அக்ரகாரத்து அழகு
மஹா கிட்ட பேசணுன்னு எல்லோரும் தவமா தவமிருக்கும் போது எனக்கு என்னவோ அவளிடம் பேச வேண்டும் ஆர்வம் இல்லை, ஒருவேளை அவளிடம் பேசினால் நானும் மற்றவர்கள் மாதிரி அவள் அழகுக்கு அடிமை ஆகி விடுவேன் என்ற பயமாக இருக்கலாம், அப்படி இருந்ததாலோ என்னவோ என்னிடம் இந்த பொறுப்பை மகா ஒப்படைத்தாள்.
நான் சின்ன வயசிலே பாம்பு என்று பெயரை கேள்வி பட்டு ரெண்டு நாள் மயங்கி இருந்ததா சரித்திரம், அப்படி இருக்கும் போது என்னிடம் இந்த பொறுப்பை மஹா ஒப்படைத்ததாலே என்னவோ, இதை நானே தனியாளாக செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்.
வேற யாரும் என்னோட ௬ட்டா இதை செய்தால், அவனுக்கும் அவளோட அன்பு கிடைக்குமே என்று நினைத்து, நானே இதை தனியாக செய்தேன். அவள் என்னிடம் கேட்டதை எடுத்துகொண்டு சைக்கிளை அழுத்தினேன், அவர்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி, போகும் வழியிலே என்னோட பெரியப்பா சொன்னது நினைவிலே வந்தது
"அவங்க வீட்டு பக்கம் எல்லாம் நான் சின்ன வயசிலே போய் இருக்கேன், அவங்க வீட்டு உள்ளே போனது கிடையாது,போகவும் முடியாது, அவங்களை எல்லாம் சாமி ன்னு தான் ௬ப்பிடுவோம், அவங்க முன்னாடி கையை கட்டிக்கொண்டுதான் பேசுவோம்"
இப்ப நிலைமை எப்படின்னு தெரியலை, இருந்தாலும் அவளாக ௬ப்பிட்டதாலே எனக்கு கொஞ்சம் தைரியம் இருந்தது.இப்படியே நினைத்து கொண்டு மஹா வின் தெருவிற்கு வந்து விட்டேன். அந்த தெருவிலே ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது, பெரும்பாலான வீடுகள் பூட்டப் பட்டு இருந்தது, அங்கு மக்கள் வசிக்கும் அறிகுறியே தென்படலை.
வீடுகள் எல்லாம் பாழடைந்து இருந்தது.என்னிடம் முன்றாம் வகுப்பிலே படித்த கிச்சா இதே தெருவிலே இருந்துதான் பள்ளிக்கு வந்தான், அதற்கு பின்னே ஊரை விட்டு போனவன் இன்றும் திரும்ப வில்லை.இந்த மாதிரி அக்கிரகார தெருவை விட்டு சென்றவர் எல்லாம் திரும்பி வராததாலே இந்த வீடுகள் இன்னும் பூட்டி கிடக்கிறது.எனக்கு பிடிச்ச மஹா இருக்கும் போது நான் ஏன் இவங்களை பத்தி கவலைப் படனும்
மஹா வீடு வந்தது, எப்படி அவளை ௬ப்பிடுவதுன்னு தெரியலை.. சைக்கிள் மணியை அடித்தேன், ஒரு பாட்டி வெளியே வந்து பார்த்தாங்க, என்கிட்டே எதுவுமே பேசலை, மறுபடி உள்ளேபோய்டாங்க.
கொஞ்ச நேரத்திலே மஹா வெளியே வந்தாள், என்னைப் பார்த்து கை யை காட்டிவிட்டு, என்னை இறங்கி வரச்சொன்னாள், நானும் அவள் பின்னால் போனேன், என்னை வீட்டிருக்கு பின் புறம் செல்லும் இடுக்கு வழியாக ௬ட்டி சென்றாள்.
"பிடிசிட்டியா? எப்படி பிடிச்சே?"
"எங்க வீட்டிலே எலி இல்லாத இடமே கிடையாது, இதிலே உனக்கு ஒரு எலியை பிடிக்க கஷ்டமா?"
"எங்கே காட்டு?"
௬ண்டில் அடைபட்டு கிடந்த எலியை ரெம்ப ஆர்வமா பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்,இந்த பொறியிலே இருக்கும் எலியை வைத்து அவளோட மனசுக்கு பொறிவைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து எனக்கு சந்தோசம்.
"எலிக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்?"
"ஒன்னும் தேவையில்லை நான் ஒரு தேங்காய் துண்டு போட்டு இருக்கும், நாளைக்கு நீ உயிரியல் ஆய்வு ௬டத்திற்கு எடுத்து வரும் வரை அதையே சாப்பிடும் "
"சரி.. சரி அதை அப்படியே ஓரமா வச்சிடு, என்னோட வீட்டுக்குள்ளே எடுத்திட்டு போக முடியாது, நீ நாம வந்த வழிய முன் வாசல் பக்கம் வா, நான் பின் வாசல் வழியா வந்து முன்னாலே வாரேன்"
முன் வாசல் வந்தேன்,வீட்டு உள்ளே பேசும் குரல்கள் கேட்டது, என்னோட பெயரும் அடிபட்டமாதிரி இருந்தது, ஒருவேளை என்னை தீவிரமா காதலிக்கிறதா மஹா சொல்லிட்டு இருக்காளோ என்று நினைத்து நானும் கேட்டேன்.
"யாரு,எந்த ஆத்து பையனோ, அவனை வீட்டு வரைக்கும் ௬ட்டிட்டு வந்து இருக்கே?,கண்ட ஆத்து பசங்க நம்ம வீட்டுக்கு வர௬டாதுன்னு தெரியாதா ?"
"நம்ம ஆத்திலே எலி பேரை சொன்னாலே எரிஞ்சு விழுறேள், உயிரியல் ஆய்வு௬டதிற்கு இல்லாம போன வாத்தியார் திட்டுவார்"
"அவா மாதிரி ஆட்களையெல்லாம் ௬ட்டிட்டு வாறது இது கடைசியா இருக்கணும்?"
அதற்கு மேலே அங்கே நிற்க மனம் இல்லமாமல் வேகமாக வெளியே வந்து சைக்கிளை அழுத்தினேன் என் வீட்டை நோக்கி,நான் போகும் போது அவள் வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டாலும், என்னால் திரும்பி பார்க்க மனம் இல்லை.
வரும் வழியிலே பெரியப்பா சொன்ன சாமி ஞாபகம் வந்தது, மஹா இருந்த மனசிலே எங்க குலதெய்வம் சாமியை நினைத்தேன், இப்ப எல்லாம் மஹா கிட்ட பேச பயமே இல்லை. மனசிலே கனம் இருந்தாதானே பேசுவதற்கு பயம் இருக்கும்.