Sunday, January 9, 2011

கிரிக்கெட்டும் சமுதாய சீர்கேடும்

பொறுப்பு அறிவித்தல் ஒன்று : தலைப்பிலே தான் காரம் அதிகமா இருக்கு, இடுகையிலே காரம் குறைவாத்தான் போட்டு இருக்கேன், படிச்சி முடிச்ச உடனே உப்பு சப்பு இல்லைன்னு தோணலாம்.

பொறுப்பு அறிவித்தல் ரெண்டு : நீங்க கொலைவெறி கிரிக்கெட் ரசிகரா இந்த இடுகைய தவிப்பது நலம்.

பொறுப்பு அறிவித்தல் மூன்று: இந்தியாவின் இறையாண்மை மற்றும்  பொறைஆண்மை அதுக்கு சட்னி சாம்பார் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டிலே தான் இருக்கிறது என்று
நினைப்பவர்களாக இருந்தாலும், இந்த இடுகையை தவிப்பது நலம்.

பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு  பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்.சமுக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்து முற்ப்போக்கு, பிற்ப்போக்கு எழுத்தாளர் வரிசைப் பட்டியலிலே முதல் வரிசைக்கு வர முயற்சி எடுக்கலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொண்டு இடுகைக்கு கடந்து செல்லலாம்.

அதகப்பட்டதாவது பல வருசங்களுக்கு முன்னாலே ஊரிலே ரப்பர் பந்தையும், களி மட்டையை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமா பீடி குடிக்க ஒதுங்கும் போது தான்  கிரிக்கெட் எனக்கு பரிச்சயமானது.களி மட்டையிலே இருந்து கிரிக்கெட் மட்டை வாங்க போய் மட்டையாகிட்டு வந்த நாள்முதலிலே இருந்து இன்றைய வரைக்கும் கிரிக்கெட் ரத்தத்திலே கலந்து விட்டது.இந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம் ஆகிபோவேன்னு நினைக்கவே இல்லை.

ஆரம்பத்திலே நான் ஆடுற ஆட்டத்திலே கவனம் இருந்தாலும், தொலைகாட்சிகளின் அறிமுகத்துக்கு பின்னால் அடுத்தவங்க ஆடுற ஆட்டத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தேன், கொஞ்ச நாளிலே கிரிக்கெட் ஆட்டம் தொலைகாட்சியிலே பார்க்கவில்லை என்றால் சீக்கு வந்த கோழி மாதிரி மனசு சுருண்டு படுத்துக்குவேன்.சோறு தண்ணி இல்லாம பத்து நாள் வேணா பட்டினி கிடப்பேன், ஆனா கிரிக்கெட் பார்க்கமா ஒரு நிமிஷம் ௬ட இருக்க முடியாது.

கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன், அதாவது இந்தியாவுக்கு எதிரா ஆடும் அணிக்கு விக்கெட் விலலைனா ஒத்தை கண்ணிலே பார்க்கிறது, தொலைக்காட்சி பெட்டிக்கு  பின்னாடி முதுகை வச்சி பார்க்கிறது. முத ஓவர் கன்னி ஓவர்(கிரிக்கெட் கண்டுபிடிச்சவன்  ஆணாதிக்கவாதியோ?)  ஆகிட்டா எதிரணிக்கு விக்கெட்டே விழாது, டவுசரை போட்டுக்கிட்டு ஒத்தை காலிலே நின்னு பீடி குடிக்கிறது, இப்படி பல வேலைகளை ரெட்டையா செய்யாமா ஒத்தையா செய்வேன். இப்படி 999 விதமான மூட நம்பிக்கை பட்டியல்களை வைத்து இருந்தேன்.ஆட்டம் நடக்கும் போது ஊரிலே தீ மிதிப்பு நடந்தா, அங்கேயும் போய் பூக்குழி இறங்கி இருப்பேன். நல்லவேளை இதுநாள் வரைக்கும் அப்படி நடக்கலை.

உலகத்திலே உள்ள அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை மட்டுமல்லாம, அவங்களோட முத சம்சாரம், ரெண்டாவது சம்சாரம்,நடப்பிலே யாரை வச்சி இருக்கா போன்ற கிசு கிசு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன். இந்த அர்பணிப்பை படிப்பிலே காட்டி இருந்தால் இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி இந்தியாவிலே சம்பளம் குறைவாக கிடைகிறது என்று நாசாவிலே சேர்ந்து தாய் நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்து இருப்பேன்.

கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமால், ஆட்டம் முடிஞ்ச உடனே, அதைபத்தி சிலாகித்து போற வாரவங்களிடம் பேசிக்கொண்டு இருப்பேன், ஆக வாழ்கையிலே நான் என்னையப் பத்தி பேசினதை விட கிரிக்கெட் பத்திதான் நிறைய பேசி இருக்கேன். அந்த ஆட்டத்திலே அவர் அப்படி அடித்து இருக்கவேண்டும். இவருக்கு முன்னால் அவரை களத்திலே இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று விமர்சனம் சொல்லுவேன். இந்தியாவிலே இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு கோச் வேலைக்கு ஆள் எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி பேரு தயாரா இருப்பாங்க.

ஆட்டம் நடக்கும் போது மின்சாரம் தடைபட்டுவிட்டால், திட்டு மழையாய்ப் பொழியும், இருந்தாலும் அடுத்த வினாடியே பல தொல்லை பேசிகளை அழைத்து நடப்பு ஓட்டம் விவரம் சேகரிப்பேன்.ஆட்டத்திலே இந்தியா ஜெயித்தா வாய் பூராம் பல்லா இருக்கும், தோத்திட்டா பாகிஸ்தான் ௬ட சண்டை போட்டு தோத்த மாதிரி பல் போன கிழவன் போல சோகம் ஆகிடுவேன். கிரிக்கெட் ஆட்டத்திலே இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்றால், அதற்கு அப்புறமா எந்த நிலையிலே இருந்து முந்திய ஆட்டம் பார்த்தேனோ, அந்த நிலைக்கு மறுபடி போகவே மாட்டேன், வெற்றி அடைந்தால்  அதே நிலையிலே இருந்து பார்ப்பேன் அடுத்து இந்தியா தோல்வி அடையும் வரை.

இப்படி கொலைவெறியா கிரிக்கெட் பார்த்து, நான் ஒரு பொறுப்பான இந்திய பிரஜை என்று நிருபித்து கொண்டு இருந்த காலத்திலே தான், நடக்கிற போட்டியின் முடிவை முன் ௬ட்டியே ஒரு கமிட்டி முடிவு செய்து, அந்த கமிட்டி செயல்பாட்டின் படி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிச்சக்கப்படுகிறது என்று செய்தி தாள்களிலே அடிப்பட்டது, பக்கத்திலே சமந்தப்பட்ட வீரர்கள் வடக்கூர்காரிகளிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படமும் பார்த்தேன், ஆக இவங்க நோகாம நொங்கு திங்கதுக்கு, நான் நொண்டி நொண்டி தொலைகாட்சி பார்த்தது எல்லாம் வீணாப் போச்சேன்னு நினைச்சேன்.

விளையாட்டை விட்டு வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், இவங்க விளையாட்டுக்குள் நுழையுறதே வடக்கூர் நடிகைகளுக்கு துண்டு போடத்தானா என்ற எண்ணம் வந்தது.மேலும் அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது, அவைகளை  கிரிக்கெட் போதை மறைத்துவிட்டது, செய்தி தாள்களிலும் மற்ற விளையாட்டுக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல சித்தரிக்கபடுகிறது.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதே பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும்  அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.


Friday, January 7, 2011

மரபுச்சண்டை

மருத்துவமனையின் வாசலிலே திருவோடு இல்லாமால் தெருவை நோக்கி இருந்த ஒரு பெண்ணின் மனதிலே ஏன் இந்த சோகம், உள்ளே சென்ற தனது காதலன் நிலைமை என்னாச்சின்னு நினைத்து எண்ணையிலே வேகாத வடை மாதிரி, மனதை வறுத்து எடுக்கிற அளவுக்கு சோகம் இருந்தாலும், எதையும் வெளிகாட்டி கொள்ளாமால் உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு இருந்தாள்.

"கருப்பு நிற உதட்டு சாயம் போடும் சிகப்பழகியே, அப்படியே கொஞ்சம் பல்லுக்கும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்"

"சகிக்கலை உன் வர்ணனை"

"இதை வர்ணன்னைனு வெளியே சொல்லாதே கல்லை கொண்டு எறியப்போறாங்க"

"அதெல்லாம் இருக்கட்டும், மருத்துவ அறிக்கை எங்கே?"

"எல்லாமே நல்லாவே இருக்கு, எனக்கு எய்ட்ஸ்,புற்றுநோய் எல்லாம் இல்லை, இதயத்தை நீ ஆட்டையப் போட்டாலும்,கிட்னி நல்லமுறையிலே இயங்குகிறது, இதை  நான் சொல்லலை, இந்த அறிக்கை சொல்லுது"

"கொடு என்கிட்டே" என்று சொல்லிவிட்டு அவன் கையிலே இருந்து அறிக்கையைப் பிடிங்கி வேகமாக புரட்டிப் பார்த்தாள்.ஒரு தடவைக்கு மேல் பல தடவை பார்த்தாள்.

"அறிக்கை படிக்கிற வேகத்தை படிக்கிறதிலே காட்டினால், நீயும் மருத்துவராகி இருக்கலாம்"

"உன்னோட மரபணு அறிக்கை சரியா, வேற யாரோட பெயரும் தவறுதலா வந்து இருக்கா?"

"சத்தியமா என்னுதுதான், சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேளு"

"ஒன்னு குறையுதே"

"அது உன்னோட அறிவு"

"இல்ல உன்னோட மரபணு படம் சின்ன கோணலா இருக்கு"

"வாய் கோணமா இருக்குல்ல, அப்புறம் என்ன ?"

"பிரச்சனை அது இல்ல, அந்த ஒரு மரபணுவிலேதான் முக்கியமான தகவல் இருக்கு"

"அப்படியா என்ன தகவல் இருக்கு?"

"மக்களை ஆளுகை செய்யும் திறமை, எங்க மரபிலே இருந்து வந்தவங்க தான் உலகத்திலே எண்பது சதவீதக்கு மேல நாடுகளை ஆளுறாங்க"

"மத்த இருபது சதவீதம் என்னாச்சி?"

"அந்த நாடுகள் எல்லாம் இன்னும் வறுமை கோட்டை தாண்டலை, நம்ம நாடு வல்லரசாக  காரணமே எங்க மரபு வழி வம்ச தலைவர்களாலே என்பது சமிபத்திய ஆய்வு சொல்லுது"

"இப்ப ஏன் வரலாற்றை பத்தி பாடம் எடுத்து வாத்திச்சி மாதிரி பேசுறியே ?"

"புரியாம பேசாதே, நாம ரெண்டு பெரும் கல்யாணம் செய்தால்,நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் இந்த மரபணு இல்லாம நாட்டை ஆள முடியாம போய்ட்டா, ஒரு சந்ததியே வீணாப்போகும், நம்ம நாடு மறுபடியும் ஏழை நாடு ஆகிடும், அப்படி ஒரு நிலைமைய நினைச்சே பார்க்க முடியலை,இந்த மருத்துவ அறிக்கை எனக்கு சாதகமா வரணுமுன்னு, தீச்சட்டி எடுத்தேன், தோப்பு கரணம் போட்டேன், கோயில் கோயிலா ஏறினேன்"

"அடியே ஆடே அறுக்கலை, அதுக்குள்ளையும் தலைக்கு பறந்த கதையா இருக்கு நீ சொல்லுறது"

"நம்ம நகர எங்க மரபணு சாதி சங்க வாலிபி தலைவி நான், ஒரு ஆளைப் பார்த்தா உடனே, அவங்க மரபணுவை படமா வரைவேன். என்னோட கணிப்புக்கு பரிசா மரபணு கண்ட மாதரசி பட்டம் கொடுத்து இருக்காங்க.என்னோட கணிப்பு உன்னோட விசயத்திலே எப்படி தப்பா போச்சினு தெரியலையே !!!"

"என்னவோ நோபல் பரிசு கிடைச்ச மாதிரி சொல்லுற,ரெம்ப காலத்துக்கு முன்னாடி சாதி, மதமுன்னு சண்டை போட்டோம், அதெல்லாம் ஓய்ந்து முடிஞ்ச இப்ப எல்லோரும் மரபு பேரை சொல்லி சண்டை போடுறோம்.சண்டை போடுறதுக்குன்னே புதுசு புதுசா கண்டு பிடிப்பீங்களோ,வம்சம் விருத்தி ஆகின காலம் போய், இப்ப மரபு வம்சம் விருத்தி அடைய முயற்சிகள் நடக்கு"

"உனக்கு வேணா இது சாதாரணமா இருக்கலாம், ஆனா என்னோட மரப விட்டு வெளியே வர முடியாது"

"இப்ப ௬ப்பாடு போடுற நீ என்னை காதலிக்கும் முன்னே மூளைய முதுகிலேயா  இருந்தியோ"

"அதான் சொன்னேனே அப்பவே"

"முடிவா நீ என்ன சொல்ல வார, நான் உங்க மரபு சாதி இல்லாததாலே நாம கல்யாணம் பண்ணமுடியாது, அதுக்கு தானே இந்த பாடு"

"ம்ம்ம்"

"எனக்கும் உன்னைய மாதிரி மரபு சாதிவெறி பிடிச்சவ வேண்டாம்"

"வெட்டிக்கலாமா"

"அதான் வெட்டி விட்டுட்டியே,போய் உங்க ஆள்கள்ள நல்ல ஆண்பிளையா பார்த்து வளைய விரி,உன்னை காதலிச்ச பாவத்தை நான் ௬வம் ஆத்திலே போய் குளிச்சி
தீர்த்துக்கிறேன்"

(அடுத்த அரை மணி நேரம் கழித்து குட்டி சுவரில்)

"மாப்ள நீ கொடுத்த யோசனை நல்லாவே வேலை செய்தது"

"நான் தான் அப்பவே சொன்னேன், அவ ஒரு மரபு சாதி வெறி பிடிச்சவ, அதை வச்சி அவளை கழட்டிவிடாலமுன்னு, மருத்துவ மனையிலே எப்படி மரபு சான்றிதழை மாத்தினே"

"அங்க வேலை செய்யுற ஒருத்தரைப் பார்த்து அவரை வச்சி மாத்திட்டேன்,ஆனாலும் மரபணு விசயத்திலே அவ கணிப்பு சரிதான், இருந்தாலும் இப்ப கிடைச்சி இருக்கிற ஆளு, இவளைவிட கொஞ்சம் நிறமா அழகா இருக்கா, அதான் பழையன கழிதலும் புதியன
புகுதலும்(தமிழ் எதுக்கெல்லாம் பயன்படுது பாருங்க) மாதிரி பழசு போய் புதுசு வந்து விட்டது..வந்துகிட்டே இருக்கு"

"எங்கடா?"

"போயிட்டு வந்து சொல்லுறேன்"


Monday, December 27, 2010

எனது குப்பைகள் - நூல் வெளியீட்டு விழா

ஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்து வழி மேல் கல்லை வைத்து காத்து இருக்கும் என்னுடைய  பலகோடி(?) ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக வருகிறது "எனது குப்பைகள்" நூல்.  குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.

கல்லூரி சாலையிலே "கள்" குடித்துவிட்டு கட்டை மாட்டு வண்டியிலே சென்றாலும், கார வீட்டு கார் பிடித்து அமெரிக்கா சென்று, என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தாலும், தமிழுக்கு அறிய பல தொண்டுகள் செய்து "கொண்டியாரங்கள்ளி" என்ற வரலாற்று காவியம் படைத்த குடுகுடுப்பையார்,எனது குப்பைகள் நூலின் அறிமுக ஏற்புரை எடுப்பதாக கட்சி கொடியின் மேல் சபதம் செய்து இருக்கிறார்.அவரின் அறிமுக உரையின் முன்னோட்டம் இதோ

"ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாது என்பதற்கான இலக்கணமே இந்த எனது
குப்பைகள்,குப்பை என்பது களையப்பட வேண்டிய ஒன்று இந்த புத்தகத்தைப் போல".

வாழ்க்கையிலே தான் சந்தித்த கதாபாத்திரங்களை வெளியிட்டு கலைத்தாயின் தீராப் பசியை மணிமேகலை வைத்து இருந்த அமுதசுரபியை கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீர்த்துக்கொண்டு இருக்கும் பதிவுலக மன்னன் எங்கள் அண்ணன், இல்லாத கட்சிக்கு பொல்லாத மாணவர் அணித்தலைவர், இருண்டு விடாதே என்று வானத்தைப் பார்த்து பாடிய கவுஜையாலே வானம் மயங்கி, வனம் போல  மப்பும், மந்தாரமுமாக, கொப்பும் கிளையுமாக இருக்கிறது, பாலகன்(?) போல இருப்பதாலே அவரை பாலா அண்ணன் என்று அழைக்கிறோம்(?).இவ்வளவு புகழுக்கு சொந்தக்காராக இருந்தாலும், எனது குப்பைகளுக்கு ஏற்புரை வழங்குவதாக காசு வாங்காம வாக்கு கொடுத்து இருக்கிறார்.அவரின் ஏற்புரையின் முன்னோட்டம் இதோ உங்கள் பார்வைக்கு

"தொல்காப்பியத்துக்கு பிறகு தமிழிலே சிறந்த இலக்கண நூல் வெளிவரவில்லை என்பது உலகறிந்த உண்மை, அப்பேற்பட்ட பெருமை கொண்ட தொல்காப்பியர் இந்த குப்பையைப்   படித்தால் நிச்சயம் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும், ஆமா கொலை பண்ணினா ஆயுள் தண்டனை தானே கொடுப்பாங்க(?)".

இவரை தெரியும் என்பதிலே எனக்கும், டமிழ் மம்மிக்கும் பெருமை, சொல்லின் செல்வர், தமிழை வில்லாக்கி, வார்த்தைகளை அம்பாக்கி, படிப்பவர்களை கவரும் தமிழ் அம்பு. வட்டார சொல், வழக்குச்சொல் மற்றும் வழக்கு ஒழிந்த சொல் ஒவ்வொன்றையும் நேர் வரிசையாகவும், குறுக்கு வரிசையாகவும் அடுக்கி கட்டம் கட்டி சொடக்கு போட்டு சொடுக்கு விளையாடுவார். ஊர்ப்பழமை பேசுவதிலே பெருசுகளுக்கு இணையானவர்.

"ஒரு புத்தகம் எப்படி இருக்கோனுமுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா என்ற  ஊர்ப்பழமையைப் படிங்(க), ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாதுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா இந்த குப்பைப் படிங்(க) ன்னு எங்க அப்பச்சி கனவிலே கவி காளமேகம் வந்து சொல்லி இருக்".

ரஜினி படம் போல புத்தகம் வெளிவரும் முன்னே, உலகெங்கிலும் உள்ள ரசிகர் பெருமக்கள் புத்தகம் வாங்க அலை அலையாய் இணையத்திலேயும், வலையிலேயும்  ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்து உள்ளது. இப்படி ஒரு புத்தக அலையைப் பார்த்ததில்லை என மன்னார் பதிப்பகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக முகிலன் புத்தகத்தின் பிரதிகளை சாக்குமுட்டையிலே வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.விளக்கம் கேட்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவிலே கலவரம் மிகுந்த பகுதியாகிய மைலாப்பூரிலே பொது மக்களிடம்    மிகவும் பிரசித்தி பெற்ற விதூஷ் பக்கோடாவை விட புத்தக எண்ணிக்கை அதிகமாக விற்கும் என தகவல் கிடைத்ததாலே,முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விதூஷ் ஐயாயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து, தோட்டாக்கள் போன்ற பக்கோடாவை புத்தகத்தாள்களை கிழித்து சுத்தி கொடுக்க யோசனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பப்புவிடம் வாங்கிய பல்புகள் பளிச்சென மின்னுவதாலே, அந்த ஒளியை குறைக்க ரெண்டாயிரம் பிரதிகளுக்கு சந்தனமுல்லை முன் பதிவு செய்து இருப்பதாக பப்பு ரசிகர்மன்ற அமெரிக்க கிளை தெரிவித்து உள்ளது .

இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புத்தக அலை புயல் அலையாக இருப்பதாக  தகவல் கசிந்து இருக்கிறது, குறிப்பாக அவுஸ்திரேலியாவிலே முன் அறிவிப்பு ஏதுமின்றி தமிழகத்தின் மின் அறிவிப்பு போல கடைய ஆட்டயப் போட்ட கூகிள் ஆண்டவரிடம் பல தெருமுனை போராட்டங்களை நடத்தி,கடை திரும்ப கிடைக்க போராடி வரும் தங்க மங்கை, வைர மங்கை இப்படி பல பட்டப்பெயர்கள் இருந்தும், தங்கமும், வைரமும் வெங்காய விலைபோல இருப்பதாலே, அதை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு  அவுஸ்திரேலியா கும்மி கழக தலைவி என்ற ஒரு பட்டத்தை மட்டும் வைத்து இருந்த/இருக்கும் சின்ன அம்மிணி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.

தில்லி தமிழ் சங்கத்தின் சார்பாக கோடை வெப்பம் தணிக்க புத்தகம் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் நூல் வெளியீட்டு திருவிழாவை நேரடி ஒலி,ஒளி(ழி)   பரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டி  போடுகின்றனர். விழாவிலே ௬ட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே தமிழக மற்றும்  இந்திய காவல்துறைகளுக்கு  கிரகம் சரியில்லாததாலே அனுமதி வழங்கவில்லை, அதனால் விழா செவ்வாய் கிரகத்திலே நிகழும் 23345 வருடம், தை 30 ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் கல்லோடு வந்து விழா(லா) வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.



Friday, December 24, 2010

மன்மதன் அம்பு விமர்சனம்

ரஜினி படமா இருந்து இருந்தா இவ்வளவு ஆடம்பர செலவு செய்றதுக்கு பதிலா ௬வத்தை நைல் நதி ஆக்கி இருக்கலாம் என்று படம் வெளிவரும் ஒரு மாதத்துக்கு முன்னே எதிர் வினைகள் குற்றால அருவி மாதிரி வந்து இருக்கும்,அந்த படம் ஓடப்போற திரை அரங்கம் பக்கமே தலை வைத்து படுக்கவே மாட்டேன் என்று சபதம் ஏற்று இடுகைகள் வந்து இருக்கும். படத்துக்கும் நல்ல விளம்பரம் கிடைத்து இருக்கும், விளம்பர இடுகைகள் குறைவா இருந்ததாலே எந்த விட எதிர்பார்ப்பும் இல்லாம படத்துக்கு போனேன்.

எதிர்பார்ப்பு இல்லாம போனதாலே நான் ஏமாறலை கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம பொழுது போச்சி படம் முடியும் வரை, கமல் படங்களிலே வழக்கமா வரும் நடசத்திர பட்டாளங்களுடன் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை, காதல் இல்லைனா தமிழ் படமே இல்லை என்ற தலையாய விதிக்கு உட்பட்டு மற்றுமொரு காதல் கதைக்களம்.பாகிஸ்தான் ஆளுங்களை அடித்து விரட்டி விட்டு கஷ்மீர்ல கொடியை நாட்டும் நம்மவர்கள், ஆலிவுட் படங்கள் மாதிரி வேற்று கிரக ஆள்களை அடிச்சி விரட்டி இந்திய கொடிய பறக்க விட இன்னும் பல காலம் இருக்கு. காதலுன்னு சொன்னதினாலே, காதலியை பறக்காவெட்டி மாதிரி ஒளிந்து ஒளிந்து பார்க்கிற காட்சிகள் நிறைய இருக்கு.

வயசான ஆளு  வாலிப புள்ள மாதிரி பண்ணக்௬டாதுக்கு என்பதற்காக நாப்பது வயசிலே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாயாக கமல் நடித்து இருக்கிறார், நடிகையாகவே திரிசா நடித்து இருக்கிறார், இம்புட்டு அழகா தமிழ் பேச தெரிஞ்சிகிட்டு, குரலை கடன் வாங்கி பேசுறது நல்லவா இருக்கு திரிசா அக்கா(சத்தியமா எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியானதும் தான் இந்த அக்கா புராணம்).

மாதவன் கிடைத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார், காதலியை சந்தேகப்படுவதிலும், சரக்கு அடிப்பதிலும், சரக்கு அடித்த பின் பேசுவதிலும் கொடுத்த காசுக்கு மேல ௬வினதா சந்தேகம் வராது, படம் பார்க்க நீங்க சரக்கு அடித்துவிட்டு போய்
இருந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பு இல்லை என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சங்கீத சங்கீதமான நடிப்பு, திரிசாவுக்கு தோழியாக வரும் கதாபாத்திரத்தை கன நிறைவாக செய்து இருக்கிறார், நாயகிக்கு இணையாக கதை முழுவதும் வந்து வெற்றி கொடி நாட்டுகிறார். மேலும் கதையில் வரும் மலையாள தயாரிப்பாளர் தம்பதிகள் , குழந்தை நட்சத்திரம், மற்றும் ஊர்வசி, ரமேஷ் அரவிந்த் உட்பட அனைவரும்  ஒளிவு மறைவு இல்லாத நிறைவு.

மேல சொன்னவர்களை விட படம் முழுவதும் கமல் தான் ஆக்கிரமித்து இருக்கிறார், பிரெஞ்சுகாரிக்கு கணவன், ராணுவ அதிகாரி,உளவாளி மற்றும் காதல் மன்னன் இப்படி பல பாத்திரங்களை ஏற்று நடந்தாலும், ரசிகர்கள் பயப்படும் படியாக, முகத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்றலை, காலை ஓடிச்சி கட்டையா நடந்து எல்லாம் கலவரப் படுத்தலை என்பதுவே மிகப்பெரிய நல்ல விஷயம். கமல் வராத காட்சிகளை விரல் விடாம எண்ணிடலாம்.

முதல் பாதியிலே மெதுவா சென்றாலும் அலுப்பு மருந்து போடுகிற அளவுக்கு சலிப்பு
தட்டலை, இடையிடையிலே நிறைய இங்கிலிபிசு வசனங்கள் வந்தாலும், பக்கத்திலே நல்ல ஆங்கிலம் தெரிஞ்சவங்க கிட்டு கேட்டு தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு, கடைசி இருபது நிமிஷம் கலவர ஓட்டம்.வாய்விட்டு சிரிக்க கூடிய வாய்ப்புகள் படத்திலே நிறைய இருக்கும்,நீங்க இலக்கியவாதியா இருந்தா நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.ஆள் மாறாட்ட யோசனையை சினிமா உலகத்துக்கு அறிமுகப் படித்தினவரை விட அதிகமாவே கமல் ஆள் மாறாட்ட படங்களை எடுத்துவிட்டார், ஆனா மன்மதன் அம்புல அதைபத்தி பேசிட்டு விட்டுறாரு.

ஒளிப்பதிவு படத்துக்கு நல்ல பலம் என்று எனக்கு தோணுது,படம் முடிந்து வெளியே வரும்போது ௬ட ஒரு பாட்டும் புலப்படலை,இன்னும் படத்திலே பாடல் இருந்ததா என்று யோசித்து கொண்டு இருக்கேன், இவ்வளவு நேரமும் பேசிட்டு கதைய சொல்லவே இல்லையேன்னு நீங்க யோசிக்குறீங்களா, வெள்ளி திரையிலே போய் பார்த்தா உங்களுக்கே நல்லா தெரியும்.கமல் படிச்ச கவுஜையை எல்லாம் வெட்டாம போட்டுட்டாங்களே, நம்ம ஊரு பெருசுங்க இம்புட்டு தூரம் வரமாட்டாங்கன்னு நினைச்சிட்டாங்களோ?

முடிவா ஒரு குத்து வசனத்தோட முடிக்கிறேன்.மன்மதன் அம்பு, பூக்களை வைத்தே எய்கிறார், படம் பார்க்கப் போறவங்களை காயப் படுத்தாது என்னோட தாழ்மையான
எண்ணம்.அதனாலே எதிர்பார்ப்பு இல்லாம போங்க, ஏமாற்றம் இல்லாம திரும்பி வாங்க.

திரை அரங்கிலே போட்ட பின்னூட்டம் "திரிசாவுக்கும், சங்கீதாவுக்கும் கொஞ்சம் பவுடர் பூசி விடுங்கப்பு"


Tuesday, December 21, 2010

உங்க பையன் உருப்படமாட்டான்

"என்னடா சேட்டை பண்ணினா, பள்ளிக்௬டம் சேர்ந்து ஒரு வாரத்திலே வாத்தியாரு வந்து பார்க்க சொல்லி இருக்காரு"

"அப்பா, நீ சொல்லித்தான் எனக்கே தெரியும், நான் சேட்டை பண்ணி இருக்கேன்னு" என்று சொன்னவனுக்கு பதில் சொல்லும் முன்,பள்ளி முதல்வர் அறையிலே இருந்து அவரது உதவியாளர் என்னை உள்ளே வரச்சொன்னார்.

முதல்வர் அறையிலே

"எங்களோட பள்ளி வரலாற்றிலே சேர்ந்த ஒரு வாரத்திலே இவ்வளவு புகார் யாருக்குமே கிடைத்ததில்லை, உங்க பையனோட நடவடிக்கை சரி இல்லை"

"நானும் அதைதான் கேட்கிறேன் என்னன்னு சொல்லவே இல்லை, நீங்களாவது சொல்லுங்களேன்"

"வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கும் போது கவனிக்கவே இல்லையாம், மணி அடிச்ச உடனே எல்லோரையும் தள்ளி விட்டுட்டு ஓடிப்போய்டுறான். வகுப்பிலே நோ தமிழ்னு சொன்னாலும், கேட்காம தமிழிலே பேசுறான், இவனோட சேர்ந்து எல்லா புள்ளைகளும் தமிழ்ல பேசுறாங்க, எங்க பள்ளிக் ௬டம் பாழா போகுது,எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கிறதில்லை"

"ஏன்டா இப்படி, அம்மா மாதிரியே இருக்க"

"அப்பா, ௬ட படிக்கிற பசங்க எல்லாம் மாதவரம், பெரம்பூர்ல இருந்து வாராங்க, அவங்க கிட்ட எல்லாம் தமிழ்ல பேசாம, இங்கிலாந்திலே இருந்து வந்தவங்க மாதிரி இங்கிலிபிசு பேசணுமா?"

"நியாயமாத்தானே ஐயா இருக்கு,தமிழரிடம் தமிழ் பேசுவதிலே என்ன தப்பு?"

"நீங்க ஒரு பொறுப்பான அப்பான்னு நினைச்சேன், நீங்களும் உங்க புள்ளைக்கு சொம்பு அடிக்குறீங்களே"

"இது வெண்கல சொம்பு இன்னும் நசுங்கலை,நீங்க மேல சொல்லுங்க"

"வகுப்பிலே பேச ஆரமிச்சா நிறுத்தவே முடியலை, ஓட்டை வண்டி மாதிரி ஒரே சத்தம், இவன் வாய்க்கு எல்லாம் சோர்வே வராதா?"

"அப்படியா!!!!!!!"

"ஆமா வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சரை விட அதிகமா பேசுறான் உங்க பையன்"

"கேட்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி, நானும் இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தேன், கல்யாணம் முடிஞ்சதோட வாய மூடி விட்டு காதை திறந்தவன்தான், இன்னும் அப்படியே தான் இருக்கேன்,   எங்க என் புள்ளையும் ஊமை பூச்சியா போயிடுமோன்னு பயந்தேன், நல்ல வார்த்தை சொல்லி நீங்க என் மனசிலே பால் சொம்பு அடிச்சிட்டீங்க"

"நீங்க குறைய கேட்க வந்தீங்களா?, பாராட்ட வந்தீங்களா?"

"உங்களுக்கு குறையா தெரியுறது, எனக்கு பெருமையா இருக்கு"

"அப்படியே உங்க புள்ளைக்கு மத்திய சிறையிலே ஒரு இடம் வாங்கி வையுங்க, எதிர் காலத்திலே அங்கதான் போவான்"

"இவன் சிறை அதிகாரியானா எனக்கு பெருமைதான்,நீங்க மேல சொல்லுங்க எஜமான்"

"பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சர் சடை முடியப் பிடிச்சி இழுத்து இருக்கான்"

"அப்பா அது சவரி முடி, இழுத்த உடனே கையிலே வந்துருச்சு"

"வீட்டிலேயும் இப்படித்தான், இவங்க அம்மா சடை முடிய பிடிச்சி இழுப்பான், வீட்டிலே தான் இவ்வளவு தைரியசாலின்னு நினைச்சேன், என் மானத்தை காப்பாத்திட்டான்"

"என்ன சார் நீங்க, உங்க புள்ள மேல அடுக்கடுக்கா புகார்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் ௬ட சுரணையே இல்லாம இருக்கீங்க"

"சொல்லுற உங்களுக்கே இல்லாத சுரணை எனக்கு எப்படி வரும்?"

"உங்க பையனாலே வகுப்பிலே இருக்கிற மற்ற பசங்களும் கெட்டுப்போக நிறைய வாய்ப்புகள் இருக்கு,எங்க பள்ளியிலே படிச்ச பசங்கள்ள பெரும்பாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆவுஸ்திரலியா போய் இருக்காங்க"

"அமெரிக்காவிலே ஆணி பிடிங்குனாத்தான் அறிவாளிங்க, உள்ளுரிலே இருக்கிறவங்க
எல்லாம் உதாவாக்கறையா?, இந்திய மதரை ஒரு தமிழ் தாடி அவமானப்படுத்திட்டீங்க"

"எங்கள் பள்ளி உலகத்தரத்துக்கு நிகரானது, இங்க உங்க பையன் படிக்கனுமுன்னா விதி முறைகளை கடை பிடிக்கணும், பையனை விட அவங்க அப்பாவுக்கும் நிறைய விதி
முறைகள் இருக்கு அதையும் கடை பிடிக்கணும், நீங்களும் உங்க பையனும் அடிக்கிற கும்மிக்கு இங்க இடம் கிடையாது"

"ஐயா என் பையனுக்கு கல்வி கிடையாதா?"

"கிடைக்கிற இடத்திலே போய் வாங்கிக்கோங்க, போகும்முன்னே இந்த மாத குறை கட்டணத்தையும் கட்டிட்டுப் போங்க"

வேற வழி இல்லாமல் தனது மூன்று வயது மகனை தோளில் போட்டுகொண்டு, பாலர் பள்ளியின் வாயிலை அடைந்தார். வாயிலிலே பள்ளியின் விளம்பர பலகை "உங்கள் மழலையின் எதிர் காலத்தின் நுழைவு வாயில்" என்று எழுதி இருந்தது வெயில் பட்டு மின்னியதை  பார்த்து வெளியே சென்று கொண்டு இருந்தார்.



Thursday, December 16, 2010

மனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி

துவைக்கிறக்கு சோப்பு வச்சி தேய்த்து, கை வலியை தாங்காம துணியை அடிக்கிற அடியிலே துணி கிழிஞ்சி அதைப் போட்டு போகும் போது ரெண்டு பாரு பாத்து அவங்களும் துணிய கிழிக்க, அதுவே நவ நாகரிகம் ஆகிப் போச்சின்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

சோப்பு வச்சி துணி துவைக்கிற காலம் எல்லாம் மலையேறிப் போன அமெரிக்க மண்ணிலே, துணியை அள்ளிப் பையிலே போட்டு, சோப்பை உருக்கி புட்டியிலே அடைச்சி வச்சதை எடுத்துகிட்டு இயந்திரங்களை வைத்து துணி துவைக்கும் கடைக்கு போனேன். துணிகளை அள்ளிப் இயந்திரத்திலே போடும் போது, எதிர் வரிசையிலே இருந்த அழகி சோப்பை உருக்கி வச்ச புட்டியிலே இருந்து இயந்திரத்திற்குள் சோப்பு தண்ணியியை ஊத்தும் அழகைப் பார்க்கும் போது நான் அந்த இயந்திரமா இருந்து என் வாயிலே சோப்பு தண்ணியை ஊத்தினா எப்படி இருக்குமுன்னு யோசித்தாலும், சின்ன வயசிலே இனிமா கொடுத்தது ஞாபகம் வரவே, அப்படியே நினைவுக்கு வந்தேன். எவ்வளவோ இடங்களில் எப்படி எல்லாம் துண்டை போட்டு உசார் பண்ணி இருந்தாலும், துவைக்கிற இடத்திலே உசார் பண்ணலை,அதனாலையே உலகமஹா உசார் நாயகன் விருது கிடைக்காமல் போனது என்ற வடு இன்னும் மனதை விட்டு அகலவில்லை,எப்படியும் இந்த முறை உசார் பட்டம் கிடைக்க வைக்க வேண்டும் என மனதிலே நினைத்து கொண்டேன்.      

துணி துவைத்து முடிந்தது, துவைத்து முடிந்த உடனே, நம்ம ஊரு மாதிரி வீட்டுக்கு வெளியே துணியை காயப் போட்டா,துணி எல்லாம் பனிகட்டியா மாறிடும். அங்கேயே துணியை காய வைக்கிற இயந்திரமும் இருக்கும், துவைச்சி முடிச்ச உடனே, அதிலே அள்ளிப் போடணும், துணியை வேகமா அள்ளிப் போட்டேன், துவைக்க எடுத்திட்டு வந்ததே ரெண்டு சட்டை, ரெண்டு பேன்ட், இதிலே இருந்து தெரிஞ்சிக்கணும் நான் எதுக்கு இந்த கடைப் பக்கம் வந்தேன்னு. அள்ளிப் போட்டுட்டு பக்கத்திலே பார்த்தேன், மெக்ஸிகோ அழகி அவளோட துணிகளை காய வைக்கும் யந்திரத்திலே போட்டு விட்டு கதவை மூட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள். 

அடுத்த வினாடியே அவள் பக்கம் சென்று "நான் உதவி செய்யலாமா உங்களுக்கு" கேள்விய கேட்டு, அவள் பதில் சொல்லும் முன்னே கதவை மூடி விட்டேன். ஒரு கதவை முடினா, மற்றொரு கதவு திறக்கும் என்ற "நியு" உசார் டன் விதிப்படி, என்னோட மனதின் கதவை திறந்து இதயத்தையும், கிட்னியையும் கொடுக்கத்தான் ஆசை, வாங்கிட்டு இதய பொரியலும், கிட்னி குழம்பும் வைத்து சாப்பிட்டு விட்டா என்ன பண்ணன்னு விட்டுட்டேன். இயந்திரம் துணிய காய வைக்கிற நேரத்திலே கொஞ்சம் கடலையை காய வைக்கலாம் என்ற நினைப்போடு அவளிடம் சென்றேன்.

"கதவு ௬ட சண்டை போட்டதிலே அடி ஏதும் இல்ல"

"யாருக்கு?"

"உங்க கைக்குனு நீங்க நினைச்சா கைக்கு, கதவுக்கு நினைச்சா கதவுக்கு"

"ரெண்டுக்குமே இல்லைனா?" 

"நீங்களே சொல்லுங்க?"

"சொல்ல ஏதும் இல்லையே?"

"துணி காய்ந்து முடிக்கிற வரைக்கும் ஊமையாவா இருப்பீங்க?"

"நான் எப்படி இருந்தா உனக்கென்ன?"

"நீங்க எப்படி இருந்தாலும் என்ன மாதிரி அழகா இருந்தா சரிதான்" இதை சொன்னதும் அப்படி ஒரு சிரிப்பு.

"நீங்க சிரிக்கிறதைப் பார்த்தா, நான் பேரழகன்னு நினைக்கிற மாதிரி இருக்கு"

"நானே கடும் வேலைப்பளுகளுக்கிடையே துவைக்க வந்து இருக்கேன், நீங்க என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுறீங்களா?"

"நானும் வேலைபளுவிலே தான் இருக்கேன், கொஞ்சம் வெளியே வந்து பேசி வேலையை மறக்கலாமுன்னு நினைச்சேன், ம்ம்.. என்ன செய்ய நான் பேசுறது  உங்களுக்கு பிடிக்கலை, சரி நீங்க தனியா இருங்க" 

"நான் அப்படி சொல்லலை, வாரம் ஆறு நாளும் வேலை,சமைக்க, சாப்பிட நேரம் இல்லை"

"அதான் உங்க பலத்தை நேரிலே பார்த்தேனே, எனக்கு தெரிஞ்ச நிறைய நல்ல சாப்பாடு கடை இருக்கு, நீங்களும்,நானும் ஒரு நாள் போகலாமே"

"ஒ.. போகலாமே தனியா.. நீங்க மட்டும்"

"நான் தினமும் தனியாத்தான் போறேன், துணைக்கு ஆள் இல்லாம, நான் உங்களை ௬ப்பிடுறேன்"  

"உங்க தொல்லை தாங்கமுடியலை" 

"இந்த தொல்லையோட ஒரு காப்பியுமா குடிக்க முடியாது, நாம இப்ப பேசின இவ்வளவு நேரம் தான் செலவாகும்"

"துணி காய்ந்த உடனே நான் வீட்டுக்கு போய்டுவேன்"

"உங்க அலைபேசியையும் உங்க ௬ட வீட்டுக்கு எடுத்திட்டு தானே போவீங்க, உங்க வீட்டு எண் தெரிய வேண்டிய அவசியம் இல்லை" 

"நீங்க நினைக்கிறது கண்டிப்பா கிடைக்காது"

"நடக்கும் .. நடக்கும்"

"வாய்ப்பே இல்லை, என்னோட துணி காய்ந்து முடிஞ்சி போச்சி, நான் எடுத்திட்டு வீட்டுக்கு கிளம்புறேன்" அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளும் போய் விட்டாள், என்னோட துணியை மெதுவா எடுத்து வைத்து மடித்திக் கொண்டு இருந்தேன். பின்னால் இருந்து ஒரு குரல் "உங்க அலைபேசி எண்ணை
கொடுக்க முடியுமா?" அது யாருன்னு சொல்லி தெரியவேண்டியதில்லை.

கண்டிப்பாக என்று சொல்லி எண்ணை கொடுத்தேன், கொடுத்து விட்டு அவளிடம் ஒரு குறிஞ்செய்தி அனுப்ப சொன்னேன்.

"கவலை வேண்டாம் நானே தொடர்பு கொள்கிறேன்"

"உங்களுக்கு வேலைப்பளு அதிகமா இருக்கும், மறந்தாலும் மறந்து போவீங்க, அதனாலே ஒரு சோதனை செய்தி அனுப்புங்க". 

அவளுடைய அலைபேசி எடுத்து பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை, நானே அவள் அலைபேசியை வாங்கினேன், இங்க ஒரு கவுஜ வருது 

உன் கை விரல்களை 
மீட்ட விடாத உன்னை 
தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலே 
கைது செய்ய ஆசை 
ஆனால் உன் விரல்கள் பட்ட 
அலைபேசியால் அந்த 
வாழ்க்கை வாபஸ் வாங்குகிறேன்.

எனது எண்ணுக்கு செய்தி அணிப்பி விட்டு திருப்பிக்கொடுத்தேன்,திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். செய்கையிலே அழைப்பாயா என்றேன், இன்றைக்கு அல்ல என்று கண் காட்டிவிட்டு போனாள். எனது அலைபேசியை எடுத்து அவள் எண்ணை சேமிக்கும் முன்னே, அவள் பெயரை கேட்க மறந்து விட்டேன் என்பதை நினைத்தேன், அவளின் பெயரை மெக்ஸிகோ அழகி என்று குறித்து வைத்தேன்.



Sunday, December 5, 2010

சுய மதிப்பீட்டு திட்டம்

வாழ்கையிலே தோல்வி அடைந்து விட்டால் கவலை அதிகமா இருக்கும்,கவலைப் பட்டா மட்டும் வெற்றி காலை சுத்தி கபடியா விளையாடும், எனக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை,என்னோட கவலை எல்லாம் இப்படி கற்பனை குதிரை ஆகுமுன்னு தெரிஞ்சா, நீங்க ஏன் கடைப்பக்கம் கால் வைக்குறீங்க, கொஞ்சம் நஞ்சம் இருந்த நகத்திலே இருந்த மிச்சம் மீதத்தையும் கடிச்சி துப்பிட்டு பெருசுகளின் அழைப்புக்கு பல்லை எலும்பு துண்டாய் கடிச்சிக்கிட்டு காத்து இருந்தேன்.


அறையின் கதவை திறந்து மனித வளம் எட்டிப் பார்த்து, என்னோட பேரை சொல்லி உள்ளே அழைத்தது. உள்ளே அழைத்த மனித வள மகராசியுடன், இன்னும் மூன்று பெருசுகள் அவர்களிடமும் என்னோட பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன்.மரியாதையா என்னை நாற்காலியிலே உட்காரச் சொன்னார்கள்.நானும் அதிதீவிரமாக சிந்திப்பது போல சிந்தித்துக்கொண்டு இருந்தாலும், கடை காத்தாடுது,வியாபாரம் ரெம்ப குறைவாப் போச்சே, சரியா மொய் வைக்க முடியவில்லையே என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.


"நாம எல்லாம் எதுக்கு ௬டி இருக்கோம்னு தெரியும், நம்ம அலுவலகத்திலே தயாராகும் சரக்கு, திட்டப்பணி ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகியும் இன்னும் வெளிநாடு போய் சேரலை, சரக்குக்கு தேவையான எல்லா மூலப் பொருட்கள் இருந்தும், சரக்குக்கு  நிர்ணயம் செய்த ஆட்கள் இருந்தும் இன்னும் பட்டுவாடா செய்யப்படலை,இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை பத்தி விசாரிக்க நாம எல்லோரும் ௬டி இருக்கிறோம்" என்று மனித வள மகராசி சொன்னாங்க,மனித வளத்தோட சேர்ந்து ௬ட இருந்த பெருசுகளும் அவர்கள் பங்குக்கும் கேள்விகளை அள்ளிப் போட்டனர். கேள்விகளின் வரிசை பின் வருவன 


"சரக்கு இன்னும் தயார் ஆகலை, ஆனா சரக்கு தயாரிக்க வேலை செய்த எல்லோரும், அருமையாக வேலை செய்தது இருக்கிறார்கள் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கீங்க?" இதை கேட்டது பெருசு மணி 


"உங்களுக்கு கீழே வேலைபார்த்த எல்லோருக்கும், சுய மதிப்பீட்டு அளவு மிகவும் அதிகம் என்று ஆமோத்தித்து இருக்குறீர்கள்?" இதை கேட்டது பெருசு பால்.


"சக தொழிலாளிகள் அனைவரும் திறமைசாலிகள் என்று சொல்லி இருக்குறீர்கள்,எல்லோரும் ஒரே மாதிரியா வேலை செய்யுறாங்கன்னு நீங்க சொல்லுறது ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறது என்று சொல்வதைப் போல இருக்கு" இதை கேட்டது 
மாஸ்கோ.


வயசாகி போனதாலே ஞாபக மறதி வியாதி கேள்விகளை மறக்கடிக்க ௬டும் என்று   கேள்விகளை குறித்து வைத்து கொண்டேன்.நான் மகளிருக்கு முன்னுரிமை என்ற தார்மீக கொள்கையிலே இருப்பதாலே, மகராசி கேள்வியை சட்டை செய்யாமல், பெருசுகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.இந்த கதையை ஒரு வருசத்துக்கு முன்னாடி கொண்டு போக வேண்டிய இருக்கு, கொஞ்சம் பொறுத்துக்கோங்க.


"அன்புக்குரிய சக தோழர்களே,தோழிகளே நாம இந்த சரக்கை தயாரிக்க ஆரம்பிக்குமுன்னே,மிக முக்கிய வேலையாக ஓன்று செய்ய விரும்புகிறேன்,ஒரு தாளை யும்,பேனாவையும் எடுத்து கவுஜ எழுதுங்க, அப்படின்னு சொல்லலை. உங்களோட மனசாட்சிப் படி உங்களோட பலம்,பலகீனம் ரெண்டையும் எழுதுங்க"      

செய்யப்போற வேலைக்கும், இந்த கேள்விக்கும் என்ன சம்பதம் என்று இடை மரித்தார் 
மாஸ்கோ.

ஐயா நான் இன்னும் எடுத்துக்காட்டு சொல்லி முடிக்கலை, கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டு கதைக்கு போனேன்.


அடுத்த அரைமணி நேரத்திலே அனைவரும் எழுதிய தாள்களை வாங்கிகொண்டேன். அடுத்த ஒரு மாதத்திற்கு அவர்களின் வேலையை கண்காணித்து மீண்டும் சுய மதிப்பீட்டு திட்ட சந்திப்பு நடத்தினேன். அப்போது அவர்கள் முன்னே எழுதிகொடுத்த பலம், பலகீனம் ,மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை நான் ஆராய்ந்து உருவாக்கிய திட்ட உறுபினர்களின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து புள்ளி விவரங்களை ஒப்புமை செய்ததேன்.இந்த இரண்டையும் இணைத்து மறுபடி ஒரு மாதிரியை உருவாக்கினேன். ஒவ்வொரு உறுப்பினரின் பலம், பலகீனம் ரெண்டையும் வைத்து அவர்களிடம் பேசினேன்.அவர்களின் பலகீனத்தை மாற்ற அவர்களையே ஒரு திட்டம் தயாரிக்க சொன்னேன்.


"நீங்க இன்னும் சரக்கை பத்தி பேசவே இல்லை என்று இடைமறித்தார்" பால்.அதற்கு பதில் சொல்லுற மனநிலையிலே நான் இல்லாததாலே, மறுபடியும் எடுத்துக்காட்டுக்கு போயிட்டேன்.


"அடுத்த ஆறுமாதத்துக்கு அவர்களின் சுய சீர்த்திருத்த திட்டத்தை பயன்படுத்தி, அவர்களின் வலுகுறைந்த இடைவெளிகளை நிரப்பி அதைப் பூர்த்தி செய்தேன்.எட்டாவது மாதத்திலே இருந்து அனைவரும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாக மாறிவிட்டது என்று சொல்லி, "மணி,பால், மாஸ்கோ உங்களோட கேள்விகளுக்கு நான் சொன்னதிலே இருந்து விடை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன், மாஸ்கோ ஐந்து விரல் ஒண்ணா இல்லைனாலும், ஒவ்வொரு விரலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு"


"௬ட வேலை செய்யுற தொழிலாளர்களை காப்பற்றுகிறேன்னு சொல்லி உங்களுக்கு குழியை நீங்களே தோண்டுறீங்க,எல்லோரையும் சமமான தட்டிலே வைப்பது எவ்வளவு ஆபத்து என்று உங்களுக்கு தெரியலை,ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட குறைகளை சொல்லி கொஞ்சம் மட்டம் தட்டினாத்தான், அவங்களின் திறமைகள் வெளிப்பட்டுகிட்டே இருக்கும்,அவங்களோட பலகீனம்,நம்ம பலன் என்ற அடிப்படை விதி தெரியாம இருக்குகீங்க" என்று மறுபடியும் மாஸ்கோ கேள்வி கேட்டது. 


"ஐயா குறைகள் இல்லாத திட்டம் எதுமே இல்லை இந்த உலகத்திலே இருந்து இருந்தா நமக்கு இங்க வேலையே இருக்காது, நான் செயல் படுத்திய திட்டம் என்னோட சுய சிந்தனைகள், சரக்கு தயார் ஆகலைன்னு கவலைப் படுற நீங்க, இதுவரைக்கும் வந்த சரக்கின் வடிவம் எந்த சேதமும்,சேதாரமும் இல்லாம இருக்கு என்பதும் உங்களுக்கு 
தெரியும்,எவ்வளவு நாளைக்கு தட்டி தட்டி வேலை வாங்குவீங்க, கொஞ்சம் தட்டிக்கொடுத்து வேலை வாங்க பழகுங்க,நீ ஒழுங்கா வேலை செய்யலைன்னு வருட கடைசியிலே சொல்லும் முன்னே, முதல்ல இருந்து, அவனை வைத்தே அவன் குறைகளை சரி செய்ய வைக்கலாம்"


உடனே மணி "எல்லோருக்கும் ஒரே மதிப்பீடு இருந்தா, அலுவலக்கத்திலே வேலைய வச்சி எப்படி மேல் சாதி, கீழ் சாதின்னு பிரிக்க முடியும்?"


"நீங்க வேலைக்கு ஆள் எடுக்கும் போதே கடைபிடிக்கணும்,திறமை இல்லாத ஆள்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்று,அப்படி வேலை செய்யத்தெரியாதவனை எடுத்த நண்பரையே கேட்ட்கனும் இந்த கேள்வியை?, இந்த சுய மதிப்பீட்டு திட்டம் மேலுக்கும்,கீழுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் "


"இம்புட்டு கும்மி அடிக்கிற நீங்க ஏன் இன்னும் சரக்கு தயார் இல்லைன்னு காரணம் சொல்லவே இல்ல?" மகராசி கொக்கியப் போட்டது.


"வியாபார போட்டியிலே சரக்கை நாளைக்கு தருவோம் என்று வாடிக்கையாளர்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து வாங்கி விடுகிறோம். வாங்கிட்டு அதை கடைநிலை 
ஊழியர்களிடம் கொடுத்து நாளைக்கு சரக்கை தயாரா இருக்கணும் சொல்லிடுறீங்க, மயிலிறகு மென்மையா இருக்குன்னு அளவுக்கு அதிகமா வண்டியிலே ஏத்துனதுதான் சரக்கு தாமதத்துக்கு காரணம் என்று வழக்கம் போல வாய்பளித்த அனைவருக்கும் நன்றி" ன்னு சொல்லிட்டேன்.இதோட பஞ்சாயத்து முடிய, இது ஆராய்ச்சி இடுகை இல்லை. 
வாடிக்கையாளரிடம் சொல்லுங்க இன்னும் மூணு மாசத்திலே சரக்கு தயாரா இருக்கும்.


"மூணு மாசமா" என்று பெருசுகள் அனைவரும் கேள்வியை கேட்க.


"பொய்ய சொல்லி வாங்கும் போது இதை யோசித்து இருக்கணும், நாளைக்கே தாரேன்னு சொல்லிட்டு கொடுக்காம இருக்கிறதுக்கும், நாலு நாளிலே தாரேன்னு சொல்லி ரெண்டு நாள் கழித்து கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு"


பெருசுகள் யோசனையிலே ஆழ்ந்து விட்டனர்,எனக்கு கேட்காத மாதிரி  என்னவோ பேசினாங்க, பேசி முடிச்சிட்டு என்னைய கொஞ்சம் வெளியே இருக்க சொல்லிட்டாங்க.அரைமணி நேரம் கழித்து மீண்டும் மனிதவள மகராசி என்னை அழைத்தது. உள்ளே போனேன்.மாஸ்கோ மட்டுமே பேசினார்.


"நாங்க உங்களுக்கு மூணு மாசம் அவகாசம் தருகிறோம்,ஆனா இந்த மூணு மாசத்துக்குள்ளே சரக்கு தயாரா இருக்கணும், அப்படி இல்லேன்னா என்ன நடக்குமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த மறுவாய்ப்பை தவற விட்டுடாதீங்க." 
பதில் சொல்லாம வெளியே வந்தேன் 


மூணு மாதத்துக்கு பிறகு என்ன நடந்ததுன்னு,சுய மதிப்பீட்டு திட்டம் என்ன ஆச்சின்னு மூணு மாசம் கழித்து சொல்கிறேன்.