Sunday, February 27, 2011

மனநோயாளியின் வாக்குமூலம்

"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு  நினைக்கிறேன்,என்னோட அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை"

"ஏன் நீங்க முயற்சி செய்யலை, அவங்களை கண்டு பிடிக்க ஏன் முயற்சி செய்யலை, சொல்லுங்க .. சொல்லுங்க."

"யோவ், அவங்க அப்பனுக்கு வேலை மாற்றுதலாகி ஊருக்கு போய்ட்டான், அவரு அரசாங்க வேலை பார்த்தவர், எங்க அப்பா அரசாங்கம் உருவாக வேலை பார்த்தவர்(குடி மகன்), அதுவும் டவுசர் ௬ட போட தெரியாத வயசிலே   யாரைத்தேடி எங்க எப்படி அலைய முடியும்?"

"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"

"வேலைக்கு அரை கிழவன்களை எல்லாம் எதுக்கு வைக்கிறேன், ஒரு நல்ல பெண்ணை பார்த்து வைத்து இருப்பேனே?"


"உங்க உள்ளேண்ணத்திலே கலந்த உப்பு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது, சொல்லுங்க நீங்க யாரு?"

"அடி செருப்பால, எத்தனை வாட்டி இந்த கேள்விய கேப்ப?"

"நீங்க சொல்லுற வாட்டி வடக்கூர்ல நிறைய பயன்படுத்துவாங்க, உங்க கிட்ட ஒளிந்து இருக்கிற ஐ.ஐ.டி யிலே படிக்க போய், அறிவு அதிகமாகி கஞ்சா அடிச்ச அந்த ஆசாமிய வெளியே கொண்டு வாங்க, அவனை இன்னைன்னு நான் பார்க்கணும்"

"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும்  தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"

"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"

"வேற யாரு மாதிரினா, பேய் பிடிச்ச மாதிரியா"

"அப்படியும் சொல்லலாம்"

"எனக்கு தெரிஞ்சு அப்படீல்லாம் தோணலை, எங்க தத்தா சாமியாடி, அவரு அடிக்கடி சொல்லுவாரு, பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு ,ஆனா நான் தண்ணியப் போட்டா பல பேர் சாமியாடுவாங்க என் மேல"

"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு" 

"இந்த சக்திய வச்சி ஊரிலே பேய் ஓட்டுற கடை போட்டா யாவாரம் நல்லா நடக்குமா? எங்க தாத்தா சொன்னது நானே பேய் நிறத்திலே இருக்கேன், அதனாலே என்னைய பேய் பார்த்தா, அவங்க ஆள்கன்னு ஒதுங்கிபோகுமாம்"

அடுத்த நிமிடத்திலே பன்னி சில்லிப்பதுபோல சிலித்து, வயத்தை பிடித்துகொண்டு, பல தும்மல்களைபோட்டு, தலையிலே வைத்து இருந்த செயற்கை முடி விழுந்து, வழுக்கையுடன் இருந்தவரைப் பார்த்த மனநல மருத்துவர், 

"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்" 

எல்லா அதிகாரிகளும், மருத்துவரை சுத்தி நிற்கிறார்கள்.

"பன்னி மாதிரி சிலிப்பை எதிர்பார்த்து காத்து இருந்தேன், அப்படி வந்தாதான்   தான் பிள மனிதனின் வரவு,இப்ப உள்ள இருக்கிறது யாருன்னு நீங்களே 
கேளுங்க"

௬டி இருந்த அதிகாரிகளில் ஒருவர், "நீங்க யாரு?" 

"யோவ் எத்தனை தடவை இந்த கேள்விய கேட்பீங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல இப்படி கேள்வி கேட்டா, நான் எழுந்து போய்டுவேன், விசாரணை ன்னு  சொல்லி சோறு தண்ணி கொடுக்கலை, அதான் வயத்த வலி வந்து விட்டது"

"அந்த தும்மலுக்கும், பன்னி சிலிப்புக்கும் என்ன அர்த்தம்?"

"ஜலதோஷம் பிடிச்சி இருக்கு, அதான் அப்படி"

"மருத்துவரே என்ன நடக்கு இங்க, அவரு சொல்லுறதை பார்த்தா இவனுக்குள்ளே யாரும் உள்ள இருக்கிற மாதிரி தெரியலையே, உண்மையிலே இவருக்கு மனநிலை பாதிப்பு, பிள மனித தாக்கம் இருக்கா?" 

"நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் அந்த ஆளை வெளியே கொண்டு வாரேன், இன்னொரு சிகிச்சை இருக்கு"

"என்னவேனாலும் சிகிச்சை கொடுங்க, அதுக்கு முன்னாடி திங்க ஏதாவது கொடுங்க" 

அனைவரும் வெளியே சென்றதும்

"விசாரணை முடிஞ்சதும் கோழி பிரியாணி வாங்கி தாரேன், மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது,அது காலை ஒடிக்கனும்,நானே மனநல மருத்துவர் என் மண்டையையே குடையுற நீ, என்னோட விசாரணையோட உண்மையான முகம் உனக்கு தெரியலை, இப்ப நீ உண்மைய சொல்லலை, உன்னையப் போட்டு தள்ளிட்டு,உனக்கு உள்ளே இருக்கிற பிள ஆட்கள் சண்டை போட்டு உன்னையே கொன்று விட்டதுன்னு உன் கதைய முடிச்சுருவேன், என்னை யாருன்னு நினைச்சே, ஒரு காலத்திலேயே போளி வித்த போலி, உன் பருப்பை என்கிட்டே வித்த, உன்னைய போளிக்கு  தொலி ஆகிடுவேன்"

"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"

"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"

"முனியம்மாவா?"

"போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா"

"அப்படினா நானும் ஒரு உண்மைய சொல்லுறேன், நான் மன நோயாளி இல்லை, உன்கிட்ட இருக்கிற போளி வித்த போலிய வெளியே கொண்டு வர கடமைப்பட்ட இந்திய உளவுத்துறை அதிகாரி, நாங்க உங்களை கைது செய்யுறோம்"

"என்னடா சொல்லுற"

மற்ற அதிகாரிகள் வர

"அவரு உண்மையத்தான் சொல்லுறாரு, நீங்க ஒரு போலின்னு உங்க வாயாலே சொல்ல நாங்க போட்ட நாடகம், எல்லோரும் நடிச்சோம், ஆனா நீங்க நடிக்கவே இல்ல, வாங்க சிறையிலே போளி சாப்பிடலாம்" 

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே  ஏன்?" 

"நோகாம நொங்கு திங்கத்தான், இப்ப நீங்க குற்றவாளி, அதனாலே சிறைக்கு ஒரு வாளிய எடுத்துகிட்டு போங்க"

அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....


Saturday, February 26, 2011

துரைமார்களும், தொப்பியும்



தமிழிலே அலை கடலாக ஓயாமல் ஆராய்ச்சி மணி அடிச்சி தவிச்சி போன கை இப்ப சொம்பு மணி அடிக்கிறது இங்கலிபிசுக்கு, அதாகப்பட்டதாவது துரைமார்களிடம் இருந்து கத்துகொண்ட கொண்ட பாடத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி, நாம பேசுறப்ப கொஞ்சம் முளகாய், காரம் தூவி அப்படியே பேசுவதிலே நம்மவர்களுக்கு இணை நம்மவர்களே என்பதற்கு எனக்கு தெரிந்த இந்த இரண்டு வார்த்தைகள் ஒரு உதாரணம், அதாவது ஹட்ஸ் ஆப், பைட் தி புல்லெட். நான் ஆரம்ப காலத்திலேயே இந்த வார்த்தைகளை கேட்டதும் அரண்டு போய் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டேன்.

முதல்ல ஹட்ஸ் ஆப்னு கேட்டவுடனே, இவரு எதுக்கு சம்பந்தம் இல்லாம தொப்பிய கழட்ட சொல்லுறான்னு யோசித்தேன், ஆனா வார்த்தையிலே இருக்கிற உள்குத்து பெரிய குத்தா இருக்குன்னு கண்டுபிடிச்சி முடிக்கும் முன்னே எனக்கு சொன்னவரு காணாம போயிட்டாரு,தொப்பி விவரம் எப்படினா(?) இவன் எல்லாம் விளங்கமாட்டான்னு என்னையப் பார்த்து சொன்னவங்க எல்லாம் இன்னைக்கு மூக்கு மேல விரலை வச்சி பார்க்கிற மாதிரி சாதனை செய்தால், அவங்களைப் பார்த்து ஹட்ஸ் ஆப் டு யூன்னு புண் பட்ட மனசுக்கு ரெண்டு கட்டு பீடியும், ஒரு பீரும் வாங்கி கொடுத்து மனசை தேத்த சொல்லுவாங்க(?).

சாதனை செய்பவர்களை மீண்டும் சாதனை செய்ய தூண்டுவது,உடலையும்,மனசையும் முதலீடு பண்ணி நொங்கு எப்படி திங்கனுமுன்னு சொல்லி கொடுத்தவரை, நோகாம நொங்கு தின்னுகிட்டு பாராட்டுவது இந்த ஹட்ஸ் ஆப் டு யூ,இந்த சொல் எப்படி வந்து இருக்கும் என்று கால சக்கரத்திலே ஏறாம கொசுவத்திய சுத்தி பார்த்தோமானால், துரைமார்கள் அந்தகாலத்திலே முடி கொட்டினது, முடி கொட்டிகிட்டு இருக்கது, முடி முளைக்காத எல்லோரும் தொப்பிய வச்சி இருந்து இருப்பார்கள், அந்த காலத்திலேயே சாதனையாளர் வரும் போது, தொப்பிய கழட்டி காட்டி அவருக்கு மரியாதை செய்து இருக்கலாம்(?). அதன் பின் நாகரிகம் மாறி தலைக்கு விக் வச்சாலும்,ஆனா ஹட்ஸ் ஆப் டு யூ மாறலை, காலம் மாறினாலும் கருத்து மாறலை என்பதை நிலைநாட்ட சொற்கள் அப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது, ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுச்சொல் கண்டு பிடிக்கலை, கண்டு பிடித்து இருந்தால் ஹேர் ஆப் டு யூ ன்னு சொல்லி ரெண்டு தலை முடியை பிடிங்கி வச்சி இருப்போம்

இணையத்திலே இந்த தூய தமிழ் சொல்லாடல் அடிக்கடி பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம்,அதாவது ஹட்ஸ் ஆப் டு யூ பார் யுவர் கும்மி, ரெண்டு பேருக்கிடையே அறச்சீற்றம்(வசனம் உதவி பாலா அண்ணன்) வரும் போது, நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லிக்கிட்டு ஒத்தை காலிலே நிக்கும் போது, அதுக்கும் ஒரு ஹட்ஸ் ஆப் டு ஆல். கோவமா பேசினாலும் தொப்பிய கழட்டு, மொக்கயா பேசினாலும் தொப்பிய கழட்டு. ஆணியே பிடுங்காம ஆணி அடிச்ச மாதிரி ஆணித்தரமா கருத்து சொன்னா தொப்பிய கழட்டனும், ஆனா எதுவுமே பேசாம இருந்தா முக்காடு போடணுமா, இதையெல்லாம் கேட்காம விட்டா காலைக்கடன் முடிக்கதுக்கு ௬ட ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்ல வேண்டிய நிலை வரலாம்(?).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்னு சொல்லுறதை விட்டுவிட்டு தொப்பியப்போடு, தொப்பிய கழட்டுன்னு பீட்டர் விட்டு பசும்பால் குடிக்கிற காலத்திலேயே   பயமுறுத்து வச்சி இருந்தாங்க.பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழுக்கு மட்டும் தானா, இங்கிலிபிசுக்கு கிடையாதா, ஆயிரத்திலே பேசினதை, ஆயிரத்து தொள்ளாயிரத்திலும், இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சும் ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்லிக்கிட்டு இருக்கனுமா?

தொப்பி விசத்திலே கொலை வெறி எதிர்ப்பு தெரிவிக்க இன்னொரு சிறப்பு காரணம் இருக்கு, தொப்பி பொரும்பாலும் ஆண்கள் வைக்கிறது, ஆனா பெண்களும் சேர்ந்து இப்ப தொப்பிய கழட்டுறேன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தை சமுகத்தை பெண்களும் ஆதரிக்கிறார்கள் என்ற நுண் கருத்தை தொலை நோக்கு பார்வையிலே அணுக வேண்டிய இருக்கு, பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.தாய்குலங்களுக்கு நன்மை(?) செய்யும் பொருட்டாக, இனிமேல ஒரு பூவையோ, ரோசாவை தவித்து, அந்த பூவை காதலர்கள் ஒட்டுமொத்தமா கட்டுக்குத்தகை எடுத்து இருக்காங்களாம். இல்ல தங்க மோதிரமோ கொடுத்து, தொப்பி விசயத்தையே கழட்டி விட்டா மிகவும் நல்லதா இருக்கும், திறைமைக்கு பாராட்டுக்கு பதிலா மொய் வச்சி பரிசு கொடுத்தா சந்தோசம் தானே, அதனாலே இனிமேல பழைய சொற்களை கழித்து விட்டு, புதிய சொற்களைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம்.  



Tuesday, February 15, 2011

துரைமார்கள் பெயர்களும், தன் மானத்தமிழனும்

அதாகப்பட்டதாவது போன வரம் தீன்/டீன் ஒரு இடுகையைப் போட்டு, அயல் நாடுகளிலே வாழும் தமிழர்கள் தங்கள் பெயரை வெள்ளைக்கார துரைமார்கள் உச்சரிக்க முடியாம, ராப்பகலா தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு, துக்கம் தொண்டைய அடைச்சதாலே, போராட்டம்,கலவரம் மற்றும் உண்ணாவிரதம் எதுவுமே இல்லாம தானாகவே முன் வந்து அவர்களின் கவலையைப் போக்க தங்களோட பெயர்களை அவங்க வாயிலே நுழையுற மாதிரி குப்புசாமி-குப்ஸ், சந்தியா-சாண்டி, ஜெயராமன்-ஜே இப்படி சுருக்கி துரைமார்கள் வாயிலே நெல்லை இருட்டுக்கடை அல்வா போல நுழையும் படியா மாத்தி வச்சிக்குறாங்க(?), ஆனா இந்தமாதிரி தன்மானத்தமிழர்கள் மட்டுமே பெயரை மாற்றி கொள்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

மனவாடும், வடக்கூர்காரங்களும் தங்கள் பெயர்களை இதே காரணத்துக்காக மாற்றி வைத்து கொள்கிறார்கள்,கிரிக்கெட் தவிர  இந்த விசயத்திலும்  இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதிலே எனக்கு ஐயம் இருப்பதாக தெரியவில்லை .என் ௬ட வேலை பார்த்த அனப்பத்துல்லா என்ற மனவாடு அனப்ஸ் பேரை மாத்தி வச்சிகிட்டாரு, நான் அனபத்துல்லான்னு சொன்னாலே அவருக்கு கொலைவெறி கோபம்
வரும். யோவ் துரை மார்களுத்தான் உன் பேரை சொல்லமுடியாது, எனக்குமா முடியாது? ன்னு சொன்னவரிடம், பெயர் மரியாதை தெரியாத பக்கியா இருக்கியேன்னு தத்துவமா பேசிட்டு போனாரு,ஒரு நாள்  அவருக்கிட்ட சிக்காகோ போறேன்னு சொன்னேன், அவரு
அதுக்கு சிக்காகோ இல்ல சிகாகோனு சொன்னாரு, இவருக்கு துரைமாரே தேவலாம் போலன்னு நினைத்துகொண்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தண்ணியப் போட்டு அவருக்கு நல்லா தண்ணி காட்டினேன், மனுஷன் அதுக்கு அப்புறமா, நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேச மாட்டாரு.

நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,படி அளக்கிற பகவான் கோவிச்சிக்குவாருன்னு வெளியே சொல்லாம இருக்கமா இல்ல, அயல் நாடு வந்து ஆணி பிடிங்கிட்டு இங்கிலிபிசு தெரியலைன்னு அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு தன்மானத்தை காக்க, வெள்ளையம்மா, வெள்ளையப்பன் பெயர்களை எல்லாம் கரைத்து குடித்தது போல நடிக்க வேண்டிய இருக்கு(?).

நானும் ஊரை விட்டு விமானம் ஏறும் முன்னே, அலுவலகத்திலே பல நூறு தடவை
சொல்லி அனுப்பினார்கள். நீ வேலைய ஒழுங்கா செய்யுறியோ இல்லையோ, ஆனா துரைமார்களுக்கு எந்த விதமான கண்ணிய குறைச்சல் வரும் படியா நடக்கக்௬டாது.
நானும் நல்லா கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வந்தேன், வந்த முதல் நாளே அறிமுகப் படலம் எல்லாம் முடிந்து, செய்ய வேண்டிய வேலையைப் பத்தி சொல்லி கிட்டு இருந்தாரு, ஒண்ணுமே புரியலைனாலும், புரிஞ்ச மாதிரியே நடிச்சேன். ரெம்ப அறிவாளியா இருக்கான்னு நினைச்சிகிட்டு, முடிஞ்ச உடனே எனக்கு மின் அஞ்சல் அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு, அவரு மின் அஞ்சல் அனுப்பியதிலே ஒண்ணுமே இல்லை, கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு அவரு அறைக்கு போயிட்டு ஜுஅன் (Juan), ஒரு சந்தேகம்னு கேட்டேன்.

"அவரு யாரு ஜுஅன்?"

"நீங்கதான்?"

"என் பேரு யுவன்.. என்னய்யா பேரை ௬ட சரியா சொல்ல தெரியலையே"

உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும், மன்னிச்சுருங்கன்னு முப்பது தடவை சொல்லிட்டேன். அவரு பேரை நூறு தடவை சொல்லி ஏத்தி வச்சிகிட்டேன்.கொஞ்ச நாள்ல வேலையிலே உலக திறமைய காட்டி (நம்புங்க) கொடி பிடிச்சிகிட்டு இருந்தேன்.எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.

 ஒரு நாள் அணியிலே வேலை செய்த ஒருத்தர் பெயரை டோமொர்ட்ரின்னு சொல்லி ௬ப்பிட்டேன்,கேட்டவங்க எல்லாம் என்னைய எப்படியே பார்த்தாங்க, நானும் ரெம்ப அழகா பேரை உச்சரிக்கிறேன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமாவே ௬ப்பிட்டேன், நான் ௬ப்பிட்டவர்

"எங்க ஐயா எனக்கு ஆசையா வச்ச பேரை இப்படி கொலை பண்ணுறியே?"

வழக்கம் போல தப்பத்தான் சொல்லிட்டேன்னா, அவர்ட்டயும் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சேன்.அவரு டிமிட்ரியாம், அப்புறமா அதையும் ஏத்தி வச்சேன், ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன். சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.

துரைமார்களுக்கு ஏகப்பட்ட சுருக்கப்பெயர்கள் இருக்கும், ராபர்ட்னு இருக்கிறதை பாப் மாத்தி வச்சுக்குவாங்க, இவங்க பெயரை மட்டுமில்லாம, தாத்தா, பாட்டி, வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை வைத்த சொல்லப்பெயரை எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய இருக்கு, காரணம் துரைமார்கள் எல்லாம் ஓடுற குதிரையா இருக்காங்க,நாமும் வளைந்து நெளிந்து அவங்க போக்குக்கு தண்ணி காட்ட வேண்டிய இருக்கு. இப்ப எல்லாம் ஒருத்தர் பெயரை பார்த்தாலே அவரு செல்லப்பெயர் என்னவா இருக்கும், அவரை நண்பர்கள் எப்படி ௬ப்பிடுவாங்க,முன்னாள் காதலி எப்படி ௬ப்பிட்டு இருப்பாங்க, இந்நாள் காதலி எப்படி ௬ப்பிடுவாங்க என்ற வரலாற்று புள்ளி விவரங்களும் கணனியே இல்லாம மண்டைக்குள்ளே எறிடுது.