Sunday, May 15, 2011

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!


சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.

மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை  தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.

விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
   
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.

விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை.  இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!


Saturday, May 7, 2011

கனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி


2G வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மத்திய புலனாய்வு துறையினரால் கைது   செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்,மூத்த வக்கீல் ஜெத்மலானியின் வாதம் வீ ணாகப்போனது,இதை எதிர்பார்க்காத தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். திமுகவின் அறிக்கையில் ஒரு திராவிட தாய்க்கு,ஆரிய தாய் சதி செய்த்துவிட்டாள். வடக்கு வளர்வது நின்று தெற்கு வளர்வது பொறுக்காமல், தெற்கின் வளர்ச்சியை தடுக்க இந்த கைது நடவடிக்கை என்பதை கழகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.


பாஜக தலைவரின் அறிக்கையில் கைது நடவடிக்கை வரவேற்கதக்கது, ஆனால் மிகவும் தாமதமான நடவடிக்கை, இந்த வழக்கிலே சம்மந்தப்பட்ட பிரதமர், மற்றும் பிற தலைவர்கள் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு பதில் அளித்த பிரதமர், ௬ட்டணி கட்சிகளின் நடவடிக்கையை நான் கட்டுபடுத்த முடியாது , அது பொது குழுவிலே முடிவு செய்யப்படும். நான் எனது துறையைத் தவிர மற்ற துறைகளிலே மூக்கை நுழைப்பதில்லை என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1c,2c என்ற பழக்கப்பட்ட எனக்கு 1g,2g என்றெல்லாம் ஒன்று இருப்பது இன்று செய்திதாள்களின் மூலமே அறிந்து கொண்டேன். இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கட்சி தலைமை முடிவு செய்யும்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைது நடவடிக்கை ௬ட்டணியை பாதிக்காது, கைதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த வெற்றி ௬ட்டணி 3G,4G என்று 100000G வரைக்கும் வழக்குகள் வந்தாலும் தொடரும். வட மாநிலங்களிலே கைது நடவடிக்கைய எதிர்த்து இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்,ஆனால் தமிழகம் தத்தளிக்கும் கத்தரி வெயிலிலும், மின் வெட்டுகளிலும் மக்கள் மனதிலே இருக்கின்ற சூட்டை விட, கைது நடவடிக்கை மக்களிடையிலே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைவரும்  மெரினா கடற்கரையிலே ௬டி கடலும் பொங்குமா இந்த திராவிடத்தாய் கைது நடவடிக்கைக்கு ஆதரவாய் என்று எதிர்பார்க்கின்றனர்.


கழக பொதுக்குழு அவசமாக ௬ட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்த உடனே, தமிழக பிற கட்சி தலைவர்கள் கலைஞரை சந்திக்கப்படை எடுத்துள்ளனர், தலைவர் விட்ட அறிக்கையிலே கழகம் தான் எனக்கு முதல் பிள்ளை, உறுப்பினர் அனைவருமே என் உடன்பிறப்புக்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொலைகாட்சிக்கு பணம் வந்த விசயத்திலே புலனாய்வு துறை அறிக்கை, தேர்தல் அறிக்கை போல இருக்கிறது, தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன் எங்களை எதிரியாக பாவித்தது போல,புலனாய்வு துறையும் பாவிக்கிறது.நான் ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன் குடும்பத்துக்காக கட்சியை அடகு வைக்கமாட்டேன். சட்டப்படி எந்த வழக்கையும் சந்திப்போம். நானே கலைஞர் தொலைகாட்சியிலே குறள் சொல்லி சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண குடிமகன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவி, நீதி இன்னும் தலை தூக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது,இந்த வழக்கிலே மட்டுமல்ல எந்த ஊழல்  வழக்கிலேயும்  சம்பந்தபட்ட அனைவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யவேண்டும்.ஆளுநர் விட்ட சிறப்பு அறிக்கையிலே தமிழகம் அமைதி பூங்காவாய் திகழ்கிறது,பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் மாதிரியாக இருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமே இல்லை.                

தமிழக மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்துடன் பஸ்சிலே பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். விடுமுறையை ஒட்டி, ரயில் நிலையங்களிலே மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அறிக்கைய நாளேடுகளிலே படித்தவர்கள் இன்னும் அதிர்ச்சி கலையாமல் அப்படியே இருக்கின்றனர், அதிர்ச்சியிலே ஏற்படும் இதய பிரச்சனைகளுக்கு காப்பிட்டு திட்டம் கை கொடுக்கும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பிலே செய்தி வெளியிட்டுள்ளது.தீக்குளிக்கும் தொண்டர்களுக்கு கழக கண்மணி வேந்தர் பட்டம் கொடுக்கப்படும். 


பொறுப்பு அறிவித்தல் : இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்திலே,நீங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நலம்.


Sunday, May 1, 2011

என்னை கல்யாணம் பண்ணுவியா?

என்னை கல்யாணம் பண்ணுவியா என்கிற வசனத்தை முதல்ல துரைமார்கள் படத்திலே தான் பார்த்தேன், வைர மோதிரத்தை கையிலே எடுத்துகொண்டு வெள்ளையம்மா முன்னாடி மண்டியிட்டு கேட்பார், அதை கேட்டுட்டு மின்சாரத்தை தொட்டதுபோல கைய கால உதறி ஒரு நட்டுவக்காலி குதி குதிச்சி வராத கண்ணீரை வரவச்சி ஆமான்னு சொல்லுவதை கேட்ட வெள்ளையப்பன் செத்துப்போன குழியிலே இருந்து உயிரோடு வந்ததுபோல ஒரு சந்தோசப் பார்வைப் பார்த்து வெள்ளயம்ம்மா வாயிலே வாயை வைத்து பழசாறு குடிக்கிறதோட படத்தை முடிப்பாங்க.

இப்படிப்பட்ட கலைநயம் மிக்க படங்களைப் பார்த்து நானும் இந்த வசனத்தை யாரிடமாவது சொல்லணும் என்று நினைச்சிகிட்டே ஐந்து வருடம் ஓடிபோச்சி, ஆறாவது வருசத்திலே நான் அமெரிக்கா வந்துவிட்டேன். இங்க எனது   பொழுதுபோக்குகள் என்னண்ணன்னு பேச நேரமில்லை, அதைப்பத்தி பின்னாளிலே பார்க்கலாம்.

ஒரு நாள் அழகிய மாலை நேரத்திலே நான், வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்(teller) முன்னே நிற்கிறேன்,தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் வேலை செய்யாததாலே, மாலையிலே மருந்து குடிச்சி மட்டையாக பணம் எடுக்க வரிசையிலே காத்துகொண்டு இருந்தேன். எனது முறை வந்தபோது என்னை அழைத்தாள் ஒரு கருப்பழகி, அதாவது கருப்பம்மா, இவ்வளவு நாளும் வெள்ளையம்மாளுக்கு துண்டு சேவை செய்த நான் இன்று கருப்பமாவுக்கு சொம்பு அடிக்கப்போறேன். துண்டு விசயத்திலே நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபிக்கவே இந்த முயற்சி.

எனக்கு வணக்கம் வைத்துவிட்டு,வந்த விஷயம் கேட்டவளிடம் பணத்தேவையை சொன்னேன், அதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு பணம் கொடுக்கும் முன் 

"உங்க கடன் அட்டைக்கு வெகுமதியா நீங்க செலவழிக்கும் ஒவ்வொரு நூறு டாலருக்கும் பத்து டாலர் திரும்பி வரும், உங்களுக்கு இந்த முறையை தேர்ந்து எடுக்க விருப்பமா ?"

"இந்த சேவைக்கு வருடாந்திர கட்டணம் ஏதும் இருக்கா?"

"இல்லை.. இலவசம்"

"இப்ப இலவசமுன்னு சொல்லிட்டு அப்புறமா காசை ஆட்டையப்போட்ட என்ன செய்ய, உங்களிடம் வந்து காசு கேட்கவா?"

அவங்களுக்கு ஒரே சிரிப்பு பதில் சொல்லமுடியாம, கருப்பம்மா சிரிக்கிற அளவுக்கு நகைச்சுவை சொல்லி இருக்கேன்னு நினைப்புக்கு போகும் முன்னேதான் அவள் அழகைப் பார்த்தேன், கருப்பா இருந்தாலும் அடுத்தவர்களை கவரும் முகம், அவளின் சிரிப்பு அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது. வர்ணிப்பு அம்புட்டுத்தான். சாணிய கரைச்சி ஊத்துற அகாடெமி விருது பெறனும்முன்னு வர்ணிப்புகளை ரெம்ப குறைத்துவிட்டேன்(இதெல்லாம் ஒரு பொழப்பா).

அதன்பின் அவளோட சிரிப்பை பார்க்க தினமும் ஒரு முறையாவது அவளை வங்கியின் கண்ணாடி வழியாக இருந்து பார்ப்பேன்,வாரத்திலே மூன்று முறையாவது பணம் எடுக்கும் சாக்கிலே அவளை சந்திப்பேன், ஒரு நாள் என்னிடம் 

"வெளியே தானியங்கி பணம் எடுக்கிற இயந்திரம் இருக்கும் போது நீங்க இங்க வர சிறப்பு காரணம்?" 

"உங்களைப்பார்க்க, உங்க சிரிப்பை பணத்தோட பையிலே அள்ளிப்போட்டு போகத்தான்"

கேட்டுட்டு சிரித்துவிட்டு

"வேற ஏதும் இருக்கா?"

"இன்னும் நிறைய இருக்கு, ஆனா அதை இங்க சொல்லமுடியாது"

"நான் கேட்டது வங்கி விசயமா?"    

"நான் கேட்டது வாழ்க்கை விசயமா?"

"நல்லாவே பேசுறீங்க"

"உங்க அழகைப் பார்த்தா பேச்சு நயாகரா அருவி மாதிரி வருது"

"ம்ம் பார்க்கலாம்"

"உங்க வேலை எப்ப முடியும்?"

முடியுறப்ப சொல்லுறேன், இப்ப நீங்க போகலாம். அடுத்த வாடிக்கையாளர் காத்துகொண்டு இருக்கிறார்.

எளவெடுத்த 
சனியன் 
நிம்மதியா 
இருக்க 
விட மாட்டானே

என்ற ஒரு இலக்கிய கவிதை(வரி வரியா இருக்குல்ல, வேற என்ன வேணும் கவிதைக்கு) மனதிற்குள்ளே நிழலாடி விட்டு சென்றது.அன்று மாலையே அவளை சந்தித்தேன்.

"குட்டிபோட்ட பன்னி மாதிரி எங்க அலுவலகத்தை சுத்தி வந்து என்னை சந்தித்துவிட்டீர்கள்?"

"நூறு சதவீத அர்ப்பணிப்பான உழைப்பு எனது வெற்றியின் ரகசியம்" 

"இன்று எனக்கு நிறைய நேரம் இல்ல, நாம ரெண்டு பேரும் காபி குடித்து விட்டு செல்லலாம்"

சரி என்று தலையாட்டிவிட்டு, காபியுடன் கடலையை முடித்தேன், அன்று முடிந்த சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது, காபியோட  நில்லாம சாப்பாடு வரை சென்றது. சந்திப்புகள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், இன்னும் என் மனசிலே உள்ள எண்ணத்தை சொல்லலை,அவளிடம் பேசும் போது, அவளுடைய தரத்திற்கு ஏற்றவாறு எனது பேச்சுக்கள் அமையும், கொஞ்சம் ௬டஅவளை சோர்வு அடைய செய்யாதவாறு பார்த்துகொள்வேன்.

 ஒரு நாள் நாங்கள் இருவரும் வார இறுதி நாட்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நான் அவளிடம்

"நடன விடுதிக்கு செல்வோமா, நாம ரெண்டு பேரும்"

"ம்ம் போகலாம் .. ஆனா இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் செல்வோம்" என்று சாதரணமாக பதில் சொன்னாள்.என் மனசிலே அசாதாரண மாற்றம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் நடன விடுதிக்கு செல்ல குறித்து வைத்து இருந்த நாளும் வந்தது, அவளை நடன விடுதி முன் சந்தித்தேன்.என்னைபார்த்து புன்னகை புரிந்தாள்.

"ஆட்ட விடுதிக்கு உள்ளே போகலா"

"ஒரு ரெண்டு நிமிஷம்"

ரெண்டு நிமிஷம் பத்து நிமிசமாச்சி, பதினைந்தாவது நிமிசத்திலே எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு குரல்

"யே பேபி..என்னைய நினைச்சி ஏங்குறியா "  என்று கேட்டவனிடம்

"அடி செருப்பால...நீ எல்லாம் ஒரு மனுசானா?"

"எம்மேல கோபமா?"

"இவனை பாத்து நல்லா கத்துக்கோ?" என்னை கை காட்ட

"ஒ.. இவ்வளவு நாளும் என்னிடம் சரியாப் பேசாததுக்கு இவன் தான் காரணமா?"

"ஒரு பெண்ணை எப்படி சந்தோசமா வச்சி இருக்கனுமுன்னு வெளிநாட்டு பன்னிக்கு தெரியுது, உள்ளூர் ஓணான் உனக்கு தெரியலையே"

பன்னின்னு சொன்னதுக்கு நானே கவலைபடலை, ஆனா ஒணான் பெயரைகேட்டு அண்ணாச்சி கடும்கோபத்திலே இங்கலிபிசிலே ஐஞ்சி நிமிசத்துக்கு விடாம ஒரே திட்டு, திட்டு முடிச்ச உடனே ரெண்டு பேரும் என்னையப் பார்த்தாங்க, நான் அமைதியாவே இருந்தேன், உடனே கருப்பமா

"இந்த திட்டை எல்லாம் கேட்டுகிட்டு என்னால சும்மா இருக்க முடியலையே" என்று புலம்ப, உடனே நான் கருப்பண்ணாச்சியிடம்

"நான் வெளிய பல்ல காட்டிட்டு மொக்கை அடிக்கிற ஆளா இருந்தாலும், உள்ளுக்குள்ளே பல்லகடிச்சிகிட்டு எழுதுற இலக்கியவாதி துங்கிகிட்டு இருந்தான், நீ இவளை திட்டி அவனை எழுப்பி விட்டுட்ட, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, இனிமேல இவளை திட்டின உன் மண்டையிலே கொட்டுவேன்"

மறுபடியும் ரெண்டு பேரும் என்னையப்பார்த்தாங்க, உடனே கருப்பம்மா

"பக்கி .. பக்கி இவன் விடாம உன்னையதானே இவ்வளவு நேரமும் திட்டினான், நீ என்னைய திட்டாதேன்னு சொல்லுறே?"

சாதாரணமாவே அண்ணாச்சிமார் பேசுறது புரியாது, இந்த லட்சணத்திலே என்னை திட்டினா எப்படி புரியும், இருந்தாலும் சமாளிச்சேன்.

"உனக்காக எதையும் தாங்குவேன்"

"இவனுக்கு என் மேல இருக்கிற அன்பில கால் வாசி உன்னிடம் இருக்கா, இவன் காலை நல்ல கழுவி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்"

நான் உடனே "இப்ப தண்ணிக்கு எங்க போக, அதுமட்டுமில்லாம இந்த குளிரிலே சூவை எல்லாம் கழட்டனும்"

நான் சொன்னதை எல்லாம் பொருள் படுத்தாமல் அண்ணாச்சி கருப்பம்மா முன்னாடி மண்டியிட்டு பையிலே இருந்த மோதிரத்தை எடுத்து

"வில் யு மார்ரி மீ?" கேட்டுட்டு அப்படியே கருப்பம்மா கண்களைப் பார்த்து ஏக்கத்துடன் காத்துகொண்டு இருந்தார்.இதை சற்றுமே எதிர் பாராத கருப்பம்மா

"ஏய்ய்ய்ய்ய்...  நீ என்ன பண்ணுற.. நீ என்ன பண்ணுற .. நீ என்ன" என்று சொல்லிவிட்டு அவனைமட்டுமே பார்த்தாள். அவன் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்து இருக்கவேண்டும்.கொஞ்ச நேரத்திலே ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாமல் அவன் கைகளை பற்றி கொண்டு ஆமா என்ற ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்,நான் அந்த இடத்தை விட்டும்,அவள் என் மனதைவிட்டும் வெளியேற அந்த ஒரு வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது.


Monday, April 18, 2011

முத்தமிட்ட மெக்ஸிகோ அழகி


அமெரிக்காவிலே காலடி எடுத்து வைத்த உடனே நிலவுக்கு  சென்று கொடியை நாட்டின ஆம்ஸ்ட்ராங், ஏற்கனவே  அங்கே டீ கடை வைத்து இருந்த நாயரிடம் ஓசி டீ வாங்கி குடித்துக்கொண்டு, இவன் எப்படி இங்க வந்தான் என்று நினைத்ததைப் போல, நானும் வந்திறங்கிய உடனே இவ்வளவு இந்திய வம்சாவளியினர் எப்படி வந்தாங்கன்னு கொண்டு வந்த பீடியைப் பத்த வைத்து கொண்டு பீடிகையாய் யோசித்துக்கொண்டு இருந்தேன்.

மச்சான் அமெரிக்காவிலே சிரிச்சாலே ஒண்ணு கண்ணத்திலே கொடுப்பாங்களாம்னு நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது, இங்க இருக்கிற நம்ம ஊரு மக்கள் நம்ம பண்பாடு, நாகரிகம்,கலாச்சாரம்  எல்லாம் இவங்ககிட்ட சொல்லிக் கொடுத்து இவங்களை கெடுத்து வச்சி இருப்பாங்களோ என்று அடிமனதிலே எண்ணம் வரும் போது அடிவயறு கலங்கி போச்சி. பொட்டிய கட்டும் போதே ரெண்டு மூணு ஓசிமுத்தம் வெள்ளையம்மாவிடம் வாங்க வேண்டும் என்ற கனவிலே வந்தேன்.என் கனவு கானல் நீர் ஆகும் என்ற நினைப்பு வரும் போது நினைவிலே டக்கிலாவும்,ஷிவாஸ் ரீகலும் வந்து போயின,இப்படியே யோசனை செய்து கொண்டே இங்கு வந்த முதல் வாரம் ஓடியது. அதன் பின் வந்த வேலைகளைகவனிக்க அலுவலகம் சென்றேன்,நான் மூணு மாதம் மட்டுமே வந்ததினாலே அலுவலகம் சென்ற நாள் முதலாகவே வேலைப்பளு அதிகமாகவே இருந்தது.

காலையிலே முதல் ஆளா வந்து, கடைசி ஆளா வீட்டுக்கு போவேன்.ஒரு நாள் மாலை பரப்பரப்பான வேலைகளுக்கிடையே கொஞ்சம் "காலை எடுக்கமுடியுமா?" என்ற குரலை கேட்டு

"நாற்காலியிலே இருக்கிற நான் யாரு மேல கால் போட்டு இருக்க முடியும்"   என்ற யோசனை யிலே திரும்பிப் பார்த்தேன்.

"குப்பை தொட்டியிலே இருந்து காலை எடுக்க முடியுமா?.. நான் குப்பைகளை அப்புற படுத்தவேண்டும் "

அப்போதுதான் கவனித்தேன், நான் எனது இடத்திலே வைத்து இருந்த சின்ன குப்பை தொட்டி மேல் எனது கால்களை வைத்து இருந்தேன்.குப்பை தொட்டியை அவளிடம் எடுத்துகொடுத்து விட்டு, குப்பை போடுகிறவளே எம்புட்டு அழகா இருக்கா என்று மனதிலே நினைத்துகொண்டேன். ஹோலிவூட்ல கதாநாயகியா நடிக்க வேண்டிய அழகு குப்பை அள்ளுதேன்னு நிக்கும் போதே என் மனசு குப்பையாகிபோச்சி.

குப்பை தொட்டியை வாங்கி விட்டு

"நீ ஆப்பிரிகாவா?" என்று கேட்டாள். ஓர் சிகப்பு அழகு கிளியப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாளே என்று நினைக்கும் போதே கண்ணாடியிலே என் முகத்தை கண்டு பிடிக்க முடியாமல் போன ஞாபகங்கள் வந்து போயின இந்த இடப்பட்ட நேரத்திலே . மறுபடியும் "நீ ஆப்பிரிக்காவா"

"இல்ல இந்தியா"

'இந்தியாவிலேயும் இங்க மாதிரி நிறைய கருவண்டுகள் இருக்கோ?"

நான் பதில் சொல்லாம, பல்ல காட்டிட்டு, அவகிட்ட "இங்கே நிறைய கருவண்டு இருக்கும் போது என்னையப் பார்த்து நீ ஆப்ப்ரிக்கவான்னு ஏன் கேட்டீங்க"

"இங்க இருக்கிற கருவண்டு இம்புட்டு கஷ்டப்பட்டு எல்லாம் வேலை பார்க்கமாட்டாங்க"

அவங்க சொன்ன விளக்கம் அப்ப புரியலை , ஆனா புரிஞ்சிகிட்டேன், அடுத்த நாட்களிலே

பொது இடத்திலே சிகரட் பத்த வச்சா..குறைந்தது நாலு அண்ணாச்சிமார் வந்து எனக்கு ஒண்ணுன்னு கேட்டு வாங்கிப்பாங்க, முதல்ல துரைமார்களுக்கே பிச்சை போடுறோம்முன்னு பெருமையா நினைச்சாலும், இவங்களுக்கு பிச்சை போட்டு நான் பிச்சை காரன் ஆகிவிடுவேன் என்ற நினைப்பு வந்துவிட்டது, அதனாலே பொது இடத்திலே தம் அடிக்கிறதில்லை. சிகரட் தப்பிச்சாலும் நடத்துவரும்போதே கேட்பாங்க

"ஒரு டாலர் கொடுக்க முடியுமான்னு", வேற வழி இல்லாம கொடுக்க வேண்டிய இருக்கும், எப்படின்னாலும் ஆட்டையப் போட்டுடுறாங்களே, சில அண்ணாச்சிமார்கள் வேலைக்கே போக மாட்டாங்கபோல என்பதையும் தெரிந்துகொண்டேன்.

நான் தினமும் அலுவலகத்திலே இருந்து தாமதமா வருவதினாலே, எப்படியும் அந்த குப்பை அழகியை சந்தித்துவிடுவேன், அவளிடம் பேசியதிலே இருந்து அவள் மெக்ஸிகோ வம்சாவழியை சேர்ந்தவள் என்று தெரிந்துகொண்டேன்.எங்களோட மொக்கைகள் தினமும் தொடர்ந்தது, ஆனா சுவாரஸ்யமாப் போச்சி, சில நாட்களிலே அவளை எனக்கு ரெம்ப பிடிச்சிபோச்சி, அவளைப் பார்த்து ரெண்டு வார்த்தைபேசலைனா சோறு தண்ணி இறங்காத அளவுக்கு, இருந்தாலும் நான் ரெம்ப நாகரிகமானவன்(?) என்பதாலே நல்லவன் மாதிரி எதையும் வெளிகாட்டவில்லை.

சிலநாட்களுக்கு பின் ஒரு நாள் மாலையிலே என்னிடம் ஒரு தண்ணிப் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தாள்.வாங்கிவிட்டு அவளைப் பார்த்தேன். நீ தினமும் புதிதாக பாட்டில் வாங்கி,குடித்தது போக மிச்சம் விட்டுச்செல்லும் தண்ணியோட சேர்த்து பாட்டிலை குப்பை தொட்டியிலே போடுகிறேன்.நீயும் உங்க ஊரு ஆளுங்களைப்போல விரல்ல வெண்ணை எடுக்கிறவனா இருப்பியோ என்று நான் உனக்கு வாங்கிவந்தேன், இனிமேல நீ இருக்கும் இடத்திலே இருந்து இந்த பாட்டிலை எடுக்கமாட்டேன்.

என்னோட ஞாபகமா தண்ணிபாட்டிலை ஆட்டையபோட்டு வைத்து இருக்கிறாள் என்ற நினைப்பிலே இருந்த என் கனவிலே மண் விழுந்தாலும், ஓசியா கிடைத்த தண்ணி பாட்டிலைகண்டு, அடிக்காமலே காதல் போதை ஏறி  மனம் தள்ளாடியது. வேலைப்பளுவிலே பல்லு விளக்காம அலுவலகம் சென்றாலும், அவளிடம் பல்லைகாட்டாமல் பொழுது முடிவதில்லை.எல்லா கதைகளுக்கு ஒரு முடிவு இருப்பதைப்போல எனது கதைக்கும் முடிவு நெருங்கிவிட்டது, நான் வந்த வேலை முடிந்து திரும்பும் நாள் வந்தது,
    
 நான் சொல்லி வைத்து இருந்தேன், மாலை ஆறு மணிக்குள் நான் கிளம்பிவிடுவேன் என்று, அதனாலே நான் திரும்பி ஊருக்கு செல்லும் நாளிலே அவள் சீக்கிரமே வந்துவிட்டாள்.வெளியே காபி சாப்பிட போனோம், காபி மண்டுற சத்தத்தை தவிர வேற எதுவுமே பேச முடியலை, கிளம்பும் நேரம் வந்தது அவளிடம் கையை கொடுத்து விட்டு கிளம்பு முற்ப்பட்டேன். உடனே என்னை பிடித்து முத்தம் கொடுத்தாள், பல நாள் கனவு பலித்துவிட்டது என்ற சந்தோசத்திலே நான் அவளிடம் "ஐ லவ் யு" என்றேன். அவளும் என்னிடம் "ஐ லவ் யு அஸ் எ பிரதர்" என்று சொல்லிவிட்டு அவள் கண்களிலே கண்ணீர் வந்துவிட்டது. எனது கண்களிலே இருந்த காதல் அவள் கண்ணீரிலே கரைந்துவிட்டது.

விமான நிலையம் வந்து பெட்டிகளை கொடுத்து உள்ளே சென்று விமானம் ஏறி சொல்ல வரிசையிலே நிறுக்கும் போதே நினைத்தேன், ஊருக்கு போன உடனே நண்பனிடம் "அமெரிக்காவிலே அன்பு, பாசம் எல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்கு, ஆனால் வெளி உலகத்துக்கு அது தெரிவதே இல்ல" என்ற உண்மையச் சொல்ல வேண்டும்.


Sunday, February 27, 2011

மனநோயாளியின் வாக்குமூலம்

"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு  நினைக்கிறேன்,என்னோட அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை"

"ஏன் நீங்க முயற்சி செய்யலை, அவங்களை கண்டு பிடிக்க ஏன் முயற்சி செய்யலை, சொல்லுங்க .. சொல்லுங்க."

"யோவ், அவங்க அப்பனுக்கு வேலை மாற்றுதலாகி ஊருக்கு போய்ட்டான், அவரு அரசாங்க வேலை பார்த்தவர், எங்க அப்பா அரசாங்கம் உருவாக வேலை பார்த்தவர்(குடி மகன்), அதுவும் டவுசர் ௬ட போட தெரியாத வயசிலே   யாரைத்தேடி எங்க எப்படி அலைய முடியும்?"

"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"

"வேலைக்கு அரை கிழவன்களை எல்லாம் எதுக்கு வைக்கிறேன், ஒரு நல்ல பெண்ணை பார்த்து வைத்து இருப்பேனே?"


"உங்க உள்ளேண்ணத்திலே கலந்த உப்பு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது, சொல்லுங்க நீங்க யாரு?"

"அடி செருப்பால, எத்தனை வாட்டி இந்த கேள்விய கேப்ப?"

"நீங்க சொல்லுற வாட்டி வடக்கூர்ல நிறைய பயன்படுத்துவாங்க, உங்க கிட்ட ஒளிந்து இருக்கிற ஐ.ஐ.டி யிலே படிக்க போய், அறிவு அதிகமாகி கஞ்சா அடிச்ச அந்த ஆசாமிய வெளியே கொண்டு வாங்க, அவனை இன்னைன்னு நான் பார்க்கணும்"

"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும்  தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"

"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"

"வேற யாரு மாதிரினா, பேய் பிடிச்ச மாதிரியா"

"அப்படியும் சொல்லலாம்"

"எனக்கு தெரிஞ்சு அப்படீல்லாம் தோணலை, எங்க தத்தா சாமியாடி, அவரு அடிக்கடி சொல்லுவாரு, பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு ,ஆனா நான் தண்ணியப் போட்டா பல பேர் சாமியாடுவாங்க என் மேல"

"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு" 

"இந்த சக்திய வச்சி ஊரிலே பேய் ஓட்டுற கடை போட்டா யாவாரம் நல்லா நடக்குமா? எங்க தாத்தா சொன்னது நானே பேய் நிறத்திலே இருக்கேன், அதனாலே என்னைய பேய் பார்த்தா, அவங்க ஆள்கன்னு ஒதுங்கிபோகுமாம்"

அடுத்த நிமிடத்திலே பன்னி சில்லிப்பதுபோல சிலித்து, வயத்தை பிடித்துகொண்டு, பல தும்மல்களைபோட்டு, தலையிலே வைத்து இருந்த செயற்கை முடி விழுந்து, வழுக்கையுடன் இருந்தவரைப் பார்த்த மனநல மருத்துவர், 

"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்" 

எல்லா அதிகாரிகளும், மருத்துவரை சுத்தி நிற்கிறார்கள்.

"பன்னி மாதிரி சிலிப்பை எதிர்பார்த்து காத்து இருந்தேன், அப்படி வந்தாதான்   தான் பிள மனிதனின் வரவு,இப்ப உள்ள இருக்கிறது யாருன்னு நீங்களே 
கேளுங்க"

௬டி இருந்த அதிகாரிகளில் ஒருவர், "நீங்க யாரு?" 

"யோவ் எத்தனை தடவை இந்த கேள்விய கேட்பீங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல இப்படி கேள்வி கேட்டா, நான் எழுந்து போய்டுவேன், விசாரணை ன்னு  சொல்லி சோறு தண்ணி கொடுக்கலை, அதான் வயத்த வலி வந்து விட்டது"

"அந்த தும்மலுக்கும், பன்னி சிலிப்புக்கும் என்ன அர்த்தம்?"

"ஜலதோஷம் பிடிச்சி இருக்கு, அதான் அப்படி"

"மருத்துவரே என்ன நடக்கு இங்க, அவரு சொல்லுறதை பார்த்தா இவனுக்குள்ளே யாரும் உள்ள இருக்கிற மாதிரி தெரியலையே, உண்மையிலே இவருக்கு மனநிலை பாதிப்பு, பிள மனித தாக்கம் இருக்கா?" 

"நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் அந்த ஆளை வெளியே கொண்டு வாரேன், இன்னொரு சிகிச்சை இருக்கு"

"என்னவேனாலும் சிகிச்சை கொடுங்க, அதுக்கு முன்னாடி திங்க ஏதாவது கொடுங்க" 

அனைவரும் வெளியே சென்றதும்

"விசாரணை முடிஞ்சதும் கோழி பிரியாணி வாங்கி தாரேன், மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது,அது காலை ஒடிக்கனும்,நானே மனநல மருத்துவர் என் மண்டையையே குடையுற நீ, என்னோட விசாரணையோட உண்மையான முகம் உனக்கு தெரியலை, இப்ப நீ உண்மைய சொல்லலை, உன்னையப் போட்டு தள்ளிட்டு,உனக்கு உள்ளே இருக்கிற பிள ஆட்கள் சண்டை போட்டு உன்னையே கொன்று விட்டதுன்னு உன் கதைய முடிச்சுருவேன், என்னை யாருன்னு நினைச்சே, ஒரு காலத்திலேயே போளி வித்த போலி, உன் பருப்பை என்கிட்டே வித்த, உன்னைய போளிக்கு  தொலி ஆகிடுவேன்"

"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"

"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"

"முனியம்மாவா?"

"போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா"

"அப்படினா நானும் ஒரு உண்மைய சொல்லுறேன், நான் மன நோயாளி இல்லை, உன்கிட்ட இருக்கிற போளி வித்த போலிய வெளியே கொண்டு வர கடமைப்பட்ட இந்திய உளவுத்துறை அதிகாரி, நாங்க உங்களை கைது செய்யுறோம்"

"என்னடா சொல்லுற"

மற்ற அதிகாரிகள் வர

"அவரு உண்மையத்தான் சொல்லுறாரு, நீங்க ஒரு போலின்னு உங்க வாயாலே சொல்ல நாங்க போட்ட நாடகம், எல்லோரும் நடிச்சோம், ஆனா நீங்க நடிக்கவே இல்ல, வாங்க சிறையிலே போளி சாப்பிடலாம்" 

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே  ஏன்?" 

"நோகாம நொங்கு திங்கத்தான், இப்ப நீங்க குற்றவாளி, அதனாலே சிறைக்கு ஒரு வாளிய எடுத்துகிட்டு போங்க"

அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....


Saturday, February 26, 2011

துரைமார்களும், தொப்பியும்



தமிழிலே அலை கடலாக ஓயாமல் ஆராய்ச்சி மணி அடிச்சி தவிச்சி போன கை இப்ப சொம்பு மணி அடிக்கிறது இங்கலிபிசுக்கு, அதாகப்பட்டதாவது துரைமார்களிடம் இருந்து கத்துகொண்ட கொண்ட பாடத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி, நாம பேசுறப்ப கொஞ்சம் முளகாய், காரம் தூவி அப்படியே பேசுவதிலே நம்மவர்களுக்கு இணை நம்மவர்களே என்பதற்கு எனக்கு தெரிந்த இந்த இரண்டு வார்த்தைகள் ஒரு உதாரணம், அதாவது ஹட்ஸ் ஆப், பைட் தி புல்லெட். நான் ஆரம்ப காலத்திலேயே இந்த வார்த்தைகளை கேட்டதும் அரண்டு போய் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டேன்.

முதல்ல ஹட்ஸ் ஆப்னு கேட்டவுடனே, இவரு எதுக்கு சம்பந்தம் இல்லாம தொப்பிய கழட்ட சொல்லுறான்னு யோசித்தேன், ஆனா வார்த்தையிலே இருக்கிற உள்குத்து பெரிய குத்தா இருக்குன்னு கண்டுபிடிச்சி முடிக்கும் முன்னே எனக்கு சொன்னவரு காணாம போயிட்டாரு,தொப்பி விவரம் எப்படினா(?) இவன் எல்லாம் விளங்கமாட்டான்னு என்னையப் பார்த்து சொன்னவங்க எல்லாம் இன்னைக்கு மூக்கு மேல விரலை வச்சி பார்க்கிற மாதிரி சாதனை செய்தால், அவங்களைப் பார்த்து ஹட்ஸ் ஆப் டு யூன்னு புண் பட்ட மனசுக்கு ரெண்டு கட்டு பீடியும், ஒரு பீரும் வாங்கி கொடுத்து மனசை தேத்த சொல்லுவாங்க(?).

சாதனை செய்பவர்களை மீண்டும் சாதனை செய்ய தூண்டுவது,உடலையும்,மனசையும் முதலீடு பண்ணி நொங்கு எப்படி திங்கனுமுன்னு சொல்லி கொடுத்தவரை, நோகாம நொங்கு தின்னுகிட்டு பாராட்டுவது இந்த ஹட்ஸ் ஆப் டு யூ,இந்த சொல் எப்படி வந்து இருக்கும் என்று கால சக்கரத்திலே ஏறாம கொசுவத்திய சுத்தி பார்த்தோமானால், துரைமார்கள் அந்தகாலத்திலே முடி கொட்டினது, முடி கொட்டிகிட்டு இருக்கது, முடி முளைக்காத எல்லோரும் தொப்பிய வச்சி இருந்து இருப்பார்கள், அந்த காலத்திலேயே சாதனையாளர் வரும் போது, தொப்பிய கழட்டி காட்டி அவருக்கு மரியாதை செய்து இருக்கலாம்(?). அதன் பின் நாகரிகம் மாறி தலைக்கு விக் வச்சாலும்,ஆனா ஹட்ஸ் ஆப் டு யூ மாறலை, காலம் மாறினாலும் கருத்து மாறலை என்பதை நிலைநாட்ட சொற்கள் அப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது, ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுச்சொல் கண்டு பிடிக்கலை, கண்டு பிடித்து இருந்தால் ஹேர் ஆப் டு யூ ன்னு சொல்லி ரெண்டு தலை முடியை பிடிங்கி வச்சி இருப்போம்

இணையத்திலே இந்த தூய தமிழ் சொல்லாடல் அடிக்கடி பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம்,அதாவது ஹட்ஸ் ஆப் டு யூ பார் யுவர் கும்மி, ரெண்டு பேருக்கிடையே அறச்சீற்றம்(வசனம் உதவி பாலா அண்ணன்) வரும் போது, நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லிக்கிட்டு ஒத்தை காலிலே நிக்கும் போது, அதுக்கும் ஒரு ஹட்ஸ் ஆப் டு ஆல். கோவமா பேசினாலும் தொப்பிய கழட்டு, மொக்கயா பேசினாலும் தொப்பிய கழட்டு. ஆணியே பிடுங்காம ஆணி அடிச்ச மாதிரி ஆணித்தரமா கருத்து சொன்னா தொப்பிய கழட்டனும், ஆனா எதுவுமே பேசாம இருந்தா முக்காடு போடணுமா, இதையெல்லாம் கேட்காம விட்டா காலைக்கடன் முடிக்கதுக்கு ௬ட ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்ல வேண்டிய நிலை வரலாம்(?).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்னு சொல்லுறதை விட்டுவிட்டு தொப்பியப்போடு, தொப்பிய கழட்டுன்னு பீட்டர் விட்டு பசும்பால் குடிக்கிற காலத்திலேயே   பயமுறுத்து வச்சி இருந்தாங்க.பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழுக்கு மட்டும் தானா, இங்கிலிபிசுக்கு கிடையாதா, ஆயிரத்திலே பேசினதை, ஆயிரத்து தொள்ளாயிரத்திலும், இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சும் ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்லிக்கிட்டு இருக்கனுமா?

தொப்பி விசத்திலே கொலை வெறி எதிர்ப்பு தெரிவிக்க இன்னொரு சிறப்பு காரணம் இருக்கு, தொப்பி பொரும்பாலும் ஆண்கள் வைக்கிறது, ஆனா பெண்களும் சேர்ந்து இப்ப தொப்பிய கழட்டுறேன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தை சமுகத்தை பெண்களும் ஆதரிக்கிறார்கள் என்ற நுண் கருத்தை தொலை நோக்கு பார்வையிலே அணுக வேண்டிய இருக்கு, பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.தாய்குலங்களுக்கு நன்மை(?) செய்யும் பொருட்டாக, இனிமேல ஒரு பூவையோ, ரோசாவை தவித்து, அந்த பூவை காதலர்கள் ஒட்டுமொத்தமா கட்டுக்குத்தகை எடுத்து இருக்காங்களாம். இல்ல தங்க மோதிரமோ கொடுத்து, தொப்பி விசயத்தையே கழட்டி விட்டா மிகவும் நல்லதா இருக்கும், திறைமைக்கு பாராட்டுக்கு பதிலா மொய் வச்சி பரிசு கொடுத்தா சந்தோசம் தானே, அதனாலே இனிமேல பழைய சொற்களை கழித்து விட்டு, புதிய சொற்களைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம்.  



Tuesday, February 15, 2011

துரைமார்கள் பெயர்களும், தன் மானத்தமிழனும்

அதாகப்பட்டதாவது போன வரம் தீன்/டீன் ஒரு இடுகையைப் போட்டு, அயல் நாடுகளிலே வாழும் தமிழர்கள் தங்கள் பெயரை வெள்ளைக்கார துரைமார்கள் உச்சரிக்க முடியாம, ராப்பகலா தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு, துக்கம் தொண்டைய அடைச்சதாலே, போராட்டம்,கலவரம் மற்றும் உண்ணாவிரதம் எதுவுமே இல்லாம தானாகவே முன் வந்து அவர்களின் கவலையைப் போக்க தங்களோட பெயர்களை அவங்க வாயிலே நுழையுற மாதிரி குப்புசாமி-குப்ஸ், சந்தியா-சாண்டி, ஜெயராமன்-ஜே இப்படி சுருக்கி துரைமார்கள் வாயிலே நெல்லை இருட்டுக்கடை அல்வா போல நுழையும் படியா மாத்தி வச்சிக்குறாங்க(?), ஆனா இந்தமாதிரி தன்மானத்தமிழர்கள் மட்டுமே பெயரை மாற்றி கொள்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

மனவாடும், வடக்கூர்காரங்களும் தங்கள் பெயர்களை இதே காரணத்துக்காக மாற்றி வைத்து கொள்கிறார்கள்,கிரிக்கெட் தவிர  இந்த விசயத்திலும்  இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதிலே எனக்கு ஐயம் இருப்பதாக தெரியவில்லை .என் ௬ட வேலை பார்த்த அனப்பத்துல்லா என்ற மனவாடு அனப்ஸ் பேரை மாத்தி வச்சிகிட்டாரு, நான் அனபத்துல்லான்னு சொன்னாலே அவருக்கு கொலைவெறி கோபம்
வரும். யோவ் துரை மார்களுத்தான் உன் பேரை சொல்லமுடியாது, எனக்குமா முடியாது? ன்னு சொன்னவரிடம், பெயர் மரியாதை தெரியாத பக்கியா இருக்கியேன்னு தத்துவமா பேசிட்டு போனாரு,ஒரு நாள்  அவருக்கிட்ட சிக்காகோ போறேன்னு சொன்னேன், அவரு
அதுக்கு சிக்காகோ இல்ல சிகாகோனு சொன்னாரு, இவருக்கு துரைமாரே தேவலாம் போலன்னு நினைத்துகொண்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தண்ணியப் போட்டு அவருக்கு நல்லா தண்ணி காட்டினேன், மனுஷன் அதுக்கு அப்புறமா, நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேச மாட்டாரு.

நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,படி அளக்கிற பகவான் கோவிச்சிக்குவாருன்னு வெளியே சொல்லாம இருக்கமா இல்ல, அயல் நாடு வந்து ஆணி பிடிங்கிட்டு இங்கிலிபிசு தெரியலைன்னு அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு தன்மானத்தை காக்க, வெள்ளையம்மா, வெள்ளையப்பன் பெயர்களை எல்லாம் கரைத்து குடித்தது போல நடிக்க வேண்டிய இருக்கு(?).

நானும் ஊரை விட்டு விமானம் ஏறும் முன்னே, அலுவலகத்திலே பல நூறு தடவை
சொல்லி அனுப்பினார்கள். நீ வேலைய ஒழுங்கா செய்யுறியோ இல்லையோ, ஆனா துரைமார்களுக்கு எந்த விதமான கண்ணிய குறைச்சல் வரும் படியா நடக்கக்௬டாது.
நானும் நல்லா கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வந்தேன், வந்த முதல் நாளே அறிமுகப் படலம் எல்லாம் முடிந்து, செய்ய வேண்டிய வேலையைப் பத்தி சொல்லி கிட்டு இருந்தாரு, ஒண்ணுமே புரியலைனாலும், புரிஞ்ச மாதிரியே நடிச்சேன். ரெம்ப அறிவாளியா இருக்கான்னு நினைச்சிகிட்டு, முடிஞ்ச உடனே எனக்கு மின் அஞ்சல் அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு, அவரு மின் அஞ்சல் அனுப்பியதிலே ஒண்ணுமே இல்லை, கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு அவரு அறைக்கு போயிட்டு ஜுஅன் (Juan), ஒரு சந்தேகம்னு கேட்டேன்.

"அவரு யாரு ஜுஅன்?"

"நீங்கதான்?"

"என் பேரு யுவன்.. என்னய்யா பேரை ௬ட சரியா சொல்ல தெரியலையே"

உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும், மன்னிச்சுருங்கன்னு முப்பது தடவை சொல்லிட்டேன். அவரு பேரை நூறு தடவை சொல்லி ஏத்தி வச்சிகிட்டேன்.கொஞ்ச நாள்ல வேலையிலே உலக திறமைய காட்டி (நம்புங்க) கொடி பிடிச்சிகிட்டு இருந்தேன்.எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.

 ஒரு நாள் அணியிலே வேலை செய்த ஒருத்தர் பெயரை டோமொர்ட்ரின்னு சொல்லி ௬ப்பிட்டேன்,கேட்டவங்க எல்லாம் என்னைய எப்படியே பார்த்தாங்க, நானும் ரெம்ப அழகா பேரை உச்சரிக்கிறேன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமாவே ௬ப்பிட்டேன், நான் ௬ப்பிட்டவர்

"எங்க ஐயா எனக்கு ஆசையா வச்ச பேரை இப்படி கொலை பண்ணுறியே?"

வழக்கம் போல தப்பத்தான் சொல்லிட்டேன்னா, அவர்ட்டயும் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சேன்.அவரு டிமிட்ரியாம், அப்புறமா அதையும் ஏத்தி வச்சேன், ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன். சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.

துரைமார்களுக்கு ஏகப்பட்ட சுருக்கப்பெயர்கள் இருக்கும், ராபர்ட்னு இருக்கிறதை பாப் மாத்தி வச்சுக்குவாங்க, இவங்க பெயரை மட்டுமில்லாம, தாத்தா, பாட்டி, வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை வைத்த சொல்லப்பெயரை எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய இருக்கு, காரணம் துரைமார்கள் எல்லாம் ஓடுற குதிரையா இருக்காங்க,நாமும் வளைந்து நெளிந்து அவங்க போக்குக்கு தண்ணி காட்ட வேண்டிய இருக்கு. இப்ப எல்லாம் ஒருத்தர் பெயரை பார்த்தாலே அவரு செல்லப்பெயர் என்னவா இருக்கும், அவரை நண்பர்கள் எப்படி ௬ப்பிடுவாங்க,முன்னாள் காதலி எப்படி ௬ப்பிட்டு இருப்பாங்க, இந்நாள் காதலி எப்படி ௬ப்பிடுவாங்க என்ற வரலாற்று புள்ளி விவரங்களும் கணனியே இல்லாம மண்டைக்குள்ளே எறிடுது.