாள்.அந்த கிராமத்திலே கொஞ்சம் சிகப்பா இருந்தாலே அவரோட உண்மையான பேரை விட்டுட்டு செவத்தியான்னு ௬ப்பிட ஆரம்பித்தார்கள்,திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் வாரிசு இல்லையேன்னு கோயில், குளமாய் ஏறி சலித்து விட்டு, குழந்தையை எல்லாம் மறந்து வழக்கமான வயல் வேலைகளில் நாட்டம் செலுத்தினார். விளைச்சலுக்கு செய்த செலவு போக, பொங்குகிற அளவுக்கு மிச்சம் இல்லைனாலும் , எடுக்கிற அளவுக்கு வந்த மிச்சத்தை வைத்து இருவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சியானது கொஞ்ச காலத்திலேயே செவத்தியார் அப்பா ஆகிவிட்டார்.

அவருக்கு பையன் பிறந்ததை விட ஊருக்குள்ளே உன் பெண்சாதி இன்னும் சும்மா தான் இருக்காளோ என்று சமயம் கிடைக்கும் போது கேட்கப்படும் நச்சு கேள்விகளிலே இருந்து விடுதலை கிடைத்ததே மிகப்பெரிய சந்தோசம்.வாழ்கையிலே சந்தோசம் நிலையாகிட்ட வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்னவோ, அவரின் சந்தோசமும் நீண்ட நாள் நிலைக்கவில்லை,அவரோட பையனுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுதுன்னு மருத்துவரிடம் போனால், இதயத்திலே கோளாறு என்று சொன்னார்கள் பல மாதங்கள் வைத்தியம் பார்த்த பின்னால், அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலே பக்கத்து ஊரிலே இருந்த பெரிய மருத்துமனையிலே பையனை காட்டினர்.

பையனை ஒவ்வொரு முறையும் அழைத்து சென்று மருத்துவரிடம் காட்டிவிட்டு வர ஆனா செலவுகளிலே இருந்த நிலத்திலே பாதிக்கு மேல பறிபோனது, இருந்த வீட்டையும் விற்று வயலில் ஓரம் குடிசையைப் போட்டு தங்கி இருந்தார். போன மாதத்திலே செவத்தியாரின் பையன் நிலைமை மிக மோசமானதும், பக்கத்து ஊர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலே நெல்லை சென்று பெரிய மருத்துவ மனையிலே சேர்த்தார்கள், அவர்கள் பையனை ஆய்வு செய்ததிலே இதயத்திலே ஓட்டை இருக்கிறது எனவும் அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி நாலு லட்சம் வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், அது விசயமாக பலரை பார்த்தும், கடன் கேட்டும் பணம் சேராத நிலையிலே,வேறு வழி இல்லாமல் மருத்துவமனை மருத்துவரை சந்திக்க போய் விட்டு வந்தார்.

மருத்துவரிடம் தான் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலம் அளிக்கவில்லை,நீங்க தான் என் பையனை எப்படியும் காப்பாத்தணும் என்று சொல்லும் போது அவர் நெஞ்சம் மட்டுமல்ல, கண்ணும் கலங்கி விட்டது, அவரு சில இடங்களை சொல்லி அங்கே உதவி கேட்க சொல்லியும், அதிலே பலன் ஒன்றும் இல்லை, அடுத்த வாரம் பையனுக்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வில்லை என்றால் நிலைமை கையை விட்டுப் போய்விடும் என்று என்று திட்டமாக
சொல்லிவிட அவர் வழி தெரியாது வீட்டுக்கு வந்து இருக்கிறார்.செவத்தியார் மனைவியும் பிள்ளை வரம் வேண்டி கோயில், குளம் போனதை விட பல மடங்கு அதிகமாகவே கோவில்களை சுத்தி இருப்பார்.

இந்த ஒரு வார காலமாக முட்டி மோதி அலைந்து திரிந்து புரட்டிய ஐம்பது ஆயிரம் ருபாயை எடுத்துக் கொண்டு பையனையும் அழைத்து கொண்டு நெல்லை சென்றார், மனைவியை அழைத்து சென்றால் அழுது ஆர்பாட்டம் பண்ணுவாள் என்று நினைத்து அவளை விட்டுவிட்டு சென்றார். மகனை அனுப்பி வைத்து விட்டு வாசலிலே நின்றவள், நின்று கொண்டே இருந்தாள், போனவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையிலே, அவளின் நம்பிக்கை வீண் போக வில்லை அடுத்த நாள் காலையிலே செவத்தியார் என்றும் இல்லாத சிவந்த முகத்திலே, சிரித்த புன்னகையோடு மகனோடு திரும்பி வந்தார்.

வந்தவர் வரும்போதே வடிவு உன் நம்பிக்கை வீண் போகலை, நீ கும்பிட்ட சாமி கை விடலை, பையனுக்கு ஒண்ணுமே இல்லைன்னு மருத்துவர் சொல்லிட்டாரு, அவனுக்கு இருந்த கோளாறு எல்லாம் சரியாகி விட்டதாம் என்று விடாம பேசி முடிக்கும் வடிவு பையனை ௬ப்பிட்டு கோவிலுக்கே போய்ட்டா. கதை இப்படியே முடிந்து இருந்தால் மனசு எவ்வளவு நிம்மதியா இருக்கும், ஆனா கதை வேறு வாழ்க்கை வேறு என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மனைவி சென்றதும் உள்ளே சென்று கண் அயர சென்ற செவத்தியார் நேத்து நடந்ததை நினைக்காம இருக்க முடியலை

"மருத்துவர் ஐயா, என் கிட்ட ஐம்பது ஆயிரம் இருக்கு, இதை வச்சி எப்படியாது பையன் உடம்பை சரி பண்ணுங்க"

"நான் உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன், நாங்க என்ன வட்டிகடையா நடத்துறோம், தவணை முறையிலே சிகிச்சை கொடுக்க, நான் விலாசம் கொடுத்த கருணை இல்லங்களிலே எல்லாம் விசாரித்தீங்களா?"

"ஐயா அங்கே எல்லாம் கருணை கிடைக்காம தான், இங்கே வந்து நிக்கிறேன், உங்க காலிலே வேண்டுமுனாலும் விழுறேன், என் புள்ளைய காப்பாத்துங்க"

"என்னால ஒன்னும் செய்ய முடியாது"

"கருணை இல்லத்துக்கு அனுப்புற நீங்க கருணை பண்ண மாட்டீங்களா,எவன் எப்படி இருந்தாலும்  நோயாளிகளோட உடம்பை குணப்படுத்த யாரவது செலவை ஏற்கனுமுன்னு
கருணை எதிர் பார்க்கிற நீங்க, ஒரு தடவை கருணை செய்ய மாட்டீங்களா?"

"உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு"

"கும்பிடுற சாமியை விட உங்களை  உசத்தியா நினைச்சது எங்க தப்புதான்,பெத்த புள்ளையவே ஏன் பிறந்தான்னு நினைக்க வச்ச உங்களை தேடி வந்தது தப்புதான், இவன் புறந்த நாள்ல இருந்து இவங்க அம்மா முகத்திலே சிரிப்பு செத்துப் போச்சி,அவ முகத்திலே ஒரு நாளாவது சந்தோசத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சது என் தப்புதான்,போதுமையா உங்க மருத்தும், மாத்திரையும் என் புள்ளைய நான் ஊருக்கே ௬ட்டிட்டு போய்டுறேன்"

நடந்ததை நினைத்து அயர்ந்தவரை வடிவு தட்டி எழுப்பினாள், எழுந்தவர் உடனே "என்னாச்சி வடிவு.. என்னாச்சி" என்று பதட்டத்துடன் கேட்க

"சீக்கிரமா வெளியே வாங்களேன்"

ஓட்டமாக ஓடி வெளியே வந்து பார்த்தால், செவத்தியார் மகன் வீட்டின் வெளியே இருந்த கோழி குஞ்சுகளை பிஞ்சி கைகளைக் கொண்டு விரட்டு கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான், அவனின் சிரிப்பைகண்ட வடிவுவின் சிரிப்பு வானளாவில் இருந்தது, அவளின் புன்னகையிலே தெய்வத்தைக் கண்ட திருப்தி செவத்தியாருக்கு, துக்கத்தின் இருள் நீங்கி, மகிழ்ச்சியின் காலை பிறந்தாலும் மீண்டும் இரவு வரும் என்றாலும் அவர்கள் சந்தோஷ ஒளி நிலைக்கட்டும் என்ற மனநிலையோடு நாமும் செல்வோம்.


Monday, August 16, 2010

விளம்பரங்களும், அழகுப் பெண்களும்
ஒரு நாலு பேருக்கு கல்யாணம் ஆகலைனா, தயவு செய்து என்னிடம் தெரிவியுங்க அவங்களுக்கு என் சொந்த செலவிலே பத்து கோடி செலவு பண்ணி, நான் தெருக்கோடிக்கு வந்தாலும் பரவா இல்லை, கானாக்குறைக்கு என் கிட்னியையும் வித்து கல்யாண செலவு செய்யுறேன்.அந்த நாலு பேரு யாருன்னு தெரியணுமுன்னா இந்த கொசுவத்திய சுத்தி தான் ஆக்கணும்.அதாகப்பட்டதாவது அந்த காலத்திலேயே எனக்கு கல்யாணம் முடிக்க பெண் தேடி, பஸ், ரயில் ன்னு இந்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத்துக்கும் இருந்த சொத்திலே பாதியை கரைத்து விட்ட என் பெற்றோர், நீயாப் பாத்து எதாவது சொல்லுப்பா, எங்களால முடியலைன்னு கையை விரித்து விட, என்னோட தன் நம்பிக்கை நாலு கிலே மீட்டர் நீளம் இருக்கும், அதனாலே தான் இன்னைய வரைக்கும் ஆணியே பிடுங்கலைனாலும், இமயமலைய இப்பத்தான் ரெண்டு இஞ்சி நகர்த்தி வச்சேன்னு, என்௬ட வேலை செய்யுற சிறுசு, பெருசுன்னு பார்க்காம, தினமும் ரெண்டு மின் அஞ்சல் அனுப்பி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், நான் இமயமலையை நகர்த்த ஆரம்பித்த காலத்திலேயே இருந்து அது நகர்ந்து இருந்தால், அது இன்றைக்கு எங்க ஊரு புளியங்குடி பக்கம் வந்து இருக்கும்.         

இப்படி ஒரு தன்னம்பிக்கை புலி, சிங்கம், கரடி எல்லாம் கலந்த கலவையாகிய என்கிட்டே சொன்ன உடனே, நானே களத்திலே இறங்கினேன். எப்படி தேடனும், எங்க தேடனுமுன்னு தெரியலை, இருந்தாலும் வாழ்க்கைப் பயணத்திலே கால்கட்டு போட இந்த கரிகட்டை புயலா கிளம்பியது. தேடுதல் வேட்டையிலே முதலிலே அகப்பட்டது ஒரு இணைய தளம், ஊருக்குள்ளே சாதியை ஒழிக்கனுமுன்னு ஒரு கும்பல் கொலைவெறியா இருக்கும் போது இணையத்திலே சாதியை கொண்டு வந்துட்டாங்களேன்னு யோசித்துகிட்டே உள்ளே போய் பார்த்தா, உள்ளே பெண்கள், ஆண்கள் படங்களைப் போட்டு ஆள் தேடிகிட்டு இருந்தாங்க. 

விவரம் புரியாம நண்பனை தொடர்பு கொண்டு, மாப்பள சாதின்னு பேரு வச்ச இணையத்திலே  எல்லோரும் என்னடா தேடுறாங்க, அவங்க சொந்தக்காரங்களையான்னு கேட்டேன். அவன் அதற்கு

"கிறுக்கு பயலே, அது இணைய தள திருமண சேவை செய்யும் நிறுவனம், இந்தியிலே சாதின்னா கல்யாணம்" 

அடுத்த அரை நொடியிலே என்னோட விவரத்தை சாதியிலே ஏத்திவிட்டேன், ஏத்துன அன்னைக்கே அந்த இணையத்தை குறைந்த பட்சம் பத்தாயிரம் தடவை பார்த்து இருப்பேன், அப்ப எல்லாம் அலேச்ஷா ரேட்டிங் இருந்து இருந்தா, என்னாலே அவங்களுக்கு முதல் இடம் கிடைத்து இருக்கும்.முதல்ல என்னைய தேடி யாரும் வாராங்களான்னு ரெண்டு மாதம் காத்து இருந்தேன். என்னோட விவரத்தை யாரும் பார்த்த மாதிரியே தெரியலை. அதை அடுத்து நான் புகைப்படம் இருக்கிற அழகுப் பெண்களாப் பார்த்து, உங்க விவரம் பார்த்தேன் எனக்கு பிடிச்சி இருக்கு, உங்களுக்கு விருப்பமுன்னா, என்னை தொடர்பு கொள்ளுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
  
 நான் விண்ணப்பம் போட்ட பெண்கள் எல்லாம் ஒரு வாரத்திலே அந்த இணையத்திலே இருந்து  காணமப் போய்ட்டாங்க, என்னன்னு விவரம் புரியலை, வாடிக்கையாளர் சேவைக்கு மின் அஞ்சல் அனுப்பி விவரம் கேட்டேன், அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்லி விட்டார்கள், உங்க ராசி ரெம்ப நல்ல ராசின்னு பதில் அணிப்பி விட்டார்கள், நல்லராசி இருக்கிறதாலே இன்னும் பெண் கிடைக்கலைன்னு மனசிலே நினைத்துக் கொண்டு, வழக்கம் போல புது பெண்களைப் பார்த்து விண்ணப்பம் அனுப்ப ஆரம்பித்தேன். 

இந்த நேரத்திலே நண்பன் ஒருவனிடம், இரவு தேநீர் குடிக்கும் போது புலம்பி கொண்டு இருந்தேன், அவனுக்கு என் மேல அபார நம்பிக்கை, அவன் சொன்னான் மாப்ள உன்னோட புகைப்படத்தை மேல ஏத்துடான்னு சொன்னான். அடுத்தநாளே அரை இஞ்சிக்கு முகச்சாயம் பூசி புகைப்படம் எடுத்து மேல போட்டாச்சி, அடுத்த ஒரு வாரத்திலே, அந்த இணையத்திலே இருந்த எல்லா பெண்களும் காணமப் போய்ட்டாங்க, இந்த தடவை அவங்களே எனக்கு மின்அஞ்சல் அனுப்பி உங்க புகைப் படத்தை தயவு செய்து எடுத்திடுங்க, இல்லைனா நாங்க உங்களை கழட்டி விட்டுடுவோம்னு சொல்லிட்டாங்க.

அதே நண்பனிடம் என்ன மச்சான் இப்படி சொல்லுறாங்கன்னு கேட்டேன், அது ஒண்ணும் இல்லைடா உன் அழகைப் பார்த்து பொறாமையிலே ஓடி இருப்பாங்கன்னு சொல்லிப்புட்டான். 

புகைப்படத்தை எடுத்து விட்டேன், மறுபடியும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன், அந்த இணைய தளம் விளம்பரம் செய்யும் இடங்களிலே ஒரு நாலு அழகுப் பெண்கள் மட்டும் எப்பவுமே இருப்பாங்க, இவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களே ரெம்ப நல்லவங்களா இருப்பாங்களோன்னு, அவங்களுக்கு குறி வச்சேன், விளம்பரத்திலே இருந்து தொடுப்பை சொடுகி உள்ளே போனால், அவங்க படம் இருக்காது. நானும் பல தடைவை முயற்சி செய்து பார்த்தேன் பலன் இல்லை. வழக்கம் போல வாடிக்கையாளர் சேவைக்கு மின் அஞ்சல் அனுப்பி கேட்டேன், ரெண்டு வாரம் கழித்து எனக்கு மின்னஞ்சல் வருது, உங்களை தடை செய்து இருக்கிறோம் என்று, அதற்கு பின் வேற மின் அஞ்சல் முகவரி கொடுத்து பதிவு பண்ண முயன்றேன், அவங்க ரெம்ப திறமை சாலிகளா செயல் பட்டு என் பேரு மட்டும் அல்ல, என் பேரு மாதிரி வந்த எல்லாத்துக்கும் கல்தா கொடுத்து இருக்காங்க.
       
மறுபடியும் இருக்கவே இருக்கான்னு என்னைய கோத்து விட்ட நண்பன் கிட்டே கேட்டேன், என்ன மச்சான் ஒரு நாலு பெண்களை பற்றி விசாரிக்கும் போது எனக்கே கல்தா கொடுத்துட்டாங்கடான்னு சொன்னேன்.

டேய் உன்னைய மாதிரி கருவாலிகளை இழுக்க அவங்க பயன் படுத்துற ஆய்தம் தான் இந்த அழகுப் பெண்கள், அவங்க இருக்காங்களோ இல்லையே,ஆனா நீ போய் நிக்குற பாரு, அதிலே தான் அவங்க வெற்றி இருக்கு, தேடிபோனதுதான் கிடைக்கலை, இருக்கிற ஒண்ணை பார்த்து தேத்தலாமுன்னு உன்னைய ஒரு மனநிலைக்கு கொண்டு வருவதுதான் அவங்க நோக்கம். 

அவன் சொன்னதிலேயும் உண்மை இருக்கத்தான் செய்யுது இரண்டு சக்கர வாகனம் விளம்பரம் பாருங்க, ஒரு அழகான பெண்ணோட கையிலே, காலிலே விழுந்து உசார் பண்ணி டீ குடிக்க தள்ளிட்டு வந்தா, புதுசா ஒரு வண்டியைக் கொண்டு வந்து கொத்திட்டு போயிடுறான், நொங்கு திங்க வந்தவன் டீ நக்கி குடிக்கான், வண்டி வச்சி இருக்கவன் நோகாம நொங்கு திங்கான். .இவ்வளவு ஏன் ஆம்புளை உள்ளாடைக்கு, பக்கத்திலே ஒரு பெண் டவுசர், பனியன் போட்டுட்டு நிக்க வேண்டிய இருக்கு, இப்படி விளம்பரம் போட்டு உசுப்பு ஏத்துறதே வேலையைப் போச்சி, கல்வித்துறை, கலைத்துறை,கணனித்துறை இப்படி பல துறைகளிலே பெண்கள் முன்னேறி இருந்தாலும், விளம்பர துறையிலே ஆண்களை விட ஒரு படி மேலதான் என்று கையிலே வைத்து இருக்கும் சொம்பு தண்ணியில் ரெண்டு முடக்கு குடிச்சிட்டு தீர்ப்பு சொல்லிக்கிறேன், வாய்பளித்த அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

போறதுக்கு முன்னாடி அந்த நாலு பேரு யாருன்னு சொல்லிட்டு போறேன், இந்தா கீழே இருக்காங்களே இவங்க தான் அவங்க, அந்த காலத்திலேயே இருந்து இன்னும் வயசும் ஏறலை, அழகும் குறையலை, அதிலே ஒருத்தர் டீச்சர் 24 மணி நேரமும் பேசலாம், ஈவன்ட் மேனேஜர்   24 மணி நேரமும் உரையாடலாம், இங்கே சொம்பு அடிச்சா அவங்க வேலையை யாரு பாப்பாங்கன்னு தெரியலை, இப்படியும் ஒரு வேலை இருந்தா எனக்கும் சொல்லுங்க நானும் வாரேன். இந்த புகைப்படத்திலே இருப்பவங்க எல்லாம் இன்னும் 40 வருஷம் கழிச்சினாலும் அப்படியே தான் இருப்பாங்க, நல்லாப் பாத்துகோங்க சாமியோ 

Sunday, August 15, 2010

வானம்பாடிகள்


பாலா அண்ணன் எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு என்பதாலையோ, அவரோட தலைமுடியிலே குருவி௬டு வச்ச மாதிரி வகுடு எடுத்து தலையை சீவி  இருப்பதாலோ அவரை எனக்கு பிடிக்காது, எனக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம் இருந்தாலும், எங்க ௬ட விளையாடும் போது எங்களுக்கு  சமமான நிலையிலே இருப்பார்.அவரு வயதைஒத்தவர்களிடம் பேசும் போதும், விளையாடும் போதும் அவங்களுக்கு ஒரு படி மேலையே
இருப்பாரு.இந்த ஒரு காரணத்திற்காகவே அவரை எனக்கு ரெம்ப பிடிக்கும்.


எனக்கு சின்ன வயசிலே கில்லி தண்டா, கோலி குண்டு, முத்து செதுக்கி(புளியங்கொட்டைகளை ஒரு வட்டத்தின் நடுவே வைத்து கல்லை சதுரமாக செதுக்கி அந்த வட்டதிற்குள்ளே இருக்கும் புளியங்கொட்டைகளை அடிப்பது).எல்லாம் விளையாட சொல்லிக்கொடுப்பார், இன்றைக்கு நீச்சலிலே ஒலிம்பிக் விளையாட்டிலே வாய்ப்பு கிடைத்து இருந்தால் பல தங்கப்பதக்கங்களை குட்டி சாக்கிலே அள்ளி வீட்டுக்கு கொண்டு வந்து இருப்பேன், அந்த அளவுக்கு கடப்பாரை நீச்சல், முங்கு நீச்சல், நிலா நீச்சல் இப்படி பலதரப்பட்ட வகைகளை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் பாலா அண்ணன்.

இன்றைக்கு கடையை திறந்து தமிழுக்கு சொம்பு அடிக்கிறதுக்கும் அவரு தான் காரணம், என்௬ட படிக்கிறவங்க எல்லாரும் கொத்தனார் வேலைக்கு போய் சம்பாதிக்குறாங்கன்னு நானும் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு போகலாமுன்னு நினைச்ச போது அவரு என்கிட்டே, தம்பி அண்ணன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒழுங்கா படிக்காம சினிமா படம் பார்த்து தேர்விலே மட்டுமல்ல வாழ்க்கையிலும் தோல்வி அடைந்து விட்டேன்.

நான் பண்ணின தப்பை நீ பண்ணாதேன்னு அறிவுரை சொல்லி என்னை பள்ளிக்௬டம் வரைக்கும் கொண்டு வந்து விடுவாரு.அன்றைக்கு மட்டும் கொத்தனார் வேலைக்கு சென்று இருந்தால் நீங்கள் எல்லாம் எவ்வளவு நிம்மதியா இருந்து இருப்பீங்க, விதி யாரை விட்டது. என்னையப் பத்தி பேசியே சொல்லவந்ததை மறந்துட்டேன் பாருங்க.

பாலா அண்ணன் அவங்க வீட்டிலே கடைக்குட்டி, அவருக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு, அவரு அடிக்கடி வீட்டிலே அவங்க அண்ணன் மார்களிடம் திட்டு வாங்குவாரு, அவரு என்னைய மாதிரி சின்ன பசங்க ௬ட விளையாடுறார்னு, ஆனா அவரு அதை எல்லாம் கண்டுக்க மாட்டாரு, அவங்க அம்மாவுக்கு செல்லப் பிள்ளை அவரு. வேலை வெட்டி இல்லாம வீட்டை சுத்தி வாராருன்னு,அவங்க வீட்டிலே அவருக்கு தள்ளு வண்டி வாங்கி கொடுத்து பாத்திரம் வியாபாரம் பண்ண அனுப்பி விட்டாங்க.வார நாட்களிலே பாத்திர வியாபாரம் பண்ணினாலும் வார இறுதிகளிலே முக்கால் வாசி நேரம் எங்களுடன் செலவழிப்பார்.

அந்த காலகட்டங்களிலே எங்க ஊருக்கு இன்று இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எல்லாம் சாவு மணி அடித்து ஊரை விட்டு அடித்து விரட்டிய கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப் படுத்தப்பட்டது,மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வாலிப புள்ளைங்கள் எல்லாம் போன காலத்திலேயே, மட்டை வாங்க காசு இல்லாத காரணத்தினாலே எங்க விட்டு களி மட்டையை வைத்து எங்களுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்தார், அந்த மட்டையை உடைச்சதினாலே எங்க வீட்டிலே அதே மட்டையை வைத்து எனக்கு நாலு சாத்து விழுந்தது என்பது வேறு விஷயம்.இப்படியாக அழகாகவும் ஆர்ப்பாட்டமாகவும் சென்று கொண்டு இருந்த எங்கள் பயணம் திசை மாற ஆரம்பித்தது.

ஒரு நாள் பாலா அண்ணனை தேடி ஊரிலே உள்ள ஒரு பகுதியினர்  அலைகின்றதாக கேள்விபட்டேன், அந்த விஷயம் எங்க தெரு மக்களுக்கும் தெரிந்து அவர்களின் அவரை ஒரு புறமாக தேடினார்கள், இரண்டு கும்பல் கையிலேயும் அவர் சிக்கியதாக தெரியவில்லை, அதற்கு அப்புறமாக அவரை
ரெம்ப நாளாக காணவில்லை.

ஊரிலே இருந்தவர்கள் எல்லாம் அவரை தேடி அலைந்து களைத்து போய் அவரை மறந்தே விட்டார்கள், அவரோட அம்மாவைத்தவிர, சில சமயம் இரவு நேரங்களில் பாலாவின் அண்ணன் மார்கள் அவரின் அம்மாவை திட்டுவது மட்டும் காதிலே விழும், இருந்தாலும் என்ன காரணத்திற்கு அவர் வீட்டை விட்டு ஓடினார் என்று எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலா அண்ணன் பேச்சு ஊருக்குள்ளே அடிபட்டது அவனை தென்காசியிலே பார்த்தேன், ராஜபாளையத்திலே பார்த்தேன் என்று பிறர் சொல்ல கேள்விப்பட்பட்டேன், ஆனால் எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை, அவரு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டதே மகிழ்ச்சி.

காலம் கடந்து நான் கல்லூரி செல்லும் நிலை வந்ததும், நானும் ஊரை விட்டு போனேன், அவரோட நினைவுகளோட, நான் கல்லூரியிலே இருக்கும் போது எதிர் பாராத அதிசயமாக பாலா அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்ததாகவும், வந்த இடத்திலே அவரது அண்ணன்மார்கள் அவரை அடித்து விரட்டி விட்டதாகவும் கேள்விபட்டேன், அவருக்கு பரிந்து பேசிய அவரோட அம்மாவுக்கும் அடி விழுந்தகாக கேள்விபட்டேன்.

பாலா அண்ணனின் நினைவிலேயும், விழுந்த அடியிலேயும் அவர்கள் அம்மா படுத்த படுக்கை ஆகிவிட்டார், அவங்க போடுகிற சத்தம் எங்க தெரு முனைவரைக்கும் கேட்கும், அதற்கு பின் அவர்களின் சத்தம் எங்க வீடு வரை௬ட கேட்கவில்லை, படுத்த படுக்கையான பாலா அண்ணனின் அம்மாவை கவனிக்க ஆள் இல்லாமல் அவர்கள் நிலைமை மேசமடைந்து எங்க பக்கத்து வீட்டை விட்டு மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே போய் விட்டார்கள், நான் ஊருக்கு வந்து இருந்த சமயம் அந்த துயர சம்பவம் நடந்ததாலே,நான் இன்று பாலா அண்ணனை பார்த்து விடுவேன் என்று நம்பிக்கை இருந்தது.

எங்க ஊரிலே வயசானவங்க இறந்தால்,இருக்கும் வரை அவங்களுக்கு ஒரு வாய் கஞ்சி கொடுக்கலைனாலும், அவங்களுக்கு வெடிபோட்டு, மாலை,
மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள், அதையேதான் பாலா அண்ணனின் அம்மாவிற்கு அவர் அண்ணன்மார்கள் செய்தார்கள். சர வெடிகளைப் போட்டு சந்தோசத்தை கொண்டாடும் நேரத்திலே பாலா அண்ணன் வந்தார், வந்தவர் வெடி போட்டவர்களை ஒரு பிடி பிடித்துவிட்டார்.

நீங்க எல்லாம் மனுசங்களா எங்க அம்மா செத்தது உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா, நாதாரி பசங்களா என்று சொல்லி விட்டு, சபையிலே சொல்லமுடியாத சில வார்த்தைகளை சொல்லியும் திட்டினார், அது என்ன என்று சொல்ல முடியாத காரணத்தினாலே உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன். அவரின் வருகை பலருக்கு அருவருப்பை தந்தாலும், ஊரிலே இருந்த பெரியவர்கள் அவர்களை சமாதனப் படுத்தி, அண்ணனின் தாயின்
இறுதி சடங்கு முடியும் வரை அமைதி காத்தார்கள்.

காரியம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்தனர், பலா அண்ணனும் வந்தார், அவர் வந்தவுடனே முனுமுனுப்பு ஆரம்பித்தது, முதலாக ஆரம்பித்தது பலா அண்ணனின் மூத்த அண்ணன்

"செத்து போன கிழட்டு கழுதையை மயக்கி, இருக்கிற சாதியை விட்டுட்டு கீழ் சாதி பெண்ணோட ஓடிப்போன ஓடுகாலி பய உன்  பேருல சொத்தைப் பூரா எழுதி வச்சிட்டு செத்து போய் இருக்கா"

"ஆனா ஒண்ணு, இந்த வீட்டிலே இருந்து ஒரு துரும்பை எடுத்தாலும் உன் கையை வெட்டிபுடுவேன்"   இது அவங்க சின்ன அண்ணன்.

ஊரு மக்கள் எல்லாம் இதை கேள்விப்பட்டு வாய் அடைத்து நின்னாலும், பாலா அண்ணன் நிதானமா.

"ஓடிப்போனவன், ஒரே அடியா போகாம திரும்பி வந்ததுக்கு ஒரே காரணம் நம்ம ஆத்தாதான், அவளே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமா இந்த சொத்து எனக்கு கால் துசிக்கு சமம், என்னோட பங்கையும் சேத்து உங்க ரெண்டு பேருக்கும் நான் எழுதி வச்சிடுறேன்னு சொன்னதோட மட்டுமில்லாமல் அன்றே எழுதியும் கொடுத்து விட்டார், அவரு விடுதலைப் பாத்திரத்திலே கை எழுத்து போட்டு விட்டு கிளம்பும் போது சூரியன் மறையும் தருவாயிலே இருந்த ஒளி அவர் முகத்திலே பட்டு பொன்னிறமாய் மின்னியது.அன்று போன பாலா அண்ணனை இன்று வர நான் காணவில்லை, ஆனால் இன்றும் எனக்குள் வசிக்கிறார் தெய்வமாக.
Tuesday, August 10, 2010

உலகம் காத்த உத்தமன்


காதலுக்கு கண் இல்லைன்னு பல இடங்களிலே கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா இப்பத்தான் நேரிலே பார்க்கிறேன், எங்க வகுப்பிலே அழகிலே வளவளத்தா கொஞ்சமல்ல ரெம்ப சுமார் தான், இருந்தாலும் எங்க வகுப்பு ஆணழகன் எப்படியோ அவ வலையிலே விழுந்திட்டான், என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கினாளோ, அவனும் இவ கிட்ட அட்டப் பூச்சி மாதிரி ஒட்டிகிட்டான், சும்மா ஒரு மூலையிலே அட்டு பிகரு மாதிரி உட்கார்ந்தோமா, போனமான்னு இருந்த வளவளத்தா மேல இவன்நொள்ள கண்ணு விழுந்ததும் சும்மா இருந்தவளை உசுப்பு ஏத்தி உச்சாணிக்கு கொண்டு போய் விட்டுவிட்டது.  இப்ப எல்லாம் அரை இஞ்சிக்கு முகத்திலே பவுடர் போட்டு, வித விதமா நகச்சாயம், உதட்டு சாயம் போட்டுக்கிட்டு வருகிறது போறதைப் பார்த்தா, எனக்கு வயறு எரியும், அதை அணைக்க பக்கத்திலே இருக்கிற கள்ளு கடையிலே ரெண்டு பட்டை கள்ளு வாங்கி குடிப்பேன். 

முன்னாடி எல்லாம் என்னைப் பார்த்தா கொஞ்சமாவது பல்லைகாட்டுவா, இப்ப எல்லாம் என்னை தெருநாயை பார்க்கிற மாதிரியே பார்க்கிறா, அவ சிலுப்புற சிலுப்பிலே உலக அழகி பட்டத்தை ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்த மாதிரி தெரியும், உனக்கு ஏண்டா இந்த பொறமை, பல் இருக்கவன் பக்கடா திங்கான்னு நீங்க சொல்லலாம். வகுப்பிலே இருந்ததே வத்தலும், தொத்தலுமா வளவளத்தா ஒண்ணுதான், அவளை உசுப்பேத்தி விட்ட அவனை ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரியும், அவன் உடற்பயிற்சி செய்து கல் காளை மாதிரி இருப்பான், நான் முப்பது கிலே எலும்பும், ரெண்டு கிலோ தோலும் சுத்தி வச்ச செக்கு மாடு மாதிரி இருப்பேன்.    

வளவளத்தாவின் காதலைப் பார்த்து வானமே கதிகலங்கிப் போய், மேகத்தை எல்லாம் எங்க ஊரை விட்ட அடிச்சி விரட்டி விட்டுடுது, எனக்கு மட்டுமல்ல இயற்கைக்கே இவ பண்ணுறது பொறுக்காம சோலைவானமா இருந்த எங்க ஊரை பாலைவானமா மாத்தி விட்டது. இந்த பிரச்சினையை எப்படி கையாளுவதுன்னு தெரியாம ஊரே ஓம குண்டம், அசனம் இப்படி பல பரிகாரங்களை தேடிக்கொண்டு அலைய, நானோ விடை தெரிஞ்சும் வடை கிடைக்காமல் அலைந்தேன். வானிலை செய்தி கேட்டா மழை வரும் என்கிற செய்தியை தவிர எல்லா செய்தியையும் சொல்லுறாங்க.வளவளத்தாவை பழைய நிலைக்கு கொண்டு வந்து ஊர் மீண்டும் சோலைவனமாக மாற வேண்டும் என்று பொறுப்பு என்கிற பருப்பு என்மீது விழுந்து இருப்பதை கண்டுபிடிக்கவே எனக்கு இடைவேளை ஆகிவிட்டது.

"உன் ஒருத்தனாலே தான் முடியும்", "மிகப்பெரிய சக்தி, மிகப்பெரிய பருப்புகளை மன்னிக்கணும் பொறுப்புடனே வரும்", "உன்னைவிட்டா உலகத்தை காக்க யாரு இருக்கா"  போன்ற குத்து வசனங்கள் என் காதிலே விழுந்து கலவரம் பண்ணிக்கொண்டு இருந்தது. இந்த இமாலயப் பொறுப்புடன், நான் கல்லூரி மாணவன் என்பதையே மறந்து இரவு பகலாக உலக மக்களைப்பற்றி  சிந்தித்துக் கொண்டு இருக்கும் எனக்கு உலக யோக்கியன் பட்டம் கொடுப்பார்களா என்ற எண்ணம் வேறு உள் மனதிலே குற்றால அருவி போல ஓடிக்கொண்டு இருந்தது. அலைந்து திரிந்து கடைசியிலே ஒரு கடைந்து எடுத்த யோசனையுடன் வளவளத்தாவை சந்திக்க நீண்ட நாளைக்கு பின் கல்லூரி சென்றேன். எனக்கு எப்போதும் சிங்கத்தை அதன்  குகையிலே சந்தித்துதான் பழக்கம்.கல்லூரி முடியும் நேரம் வளவள அவள் காதலனை சந்திக்க போய் கொண்டு இருந்தாள். அவளுக்கு முன்னால வேகமா சென்று அவளை நோக்கி திரும்பும் முன் 

"பக்கி..பக்கி,பாத்து நட, கீழ விழுந்து குறை காலையும் ஓடிச்சிகாதேடா,ஏற்கனவே தேய்ந்து போன ரெகார்டு மாதிரி நடக்குற"

"வளவள உன்னையப் பார்க்கத்தான், ஓடோடி வந்தேன்" 

"நீ இப்படி கால்கடுக்க ஓடிவந்து என்னையப் பார்க்க வந்தேன்னு என் கனி டவுசர் பாண்டிக்கு தெரியுமா?"

"அது யாரு வளவள கனி?" 

"நாங்க புதுசா இங்கலிபிசு படம் பார்க்க ஆரம்பிச்சி இருக்கோம், அவங்க கனி, ஸ்வீட் ஹாட் ன்னு சொல்லமா ௬ப்பிடுறாங்கன்னு, நானும் என் ஆளை கனி ன்னு ௬ப்பிடுறேன்"

கொய்யால சனின்னு ௬ப்பிடலாமுன்னு மனசுக்குள்ளே நினைச்சாலும், வெளியே சொல்ல முடியலை, இருந்தாலும் டவுசர் கனி ன்னு ௬ப்பிடுன்னு சொன்னேன்.

"காக்கா நல்ல பேரு தான்டா சொல்லிகொடுத்து இருக்க, இப்ப என்ன விசயமா என்னைப் பார்க்க வந்த சீக்கிரம் சொல்லு, நாங்க இன்ஜெக்சன் பார்க்கப் போறோம்"        

"அது இன்செப்சன் வளவளத்தா"

"என்ன எளவு சன்னோ, நீ வந்த விஷயத்தை சொல்லு"

"ஊரிலே மழை இல்லை, மக்கள் எல்லாம் ரெம்ப கஷ்டப் படுறாங்க"

"டேய், நான் என்னவோ காவிரியை அடைச்சி வச்சி இருக்கிற மாதிரி பேசுற, அதும் நம்ம ஊரிலே காவிரி ஓடலை, மரத்தை வையுங்கன்னு அரசாங்கம் சொல்லுது, நீங்க கருவேல மரத்திலே இருக்குற பட்டையை எடுத்து சட்டியிலே போட்டு காய்ச்சி குடிச்சா எப்படி மழை வரும்"

"வளவள வசனத்தை குறைச்சி பேசு, எல்லோரும் குறிப்பு எடுத்துகிட்டு இருக்காங்க" 

"நான் என்ன விசா வாங்கி நாசாவிலையா பாடம் எடுக்கிறேன், அது தன்னாலே தண்ணி மாதிரி வருது என்ன செய்ய?"

"எல்லோருக்கும் தண்ணிப் பிரச்சனை"

"டாஸ்மாக்ல இல்ல, அங்க போய் குடிக்க வேண்டியதானே"

"அங்கேயும் இல்லை" 

"இன்றைக்கு காந்தி ஜெயந்தியும் இல்லையே, காக்கா ஊரு பிரச்சனை, உலகப் பிரச்சனையைப் பத்தி யோசிக்க நேரமில்லை, இன்னைக்கு பார்க்கப் போற படத்திலே கனவிலே வட்டிக்கு காசு கொடுக்கிறானாம், அதை ஆராய்ச்சி மணி அடிச்சி பார்க்க போறோம் "

"வளவள என் பொறுமையை ரெம்ப சோதிக்கிற" 

"நீயே ஒரு எருவமாடு, உன் மேல மழை பெய்தா எப்படி இருக்கும்"

"அதே மழை உன் மேல பெஞ்சா, இந்த உலகத்தையே மாத்தி காட்டுவேன்" 

"உன்னைய உலக்கையாலே ரெண்டு சாத்து சாத்துவேன்"

இனிமேலும் பொறுமை காத்துபயன் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா கைவசம் இருந்து குத்து வசனங்களை அள்ளி என்னை சட்டியிலே போட்டு பொரிக்கிற மாதிரி வறுத்து எடுத்தேன், ஒன்னும் பிரயோசனம் இல்லை,உச்சியிலே இருந்த ரெண்டு கருத்த மேகமும் போன திசை தெரியலை. கடைசியா வளவளத்தா கையை பிடித்து 

பூமி தாயே எங்களை காப்பாத்துன்னு சொன்னதும், என் உடம்பிலே இருந்து 1000 வாட்ஸ், வளவளத்தா கிட்ட இருந்து 500 வாட்ஸ் கிளம்பி அலைந்து கொண்டு இருந்த மேகத்தை எல்லாம் ஒன்று திரட்டி மழை வெளுத்து வாங்கியது, மழை நின்னதும், வளவளத்தாவின் முகத்தைப் பார்த்த அவள் காதலன், இருளடைந்த இருளாண்டி போல மயங்கி விழுந்து விட்டான், ஆனா எனக்கு என்னவோ, அவள் முகம் இன்றைக்கு தான் ரெம்ப அழகா இருந்தது. 
   


Tuesday, August 3, 2010

கடிதம்

தலைப்பை பார்த்த உடனே இங்க பாருய்யா கால கொடுமைய, இவனுக்கும் வாசகர் கடிதம் வந்து இருக்கோன்னு நினைச்சிகிட்டு யாரவது வந்தா மன்னிக்கணும், இன்றைக்கு கடித ஆராய்ச்சி.


கடிதம்/அஞ்சல் என்பது பண்டை தமிழ் சொல்லா?, பண்டைய காலத்திலேயே புறாவை விட்டு தூது விட்டாங்க, ஓலை முலமாக கருத்து பரிமாற்றம் நடந்தது, வெள்ளைக்கார துரை மார்கள் நம்ம ஊரிலே இருந்த மன்னர்களுக்கு ஆப்பு அடிச்சி, துரைமார்களுக்கு நல்லா சொம்பு அடிக்க வைத்த நேரம்,சும்மாவே சொம்பு அடிச்சிகிட்டு இருக்குறாங்களே இவங்களுக்கு நல்லது பண்ணனுமுன்னு  இந்தியாவிலே தபால் நிலையம் என்று ஒரு திட்டம் கொண்டு வந்து, புறா, மான், மயில் இவங்களுக்கு எல்லாம் விடுதலை கொடுத்தாங்க(?), அதற்கு அப்புறமாத்தான் மக்கள் புறா, மான், மயில் கறி சாப்பிடுறதை விட்டுட்டு கோழி கறி சாப்பிட ஆரம்பித்தார்கள்(?).

         தமிழிலே மான் விடு தூது(?), மயில் விடு தூது(?), புறா விடு தூது(?) என்று இருந்த காரணத்தினாலோ என்னவோ மயில் தேசியப் பறவை ஆனது(?), மானை சுட்டா, நமக்கு சிறையிலே களி சுடுறாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல புறாவை சுட்டாலும், கம்பிக்கு பின்னால தள்ளி இரை போடுவாங்க.நல்ல வேளை கோழி விடு தூதுன்னு ஒண்ணும் இல்லை, இருந்து இருந்தா கோழி கறிக்கு சங்குதான். 

கடிதம் என்பது ஒருத்தரோட உணர்வை/கருத்தை பரிமாறுவது, அனுப்புனர் நீங்களா இருந்தாலும்,தன்னிலம் இல்லாமல் பொது நலன் கருதி நீங்க வேற யாரு பேரை போட்டுனாலும், அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பி விட்டீங்கன்னா, அவரும் அதை படிச்சிட்டு, விலாசத்திலே இருக்கிற நபருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவார். நாமளும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நாம விலாசம் போட்டவர் வீட்டு முன்னாடி போய் சோதனை செய்தது கொள்ளலாம். 

அதாவது நாம் எழுவது  அனுப்புறவங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, ஆனா நாம் நினைச்சதை சொல்வது. இப்படித்தான் அந்த காலத்திலேயே நானும் எல்லோருக்கும் கடிதம் எழுதுவேன். கடிதத்தை நினைக்கும் போது ஒரு கவுஜ தன்னாலே வருது நான் என்ன செய்ய, கவுஜைப் படித்து விட்டு நீங்களும் என்னை தேடலாம் ஆட்டோவிலே 

என் அஞ்சலின்  
தாள்கள் மட்டுமில்லை   
என் பேனாவின் மை மட்டுமல்ல 
என் கையும் அல்லவா காலியானது
வாங்கின அடியிலே

கையை ஓடிச்ச அப்புறமா கடிதாசி போடா முடியுமா, உடனே கடிதத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, வானத்தைப் பார்த்து ஒரு கவுஞ்சரை கவுந்து விட்டார் இழப்பு உனக்கு தான் தமிழ், தெலுங்கு, மலையாள தாய்களேன்னு வேலை தேட ஆரம்பித்தேன்.

கணித்துறையிலே ஆணி பிடுங்க ஆரம்பிக்கும் முன்னே மின் அஞ்சல் முகவரி ஒன்று ஆரம்பித்து, அதை தினமும் பார்த்து கொள்வேன், யாரவது எனக்கு எதுவும் அனுப்பி இருக்காங்களான்னு, ஒண்ணுமே வரலைன்னா எனக்கு நானே ஒரு மின் அஞ்சல் எழுதி அனுப்பி விடுவேன், நண்பர்கள் யாரவது பேசினால் மச்சான் என் மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் போடுடான்னு கெஞ்சி ஒன்னு அனுப்பி வைக்க சொல்லி இருக்கேன்.தப்பி தவறி யாரவது மின் அஞ்சலை எங்க இருந்தாவது forward பண்ணி இருந்தால், உடனே உலகத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன். வேலை கிடைத்ததும் பக்கத்திலே இருக்கிறவன்கிட்ட டீ குடிக்க போகணும் என்று கேட்கவும் மின் அஞ்சல் தான். அதற்கு பிறகு கடித தொடர்பு அறவே விட்டுப் போச்சி, பல வருடங்களுக்கு பிறகு கடிதம் அனுப்பும் வாய்ப்பு கிடைத்தது

    ஒரு முக்கியமான கோப்பை அனுப்ப வேண்டிய பொறுப்பு என் கிட்ட கொடுத்தாங்க, நானும் உடனே போய் பெடெக்ஸ் அலுவலகம் சென்று தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்தது, அங்கே இருந்த வெள்ளையம்மாவிடம் இது உலக மகா அவசரத்திலே போக வேண்டும் ஏதும் வழி இருக்கிறதா என்று கேட்டேன், அவங்களும் இருக்கிறது என்று சொல்லி, அந்த வகையைத் தேர்ந்து எடுத்து பணத்தைக் கட்டி விட்டு, அலுவலகம் வந்து சேர்த்தேன், வந்த அரை மணி நேரத்திலே, எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது, உங்களுக்கு ஒரு கடிதம் வந்து இருக்குன்னு, அப்ப எல்லாம் நான் கடை நடத்தலை, நடத்தி இருந்தா போய் வாங்கியே இருக்க மாட்டேன். எந்த கிறுக்கு பய இந்த நவீன காலத்திலேயே கடிதம் போடுறான்னு யோசித்து கிட்டே போனேன், கடிதத்தை பட்டுவாடா செய்பவர், என்னோட சொத்தை எழுதி வாங்குற மாதிரி என்னிடம் கை எழுத்து வாங்கிட்டு கடிதத்தை கொடுத்திட்டு போயிட்டாரு.

இந்த சம்பவம் நடந்த காலத்திலேயே நான் வாலிப புள்ளை,எனக்கு திருமணம் ஆகலை , நான் முன்னாடி போட்ட பல ஆயிரம் கடிதங்களுக்கு யாரோ ஒருத்தர் பதில் எழுதி விட்டார் என்று நினைத்து வேகமா திறந்து பார்த்தா, நான் அனுப்பிய கோப்புகள் எனக்கு அனுப்பி இருக்கு. கொலை வெறி கோபம் வந்தது, நேர வெள்ளையம்மாகிட்ட போனேன், நான் எப்போதுமே பெண்களிடம் கோபப் படமாட்டேன், அதுவும் கொஞ்சம் அழகா இருந்து விட்டால், அம்புட்டுதான், வாயிலே பல்லை தவிர வேற ஏதும் வராது, வெள்ளையம்மா கொஞ்சம் அழகா இருந்தாலும் நேர அவ கிட்ட போய் 

"என்ன வேலை பண்ணுறீங்க நீங்க, நான் அனுப்பிய கோப்பை எனக்கே திருப்பி அனுப்புறீங்க?"

 வெள்ளையம்மா உடனே "என்கிட்டே மனிச்சிக்கோ காக்க பயலே" ன்னு சொல்லிட்டு  என்னோட அஞ்சலை வாங்கி பார்த்து விட்டு 

"ஏய் எருவ மாடு, பெருநர் இடத்திலே இருக்கிறது யாரு பேரு?"

"என் பேரு?" 

"விலாசம்?"

"என்னோட அலுவலக் விலாசம்?"

"பின்ன உனக்கு அனுப்பாம, வேற யாருக்கு அனுப்புவா"

Sender,Receiver ன்னு சாதாரண ஆங்கிலம் எனக்கு புரியலை, ஏன்னா நான் இலக்கியவாதி, இலக்கிய ஆங்கிலம் தான் தெரியும், எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிய இருக்கு பாருங்க. இனிமேல கேள்வி கேட்ட என்னை கட்டை விளக்கு மாத்தை கொண்டு நாலு சாத்து சாத்துவா என்று கேள்வியே கேட்காம மறுபடி சரியான விலாசம் கொடுத்து விட்டு வந்தேன்.

 மின் அஞ்சல்ல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அனுப்புனர்ல அடுத்தவன் பெயரைப் போட்டு அனுப்புற சுகம், மின் அஞ்சல்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு,அதான் புலம்பிட்டு போகமுன்னு வந்தேன், மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு, இருந்தாலும் கொஞ்சம் வெயில் அதிகம் 


Monday, August 2, 2010

சொல் அணியும் பதிவர்களும்


கதை, கட்டுரை, மொக்கை, சூர மொக்கை, மரண மொக்கை,கவுஜ, மொக்கை கவுஜை இப்படி பலதரப்பட்ட துறைகளில் ஆராட்சி செய்தது ஞான பீட விருது, சாத்திய பீட விருது என்று பல விருதுகளை வாங்கி குவித்து இருந்தாலும், தமிழ்ல பல ஆண்டுகளாக எழுதிவந்தாலும் தமிழுக்கு இன்னும் சேவை செய்யலையே என்று ஒரு ஏக்கம், ஊத்திக்க எதுவும் இல்லாமல் அப்படியே குடித்த நெப்போலியன் போல மனதை குமட்டியது, அந்த குமட்டலின் குமுறலே இந்த கொலைவெறி.இதைப் படிக்கிறவங்களுக்கு ரத்தக் கொதிப்பு வரலாம், இதயம் நிக்கலாம், இருந்தாலும் நிர்வாகம் எதையும் பற்றி கவலைப் படாது.மருந்தும் வாங்கி தராது, ஏன்னா நிர்வாகமே திவால்.

அபச்சொல், பழிச்சொல், பண்புச்சொல் இப்படி பலவற்றை கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் சொல்அணின்னு எங்கயோ கேள்விப்பட்ட ஞாபகம்  இருக்கும், நாம பார்க்க போறது தமிழ் இலக்கணத்திலே வரும் சொல் அணி தான். என்னைப் போன்ற எழுத்தாளர்(?)களின் எழுதும் எழுத்தின் சொல்லழகும்,அதிலே புதைந்து இருக்கிற பொருள் அழகையும் சொல்லுறதுதான் அணி, 
ஒரு வாக்கியத்தோட இல்ல பாட்டோட சொல்லையும், பொருளையும் அணிந்து வருவது அணி(?). அவரு அப்படி எழுதி இருக்காரு, இப்படி எழுதி இருக்காரு, அதிலே உள்குத்து இருக்குன்னு 
சொல்லுறதும் அணிதான்(?).ஆக எழுதுற எல்லோருமே தனக்கு தெரியாமலே எதாவது ஒரு அணிவைகையிலே எழுதுறாங்க(?)

அணியிலே பலவகைகள் இருக்கும் போது சொல் அணிக்கும் மட்டும் ஏன் இவன் சொம்பு அடிக்கிறான்னு கேக்கலாம், மத்த அணிகள் எல்லாம் பின்னால வரும்.பொட்டி தட்டுறவங்க, எப்படி தான் கோடு(code) கிழிச்சாலும், அவங்களுக்கு தெரியாமலே அது திட்ட மாதிரியிலே(Design pattern) வருவது போல,நாம அன்றாடம் பயம் படுத்தும் வார்த்தைகளிலே அணிகள் நமக்கு தெரியாமலே வருகிறது.

இந்த சொல் அணியை ஆறு வகையாப் பிரிக்கலாம்,அதன் வகைகள் எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி. பல வருடத்துக்கு முன்னாடி படிச்சி இருப்பீங்க, இப்ப ஒவ்வொரு வகைப் பற்றி பார்க்கலாம்.

எதுகை:

ன் அளுக்கு அலம், இனுக்கு அள் தேதை.

நாக்கு பாக்குன்னதும் பக்குன்னுது பக்கி,பக்கி,

மேல இருக்கிற ரெண்டு வரியைப் பார்த்தீர்கள் என்றால் இரண்டாவது எழுத்து  ஒவ்வொரு வார்த்தைளிலும், ஒரே மாதிரி இருக்கும், இப்படி ஒரு வசனத்திலோ, கவுஜையிலே இரண்டாவது எழுத்து ஒழுங்கு பட வந்தால் அது எதுகை, வசனம் தானே இருக்கு, கவுஜை எங்கன்னு நீங்க கேட்கலாம், மேல உள்ள வசனத்தை வரி வரியா போட்டா கவுஜை,வரி வரியா போட்டதை மறுபடி ஒரு தடவை படிச்சா எனக்கு தாகூர் மாதிரி நோபல் பரிசே கிடைக்கும்

மோனை:

ண்ணே ரும்பே 

ண்ணால் காணவில்லை 
வுஜையால் ண்டேன் 
காதலைக் ண்டேன் 
ருவாடாகி காணமப்போனேன்
மேல இருக்கிற அகில உலகப் புகழ் பெற்ற கவிதையிலே, முதல் எழுத்தை நல்லா உத்துப் பார்த்தா ஒழுங்கு பட வருகிறது, அப்படி வந்தா அதுக்கு பேரு மோனை.

இதை எப்படி ஞாபகம் வைப்பது, எதுகையிலே வருகிற "எ" ன்னா எடுபிடி, எப்போதும் பின்னால வருவான், அதனாலே அது ரெண்டாவது எழுத்து. அது ரெண்டுன்னா மோனை முன்னாடி,
மேனா மினிக்கி எப்போதும் முன்னாடி வருவா. அதாவது முதல் எழுத்து.இதோட எதுகை மோனைக்கு மங்களம் பாடியாச்சி, இனிமேல வருவது சிலேடை.

சிலேடை:
ஒரு சொல்லையோ வாக்கியத்தையோ பிரிக்க பிரிக்க ஏகப்பட்ட பொருள் தருகிற மாதிரி சொல்லுறது. உள்குத்து மேல உள்குத்து வைத்து சொல்லுறது சிலேடை(?).

"அவன் துண்டை எடுத்து கொடுத்தான் அவள் வாங்கிகொண்டாள்."

அவன் என்பது யாராகவும் இருக்கலாம், கடைக்காரர், கட்டுனவரு, கடலை போடுறவரு இப்படி யாரானாலும் இருக்கலாம்.துண்டுக்கு இன்னொரு விளக்கம் என்னன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


கனவிலாதவன் = கனவில்+ஆதவன்
கனவிலாதவன் = கனவு + இல்லாதவன்
மேல இருக்கிறதைப் பிரிச்சா ரெண்டு அர்த்தம் வருது பாருங்க 

மடக்கு:
ஒரு வாக்கியத்திலே தொடர்ந்து வருகிற ஒரே உள்குத்து வேற பொருள்ள வரும். விளக்கம் வேணுமா ?
உள்குத்து உள்குத்து (திரும்ப திரும்ப திரும்ப படிங்க)
பின்வருநிலை:

     ஒரு வாக்கியத்திலே வருகிற உள்குத்து, ஒரே சொல்லா இருந்தாலும், இடத்துக்கு இடம் பொருள் வேறுபாடும், அதாவது ஒரே சொல்லைப் பயன் படுத்தி 
பல உள்குத்துக்களை திணிக்கலாம். அதுவே பின்வருநிலை(பின்னால் வருகின்ற நிலைப்பாடு(?))
  இந்த உள்குத்தை மூணு வைகயாப் பிரிக்கலாம்

 1) சொல் பின்வருநிலை அணி 
        ஒரு வாக்கியத்திலே முதல்ல வருகிற உள்குத்து சொல் பல இடங்களிலே வரும், ஆனால் இடத்துக்கு இடம் பொருள் மாறுபடும்.

மதத்துக்கு ஏங்கினேன் மதி மயங்கி 
மதம் பிடித்த யானையானேன்.
மனித நேயத்துக்கு ஏங்கினேன் 
மனிதனானேன்.

என்னைய எல்லாம் இப்படி கருத்து சொல்ல வச்ச அணி வாழ்க

 2) பொருள் பின்வருநிலை அணி 
    ஒரே உள்குத்தை மாறி மாறி வேற பொருள்ள சொல்லுறது, முதல் வரும் சொல்லின் பொருள், அதே அர்த்தத்திலே வேறு பெயருகளில் வரும்.

 3) சொல் பொருள் பின்வருநிலை அணி
       அதாவது ஒரே உள்குத்து ஒரு வசனத்திலே பல இடங்களிலே அதே பேரிலே வந்தாலும், ஒரே பொருளாய் இருக்கும்.

2 க்கும், 3 க்கும் எடுத்துகாட்டு ஏன் சொல்லலைன்னு நீங்க கேட்க மாட்டீங்க, இருந்தாலும் நானே சொல்லுறேன், பரீட்சையிலே எல்லா கேள்விக்கும் விடை எழுதி பழக்கம் இல்லை, இடுகைக்கு எழுதுவேனா?

அந்தாதி(அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்):

ஒரு வரியின்  முடிவிலே, அடுத்த வரியின் ஆரம்பம்.

கண்ணுக்கு காவல் காதல் 
காதலுக்கு காவல் கல்யாணம் 
கல்யாணத்துக்கு காவல் பந்தம் 
பந்தத்துக்கு காவல் தங்க நகை
தங்க நகைக்கு காவல் சேட்டு கடை.


 ஆதிஅந்தம் என்று  ஏன் இல்லன்னு தெரியலை, எனக்கு தெரிஞ்ச அறிவுக்கு நான் சொல்லுறேன், அதாவது ஒரு வரியின் முதல் வாக்கியம், அடுத்த வரியின் முடிவு வாக்கியமா வச்சா, அடுத்த வரியின் ஆரம்பம் ஒரு புது வார்த்தையா இருக்கும்.


பொறுப்பு அறிவித்தல் :
சொல் அணியை எதோ எனக்கு தெரிஞ்ச வகையிலே எழுதி இருக்கேன், குற்றம் குறைகள் இருக்கலாம், தமிழ் அன்னை மன்னிச்சி விடுற மாதிரி நீங்களும் மன்னிச்சி விட்டுடுங்க.சொல் அணிகளுக்கு என தமிழ் இலக்கியங்களிலே பல எடுத்து காட்டுகள் இருந்தாலும், அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார்னு எம்புட்டு நாளைக்கு சொல்லிக்கிட்டு திரிய, அதனாலே இப்படி மாத்தி யோசித்து இருக்கேன்.