Sunday, December 6, 2009

வாலிப காதலில் வண்ணத்து அழகி

பாலுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கமுடியாத வயசு, இப்பவும் அப்படித்தான் இருக்கேன் ஆனா வயசு வகையில்லாம ஏறிபோச்சி, அப்படி ஒரு வெள்ளந்தியா இருந்த காலத்திலேயே என் மனதை வங்ககடல் புயலை போல கடந்து சென்றவள்,இந்த பச்ச புள்ளை நெஞ்சிலே பசுமரத்தாணி போல பதிந்த நினைவுகள்,இந்த எழவு எடுத்தவன் சொல்ல வந்ததை சுருக்குன்னு சொல்லாம, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிகிட்டு இருக்கான்னு ஆட்டோ எடுக்க தயாராகும் அன்பர்கள் நிற்க.

காதலிக்கிறவங்க எல்லாம் அவங்க காதலிகளை எங்கே பிடிச்சாங்கன்னு தெரியலை, நான் அவளை பார்த்தது எங்க வீட்டிலே அவள் பேசி நான் கேட்ட முதல் வார்த்தை

"யம்மா சோறு போடுங்க"

இந்த காதல் கதை நடந்த காலத்திலே எங்க ஊரிலே துணிகளை துவைப்பதற்கு என்று ஒரு ௬ட்ட மக்கள் இருந்தார்கள்,இன்னும் ஒரு சில கிராமங்களில் இருக்கலாம், ஆனா இப்ப எங்க ஊரிலே இல்லை.

அவளின் குரலை கேட்டு தீவிரமாக பரிச்சைக்கு படித்து கொண்டு இருந்த என்னைப் பார்த்து என் அம்மா,

"டேய் இந்த சோத்தை அவ கிட்ட கொடுத்திட்டு, துணி எப்ப எடுத்திட்டு போறான்னு கேளு" ன்னு சொன்னாங்க, நானும் சோத்தை எடுத்துகிட்டு வெளியே வந்தேன், நல்ல இருட்டு நேரம், நான் நடந்து வரும் போது இருட்டு எது நான் எதுன்னு கண்டு பிடிக்க ரெம்ப சிரம பட வேண்டியது இருக்கும்.

ஆனா அவ இருட்டிலேயும் பளீர்ன்னு தெரியும் நிறம், நான் அவ கிட்ட போய் "இந்தா சோறு" ன்னு சொன்னது தான் எதோ காத்து கருப்பு தான் பேசுதோன்னு பயந்து அரண்டு போய்ட்டா, அந்த நேரம் பார்த்து என் அம்மா முன் வீட்டு விளக்கை போட்டார்கள், வெளிச்சத்திலே என்னை பார்த்து அவளை அறியாமலே சிரிப்பு, இந்த கருவாலி என்னை கதிகலங்க வச்சிட்டான்னு நினைச்சி இருப்பா போல அப்படி ஒரு சிரிப்பு

அவள் சிந்திய சிரிப்பு அலைகளிலே என் மனம் சிக்குண்டு தீக்குச்சியாக இருந்த என் உடம்பிலே காதல் தீ பத்திகொண்டது.கரிகட்டை மாதிரி இருந்த நான் காதல் தீ வந்து கருஞ்சிகப்பு நிறமா மாறிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க.அவளின் அழகுக்கு அழகு சேர்த்த அவள் முத்து பல் வரிசை என்னை அழுக்கன் ஆக்கியது. பஞ்சனை வைத்து தூங்கி பழகிய நான் அவள் நெஞ்சனையிலே வந்ததும் தூக்கத்தை ஆள் விட்டு தேடும் அளவுக்கு வந்து விட்டேன்.

சோறு வாங்கிய உடனே "துணிகளை எல்லாம் எப்ப எடுக்க வருவாய்" ன்னு கேட்டேன், நான் எல்லா வீட்டுக்கும் போயிட்டு வந்து வீட்டுக்கு போகும் போது வாரேன்.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமா வீட்டை விட்டு வெளியே போகாமல் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன், அவளும் வந்து சேர்ந்தாள் அடுத்த ஒரு மணி நேரத்திலே,எடுத்து வைத்து இருந்த துணிகளை ஒன்று ஒன்றாக எடுத்து கொடுத்தேன், மொத்தமா அள்ளிப்போட்டா சீக்கிரம் போயிடுவான்னு,துணிகளை கொடுக்கும் சாக்கிலே அவள் கையை தொட்டேன்.

துணிகளை துவைக்கும் கையை நான் தொட்டதாலே என் மனசும் துவை பட்டது, அவளின் கரங்களின் சுத்தம் என் மனசை கரை படுத்தியது. அவள் என்னவோ சாதாரணமாக இருந்தாலும் நான் என்னவோ சிறகு இல்லாமல் வானில் பறந்து கொண்டு இருந்தேன். நான் இப்படி எல்லாம் நினைக்கிறேன் என்று அவளுக்கு தெரிந்து இருந்தா வாங்கின துணியாலே என் முதுகிலே ரெண்டு போட்டு இருப்பா.

அதற்கு அப்புறம் அவள் எப்ப வருவான்னு வழிமேல இந்த கருப்பு விழியை வைத்து காத்து இருப்பேன், அவ வருகிற நேரம் நெருங்கி விட்டால் என்னோட இதய துடிப்பு அதிகம் ஆகிடும், என்னோட இதயத்துக்கு மட்டும் மூளை இருந்தா கிறுக்குபய துண்டு போடவும் மாட்டான் எடுக்கவும் மாட்டான், நான் பாட்டுக்கு சும்மா லப் டப் ன்னு அடிச்சி ஆணி புடுங்குற என்னையும் ஒழுங்கா வேலையை செய்ய விடாம ,என்னைய போட்டு குடைச்சல் கொடுக்கிறான், இவனை எல்லாம் நின்னு சாகடிக்க ௬டாது, வெடிச்சி சாகடிக்கனுமுன்னு நினைத்து இருக்கும்.

அவள் ஒருநாள் வரலைனாலும் அன்னைக்கு சோறு தண்ணி இறங்காது, அடுத்த நாள் எப்படியாவது அவள் வசிக்கும் தெருவுக்கு போவேன்,எப்படியாவது அவளை பார்த்து விட்டுத்தான் வீட்டுக்கு திரும்ப வருவேன்.இப்படி ஒருதலையா துண்டு போட்டு கொஞ்ச நாள் ஓடிச்சி, அவளை தினமும் பார்த்து, துணி அள்ளி போட்டு சந்தோசமா இருந்தாலும், நான் அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று சொல்ல தைரியம் வரலை.

கொஞ்ச நாள் கழிச்ச அப்புறம் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து அவள் வேற ஊருக்கு செல்ல இருப்பதாகவும் அம்மாவின் மூலம் தெரிந்து கொண்டேன்.என்னவோ அதை கேட்டதும் எனக்கு அழுகையே வரலை, எனக்கு பதிலா இயற்கை இடியோடு எனக்காக அழுதாள். அடுத்த நாள் காலையிலே எழுந்து அவள் இருக்கும் தெருவுக்கு சென்றேன். அவள் வீட்டு முன்னால் பெரிய ௬ட்டம் எட்டி பார்க்க ஓடினேன், அங்கே எல்லோரும் அழுது புலம்பி கொண்டு இருந்தார்கள், அவளும் அவர்களோட சேர்ந்து அழுது கொண்டு இருந்தாள். விசாரித்தலிலே அவளுடைய மணமகன் அவன் இருந்த மண் வீடு நேற்றைய மழையிலே இடிந்து விழுந்து மண்ணோட மண்ணாகி விட்டான் என்பதை தெரிந்து கொண்டேன்.

அதை கேள்வி பட்டு என்னை விட உலகிலே சந்தோசப்பட்ட ஜீவன் இருக்க முடியாது. நான் வானத்தை பார்த்து மனசிலே கடவுளே நீ இல்லை..இல்லை என்று சொல்லும் போது எல்லாம் எதாவது ஒரு ரூபத்திலே நீ உன் இருப்பை உறுதி செய்கிறாய் . நான் நினைக்கிறது மேல போனவருக்கு தெரிஞ்சா என்னையும் ௬ட ௬ட்டிட்டு போய் இருப்பாரு.

காதல் மரத்தை வெட்டிட்டாங்கன்னு நினைத்த எனக்கு இயற்கை உரம் போட்டு இருப்பதை நினைத்து ஒரே ஆனந்தம், மறுபடியும் காதல் கிளிக்கு ரெக்கை முளைச்சி விட்டது என நினைத்து வீட்டுக்கு போயிட்டேன்.

ஒரு மாதம் வரை மனதை கட்டி போட்டு கொண்டு அவள் வரவை எதிர் பார்த்து காத்து இருந்தேன், அடுத்த மாதத்திலே புது ஆள் ஒருவர் வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தார், என்னை பார்த்ததும்

"இனிமேல இவன் தான் துணி எடுக்க வருவான், துவைக்க உன் துணியை எல்லாம் எடுத்துப் போடு"

இதை கேட்டதும் பிரகாசமா இருந்த என் வாழ்கையிலே, இருட்டின் ஆதிக்கம் அதிகமாச்சி, என்னோட துணிகளை எல்லாம் எடுத்து கொடுத்து விட்டு அம்மாவிடம்

"எதுக்குமா புது ஆள், அவங்களே நல்லாத்தானே துவைச்சாங்க."

"அவங்க எல்லாம் ஊரை விட்டு அவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க"

"எங்க இருக்கு?"

"தெரிஞ்சி என்ன கோட்டையை கட்டப்போற?.. போய் வேலைய பாரு"

அதற்கு மேல கேட்டாலும் பதில் வராதுன்னு தெரியும், நான் ஒண்ணும் பேசாம மாடிக்கு போயிட்டேன்.மேல வானத்தை பார்த்தேன். கடவுள் இல்லை.. கடவுள் இல்லைன்னு மனுசுக்குள்ளே சொல்லி கொண்டேன். அன்றைய தினத்திலே இருந்து இது நாள் வரையும் அவளை நான் இன்னும் பார்க்க வில்லை.அவளும் இன்றைக்கு என்னை மாதிரி கல்யாணம் எல்லாம் ஆகி சந்தோசமா இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது, அவளை பற்றி இவ்வளவு நினைவு இருக்கும் எனக்கு இன்றும் அவள் பெயர் தெரிய வில்லை.


18 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//பாலுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கமுடியாத வயசு, இப்பவும் அப்படித்தான் இருக்கேன் //

நம்பிட்டோம்....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல காதல் கதை... உண்மையா இருக்குமோ!!!

சந்தனமுல்லை said...

hmmm....ஒன்பது ரூபாய் நோட்டுலே பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..ஆனா இது வேறே கதை! ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்கோ!! :-))

thiyaa said...

இது உண்மைக் கதையா
அருமையாக இருக்கு

vasu balaji said...

அசத்திட்டீங்க அண்ணாச்சி. ஒரு பிழையும் தெம்படலை. =)). கதை ஓட்டம் அருமை.

Anonymous said...

//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்கோ!! :-))//

:))

லெமூரியன்... said...

\\கரிகட்டை மாதிரி இருந்த நான் காதல் தீ வந்து கருஞ்சிகப்பு நிறமா மாறிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க...//

கண்டிப்பா நம்புவோம்ங்க....ஏன்னா காதலுக்குதான் கண்ணில்லையே ஹா ஹா ஹா....!

Vidhoosh said...

என்ன இப்பல்லாம் உ.த. அண்ணன் மாதிரி பக்கம் பக்கமா எழுதிறீங்க.

:))

SUFFIX said...

கதை வெளுத்து வாங்குது, நீங்க துவைக்க கொடுத்த கைக்குட்டை எதுவும் காணாமல் போகலையா?

ஹேமா said...

//பாலுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கமுடியாத வயசு, இப்பவும் அப்படித்தான் இருக்கேன்,//

நல்லாவே தெரியுது.

//"யம்மா சோறு போடுங்க"//

இப்பவும் இந்தச் சத்தம் அடிக்கடி கேக்கணுமே !

காதல் தோல்வியோடு நல்லதொரு கதை நசர்.

புளியங்குடி said...

நச் கதை அண்ணா!

நீங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்..

நீங்க பாரதமாதா சீனியர் டீம் விக்கெட் கீப்பர், ஓபனிங் பேட்ஸ்மேன்,

நான் ஜூனியர் டீம் விக்கெட் கீப்பர் ஓபனிங் பேட்ஸ்மேன்.

RAMYA said...

//
கரிகட்டை மாதிரி இருந்த நான் காதல் தீ வந்து கருஞ்சிகப்பு நிறமா மாறிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க...
//

ச்ச்சே! ஏன் எப்படி சந்தேகமா கேக்கறீங்க :)நாங்க நமபிட்ட்டோமலே:)

RAMYA said...

கதை நல்லாத்தான் போயிட்டு இருந்திச்சு. திடீர்னு வானத்தைப் பார்த்தேன் எல்லாமே மறஞ்சி போச்சு :-)

எப்படியோ துண்டு தப்பிச்சுது போங்க :-)

RAMYA said...

//
அதற்கு மேல கேட்டாலும் பதில் வராதுன்னு தெரியும், நான் ஒண்ணும் பேசாம மாடிக்கு போயிட்டேன்.மேல வானத்தை பார்த்தேன். கடவுள் இல்லை.. கடவுள் இல்லைன்னு மனுசுக்குள்ளே சொல்லி கொண்டேன். அன்றைய தினத்திலே இருந்து இது நாள் வரையும் அவளை நான் இன்னும் பார்க்க வில்லை.
//

உங்க கண்ணுலே படலை ஆனா தங்கமணி கண்ணுலே பட்டுடாங்கலாம். இப்ப என்ன பண்ணப் போறீங்க!:-)


//
அவளும் இன்றைக்கு என்னை மாதிரி கல்யாணம் எல்லாம் ஆகி சந்தோசமா இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது,
//

உங்க நம்பிக்கை கண்டிப்பா வீண் போகாது. அவங்க நல்லாவே இருப்பாங்க. வெறும் கனவுதானே :-)


//
அவளை பற்றி இவ்வளவு நினைவு இருக்கும் எனக்கு இன்றும் அவள் பெயர் தெரிய வில்லை.
//

தெரிஞ்சி மட்டும் என்ன செய்ய போறீங்க கூப்பிட்டு பார்க்கவா முடியும் :-)

RAMYA said...

அப்புறம் நசரேயன் இந்த முறை அட்டகாசம் மற்றும் அழும்பு அதிகமா இருக்கு!

துண்டு பத்திரம் :-)

நசரேயன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி சந்தனமுல்லை: - ஆமா இதிலே ஏதும் உள்குத்து இல்லையே

நன்றி தியாவின் பேனா

நன்றி வானம்பாடிகள்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி லெமூரியன்

நன்றி விதூஷ்/வித்யா : - அண்ணே எங்கே நான் எங்கே, இதே கேள்வி உங்களுக்கு பொருந்தும்,உங்களோட புரியாத கவுஜையை தவிர

நன்றி SUFFIX :- மனசே காணாம போச்சி

நன்றி ஹேமா :- ஆமா இப்பவும் சத்தம் கேட்குது

நன்றி புளியங்குடி :- ஆமா அதே ஆள் தான் நான்

நன்றி RAMYA :- குடும்பத்திலே குழப்பம் உண்டு பண்ணவே கும்மியா? , துண்டு இன்னும் பத்திரமாத்தான் இருக்கு

வில்லன் said...

அப்படியே ஒரு " முதல் மரியாதை" படத்த பாத்த பீலிங் !!!!!!!!!! பூங்காற்றே வருத்தமா>>>>>> என்பாட்ட விரும்புமா >>>> ஆத்தாடி

வில்லன் said...

//


புளியங்குடி said...

நச் கதை அண்ணா!
நீங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்..
நீங்க பாரதமாதா சீனியர் டீம் விக்கெட் கீப்பர், ஓபனிங் பேட்ஸ்மேன்,
நான் ஜூனியர் டீம் விக்கெட் கீப்பர் ஓபனிங் பேட்ஸ்மேன்.//

நீறு புளியங்குடியா அந்த பொண்ணு பேர கண்டுபுடிச்சு சொல்லி உதவலாம்ல.....

அப்படியே தெரிஞ்சா கொஞ்சம் எனக்கு தெரியபடுத்தவும்...... நசரேயன் தங்கமணி கிட்ட போட்டு கொடுத்து கொஞ்சம் ஊடு கட்ட சொல்ல வசதியா இருக்கும்ல.....முடிஞ்சா 21 தேதிக்குள்ள அனுப்பவும்..... நேருல பாத்து சொல்லி ஊடு காட்டுறதையும் பாத்துட்டு வந்துருவேன்...