Tuesday, March 23, 2010

செருப்படி விழும்

"செருப்படி விழும் இனிமேல என் பின்னாடி சுத்திகிட்டு அலைஞ்சன்னா?" அது தான் நான் முதல்ல அவனை பார்த்து பேசின வார்த்தை 


"இந்தா... நல்லா புது செருப்பா போட்டுட்டு வரும் போது அடி, இப்ப நீ போட்டு இருக்கிற செருப்பை நடுத் தெருவிலே விட்டுட்டு  போனா நாய் ௬ட மோந்து பார்க்காது, ஒரு கால் செருப்பு உயரமாகவும், இன்னொன்னு குட்டையாவும் இருக்கு, உங்க அப்பனை புது செருப்பு வாங்கி கொடுக்க சொல்லு, அப்புறமா வந்து என்னை அடி" 


அப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, என்னை அறியாமலே சிரிப்பு தான் வந்தது.


அவன் யாருன்னு சொல்ல வேண்டிய கட்டாயம் நிலை, ஒரு ஆம்புளை பையனை செருப்பை கழட்டி அடிப்பேன்னு சொன்னதுக்கு ஆண்கள் சங்கம் கடைஅடைப்பு, மூக்கு உடைப்புன்னு போராட்டம் நடத்தக் ௬டாது என்ற தொலை நோக்கு பார்வையிலே நான் விவரத்தை சொல்லுறேன்.எங்க ஊரு புளியங்குடியில இருந்து பேருந்திலே தினமும் எங்க ௬ட வருவான், நான் குற்றாலம் மகளிர் கல்லூரியிலே படித்து கொண்டு இருந்த நேரம், அவன் எங்கே போகிறான்,எதற்கு பேருந்திலே வருகிறான் என்று எல்லாம் எனக்கு தெரியாது.கொஞ்ச நாளைக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அவன் என்னையை பார்க்கத்தான் வருகிறான்னு,வார கழுதை சும்மா பாத்துட்டு போறதை விட்டுட்டு பேருந்திலே போற வார எல்லோரிடமும் என் ஆளு .. என் ஆளு சொல்லி வச்சி இருக்கான், என்னிடம் எல்லோரும் நீ அவன் ஆளா .. நீ அவ ஆளா ன்னு கேட்டு ஒரே நச்சு.நானும் கொலை வெறி கோவத்தை எல்லாம் அடக்கி கிட்டு அமைதியாதான் இருந்தேன்.


ஒரு நாள் என்னோட தலை முடியை பேருந்திலே நான் உட்கார்ந்து இருந்த கம்பி கவ்வி விட்டது என்பதற்காக,கோபத்திலே அந்த இருக்கையையே பேர்த்து எடுத்து வெளியே போட்டுட்டான்,அடுத்த நாள் விவரம் தெரிஞ்சி எனக்கு வந்த கோபத்திலே தான் அப்படி திட்டினேன்,என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி  முடி. 

அடுத்த நாள் வரமாட்டான்னு நினைச்சேன், ஆனா வந்துட்டான், பேருந்து கடையநல்லூர் பக்கம் போகும் போது, பேருந்தை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி, உள்ளே இருந்த அவனை இழுத்து வண்டிக்குள்ளே அள்ளி போட்டுட்டு போய்ட்டாங்க.என் ௬ட படிக்கிற புள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள்.நான் புகார் கொடுத்த மாதிரி.


அப்பத்தான் பேருந்து நடத்துனர் சொன்னார் "அரசாங்க பேருந்து, அவங்க அப்பன் வீட்டு சொத்துன்னா நினைச்சாங்க" நான் செய்ய வேண்டிய வேலையை அரசாங்கம் செய்து விட்டதுன்னு நிம்மதியானேன்.அந்த வருஷம் எங்க ஊரிலே மழையே இல்லை,இப்படிப்பட்ட அரை லூசு பையன் இருக்கிற இடத்திலே எல்லாம், நான் வர மாட்டேன்னு சொல்லி மழை கொல்லத்துக்கு கிழக்கே வரலை, எங்களோட பகுதி விவசாயிகள் எல்லாம் தவியா தவிச்சி போனாங்க


மூணு மாதம் கழிச்சி வெளியே வந்தான், சிறையிலே நல்லா நோண்டி நொங்கு எடுத்து இருப்பாங்க போல, கல் காளை மாதிரி உள்ளே போன அவன், தேவாங்கு மாதிரி ஆகி கொஞ்சம் நொண்டிகிட்டு  தான் வந்தான். 


திரும்பி வந்தவன் முன்னே மாதி இல்லாம என்கிட்டே பேச ஆரம்பித்தான், நானும் ஆரம்பித்தேன், இருவரும் பேசினோம், பேசினோம், இணைபிரியாமல் பேசினோம். அந்த வருஷம் எல்லாம் எங்க ஊரிலே விவசாயிகள் எல்லாம் கனமழையிலே நினைஞ்சி போய்ட்டாங்க,மழை விட்டாலும் எங்க பேச்சி மழை விடலை,பேசி முடக்கும் முன்னே என்னோட எங்க கல்லூரி படிப்பும் முடிஞ்சி போச்சி, படிப்பு முடிஞ்ச உடனே எனக்கு பேசி முடிச்சிட்டாங்க.என்ன செய்ய தெரியாம இருந்த நிலையிலே அவன் எங்க அப்பாவை வந்து பார்த்து பேச வந்தான் 


அவன்கிட்ட எங்க அப்பா "மதமா இருந்தா சுலபமா மாறிடலாம், ஆனா சாதியை எப்படி மாத்துறதுன்னு கேட்டாரு?"

"கும்பிடுற சாமியை மாத்தினா ஏத்துகிற மக்கள், இருக்கிற சாதிய மாத்துனா ஏத்துக்க மாட்டாங்களா?" பதில் கேள்வி கேட்டான்.

 ரெண்டு பேரும் நிறைய பேசினாங்க, ஆனா முடிவிலே நாங்க நினைச்சது நடக்கலை.  அதற்கு பின் நானும் அவனை பார்க்கலை.

கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை வீட்டு காரங்க ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தாங்க, அதிலே அவன் என்னை காதலிப்பதாகவும், எங்களை சேர்த்து வையுங்கள் என்று எழுதப் பட்ட கடிதம்.கல்யாண ௬ட்டம் கடிதத்தோட போனது.

அன்று வந்த அதே கடிதம் எங்களுக்கு பதினைந்து முறை வாசித்து காட்டப்பட்டது, எந்த ஒரு முறையும் யாரும் கடிதத்திலே இருக்கும் பையனை திருமணம் செய்து வையுங்கன்னு சொல்லலை, என் அப்பாவும் நினைக்கலை.

இந்த கடிதங்களை எல்லாம் காதலியை கை பிடிக்க முடியலை என்கிற ஆதங்கத்திலே எழுதியதாக நினைத்து அவனை அறிணையாக மாற்ற முயற்சிகள் நடந்தன, விஷயம் விபரீதம் ஆகும் முன்னே நானே சொன்னேன், அனைத்தையும் எழுதியது நான் தான், அது உண்மைதான் நானே எழுதியது தான், காதலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்திலே எழுதப் பட்டது, அதற்கு பின் எனக்கு திருமண மாப்பிள்ளைகளும் வரலை, நானும் கடிதம் எழுதலை.

இனிமேல கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு வேலை தேட அனுமதி கிடைத்தது, ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் வந்தேன், அவனும் பின்னாடி வந்தான்.இடைவெளி விட்ட பேச்சுக்கள் மீண்டும் தொடர்ந்தது.ஊரை விட்டு வந்துவிட்டோம், எங்க வாழ்கையை தீர்மானிக்கும் உரிமை எங்க கையிலே இருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய முயற்சி செய்யலை,நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா பத்தோட பதினோன்னா ஒரு மூலையிலே எங்க வாழ்க்கை ஓடி கொண்டு இருந்து இருக்கும். 


கடந்த இருபத்தி ஐந்து வருடமா சாதி விட்டு சாதி மாற சட்டம் வேண்டும் என போரடுறதினாலே எங்களை இந்த உலகம் அடையாளம் காணுது, இன்றைக்கு இந்தியாவிலே மிகப் பெரிய பத்திரிக்கையாகிய நீங்களும் என்னை சந்தித்து பேட்டி எடுக்குறீங்க, நாங்க ரெண்டு பேரும் காதலர்களாகவே செத்தாலும் வருங்காலத்திலே வரும் என்னைப் போன்ற சந்ததிகள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.நாங்க எங்க பயணத்தை முடித்தாலும், எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


Wednesday, March 17, 2010

அழகுப் பெண்களும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்


"கருப்பா என் ஆளுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தமாம், மாப்பிள்ளை அமெரிக்காவாம்"

இப்படி ஒரு பதிலை கேட்டத்தும் எனக்கு மருந்து கடைதான் ஞாபகம் வந்தது, அவன் என்ன நினைச்சி இதை சொன்னான்னு தெரியலை, ஆனா  நான் மனசிலே  இன்னைக்கு ஓசி சரக்கு கிடைக்க வழி செய்த அவன் காதலிக்கு நன்றி சொன்னேன்.காதல் தோல்வியை கண்டுக்காம விட்டா நான் நினைச்சது கிடைக்காம போயிடுமுன்னு, அவனோட மனசிலே நல்ல உரம் போட்டு மருந்து கடைக்கு போற அளவுக்கு தேத்திட்டேன், கடைக்கு போற வரைக்கும் அவனை அட்டை பூச்சா ஒட்டிக்கிட்டேன்.


இரவு எட்டு மணிக்கா போனோம், புலம்பலோட கட்டிங் போட ஆரம்பித்தோம், அவனுக்கு துக்கம் தொண்டை அடைத்தது, எனக்கு சந்தோசம் தொண்டை வரைக்கும். சந்தோசத்திலே அமெரிக்க மாப்பிள்ளைகளை

"மச்சான், இப்படி ஒண்ணு ரெண்டு நல்லா இருக்கிற பொண்ணுங்களையெல்லாம் அமெரிக்காகாரங்க உசார் பண்ணிட்டு போய்ட்டா, நாம  என்னடா பண்ணா?அவன் வந்து பொண்ணு கேட்டா இவங்க அப்பனுக்கு எங்கடா புத்தி போச்சி"

"நீ வேற அமெரிக்கா ன்னு சொன்னா ஒண்ணுக்கு ஒண்ணு இலவசமுன்னு ௬ட சொல்லுவாங்க போல"

"காலம் அப்படி இருக்கு, அமெரிக்காவிலே இருந்து பேய் பிடிச்சி வந்தாலும் நடு வீட்டிலே நாட்டியம் ஆடச் சொல்லி வேடிக்கை பார்ப்பாங்க"

"என்னையை ஏமாத்திட்டு அமெரிக்கா போற அவளுக்கு பாடம் காட்டுறேன்"


"ஆமா நாமளும் அமெரிக்காவிலே இருக்கிற நம்ம ஊரு புள்ளைகளை கல்யாணம் செய்யலாம்"

என்ன நினைத்து அந்த கேள்வியை கேட்டேன்னு தெரியலை, எனக்கு தெரிந்த வரையிலே அமெரிக்காவிலே இருக்கிற ஆண்கள் தான், அழகா இருந்து  படிச்சி முடிச்சது, படிச்சிகிட்டு இருக்கிறவங்களை கால் கட்டு போட்டு ௬ட்டிட்டு போறாங்க,ஆனா எந்த ஒரு அமெரிக்க இந்திய பெண்ணாவது என்னை மாதிரி அழகான பையனுக்கு வாழ்வு கொடுத்ததா நான் கேள்விபட்டதே இல்லை.

"நானும் அமெரிக்கா போய் அவ முகத்திலே கண்டிப்பா  கரியை பூசனும்"

"மாப்ள நானும் வாரேன்,போகும் போது நம்ம பாய் கடையிலே சொல்லி ரெண்டு கிலோ மரக்கரி எடுத்துட்டு போவோம்"

"நான் ஒரு லட்சிய பயணத்துக்கு போறேன், நீ எதுக்குடா வாற?"

"மச்சான் யாரிடமும் சொல்லாதே, என் ஆளையும் சிங்கப்பூர் காரன் கவ்விகிட்டு போகப் போறான்"

"யாருடா அது?"

"யார்டயும் சொல்லாதே மாப்ள, நம்ம கம்ப்யூட்டர் சயின்ஸ் குயில்"

"டேய்.. அவளுக்கு நீ இப்படி நினைச்சிகிட்டு இருக்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா தற்க்கொலை பண்ணிக்குவா?"

"என் மேல அம்புட்டு காதலா?"

"நீ எல்லாம் நினைக்கிற அளவுக்கு, அவ நிலைமை ரெம்ப தாழ்ந்து விட்டதே என்கிற அவமானத்திலே"

"எவ்வளவு குடிச்சாலும் இந்த விசயத்திலே ரெம்ப விவரமா இரு, உண்மைய சொல்லனுமுனா, அமெரிக்காவிலே தொடை ஆட்டம் நல்லா இருக்குமாமே, படத்திலே எல்லாம் பார்த்து இருக்கிறேன், நேரிலே பார்க்கணும் மச்சான்"

"த்து ..த்து ..த்து ..த்து .."


"உன் லட்சியம் உனக்கு பெருசு, என் லட்சியம் எனக்கு பெருசு"

சரக்கை காலி பண்ணிட்டு ரெண்டு பேரும் அடுத்த நாள் சாயங்காலம் வரை தூங்கினோம்.அடுத்த வாரத்திலே இருந்து அமெரிக்கா போற வழிகளை தேடினோம்.கிடைத்த தகவலின் படி நண்பன் சொன்னான்


" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால்  நாம அமெரிக்கா போகலாம்"

"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18  இருக்கு"


அது நாள் வரைக்கும் படிக்காத நாங்க ரெண்டு பேரும் கொலை வெறி படிப்பை ஆரம்பித்து அடுத்த ஒரு வருடத்திலே எல்லா அரியர்களையும்  முடித்து விட்டோம்.வருசக்கணக்கா படிக்காம இருந்து உலக படிப்பு படித்த  ரெண்டு பேரும் ரெம்ப களைப்பு மற்றும்  கடுப்பு ஆகி  GRE,டோபெல் முயற்சியை கை விட்டோம், இந்த இடைப்பட்ட கால கட்டத்திலே அவன் முன்னாள் காதலி அமெரிக்கா போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.அதற்குள்  கணனி துறையலிலே ஆணி பிடிங்கினா அகில உலகத்தையும் ஓசியிலே சுத்தலாமுன்னு கேள்வி பட்டு நாங்க ரெண்டு பேரும் கடை கடையா போய் விண்ணப்பங்கள் விநியோகித்தோம்.


அலுவலக வாசலிலே நின்று கொண்டு டீ குடிக்க யாரு வந்தாலும், தீப்பொறியா போய் விசாரிப்போம் வேலை ஏதும் இருக்கான்னு,
எங்களோட இடைவிடாத விண்ணப்ப மழையிலே நினைந்து போன அலுவலகங்கள் எங்களுக்கு வேலை கிடைத்த உடனே தான் நிம்மதி அடைந்தார்கள்.ஓசியிலே பீடி குடிச்சிக்கிட்டு இருந்த ரெண்டு பேரும் வெண்குழல் வாங்க ஆரம்பித்தோம்.


அவனுக்கு காதலி முகத்திலே கரி பூசனும், எனக்கு தொடை ஆட்டத்தை நேரிலே பார்க்கணும்,  இந்த இரண்டு லட்சிய பறவைகளும், இடைவிடா உழைப்பிலும், கூகிள் ஆண்டவர் தயவிலும் வளர்ந்தது, வளர்ந்த பின் அமெரிக்கா படத்தை பையிலே வச்சி சுத்தி கிட்டு இருந்த நாங்க ரெண்டு பேரும், அமெரிக்க மண்ணையே அள்ளி பையிலே போடும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு இனிய மாலை பொழுதினிலே நாங்க இருவரும் அமெரிக்கா செல்ல விமானம் ஏறி நியூயார்க் வந்து சேர்ந்தோம்.

அடுத்த ரெண்டு நாள்ல  நான் என்னோட தேடலை ஆரம்பித்தேன், அவன் தேடினது கிடைக்கலை, நான் தேடினது உடனே கிடைத்து, நியூயார்க்ல மூலைக்கு  மூலை இப்படி நிறைய கடைகள் இருக்கு. ஒரு கடைய பிடிச்சி உள்ளே போனோம்.


உள்ளே போய் கொஞ்ச நேரத்திலே எங்களுக்கு என்ன நடக்குதுன்னு புரியலை, கம்பியிலே ஆம்பளைங்க உடற்பயிற்சி செய்து கிட்டு இருந்தாங்க.

"மச்சான், நம்ம பார்த்த படத்திலே வெள்ளையம்மாவா இருந்தாங்க, இங்கே வெள்ளையப்பனா இருக்காங்க"

"டேய் விளம்பர பலகையை நல்லா பாத்தியா?"

"ஆமா, மச்சான் guy கிளப் ன்னு தான் எழுதி இருந்தது"

"எ  யில எவனோ பாதிய ஆட்டையைப் போட்டுட்டான் போல, அதான் எ, யு ஆகி இருக்கு"

"இவனுக கம்பியிலே தொங்குவதை பார்கவா நூறு டாலர் கொடுத்தோம், வாடா மச்சான் ஓடிப்போகலாம்"

வெளியே ஓடத் தயார் ஆனா எங்களிடம் கிளப் ஆளுங்க ஒரு பேப்பர் கொடுத்து எங்க உபசரிப்பு எப்படி இருந்ததுன்னு நீங்க பதில் எழுதி கொடுத்தா ஓசியிலே ஒரு பீர் கொடுப்போமுனு சொன்னாங்க, பினாயிலை  பீர் பாட்டில  அடைச்சி இருந்தாலே குடிக்கிற ரெண்டு பேரும் தலை தெறிக்க ஓடி வந்து விட்டோம்.

அந்த கோர சம்பவத்திற்கு அப்புறமா அக்கம் பக்கம் விசாரித்தால் தொடை ஆட்டத்துக்கு "ஜென்டில்மேன்ஸ்  கிளப்" ன்னு பெயராம், தொடை ஆட்டம் போட்டா "ஜென்டில்மேன்", அப்ப மத்தவங்க எல்லாம் "ஆர்டினரிமேன்?". கொஞ்ச நாளைக்கு அதை பத்தியே பேசலை, நண்பனோட லட்சியத்துக்கு நானும் பாடு பட ஆரம்பித்தேன்.

வந்து ஆறு மாசமாச்சி இன்னும் நண்பனோட லட்சியம் நிறைவேறலைன்னு புலம்புவான், ஒரு நாள் நான் கோபத்திலே

"மச்சான், முதல்ல இதயத்தை மாத்தினவா, கிட்னியை மாத்தினவான்னு, இப்படி முத காதல், முதல் முத்தமுன்னு தமிழ் பட கதாநாயகன் மாதிரி வசனம் பேசிகிட்டே இருந்தா, அடுத்த காதல் எப்படி கிடைக்கும், அவளை தேடி அலைந்த நேரத்துக்கு, நடன விடுதிக்கு போய் ஓசியிலே ஒரு பீர் வாங்கி கொடுத்து இருந்தால், இன்னைக்கு விரலுக்கு ஒண்ணை தேத்தி இருக்கலாம். நடந்ததை நினைச்சி கவலைப் பட்டுகிட்டு நடக்கப் போற நல்லதை விட்டுறாதே"

என்னைய பார்த்து முறைச்சவனை சரக்கு அடிக்கும் போது மன்னிப்பு கேட்டுட்டு சமாதானம் ஆகிட்டேன்.ரெண்டு மாதத்துக்கு பின்  நியூஜெர்சி யிலே "எடிசன்" என்ற நகருக்கு எங்க ௬ட படிச்ச இன்னொரு தறுதலையை பார்க்க சென்றோம், எடிசன் நகரின் பேரை எல்லாம் இனிமேல காந்தி நகர்ன்னு மாத்தாலாம், அவ்வளவு இந்தியர்கள்.புது  நண்பன் கமரா வாங்கி நல்லா புகைப்படம் எடுத்து விட்டு, அதை கணனியிலே ஏற்றி விட்டு   திரும்பக் கொடுக்க "வால் மார்ட்" க்கு போனோம்.

கடையை சுத்தி பார்த்துகிட்டு வரும் போது என்னோட பெயரை சொல்லி யாரோ ௬ப்பிட்டாங்க, திரும்பி பார்த்தால் நண்பனோட முன்னாள் காதலி ஸ்டராலர்ல குழந்தையோட அடையாளம் கண்டு பிடிக்கவே ரெம்ப நேரமாச்சி, சந்தோசத்திலே நண்பனிடம் சொல்ல
திரும்பிப் பார்த்தேன். பின்னால் கொஞ்ச தூரத்திலே இருந்து எனக்கு சமிக்கை செய்தான், நான் இங்கே இருப்பதாக சொல்ல வேண்டாம் என்று, நானும் அவனுடன் இருப்பதாக சொல்லவில்லை. நாங்கள் இருவரும் நலம் விசாரித்து கொண்டோம், அடுத்த வாரம் தன்னோட மகன் பிறந்த நாள் இருப்பதாகவும், கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னாள். நானும் வருகிறேன் என்று தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன், கடையிலே இருந்து வீட்டுக்கு வரும் போது நண்பனிடம் கேட்டேன்.

"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி சத்தம் போட்ட, அவளைப் பார்த்த உடனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஆகிட்ட"

"படிக்கிறப்ப எவ்வளவு அழகா இருந்தா, இப்ப என்னவோ அவளைப் பார்க்கவே முடியலை, இது வரைக்கும் அவளோட அழகான முகம் மட்டுமே எனக்கு ஞாபகம் இருந்தது, அந்த வசீகர முகத்தை பார்த்தவன், இப்ப இருக்கிற உருமாற்றத்திலே என்னோட காதல் எல்லாம் கடல் கடந்து போய்விட்டது.ஏன்டா அவளைப் பார்த்தேன்னு யோசிக்கிறேன்"

எனக்கு உடனே சரக்கு ஞாபகம் வந்தது "மச்சான், நம்ம ஊரு சகிலா பேருல ஒரு சரக்கு இருக்காம், இன்னைக்கு அது வாங்கலாம்"

"அது டகிலாடா"

"அது என்ன எழவு லாவோ"

"இல்லை மச்சான், இனிமேல சரக்கு அடிக்க மாட்டேன்"

"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்"

"இந்த மாசம் தண்ணீர் சிக்கன மாதம், அதனாலே குடிக்கிற பச்சை தண்ணியை தவிர வேற எல்லா தண்ணியையும் விடப் போறேன்"

"மச்சான்.. உன்னோட முன்னாள் காதலியை சந்திக்க முடியாத சோகம் எல்லாம் யோசித்து பாருடா ஒரு நிமிஷம்"   அப்படியே பேசிக்கொண்டு இருந்த என்னை சட்டை செய்யாமல் போய் கொண்டு இருந்தான்.

இப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.

Tuesday, March 9, 2010

கணித்துறை அலப்பறைகள்

பொருளாதாரசரிவிலே இருந்து விழுந்த நிறுவனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக்கொண்டு வருகின்ற நிலையிலே,இவ்வளவு நாளா அலுவலகத்திலே மனித வள மேம்பாட்டு துறையின் சுறுசுறுப்பு ஆட்டம் கொஞ்சம் சூடு குறைய ஆரம்பித்தது.அலுவலகத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தவிட்ட தொழிலாளர்களையும், ஐந்து வருடத்திற்கு முன் கொடுத்த அனுபவ சான்றிதழை சரி பார்த்ததிலே நீங்க ஏமாத்தி இருப்பதாக தெரிய வந்தது என்று சொல்லி அவர்களுக்கு கல்தா கொடுத்தார்கள், இப்படி இந்திய புலனாய்வு துறை வேலை, துப்பு கேட்டு தூக்கி எறியும் வேலை கலகல வென நடந்து கொண்டு இருந்த காலம். இப்போது மீண்டும் சந்தை நிலவரம் தலை தூக்க ஆரம்பித்ததும்  கடு கடுன்னு இருந்த முகத்திலே இப்ப மெல்லிய சிரிப்பு இழையோட தூக்கி எறிஞ்சவங்களைஎல்லாம் துண்டு போட்டு தேடி மீண்டும் வேலையிலே சேருங்கள் என்று அன்புக்குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள். 


நானும் அவங்க பட்டியல்ல இருந்தாலும் நான் பிடிங்கி கொண்டு இருந்த ஆணிக்கு அமெரிக்க துரைமார்கள் மூலமா  கல்லா நல்லா கட்டி கொண்டு இருந்ததாலே நான் தப்பித்தேன், இப்போது நிலைமை சரியாகி விட்ட நிலையிலே வேண்டா வெறுப்பாக பல்லை கடித்து கொண்டு இருந்த சக பயணிகள் விட்டா போதும் என ஒரே ஓட்டமாக அலுவலகத்தை விட்டு காவிரி வெள்ளம் போல வெளியே போய் கொண்டு இருந்தார்கள், முன்னாடி ஆள் அதிகம் வேலை குறைவு, இப்ப வேலை அதிகம் ஆள் குறைவு, ஆனா இந்த ரெண்டு நிலையிலும் அலுவலக நிகர லாபம் குறையலை.லயல்டிக்கு டகால்டி காட்டி டாட்டா காட்டிவிட்டு நிறைய பேர் வெளியே நல்ல சம்பளம் கிடைத்த வேலைக்கு சென்று விட்டார்கள். அதனாலே மீண்டும் ஆள் எடுப்புக்கு மனிதவளம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தார்கள், ஆணியே பிடுங்காம ஆணிவேரா இருக்கிற ஒரு துறை இதுதான். 


நான் வழக்கம் போல தாமதமா வர ஆரம்பித்த காலம், முன்னாடி எல்லாம் அலுவலக அடையாள அட்டையை முகத்திலே ஒட்டிகிட்டு திரிந்த காலம் போய் அலுவலகம் நுழைந்த உடனே அடையாள அட்டையை சட்டை பைக்குள் மறைத்து வைத்து விட்டு உயர் தூக்கி இயந்திரத்தின் முன்னே காத்து கொண்டு இருந்தேன். கதவு திறந்தது உள்ளே சென்றேன்.


அதற்குள் வெளியே இருந்து ஒரு குரல் "காத்து இருங்கள் நானும் வருகிறேன்" என்றதை கேட்டு கதவின் குறுக்கே கையை நீட்டினேன், அதற்குள் குரலுக்கு சொந்தக்காரியும் வந்து சேர்ந்தாள்.நான் வேலை இல்லாம திரிந்த நேரத்திலே உடம்பிலே வியர்வை நாற்றம் எட்டு ஊருக்கு அடிக்கும், இப்ப எல்லாம் பாதி குளியல் நறுமண தைலத்தில் தான்.சில சமயங்களிலே வாசனை திரவியத்தை வைத்தே குளியலை முடித்து விடுவேன். அவள் உள்ளே வந்ததும் ஒரு வாசனை குடலை பிரட்டி கிட்டு வந்தது, சரக்கு அடிக்காமலே வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வு, என் சட்டையை முகர்ந்து பார்த்தேன், தைல வாசனை நல்லாவே இருந்தது, அவளைப் பார்த்தேன்,அவளோட தலை முடியிலே இருந்து தான் வந்து இருக்க வேண்டும்,விளக்கெண்ணையா இருக்கலாம் என நினைத்தேன்.விளக்கெண்ணை வாசத்திலே அவளை என்னால சரியா கவனிக்க முடியலை, எப்படா எட்டாவது மாடி வரும் என்று காத்து கொண்டு இருந்தேன்.வந்த உடனே முத ஆளா ஓட்டம் எடுத்தேன்.


அலுவலத்திற்குள் ஒன்பது மணிக்குள் நுழைந்தாலும் இருக்கைக்கு செல்லும் போது குறைந்த பட்சம் மணி 11 ஆகும், உலக கதை எல்லாம் பேசி விட்டு, நண்பர்களுடன் விளக்கெண்ணை கதை எல்லாம் சொல்லி முடிச்சிட்டு,ஓசியிலே மீண்டும் கொடுக்க ஆரம்பித்த டீ யிலே நாலு டீ குடித்து விட்டு எனது இருக்கைக்கு சென்றேன்.கடா வெட்ட பூசாரியை காணாம ஆடுகள் எல்லாம் முழிச்சிகிட்டு இருக்கிற மாதிரி எல்லோரும் என்னை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தார்கள், அவங்க பார்த்த பார்வையிலே எங்கே என் வேலைக்கு கல்தா கொடுத்து விட்டார்களோ என்று நினைத்தேன்.  என்னை பார்த்து திட்ட மேலாளர் 


"உனக்காகத்தான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறோம்"


நான் கால் வச்ச நேரம் திட்டத்துக்கு சங்கு ஊதிட்டாங்களோன்னு பயத்திலே 

"என்ன விஷயம்?"

"நம்ம திட்ட குழு  உறுப்பினர்களோட அறிமுகம் இருக்கு, அது முடிச்ச உடனே ஆன்சைட் கோ ஆர்டினட்டர் ௬ட பேசணும்"

ஆன்சைட் கோ ஆர்டினட்டர்  பெயரை கேட்டாலே இந்தியாவிலே வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு கோபம் தான் வரும்,மென்பொருள் துறை  வாடிக்கைக்காரர்கள் எல்லாம் சாமி மாதிரி, ஆனா இவரு பூசாரி மாதிரி, இவரு சொல்லுறதை தான் நாங்க கேட்கணும், இவரோட வேலை என்னன்னா, சாமி பன்னிகுட்டி பக்கடா சாப்பிடுற மாதிரி கொடுன்னு சொன்னா, அதை நம்மகிட்ட விளக்கி சொல்லி குறைந்த பட்சம் ஒரு கழுதையையாவது செய்து முடிக்க வைக்கவேண்டியது இவரோட கடமை.


நான் சொன்னதை நீ செய்யலை, நீ எங்களுக்கு சரியா சொல்லைலைன்னு ஆன்சைட், ஆப்ஷோர் ரெண்டு கும்பலும் கொலைவெறி குற்ற சாட்டுக்களை அள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அதனாலே என்னவோ எனக்கு அந்த பேரை கேட்டாலே கொஞ்சம் கோபம் வரும், எங்களுக்கு எல்லாம் மீட்டர் ரூபாயிலே ஓடுது, அவருக்கு மீட்டர் டாலர்ல ஓடுது.

இம்புட்டு நேரமா உலக கதை பேசிகிட்டு இருக்கியே, நீ என்னடா வேலைபன்னுற நீங்க கேட்க மாட்டீங்க, அதனாலே நானே சொல்லுறேன்.நான் தான் இந்த திட்டத்துக்கு நிர்மாணிப்பவர்(architect).

கேள்விகேட்ட திட்ட மேலாளர்கிட்ட நான் இன்னும் பதிலே சொல்லலைன்னு ஞாபகம் வரவே, அவரிடம் நான் இன்னும் திட்ட உறுபினர்களை சந்திக்கலைன்னு சொன்னேன்.அவரு என்னிடம் முதல்ல அறிமுகப் படுத்தினார், எங்க டீம்ல ஐந்தாவது ஆளா விளக்கெண்ணை அழகியும் இருக்கிறாள்ன்னு எனக்கும் அப்பத்தான் தெரியும். 

ஆன்சைட் கோ ஆர்டினட்டர் முகத்தை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, அதனாலே எங்க ப்ராஜெக்ட் டமேஜெர் எங்களிடம் அலுவலக மென்பொருள்ல இருந்து அவரோட புகைப் படத்தை காட்டி கொண்டு இருந்தார், நானும் பார்த்து வைத்து கொண்டேன் பிற்காலத்திலே பயன்படும் என்று, ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை, அதற்குள் தொலைபேசி மணியும் அடித்தது.

(அலப்பறைகள் தொடரும்)  


Monday, March 8, 2010

சாக்கடை கவிஞன்

மூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் பொறுக்கிட்டு அலைவேனா, அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க.

நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.நீங்க கேட்பீங்கன்னு எதிர் பார்த்து இருந்தா இப்ப நான் சுத்துற கொசுவத்திய எப்படி சுத்த முடியும்.இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிகைப்பூ போல நறுமணம் வீசிக்கிட்டு இருக்கிற உள்ள எரிமலை எப்படி வெடிக்கும்? 


ஒரு பிஞ்சி மனசிலே விழுந்த இந்த (க)விதை தான் அது, அன்றைக்கு ஒழுங்கா தண்ணி  ஊத்தி இருந்தா இன்றைக்கு வானம் பார்த்த பூமியா நான் ஏன் கஷ்டப்படனும், நானும் ஒரு வில்லியம் ப்ளக் (ஆளு பேரு தான் அப்படி, ஆனா வெள்ளைகார துரையாம்)  மாதிரி ஒரு பெரிய கொலைவெறி கவிஞன் ஆகி, அவரு ஒரு விஷ மரத்தை கொடுத்து மாதிரி, நான் ஒரு கள்ளிச்செடியையாவது பரிசு அளித்து இருப்பேனே!!


கீதாலஞ்சலி கொடுத்து நோபல் பரிசு வாங்கின தாடி தாகூர் மாதிரி நானும் ஒரு கும்மியாஞ்சலி கொடுத்து, எனக்கும் ஒரு கபாலி விருது(?) கொடுத்து இருப்பாங்க.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கவுஜை எழுதினேன்.


 மழையே வா 

எருவமாடு 
பூமி தாகமா இருக்கு 
எருவமாடு 

எருவமாடு.. எருவமாடுன்னு ரீங்காரம் செய்கிறது நான் இல்லை எங்க அம்மா, நான் எழுதிய அந்த காப்பியம் எனது மதிப்பெண் அட்டையிலே, அப்புறமா கவிதை தாயை தரிசிக்க முடியவில்லையே என்று நான் அழலை, என் தாய் அடித்த அடி தாங்காம வலியிலே அழுதேன், அதற்காக நீங்களும் அழக்௬டாது.ஒரு உலக கவியாக மாறவேண்டிய நான் அங்கே கிள்ளி எறியப்பட்டேன்.

இப்படி முத கவுஜையிலே சோர்ந்து போனாலும், அடுத்து ஆறாம் வகுப்பு படிக்கும் போது அம்மு இங்கே வா வா 
ஆசை முத்தம் தா  

கடைப்பக்கம் வாறவங்களுக்கு நல்லாவே தெரியும், இது வாத்தியாருக்கு தெரியுமா? அவரு, நான் ௬ட படிக்கிற புள்ளையத்தான் சொல்லுறேன்னு ஒரு வட்டம் போட்டு என் கால்ல கம்பை வச்சி நல்லாவே கட்டம் போட்டாரு.தேசியகவி அங்கேயே மண்டைய போட்டுட்டாரு.அதோட விடலை விதி வலியது ன்னு சொல்லுற மாதிரி

வில்லயம் ஜக்கு பீர் சானட் எழுதி ரெம்பவே கலவர படுத்தினார்னு கேள்விப்பட்டு பன்னிரண்டு முடிச்ச உடனே  வெட்டியா சுத்திகிட்டு இருக்கேன் வீட்டுக்கு போன காஞ்சி கிடைக்காதுன்னு தெரியும், சாக்கடையிலே விளையாடி கொண்டு இருந்த பன்னி குட்டிகளை பார்த்து  ஒரு கவுஜ கிடைத்தது.

நீங்க சிக்கனமா இருந்தா
நாங்க ஏன் சாக்கடையிலே 


அப்படின்னு  பொல்லாத கொலைவெறி தத்துவத்தை சொல்லிபுட்டேன்னு பக்கத்திலே போய்க் கொண்டு இருந்த வாகனம் என் மேல சகதியை அள்ளி வீசிட்டு போயிட்டது, கொஞ்ச நேரத்திலே பன்னி எது நான் எது கண்டு பிடிக்க மக்கள் ரெம்பவே சிரமப்பட்டு இருக்காங்க. 

ஜக்கு பீர், ப்ளக், தாடி தாகூர் தலை தெறிக்க ஓடிட்டாங்க, சரி கவிப்பேரசு மாதிரி சினிமாக்கு பட்டு எழுதலாமுன்னு போட்டேன் ஒரு மெட்டு  

நானும் தட்டினேன்
நீயும் தட்டின
சத்தமே வரலை
நான் உன்னை தட்டினேன்
நீ என்னை தட்டினா
சத்தமே வரலை
ரெத்
மா வருதே !!!!!!! 


இப்படி ஒரு கலவரப் பாட்டு எழுதினேன்.தமிழகத்தின் தேசிய கீதமாக ஒலிக்க வேண்டிய பாட்டை கிழிச்சி போட்டுடாங்க, அது சொல் பிழையா, பொருட் பிழையா, நான் விடுற எழுத்துப் பிழையான்னு ௬ட சொல்லலை.என்ன காரணமுனா இந்தி பாட்டு படிக்கிறவங்க இதை தமிழ்ல பாட முடியாதாம், இந்தியிலே படிக்கிறவங்க தமிழ்ல படிக்க முடியாதான்னு கேட்டேன், அவங்களுக்கு இந்தி மட்டும் தானே தெரியும், அதனாலே அவங்க படிக்கிற மாதிரி கை, சை, காபீர், குபீர் ன்னு மாத்துங்கன்னு சொல்லிட்டாங்க.கொலைவெறி கோபம் வந்து விட்டது,நான் சொன்னேன்   


"சகானா சாரல் தூவுதோ"

எழுதினா இந்தாளு

"சகானா சாறல் தவ்வுதோ"

எதோ இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு.

"அன்பா..வாளை எடு அழகைச் சாணையிடு!"

அப்படின்னு எழுதினதை

"அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு"

என்னய்யா இது,வாளியை எடு சாணியை அள்ளுன்னு. போர் களத்திலே படிக்க வேண்டிய பாட்டை இப்படி வைக்கப்போர் களத்திலே படிக்கிற மாதிரி படிக்கிறவங்களை வச்சி எதற்கு படிக்க சொல்லனுமுன்னு கேட்டேன்.நவநாகரிகம் தெரியாத ஆளுக்கு இங்கே வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க.வந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாமுன்னு புதுப் பாட்டு எழுதி கொடுத்தேன்.

வள வலய வாயில் போடு
பல பலய பையிலே போடு

கொல கொலையை கொல்லையில் போடு
அட அடையை அடுப்புல போடு

மல மலைய மடியில போடு
தல தலைய தலைல போடு

சல சலய சாக்குல போடு
கரு கருவ கண்ணுல போடு

துரு துருவ தூக்கி போடு
இதை எழுதுணவனை எண்ணைல போடு

படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு
மல மலனு மண்டைய போடு

எழுதி கொடுத்த உடனே இந்த வருசத்தோட இமாலய வெற்றி பாட்டு இது ன்னு சொல்லிட்டாரு.அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனுமுன்னு இன்னும் காத்துகிட்டு இருக்கேன்.


Thursday, March 4, 2010

காவி பற்றி பதிவர்கள் கருத்து என்ன?

குடுகுடுப்பை : 
 அச்சச்ச்சோ அரே துண்டு  பாய் .. நிம்மல் அச்சா.. அச்சா சொல்லுறான். கவுஜையா சொல்லுங்க.. நான் எதிர் கவுஜ போடுறேன், ஆனா கருத்துக்கெல்லாம் எதிர் கருத்து சொல்லி பழக்கம் இல்லை.


வானம்பாடிகள் :
காவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த
பாட்டு).


நான் இப்படித்தான் ஒண்ணு எழுதிபோட்டு அப்புறமா கடைய சாத்திட்டேன்.


ஈரோடு கதிர் :
காவியைப் பத்தி பேசும் அதிகாரத்தை யாரு கொடுத்தது, உடைத்து எரியுங்க(அது சரி: இன்னும் நட்சத்திர வாரம் முடிஞ்சது ஞாபகம் இல்லை போல இருக்கு).பழமைபேசி:
காவியம், காப்பியம், ஓவியம், செப்புயம், இலக்கணம், இலக்கியம் இவைகளைப் பற்றி தமிழிலே கேளுங்க பதில் சொல்லுறேன்.முகிலன் :
இதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.

வால்பையன் :
காவித்துணி, வெள்ளைத்துணி, பச்சைத்துணி எல்லாம் ஒண்ணு தான், போலிகளை நம்பாதீர்கள்.பா.ரா :
காகத்தை பார்த்து காக்கா என்றேன்
வியந்து பார்த்து விட்டு சொன்னது
விகடகவி.. விகடகவி 

ஜெரி ஈசானந்தா:
ஆனந்தா பவா.. ஈசானந்தா பவா.


ஷங்கர் :
தொடர் கதையா இருந்தா சொல்லுங்க பாகம்.. பாகம் மா எழுதுறேன்.

அத்தரி :
அண்ணாச்சி.. வீட்டிலே ஊருக்கு போய் இருக்காங்க, வந்த உடனே கேட்டு சொல்லட்டுமா.
க.பாலாஜி :
முத்தல்ல  என்னோட விபரப்பட்டையிலே இருக்கிற படத்தை பார்த்து விட்டு வந்து கேளுங்க.. பதில் சொல்லுறேன்.

வில்லன் :
யோவ் பிரச்சனை ஆரமிக்கும் முன்னே என்கிட்டே கேட்டு இருந்தா, அருவா கம்போட வந்து இருப்பேன்,எல்லாம் கடைய கட்டுன அப்புறமா வந்து கணக்கு கேட்டா.
 அதுசரி :
விவகாரம் பத்திய எல்லா இணைப்பையும் கொடுங்க, பார்த்து விட்டு தனியா இடுகை போடுறேன்.

ராஜ நடராஜன்:
நான் துண்டு போட்டுகிறேன்ன்னு  பின்னூட்டத்திலே ஆரம்பித்து வைத்தேன், அதை நீங்க எப்படி எப்படி எல்லாமோ பயன் படுத்திகிட்டீங்க, அதனாலே நான் பேசுறதுக்கு காப்புரிமை வாங்கி வச்சிக்கிட்டு வந்து கருத்து சொல்லுறேன்.

நசரேயன் :
காவிய ரெண்டா மடிங்க, வெள்ளையும் ரெண்டா மடிங்க, பக்கத்திலே பக்கத்திலே வையுங்க,பச்சையும் ரெண்டா மடிங்க, வெள்ளைக்கு கீழே வையுங்க, ஒரு சக்கரத்தை போட்டு 24
கால் போடுங்க, போட்ட வுடனே சக்கரத்தை வெள்ளையிலே வையங்க.

(பின்புலத்திலே ஜனகன மனகன என்று பாடல் ஓட எல்லோரும் எழுந்துவிட) 

ஆக என்ன ஒரு தேசபக்தி


(எல்லோரும்: எந்திரிச்சது பாட்டுக்கு இல்லை, உன்னை அடிக்க ஓடிரு.. ஓடிரு)
 


Monday, March 1, 2010

நியூயார்க் ரசிகன்


பல நாளுக்கு அப்புறம் இந்திய தொலைக்காட்சியிலே ரிமோட் நின்றது, 
நான் நியூயார்க்ல சந்திச்ச அதே நடிகையோட பேட்டி போட்டுக்கிட்டு இருந்தாங்க, ரெம்ப ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்,அதிலே ஒரு கேள்வி கேட்டாங்க.

"உங்களுக்கு இவ்வளவு ரசிகர் ௬ட்டம் இருக்கு, நீங்க மிக பிரபல புள்ளிகளிலே ஒருவர், உங்க மனசை கொள்ளை கொண்டு போகிற ஆணை  இனிமேல தான் பார்க்க போறீங்களா?"  

"ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், நியூயார்க்ல சந்தித்து இருக்கேன், இன்றைக்கு என்னோட காதலுக்கு எவ்வளவோ பேரு காத்து கிட்டு இருக்கும் போது, என்னையும் ஒரு சக மனுசியாக பாவித்த ரசிகர் ஒருவர் தான் என் இதயத்தை கொள்ளை கொண்டு போனவர், என்னோட காதலையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே மதித்தார், அதில் இருந்து என்னோட அழகு, கர்வம் எல்லாம் மறந்து நான் ஒரு சாதாரண பெண்ணாவே எப்போதுமே நினைச்சுக்குவேன், அதுவே என்னோட வெற்றிக்கு ஒரு காரணம்"

இந்த பதிலுக்கு அப்புறம் என்னோட கொசுவத்தி சுத்த ஆரம்பித்து, குளிர்காலத்திலே வெளியே போக முடியாம பனிக்கரடி மாதிரி வீட்டுக்குள்ளே ஒளிந்து கிடந்தாலும், வெயில் காலங்களிலே நியூயார்க் நகரை சுற்றி பார்ப்பது தான் பொழுது போக்கு, ஹட்சன் ஆற்றின் ஓரத்திலே இருக்கும் நியூயார்க் நகரை அடுத்த கரையான நியூஜெர்சியிலே இருந்து பார்க்கும் போது நியூயார்க் நகர கட்டங்கள் எல்லாம் சுவரிலே வரையப் பட்ட ஓவியம் போல இருக்கும், அதை ரசித்து கொண்டு இருந்த ஒரு காலை பொழுதிலே , என் கண் எதிரே மெதுவாக ஓடிக்கொண்டு இருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்தேன், அதற்கு பின்னால் சூட்டிங், கட் என்று ௬விகொண்டு இருந்த கும்பலை காவல் துறை அதிகாரிகள் வளைத்து அவர்களை எல்லாம் கைது செய்யும் முயற்சியிலே ஈடுபட்டு இருந்தார்கள், அதைத் திரும்பி பார்த்த அந்த  பெண் கீழே விழுந்து விட்டாள். 

கீழே விழுந்த அவளை தூக்கி விட எத்தனித்தேன், அதற்குள் அவள் "நான் ஒரு இந்தி நடிகை, நான் இங்கே சூட்டிங் வந்தேன், பின்னால் இருப்பவர்கள் எல்லாம் என்னுடன் வந்தவர்கள்."  

"இங்கே நீங்க சூட்டிங்ன்னு சொன்னா உங்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று உள்ளே தள்ளிடுவாங்க, பிலிம்மிங் என்று சொல்லணும்" என்று சொல்லி முடிக்கும் முன் அவளும் எழுந்து விட்டாள்.

"நீங்க இப்ப அங்கே போனீங்கன்னா உங்களையும் கைது செய்வாங்க, என் ௬ட வந்தா உங்களை நான் நீங்க தங்கி இருக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போறேன்."அடுத்த ஒரு மணி நேரத்திலே அவங்க தங்கி இருந்த ஹோட்டலை அடைந்தோம், அங்கே இவர்கள் தங்கி இருந்த அறைகள் எல்லாம் காவல் துறையால் சீல் வைக்கப் பட்டு, அனுமதி மறுக்கப் பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.வேறு வழி இல்லாததாலே என்னுடன் வர சம்மதித்தாள்.ஒரு வாரத்திற்கு அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்,இந்த நாட்களிலே அவளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து,  நியூயார்க் நகர் முழுவதும் எங்கள் காலடி படாத இடம் இல்லாத அளவுக்கு  நடந்தே சுத்தி வந்தோம், சுதந்திர தேவி சிலையை பார்த்து கொண்டு இருந்த போது, அங்கே வந்த தமிழ் நண்பர்கள்  சிலர் அவர்களுக்குள்ளே எங்களைப் பார்த்து 

"மச்சான்..கருங்குரங்கு அழகு கிளியோட சுத்துரத்தை இப்பத்தான் நேரிலே பார்த்து இருக்கேன்" கேலி பண்ணுனாங்க. வயத்து எரிச்சலா இருக்குமுன்னு நினைச்சிகிட்டேன். அந்த வார முடிவுக்குள்ளே பட குழுவினர் தகுந்த ஆவணங்களை காட்டி விடுதலை அடைந்தார்கள், மீண்டும் படப் பிடிப்பு ஆரம்பமானது.படப் பிடிப்பு அடுத்த நாற்பது நாட்களுக்கு நடந்தது.


நான் பள்ளிக்கே  நாற்பது நாள் தொடர்ந்து போனதில்லை, ஆனா அவளை நாற்பது நாளும் பார்க்கப் போனேன்.சில சமயங்களிலே படத்திலே நடித்த நாயகனுக்கும் காதிலே புகை வரும் நாங்க போடுற கடலையிலே,ஆரம்பமே இல்லை என்றாலும் முடிவு கண்டிப்பா இருக்கும் என்ற விதிக்கு ஏற்ப, எங்க கடலைபயணமும் முடிவுக்கு வந்தது, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் தாயகம் திரும்ப தயார் ஆனார்கள்.       


அவளை வழி அனுப்ப நியூயார்க் விமான நிலையம் சென்றேன், நிறைய பேசிக்கொண்டே வந்தாள், நானும் தான், போகும் நேரமும் வந்தது, என்னைப் பார்த்து ஐ மிஸ் யு ன்னு சொன்னா, இந்த மிஸ் எதுக்கு என்னை மிஸ் பண்ணுறாங்கன்னு நினைச்சேன்.


எங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பாசனைகள் எல்லாம் ஆங்கிலத்திலே இருந்தாலும்,பதிவுலகிலே தமிழ், ஆங்கிலம் என்று பல துறைகளிலே கலக்கி கொண்டு இருந்த மணி அண்ணனை தொடர்பு கொண்டேன்.கதையை எல்லாம் பொறுமையா கேட்டாரு பதிலும் சொன்னாரு "ஐ மிஸ் யு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கு, ஆங்கிலத்திலே யு ன்னா, நீ, நீங்க போன்ற ஒருமை, பன்மை எல்லாம் ஒரே வார்த்தையிலே இருக்கு, அதனாலே யு என்பது உங்களையும், ஏன் நியூயார்க் நகரையும் குறிக்கலாம், அதனாலே இதை வச்சி அவங்களுக்கு உங்க மேல காதல்ன்னு சொல்லமுடியாது."


"ஐ லவ் யு ன்னு சொல்லி இருந்தா?"    

"ஆங்கிலத்திலே அன்பு, பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரு வார்த்தை லவ், அதையும் வச்சி சொல்ல முடியாது""சரி அண்ணே"

"சரி அப்புறம் பார்க்கலாம், சிலவற்றை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது" கடைசியிலே சொன்னதுக்கு என்ன அர்த்தமுன்னு கேட்கும் முன்னே இணைப்பு துண்டிக்கப் பட்டது.


ஒரு மாதம் கழித்து அவளிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது, விஷயம் எல்லாம் மேல் அடுக்கு ஆங்கில இலக்கிய நடையிலே எழுத பட்டு இருந்ததாலே, பல முறை படிச்சும் புரியலை, மீண்டும் மணி அண்ணனுக்கு போன் போட்டேன்.ஒவ்வொரு வரியா வாசிக்க, அவரும் பொறுமையா விளக்கம் சொன்னாரு, எல்லாம் முடிச்ச பின்னே அவரு கேட்டாரு


"அப்புறம் வேற ஏதும் இருக்கா?"

"கீழே முறுக்கு இருக்கு"

"என்ன நசரேயன்.. மின்அஞ்சலில்  நாயர் டீ கடையா நடத்துறாரு?"

"முறுக்கு, சிலேபி, மைசூர் பாகு கலந்த மாதிரி எழுத்து.."

"இந்தி"யா இருக்கும்..

"உங்களுக்கு இந்தி படிக்க தெரியுமா ?"


" நான் அந்த காலத்திலேயே ரயில் நிலையத்திலே இருந்த இந்தி எழுத்தை அழித்து இருக்கேன், நான் எப்படி படிச்சி இருப்பேன்."

"நானும் எங்க ஊரிலே ரயில் நிலையம் இல்லைன்னு.. தபால் நிலையத்திலே உள்ள பேரை அழித்து இருக்கேன்"

"நம்ம பதிவர்கள் யாருக்கும் இந்தி தெரியுமான்னு தெரியலை?"


"அண்ணே, இந்த முறுக்கை பதிவர் விதுஷ் கடையிலே பார்த்து இருக்கேன், நான் ௬ட யோசிப்பேன், அந்த முறுக்கு வீட்டிலே சுட்டதா .. இல்லை கடையிலே சுட்டதா.."

"அவங்க.. கிட்ட கேட்கலாமா.."

"அவங்க கடையை அடைச்சிட்டு விடுமுறைக்கு போய்ட்டாங்க..நானும், முகிலனும் தான் கடைசியிலே கடைய சாத்தினோம்."

"நமக்கு தெரிஞ்ச பதிவர்கள் யாரிடமாவது.."

"சின்ன அம்மணிக்கு இப்பதான் சாமி வந்து இருக்கு, அடுத்த முறை சாமி வரும்போதுதான் கேட்க முடியும்.."

"பதிவர் சந்தனமுல்லை இடுகையிலே குச்சி .. குச்சி .. கோன்..ஹை ஏதும் பாத்து இருக்கீங்களா?"

"அவங்க குச்சி ஐஸு, கோன் ஐஸு எல்லாம் விக்கிறது இல்ல, பல்ப் தான் பார்த்து இருக்கேன்.."

"பல்பா?"

"ஆமா பப்புகிட்ட வாங்குற பல்பு தான் பார்த்து இருக்கேன்."

சொல்ல மறந்துட்டேன் குடுகுடுப்பை பத்து வருசமா இந்தி படிச்சி கிட்டு இருந்ததா சொன்னாரு,அடுத்த வினாடியே குடுகுடுப்பைக்கு அழைப்பு தொலைபேசியிலே விடப்பட்டது..

"தலைவரே..முக்கிய விஷயம் .. இந்தியிலே எழுதி இருக்கிறது என்னனு தெரியனும்."

"யோவ் .. என்ன வடக்கூர் பக்கம் காத்து அடிக்கு.. இந்திக்கு எதிர் சொம்பு அடிச்சிகிட்டு இருந்தியரு"

"அஞ்சல் அனுப்பி இருக்கேன் .. கொஞ்சம் பாத்து சொல்லுங்க .."

"என்ன கோழி கிறுக்கினமாதிரி இருக்கு"

"நீங்க பத்து வருசமா இந்தி படிச்சீங்கன்னு மணி அண்ணே சொன்னாரு"

"ஆமா .. பத்து வருசமா ஒரே வகுப்பிலே இருந்தேன்.ஆனா"

"புரியுது... ஒரு துண்டு மனசு.. துண்டுக்கு தானே தெரியும்"

"யோவ்.. வீட்டிலே ஒரு வேளை கஞ்சி கிடைக்கதையும் கெடுத்துருவியரு போல இருக்கு,சரி.. சொல்லுறன் கேட்டுகோங்க.. ஜெய் ஹிந்த் பாரதமாதா " அப்படின்னு எழுதி இருக்கு"


"என்ன தலைவரே சொல்லுறீங்க!!!!"

"ஆமா, அந்த படத்தை எல்லாம் பாருங்க எதாவது புரியுதான்னு பாருங்க"

ஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே ஆயிரம் தடவை ரெண்டு படத்தை பார்த்தது தான் மிச்சம் ஒண்ணுமே புரியலை, அதற்குள் கால சக்கரம் சுழன்று வெகு நாட்களுக்கு அப்புறம் நான் சந்தித்த அந்த நடிகையை தொலைக் காட்சியிலே பார்த்தேன். 
அலைபேசி சிணுங்கியது எடுத்தேன் எதிர் முனையிலே மணி அண்ணன்,  நான் பார்த்த அதே பேட்டியை அவரும் பார்த்து இருக்கிறார், நசரேயன் அந்த நியூயார்க் ரசிகர் நீங்க தான், மன்னிச்சுடுங்க என் யோசனை கொஞ்சம் பிழையாப் போச்சி

"விடுங்க அண்ணே, சிலதை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது, இன்னொரு சந்தோசமான செய்தி எனக்கு கல்யாணம் ஏப்ரல் மாதம் பத்திரிகை மின் அஞ்சலிலே அனுப்புறேன்."

"திருமணம் நல்லபடியா நடைபெற வாழ்த்துக்கள்"

அப்படின்னு எழுதிட்டு பின்னாடி வந்த குரலை கேட்டு  திரும்பி பார்த்தா 

"என்னப்பா பண்ணுற?" 

"அப்பா ஒரு யூத் கதை எழுதி இருக்கேன்"

"யூத்தை மொத்தமா குத்தைகைக்கு எடுத்த மாதிரி பேசுற, தள்ளிப் போ, நான் நிக் சைட்ல கேம் விளையாடனும்"

"சரி நான் கிளம்புறேன்"

"இனிமேலயாவது வயசுக்கு தகுந்த கதை எழுது"