Monday, January 31, 2011

எனது ஓட்டு கலைஞருக்கே

பொறுப்பு அறிவித்தல்:
ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை 

இணைய உலகத்திலே தற்போதைய சூழ்நிலையிலே கலைஞரை பத்தி குறை சொல்லி ரெண்டு திட்டு திட்டாம போய்விட்டால் தமிழினத்துரோகி என்ற அவப்பேருக்கு
ஆளாகக்௬டும் என்று நினைத்து இந்த இடுகையை எழுத வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிலே கொசு கடித்தாலும் காரணம் கலைஞர் என்று ஒரு மாயை உருவாகி இருப்பது உண்மை. இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.

அடிப்படைய கலைஞரை திட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் அவரு பதிவுலகிலே இல்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பதிவுலகிலே இருக்கும் ஒருவரை இப்படி எல்லாம் திட்ட முடியுமான்னு தெரியலை. பச்சைத்துரோகி, கிழபாடு என்பதெல்லாம் சாதாரணமா அவருக்கு கிடைக்கிற மரியாதைகள், கலைஞரை ஓட்டுப் போடக்௬டாது என்றால் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் நாட்டிலே இருக்கிறதே ரெண்டு பெரிய கட்சி, இதை விட்டா வேற யார் ஆட்சிக்கு வருவார்கள்.

பதிவுலக ஆதரவு வரலாறு சற்று திரும்பி பார்த்தோமானால், இலங்கையிலே போர் உச்ச கட்டத்திலே இருக்கும் போது, திருமாவளவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு படை கிளம்பியது, காங்கிரஸ் தமிழகத்திலே ஒழிய வேண்டும் என்று வீர சபதம் எடுத்து வெறி கொண்ட சிறுத்தையை வலம் வந்தவர். அவரது தலைமையிலே மாற்று அணி அமைய வேண்டும் என்று மனுப்போட்டு நின்ற நேரம் அவன் இந்திய ரயிலை விட மிக வேகமாக தடம் புரண்டு மறுபடியும் ஒட்டிகொண்டார். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைவர்கள்  எல்லாம் இப்ப இன்னும் அதே நிலையிலே தான் இருக்காங்க, ஆனா இன்னும் இவர்களை நம்புறோம்(?).

கலைஞருக்கு மாற்று சக்தியாக இருக்கும் புரட்சி தலைவின் வராலாறுகளை புரட்டி பார்த்தோமானால், பொடாவை உருவாக்கிய மத்திய அரசை விட அதிக முறை பயன் படுத்தியவர் என்று விருது கொடுக்கும் அளவுக்கு உபயோகித்தவர்.தமிழர்க்காகவே  வாழும் அண்ணன் தன்மானத்தமிழன் வைகோ இப்போது வெளியே இருந்து இருந்தா புத்தகம் எழுத நேரமில்லை என்று அம்மா உள்ளே தள்ளிவிட்டதாக நினைத்துகொண்டு வேற எங்கும் போக வழி இல்லாமல் இன்னும் இருந்த இடத்திலே இருக்கிறார், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று கலைஞர் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

புரட்சி தலைவி ஆட்சியிலே இருந்து இருந்தா, ஒரு வேளை இலங்கைக்கு படை எடுத்துப் போய், அவர்களை தோற்கடித்து அங்கே ஆட்சியப் பிடித்து இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்னொரு மாநிலம் ஆக்கி இருப்பார் என்று சொல்லமுடியுமா?, யார் ஆட்சியிலே இருந்தாலும், இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி, இப்போது ஆட்சியிலே கலைஞர் இருக்கிறார், அதனாலே அவரை திட்டுகிறோம், இதே நிலையிலே தலைவி இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்போம்.மேலும் தமிழரின் ஒற்றுமைக்கு பதிவுலகமே ஒரு சான்று, இங்கு ஒற்றுமை என்பது அடுத்தவர் என் சட்டையப் பிடிச்சி இழுத்துவிட்டார் என்று இன்னொருவர் குறை சொல்லும் வரை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கலைஞரை திட்டுவதாலே நமக்கு மனநிம்மதி கிடைக்கும் என்பதை தவிர வேறு ஏதும் பலன் இருப்பதாக தெரியவில்லை, இதை எல்லாம் சொன்னேன்னேனு எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம், இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.

இப்படிக்கு,
பஞ்சம் பிழைக்க அயல் நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழன்.


Sunday, January 30, 2011

விடுமுறை கால விருந்தும், மருந்தும்

ஒரு காலத்திலேயே மருந்தை தண்ணியா குடிச்சவன், கடந்த ஆறு வருசமா மருந்துன்னு தாளிலே எழுதி அதைதான் குடிச்சிக்கிட்டு இருக்கேன்,கடந்த  வருட விடுமுறை கொண்டாட்டத்திலே (நடந்து ரெண்டு மாசம் எழுத நேரமும் இல்ல, நடந்ததும் ஞாபகம் இல்ல) எனக்கு படி அளக்கிற பகவான் விருந்தும்,மருந்தும் பரிமாறப்படும் என்று அறிவித்தார்கள், அறிவிப்பு கேட்ட நாளிலே இருந்து மருந்தின் மலரும் நினைவுகள் மனதை கவ்வி கவுத்துப் போட்டது, அவங்க சொன்ன நாளிலே இருந்து கனவிலே விதவிதமான மருந்துகள் தென்பட்டது.

விருந்து கொடுக்கிற நாளன்று காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல தயாராகிட்டேன்.சும்மாவே பகல்ல என் முகம் தெரியாது, ஆனா அன்றைக்கு என் முகத்திலே அப்படி ஒரு பிரகாசம், காலையிலே எழு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று,சென்றதுமுதல் சாயங்காலம் விருந்து நடைபெறும் இடத்தை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன்.மதிய சாப்பாடும் இறங்கலை. மாலைக்கு சேமித்து வைக்க கொஞ்சம் இடம் வேணுமுன்னு மொத்தமா விட்டு வச்சேன்.

மாலையிலே முத ஆளா அரங்கத்திற்குள் நுழைந்தேன், ரெண்டு ௬ப்பன் கொடுத்தாங்க மருந்து வாங்க, கொடுத்த அடுத்த நிமிசத்திலே ரெண்டு ௬ப்பனையும் கொடுத்து வயிறை நிறைத்தேன்.நம்ம ஊரா இருந்தா மருந்து கொடுக்கிறவருக்கு பத்து ரூபாயைக் கொடுத்து ௬ப்பன் இல்லாமலே ரெண்டை புட்டி ஆட்டயப்போடலாம், ஆனா இங்க துரைமார்கள் ரெம்ப கண்டிப்பானவங்க,விருந்து உபசரிப்பு விதிப்படி நடப்பவர்கள், என்ன செய்யலாமுன்னு யோசனையா இருந்தப்ப, நம்ம ஊரு தாய்குலங்கள் மூணு பேரைப் பார்த்தேன்.அவங்க எல்லாம் மருந்து குடிக்க மாட்டாங்க என்று நம்பிக்கையிலே நேர அவங்ககிட்ட போனேன்.

"உங்களுக்கு எல்லாம் குடிக்கிற பழக்கம் இல்லன்னு தெரியும், அதனாலே உங்ககிட்ட இருக்கிற மருந்து ௬ப்பனை கொடுக்க முடியுமா?"

"ஒ.. தாராளமா" என்று நாலு ௬ப்பைனை கொடுத்தார்கள், ஆறு இருக்கணுமே, நாலு தானே இருக்கு என்றேன், என்கிட்டே இருந்த ரெண்டை ஒரு மனவாடு அப்பவே ஆட்டையப் போட்டுவிட்டான் என்று ஒருத்தங்க  சொன்னாங்க.அந்த மனவாடு என் ௬ட வேலைபார்க்கிற மனவாடா இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே வாங்கின நாலிலே ரெண்டை காலி செய்தேன். குடிப்பவர்கள் சிரமப்படுவார்களே என்று படி அளக்கிற பகவான் நிறைய நொறுக்கு தீனிகள் ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள், அதையும் நாம இருக்கும் இடம் தேடி வந்து, எங்க ஊரு திரை அரங்கிலே முறுக்கு விற்பதைப் போல கையிலே ஏந்திக் கொண்டு வந்தார்கள். நொறுக்கு தீனியிலே கவனம் செலுத்த எனக்கு நேரம் இல்லாத காரணத்தினாலே அடுத்த ௬ப்பைனை கொடுத்து ஒரு பாட்டிலை வாங்கி கையிலே வைத்து இருந்தேன்.பின்னாலே இருந்து ஒருவர் என்னை தட்டினார், அவரு என்னோட வேலைபார்க்கிற மனவாடு என்பதை தெரிந்து கொள்ள ஒரு நிமிஷம் ஆகிப்போச்சி. அவர் என்னிடம்

"எத்தனை போய் இருக்கு?"  
    
"ஏழாவது, உனக்கு?"

"எட்டு முடிந்துவிட்டது, இனிமேல ௬ப்பன் இல்ல, ஒரு நாய் நாலு ௬ப்பனை ஆட்டயப் போட்டுட்டான், உங்க சாம்பார் பெண் ஒருவரிடம் ரெண்டு ௬ப்பனை உசார் பண்ணிட்டு,உங்க தோழிகள் யாரவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லி வைத்து இருந்தேன், நான் ஓசி ௬ப்பனை காலி பண்ணிட்டு போகுமுன்னே எவனோ ஆட்டயப்
போட்டுட்டான்,அது நான்னு தெரியாமலே, அவன் ௬ட சேர்த்து எனக்கு நாலு திட்டு திட்டிவிட்டு ௬ப்பனுக்கு ஆட்களைத்தேடி இருவரும் போனோம், போகும் முன்னே மனவாடு, ரெண்டு பேரும் போய் நடனமேடைப்  பக்கம் போகலாம் என்று சொன்னார்.

நான் உடனே "நடனமேடைப் பக்கம் போனால், என்னால ஆடமா வரமுடியாது" என்றேன்

"நீங்க ஒரு நடனகாரன்னு சொல்லவே இல்லை"

"கல்லூரியிலே நான் போடாத ஆட்டமே இல்ல,நான்தான் எங்க கல்லூரி மைக்கல்
ஜாக்சன்"

"நீ கண்டிப்பா ஆடியே ஆகணும்,வா போகலாம்"

ரெண்டு பேரும் நடனமேடைபக்கம் போனோம்.அங்க வெள்ளையம்மாக்களும்,
வெள்ளையப்பன்களும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். சாதாரண நேரமா இருந்தா துரைமார்களை பார்த்து சிரிக்கவே மாட்டேன், பதிலுக்கு இங்கலிபிசுல பேச ஆரம்பிச்சிட்டா பதில் சொல்ல முடியாதுன்னு ஒதுங்கியே போவேன், ஆனால்
அன்றைக்கு ஆடுற எல்லோரிடமும் உலக பீட்டர் விட்டேன். அடுத்த அஞ்சு நிமிசத்திலே மனவாடு ஒரு சிலுசிலுப்பு சட்டைய கொண்டு வந்து என்னையப் போடச்சொன்னான், மாப்ள பாசமா சட்டையகொடுக்கான்னு நானும் போட்டுகிட்டேன். அடுத்த பாட்டு வரும் போது, இப்போது இந்திய மைக்கல் ஜாக்சன் நடனனமாடுகிறார் என்று அறிவிப்பு வந்தது.

நானும் அந்த முகரையப் பார்க்கணுமுன்னு திரும்பினா எல்லோரும் என்னையப் பார்த்துகிட்டு இருந்தாங்க, அப்பத்தான் எனக்கு தெரியும் நான் தான் அதுன்னு, என்ன செய்யன்னு தெரியலையே, யோசிக்க நேரமில்லை, சுத்தி இருந்த ௬ட்டம் எல்லாம் கை தட்டி ஆரவாரம் பண்ணினாங்க,மனவாடு மண்ணை கவ்வ வச்சிட்டானேன்னு,எனக்கு  தெரிஞ்ச ஆட்டத்தை போட்டேன், அதாவது கையையும் காலையும் உதைச்சி உடற்பயிற்சி செய்தேன்.என்னோட ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே ௬ட்டம் கலைய ஆரம்பித்து, அடுத்த நிமிசத்திலே ஒரு வெள்ளையம்மா வந்து என்னோட சிலுசிலுப்பு சட்டைய கழட்டிட்டு இனிமேல இந்த பக்கம் வந்த அடி பிச்சிருவேன்னு சொல்லிட்டாங்க, அதோட பாட்டையும் மாத்திட்டாங்க.

பக்கத்திலே இருந்த மனவாடு "நீ என்னைக்காவது ஆட்டம்னு தாள்யாவது எழுதிபார்த்து இருக்கியா, உன்னைய மைக்கல் ஜாக்சன் சொன்னதுக்கு என்னையும் மேடை பக்கம் வராதேன்னு சொல்லிட்டாங்க. சும்மா இருந்தா உண்மையச்சொல்லி இருப்பேன், மருந்து உள்ள போனதாலே மலையே புரட்டுற பலம் இருப்பதாலே, அவன்கிட்ட மேடை சரியில்லைன்னு சொன்னேன். அவன் என்கிட்டே உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கைய
வைக்கன்னு சென்னை பாசையிலே திட்டிட்டான்.

நடனமேடைய விட்டு வெளியே வந்த நாங்க ரெண்டு பேரும், வடக்கூர்காரட்ட ஆட்டையப் போட்ட ௬ப்பனை வைத்து, மறுபடியும் ஒரு பாட்டிலை ஏத்திட்டு மீண்டும்  நடனமேடைப் பக்கம் போனோம். அங்க நாங்க முதல்ல ௬ப்பன் வாங்கின பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள், அவங்க நடனத்தை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்னனு தெரியலை திடிர்ன்னு ஒரு ஞானோதயம், பெண்ணிய போராளிய மாறனுமுண்ணு மனசிலே எண்ணம் வந்து விட அவங்ககிட்ட போய் நீங்களும் நடனம் ஆடலாமேன்னு சொன்னேன். அவங்க எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க, அரைமணி நேரத்துக்கு பெண்ணுரிமை காவலர்கள் எழுதியதை சொன்னேன்,என்னோட  தொல்லை தாங்க முடியாமல் அவங்களும் மேடை ஏறி ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினாங்க.

பாட்டு முடிஞ்சதும் அவங்க கீழே இறங்க ஆரம்பிக்கும் போது, இன்னும் ஒரே ஒரு பாட்டுன்னு கெஞ்சி மறுபடியும் மேல போகவச்சேன்,இப்படியே சொல்லி சொல்லி, பத்து பாட்டு முடிஞ்சி போச்சி, களைப்பிலே மயங்கி விழுற மாதிரி ஆகிட்டாங்க, இருந்தாலும் நான் ஒரு பாட்டுன்னு சொன்னேன்.அவங்க பக்கத்திலே நின்ற மனவாடைப் பார்த்தது ஏதோ சைகையிலே சொன்னாங்க, அவன் என் கிட்ட மாப்ள என்கிட்டே  இன்னும்  ரெண்டு ஒசிக்௬ப்பன் இருக்குன்னு சொன்னதும், ஓடியே போயிட்டேன். அடுத்த ஒரு பாட்டிலையும் காலிபண்ணிட்டு வந்து பார்த்தால்,அந்த மூணு பெண்களை காணும், உடனே அறை முழுவதும் தேடிப்பார்த்தேன், கண்ணுக்கு தென்படலை. உடனே மனவாடுக்கிட்ட

"அந்த பெண்களை எங்கன்னு கேட்டேன்"

"டேய் நீ அவங்களுக்கு பண்ணின கொடுமைக்கு, உன்னையெல்லாம் நடுத்தெருவிலே நிக்க வச்சி சுடனும்"

"மகளிர் உரிமை காவலனா மாற நினச்சது தப்பா?"

"நம்ம ஊரா இருந்தா, உன்னைய மகளிர் காவல் நிலையத்துக்கு ௬ட்டிட்டு போய் இருப்பாங்க, எத்தனை பாட்டுக்கு தான் அவங்க ஆடுவாங்க,மேடைய விட்டு வெளிய போக இருந்தவங்களை கை எல்லாம் பிடிச்சி மேடையிலே மறுபடி ஏத்தி விட்ட,உன்னையெல்லாம் சங்கிலியிலே கட்டிபோட்டுதான் குடிக்க சொல்லணும்,இனிமேல பெண்களை முன்னேத்துறேன்னு நினைச்சி இந்த மாதிரி அழிச்சாட்டியம் பண்ணின, உன் தலையிலே கல்லைத்தூக்கி போட்டுருவேன்"

"இவ்வளவு நடந்ததா எனக்கு தெரியவே இல்லையே!!!!"

"நீ உன் நிலையிலே இருந்தாதானே தெரியும்"

"நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நாளைக்கு"

"நீ உண்மையிலே நல்லது செய்யணுமுன்னு நினைச்சா, இந்த சம்பவம் நடந்ததா வெளிக்காட்டதே, குடி போதையிலே உங்க சாம்பார்வாடு என்ன செய்யுறேன்னு தெரியாம,உங்களை கொடுமைப்படுத்திட்டான்னு நான் அவங்க கிட்ட சொல்லி சமாளிக்கிறேன்"

"இப்ப என்ன செய்ய?"

"பெட்டிய கட்டிட்டு வீட்டுக்கு போகலாம் வா"

வீட்டுக்கு வந்து சேர நடுநிசி ஆகிப்போச்சி, இவ்வளவு நேரமும் வீர வசனம் பேசிகிட்டு வந்த  நான் வீட்டுக்கு வந்த உடனே வாயே திறக்கமுடியலை,பெண் உரிமை காவலனா, பெண்ணியக்க போராளியா மாற நினச்ச எனக்கு அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி.இப்ப எல்லாம் மருந்து கனவிலே ௬ட வருவதில்லை.  


Wednesday, January 26, 2011

கணித்துறையும்,கடவுச்சொல்லும்


கணித்துறையிலே வேலை பார்க்கிறவங்க கடவுச்சீட்டு ௬ட இல்லாம இருக்கலாம்,ஆனா கடவுச்சொல் இல்லாம இருக்க முடியாது, வெள்ளைக்கார துரைமார்கள் நமக்கு ஓசியிலே உலகவிசயம் முதல், உள்ளூர் பட்ட சரக்கு வரை பேசுவதுக்கு பல இலவச மென் பொருட்கள் கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் பாவிக்க தனிப்பட்ட பெயரும்,கடவுச்சொல்லும் அவசியமாக  இருக்கிறது. துரைமார்கள் தண்ணியப் போட்டுட்டு நடுத்தெருவிலே நட்டுவாக்காலி ஆட்டம் ஆடிகிட்டே இலவசமா முத்தபடம் காட்டினாலும், தனிமனித உரிமைய ரெம்ப மதிப்பவர்கள், அதாவது பல் இருக்கவன் பக்கடா திங்கான் என்ற பொன்னான பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள்,நோகாம நொங்கு திங்கவருகிட்ட போய், நீ ஏன் நொங்கு திங்கன்னு கேட்க௬டாது, அவரு கேட்டவரு நொங்கை கழட்டி விட்டுடுவாரு.

இப்பேர்ப்பட்ட மகான்கள் தயாரித்த மென் பொருட்களை பாவிக்கிற எல்லோருக்கும் கடவுச்சொல் பத்தி நல்லா தெரிந்து இருக்கும், மின் அஞ்சல் முகவரி ஆகட்டும், மின் அரட்டை முகவரியாகட்டும் எல்லாமே கடவுச்சொல்லிலே இருக்கிறது நம்மோட ரகசியங்கள், உங்க கடவுச்சொல்லை ஆட்டையப் போட்டுவிட்டால், ரகசியங்கள் எல்லாம் வெளியே வந்து நாம ஒரு பொதுஜனம் ஆகிடுவோம். துரைமார்கள் ஒண்ணு ரெண்டு மென் பொருட்கள் கொடுத்து இருந்தா கடவுச்சொல் ஞாபகம் வைத்து இருப்பது சுலபம், ஓசியிலே கிடைக்கிறது என்பதற்காக கிடைக்கிற எல்லாம் இடத்திலேயும் துண்டு போட்டு வைக்கிற என்னைமாதிரி ஆட்கள் கடவுச்சொல் ஞாபகம் வைக்க சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய வரும்.

இந்தமாதிரி மென் பொருட்களுக்கு  எல்லாம் கடவுச்சொல் ஒரு தடவை கொடுத்தப் போதும், நாம மாத்தாத வரை ஒண்ணும் பிரச்சனை இல்லை, ஆனா அலுவலகங்களிலே வேலை செய்பவர்கள் கடவுச்சொல்லை நிரந்தரமா வைத்து இருக்க முடியாது, வேலை பார்க்கிற நிறுவன கொள்கைப்படி ஒவ்வொரு நாப்பதுநாளுக்கு ஒரு தடவையோ மாதம் ஒரு முறையோ கடவுச்சொல்லை மாத்தணும். அதாவது செய்யுற வேலையும், வாங்குற ௬லியும் நிரந்தரம் இல்லைன்னு மறைமுகமா சொல்லுறதுதான் இந்த கொள்கை. கடவுச்சொல் மாத்தும் போது, இப்ப பயன்படுத்திக் கிட்டு இருக்கிற முன்னாள் காதலன்/காதலி(?) பெயரையோ, இதுக்கு முன்னாடி பயன்படுத்திய காதலன்/காதலிகள்(?) பெயரையோ பயன் படுத்த முடியாது. ஆண் பெண் ரெண்டு பெயரையும் எழுதி நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபித்துள்ளேன்(பதிவுலகம் ஒரு மனுசனை என்ன பாடு படுத்துது பாருங்க).

கடவுச்சொல் வைப்பதற்க்கெனவே பல சூத்திரங்கள கடைபிடிப்பார்கள், அடுத்தவங்களாலே கண்டு பிடிக்க முடியாத படி கடவுச்சொல் வைப்பதிலே அலாதி பிரியம். கடவுச்சொல் எப்படி இருக்கனுமுன்னு கணணி ஜோசியம் எல்லாம் பார்ப்பாங்க(?).என்னதான் திடமா கனமா கடவுச்சொல் வைத்தாலும்,கொடுத்த சரக்கை சரியா செய்யலைனா, அடுத்த நாளே அலுவலகம் போக முடியாது. நானும் வேலைக்கு சேர்த்த புதுசிலே இப்படித்தான் கடவுச்சொல்லை கண்டு கலங்கி, முதலிலே பிடிச்ச நடிகர்கள், நடிகைகள் பெயர்கள், கொஞ்ச நாள் கழித்து, நான் போட்ட துண்டுகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து, அவங்க பேரு, அப்புறமா பஸ்ல பேரு கேட்டவங்க ,ரயில்ல எக்ஸ்குஸ்மி சொன்னவங்க, ஆடோவிலே அல்லோ சொன்னவங்க இவங்க பேரு எல்லாம் வைத்து முடித்து விட்டேன், ஆனா கடவுச்சொல் முடியவில்லை.

சூத்திரம் போட்டு கடவுச்சொல் போட்டுப்பார்த்தேன் தற்கொலைன்னு வந்தது.சூத்திரம் எழுதுவதும், தற்கொலையும் ஒண்ணுதான்னு அப்படியே திட்டத்தை கை விட்டேன். ஆனாலும் கடவுச்சொல் இம்சை தாங்க முடியலை. என்ன செய்யன்னு தெரியலை, சோறு தண்ணி இறங்கலை. சும்மாவே வேலை செய்ய மாட்டேன், அதுவும் கவலை வந்துவிட்டால் வேலையைப் பத்தி யோசிக்கவே மாட்டேன்.கடவுச்சொலை பற்றி   யோசித்தேன், யோசித்தேன், விடையே கிடைக்கலை.

ஆங்கிலத்திலே புளி வித்தாலும், நான் ஒரு டமில் புலி என்பது ஞாபகம் வந்தது, உடனே கடவுச் சொல் கவலை, பகலவனை கண்ட பனிபோல, தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டும் போது காவல் துறையைப் பார்த்ததும் ஓடிப்போகும் போதைபோல என்னைவிட்டு ஓடிப்போனது. என்னோட கட்டுக்கடங்கா தமிழார்வ போதை தனிய நான் முதல்ல வைத்த கடவுச்சொல் "கொய்யால", அந்த பேரு வச்ச அடுத்த நாளே மறந்து போச்சி, ஆலுவலக கணணியிலே நுழைய முடியலை,அருகிலே இருந்த நண்பர்  பொறுமை இழந்து "கொய்யால நீ என்ன பேருதான் மாத்தின", நான் சொன்னேன் "கொய்யால", இந்த வரிசை ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை கடவுச் சொல்லுக்குக்கு பஞ்சமே வந்ததில்லை, இந்த வகையிலே ஒரு சில உதாரணங்கள் "முட்டாள்", "மடையன்". இந்த மாதிரி மிகப்பெரிய பட்டியலே இருக்கு என்னிடம் வேண்டுமா உங்களுக்கு?


Sunday, January 9, 2011

கிரிக்கெட்டும் சமுதாய சீர்கேடும்

பொறுப்பு அறிவித்தல் ஒன்று : தலைப்பிலே தான் காரம் அதிகமா இருக்கு, இடுகையிலே காரம் குறைவாத்தான் போட்டு இருக்கேன், படிச்சி முடிச்ச உடனே உப்பு சப்பு இல்லைன்னு தோணலாம்.

பொறுப்பு அறிவித்தல் ரெண்டு : நீங்க கொலைவெறி கிரிக்கெட் ரசிகரா இந்த இடுகைய தவிப்பது நலம்.

பொறுப்பு அறிவித்தல் மூன்று: இந்தியாவின் இறையாண்மை மற்றும்  பொறைஆண்மை அதுக்கு சட்னி சாம்பார் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டிலே தான் இருக்கிறது என்று
நினைப்பவர்களாக இருந்தாலும், இந்த இடுகையை தவிப்பது நலம்.

பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு  பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்.சமுக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்து முற்ப்போக்கு, பிற்ப்போக்கு எழுத்தாளர் வரிசைப் பட்டியலிலே முதல் வரிசைக்கு வர முயற்சி எடுக்கலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொண்டு இடுகைக்கு கடந்து செல்லலாம்.

அதகப்பட்டதாவது பல வருசங்களுக்கு முன்னாலே ஊரிலே ரப்பர் பந்தையும், களி மட்டையை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமா பீடி குடிக்க ஒதுங்கும் போது தான்  கிரிக்கெட் எனக்கு பரிச்சயமானது.களி மட்டையிலே இருந்து கிரிக்கெட் மட்டை வாங்க போய் மட்டையாகிட்டு வந்த நாள்முதலிலே இருந்து இன்றைய வரைக்கும் கிரிக்கெட் ரத்தத்திலே கலந்து விட்டது.இந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம் ஆகிபோவேன்னு நினைக்கவே இல்லை.

ஆரம்பத்திலே நான் ஆடுற ஆட்டத்திலே கவனம் இருந்தாலும், தொலைகாட்சிகளின் அறிமுகத்துக்கு பின்னால் அடுத்தவங்க ஆடுற ஆட்டத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தேன், கொஞ்ச நாளிலே கிரிக்கெட் ஆட்டம் தொலைகாட்சியிலே பார்க்கவில்லை என்றால் சீக்கு வந்த கோழி மாதிரி மனசு சுருண்டு படுத்துக்குவேன்.சோறு தண்ணி இல்லாம பத்து நாள் வேணா பட்டினி கிடப்பேன், ஆனா கிரிக்கெட் பார்க்கமா ஒரு நிமிஷம் ௬ட இருக்க முடியாது.

கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன், அதாவது இந்தியாவுக்கு எதிரா ஆடும் அணிக்கு விக்கெட் விலலைனா ஒத்தை கண்ணிலே பார்க்கிறது, தொலைக்காட்சி பெட்டிக்கு  பின்னாடி முதுகை வச்சி பார்க்கிறது. முத ஓவர் கன்னி ஓவர்(கிரிக்கெட் கண்டுபிடிச்சவன்  ஆணாதிக்கவாதியோ?)  ஆகிட்டா எதிரணிக்கு விக்கெட்டே விழாது, டவுசரை போட்டுக்கிட்டு ஒத்தை காலிலே நின்னு பீடி குடிக்கிறது, இப்படி பல வேலைகளை ரெட்டையா செய்யாமா ஒத்தையா செய்வேன். இப்படி 999 விதமான மூட நம்பிக்கை பட்டியல்களை வைத்து இருந்தேன்.ஆட்டம் நடக்கும் போது ஊரிலே தீ மிதிப்பு நடந்தா, அங்கேயும் போய் பூக்குழி இறங்கி இருப்பேன். நல்லவேளை இதுநாள் வரைக்கும் அப்படி நடக்கலை.

உலகத்திலே உள்ள அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை மட்டுமல்லாம, அவங்களோட முத சம்சாரம், ரெண்டாவது சம்சாரம்,நடப்பிலே யாரை வச்சி இருக்கா போன்ற கிசு கிசு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன். இந்த அர்பணிப்பை படிப்பிலே காட்டி இருந்தால் இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி இந்தியாவிலே சம்பளம் குறைவாக கிடைகிறது என்று நாசாவிலே சேர்ந்து தாய் நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்து இருப்பேன்.

கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமால், ஆட்டம் முடிஞ்ச உடனே, அதைபத்தி சிலாகித்து போற வாரவங்களிடம் பேசிக்கொண்டு இருப்பேன், ஆக வாழ்கையிலே நான் என்னையப் பத்தி பேசினதை விட கிரிக்கெட் பத்திதான் நிறைய பேசி இருக்கேன். அந்த ஆட்டத்திலே அவர் அப்படி அடித்து இருக்கவேண்டும். இவருக்கு முன்னால் அவரை களத்திலே இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று விமர்சனம் சொல்லுவேன். இந்தியாவிலே இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு கோச் வேலைக்கு ஆள் எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி பேரு தயாரா இருப்பாங்க.

ஆட்டம் நடக்கும் போது மின்சாரம் தடைபட்டுவிட்டால், திட்டு மழையாய்ப் பொழியும், இருந்தாலும் அடுத்த வினாடியே பல தொல்லை பேசிகளை அழைத்து நடப்பு ஓட்டம் விவரம் சேகரிப்பேன்.ஆட்டத்திலே இந்தியா ஜெயித்தா வாய் பூராம் பல்லா இருக்கும், தோத்திட்டா பாகிஸ்தான் ௬ட சண்டை போட்டு தோத்த மாதிரி பல் போன கிழவன் போல சோகம் ஆகிடுவேன். கிரிக்கெட் ஆட்டத்திலே இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்றால், அதற்கு அப்புறமா எந்த நிலையிலே இருந்து முந்திய ஆட்டம் பார்த்தேனோ, அந்த நிலைக்கு மறுபடி போகவே மாட்டேன், வெற்றி அடைந்தால்  அதே நிலையிலே இருந்து பார்ப்பேன் அடுத்து இந்தியா தோல்வி அடையும் வரை.

இப்படி கொலைவெறியா கிரிக்கெட் பார்த்து, நான் ஒரு பொறுப்பான இந்திய பிரஜை என்று நிருபித்து கொண்டு இருந்த காலத்திலே தான், நடக்கிற போட்டியின் முடிவை முன் ௬ட்டியே ஒரு கமிட்டி முடிவு செய்து, அந்த கமிட்டி செயல்பாட்டின் படி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிச்சக்கப்படுகிறது என்று செய்தி தாள்களிலே அடிப்பட்டது, பக்கத்திலே சமந்தப்பட்ட வீரர்கள் வடக்கூர்காரிகளிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படமும் பார்த்தேன், ஆக இவங்க நோகாம நொங்கு திங்கதுக்கு, நான் நொண்டி நொண்டி தொலைகாட்சி பார்த்தது எல்லாம் வீணாப் போச்சேன்னு நினைச்சேன்.

விளையாட்டை விட்டு வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், இவங்க விளையாட்டுக்குள் நுழையுறதே வடக்கூர் நடிகைகளுக்கு துண்டு போடத்தானா என்ற எண்ணம் வந்தது.மேலும் அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது, அவைகளை  கிரிக்கெட் போதை மறைத்துவிட்டது, செய்தி தாள்களிலும் மற்ற விளையாட்டுக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல சித்தரிக்கபடுகிறது.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதே பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும்  அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.


Friday, January 7, 2011

மரபுச்சண்டை

மருத்துவமனையின் வாசலிலே திருவோடு இல்லாமால் தெருவை நோக்கி இருந்த ஒரு பெண்ணின் மனதிலே ஏன் இந்த சோகம், உள்ளே சென்ற தனது காதலன் நிலைமை என்னாச்சின்னு நினைத்து எண்ணையிலே வேகாத வடை மாதிரி, மனதை வறுத்து எடுக்கிற அளவுக்கு சோகம் இருந்தாலும், எதையும் வெளிகாட்டி கொள்ளாமால் உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு இருந்தாள்.

"கருப்பு நிற உதட்டு சாயம் போடும் சிகப்பழகியே, அப்படியே கொஞ்சம் பல்லுக்கும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்"

"சகிக்கலை உன் வர்ணனை"

"இதை வர்ணன்னைனு வெளியே சொல்லாதே கல்லை கொண்டு எறியப்போறாங்க"

"அதெல்லாம் இருக்கட்டும், மருத்துவ அறிக்கை எங்கே?"

"எல்லாமே நல்லாவே இருக்கு, எனக்கு எய்ட்ஸ்,புற்றுநோய் எல்லாம் இல்லை, இதயத்தை நீ ஆட்டையப் போட்டாலும்,கிட்னி நல்லமுறையிலே இயங்குகிறது, இதை  நான் சொல்லலை, இந்த அறிக்கை சொல்லுது"

"கொடு என்கிட்டே" என்று சொல்லிவிட்டு அவன் கையிலே இருந்து அறிக்கையைப் பிடிங்கி வேகமாக புரட்டிப் பார்த்தாள்.ஒரு தடவைக்கு மேல் பல தடவை பார்த்தாள்.

"அறிக்கை படிக்கிற வேகத்தை படிக்கிறதிலே காட்டினால், நீயும் மருத்துவராகி இருக்கலாம்"

"உன்னோட மரபணு அறிக்கை சரியா, வேற யாரோட பெயரும் தவறுதலா வந்து இருக்கா?"

"சத்தியமா என்னுதுதான், சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேளு"

"ஒன்னு குறையுதே"

"அது உன்னோட அறிவு"

"இல்ல உன்னோட மரபணு படம் சின்ன கோணலா இருக்கு"

"வாய் கோணமா இருக்குல்ல, அப்புறம் என்ன ?"

"பிரச்சனை அது இல்ல, அந்த ஒரு மரபணுவிலேதான் முக்கியமான தகவல் இருக்கு"

"அப்படியா என்ன தகவல் இருக்கு?"

"மக்களை ஆளுகை செய்யும் திறமை, எங்க மரபிலே இருந்து வந்தவங்க தான் உலகத்திலே எண்பது சதவீதக்கு மேல நாடுகளை ஆளுறாங்க"

"மத்த இருபது சதவீதம் என்னாச்சி?"

"அந்த நாடுகள் எல்லாம் இன்னும் வறுமை கோட்டை தாண்டலை, நம்ம நாடு வல்லரசாக  காரணமே எங்க மரபு வழி வம்ச தலைவர்களாலே என்பது சமிபத்திய ஆய்வு சொல்லுது"

"இப்ப ஏன் வரலாற்றை பத்தி பாடம் எடுத்து வாத்திச்சி மாதிரி பேசுறியே ?"

"புரியாம பேசாதே, நாம ரெண்டு பெரும் கல்யாணம் செய்தால்,நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் இந்த மரபணு இல்லாம நாட்டை ஆள முடியாம போய்ட்டா, ஒரு சந்ததியே வீணாப்போகும், நம்ம நாடு மறுபடியும் ஏழை நாடு ஆகிடும், அப்படி ஒரு நிலைமைய நினைச்சே பார்க்க முடியலை,இந்த மருத்துவ அறிக்கை எனக்கு சாதகமா வரணுமுன்னு, தீச்சட்டி எடுத்தேன், தோப்பு கரணம் போட்டேன், கோயில் கோயிலா ஏறினேன்"

"அடியே ஆடே அறுக்கலை, அதுக்குள்ளையும் தலைக்கு பறந்த கதையா இருக்கு நீ சொல்லுறது"

"நம்ம நகர எங்க மரபணு சாதி சங்க வாலிபி தலைவி நான், ஒரு ஆளைப் பார்த்தா உடனே, அவங்க மரபணுவை படமா வரைவேன். என்னோட கணிப்புக்கு பரிசா மரபணு கண்ட மாதரசி பட்டம் கொடுத்து இருக்காங்க.என்னோட கணிப்பு உன்னோட விசயத்திலே எப்படி தப்பா போச்சினு தெரியலையே !!!"

"என்னவோ நோபல் பரிசு கிடைச்ச மாதிரி சொல்லுற,ரெம்ப காலத்துக்கு முன்னாடி சாதி, மதமுன்னு சண்டை போட்டோம், அதெல்லாம் ஓய்ந்து முடிஞ்ச இப்ப எல்லோரும் மரபு பேரை சொல்லி சண்டை போடுறோம்.சண்டை போடுறதுக்குன்னே புதுசு புதுசா கண்டு பிடிப்பீங்களோ,வம்சம் விருத்தி ஆகின காலம் போய், இப்ப மரபு வம்சம் விருத்தி அடைய முயற்சிகள் நடக்கு"

"உனக்கு வேணா இது சாதாரணமா இருக்கலாம், ஆனா என்னோட மரப விட்டு வெளியே வர முடியாது"

"இப்ப ௬ப்பாடு போடுற நீ என்னை காதலிக்கும் முன்னே மூளைய முதுகிலேயா  இருந்தியோ"

"அதான் சொன்னேனே அப்பவே"

"முடிவா நீ என்ன சொல்ல வார, நான் உங்க மரபு சாதி இல்லாததாலே நாம கல்யாணம் பண்ணமுடியாது, அதுக்கு தானே இந்த பாடு"

"ம்ம்ம்"

"எனக்கும் உன்னைய மாதிரி மரபு சாதிவெறி பிடிச்சவ வேண்டாம்"

"வெட்டிக்கலாமா"

"அதான் வெட்டி விட்டுட்டியே,போய் உங்க ஆள்கள்ள நல்ல ஆண்பிளையா பார்த்து வளைய விரி,உன்னை காதலிச்ச பாவத்தை நான் ௬வம் ஆத்திலே போய் குளிச்சி
தீர்த்துக்கிறேன்"

(அடுத்த அரை மணி நேரம் கழித்து குட்டி சுவரில்)

"மாப்ள நீ கொடுத்த யோசனை நல்லாவே வேலை செய்தது"

"நான் தான் அப்பவே சொன்னேன், அவ ஒரு மரபு சாதி வெறி பிடிச்சவ, அதை வச்சி அவளை கழட்டிவிடாலமுன்னு, மருத்துவ மனையிலே எப்படி மரபு சான்றிதழை மாத்தினே"

"அங்க வேலை செய்யுற ஒருத்தரைப் பார்த்து அவரை வச்சி மாத்திட்டேன்,ஆனாலும் மரபணு விசயத்திலே அவ கணிப்பு சரிதான், இருந்தாலும் இப்ப கிடைச்சி இருக்கிற ஆளு, இவளைவிட கொஞ்சம் நிறமா அழகா இருக்கா, அதான் பழையன கழிதலும் புதியன
புகுதலும்(தமிழ் எதுக்கெல்லாம் பயன்படுது பாருங்க) மாதிரி பழசு போய் புதுசு வந்து விட்டது..வந்துகிட்டே இருக்கு"

"எங்கடா?"

"போயிட்டு வந்து சொல்லுறேன்"