Monday, April 18, 2011

முத்தமிட்ட மெக்ஸிகோ அழகி


அமெரிக்காவிலே காலடி எடுத்து வைத்த உடனே நிலவுக்கு  சென்று கொடியை நாட்டின ஆம்ஸ்ட்ராங், ஏற்கனவே  அங்கே டீ கடை வைத்து இருந்த நாயரிடம் ஓசி டீ வாங்கி குடித்துக்கொண்டு, இவன் எப்படி இங்க வந்தான் என்று நினைத்ததைப் போல, நானும் வந்திறங்கிய உடனே இவ்வளவு இந்திய வம்சாவளியினர் எப்படி வந்தாங்கன்னு கொண்டு வந்த பீடியைப் பத்த வைத்து கொண்டு பீடிகையாய் யோசித்துக்கொண்டு இருந்தேன்.

மச்சான் அமெரிக்காவிலே சிரிச்சாலே ஒண்ணு கண்ணத்திலே கொடுப்பாங்களாம்னு நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது, இங்க இருக்கிற நம்ம ஊரு மக்கள் நம்ம பண்பாடு, நாகரிகம்,கலாச்சாரம்  எல்லாம் இவங்ககிட்ட சொல்லிக் கொடுத்து இவங்களை கெடுத்து வச்சி இருப்பாங்களோ என்று அடிமனதிலே எண்ணம் வரும் போது அடிவயறு கலங்கி போச்சி. பொட்டிய கட்டும் போதே ரெண்டு மூணு ஓசிமுத்தம் வெள்ளையம்மாவிடம் வாங்க வேண்டும் என்ற கனவிலே வந்தேன்.என் கனவு கானல் நீர் ஆகும் என்ற நினைப்பு வரும் போது நினைவிலே டக்கிலாவும்,ஷிவாஸ் ரீகலும் வந்து போயின,இப்படியே யோசனை செய்து கொண்டே இங்கு வந்த முதல் வாரம் ஓடியது. அதன் பின் வந்த வேலைகளைகவனிக்க அலுவலகம் சென்றேன்,நான் மூணு மாதம் மட்டுமே வந்ததினாலே அலுவலகம் சென்ற நாள் முதலாகவே வேலைப்பளு அதிகமாகவே இருந்தது.

காலையிலே முதல் ஆளா வந்து, கடைசி ஆளா வீட்டுக்கு போவேன்.ஒரு நாள் மாலை பரப்பரப்பான வேலைகளுக்கிடையே கொஞ்சம் "காலை எடுக்கமுடியுமா?" என்ற குரலை கேட்டு

"நாற்காலியிலே இருக்கிற நான் யாரு மேல கால் போட்டு இருக்க முடியும்"   என்ற யோசனை யிலே திரும்பிப் பார்த்தேன்.

"குப்பை தொட்டியிலே இருந்து காலை எடுக்க முடியுமா?.. நான் குப்பைகளை அப்புற படுத்தவேண்டும் "

அப்போதுதான் கவனித்தேன், நான் எனது இடத்திலே வைத்து இருந்த சின்ன குப்பை தொட்டி மேல் எனது கால்களை வைத்து இருந்தேன்.குப்பை தொட்டியை அவளிடம் எடுத்துகொடுத்து விட்டு, குப்பை போடுகிறவளே எம்புட்டு அழகா இருக்கா என்று மனதிலே நினைத்துகொண்டேன். ஹோலிவூட்ல கதாநாயகியா நடிக்க வேண்டிய அழகு குப்பை அள்ளுதேன்னு நிக்கும் போதே என் மனசு குப்பையாகிபோச்சி.

குப்பை தொட்டியை வாங்கி விட்டு

"நீ ஆப்பிரிகாவா?" என்று கேட்டாள். ஓர் சிகப்பு அழகு கிளியப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாளே என்று நினைக்கும் போதே கண்ணாடியிலே என் முகத்தை கண்டு பிடிக்க முடியாமல் போன ஞாபகங்கள் வந்து போயின இந்த இடப்பட்ட நேரத்திலே . மறுபடியும் "நீ ஆப்பிரிக்காவா"

"இல்ல இந்தியா"

'இந்தியாவிலேயும் இங்க மாதிரி நிறைய கருவண்டுகள் இருக்கோ?"

நான் பதில் சொல்லாம, பல்ல காட்டிட்டு, அவகிட்ட "இங்கே நிறைய கருவண்டு இருக்கும் போது என்னையப் பார்த்து நீ ஆப்ப்ரிக்கவான்னு ஏன் கேட்டீங்க"

"இங்க இருக்கிற கருவண்டு இம்புட்டு கஷ்டப்பட்டு எல்லாம் வேலை பார்க்கமாட்டாங்க"

அவங்க சொன்ன விளக்கம் அப்ப புரியலை , ஆனா புரிஞ்சிகிட்டேன், அடுத்த நாட்களிலே

பொது இடத்திலே சிகரட் பத்த வச்சா..குறைந்தது நாலு அண்ணாச்சிமார் வந்து எனக்கு ஒண்ணுன்னு கேட்டு வாங்கிப்பாங்க, முதல்ல துரைமார்களுக்கே பிச்சை போடுறோம்முன்னு பெருமையா நினைச்சாலும், இவங்களுக்கு பிச்சை போட்டு நான் பிச்சை காரன் ஆகிவிடுவேன் என்ற நினைப்பு வந்துவிட்டது, அதனாலே பொது இடத்திலே தம் அடிக்கிறதில்லை. சிகரட் தப்பிச்சாலும் நடத்துவரும்போதே கேட்பாங்க

"ஒரு டாலர் கொடுக்க முடியுமான்னு", வேற வழி இல்லாம கொடுக்க வேண்டிய இருக்கும், எப்படின்னாலும் ஆட்டையப் போட்டுடுறாங்களே, சில அண்ணாச்சிமார்கள் வேலைக்கே போக மாட்டாங்கபோல என்பதையும் தெரிந்துகொண்டேன்.

நான் தினமும் அலுவலகத்திலே இருந்து தாமதமா வருவதினாலே, எப்படியும் அந்த குப்பை அழகியை சந்தித்துவிடுவேன், அவளிடம் பேசியதிலே இருந்து அவள் மெக்ஸிகோ வம்சாவழியை சேர்ந்தவள் என்று தெரிந்துகொண்டேன்.எங்களோட மொக்கைகள் தினமும் தொடர்ந்தது, ஆனா சுவாரஸ்யமாப் போச்சி, சில நாட்களிலே அவளை எனக்கு ரெம்ப பிடிச்சிபோச்சி, அவளைப் பார்த்து ரெண்டு வார்த்தைபேசலைனா சோறு தண்ணி இறங்காத அளவுக்கு, இருந்தாலும் நான் ரெம்ப நாகரிகமானவன்(?) என்பதாலே நல்லவன் மாதிரி எதையும் வெளிகாட்டவில்லை.

சிலநாட்களுக்கு பின் ஒரு நாள் மாலையிலே என்னிடம் ஒரு தண்ணிப் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தாள்.வாங்கிவிட்டு அவளைப் பார்த்தேன். நீ தினமும் புதிதாக பாட்டில் வாங்கி,குடித்தது போக மிச்சம் விட்டுச்செல்லும் தண்ணியோட சேர்த்து பாட்டிலை குப்பை தொட்டியிலே போடுகிறேன்.நீயும் உங்க ஊரு ஆளுங்களைப்போல விரல்ல வெண்ணை எடுக்கிறவனா இருப்பியோ என்று நான் உனக்கு வாங்கிவந்தேன், இனிமேல நீ இருக்கும் இடத்திலே இருந்து இந்த பாட்டிலை எடுக்கமாட்டேன்.

என்னோட ஞாபகமா தண்ணிபாட்டிலை ஆட்டையபோட்டு வைத்து இருக்கிறாள் என்ற நினைப்பிலே இருந்த என் கனவிலே மண் விழுந்தாலும், ஓசியா கிடைத்த தண்ணி பாட்டிலைகண்டு, அடிக்காமலே காதல் போதை ஏறி  மனம் தள்ளாடியது. வேலைப்பளுவிலே பல்லு விளக்காம அலுவலகம் சென்றாலும், அவளிடம் பல்லைகாட்டாமல் பொழுது முடிவதில்லை.எல்லா கதைகளுக்கு ஒரு முடிவு இருப்பதைப்போல எனது கதைக்கும் முடிவு நெருங்கிவிட்டது, நான் வந்த வேலை முடிந்து திரும்பும் நாள் வந்தது,
    
 நான் சொல்லி வைத்து இருந்தேன், மாலை ஆறு மணிக்குள் நான் கிளம்பிவிடுவேன் என்று, அதனாலே நான் திரும்பி ஊருக்கு செல்லும் நாளிலே அவள் சீக்கிரமே வந்துவிட்டாள்.வெளியே காபி சாப்பிட போனோம், காபி மண்டுற சத்தத்தை தவிர வேற எதுவுமே பேச முடியலை, கிளம்பும் நேரம் வந்தது அவளிடம் கையை கொடுத்து விட்டு கிளம்பு முற்ப்பட்டேன். உடனே என்னை பிடித்து முத்தம் கொடுத்தாள், பல நாள் கனவு பலித்துவிட்டது என்ற சந்தோசத்திலே நான் அவளிடம் "ஐ லவ் யு" என்றேன். அவளும் என்னிடம் "ஐ லவ் யு அஸ் எ பிரதர்" என்று சொல்லிவிட்டு அவள் கண்களிலே கண்ணீர் வந்துவிட்டது. எனது கண்களிலே இருந்த காதல் அவள் கண்ணீரிலே கரைந்துவிட்டது.

விமான நிலையம் வந்து பெட்டிகளை கொடுத்து உள்ளே சென்று விமானம் ஏறி சொல்ல வரிசையிலே நிறுக்கும் போதே நினைத்தேன், ஊருக்கு போன உடனே நண்பனிடம் "அமெரிக்காவிலே அன்பு, பாசம் எல்லாம் தேவைக்கு அதிகமாகவே இருக்கு, ஆனால் வெளி உலகத்துக்கு அது தெரிவதே இல்ல" என்ற உண்மையச் சொல்ல வேண்டும்.