Sunday, February 28, 2010

விண்ணைதாண்டி வருவாயா -இலக்கியவாதியின் பார்வையில்

முன்ன பின்ன விமர்சனம் எழுதினது கிடையாது, நானே எழுதி படம் வெளிவரும் முன்னாடி போட்ட விமர்சனம் எல்லாம் கடையிலே விளம்பரத்துக்காக முன்னாடி ஒட்டி வச்சி இருக்கேன். படம் பார்க்க வருகிறீர்களான்னு பிரபல பதிவர் இளாவை கேட்டா, நான்  தியேட்டர்ல படம்  பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டாரு, நீங்க முன்னாடி வந்து விமர்சனம் எழுதுங்க, நான் உங்களைப் பார்த்து வழக்கம் போல நகல் எடுத்துக்கிறேன்னு சொன்னேன், அவரு இன்னும் விமர்சனம் வெளியிடலை, குடுகுடுப்பையும் இன்னும் படம் பார்க்கலையாம், வந்த விஷயம் சொல்லாமா என்னய்யா இவன்னு கேட்குறீங்களா, இதோ அடுத்த பாரா விமர்சனம் தான்.


வழக்கம் போல துண்டு போடுற கதைதான், இந்திய திரைப் படங்களிலே துண்டு போடாம  எதாவது படம் இருந்தா அந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம், எவ்வளவு துண்டு கதை வந்தாலும், சுவாரசியம் என்பது ஒரு தனித்திறமைதான், அந்த வகையிலே விண்ணைத்தாண்டின்னு  பெயர் இருந்தாலும் மனசுக்குள்ளே வந்து உட்காரத்தான் செய்யுது. படம் ஆரம்பித்த உடனே நாயகன் போடுற துண்டை நாயகி வாங்குகிறாளா ..நாயகி வாங்குகிறாளா..நாயகி வாங்குகிறாளா, இப்படியே போகுது.


துண்டு போட்ட ஒருத்தனை எப்படி நண்பனாக ஏத்துக்க முடியுமுன்னு உளவியல் அறிஞ்சர்கள் எல்லாம் கொலைவெறியோடு யோசித்து கொண்டு இருக்கும் போது, இல்லை அவன் போட்ட துண்டை நான் கையிலே வாங்கல, ஆனா மனசிலே வாங்கிட்டேன் என்று  நாயகி சொன்னவுடனே தான் விண்ணைத்தாண்டி ௬ரையை பிச்சிகிட்டு வந்தது, பின்ன நான் அந்த காலத்திலேயே இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து இருக்கிறேன், அடிச்சி விரட்டி புட்டாங்க. சில சமயங்களிலே நாயகனின் மனநிலையையும் வசனத்தையும் பார்க்கும் போது நாயகி துண்டை வாங்கினா தேவலாமுன்னு தோணுது. 

படம் முழுவதும் நிறையை பேசுறாங்க, ஆனா ரசிக்கும் படியாவும் இருக்கு, கஜனி முகமது மாதிரி காதல்ல பலதடவை படை எடுத்து தோத்து போனவங்க எல்லாம் பழைய கொசுவத்தி ஞாபகம் வந்து  தூக்கத்தை கெடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.காதல் அளவுக்கு அதிகமாவே இருக்கு 

காட்சிகளும் சரி, நடிக, நடிகைகளும் சரி ரெம்ப இளமையாவே இருக்காங்க, முக ஒப்பனை ரெம்ப குறைவு என்பதும் ஒரு காரணம், ஆனா என்னைவிட ஒன்னும் யூத் இல்லை பால அண்ணே, படத்தின் முதல் பாதி நாசா விட்ட ராக்கெட், இரண்டாவது பாதி இஸ்ரோ விட்ட ராக்கெட் மாதிரி வேகம் கொஞ்சம் குறைவுதான், ஆனாலும் போய் சேருமா சேராதா என்ற பயம் எப்போதுமே இருப்பது போல, நாயகனும், நாயகியும் சேருவார்களா என்பதிலே அந்த வேகக்குறைவு நம் கண்ணுக்கு தெரிவதில்லை.

பாடல்கள், பின்னணி இசையையெல்லாம் பேசுற அளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகலை, எங்க ஊரு பக்கம் எல்லாம் பாட்டுக்கு வந்தவங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டாங்க, இல்லனா சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.

வழக்கம் போல பெண்ணுங்க எல்லாம் ரெம்பவே உசார்னு இதுவரைக்கும் யாருக்குமே புரியாதவங்களுக்கு படம் கண்டிப்பா பிடிக்கும்.காதலன், காதலிக்காக உருகுறான், அதுக்கு பலனா அவனுக்கு  இனாம அடிக்கடி ஓசி முத்தம் கிடைக்குது, சம்பந்தமே இல்லாம கல்யாண ஆசையை காட்டி கடைசியிலே தாலி கட்டும் நேரத்திலே கல்யாணம் பிடிக்கலைன்னு நாயகி சொல்லிவிட,பக்கத்திலே மாப்பிள்ளையா நிற்கிற  இன்னொரு பாவப்பட்ட ஜீவன் கதா பாத்திரம் இருக்கு,நொங்கு தின்னவனுக்கும் கிடைக்கலை, ௬ந்தலை எடுக்க போனவனுக்கும் கிடைக்கலை, ரெண்டு பெரும் என்ன செய்யன்னு தெரியாம இருக்கிற காசயெல்லாம் வரியா கட்டுறாங்க  டாஸ்மாக்குல  நல்ல வருமானம் அரசாங்கத்துக்கு. நாயகனும் காத்து இருக்க, இந்த பலி ஆடும் காத்து இருக்க, யாரு தலையிலே தண்ணியை தெளிச்சி நாயகி வெட்டுகிறாள், அதாவது வாழ்க்கை துண்டை வெட்டுகிறாள் என்பதே படத்தின் முடிவு. 

இறுதியிலே எதிர் பாராத திருப்பம், என் அறிவுகண்ணுக்கு ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சி போச்சி, அதையெல்லாம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தை இந்தியிலே எடுத்த தமிழ் வெற்றியை  விட மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதிலே சந்தேகமே இல்லை. விண்ணைத்தாண்டி எல்லோரும் மனசிலே நிற்கிறார்கள்.

ஒரு சில பின்னூட்டங்கள் தியேட்டர்ல போட்டது,

"உன்னை இப்படியே பிடிச்சிகிட்டு ஆயுசு பூரா நிப்பேன்" ன்னு ஒரு வசனம்.

"எப்பா எங்களால எல்லாம் அம்புட்டு நேரம் காத்து இருக்க முடியாது"

நாயகியோட கல்யாணம் நின்னதும், நாயகனும் நாயகியும் பேசிகிட்டே இருப்பாங்க

"அல்லோ .. சீக்கிரம் பாட்டை போடுங்க"

நாயகி, நீயும், நானும் நண்பர்கள்ன்னு அடிக்கடி சொல்லும்போது

"லவ் யு ன்னு சொல்லு, இப்பவே வணக்கம் போட்டுருவாங்க"

நீங்களும் படத்தை தியேட்டர்ல பாருங்க இப்படி நிறைய பின்னூட்டம் போட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.தலைப்பிலே இருக்கிற "இலக்கியவாதியின் பார்வையில்"   என்பது நான் வழக்கம் போல விடும் எழுத்துப்பிழைன்னு நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். 




Tuesday, February 23, 2010

நான்காவது மரணம்

மணியை எப்ப சந்தித்தேன், எப்படி அவன் எனக்கு நண்பன் ஆனான்னு இன்னும் புரியலை, ஆனா நாங்க ரெண்டு பேரும் பள்ளியிலே ஒண்ணா சுத்துவோம்.எங்க வீட்டிலே அந்த காலத்திலேயே பீடி சுத்துவது தான் தொழில், நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது மணி என்கிட்டே கேட்டான், நீ சாயங்காலம் வரும் போது ரெண்டு பீடி எடுத்திட்டு வான்னு.நான் பிறந்திலே இருந்து பீடியை  பார்த்தவன், இது நாள் வரைக்கும் அதை குடிக்கனுமுன்னு தோணலை, ஆனா நண்பன் மணி நான் எடுத்திட்டு போன பீடியை எடுத்து குடிக்க ஆரம்பித்ததும் எனக்கும் ஆசை வந்து விட்டது, மிச்சம் இருந்த ஒரு பீடியை நானும் குடிச்சேன்.


பீடி எல்லாம் குடிச்சி முடிச்ச உடனே பெரிய ஆள் தோரணையிலே நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய்ட்டோம், அந்த சம்பவத்திற்கு அப்புறம் நானும், அவனும் ஊருக்கு ஒதுக்குபுறமா அடிக்கடிபோய் பீடி குடிப்போம்.நான் படிச்ச பள்ளியிலே எட்டு வரைக்கும் தான் இருந்தது, ஒன்பதாம் வகுப்புக்கு வேற பள்ளிக்கு போக வேண்டும், மணியோட குடும்ப  சூழ்நிலை அவன் எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கலை, நான் வேற பள்ளிக்கு போனாலும் அடிக்கடி நாங்க ரெண்டு பேரும் சந்தித்து கொள்வோம்.


நான் ஒன்பதாம் வகுப்பு முடிச்ச  உடனே மணியை கொஞ்ச நாளா காணலை, அவனை தெருக்களிலே பார்க்க முடிவதே இல்லை.பத்தாம் வகுப்பு படிச்சிகிட்டு இருக்கும் போது ஒரு நாள் தற்செயலா மணியைப் பார்த்தேன், ஆள் மிக சோகமா இருந்தான், விவரம் கேட்டேன் ஒண்ணும் சொல்லவே இல்லை, பீடியும் கேட்கலை. 


அதற்கு பின் நான் மணியை சந்திக்கலை, பத்தும் முடித்து,பதினொன்னாம் வகுப்புக்கு போனேன், ஒரு நாள் காலையிலே பள்ளிக்கு வரும்போது மணியின் தெருவிலே இருக்கும் ஒருவர் என்னிடம் 


"ஏலே.. உன் சேக்காளி மணி செத்து போயிட்டாண்டா" ன்னு சொன்னார், கேட்டதும் நேர மணி வீட்டுக்கு போனேன், உண்மையிலே மணி செத்து தான் போனான், கொஞ்ச நேரம் அவங்க வீட்டிலே இருந்து விட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றேன், மணி இறந்த சோகத்திலே மணியின் நினைவா என்கிட்டே பீடியை தவிர வேற ஏதும் இல்லை, அதனாலே என்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு மணி எனக்கு சொல்லிக்கொடுத்தை சொல்லிக் கொடுத்தேன்.முன்னாலே நானும் மணியும் ஒதுங்கும் இடத்திற்கு இப்போது என்னோடு நான்கு பேர் சேர்ந்தார்கள்.

அதிலே ஒருத்தன் தான் திருப்பதி, அவன் எங்க ௬ட வருவான், பீடி குடிக்க இல்லை, எங்களை திட்டுவதற்கு, அவன் திட்டி முடிச்ச உடனே நாங்க எல்லாம் கிளம்பிவிடுவோம், ஊருக்குள்ளே எல்லாம் அந்த காவாலிபயலுக ௬ட சேரக் கூடாதுன்னு  பல தடவை அவனுக்கு புத்திமதி கிடைச்சாலும், அதெல்லாம் அவன் சட்டைசெய்வது கிடையாது, எப்பவுமே எங்க ௬ட தான் இருப்பான்.

பதினொன்று முடித்து விட்டு, பன்னிரெண்டுக்கு போனோம், எங்களோட மணியும் கூடவே வந்தான் பீடியாக, தாவரவியல் சோதனைக்கு அடுத்த நாள் செம்பருத்தி பூ பறிக்க ஊருக்கு அருகிலே இருந்த தோட்டத்திற்கு செல்ல முடிவு எடுத்தோம், அதிகாலையிலே இன்னொரு நண்பனையும் திருப்பதியையும் நேராக தோட்டத்திற்கு வர சொல்லிவிட்டு நான் நேராக அங்கே   சென்றேன். எனது நண்பர்களை காணவில்லை, நானே அவர்களுக்கும் சேர்த்து பூக்களை பறித்து விட்டு, திருப்பதி வீட்டுக்கு செல்ல தீர்மானித்தேன்.

அவன் வீட்டுக்கு வரும் வழியிலே இன்னொரு நண்பன் பரபரப்பாக வந்தான், வந்தவன் என்னுடன்

"ஏலே திருப்பதி செத்து போயிட்டாண்டா"

"என்னடா சொல்லுற"  

"ஆமா, அவன் தூக்குல தொங்கிட்டான்"

ரெண்டுபேரும் வேகமா திருப்பதி வீட்டுக்கு போனோம், வீட்டு முன்னாலே சிறு ௬ட்டம், விஷயம் கேள்விப்பட்டு மேலும் மக்கள் ௬ட ஆரம்பித்தார்கள், நாங்கள் வீட்டுக்குள்ளே சென்றோம், அப்போதுதான் அவன் தூக்கு மாட்டி இருந்த கயிற்றை விட்டு அவனை கீழே இறக்கி வைத்து இருந்தார்கள்.எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை, அந்த இடத்தை விட்டு மட்டும் சீக்கிரம் கிளம்பனும் என்பதைத் தவிர வேறொன்றும் தோணவில்லை.   ஊருக்குள்ளே அடுத்த ரெண்டு மாதத்துக்கு அவனைப் பத்தியே பேச்சு,எல்லோரும் பேசி முடிச்சிட்டு மறந்தாலும், எங்களால அதைமறக்கமுடியலை.

நண்பனை இழந்த சோகத்தை மறக்க ஒரு வார இறுதியிலே சங்கரன்கோவிலுக்கு சென்றோம்,அப்போதுதான் வைகோ திமுகவை விட்டு வெளியே தள்ளப்பட்டு கட்சி ஆரம்பித்த உடனே நடக்கும் முதல் ௬ட்டம், மக்கள் ௬ட்டத்தோடு ௬ட்டமாக போனோம், மதுபானக் கடை முன்னே எங்களை விட்டது, திருப்பதியை மறக்கனுமுன்னு குடித்தோம், அவனைப் பத்தியே பேசிக்கொண்டு இருந்தோம்.கொஞ்ச நாள்ல மணி ஞாபகம் வரலைனல்லும் பீடி குடிச்சோம், திருப்பதி ஞாபகம் வரும்போது தண்ணி அடிச்சோம்.

பன்னிரண்டு முடித்து கல்லூரிக்கு வந்தேன், பழைய நண்பர்கள் யாரும் இல்லை, புது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு தெரியாத மணியையும், திருப்பதியையும் அறிமுகம் செய்தது வைத்தேன். கல்லூரியிலே நான் முதலிலே பீடி குடிக்கவும், தண்ணி அடிக்கவும் சொல்லிக் கொடுத்தது ஜகதீஷ்க்கு. அவனும்,நானும் முதல் வருடத்திலே நல்ல நண்பர்கள், இரண்டாம் வருடத்திலே அவன் வேறு வகுப்புக்கு சென்று விட்டாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது பீடியும், தண்ணியுமாக.

நாலு வருஷம் கல்லூரி முடிச்சதும், நாங்கள் வேலை தேடி பெங்களூர் சென்றோம், ஆறு மாதத்திற்கு பிறகு ஆள், ஆளுக்கு ஒரு வேலையிலே சேர்ந்தோம், வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து நான் இரண்டு சக்கர வாகனம் வாங்க முடிவு எடுத்தேன், வேலை முடிந்து நண்பர்களை நேராக டீலர் கடைக்கு வரச்சொல்லி விட்டு நான் அங்கே போனேன், ஜகதீஷ் தவிர அனைவரும் வந்து விட்டார்கள். மற்றவர்களிடம் கேட்டேன், அவனும், இன்னொரு நண்பன் ஒருவனும்    பைக்கில் கிளம்பி விட்டார்கள் என்று சொன்னார்கள்.

புது வண்டியுடன் வீட்டுக்கு வந்து விட்டு கோலாகல விருந்து முடித்துவிட்டு தூங்கினோம், இரவிலே காவல் துறையினர் வந்து   நான் தங்கி இருந்த வீட்டுக் கதவை தட்டினார்கள், கன்னடத்திலே கேட்டார்கள், எனக்கு புரியலை, கன்னடம் தெரிந்த ஒரு நண்பனை எழுப்பினேன். அவன் விவரம் கேட்டு விட்டு, ஜகதீஷ் விபத்துல சிக்கி இருக்கான், அவனை அரசாங்க மருத்துவ மனையிலே சேர்த்து இருக்காங்களாம் என்றவுடன் அடுத்த அரை மணி நேரத்திலே மருத்துவமனையை அடைந்தோம்.நாங்கள் அவனை பிணவறையிலே தான் பார்த்தோம்.

அவன் உறவினர்கள் எல்லோருக்கும் தகவல்சொல்லி அனைவரும் வந்து விட்டார்கள்,அடுத்த நாள் மதியம் உடலை வாங்கிக் கொண்டு அவர்கள் தமிழ் நாட்டுக்கு கொண்டு சென்றார்கள், எனது அலுவலக வேலையால் என்னால் செல்ல முடியவில்லை, ஒரு வாரம் கழித்து மருத்துவ அறிக்கையிலே அவன் தலை எதிரே வந்த வாகனத்தின் முன் பகுதிலே மோதி இறந்து இருக்கிறான் என்று தெரிய வந்தது, அவன் தலைக்கவசம் அணித்து இருந்தால், அவன் பிழைத்து இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்திலே வேலைக்கு அவசரமாக பைக்கிலே போய் கொண்டு இருந்தேன்,  முன்னால் போய்க் கொண்டு இருந்த வேன் திடீரென பிரேக் போட்டவுடன், நான் வந்த வேகத்துக்கு என்னால் வண்டியை நிறுத்த முடியாமல் வேனிலே முட்டினேன், வண்டியிலே இருந்து தூக்கி எறியப்பட்டு தலை வேனின் பின்புறத்திலே மோதியது. மணி, திருப்பதி, ஜகதீஷ் அனைவரும் எனக்காக காத்து கொண்டு இருந்தனர்.

ஜகதீஷ் இறந்தபின் நடந்தவற்றை நினைத்து பார்த்தேன், முதலில் மணியைப் புகையில்லாமல் புதைத்தேன், பின்னர் திருப்பதியை தண்ணி இல்லாமல் புதைத்தேன், இப்போது அவர்கள் நினைவுகள் மட்டும் என்னிடம், இந்த இரண்டையும் தவிர வேற என்ன செய்தேன் என்று நினைக்கும் முன் கீழே விழுந்ததிலே தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதற்குள் என்னைச் சுற்றி ௬ட்டம் வந்து என்னை தூக்கி ஓரமாக வைத்து விட்டு என்னிடம் எதோ கேட்டார்கள், என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, அதற்குள் கூட்டத்தில்  நின்ற ஒருவர் என்னோட தலைக்கவசத்தை என் தலையிலே இருந்து எடுத்தார், அப்போது சுவாசித்த காற்றிலே புது உலகம் கண்டேன், தலையை தடவிப் பார்த்தேன், எந்த வித சேதமும் இல்லை. அடுத்த ஐந்து நிமிடத்திலே மீண்டும் பயணம் செய்ய ஆயத்தமானேன். 


சொல்ல மறந்துட்டேன் இந்த தலைக்கவசம் ஜகதீஷ் இறந்த பின் வாங்கினது தான், நடந்த முன்று மரணங்களும், நடக்கப் போகும் என்னோட நான்காவது மரணமும் நிச்சயமே என்றாலும், தன்னாலே போக வேண்டிய உயிரை வீணாக தள்ளி விட வேண்டாமே.


Saturday, February 20, 2010

தெலுங்கானவுக்கு அலப்பறை தீர்வு

இவ்வளவு நாளா தெலுங்கானா  எதோ தண்ணி பிரச்சனைன்னு நினைச்சிகிட்டு இருந்தேன், போன வாரம் தான் தெரிஞ்சுது, ஒரு குடும்ப பிரச்சனைன்னு,௬ட்டு குடும்பமா இருந்த அண்ணன், தம்பிகளிடம் மனக்கசப்பு வந்து, மனசிலே புகைந்து கொண்டு இருந்த புகை, இப்ப சாலை வரைக்கும் வந்து இருக்காம். தெலுங்கான பகுதி மக்களுக்கு, ஆந்திரா மக்கள் ௬ட வாழப் பிடிக்கலையாம்.  சேர்ந்து இருக்கிற ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைன்னா வெட்டி விடுவது புதுசா, பல காலமா அப்படித்தானே நடக்குது, அதனாலே அவங்க கேட்டதை கொடுங்க சாமி.


 யார்ட்ட கோரிக்கை வைக்கன்னு தெரியலை,உள்துறையா, வெளித்துறையா, வெளியே விசாரிச்சா  பிரதமரை தவிர யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாமுன்னு சொல்லுறாங்க,தெலுங்கானாவை கழட்டி விட தெலுங்கு தடையா இல்லையாம், இங்கிட்டு இருக்கிற அவுக சொந்தக்காரங்களுக்கு பிடிக்கலையாம், அதனாலே போறேன்னு சொல்லுறவங்களை, காவிரி மாதிரி அணை கட்டி தடுத்து வச்சி இருக்காங்களாம். 


தெலுங்கானா போய்ட்டா ஆந்திரா தனியா ஆகிவிடும் பயமாமே, எதுக்கு பயப்படனும், எங்க தமிழ் நாட்டோட வாங்க, நாங்க உங்களை சேத்துக்கிறோம், கொஞ்ச காலத்துக்கு முன்னாடி சாம்பாரும், சில்லிவாடும் ஒண்ணாத்தானே இருந்தோம், நீங்க பிரிஞ்சி போகும் போது தெலுங்கு அதிகம் பேசுற திருத்தணி எல்லாம் விட்டா கொடுத்தோம் நாங்க தானே வச்சிக்கிட்டோம்.


ஆந்திராவும், தமிழ் நாடும் இணையும் போது எவ்வளவோ நன்மைகள் இருக்கு,இனிமேல பாலாறு பிரச்சனையே இருக்காது, கொஞ்ச நாள்ல அப்படி ஒரு ஆறு இருந்ததா யாருக்குமே தெரியாது. தமிழ் நாட்டை தமிழுலு ன்னு மாத்திவிடலாம், ஏற்கனவே சித்தூர், நெல்லூர் எல்லாம் தமிழ் பேரு இருக்கிறதாலே, சித்துருழு, நெல்லுருழு ன்னு மாத்திடலாம், எங்க நெல்லை மாவட்டம் இருக்கிறதாலே இப்படி ஒரு பெயர் மாற்றம்.


நிர்வாக வசதிக்காக சென்னைக்கு பக்கத்திலே ஒரு துணை நகரம் அமைத்து சென்னைலு ன்னு பெயர் வைக்கலாம், இப்படி எல்லாம் நடந்தா நாயுடு கோவப்படுவாருன்னு நினைச்சா, அங்கே நாயுடுவா இருந்தவரை நாயக்கர் ஆக்கிவிடாலாம், மதுரை திருமலை நாயக்கர் மகாலை நாய்டுமகால்ன்னு  மாத்தலாம், நம்ம முகிலன் ஊரான கந்தக காட்டு பக்கம் நிறைய தெலுங்கு பேசுற மக்கள் இருக்கிறார்கள், அதனாலே இந்த பெயர் மாற்றம் ஒண்ணும் அவ்வளவு குழப்பம் விளைவிக்காது.ரெட்டி, ரெட்டியாவும், ராவ், ராவாவுமே இருக்கட்டும்.அந்த பெயரே சால பாகா உந்தி.


சற்று முன் கிடைத்த செய்தி குடுகுடுப்பையாரிடம் இருந்து: யோவ் சென்னையிலே ஏற்கனவே நாய்டு ஹால் இருக்கிறது, பேரை மாத்தும். 





மிக அண்மைய  செய்தி பின்னூட்டங்களில் அருவா, கம்பு என சுத்தி கொண்டு இருக்கும் வில்லனிடம் இருந்து, யோவ் விளக்கெண்ணை, அது மகளிர் மட்டும் கடை. 

மனவாடும், சாம்பார்வாடும் சேர்வதாலே இனிமேல திரைப்படங்கள் டப்பிங் செலவு மிச்சம், அதனாலே மஞ்ச கடிதாசி கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு  குறைந்த பட்சம் துண்டு மிச்சம் ஆகும்.

ஆந்திரா மிளகாய் இனிமேல தமிழிலு மிளகாய் என்றும், ஆந்திர பிரியாணி அகண்ட தமிழிலு பிரியாணி என்றும் அழைக்கப்படும், அகண்ட தமிழ் நாடு என்வுடன், சற்றுமுன் உதித்த யோசனை, முல்லை பெரியாறு அணைப்பகுதியையும் நம்மோடு சேர்த்து விட்டால், தமிழகமும், கேரளாவும் நடத்தும் நெடுந் தொடராகிய  வழக்கு நாடகங்கள் முடிவுக்கு வரும்,உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலே உள்ள  இந்தியா முழுவதும் இந்திய மக்கள் தொகைக்கு இணையான வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும்.  தமிழ் அணையை குச்சியை வச்சி உடைச்சிட்டாங்க என்று சேச்சி சொல்லுறது போன்ற மழலை சண்டைகள் முடிவுக்கு வரும்.    

இனிமேல பள்ளிகளில் தமிழ், ஆந்திரா தமிழ் என்று இரண்டு பாடங்கள் வைக்கப்படும், உலகத்தரம் வாய்ந்த இந்தியைப் படிக்க முடியவில்லையே என்று தமிழகத்திலே வருத்தம் உள்ளவர்கள் இனிமேல கவலைப்பட வேண்டாம். என்ன மாயமோ தெரியலை இந்தின்னு பேரை கேட்டால் எதிர் சொம்பு அடிக்காம இருக்க முடியலை.அடுத்து வருவது என் சொந்த கருத்து மட்டுமே என்பதை துண்டு போட்டு சொல்லிக்கிறேன்.


இந்தி பேசத்தெரியாததாலே  அங்கே கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் எல்லாம் பறிபோவதாக கேள்விப்பட்டு இருக்கேன், வடக்கூர் எல்லாம் எதோ சிங்கப்பூர்,மலேசியா போல செல்வ செழிப்போடு, பாலும் தேனும் ஓடுது, தமிழ் நாட்டிலே எல்லாம் சாப்பாட்டுக்கே வழி இல்லாம அடுத்தவங்க கிட்ட கை ஏந்தி நிற்கிறோமா?, இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டு பொருளாதாரம் இந்திய பொருளாதார சராசரியை விட அதிகம், இதை  நான் சொல்லலை சாமிகளா விக்கி பீடியா சொல்லுது, இன்றைக்கு இந்தி மொழிக்கு ஊற்றா இருக்கிற உத்திர பிரதேசத்திலே தான் படிப்பறிவு மிக குறைவு என்பதையும் சொல்லுது.ஆக கல்வி தகுதியிலும் சரி, பொருளாதாரத்திலும் அவங்க நம்மளை விட உயர்ந்தவர்கள் இல்லைன்னு சொல்லலாம்.




தமிழ் தெரிஞ்ச நம்மகிட்டேயே தமிழுக்கு சொம்பு அடிச்சே களைச்சி போக வேண்டிய நிலைமையா இருக்கு, ஒரு சோடா குடிச்சா தேவலாம்,இந்திக்கு எதிர் சொம்பு அடிச்சதிலே சொல்ல வந்த விசயமே மறந்து போச்சி, அதனாலே இத்தோட முடிச்சிக்கிறேன்.

இப்படி எல்லாம் நடந்தா எனது பெயரை நாசரேயலுன்னு மாத்திக்கிறேன், குஜமுக சார்பிலே குடுகுகுடுப்பை, குடுகுடுகாரு என்றும், முகிலரு என்று முகிலனும், அண்ணையா குஜமுக மாணவர் அணித்தலைவர்  வானம்பாடிகள், வானம்பாடிலுன்னு பேரை மாத்திகிறதா கட்சி ௬ட்டத்திலே வழக்கம் போல  என்னையை கேட்காம தீர்மானம் எடுத்து இருக்கிறார்கள்.


Thursday, February 18, 2010

மாதுவின் காதலன்

கல்லூரி முடிச்சிட்டு சென்னையிலே வேலை தேடி கே.கே நகர்ல அடுக்கு மாடி குடி இருப்பிலே இரண்டாவது மாடியிலே இருந்தேன்.எதாவது நேர் முகத்தேர்வுக்கும், வேலை தேடி விண்ணம் அனுப்புவதும் தான் வேலை எனக்கு, என் ௬ட கல்லூரியிலே என்னுடன் படித்த நண்பனும் தங்கி இருந்தான்.மாசத்திலே பாதி நாள் வீட்டிலே தான் இருப்போம், கடையிலே சாப்பிட்டா அதிகம் செலவு ஆகிறது என்பதாலே நாங்களே சமைக்க ஆரம்பித்தோம்.


சமையல்  முடிந்தது போக மற்ற நேரங்களிலே வரண்டாவிலே நின்று கட்டை பீடி அடிச்சிகிட்டு இருப்போம்.ரெம்ப நல்ல பையனா இருந்த அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தா சிகரட் குடிக்க ஆரம்பிச்சிட்டான்.


இப்படி கதையை ஓட்டிகிட்டு இருக்கும் போது ஒரு நாள் வழக்கம் போல இந்திய தபால் துறையினர் கீழ் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தை எங்க வீட்டுக்கு கொடுத்தாங்க, விலாசத்திலே பெண்ணோட பெயர் இருந்தததினாலே, இந்த விஷயத்தை ௬ட இருந்த நண்பன் கிட்ட சொல்லவே இல்லை.



அவன் கிட்ட சொன்னா, அவன் நானும் வருவேன்னு சொல்லிட்டா ஒரு பொன்னான வாய்ப்பு வீணாப் போயிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்திலே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா காட்டிக்கவே இல்லை. நண்பன் வெளியே போன நேரம் பார்த்து அவசர அவசரமா கடிதத்தை எடுத்துகிட்டு கீழே போனேன்.

கதவை தட்டினேன், கொஞ்ச நேரம் யாருமே திறக்க வில்லை, மறுபடி தட்டினேன், ஒரு கை மட்டும் வெளியே வந்து என்ன என்று கேட்டது, பதில் ஏதும் சொல்லாம கடிதத்தை வைத்து விட்டு வந்து விட்டேன்.அளவுக்கு அதிகமா எதிர்பார்ப்போட போன எனக்கு நடந்த சம்பவம் மன வருத்தம் தந்தாலும், முயற்சியை கை விட முடியலை, அவ கை அம்புட்டு அழகா இருந்தது, அடுத்த முறை தபால் துறை அவங்க வீட்டுக்கு போட்ட கடிதத்தை நான் எடுத்திட்டு வந்திட்டேன்.

அடுத்த நாளே போய் கதவை தட்டினேன், மறுபடியும் கை வந்தது, கடிதத்தை வைத்தேன், கதவு திறந்தது, என் மனக்கதவும் திறந்தது,என்னைய மேலும் கீழும் பார்த்தாள். அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு, நான் ௬ட முதல்ல என் அழகிலே மயங்கி தான் சிரிக்கிறாளோன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்திலே தெரிந்தது நான் சில்லரைத்தனம் பண்ணினது தெரிஞ்சி போச்சோன்னு எனக்கு சந்தேகம் வந்தது.

அன்றையிலே இருந்து நான் போகும் போதும் வரும் போதும் அவளைப் பார்த்து சிரிப்பேன், அவளும் தான். நாங்க சமைக்க ஆரம்பித்த புதுசிலே என்ன சமைக்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தாலும் , கொஞ்ச நாள்ல  உணவு கட்டுப்பாட்டு கழகம் சான்றிதழ் தரும் அளவுக்கு சமையல் வளர்ந்தது.

ஒரு நாள் இப்படித்தான் சாம்பார் வைத்து விட்டு பக்கத்து தெருவிலே இருந்த நண்பன் ஒருவனுக்கு எடுத்து செல்லும் போது, என்னோட கோலத்தை பார்த்து,  வெளியே போய் உட்கார்ந்து கை நீட்ட தான் சொம்பு எடுத்திட்டு போறேன்னு அவ நினைச்சி கேட்க, சாம்பார்ன்னு சொல்லியும் அவ நம்பாததாலே கொஞ்சம் ருசி பார்க்க கொடுத்தேன், அப்படியே சொம்பை எடுத்து வச்சி கிட்டா, சொம்பு போனாலும் சாம்பாரிலே சங்கமம் ஆகிட்டேன்னு நினைக்கும் போது சந்தோசமே.

நான் இப்படி காதல் நோயிலே இருந்ததாலே அக்கம் பக்கம் நடக்கிறதை கண்டு பிடிக்க முடியலை, என் அறை நண்பனுக்கு ஒரே சந்தேகம் அவளைப் பற்றி, என்கிட்டயும் சொன்னான்.

"மச்சான், அவ எங்கையும் வேலைக்கு போன மாதிரி தெரியலை, ஆனா பகல்ல ஆள் வெளியே வருவது கிடையாது, இரவு ஏழு மணிக்கு மேல யார், யாரோ வாராங்க அவ வீட்டுக்கு"

"எவ்வளவு நாளா இப்படி நடக்குது" 

"ரெம்ப நாளாவே இப்படித்தான் நடக்குது"

அவ அழகுக்கு என்னைய மாதிரி ரெம்ப பேரு துண்டு போட வருவாங்களோன்னு நினைச்சாலும், வீட்டுக்குள்ளே எப்படி போக முடியும்ன்னு யோசித்தேன்.

அடுத்த நாள் இரவு நானும் கவனித்தேன், அவ வீட்டுக்கு யாரும் வந்த மாதிரி தெரியலை, இருந்த பீடி காலியாகி விட்டதாலே கடைக்கு போனேன், போகும் வழியிலே அவளைப் பார்த்தேன், சிரிச்சிட்டு உள்ளே வா என்று கை காட்டினாள்.

வரவேற்பு அறையிலே இருந்த மேசையிலே பார்த்தா சரக்கு பாட்டில் இருக்கு, என்னைய நாற்காலிலே உட்கார சொல்லிவிட்டு ஒரு  கிளாஸ்ல ஊத்தினாள், எல்லாத்தையும் கலந்து அவளே குடிச்சிகிட்டா, நான் பொம்பளை தண்ணி அடிகிறதை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, என்ன சொல்லன்னு தெரியாம இருந்தேன், அவ என்கிட்டே கேட்டாள். தண்ணி அடிப்பியான்னு, ஓசியிலே என்ன கிடைத்தாலும் குடிப்பேன்னு மனசிலே நினைச்சிகிட்டாலும், ஆமான்னு  தலையை ஆட்டினேன். எனக்கும் ஒரு கிளாஸ் வந்தது, குடித்தேன்.

குடிச்ச கொஞ்ச நேரத்திலே நான் என்ன கேள்வி கேட்க தயங்கினேனோ, அதையெல்லாம் சரளமா  கேட்டேன், அடுத்த கிளாஸ் போன உடனே, பதில் சொல்லலைன்னா நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னேன்.பதில் சொன்னாள், சொன்ன பதிலை கேட்டு போதைஎல்லாம் தலை தெரிக்க ஓடிப்போச்சி, அதற்குள் பாட்டிலும் காலி ஆகி விட்டது, வீட்டுக்கு வந்து அவளைப் பத்தியே யோசித்து கொண்டு தூங்கி விட்டேன்.

உண்மை என்னன்னு தெரிஞ்சாலும், ஏனோ துண்டை எடுத்து கீழே வைக்க முடியலை, வேலை வெட்டி இல்லாம வீட்டிலே இருந்து அவளைப் பத்தியே யோசித்தேன். அவளிடம் நிறைய பேச ஆரம்பித்தேன், ஓசி சரக்கும் நிறைய கிடைத்து, அரை மூடி குடித்தாலே அரை நாளுக்கு சலம்புற நான் அவ ௬ட குடிக்கும் போது கல் காளை மாதிரி இருப்பேன். அவ நெஞ்சை பிச்சிகிட்டு நிறைய விசயங்கள் வெளிவரும், எல்லாம் முடிஞ்ச உடனே எனக்கு வாயை பிச்சிகிட்டு வெளியே வரும், பெரும்பாலும் நான் மட்டை ஆகி தான் வீட்டுக்கு வருவேன். அவளைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், தன்னோட காதலனை நம்பி வந்தவளை, அவன் ஏமாற்றி யாரிடமோ விற்று விட்டான் என்றும், அவன் சூறையாடிய கற்பை எல்லோருக்கும் பகுந்து கொடுத்தும்  இருக்கிறான், ஆரம்ப காலங்களில் உடல் வலி போக்க தண்ணி அடிக்க ஆரம்பித்தவள், இப்போ மன நிம்மதிக்கு தண்ணி அடிக்கிறாள்.

என்னவோ என்கிட்டே எல்லாத்தையையும் சொன்னாள், இந்த தொழிலை விட்டு விடலாமேன்னு கேட்டால், அதற்கு எப்போதுமே பதில் வராது அழுகையைத் தவிர.காசு கொடுத்து நொங்கு திங்கிற இடத்திலே, நான் நோகாம நொங்கு தான் திங்க முடியலை, இப்படி நோகாம சரக்கு அடிக்க முடியுதேன்னு, நானும் அவ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன்.

ஒரு மாசம் கழித்து மீதும் சரக்கு அடிக்கும் போது என்னிடம் கேட்டாள்,

"என்னை தேடி வருகிறவர்களுக்கு தோணுறது உனக்கு தோணலையா?"

"தோணும், அதற்கான விலை என்கிட்டே இல்லை" 

"உனக்கு தேவை இல்லை" சொல்லி அடுத்த நிமிசமே தேதியும் குறிச்சாச்சி. அந்த நாளும் வந்தது, அவ வீட்டுக்கு போனேன், வழக்கத்துக்கு மாறாக அவள் ரெம்ப அழகா தெரிஞ்சா, வீட்டுக்குள்ளே போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தேன். ரெண்டு பேருக்குமே சரக்கு பத்தி ஞாபகம் வரலை. வந்த வேலையை பார்க்கலாமுன்னு படுக்கை அறையை நோக்கி போனோம். கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. என்னை இருக்க சொல்லி விட்டு கதவை திறந்தாள். காவல் துறையினர் வாசலிலே, அவளிடம் அனுமதி கேட்காமல் வீட்டுக்குள்ளே வந்தனர். நானும் பயத்திலே வெளியே வந்தேன்.

"தினமும் புது புது ஆளுங்களை வச்சி, தொழில் பண்ணுறியா?"  அவள் ஒண்ணும் பதில் சொல்லலை. என்கிட்டே கேட்டாங்க.

"எவ்வளவுடா கொடுத்த?" 

"இல்லை சார்"

"என்ன நொள்ள, நடங்க ஸ்டேஷன்க்கு" 

"சார், இந்த பையன் மேல் வீட்டிலே தங்கி இருக்கிறான், அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை" ன்னு சொன்னா,அதை நம்பின மாதிரி தெரிஞ்சது, என்னை போக சொல்லிட்டாங்க, ஓடியே போயிட்டேன்.

அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது. 


Saturday, February 13, 2010

குடுகுடுப்பையின் சிந்தனைக்கவுஜ - சிறப்பு விளக்கம்


இந்த தலைப்பை பார்த்த உடனேயே கொலைவெறி கோபம் வந்து இருக்கும், இருந்தாலும் உண்மை என்னனு சொல்லைனா வரலாறு மன்னிக்குமா இந்த மொக்கை எழுத்தாளனை. அருவா, கம்பு, ஆட்டோ, சுமோ எடுத்தவங்க எல்லாம் கொஞ்சம் அமைதி காக்கவும்.


"அதுல என்ன சொல்லி இருக்கு"ன்னு கவுஜைய ஆரம்பித்து இருக்காரு குடுகுடுப்பை, அது எதுலன்னு எழுதின அவருக்கு தெரியலைனாலும், அங்கே "அ" முதல் எழுத்து வந்து இருக்கு, அப்படின்னா அங்கே உள் குத்து இருக்குன்னு அர்த்தம். வள்ளுவரும் இப்படித்தான் "அ" விலே ஆரம்பித்து இருக்காரு. 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு


ஆக வரியிலே ஒரு "அ" போட்ட மாதிரியும் ஆச்சி, வள்ளுவருக்கு ஒரு வணக்கம் சொன்ன மாதிரியும் ஆச்சி.யோவ் குடுகுடுப்பை என்னைய போய் இப்படி எல்லாம் சிந்திக்க வச்சிடீரே.

அடுத்த வரியை நல்லா உன்னிப்பா கவனீங்க, அதிலே ஒண்ணுமே இருக்காது, இருந்தாலும் அதை ஏன் எழுதணும், "இதிலே இப்படி சொல்லி இருக்கு", இங்கே ஒரு இலக்கியமே ஒளிஞ்சி கிடக்கு, அதாவது "அதிலே", "இதிலே"  எதுகை மோனை. இதையெல்லாம் நுட்பமா கவனிக்கலைனா தெரியாது.



அடுத்த வரி பாருங்க கண்ணிலே நிற்கிற மாதிரி வரி, "அதிலே சிந்திக்க சொல்லி இருக்கு", வச்ச தலைப்பு ஒரு வரியாவது கவுஜையிலே வரணும், அதற்கு எழுதப் பட்டது தான்.இதிலே வேற எந்த வித மான உள் நோக்கமே இல்லை.   

அடுத்த ரெண்டு வரிதான் கவுஜையோட மைய கருத்து, முந்திய வரியிலே இருந்து லெப்ட்,ரைட் ன்னு இங்கிலிபிசி லே ரெண்டு வார்த்தை அதிகமா சேர்ந்து இருக்கு.அதாவது நான் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் ரவுடி என்பதை நிருபிக்க எழுத்தப் பட்டது. 


அடுத்த வரி சமுதாய தொலை நோக்கு பார்வை கொண்டது,சிந்தனை என்பது கட்டாயம் வேண்டும் என்று கட்டளை இடவில்லை, ஆனா சிந்திக்கலைனா இப்பபட்ட கவுஜைகள் மூலமாக தண்டனை வழங்கப்படும் என்று அன்பாக கூறுகிறார் குடுகுடுப்பையார். 


"அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு"  

"அதுல தடைசெய்யப்பட்டிருக்கு"

இந்த ரெண்டு வரிக்கும் சிந்தனை செய்ய தடை செய்ய பட்டு இருப்பதாலே நான் நிறுத்திக்கிறேன், ஒருவேளை முகிலனுக்கு தெரியலாம் இதன் விளக்கம் என்ன என்று, அவர் கவிதைகளுக்கு விளக்கம் கொடுப்பதிலே வல்லவர் என்று பட்டம் வாங்கியவராச்சே 



அடுத்த வரும் வரிகளிலே எல்லாம் கேள்வி கணைகளை தொடுத்து இருக்கிறார், இப்படி எல்லாம் கேள்வி கேட்க மனுஷன் எங்கே படிச்சாருன்னு தெரியலை, இதுல..இதுல எதையோ சொல்ல முயற்சி செய்தது இருக்கிறார், ஆனா அது எதிலே ன்னு தெரியலை. பாருங்க நான் இப்ப அந்த அதிலே, இதிலேயை படிச்சி கந்தலாகிட்டேன்.  


அசல் இங்கே 

 



Thursday, February 11, 2010

எனது காதலர் தினங்கள்


தீபாவளி, பொங்கல், மாட்டு பொங்கலுக்கு கொண்டாட்டிகிட்டு இருந்த நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் துண்டை கையிலே வச்சிக்கிட்டு திரிந்தாலும்  காதலர் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாது,

பெரும்பாலும் வெளிநாட்டுகாரங்க பண்டிகை எல்லாம் பட்டணத்திலேதான் கொண்டாடுவாங்க, அதே மாதிரி கல்லூரி வந்ததும் முதல்   முறையா வலேண்டின் தினமுன்னு கேள்வி பட்டு, நண்பன்கிட்ட  கேட்டேன்

"மச்சான், வலேண்டின் துண்டு போடுறதிலே பெரிய கில்லாடியா? அவரு பிறந்த அன்னைக்கு காதலர் தினமுன்னு சொல்லுறாங்க"

"மாப்புள, அந்த போட்ட துண்டை யாரும் வாங்கலையோ என்னவோ, துண்டு போட்ட எல்லோரையும் சேத்து வச்சி இருக்காரு.அவரோட மகத்தான மாமா வேலையை பாராட்டி, அன்றைக்கு காதலர் தினமுன்னு வச்சிட்டாங்க, அதனாலே இந்த பதினாலாம் தேதி காதலியோட முகத்திலே முழிக்கலைனா ஆயிசுக்கும் துண்டு போட முடியாம போயிடுமுன்னு வசதிக்கு தகுந்த மாதிரி வாயிலே, கையிலோ கொடுப்பாங்க."

"சரி இருக்கவங்க கொடுக்கிறாங்க, இல்லாத நம்ம மாதிரி ஆளுங்க என்ன செய்ய"

"என்னது நம்மளா?"

"இல்ல மச்சான், என்னையத்தான் சொன்னேன்"

"ரோஜா பூவை வாங்கிட்டு அலைய வேண்டியது தான்"

அடுத்த நாளே கையிலே காசு இல்லாட்டியும் பூக்கடைக்கு போய் சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன், என் கையிலே ரோசா பூ வை பார்த்ததும், ௬ட படிக்கிற புள்ளைக மட்டுமில்ல, வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க.

அல்லோ பாலா அண்ணன் நீங்க இங்கே முக்கியமா ஒண்ணு கவனிக்கணும், அவங்க எல்லாம் தெறிச்சி ஓடிட்டதாலே நான் அழகு குறைச்சலா இருந்து இருப்பேனோன்னு நினைக்க ௬டாது,காரணம் என்னன்னா  
நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு  நாற்பதாவது தரமாவும் வாக்கப் படவேண்டிய என்னை காதல்ன்னு ஒரு உள்ளூர் வட்டத்துக்குள்ளே அடைச்சி வைக்க இந்த பெண்களுக்கு பிடிக்கலைன்னு நான் ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க .

கண்டம் விட்டு கண்டம் பாயப்போற இந்த கருவாலியை கவுக்க௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே அவங்க எல்லாம் வழி விட்டுட்டாங்க.அதோட அங்கேயே என்னோட காதல் தினக் கொண்டாட்டத்தை முடிச்சிகிட்டேன்.

அடுத்து வாய்ப்பு வேலைக்கு பெங்களூர் வந்த போது கிடைச்சது, நம்ம ஊரு புள்ளைக கிட்ட பருப்பு வேகலைன்னதும், ௬ட வேலை பார்த்த வடக்கூர்காரி சிரிக்க சிரிக்க பேசுவா, அவ பேசுறது எனக்கு புரியலைனாலும், நான் நல்லாவே சிரிப்பேன், என்னையும் நம்பிகிட்டு இருந்தவ ஒரு நாள் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பேசி கிட்டு இருந்து இருக்கா, அது புரியாம நான் பேய் மாதிரி சிரிக்க உண்மைய கண்டு பிடிச்சிட்டா, பேசுறது புரியலைனா இன்னொரு தடவை சொல்லுன்னு கேளுன்னு சொல்லிட்டா.அதற்கு அப்புறம் அவ சிரிக்கலன்னா நான் சிரிக்கவே மாட்டேன்,

நானும் பெப்ரவரி எப்ப வருமுன்னு காத்து கிடந்து, வந்த உடனே அவ கிட்ட கேட்டேன், காதலர் தினத்திலே எங்கே போற ன்னு கேட்டேன்.

"போற அளவுக்கு ஆள் கிடைக்கலைன்னு சொன்னா?"

நான் தொகுதிலே இன்னும் வேட்பு மனு தாக்கல்  இல்லை, அப்ப சுயேச்சையா களம் இறங்கி ஜெயிச்சிடலாமுன்னு நானும் ரோசா பூவை வாங்கிட்டு பதினாலாம் தேதி போனேன்.

சாயங்காலம் வரைக்கும் இலவு காத்த கிளி மாதிரி இருந்து, அலுவலகம் முடிய கொஞ்ச நேரம் முன்னாடி அவகிட்ட போனேன், அவ அவளைத்தேடி யாரோ வந்து இருப்பதாக போனாள், நான் அவ பின்னால போனேன், அங்கே பார்த்தா என்னை விட அழகான ஒரு வடக்கூர் காரன் அவளுக்கு பூ கொடுத்து கிட்டு இருந்தான், அப்பவே நான் கொண்டு போன பூவை காதிலே வச்சிகிட்டேன்.

வாடிப்போன ரோசாவையும், வதங்கி போன மனசோடையும் வீட்டுக்கு போக பேருந்திலே ஏறினேன். போகும் போது அருகிலே இருந்த பள்ளி மாணவி, நீங்க கையிலே வைத்து இருக்கும் ரோசா பூவை எனக்கு தரமுடியுமான்னு கேட்டாள்.

"இல்லை இது வேற காரணத்திற்க்காக வாங்கினது"

"காதலிக்கு மட்டும் தான் ரோசா பூன்னா, அப்ப நேரு மாமா கொடுத்ததை எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க,இது அன்பை பரிமாற ஒரு தினம், அது காதலியா இருக்க வேண்டிய கட்டமில்லை"

அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே இருக்கு. 



Wednesday, February 10, 2010

மார்கழி மாத அதிகாலை

"மெய்யப்பா இங்கே வா.. இங்கே வா ..." என்ற குரலை கேட்டு மெய்யாகவே கலங்கி போனார், குரல் வந்த திசையிலே சாமியார்

"ஐயா நீங்க யாரு?"


"என்னைய தெரியலையா, அம்மன் கோவிலே இருக்கிறேன். பெயரிலே மெய் வச்சி கிட்டு பொய் சொல்லுறியே" 

 
"கவனிச்சதில்லை சாமி"

"நீ கவனிக்கலைனாலும் நான் உன்னை கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன், உன்னோட மனக்கவலை எல்லாம் காத்தாகப் போகுது, வீட்டிலே போய் சொம்பு தண்ணி குடிச்சிட்டு படு, எல்லாம் சரியாகும்"

வீட்டுக்கு வந்த மெய் அப்பன் சாமியார் நினைவுகளிலே தூங்கி போனார், அதிகாலையிலே குடுகுடுப்பையின் சத்தம் "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது" என்று கேட்ட ஞாபகத்திலே மீண்டும் நித்திரைக்கு சென்றார்.  

மற்ற மாதங்களில் எப்படியோ ஆனா மார்கழி வந்துவிட்டால் எங்கள் வீட்டிலே கொண்டாட்டம்,கோவில்களில் அதிகாலை ஆராதனைக்கு தெய்வங்களை அலங்கரிக்க பூக்கள் எங்கள் வீட்டிலே இருந்து செல்லும்,படிப்புக்கு   தகுந்த வேலையிலே  இருந்தாலும் என் தந்தைக்கு உதவியாக நானும் பூக்களை பட்டுவாடா செய்வேன்.

அன்றும் அப்படித்தான்,அவசரமா போக இருந்த என்னை பூசாரி ஒரு மாலை கட்டி கொடுக்க  சொன்னார்.நான் பூக்களை தேடி எடுக்கும் போது,பூக்கள் பொதிந்த ஒரு தேவதையை கண்டேன்.நான் பூக்களை தொடுத்து மாலையான போது, என் மனதிலே இருந்த காதல் முத்துக்கள் கோர்க்கப்பட்டு காதல் மாலையாகி அவளுக்கு முடி சூட தயாராக இருந்தது. அம்மனோட சேர்த்து என் காதல் அம்மனையும் தரிசித்து விட்டு வீட்டுக்கு சென்றேன், அணுக்களை பிளக்கும் போது உள்ள வேகத்தை விட வேகமாக காதல் தீ பரவியது.


பகல் முழுவதும் அவள் நினைவிலே இருந்த நான் அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.அவளைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் சேகரித்து கொண்டேன்.எனக்கும் திருமணதிற்கு பெண் பார்த்து கொண்டு இருந்த அதே நேரத்திலே என் வீட்டிலே அவளைப் பற்றி சொன்னேன். மறுப்பு ஏதும் சொல்லாமல் மறுநாளே பெண் கேட்டு சென்றனர்.


"என்னங்க பெண் கேட்டு வந்தவங்க கிட்ட என்ன சொல்ல?" இதே கேள்வியை பலமுறை கேட்டும் அவரின் பதில் என்ன என்று தெரிந்தும், இந்த கேள்வியை கேட்க மட்டும் தயங்கியதில்லை.



"உங்க விருப்படியே செய்யுங்க?"

"உண்மையாவா சொல்லுறீங்க?"

"ம்ம்.. ஆக வேண்டிய வேலையை பாருங்க"

அந்த ஒரு பதிலிலே  எங்கள் திருமணமும் முடிந்து நாங்கள் முதலிரவு அறைக்கு சென்று விட்டோம்.ஓய்வில்லா அலைச்சலில் களைத்து போய் இருந்த எனக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்த மனைவியின் கைகளை பிடித்து கொண்டு நெஞ்சிலே கை வைத்து விழுந்தேன் தரையிலே.

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு

என்னங்க நம்ம பொண்ணும் என்னையே மாதிரி, கல்யாணத்துக்கு ரெம்ப கஷ்டபடுவா போல இருக்கே, எனக்காவது எங்க அப்பாவுக்கு சாமியாடியும், குடுகுடுப்பையும் சொன்னதாலே தைரியம் வந்து, எனக்கு இருந்த தோஷங்கள்  எல்லாம் சரியாகிடுமுன்னு நம்பிக்கையிலே என்னோட கல்யாணத்துக்கு சம்மதித்தார்,ஆனாலும் நம்மோட கல்யாணத்து அன்றைக்கு நீங்க மயங்கி விழுந்ததை பார்த்து எங்களுக்கு எல்லாம் உசிரே இல்லை.


"உங்க அப்பாவோட நம்பிக்கையை சாமி காப்பாத்தி விட்டது, ஆனா இப்ப நம்ம பொண்ணோட நம்பிக்கையை யாரு காப்பாத்த?"

"நம்ம மாரியாத்தான்னா பரவா இல்லை, இவ எதோ வேற சாமியை கும்பிடுற பையனை காதலிக்கிறாள், இந்த பையனோட அப்பா முடியவே முடியாதுன்னு அடம் பிடிக்கிறாராம்."    

"எல்லா மனுசனுக்குள்ளேயும் சாமி இருக்கு,உங்க அப்பா சாமியாரை பார்த்து சாமியானார்,அதே மாதிரி அவரும் ஒரு நாள் சாமி ஆவார்."

"சீக்கிரம் நடந்தா சரிதான், இந்த பிரச்சனையிலே நம்ம பொண்ணு படுற கஷ்டம் என்னால தாங்க முடியலை"    

"நடக்கும், நீ எனக்கு கொஞ்சம் காபி எடுத்திட்டு வாயேன்"

 காபி எடுக்க உள்ளே சென்ற என்  மனைவிக்கு, நான் அதன் பின் பேசியது காதிலே விழ வாய்ப்பு இல்லை.

சில மனுசங்க சாமியை உணரலைனா,நாம  உணர்த்தணும், உணரவைக்கணும் என்று பேசிய நான் பழைய நினைவுகளை அசைபோட்டேன், திருமணதிற்கு முன் என் மனைவியை கோவிலே பார்த்த உடனே, அவளைப் பற்றி விசாரித்த போதுதான்,அவளுடைய ஜாதகத்திலே ஏதோ தோஷம் இருப்பதாக தெரிந்து கொண்டேன் .

"இந்தாங்க காபி" என்ற கையிலே இருந்து காபியை வாங்கி கொண்டு வீட்டுக்கு  வெளியிலே   இருந்த நாற்காலியிலே அமர்ந்து யோசித்தேன்.

அன்றைக்கு என்னோட சாமி வேஷம் போட்டு, நான் நினைச்சதை சாதித்தேன், இன்றைக்கு வேற சாமி வேஷம் போட்டு என் பொண்ணு நினைச்சதை சாதிக்க வைக்கிறேன், வைப்பேன் என்ற என் மன உறுதிக்கும், தன் நம்பிக்கைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை என் ஆள் மனது உணர்த்தியது. 


Monday, February 8, 2010

ஒரு எழுத்தாளரின் விலை





இருபது வருட உழைப்பிற்கு கிடைத்த மகிழ்ச்சி இந்த சந்தோஷ முகத்தை கண்டு சந்தோசப் படக்கூடிய ஒரே ஜீவன் இப்போ என் பக்கத்திலே இல்லையே என்ற வருத்தம்,சந்தோசத்தோடு கடந்து சென்றவன் சுற்றம் மறந்தேன், இந்த உலகமே சமவேளியிலே சுழல்வதை போல உணர்ந்த நான் சடுதியிலே மறந்து விட்டேன். சாலையை கடந்த நான் எதிரே வந்த வாகனம் என் மீது மோதுவதை மட்டும் உணர்ந்தேன்,என்னை சுற்றிலும் அபயக்குரல்கள்கள் ஆனால் என் காதுகள் மையான அமைதியாய் இருந்தது.    




அடுத்த அரைமணி நேரத்திலே குற்றம் செய்யாத என் முகவரி தேடி முகவரியை குற்றவாளியை போல தொட ஆரம்பித்தது.




காவல் அதிகாரி ஒருவர் என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார், 


"ஐயா எதோ புத்தக கண்காட்சியிலே கடைக்கு கொடுக்கும் அனுமதி சீட்டு பையிலே இருக்கு, ரெண்டு புத்தகமும் பையிலே இருக்கு"


ஆமா அந்த புத்தகம் என்னோடதுதான், அந்த எழுத்துக்கு சொந்தக்காரனும் நான்தான்,விடலை வயசிலே பொழுது போகாமல் கிறுகிய நான், வாலிப வயசிலே எழுத ஆரம்பித்தேன், நான் என்னை நேசித்ததை போல என் எழுத்தையும் நேசித்தேன்.எழுத்தின் மேல் உள்ள ஆசையிலே என்னை எழுத்தாளன் என்ற வட்டத்திற்குள் தள்ளியது, ஏனோ தெரியவில்லை என் எழுத்தை என்னை தவிர யாரும் நேசிக்க வில்லை.


"ஐயா இவரோட பையிலே இந்த விலாசமும் படமும் இருந்தது"


"அப்படியா, அந்த ஊரு காவல் நிலையத்திலே தகவல் சொல்லு, அவங்க வீட்டுக்கு சென்று விசாரிக்க சொல்லு"


அந்த விலாசமும் புகைபடமுன் என்னை சார்ந்தது தான்,இந்த உலகிலே என்னை மட்டுமே நேசித்த அந்த ஜீவன் தான்,  என்னை காதலிக்கு கரம் பிடித்த என் மனைவி தான் அது, எழுத்தாளர் கனவிலே இருந்த என்னை வீண் வேலை செய்பவன் என்று எல்லோரும் வெறுத்து ஒதிக்கிய போது, என்னை நம்பி வந்தவள் தான் அவள், மகளின் ஆசைக்கு தடை செய்ய முடியாமல் பாசம் தடுத்து விட்டதால் அவளின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு எங்கள் திருமணம் இனிதே நடந்தேறியது.




"உங்க வீட்டுகாரர் எங்கே போய் இருக்கிறாரு?" என்ற காவலரின் கேள்விக்கு பதில் சொல்ல பீடி தட்டை எடுத்து வைத்து கொண்டு வெளியே வந்தாள்.


"அவரு சென்னை போய் இருக்கிறாரு, என்ன விசயம்?"


"வீட்டிலே பெரியவங்க யாரும் இருந்தா ௬ப்பிட்டு காவல் நிலையம் வா, பயபடுற மாதிரி ஒண்ணும் இல்லை"


காரணத்தை சொல்லாமல் கடந்து சென்ற காவல் அதிகாரி போனபின், அவளின் தந்தையை அழைத்து கொண்டு காவல் நிலையம் நோக்கி புறப்பட்டாள்



புகைபழக்கம் உடலுக்கு கேடு என்று சொன்னாலும்,எங்கள் வாழ்க்கை வளர்வது அடுத்தவரின் புகையிலே தான். வேலையில்லாத எங்களின் வயிற்றை நிரப்பியது இந்த பீடி தொழில் தான், இன்றைய வரையிலும் நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கவலையை மறக்க வைத்தது அவளின் உழைப்பு தான்,அவளின்  தந்தை அச்சு தொழில் நடத்தி வந்தாலும், சுய மரியாதையை இழக்காமல் இருக்க செய்வது இந்த பீடி தொழில் தான்.
மனைவியின் பாதி சம்பளம் எனது படைப்புகளை அனுப்புவதற்கே சரியாக இருக்கும், இன்று வரை அதற்காக என்னிடம் குறைபட்டதில்லை. நான் பேனாவுக்கும், தாள்களுக்கும், தபால் துறைக்கும் கொடுத்த பணம் எங்களிடம் இருந்தால் ஆயிசு முழுவதும் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்காது.




காவல் துறையிடம் வாங்கி கொண்டு 
சென்னை விலாசத்தை வாங்கி கொண்டு என் மனைவியும், மாமனாரும் பேருந்திலே பயணம் செய்து கொண்டு இருந்தனர்.




பதினைந்து வருடமாக பெய்யாத மழை எங்கள் ஊர் விவசாயிகளை மட்டுமல்ல என்னையும் மகிழ்வித்தது  
மழைதுளியின் வாழ்வு காலம் பூமியை  வந்தடைந்து சக தோழர்களுடன்  கலந்து வெள்ளமாவதைப் பார்த்து கொண்டு இருந்தவன்,
என் மனைவியிடம் நான் அவளின் தந்தையுடன் அச்சு கடைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொன்னேன். அவளோட வாழ் நாளிலே கேட்ட முதல் சந்தோஷ நிகழ்ச்சியைப் போல அவளின் முகத்தில்  அளவில்லா மகிழ்ச்சி.
மாமனாரின் கடையிலே வேலைக்கு சேர்ந்து அச்சி தொழிலின் நுட்பங்களை கற்று கொள்ள ஆரம்பித்தேன். எனது வேலையின் ஆர்வம் எல்லோருக்கும் மன நிம்மதியை தந்தது,
கொஞ்ச நாளிலே எனது படைப்புகளை அச்சு கோர்க்க ஆரம்பித்தேன்.


 ஐநூறு பிரதிகளை எடுத்து கொண்டு சென்னை புத்தக் கண்காட்சிக்கு முன்னால் ஓரத்திலே நானும் கடையைப் போட்டு இருந்தேன். உள்ளே உள்ள புத்தகங்களின் விலையை பார்த்து பிரமித்து விட்ட என் போன்ற ஏழைகள் எனது பக்கம் திரும்பின புத்தகத்தின் விலை 10 ரூபா என்று தெரிந்ததும் ஒரு சில புத்தகங்களை வாங்கி சென்றனர்,மாலை ஆகும் முன்னே அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்தது.எனது முதல் சம்பாத்தியம் இப்போது எமனின் காணிக்கைக்கு காத்து நிற்கிறது.




"டாக்டர் என்ன ஆச்சி?"


"ஒன்றும் செய்ய முடியாது, நீங்க சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லியாச்சா?"


"ம்ம்.. அவங்க எல்லாம் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறார்கள்."


என் மனைவி வந்து விட்டாள், அவளின் கடைசி பார்வையை பார்த்து விட்டு கண் முடியவன் நீண்ட உறக்கமாகிய மரணத்தை தழுவினேன்.




அடுத்த ரெண்டு மாதத்திலே


என் மாமனாரின் அச்சு அலுவலத்திலே எனது புகைப்படம் மாட்டப்பட்டு, வாழும் வரை அவர்களுக்கு  உதவாக்கரையாக இருந்த நான் தெய்வமாய் இருந்தேன். அவர் எனது படைப்புகளை பிரதிகளை எடுத்து இறந்து போன எனது எழுத்துகள் மறுபடி பிறந்து கொண்டே இருந்தது. நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் மரணம் இல்லை என்ற கண்ணதாசன் வரிகள் ஒலித்து கொண்டு இருந்தது.



Sunday, February 7, 2010

பொன்னியின் செல்வன் வரலாற்று பிழை

பொன்னியின் செல்வன் எழுதப்படவில்லை என்றால் இன்று சோழர்களின் புகழ் வரலாற்றிலே இவ்வளவு பெருமை அடைந்து இருக்குமா  என்பதை உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் இதே காரணத்தை வைத்து தஞ்சைக்கு அருகிலே எங்க ஊரை விட ஒரு குக்கிராமத்திலே பிறந்த ஜக்கமாவின் புகழ் பாடும் நேற்றைய  குடுகுடுப்பை இன்று குடுகுடுப்பை சோழன், இலக்கிய வியாதி தமிழிலே ஆங்கிலத்திலே என்ன என்ன பெயர்களை தந்து பட்டப் பெயராக வைத்து கொள்ள முடியுமே அதை எல்லாம் எடை  தாங்க முடியாமல் இன்று நண்பர் முகிலன் போட்ட போதிலே மீண்டும் குடுகுடுப்பையாகி மீண்டும் இருந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.   


அவரின் கட்சியிலே அடி மாட்டு தொண்டாக சேர்ந்து என்னுடைய கடின உழைப்பினால் கட்சியிலே மிக பிரபலம் அடைந்து எங்கே கட்சியிலே நான் பெரியவனாகி விடுவேனோ என்ற பயத்திலே "நசரேயன் அட்டுழியம்" என்று தலைப்பு வைத்து இடுகையிட்டு இந்த களங்கம் இல்லா முத்தை, ஆட்டு கடையிலே தோல் உறிப்பது போல உறித்து என்னை பசுத்தோல் போர்த்திய புலி என்று நிருப்பிக்க எண்ணினார். நானும் பாண்டிய நாட்டிலே பிறந்த எனக்கு புலிக்கொடி அணித்து தனது பெருந்தன்மை காட்டுகிறார் என்று நினைத்தேன். முகிலன் இப்போது தோல் உறித்து காட்டியபோது தான் தெரிகிறது அது புலி அல்ல புளி என்றும், கோழி யோடு விரவிய புளி சாதம் என்றும்.  


அது மட்டுமா கட்சியிலே எங்கே செயலாளர் பதவியோ, தலைவர் பதவியோ கொடுத்தால் எங்கே அவர் நாற்காலியை தட்டி பறித்து விடுவேன் என்று எனக்கு கள்ளகாதல் செயலாளர் என்று நான் எழுதிய கதையின் தலைப்பை வைத்து ஒரு உப்பு பதவியை தந்து, நான் பிறக்கும் போது மாணவரா இருந்தவரை மாணவர் அணி தலைவரையும், நான் பிறக்கும் போது சிறுவராய் இருந்தவரை சிறுவர் அணி தலைவரையும் போட்டு என்னை இழிவு படுத்தி விட்டார். இந்த அவமானத்தை எல்லாம் சகித்து கொண்ட நான் அவரிடம் நான் ஒரு பனங்காட்டு நரி என்று சொன்னபோது, நீ ஒரு சூப்பின பனக்கொட்டை என்று உண்மையை சொல்லி விட்டார் கட்சி ௬ட்டத்திலே.

அமெரிக்காவிலே இருக்கும் செல்வாக்கை பயன் படுத்தி பிரித்தானியாவிலேயும் நுழையும் ஆசையிலே இல்லாத அரசியலுக்கு ஒரு பொல்லாத பதவியை உருவாக்கி "அது சரி" யையும் "ஆமா சரி" என்று போட வைக்க முயற்சி செய்கிறார். அது மட்டுமா உலகின் பல்வேறு பகுதிகளில் தன கிளைகளை நிறுவ பல பதிவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருபதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.   

கட்சியிலே ஆங்கில இலக்கிய குழுவிற்கு என்னை தலைமை தாங்க வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லி என்னை ஆங்கிலம் பேசச்சொல்லி நான் "funny"  என்று சொன்னால் பன்னி என்று face என்று சொன்னால் அதை base என்றும் நினைத்து என்னை வைத்தை மீண்டும் ஒரு இடுகை வெளியிட்டார். இப்படி கட்சிக்கு மாடாய் உழைத்த என்னையும் அவர் மேய்க்கும் மாடுகளை போலவே நினைத்து விட்ட தன்னை சோளக்கஞ்சி சாப்பிட்டதாலே  சோழன் என்று சொல்லிகொண்ட குடுகுடுப்பையார் மீண்டும் குடுகுடுப்பையாக மாறியதற்கு நன்றி மாற்றிய முகிலனுக்கும் நன்றி. இவ்வளவு நேரம் இதையும் ஒரு பொருட்டாக வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.   
  


Thursday, February 4, 2010

பசலை நோய்

பசலை நோய் ன்னு நான் பச்ச புள்ளையா இருக்கும் போது(இப்பவும் அப்படித்தான் இருக்கேன்) படிச்சி இருக்கேன், அந்த கால கட்டத்திலே எல்லாம் தலைவன், தலைவி, பசலை நோய் எல்லாம் கேள்வி பட்டு தலை சுத்தி கீழே விழுந்தது தான் மிச்சம்,புரியாத வயசு, அதுவும் இல்லாம என்னை நினைச்சி அந்த அளவுக்கு உருக ஆள் கிடைக்கலைங்கிறது வேற விஷயம்.

ரெம்ப நாளா பசலைன்னு  நோய் இருக்கு, அது வந்தா சீக்கு வந்த கோழி மாதிரி சுருண்டு விழுந்துவோம், உடம்பு எல்லாம் எலும்பு உருக்கி நோய் வந்த  மாதிரி உருகிடுவோம், காய்ச்ச வராமலே ரெட்டியும், பாலும் குடிச்சி கிட்டு இருப்பாங்கன்னு நினைச்சேன்.விபரம் தெரிஞ்ச உடனே தான் தெரிஞ்சது அது ஒரு காதல் நோய்ன்னு,அதாவது காதலி, காதலனை  நினைத்து வெண்ணை மாதிரி உருகுறதும், மெழுகு வர்த்தி மாதிரி உருகுறதும் தான் பசலை நோய்(?).

என்ன காரணமுன்னு தெரியலை  பசலை நோய் பெரும்பாலும் பெண்களின் மனநிலையே சொல்லுது, பெண்கள் தான் காலையிலே கண் முழிச்சதும் துண்டு போட்டவனை நினைச்சி கிட்டே இருப்பாங்க, ஆம்பளைங்க எல்லாம் தன்னை நினைக்க ஒரு ஆள் இருக்குன்னு வேற நினைப்பிலே ஊரை சுத்தி அலையுவாங்களான்னுதெரியலையே,முன்ன பின்ன செத்தா தானே சுடு காடு தெரியும் என்பதாலே எனக்கு இந்த சந்தேகம்,இல்ல பசலை நோய் பத்தி எழுதின பெருசு எல்லாம் ஆண்களே, அதனாலே அவங்க பெண்களை நினைத்து எழுதி இருக்கலாம்.

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பசங்க தான், துண்டு போடும் முன்னாடியும் சரி, துண்டு கிடைச்ச பின்னாடியும் சரி ஒரு காவல்காரன் மாதிரி அலையுறதை, ஒரு வேளை அந்த கால ஆம்பளைங்க எல்லாம் என்னை விட அழகு குறைவா இருப்பாங்களோ ?

இங்கேயும் ஒரு இலக்கிய(?) பசலை நோய் பத்தி சொல்ல போறேன்.அதனாலே விழுந்து அடித்து ஓட வேண்டாம்.இந்த சங்க கால கதையிலே எதிரி நாட்டு படைகளுடன் சண்டை போட்டு  நாட்டை காப்பாத்த  தலைவன்போன உடனே துண்டு போட்ட தலைவி என்ன செய்யன்னு  தெரியலை, தலைவரை மறக்க முடியாம குடலை புரட்டிகிட்டு வருது அவங்களுக்கு.

இப்படியே இருந்தா வீட்டிலே இருகிறவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய வருமுன்னு  தலைவரும்,தலைவியும் சந்திச்ச இடங்களுக்கு போறாங்க, முதல்ல ஆத்துக்கு போயிட்டு அவங்க ரெண்டு பெரும் மண் அள்ளி போட்டு விளையாண்ட இடத்திலே இருந்து இவங்க மட்டும் விளையாடுறாங்க.அவங்க பக்கத்திலே ஒரு குருவி வந்து உட்காருது, அதை பார்த்ததும் குருவிகிட்ட

"குருவியே உனக்கும் துணை இல்லை, எனக்கும் துணை இல்லை, வா நாம ரெண்டு பெரும் விளையாடலாம்"

கொஞ்ச நேரம் இருந்த குருவி தன்னோட துணை குருவி வந்ததும், பறந்து போகுது, போகும் போது அந்த குருவியோட இறக்கையிலே இருந்து மண் தலைவியோட தலையிலே விழுது.அந்த நேரத்திலே எதிரி நாட்டு படைகள் அவங்க நாட்டை ஜெயிக்க போறதா தகவல் கிடைக்க தலைவி,குருவி போட்ட மண்ணை எடுப்பதற்கு பதிலா, தன் தலையிலே மண் அள்ளி போட்டுகிட்டு இருக்காங்க.


இங்கே தலைவி தலையிலே மண் அள்ளி போட்டுக்கிட்டு  இங்கே சோக கீதம் ஓடிக்கொண்டு இருக்கும் போது   தலைவர் என்ன செய்யுறாருன்னு பார்க்கவேண்டிய நிலை, அவரு போர் களத்திலே சண்டை போட்டு களைப்பாய் இருக்கிறார் தோல்வி உறுதி என தெரிந்ததும் கொஞ்சம் முக வாட்டம் அதிகமாவே இருக்கு, இருக்கின்ற படை வீரர்களை வைத்து மன்னர் ஒரு ௬ட்டம் நடத்துகிறார், ௬ட்டத்தின் முடிவை கேட்டதும் தலைவர் உட்பட அனைவருக்கும் உற்சாகம், எதிரிகளைப் பார்த்து கொலை வெறியுடன் சென்று அவர்களை விரட்டி அடிக்கிறார்கள், தோல்வியிலே முடிய வேண்டிய யுத்தம் வெற்றியிலே முடிகிறது. எல்லோரும் வெற்றி மாலையோடு திருப்பி வருகிறார்கள்.

இந்த சந்தோஷ விஷயம் கேள்வி பட்டு தலையிலே  அள்ளி போட்ட மண்ணை ஆற்றிலே அலசி விட்டு வீட்டுக்கு வருகிறாள், வரும் வழியிலே போன குருவி மீண்டும் வருகிறது, உடனே குருவியிடம் "எனக்கும் என் துணை வரப் போகுது, நீ போகாலாம்" என்று குதுகுலத்தோடு திரும்பி வருகிறாள்.வந்ததும் திரும்பி வரும் படையிலே தலைவனும் வருகிறாரா என்று ஆவலுடன் வீரர்கள் வரவேற்பு விழாவிற்கு செல்கிறாள்,தலைவனும் வருகிறார், தலைவி தலைவனைப் பார்த்தும் தலை கால் புரியாத சந்தோசத்திலே கள்ளு குடித்த வண்டு போல ஆகிறாள்(?).      

நின்று போன காதல் சந்திப்பு மீண்டும் தொடர்கிறது, எந்த ஆத்தங்கரையிலே மண் அள்ளி போட்டு விளையான்டார்களோ மீண்டும் அதே ஆத்தங்கரைக்கு வருகிறார்கள். தலைவி முதல் கேள்வியாக

"நாதா, நம் படைகள் தோற்று விட்டன என்ற கோபக் கனலை எப்படி கொய்யாகனியாக மாற்றினீர்கள், என்னை நினைத்து கொண்டதாலே உங்கள்  பலம் அசுர பலம் ஆகிவிட்டதா?"

"இல்லை என கண்ணே.. கரும்பே(அப்படியே போய்கிட்டே இருக்கு) , மன்னர் எங்களை எல்லாம் எங்கள் எதிரிகளை நினைக்க சொன்னார்"

"அவர்கள் போர்களத்திலே தானே இருந்தார்கள்?"

"உள்ளூர் எதிரிகளை நினைக்கச்சொன்னார்"

"உள்ளுரிலே உங்களுக்கு எதிரியா?"

"ஏன் உங்க அப்பன் இல்லை, நீயும், நானும் சந்திப்பதை தடுக்கவே சிந்தித்து கொண்டே இருப்பவன், நம் காதலுக்கு எதிரி?"

"நாதா....தா...தா இந்த பகடி எல்லாம் வேண்டாம், உண்மையை சொல்லுங்க"

"உண்மைதான் அன்பே, உன் அப்பனை நினைத்தேன் எதிரிகள் எல்லாம் உன் அப்பன் போல ஆனார்கள், அவர்களை அடித்து விரட்டிவிட்டோம் அரை நாழிகையிலே, இவ்வளவு ஏன் மன்னரும் அவர் மாமனாரையே நினைத்தார் என்றால் பார்த்துகொள்ளேன்"

"பெண்ணை பெற்றவர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு இளக்காரம், போகட்டும் விடுங்கள், நான் அழியாதை மை ஒன்றை கண்டு பிடித்து உள்ளேன், அதை சோதனை செய்ய வேண்டும் உங்களிடம் உங்கள் கையை காட்டுங்கள் எனது பெயரை எழுதுகிறேன்."

"என கண்ணே, உனது பெயர் என நெஞ்சில் அல்லவா பத்திரமாக இருக்கிறது."

"அது எனக்கு மட்டும் தானே தெரியும், ஊருக்கு தெரிய வேண்டாமா, கையை கொடுங்கள்"

"என் உயிரையே கொடுக்கும் உனக்கு இந்த கைகள் எம்மாத்திரம், இதோ"

தலைவி அரை மணி நேரமா மூச்சை போட்டு எழுதி முடிக்கிறாங்க, எழுதி முடிச்சதும், தலைவர் அதை வாசிக்கிறார்.வந்த கோபத்தை அவரால அடக்க முடியலை

கோபத்திலே "இதற்குத்தான் என் கைகளை கேட்டாயோ"

"ஏன் கோபப்படுகிறீர்கள், நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்"

"என்ன எழுதி விட்டாயா, இ.வா என்று எழுதி இருக்கிறாய்?"

"உங்க அப்பா பெயரு இனியன், உங்க பெயரு வாழ்வன், சுருக்கமா இனா வானா?"

"அதையேதான் நானும் சொன்னேன், படிப்பவர்கள் இளிச்ச வாயன் என்றல்லவா பொருள் கொள்வார்கள்"

"இல்லையா பின்னே" என்று ௬றி தலைவி எழுந்து ஓடுகிறாள்,  தலைவர் பினனால் ஓடுகிறார்.

அந்த சம்பவத்திற்கு அப்புறம் தான் பச்சை குத்துவதும், இளிச்சவாயன் என்பதும் பிரபலம் அடைந்ததுன்னு சொன்னா நம்பவா போறீங்க


Tuesday, February 2, 2010

அமெரிக்க குடிமகன்

ஐந்து வருடத்திற்கு பிறகு இந்தியா செல்கிறேன்.இந்த தொலை தூர பயணத்திலே என் நினைவுகளை சற்று பின்னோக்கி திரும்பி பார்க்கிறேன். 


அமெரிக்காவை பற்றி ஐந்தாம் வகுப்பிலே படிக்கும் போதே அங்கே செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன், அதற்கு ஏற்ற படி என்னுடுடைய மேல் படிப்பை தேர்ந்து எடுத்தேன்.படித்து முடித்து வேலையிலே சேர்ந்தேன், அமெரிக்கா செல்ல எப்படி உழைக்க வேண்டுமோ அதை மனதிலே கொண்டு கடின உழைப்பை மேற்கொண்டேன்.


எனது வேலையின் வேகம் என்னை அமெரிக்கா கொண்டு செல்ல தீர்மானித்தது, அலுவலக செலவிலே மூன்று மாத வேலையாக  அமெரிக்கா வந்தேன், வந்ததும் திரும்பி செல்ல மனம் இல்லாமல், அழைத்து வந்த அலுவலகத்திற்கு தெரியாமல் அடுத்த அலுவலகத்திற்கு மாறினேன். 


அலுவலகம்  மாறிய தினத்திலே இருந்து அமெரிக்காவிலே நிரந்தமாக தங்க வேண்டிய வழிகளில் வேலை செய்ய ஆரம்பித்தேன், எனது சுய நலத்திற்காக நான் செய்யும் செயல் எல்லாம், என் வாழ்கையில் முன்னேற பெரிதும் துணையாய் இருந்தது. இருந்த அலுவலகம் வழியாகவே எனக்கு பச்ச அட்டைக்கு விண்ணப்பம் செய்தார்கள்.இதற்கிடையே என்  திருமணமும் நடந்து மனைவியும் என்னோடு வந்து சேர்ந்தாள். 


பச்சை அட்டைக்கு விண்ணப்பம் செய்து விட்டு, அதிலே உள்ள பல்வேறு நிலைகளிலே உள்ளது தான் இந்த   I-485 .அப்போது தான் எனது தந்தை இறந்ததாக செய்தி வந்தது, குடும்பத்திற்கு தலைமகனாக இருந்தும், ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகளை செய்ய முடியாத நிலை. I-485 யில் இருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியே போனால் என்னுடைய பச்ச அட்டை விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்று நண்பர்கள் பலர் ௬ற, அமெரிக்க கனவு கானல் நீராகிவிடும் என்ற நம்பிக்கையிலே நான் ஊருக்கு செல்ல  வில்லை. 




அப்பா இறந்து ரெண்டு வருஷம் கழித்து பச்சை அட்டை வாங்கிய பிறகு  ஊருக்கு சென்றேன், அம்மாவை  பார்த்து பேச முடியாத ஒரு குற்ற உணர்வு, தான் கண் மூடும் முன்னே என்னைய பார்த்து விடலாம் என்பதே அப்பாவோட கடைசி ஆசையாக இருந்தது, அவரோட கடைசி ஆசை நிராசை ஆனதை அம்மா சொல்லி குறைபட்டாள்.அம்மாவின் நிலையை பார்த்து தப்பு பண்ணிவிட்டதாக நினைத்தாலும், வாழ்ந்து முடித்த அவர்களை விட,நல்ல நிலையிலே வழ நான் எடுத்த முடிவு சரியே என்று மனதை சமாதானப் படுத்தி கொண்டேன். 


எனது அமெரிக்கா கனவை நினைவு ஆக்குவதிலே உறுதுணையாய் என் தந்தை எனக்கு இருந்தார், அவர் இன்று எங்களோட இல்லாவிட்டாலும்,அவரின் நினைவுகள் மட்டும் என்னோடு இருக்கிறது.மீண்டும் திரும்பி வந்து வழக்கம் போல பணிகளை செய்ய ஆரம்பித்தேன், இந்த முறை அமெரிக்க குடியுரிமை வாங்குவதற்காக, வேண்டியது கிடைத்தது.   


இந்த சுழலிலே ஊரிலே இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அம்மாவிற்கு உடம்புக்கு சரி இல்லை என்று,இந்த முறை எந்த அசம்பாவாதங்களும் நடந்து விடக் ௬டாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக என் அம்மாவின் நிலை கவலை கிடம் என்று தெரிந்த உடனே கிளம்பிவிட்டேன்.அம்மாவிடம்  நினைவு இருக்கும் போது ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற ஆசையிலே எனது பயணமும் தொடர்ந்தது. முடிவில்லா உலகிலே இருக்கும் எனது தொலை தூர பயணமும் முடிவுக்கு வந்தது, விமானம் சென்னையிலே தரை இறங்கியது.


விமானம் சென்னையிலே தரை இறங்கியதும் உள்ளூர் உறவினரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் சொன்ன செய்தியை கேட்டு வேகமாக பெட்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன், மனைவியையும் துரிதப் படுத்தினேன். சலிப்பு அடைந்த அவள் சட்டை செய்யாமல் இருந்த அவளிடம் உண்மையை  சொன்னேன். "அம்மா தவறீட்டாங்களாம் இப்ப தான் போன் வந்தது" 


 எனக்கு ஆறுதல் சொல்லும் நிலையில்  அவளும் , என்னை தேற்ற துணை வேண்டும் என்ற நிலையில் நானும்  இல்லாததால், அமைதியாக குடியேற்ற துறை க்கு செல்லும் வரிசையிலே நின்றோம்


என் சுய நலத்திற்காக எனது வாழ்க்கை வளைவுகள் இல்லாமல் வேகமாக சென்றாலும், நான் குடியேற்ற துறையை கடந்து துக்க வீட்டிற்கு செல்லும் வரிசை மெதுவாகவே சென்றது.குடியேற்ற அதிகாரிகள் தன்னுடைய வேலைகளை எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக முடித்து கொண்டு இருந்தனர், என் முறை வந்ததும் நான் எங்களிடம் உள்ள கடவு சீட்டுகளை கொடுத்தேன். அதை எடுத்து ஒவ்வொன்றாக சோதனை செய்தார்.


சோதனை செய்து முடித்த பின்  "உங்க விசா எங்கே ?" 


"என்ன?"


"எங்க நாட்டிலே நுழைய உங்களுக்கான அனுமதி எங்கே?" என என்னோட அமெரிக்க கடவுச்சீட்டை காட்டி கேட்டார்.


அமெரிக்கா எனது தாய் நாடு, இங்கே உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன், என் தாய் நாட்டை தாயைப் போல நேசிப்பேன் என்று உறுதி மொழி எடுத்துகொண்டது ஞாபகம் வந்தது.தாய் நாட்டுக்கு வருவதைப்போல வந்தேன், என் தாய் நாடு இது இல்லை என்பதை மறந்து.தாய் ஒரு நாட்டிலே இருந்தாலும் தனக்கு தாய் நாடு வேறு என்பதை நினையாமல் இந்தியாவிற்கு செல்ல விசா வாங்க மறந்து விட்டதை உணர்ந்தான்.   


ஒரு நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்று தோன்ற வில்லை என்றாலும், அதிகாரியிடம் 


"ஐயா நானும் இந்தியன் தான்"

"இல்லை.. நீங்க இந்தியர் இல்லை, அமெரிக்கா கடவுச்சீட்டு வைத்து இருக்கும் நீங்க எப்படி இந்தியன் ஆக முடியும்?" 

"எங்க அம்மா இறந்து விட்டார்கள் நான் எப்படியாவது போக வேண்டும்,என்னை தயவு செய்து அனுமதியுங்கள்"  

"அனுமதிக்கிறேன் நீங்க போயிட்டு விசா வாங்கிட்டு வாங்க"

"ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்"  சொல்லும் போதே என் கண் கலங்கி என்னை அறியாமலே கண்கள் பனித்தது,வெகு நாட்களாக காணமல் போன கண்ணீர் ஒரு குழந்தையை போல ஒட்டிக் கொண்டது. 

"ஐ யம்  சாரி"  என்ற பதிலை சொல்லி விட்டு

பின்னால் இருந்த ௬ட்டத்தை பார்த்த அதிகாரி,அருகிலே இருந்த காவல் துறை அதிகாரியிடம் என்னை மீண்டும் எனது கனவு தேசமாக இருந்து இன்று என் தாய் தேசமாக இருக்கும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பும் பணியை செய்ய ஏவினார்.என்னுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி கொடுத்த என் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல்,   
சொந்தங்கள் நிறைந்த  நாட்டிலே அந்நியன் ஆக்கப்பட்டு தனித்து விடப்பட்ட அனாதைகள் போல நானும் என் மனைவி மக்களும் வேறு வழி இல்லாமல் காவலரின் பின் சென்றோம்.