Sunday, February 10, 2013

பக்கத்து உறவு

உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். காஞ்சி கருவாடான காவிரி ஆறு போல வெட்ட வெளிச்சமா இருந்தது.

என்னோட சோகத்துக்கு என்னால தான் அழமுடியலை. வானத்தை பார்த்தால் ’ஓடியே போய்டு, ஒன்னை கொன்னே புடுவேன்னு’ சொல்லுறமாதிரி இருந்தது. அக்கம் பக்கம் சுத்திப் பார்த்தேன். எல்லாரும் என்னைவிட வெட்டியா இருந்தாலும் கோழி பிரியாணி சாப்பிட்ட மாதிரி தெள்ள தெளிவா சிரிக்குறாங்க.. என் சோகத்துக்கு அழ யாருமே இல்லையான்னு சோகம் ரத்த குழாயை பிச்சிகிட்டு வருது. எதிர்த்த வீட்டை ஆர்வமா பார்த்தேன். பிறந்து ரெண்டு நாளான குழந்தையாவது அழுமான்னு.. சத்தமே இல்லை. என்னோட அலைபேசி மட்டும் சத்தம் போட்டது குறுஞ்செய்தியோட, செய்திய திறந்து பார்த்தேன்

"சோளிங்கநல்லூர் ஆலோப்ட்க்கு வரவும். அன்புடன் சோழன் "
.
தண்ணி வாங்கி குடிக்க வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி குடிக்கிற இடமாச்சேன்னு வந்த செய்திய உறுதிப்படுத்த அழைத்துவிட்டு, அடுத்த அரை மணி நேரத்திலே குடிமகன்களின் உறைவிடத்திலே சோழனை தேடினேன். ஆறு கோழி தொடை சந்துகளை கையிலே வைத்துகொண்டு ஆறுகால் அலங்காரம் செய்து கொண்டு இருந்த்தவரின் கையிலே இருந்து ஒரு காலையும் மிச்சம் வைத்து இருந்த சரக்கையும் கண நேரத்திலே குடித்து விட்டு அமர்ந்தேன்.

எச்சிக்கையிலே காக்கா விரட்டுனா அதிலே இருக்கிற இருக்கிற ஒட்டி இருக்கிற இறைச்சி வீணா போய்டும்னு நக்கி சாப்பிடுற நீர் இங்க எப்படி


"நான் அமெரிக்கா போறேன் நசர்"

"சொல்லவே இல்லை"

"நீதான் சென்னையில்  ஈசியா பிக்கப் பண்ணி ஈ சி ஆர் ரோடு போக முடியலை, பெங்களூர்ல பார்க்ல புல்  மேய போற ஆடு, மாடு எல்லாம் உசார் பண்ணன்னு ஓடிபோய் ஒரு வருசமாச்சே  "

"போனதுக்கு நல்லா படிச்சிக்கிட்டேன்"

"கன்னடாவா"

"இல்ல..உள்ளுர்ல விலை போகாத துண்டு எங்கேயும் போகாதுன்னு"


உண்மையா இருந்தாலும் அடுத்த நாலு ரவுண்ட்க்கு அப்புறமாத்தான் ஒத்துகிட்டேன்.


வீட்டுக்கு வரும்போது கடைசியா சோழன் சொன்னது மட்டும் ஞாபகம் இருந்து

’உன் கூட இருந்த வரைக்கும் டீக்கடைக்கும்  ஆபீசுக்கும் நடந்து நடந்தே கால் தேஞ்சி போச்சி, இப்ப அந்த தேஞ்ச காலை கோழி கால் போட்டு முட்டு கொடுக்க எனக்கு ஒரு ஆள் இருக்குன்னு’ சொன்னபோது  என் துண்டு போனதும் இருந்த கவலையை விட அவருக்கு துண்டு கிடைச்ச கவலை நூறு மடங்கு அதிகமானது. ரெண்டுபேருமே எலிக்கு சிக்ஸ் பாக்  வச்சது மாதிரி இருப்போம்.அழகிலிலே!  அழகனுக்கும், பேரழகனுக்கும் உள்ள வித்தியாசம் தான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்.


சுமி வந்து கதவை திறந்தாள். என் கேள்வியை அறிந்தது போல எனது பதிலுக்கு எதிர் பார்க்காமல்

"மழை வருகிறமாதிரி இருந்ததுன்னு அத்தை தங்கிட்டு போக சொல்லிட்டாங்க" ன்னு சொல்லிட்டு போய்ட்டா.

என்னசொல்லுறதுன்னு யோசிச்சி பேசுற அளவுக்கு நிதானம் இல்லை. மாடி ஏறின ஞாபகம் மட்டும்தான் இருக்கு. மட்டையான ஞாபகம் இல்லை. எவ்வளவு மட்டையானும் மனசிலே நிம்மதி இல்லைனா தூக்கம், தொலைந்து போன புளியங்குடி ஆறு மாதிரி தொலைந்து விடும் என்று பேரிலக்கவாதி நசர் பிசிர் சொன்னதைப் போல காலை ஐந்து மணிக்கெல்லாம் என்ன செய்வதுன்னு தெரியாமல் கொசுவத்தி சுத்த போறேன்.

நான் சென்னையிலே வேலைக்கு போய் ரெண்டு வருஷம் கழித்து வேலை தேடி ஊரிலே இருக்கு பக்கத்து உறவு பெண் சுமி எங்க வீட்டு வந்தாள்.  முறைக்கு முறைப்பெண்ணாக இருந்தாலும்,, நான் ஒரு நவநாகரிக இளைஞன், கைலி கட்டிக்கொண்டு வெளியே சென்றால் எந்த கட்டிட வேலைக்கு போற தம்பி? டவுசர் போட்டு போனால் குப்பை வண்டி இன்னும் எங்க தெருவுக்கு இன்னும் வரைலைன்னு சொல்லுற அளவுக்கு, அளவுக்கு அதிகமான அழகு இருந்ததினாலே தானே வடக்கூர் காரியை கல்யாணம் முடிச்சி இந்த சமுதாய ஓட்டைய  அடைக்கனும்னு கொலைவெறியிலே துண்டை வைத்து சுத்திகிட்டு அலைஞ்சேன்!

வீட்டிலே சுமி ரெம்ப நாள் இருந்தா எங்க ரெண்டு பேருக்கும் முடிச்சி போட்டுருவாங்கன்னு, அவளை சீக்கிரம் வேலைக்கு அனுப்பணுமுன்னு சுமிக்கு படிக்க நிறைய உதவி செய்வேன். நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி கொடுப்பேன். , நான் சொல்லுகிற விசயங்களை சொல்லி ஆச்சயரியபடுற அவளைப் பார்த்து

’ஏன் உன் முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி அதிர்ச்சியா பார்க்குறன்னு’ கேட்பேன். அப்ப அவ சிரிக்கும் போது கொஞ்சம் சப்பையா இருக்கும். இப்ப எனக்கு அவ சிரிக்கும் போது என் முகத்தை நான் கண்ணாடியிலே பார்த்த மாதிரி வலிக்கிறது. இந்த ஒரு வருட இடைவெளியிலே அவள் அழகு ஆலிவுட் நடிகை அளவுக்கு உயருமுன்னு எதிர்பார்க்கலை. பக்கத்திலே பக்கோடா இருக்கும்போது பல்லை கடிச்சிட்டு எலக்கியவாதியா  இருந்திட்டேன். எவனோ ஒருத்தன் பக்கோடாவை ஆட்டையப் போட்டுவிட்டான். இப்ப பல் காட்டியும் பக்கடா கொடுக்க ஆள் இல்லை.


காலையிலே அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலே சுமியை பேருந்து நிறுத்தத்துக்கு கூட்டி சென்றேன். ரெண்டு பேரும் பேசலை. கொஞ்ச நேரம் கழித்து அவள்

"என் மேல கோபம் இல்லையே "

"இருக்குன்னு சொன்னா, ரோஜா பூவையும், மஞ்ச கயிறையும் வாங்கி இப்பவே தாலி கட்டுங்கன்னு சொல்லுவியோ"

"சொல்லுவேன், ஆனா உங்க கிட்ட இல்ல"

"ம்ம்ம்.. புரியுது"

"உங்க அம்மாகிட்ட சொல்லுங்க ஓவரா கனவு கானுறாங்க"

எனக்கும் சேர்த்துச் சொன்னமாதிரியே இருந்தது.சுமியை பேருந்திலே அனுப்பி விட்டு சோழனுக்கு செய்தி அனுப்பினேன். பாரிமுனையிலே கருவாட்டு கடையிலே மீன் பிரியாணி சாப்பிட போக இருப்பதாக இருந்த திட்டத்தை மாற்றி வளசரவாகத்திலே நண்டு பிரியாணி நல்லா இருக்கும் என்று சொன்னேன். அடுத்த ஐந்து நிமிடத்திலே வீட்டுக்கு வந்து விட்டார்.

நண்டு பிரியாணின்னு  சொல்லி ஏமாத்தினாலும், நாலுகாடை பிரை நாலு குவாட்டரும் வாங்கி கொடுத்து பசியை அடக்கினேன். இருவரும் கடையிலே போட்ட அலப்பறையிலே கடைக்காரர் எங்க புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு, இனிமேல இவனுக ரெண்டு பேரும் வந்தா உள்ளே விடவே கூடாதுன்னு சொல்லிடாரு. அடுத்த ரெண்டு வாரத்திலே சோழன் அமெரிக்கா சென்று விட்டார். விமான நிலையத்திலே எனக்கு அவரோட நண்பியை அறிமுகம் செய்துவைத்தார். பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு பெருசு மாதிரி வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன். அடுத்த ரெண்டுமாததிலே அம்மா சுமியை திட்டி கொண்டுருந்தாள்.விசாரித்த போது அவளுக்கு என்னை கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னு சொல்லிவிட்டாள் என தெரிந்து கொண்டேன். துண்டை என் சங்கில் போட்டு இறக்கிய வலி.


நிராகரிப்பின் வலிக்கு
நிரந்தர நித்திரை
மருந்து அல்ல

என்று ஒரு வரிகவிஞர் சொன்னது ஞாபகம் வந்தது. அடுத்த ஆறுமாதத்திலே சுமி அவன் காதலனை திருட்டுத் திருமணம் செய்து கொண்டாள். தற்போது கணவருடன் அமெரிக்காவிலே வசித்து வருகிறாள். எப்பவாவது மின்னஞ்சல் வரும் சுமியிடம் இருந்து, அவள் முடிக்கும் முன் உங்க முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி அதிர்ச்சி அடையாதீங்க என்று சொல்லுவா... மன்னிக்கணும் சொல்லுவாங்க.

சோழன் இப்ப குடுகுடுப்பையாகி இருக்காரு,  வெள்ளையம்மாவிடம் ஓசி முத்தம் பெறுவது எப்படின்னு கிளப்ல சேர்ந்து அவரு காதலை  அவரு அமெரிக்கா போன ஒரு வருசத்திலே கள்ளு பானைய போல உடைத்துவிட்டார். எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது. இன்னும் இருக்கிறது. சாதி, மதங்களை விட்டு கட்டுடைக்க நாங்க தயாரா இருந்தாலும் எங்களுக்கு கால் கட்டு போட இன்னும் யாருமே தயாரா இல்லை.

அளவுக்கு அதிகமா அழகா இருந்தா இப்படியும் பிரச்சனைகள் வரலாம் என்பதற்கு நாங்கள் ஒரு உதாரணம் என்று சொல்லி கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்.